Milky Mist

Thursday, 18 September 2025

அன்று வீடுவீடாய்ச் சென்று பொருட்கள் விற்ற பெண், இன்று 487 கோடி ரூபாய் மதிப்பிலான நிறுவன அதிபர்!

18-Sep-2025 By சோபியா டேனிஷ்கான்
புதுடெல்லி

Posted 25 Jan 2021

கூச்சசுபாவம் கொண்ட பதின்வயது பெண்ணாக இருந்தவர் பாவனா ஜுனேஜா. டெல்லியைச் சேர்ந்த இவர் தாயின் தூண்டுதலால் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த அழகுசாதனக் கடையின் பொருட்களை வீடு வீடாக சென்று விற்க ஆரம்பித்தார். 

அந்த நிலையில் இருந்து தொடங்கி, இருபது ஆண்டுகளுக்குள் 65 மில்லியன் அமெரிக்க டாலர்(சராசரியாக இந்திய ரூபாயில் ரூ.487.5 கோடி) ஆண்டு வருவாய் தரும் வணிக சாம்ராஜ்யத்தை கட்டமைத்திருக்கிறார்.

பாவனா(45) தமது முதல் நிறுவனத்தை 17 வயதில் தொடங்கினார். அமெரிக்க நிறுவனமான எஸ்.எஸ். டுவெக் & சன்ஸ் என்ற நிறுவனத்தின் கொள்முதல் முகவராக மாறினார். 21வது வயதில் திருமணம் முடிந்தபின்னர் அமெரிக்கா சென்றார். அங்கே ஒரு தகவல் தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் வரவேற்பாளராக பணியில் சேர்ந்தார். குறுகிய காலத்துக்குள் மில்லியன் டாலர் மதிப்புள்ள விற்பனைகளை வாடிக்கையாளர்களிடம் மேற்கொண்டு தமது புத்திசாலித்தனத்தை நிரூபித்தார். அந்த நிறுவனமே அவர் கைக்கு வந்தது.  

17 வயதில் பாவனா ஜூனேஜா தமது நிறுவனத்தை தொடங்கினார். தொடர்ச்சியாக தொழில்கள் தொடங்கும் தொழில் முனைவோராக மாறினார். (புகைப்படங்கள்: சிறப்பு ஏற்பாடு)  

இப்போது அவர், இன்ஃபினிட்டி எனும் மருந்து மற்றும் லைஃப் சயின்ஸ் நிறுவனத்தின் உரிமையாளராக உள்ளார். தொடந்து வானாடார் என்ற ஏஐ அடிப்படையிலான ஆர்பிஓ(பணியாளர் நியமன செயல்பாடுகள்) நிறுவனம் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். ஜம்மு என்ற பெயரில் ஃபேஷன் சில்லறை வணிக கடை மற்றும் எம்பவர்ட்டு என்ற சொத்துகள் நிர்வகிக்கும் நிறுவனம் ஆகியவற்றையும் நடத்திவருகிறார்.

  தொழில்முனைவு என்பது அவரது மரபணுவிலேயே ஊறியிருந்திருக்கவேண்டும். ஆனால், சந்தைப்படுத்துல் தொடர்பாக அவரது தாய் அவருக்கு பயிற்சி அளித்தார். அவருடைய கனவுகளை துரத்துவதற்கான நம்பிக்கையை அவரது தாய் அவருக்குள் ஊட்டியிருக்கிறார்.

“என் தந்தை லண்டனில் கேட்டரிங் வணிகத்தில் ஈடுபட்டு வந்தார். அவர் அங்கே சமோசாவை அறிமுகம் செய்ததால், அவர் சமோசா கிங் என்று அறியப்பட்டார்,” என்று நினைவு கூர்கிறார் பாவனா. பாவனா 13 வயது சிறுமியாக இருந்தபோது, அவரது பெற்றோர் பிரிந்து விட்டனர். மூன்று குழந்தைகளில் இரண்டாவதாகப் பிறந்த அவரை இது பெரும் அளவுக்குப் பாதித்தது. இதனால்,அவர் அமைதியானவராக, தனித்து இருப்பவராக மாறினார்.

 “ஆனால், என் தாய் என்னைத் தூண்டினார். நான் வெளி உலகத்தில் மக்களை சந்திக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியோடு இருந்தார்.”

“அலங்காரப் பொருட்கள் மற்றும் இதர இது போன்ற பொருட்கள்  விற்பனை செய்யும் அழகுசாதனப்பொருட்கள் கடையை என் தாய் வைத்திருந்தார்.  புதுடெல்லியில் நாங்கள் வசித்து வந்த டிபன்ஸ் காலனியில் வீடு வீடாகச் சென்று  கடையின் பொருட்களை விற்பதற்காக என் தாய்  என்னை வெளியே அனுப்பினார். மக்கள் வேண்டாம் என்று சொன்னால், எப்படி அவர்களை இன்னும் நன்றாக கையாளுவது என அவர் எனக்கு கற்றுக்கொடுத்தார். ஒரு பொருளை வாங்க மறுத்த  வாடிக்கையாளர் வீட்டுக்கு வேறு ஒரு பொருளுடன் மீண்டும் அனுப்பினார். இதன்வாயிலாக இறுதியில் மறுப்புத் தெரிவித்தவர்களிடம் வேறு பொருட்களை விற்றுவிடுவேன்.”  

பாவனாவுக்கு இது வாழ்நாள் பாடமாக அமைந்தது. விரைவிலேயே அவர் மக்களை அணுகுவதில் உள்ள தமது கூச்சசுபாவத்துக்கு விடை கொடுத்தார்,  இதன் வாயிலாக 17 வது வயதிலேயே சொந்தமாக ஒரு நிறுவனம் தொடங்கும் அளவுக்கு முன்னேறினார். மேட்டர் டீ பள்ளியில் மேல்நிலைக் கல்வி படித்தார். செலவை குறைக்கும் வகையில் டெல்லி பல்கலைக்கழகத்தில் தொலை தூரக் கல்வி வழியில் பிஏ(1994-97) பட்டம் பெற்றார்.

சந்தீப் சிங் உடன் பாவனா. சந்தீப் சிங் எம்பவர்டு நிறுவனத்தின் துணை நிறுவனராகவும் அவரது வணிக பங்குதாரராகவும் இருக்கிறார்.


1995 ஆம் ஆண்டு வீட்டு வசதி சாமான்களை கையாளும்  ஸ்பெக்ட்ரா ஷேட்ஸ் இன்டர்நேஷனல் என்ற வர்த்தக நிறுவனத்தை தொடங்கினார். இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பில் இருந்து வெளிநாட்டு வணிகர்களின் பட்டியலை அவர் பெற்றார். எஸ்.எஸ். ட்வெக்ஸ் & சன்ஸ் என்ற நியூயார்க்கை சேர்ந்த நிறுவனத்துடன் பேசி அவர்களுடன் ஒப்பந்தம் செய்தார்.

அந்த நிறுனத்தின் ஒரு பிரதிநிதி இந்தியா வந்தபோது  அவரை சந்தித்தார். இந்தியாவுக்கான கொள்முதல் முகவராக பாவனாவை அவர் நியமித்தார். தவிர, கொள்முதல் பணிகளை மேற்கொள்வதற்காக 3000 அமெரிக்க டாலர் மதிப்புள்ள காசோலையை கமிஷன் முன்தொகையாகக் கொடுத்தார்.

“அந்த நிறுவனத்தின் முகவர் என்ற வகையில், அடுத்த நான்கு ஆண்டுகள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் செய்தேன். இந்த வழியில் என் வாழ்க்கை பயணித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது,” என்றார் பாவனா.

21வது வயதில் விஷால் குரானா என்பவரை அவர் திருமணம் செய்து கொண்டார். தம்பதி இருவரும் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர். “என் தாய் கணவரிடம் இருந்து விவாகரத்துப் பெற்றவர். இது போன்ற குடும்பத்துக்கு இந்திய சமூகத்தில் என்ன சிக்கல்கள் என்பது என் அம்மாவுக்குத் தெரியும். எனவே, நான் முன்கூட்டியே திருமணம் செய்து கொள்ள சம்மதித்தேன்.” என்று விவரிக்கிறார்.

அமெரிக்காவில்,  தகவல் தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் வரவேற்பாளராகப் பணியாறினார். “எனது விருப்பம் எல்லாம் விற்பனையில் இருந்ததால், அவர்களிடம், விற்பனை முயற்சியில் ஈடுபடுவதற்கு ஒப்புதல் கேட்டேன். கேட்டர் பில்லர் நிறுவனத்தில் என்னுடைய முதல் ஆர்டரைப் பெற்றேன்,” என்றார் அவர்.

“ஒரு ஆண்டுக்குள் நிறுவனத்தின் வருவாயை பூஜ்யத்தில் இருந்து 2 மில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்தினேன்.”  பிறகு அந்த   நிறுவனம் அவர் கைக்கு வந்தது. பின்னர் அதனை விற்று விட்டார். 2004 ஆம் ஆண்டு அவரது கணவர் இந்தியாவுக்கு இடம் பெயர்ந்தார். ஆனால், தமது மகள், மகனுடன் அமெரிக்காவிலேயே பாவனா வசித்து வந்தார். இடையில் அவருடைய வாழ்க்கையில் தூண்போல இருந்து ஆதரவு அளித்து வந்த அவரது தாய் கேன்சர் காரணமாக உயிரிழந்தது அவருக்கு பெரும் வலியை ஏற்படுத்தியது. 2009 ஆம் ஆண்டு பாவனா கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார்.

ஆனால், எந்த ஒரு பின்னடைவும் அவரது வளர்ச்சியைத் தடுக்கவில்லை. 2013ஆம் ஆண்டு இன்ஃபினிட்டி என்ற மருந்து மற்றும் லைஃப் சயின்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினார். இந்த நிறுவனம் சர்வதேச அளவிலான பயோடெக், மருந்து நிறுவனங்களுக்கு தகவல் தொழில்நுட்ப சேவைகளை வழங்கி வந்தது. இந்நிறுவனம் இங்கிலாந்து, கனடா, இந்தியா ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது. தமது சொந்தப் பணத்தில் இருந்து இந்த நிறுவனத்தை அவர் தொடங்கினார்.

பின்னர் அமெரிக்காவை சேர்ந்த ஷெல்லி நிச்சானி என்பவர் அதில் முதலீடு செய்தார். இன்ஃபினிட்டி நிறுவனத்தில் இப்போது 700 –க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.

ஆண்டு விற்பனையின் வருவாய் கணக்குப்படி 35 மில்லியன் அமெரிக்க டாலராக இருக்கிறது.
பாவனா தமது மகன், மகளுடன்


2018ஆம் ஆண்டு அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட வேனேட்டர் என்ற ஏஐ அடிப்படையிலான ஆர்பிஓ நிறுவனத்தை பாவனா தொடங்கினார். நொய்டாவில் ஜம்மு என்ற பெயரில் ஒரு ஃபேஷன் சில்லறை விற்பனை கடையையும் தொடங்கினார்.

2019ஆம் ஆண்டு பாவனா, சந்தீப் சிங்கை சந்தித்தார். அப்போது அவர் கோஒர்க் நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக இருந்தார். இருவரும் இணைந்து எம்பவர்டு என்ற சொத்து நிர்வகிக்கும் நிறுவனத்தைத் கடந்த ஜூன் மாதம் தொடங்கினர். ஐஓடி-யில் இயங்கும் அலுவலகங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்காக இந்த நிறுவனம் உருவாக்கியது. பணியிடத்தின் பயன்பாட்டை மேற்படுத்த தொழில்நுட்பத்தையும் இவர்கள் உருவாக்கினர்.

“நாங்கள் குர்கான், நொய்டா, ஐதராபாத் ஆகிய இடங்கள்ல் 3 லட்சம் ச.அடி திட்டங்களைப் பெற்று பணிபுரிகிறோம்.  ஆகவே இந்த ஆண்டு மிகவும் அருமையாக இருக்கிறது,” என்கிறார் பாவனா.

“எதிர்காலத்தில் நான் என்னுடைய வேர்களுக்குச் செல்ல விரும்புகின்றேன். வேலை தளத்தில் அதிக பெண்களை கொண்டு வருவதற்கு முக்கியத் தேவையான கல்வியை வழங்குவேன் மற்றும் பெண்களுக்கான பள்ளிகளை கட்டமைப்பேன்,” என்கிறார் அவர்.  


 
 
 
 
 

அதிகம் படித்தவை

  • success in honey industry

    தேனாய் இனிக்கும் வெற்றி

    யாருடைய வழிகாட்டுதலும் இன்றி, சுயமாக தேன் விற்பனையில் இறங்கிய சாயா, இன்றைக்கு ஆண்டுக்கு பத்துக்கோடி வருவாய் ஈட்டும் பிராண்டை உருவாக்கி இருக்கிறார். சர்வதேச தேன் பிராண்ட்டுகளுக்கு மத்தியில் அவரது நெக்டார் ஃபிரஷ் தேனுக்கு பெரும் வரவேற்பு இருக்கிறது. பிரீத்தி நாகராஜ் எழுதும் கட்டுரை

  • Home made food flowing unlimited

    வீட்டுச்சாப்பாடு

    சுவையான மட்டன் குழம்பு, ரத்தப் பொறியல், குடல் கறி, தலைக்கறி, ஈரல், பிராய்லர் சிக்கன், நாட்டுக்கோழி சிக்கன் வகைகள், மீன் குழம்பு... ஆ... அம்புட்டும் அன்லிமிடட்! எங்கே எங்கே...? ஈரோடு மாவட்டம் சீனாபுரத்தில் ஒரு தம்பதி வீட்டிலேயே நடத்தும் புகழ்பெற்ற உணவகம் பற்றி உஷா பிரசாத் எழுதும் கட்டுரை

  • Even in your forties you can start a business and become a successful businessman

    நாற்பதிலும் வெல்லலாம்!

    பெரும்பாலானோர் ஓய்வுபெறுவதைத் திட்டமிடும் வயதில்அதாவது 40 வயதைத் தாண்டிய நிலையில் கொல்கத்தாவைச்சேர்ந்த மூன்று பேர் தங்கள் பிஎப், கிராஜுட்டி பணத்தைப் போட்டுதொழில் தொடங்கினார்கள். ஆறு ஆண்டுக்குப் பின்னால் என்ன ஆனது? ஜி.சிங் எழுதும் கட்டுரை

  • Former child worker in a flower farm is now a rich man

    பூக்களின் சக்தி

    தெலுங்கானாவில் இருக்கும் தன் ஊரைவிட்டு பதினாறு வயதில் பொல்லாபள்ளி ஸ்ரீகாந்த் பெங்களூர் மலர்ப்பண்ணை ஒன்றில் வேலை பார்க்க வந்தார். மாத சம்பளம் 1000 ரூ. இன்று அவர் ஆண்டுக்கு 70 கோடி ருபாய்க்கு விற்பனை செய்யும் முன்னணி மலர் உற்பத்தியாளர். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை

  • He quit Rs 70,000 salaried job to start a business that is nearing Rs 10 crore turnover

    விளம்பரங்கள் தந்த வெற்றி

    நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து, மாதம் 70 ஆயிரம் ரூபாய் சம்பளத்துடன் பணியில் இருந்த தீபக், தமது வேலையை ராஜினாமா செய்து விட்டு டிஜிட்டல் விளம்பர நிறுவனம் தொடங்கினார். அவரது நிறுவனம் இந்த நிதியாண்டில் 10 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட திட்டமிட்டுள்ளது. ஜி.சிங் எழுதும் கட்டுரை

  • pioneer in courier industry

    தன்னம்பிக்கையின் தூதுவர்

    திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த அகமது மீரான் தொலைபேசித் துறையில் பணியாற்றியபோது அவருக்கு ஒரு மணி நேரத்துக்கு ஒரு ரூபாய் சம்பளம். இன்றைக்கு ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் வர்த்தகம் செய்யும் கொரியர் தொழிலின் முன்னோடியாக இருக்கிறார். பி.சி. வினோஜ் குமார் எழுதும் கட்டுரை