கையில் இருந்த இருபதாயிரம் ரூபாயுடன் களமிறங்கி, இன்று மணிப்பூரின் முன்னோடி தொழிலபதிராக இருக்கிறார் இவர்!
23-Nov-2024
By ரீனா நாங்க்மைத்தம்
இம்பால்
இம்பாலில் உள்ள டாக்டர் தங்க்ஜாம் தாபாலி இந்த 61 வயதிலும் அசத்துகிறார். 30 ஆண்டுகளுக்கு முன்பு மணிப்பூர் மாநிலத்தில், புதிய துறையில் துணிச்சலாகத் தொழில் தொடங்கிய அவர், இன்றைக்கு சங்கிலித்தொடர் மருத்துவ ஆய்வகங்கள் மற்றும் இரு நட்சத்திர ஹோட்டல்களின் உரிமையாளராக உயர்ந்திருக்கிறார். ஆண்டுக்கு 40 கோடி வருவாய் பெறும் தொழிலதிபர் அவர்.
அது ஆபத்தான பாதையாக இருந்தது. “எந்த புதிய தொழிலையும் யாரும் ஆரம்பிப்பதற்கு முன்பாக நாம் செய்வதில் சாதகங்களும் இருக்கின்றன, பாதகங்களும் இருக்கின்றன. எனினும் ஒரு முறை நீங்கள் பிரச்னையில் இருந்து மீண்டு விட்டால், எப்போதுமே அந்த துறையின் முன்னணியில் நடைபோடுபவராக நீங்கள் இருக்க முடியும். எப்போதுமே ஒரு படி மேலே இருக்க முடியும்,” என்கிறார் டாக்டர் தாபாலி.
|
டாக்டர் தாங்க்ஜாம் தாபாலியின் மருத்துவ ஆய்வகம் 1983-ல் தொடங்கப்பட்டது. தகுதிவாய்ந்த ஒரு நோய் கூறியல் (pathologist) நிபுணருடன் மணிப்பூரில் செயல்பட்ட முதல் ஆய்வகம் இது.
|
பபினா (BABINA) குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான தாபாலி, இன்றைக்கு மணிப்பூரின் சுகாதாரத்துறை மற்றும் ஹோட்டல் தொழில் துறையில் முன்னோடி தொழில் அதிபராக நன்கு மதிக்கப்படுபவராக இருக்கிறார்.
இது எல்லாம், 1983-ல் இம்பாலில் சிறிய மருத்துவ ஆய்வகமாக தொடங்கியதுதான். இன்றைக்கு அவரது கடின உழைப்பு, கண்ணோட்டம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் வகையில் வடகிழக்கு இந்தியாவின் பெரிய ஆய்வக சோதனை மையங்கள் மற்றும் மிகச்சிறந்த ஹோட்டல்களை பபினா குழுமம் கொண்டுள்ளது.
1983-ல் மணிப்பூரில் தகுதி வாய்ந்த நோய்க்கூறியல் நிபுணரால் நடத்தப்படும், முதல் மருத்துவ ஆய்வகமாக அவரது ஆய்வகம் இருந்தது.
அந்த சமயத்தில் ஸ்டார்ட் அப் தொழில் திட்டங்கள் மீது வங்கிகள் நம்பிக்கை கொள்ளவில்லை. “முதன் முதலாக நான், 8000 ரூபாய்க்கு ஒரு குளிர்சாதனப்பெட்டி வாங்கியபோதுதான் எனக்கு வங்கிக் கடன் கிடைத்தது,” என்றபடி சிரிக்கிறார் அவர்.
கீழ் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் டாக்டர் தாபாலி. அவரது உடன் பிறந்தோர் ஒன்பது பேர். பணத்துக்கு எப்போதுமே பிரச்னையாக இருந்தது. அவரது தந்தை தங்க்ஜாம் பிர்சந்த்ரா சிங், ஒரு சிறிய துணி வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார். எனினும் அவர் தமது பத்து குழந்தைகளுக்கும் கல்வி அளித்தார்.
டாக்டர் தாபாலி அரசு பள்ளியில் படித்தார். பாடங்களை நன்றாகப் படித்து தேர்ச்சி பெற்றார். இப்போது இம்பாலில் மண்டல மருத்துவ அறிவியல் மையம் (ரிம்ஸ்) என்று அழைக்கப்படும் முந்தைய மண்டல மருத்துவ கல்லூரியில் அவருக்கு எம்.பி.பி.எஸ் படிக்க சீட் கிடைத்தது. பின்னாளில் அந்த கல்லூரியின் நோயியல் துறையில் இணைப்பேராசிரியராகவும் பணியாற்றினார்.
ஒவ்வொரு மாதமும் அவருக்கு 100 ரூபாய் கல்வி உதவித் தொகை கிடைத்தது. அந்தத் தொகைக்குள் அவர் தமது எல்லாச் செலவுகளையும் செய்தார். 1978-ம் ஆண்டு அவர் எம்.பி.பி.எஸ் படிப்பை முடித்த உடன், சண்டிகரில் உள்ள மருத்துவப் பட்டமேற்படிப்புக் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நோயியல் துறையில் எம்.டி படிக்க அவருக்கு இடம் கிடைத்தது.
அந்த நேரத்தில் அவருக்குத் திருமணம் ஆகிவிட்டது. ஒரு குழந்தையும் இருந்தது. அவரது மனைவி டாக்டர் எஸ். ரீட்டா. இப்போது ரிம்ஸில் பார்மாகாலஜி துறையில் பேராசிரியராக இருக்கிறார். டாக்டர் தாபாலி, சண்டீகரில் மருத்துவப் பட்ட மேற்படிப்பு படிக்கும்போது, அப்போது அங்கு எம்.டி படிப்பதற்காக ரீட்டாவும் சேர்ந்தார். இருவரும் தங்கள் மகளை அவர்களது பெற்றோரின் கவனிப்பில் விட்டு வந்தனர். 1982ல் டாக்டர் தாபாலி பட்டமேற்படிப்பு முடித்தார். ரிம்ஸில் ஒரு நிலையான வேலை கிடைக்கும் என்றும் அவர் நம்பினார்.
|
பபினா மருத்துவ ஆய்வகத்துக்குச் சொந்தமாக மணிப்பூர், திமாப்பூர், கோஹிமா (நாகலாந்து), அகர்தலா (திரிபுரா), மற்றும் அய்ஜால் (மிசோரம்) ஆகிய இடங்களில் 150 ஆய்வக மாதிரிகள் சேகரிக்கும் மையங்கள் உள்ளன.
|
“1983ல் எனக்கு அரசு வேலை கிடைக்காததால், நான் மனம் உடைந்து விட்டேன். என்னுடைய வாழ்க்கையில் அது மோசமான தருணம்,” என்கிறார் அவர். ரிம்ஸில் அப்போது எந்த வேலையும் காலியாக இல்லை.
விரக்தி மனப்பான்மையையே அவர் சவாலாகக் கொண்டு, ஏதாவது புதிதாகச் செய்ய வேண்டும் என்று நினைத்தார். அப்போது அவரிடம் ஒரு பைசா கூட இல்லை. பட்டமேற்படிப்புக்காக மாதம் தோறும் கிடைத்த ஆயிரம் ரூபாயில்தான் அவர் வாழ்க்கையை நடத்தி வந்தார். டாக்டர் தாபாலி, புதிதாக ஒரு தனியார் மருத்துவ ஆய்வகத்தைத் தொடங்குவது என்று தீர்மானித்தார். அந்த சமயத்தில் இம்பாலில் அது போல எதுவுமே இல்லை.
ஆனால், எப்படி? எங்கிருந்து பணம் வரும்? அவரது மனைவி அவருக்கு கை கொடுக்க முன்வந்தார். “என் மாமனார் உதவி செய்ய முன் வந்தார். 20 ஆயிரம் ரூபாய் பண உதவியுடன், பிர் திக்கன்டிராஜித் பகுதியில் ஒரு சிறிய வணிக இடத்தையும் எனக்குக் கொடுத்தார்,” என்றார் அவர். இந்த ஆய்வகம் 1983 நவம்பர் 9ம் தேதி தொடங்கப்பட்டது. அந்த ஆய்வகத்துக்கு, தமது மகள் பெயரை வைத்தார். இப்படித்தான் பபினா ஆய்வகம் தொடங்கப்பட்டது.
“ஆட்கள் நியமித்து, சம்பளத்துக்கு செலவு செய்வதை குறைக்க, பெயிண்ட் அடிப்பது முதல், எலக்ட்ரிக்கல் வேலைகள் வரை அனைத்தையும் நானே செய்தேன்,” என்று சிரிக்கிறார் அவர். நான்கு பேரை நியமித்து பணிகளைத் தொடங்கினார். எந்த ஒரு ஆய்வக கருவியை வாங்குவதற்கும் செலவிட முடியவில்லை. எனினும், அவசியமான மருத்துவ ஆய்வக உபகரணங்களை மட்டும் வாங்கினர்.
|
டாக்டர் தாபாலி இம்பாலில், ஒரு மூன்று நட்சத்திரம் மற்றும் ஒரு நான்கு நட்சத்திர ஹோட்டல்களை வைத்திருக்கிறார்.
|
“சிறுநீர், ரத்தம் போன்றவற்றை பரிசோதிக்கும் அடிப்படை ஆய்வக வசதிகளுடன்தான் முதலில் நாங்கள் தொடங்கினோம். இந்த ஆய்வுகளுக்கான உபகரணங்கள், கருவிகள் மற்றும் ரத்தப் பரிசோதனை செய்யும் மோனோகுலார் காம்பவுண்ட் ( monocular compound)கருவி ஆகியற்றை ஒரு ஓய்வு பெற்ற டாக்டரிடம் இருந்து மாதம் 170 ரூபாய் வாடகையில் வாங்கினேன்,” என்று நினைவு கூறுகிறார்.
“கிளாஸ்வேர், டெஸ்ட் டியூப்-கள் மற்றும் இதர சிறிய பொருட்களை என் நண்பரின் மாமனார் வைத்திருந்த கடையில் இருந்து இலவசமாகப் பெற்றேன். அவர், ஆய்வக கருவிகள் மற்றும் உபகரணங்களுக்கான கடை வைத்திருந்தார்.”
அவரது மருத்துவ ஆய்வகத்தொழில் மெதுவாக வளர்ச்சியடையத் தொடங்கியது. கடைசியாக 1984-ம் ஆண்டு ரிம்ஸில் இணைப் பேராசிரியராக அவருக்கு வேலை கிடைத்தது. எனினும் இன்னொரு பக்கம் தொடர்ந்து அவர் தமது தொழிலை மேற்கொண்டு வந்தார். 1994ம் ஆண்டு கல்லூரியில் இருந்து தானாக விருப்ப ஓய்வு பெற்று, ஆய்வகத்தை வளர்த்தெடுப்பதில் கவனம் செலுத்தினார்.
இன்றைக்கு, பபினா டயாக்னாஸ்டிக் என்று அழைக்கப்படும் இது, வடகிழக்கு மாநிலங்களிலேயே, பெரிய மருத்துவ ஆய்வகங்களில் ஒன்றாக திகழ்கிறது.
|
இம்பாலுக்கு வரும் பயணிகளுக்கு தங்குவதற்கு நல்ல ஹோட்டல்கள் இல்லை என்பதை உணர்ந்த டாக்டர் தாபாலி, ஹோட்டல் துறையில் கால்பதித்தார்.
|
பபினா பரிசோதனை ஆய்வகம், பல்வேறு வகையான சோதனைகள், மிகவும் அதிநவீன மூலக்கூறுகளைக் கண்டறியும் சோதனைகள் ஆகியவற்றை வழங்குகிறது. வடகிழக்கு மாநிலங்களில் தேசிய அங்கீகார வாரியத்தின் சோதனை மற்றும் அளவீட்டு ஆய்வுக்கூட சான்றிதழ் பெற்ற முதல் மருத்துவ ஆய்வகமாகவும் இது விளங்குகிறது.
2009-ம் ஆண்டு டாக்டர் தாபாலி, ஹோட்டல் துறையிலும் கால் பதித்தார். இம்பால் நகரில் முதல் நட்சத்திர அந்தஸ்து கொண்ட த கிளாசிக் (The Classic) என்ற ஹோட்டலை அவர் தொடங்கினார்.
“தேவைதான், ஒன்றைக் கண்டுபிடிப்பதற்கு மூலகாரணமாக இருக்கிறது,”என அவர் ஹோட்டல்கள் தொடங்கியது குறித்து கூறுகிறார். அவரது மருத்துவ ஆய்வகம் சார்பில் நடத்தப்படும் மருத்துவ கருத்தரங்குகளுக்கு, மணிப்பூர் மாநிலத்துக்கு வெளியே இருந்து இம்பாலுக்கு வரும் விருந்தினர்கள் தங்குவதற்கு சிரம ப்பட்டார்கள். அவர்கள் தங்கிய ஹோட்டல்களும் நன்றாக இல்லை என்று புகார் செய்தார்கள்.
இதையடுத்து அவர், இந்த இடைவெளியை தாமே நிரப்புவது என்று தீர்மானித்தார். ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியிலிருந்து 9 கோடி ரூபாய் லோன் பெற்று, த கிளாசிக் ஹோட்டலை 2009-ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி தொடங்கினார்.
|
வடகிழக்கு மாநில கிளர்ச்சியாளர்கள் பிரச்னையை சமாளிப்பதும், டாக்டர் தாபாலியின் தொழில் திட்டங்களின் ஒரு பகுதியாக இருக்கிறது.
|
நவம்பர் 9-ம் தேதி அவரது மேஜிக் தேதியாக இருக்கிறது. அந்தத் தேதியில் 2015-ம் ஆண்டு கிளாசிக் கிராண்ட் என்ற புதிய ஹோட்டலைத் தொடங்கினார். வடகிழக்கு மாநில வளர்ச்சி நிதிக் கழகம் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து இதற்காக 23 கோடி ரூபாய் கடன் பெற்றிருக்கிறார். இந்த தொழிலிலும் அவர் வெற்றிகரமாக ஈடுபட்டு வருகிறார்.
கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கம் நிறைந்த மணிப்பூரில், பெரிய தொழில் சாம்ராஜ்யத்தை செயல்படுத்துவது அவ்வளவு எளிதான செயல் அல்ல. பல்வேறு வடிவங்களில், பல்வேறு குழுக்கள், பல்வேறு அமைப்புகளில் இருந்து பண உதவி கேட்டு கோரிக்கைகள் வரும், இதனோடுதான் நீங்கள் வாழ வேண்டி இருக்கும்.
“இங்கே ஒரு தொழில் நடத்த வேண்டும் என்றால், நீங்கள் இது போன்ற எல்லா சூழல்களையும் கையாள வேண்டும்,” என்கிறார் டாக்டர் தாபாலி. “அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதும், இப்போது எங்களுடைய தொழில் திட்டத்தில் இருக்கிறது. அவர்களுக்கு எதிராக நாங்கள் செயல்பட முடியாது. அதே நேரத்தில் அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறோம்,” என்று உண்மை நிலவரத்தை சொல்கிறார் இந்த தொழில் அதிபர்.
அவருடைய மூன்று பிள்ளைகளும் அவரது தொழிலில் ஈடுபட்டுள்ளனர். டாக்டர் பபினா, பேத்தலாஜிஸ்ட் (pathologist)ஆக இருக்கிறார். அவரது மூத்த மகன், டாக்டர் மோமோச்சா ஒரு ரேடியாலஜிஸ்ட் ஆக இருக்கிறார். இரண்டாவது மகன் நாவோப்பா, ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்திருக்கிறார். ஹோட்டல் தொழிலில்களின் இயக்குனராக இருக்கிறார்.
|
பபினா குழுமத்தில் 800 பேர் பணியாற்றுகின்றனர். 500 பேர் ஹோட்டல் தொழில் பிரிவிலும், 300 பேர் ஆய்வகப் பிரிவிலும் பணியாற்றுகின்றனர்.
|
டாக்டர் தாபாலி, வெற்றியின் அடையாளமாக இருக்கிறார். அவர், கடந்த 2010-ம் ஆண்டு வடகிழக்கு மாநில சிறப்பு விருது, 2010-ம் ஆண்டுக்கான சுகாதாரத்துறையில் சிறப்பாக பணியாற்றியதற்கான இந்திய தலைமை விருது, 2012-ம் ஆண்டு சுகாதார நலன் சிறப்புக்கான இந்திய சாதனையாளர் விருது, 2012-ம் ஆண்டுக்கான மதர்தெரசா சிறப்பு விருது ஆகியவற்றையும், மேலும் பல விருதுகளையும் பெற்றிருக்கிறார்.
சிறிது, சிறிதாக தொழில் சாம்ராஜ்யத்தை அவர் கட்டமைத்தார். “கடின உழைப்பு மற்றும் சாதகமான எண்ணங்களைக் கொண்டிருந்ததற்குமான பரிசுகள் இவை,” என்கிறார் அவர். டாக்டர் தாபாலியிடம் இப்போது 800 பேர் பணியாற்றுகின்றனர். 500 பேர் ஹோட்டல் தொழில் பிரிவிலும், 300 பேர் சுகாதார நலன் தொழில் பிரிவிலும் பணியாற்றுகின்றனர். ஒரு கேன்சர் பன்முக சிறப்பு மருத்துவமனையை தொடங்குவதற்கான திட்டத்திலும் அவர் இருக்கிறார். இதையும் அவர் செயல்படுத்துவார், அதிலும்கூட அவர் வெற்றி பெறுவார் என்று நாம் உறுதியாகக் கூறமுடியும்.
அதிகம் படித்தவை
-
விருத்தாசலம் டூ வர்ஜீனியா!
தமிழ்நாட்டில் விருத்தாசலத்தைச் சேர்ந்தவர் சரவணன் நாகராஜ். 12ஆம் வகுப்பில் கூட தேர்ச்சி பெறாத நிலை. தந்தையின் தொழிலோ நொடித்துப்போனது. இந்நிலையில் வேலை தேடி சென்னை வந்தவர் பின்னர் அமெரிக்கா சென்று அங்கு ஒரு நிறுவனத்தை வெற்றிகரமாக கட்டமைத்து வளர்த்தெடுத்துள்ளார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.
-
ஒரு வயர்மேனின் வெற்றிக்கதை
வேலைக்கு நேர்காணலுக்குச் செல்ல, பேருந்து பயணத்துக்கு பணம் இல்லாத நிலையில் தன் பாட்டியிடம் 20 ரூபாய் வாங்கிக் கொண்டு சென்றவர் ராம்தாஸ் மான்சிங் மானே. இன்றைக்கு ஆண்டுக்கு 30 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் தொழில் குழுமங்களின் தலைவராக இருக்கிறார். தேவன் லாட் எழுதும் கட்டுரை
-
சம்பளத்தைவிட சாதனை பெரிது!
ஐ.பி.எம் நிறுவனத்தில் மாதம் 15,000 ரூபாய் சம்பளத்தில் பணியாற்றினார் சனீன். பின்னர் சொந்த தொழில் செய்யும் ஆர்வத்தில் வேலையை விட்டு விலகி, நண்பர் நிறுவனத்தில் பங்குதாரர் ஆனார். இன்றைக்கு 1.5 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் நிறுவனத்தின் உரிமையாளர். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை
-
சாதனை இளைஞர்கள்
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள், அதிக சம்பளம் தரும் வேலைகளை விட்டு விட்டு, ஃபர்னிச்சர்கள் விற்பனை செய்யும் ஆன்லைன் தளத்தைத் தொடங்கினர். இந்தத் துறையில் அனுபவம் இல்லாதபோதும், கடின உழைப்பு மூலம் நான்கு பேரும் சாதித்திருக்கிறார்கள். பார்த்தோ பர்மான் எழுதும் கட்டுரை
-
காதல் தந்த வெற்றி
பீகார் மாநில இளைஞர் விகாஸ் குத்குத்யா, டெல்லியில் இருக்கும் தமது காதலிக்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லப் போனார். அங்குதான் அவருக்கு ஒரு புதிய தொழில் யோசனை தோன்றியது. இன்று அவர் 200 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் பொக்கே மலர் விற்பனை நிறுவனத்தின் உரிமையாளர். பிலால் ஹாண்டு எழுதும் கட்டுரை
-
மணக்கும் வெற்றி!
ஐயாயிரம் ரூபாய் முதலீட்டில் இளைஞர்களான சஞ்சீவ் சாஹா, ராஜீவ் சாஹா இருவரும் ஆவாதி பிரியாணியை தங்கள் குடும்ப உணவகத்தில் அறிமுகம் செய்தனர். அந்த உணவகம் பிரியாணி பிரியர்கள் கூட்டம் கூட்டமாக தேடி வரும் இடமாக மாறி ஆண்டு வருவாய் 15 கோடியைத் தொட்டுள்ளது. பார்த்தோ பர்மன் எழுதும் கட்டுரை