Milky Mist

Thursday, 10 July 2025

மாதம் அறுபது ரூபாய் ஊதியத்தில் ஆரம்பித்து இன்று இரண்டாயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் பெண் தொழிலதிபர்! பிரமிக்க வைக்கும் வெற்றிக்கதை!

10-Jul-2025 By தேவன் லாட்
மும்பை

Posted 12 May 2018

காமானி டியூப்ஸ் லிமிடெட்(Kamani tubes limited), காமானி ஸ்டீல் ரீ-ரோலிங் மில்ஸ் பிரைவேட் லிமிடெட், சாய்கிருபா சர்க்கரை ஆலை பிரைவேட் லிமிடெட், கல்பனா பில்டர்ஸ் & டெவலப்பர்ஸ், கல்பனா சரோஜ் & அசோஷியேட்ஸ் மற்றும் கேஎஸ் கிரியேஷன்ஸ் பிலிம் புரடக்சன் ஆகிய ஆறு நிறுவனங்களின் தலைவராக இருப்பவர் கல்பனா சரோஜ். அவரது நிறுவனங்களில் 600 பேர் பணியாற்றுகின்றனர். அவரது வணிக சாம்ராஜ்யத்தின் ஒட்டு மொத்த ஆண்டு வருவாய் 2000 ஆயிரம் கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் இந்த பணத்தோடும் செல்வாக்கோடும் அவர் பிறக்கவில்லை. மாறாக, குழந்தையாக இருக்கும் போது, பெரும் பிரச்னைக்கு உரிய சூழல்களை எல்லாம் அவர் சந்தித்தார். எல்லாப் பிரச்னைகளில் இருந்தும் விடுபட்டு, வெற்றிகரமான தொழில் முனைவோராக சாதித்திருக்கிறார்.

https://www.theweekendleader.com/admin/upload/09-05-18-03ablead1.jpg

குழந்தையாக இருக்கும் போது கடினமான சூழல்களைக் கடந்து வந்தவர் கல்பனா சரோஜ். இப்போது, அவரது நிறுவனங்களின் ஒட்டு மொத்த ஆண்டு வருவாய் 2000 கோடி ரூபாய். அவர் ப்ரோ-கபடி நிகழ்வில் பங்கேற்றபோது  எடுக்கப்பட்ட படம் (புகைப்படங்கள்: சிறப்பு ஏற்பாடு)


“குழந்தைப் பருவத்திலேயே எனக்குத் திருமணம் நடந்தது,” என்கிறார் கல்பனா. 1958-ம் ஆண்டு, நடுத்தர வர்க்கத்துக்கும் கீழேயான ஒரு குடும்பத்தில் பிறந்தவர். மகாராஷ்டிரா மாநிலம் அகோலா மாவட்டத்தில் வசித்தவர் கல்பனா. அங்கே அவரது தந்தை, போலீஸ் கான்ஸ்டபிள் ஆக இருந்தார். இரண்டு சகோதரிகள், இரண்டு சகோதரர்கள் என உடன் பிறந்த நான்கு பேர்.

ஏழாம் வகுப்புப் படிக்கும்போது, அவர் திருமண வாழ்க்கைக்குள் தள்ளப்பட்டார். தானேவில் உள்ள உல்ஹாஸ்நகர் குடிசைப்பகுதியில்தான் அவரது கணவரின் குடும்பத்தினர் வசித்து வந்தனர். 10க்கு 5 அடி கொண்ட ஒரு அறையில் 12 முதல் 15 பேர் ஒரே கூரையின் கீழ் வசித்து வந்தனர். இது போன்ற குடிசைப் பகுதியை இதற்கு முன்பு  கல்பனா பார்த்ததே இல்லை.

 “அந்த அறை மிகவும் சிறியதாக இருந்தது. என்னுடைய கணவரின் சகோதரர், குழந்தைகள் உள்ளிட்ட அனைவரும் அங்குதான் வசித்தனர்,” என்று கல்பனா நினைவுகூறுகிறார். “திருமணம் ஆன ஆறு மாதத்துக்குள் என்னை அவர்கள் துன்புறுத்த ஆரம்பித்தனர். உணவில் கொஞ்சம் உப்புக் குறைவாக இருந்தால் கூட என் கணவர் என்னை அடிக்க ஆரம்பித்தார்.”

கல்பனா வெளியில் செல்வதற்கும், அவரது குடும்பத்தினருடன் தொடர்பு வைத்துக் கொள்வதற்கும், கணவரின் வீட்டார் அனுமதிக்கவில்லை. ஆனால், எதிர்பாராத விதமாக ஒரு நாள், வேலை விஷயமாக நகருக்கு வந்த அவரது தந்தை, கல்பனாவைச் சந்திக்க வந்தது அவருக்கு  மகிழ்ச்சியை அளித்தது.

“அந்தத் தருணத்தில், என்னை என் தந்தையால் அடையாளம் காணமுடியவில்லை,” என்கிறார் கல்பனா. துன்புறுத்தப்பட்ட சூழலில் கல்பனா அப்போது அந்த அளவுக்குப் பலவீனமாக இருந்தார். “என்னுடைய நிலையைப் பார்த்த என் தந்தை, உடனே அவருடன் என்னை அழைத்துச் சென்று விட்டார். அன்றைய தினம்தான் எனக்குச் சுதந்திரம் கிடைத்தது.”

கிராமத்துக்குத் திரும்பிய அவர் மேலும் இன்னல்களை சந்தித்தார்.  கல்பனா திரும்பியதையும், மீண்டும் பள்ளிக்குச் சென்றதையும் பார்த்து அவரது கிராமத்து மக்கள், கல்பனாவின் குடும்பத்தை அவதூறு செய்தனர். இதனால் கல்பனா மேலும் அதிகமான கொடுமைகளுக்கு உள்ளானார். ஒவ்வொரு விஷயத்திலும் சோர்வாக உணர்ந்தார். ஒரு நாள், மனம் வெறுத்து, மூன்று பாட்டில் எலி விஷத்தைக் குடித்து, தற்கொலைக்கு முயன்றார்.

“அப்போது நான் ஒரு குழந்தையாக இருந்தேன். அவர்கள் அவமானப்படுத்தி திட்டியதை என்னால் பொறுக்க முடியவில்லை,” என்று விவரிக்கிறார் கல்பனா. “என் தாய் இது எல்லாவற்றையும் எதிர்கொள்ள வேண்டி இருந்தது. அதனால், அவர் மோசமாகப் பாதிக்கப்பட்டார்.”

கல்பனா, அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். தற்கொலைக்கு முயன்றதால் உடல் நலம் குன்றியிருந்தார். மீண்டும் அவருக்கு நல்ல உடல் நிலையைக் கொண்டு வர மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். உடல் நலம் தேறிய கல்பனா, இரண்டாவதாக ஒரு வாழ்க்கை கிடைத்ததாக உணர்ந்தார். எனவே, ஏதாவது சாதிக்க வேண்டும் என்று கல்பனா தீர்மானித்தார்.

https://www.theweekendleader.com/admin/upload/09-05-18-03ab7.jpg

வளமையான எதிர்காலத்தைத் தேடி கல்பனா 1972-ல் மும்பை சென்றார்


“1972-ம் ஆண்டு என் குடும்பத்தினரை வலியுறுத்தி, சமாதானப்படுத்தி, மும்பை செல்ல அனுமதி கேட்டேன்,” என்கிறார் கல்பனா.  மும்பையில் அதிக வருவாய் ஈட்டும் வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு புறப்பட்டு சென்றார். 

கல்பனாவின்  அந்த முடிவுதான், அவரது வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

தாதர் ரயில்வே குடியிருப்பில் உள்ள ஓர் உறவினரின் நண்பர் வீட்டில் கல்பனா தங்கினார். லோவர் பாரெல்  (Lower Parel) பகுதியில் உள்ள ஆடைகள் தொழிற்சாலையில் ஹெல்பராக மாதம் 60 ரூபாய் சம்பளத்துக்குப் வேலை கிடைத்தது.

சிலமாதங்களில், தனியாக அவரே தைக்கவும் ஆரம்பித்தார். அவரது வருவாய் 100 ரூபாய் ஆனது. “என் வாழ்க்கையில் முதன் முறையாக அப்போதுதான் 100 ரூபாயைப் பார்த்தேன்,” என்று சிரித்தபடி நினைவுகூறுகிறார்.

கல்பனா, அதன்பின்னர் ஒருபோதும் தமது உத்வேகத்தை இழக்கவில்லை. அவரது வழியில் வரும் அனைத்து வாய்ப்புகளையும் கைப்பற்றினார். இரண்டு ஆண்டுகளில், குறிப்பிடத்தக்க அளவுக்குப் பணத்தைச் சேமித்தார். அதை வைத்து கிழக்கு கல்யாண் பகுதியில் ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்தார். அங்கு தம்முடன் அவரது குடும்பத்தையும் குடியமர்த்தினார்.

அதே ஆண்டில், கல்பனாவின்  குடும்பத்தினர் அவரது 17 வயது சகோதரியை இழந்தனர். அவருக்கு உடல் நலம் இல்லாமல் இருந்தபோது, போதிய மருத்துகள் கொடுக்கவில்லை. “என் சகோதரி என்னைப் பார்த்தபார்வை இன்னும் என் நினைவில் வந்து வஞ்சிக்கிறது,”  என்று கவலையுடன் நினைவுகூறுகிறார் கல்பனா. “உதவி செய்யும்படி கெஞ்சலோடு என்னைப் பார்க்கிறார். ஆனால், அவருக்கு என்னால் உதவ முடியவில்லை.  அப்போதுதான், பெரும் அளவு பணம் சம்பாதிக்க வேண்டும் என்று தீர்மானித்தேன்.”

பின்தங்கிய வகுப்பினர்களுக்கான அரசின் திட்டமான, மகாத்மா ஜோதிபா புலே (Mahatma JyotibaPhule Scheme ) திட்டத்தின் கீழ், கல்பனா 50 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றார். கல்யாண் பகுதியில் துணிக்கடை ஒன்றைத் தொடங்கினார். இன்னொருபுறம், பழைய மரசாமான்கள் விற்கும் கடையையும் தொடங்கினார்.

அவரது தொழில் நன்றாக நடைபெற்றது. 1978-ம் ஆண்டில், வேலையற்றவர்களுக்கு உதவும் வகையில் சுஷிக்ஷித் பெரோஸ்கார் யுவக் சங்கத்னா (Sushikshit Berozgar Yuvak Sanghatana) என்ற அமைப்பைத் தொடங்கினார். அந்த அமைப்பில் 3000 பேர் சேர்ந்தனர். அவர்களுக்கு வேலை கிடைக்க வழி செய்யப்பட்டது. 

https://www.theweekendleader.com/admin/upload/09-05-18-03ab3.jpg

1975-ம் ஆண்டு, கல்யாண் பகுதியில் கல்பனா ஒரு துணிக்கடை தொடங்கினார்


“என்னுடைய தந்தை மரச்சாமான்கள் தொழிலைக் கவனித்துக் கொண்டார். என்னுடைய இளைய சகோதரி, துணிக்கடையைக் கவனித்துக் கொண்டார்,” என்கிறார் கல்பனா. “நாங்கள் வேலைவாய்ப்பு வழங்கும் தகவல், வாய்வழி விளம்பரமாக பலருக்கும் பரவியது. மக்கள் என்னை டாய் (மூத்த சகோதரி) என்று அழைக்க ஆரம்பித்தனர். அப்போது என் வயது 20களில் தான் இருந்தது.”

தொடர்ந்து மேல்நோக்கிய வளர்ச்சியாக அவரது பயணம் அமைந்திருந்தது. கல்பனா மட்டுமின்றி, அவரது குடும்பத்தினரும் வசதியான வாழ்க்கை வாழ்ந்தனர்.  அனால்  20 ஆண்டுகள் கழித்து தான் கல்பனாவின் வருவாயில் பெரிய மாறுதல் ஏற்பட்டது.

1995-ல் கல்பனாவிடம் ஒரு நபர், தமது நிலத்தை விற்க விரும்புவதாகவும்,  தமக்கு 2.5 லட்சம் ரூபாய் தேவை என்றும் சொன்னார். ஆனால், தம்மிடம் ஒரு லட்சம் ரூபாய்தான் இருக்கிறது என்று கல்பனா சொன்னார். அந்த ஒரு லட்சம் ரூபாயை அவர் வாங்கிக் கொண்டார். சில காலம் சென்ற பின்னர் தான் அந்த நிலம் வழக்கில் சிக்கி இருந்ததால் குறைந்த விலைக்குக் கொடுத்திருக்கிறார் என்று தெரிந்தது.

“நிலம் கொடுக்கல், வாங்கல் தொடர்பான விவரங்கள் எதுவும் அதுவரை எனக்கு தெரியாது,” என்று விவரிக்கிறார் கல்பனா. “நான் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்துப் பேசினேன். அவர் பிரச்னைகளைத் தீர்க்க எனக்கு உதவி செய்தார். இரண்டு ஆண்டுகளில், அந்த நிலத்தை விற்க அனுமதி பெற்றேன்.”

அந்த நிலத்தை பில்டர் ஒருவரிடம் கட்டடம் கட்ட அனுமதி கொடுத்தார். கட்டி முடிக்கப்பட்ட  கட்டடத்தை விற்பனை செய்ததில் வந்த பணத்தில் 35 சதவிகிதத்தை கல்பனா பெற்றுக் கொண்டார். 65 சதவிகிதத் தொகை பில்டருக்குக் கிடைத்தது. இதன் மூலம் கல்பனா, ரியல் எஸ்டேட் தொழிலில் நுழைந்தார்.

1998-ம் ஆண்டு அவரது ரியல் எஸ்டேட் தொழில் முழுவீச்சில் நடந்தது. விரைவிலேயே கல்பனா, ரியல்எஸ்டேட்  சிக்கல்களை தீர்ப்பதில் நிபுணர் ஆகிவிட்டார். “எனக்கு பல பிரச்னைகள் ஏற்பட்டன. என்னை கொன்று விடுவதாகக் கூட மிரட்டல் விடுத்தனர். எனினும், எந்தவித அச்சமும் இல்லாமல் அதையெல்லாம் எதிர்கொண்டேன்,” என்கிறார் கல்பனா.

ரியல் எஸ்டேட் தொழிலின் ஆண்டு வருவாய் இப்போது 4 கோடி ரூபாயாக ஆன நிலையில் கல்பனா, சர்க்கரை தொழிற்சாலையில் முதலீடு செய்து சர்க்கரை தயாரிக்கத் தொடங்கினார்.

https://www.theweekendleader.com/admin/upload/09-05-18-03ab2.jpg

காமானி டியூப்ஸ் என்ற நலிவடைந்த நிறுவனத்தை எடுத்து அதற்கு மீண்டும் புத்துயிர் ஊட்டினார். இதையடுத்து கல்பனாவின் வாழ்வில் புதிய திருப்பம் ஏற்பட்டது  


இதற்கிடையே, சிக்கல்களைத் தீர்க்கும் ராணி என கல்பனாவின் புகழ் காமானி டியூப்ஸ் என்ற  நிறுவனத்துக்கும் பரவியது. காப்பர் டியூப்கள், ராடுகள், எல்.இ.டி பல்புகள் ஆகியவற்றை உற்பத்தி செய்து விநியோகிக்கும் காமானி டியூப்ஸ் நிறுவனம்  அப்போது பெரும் இழப்பில் இருந்தது. தவிர அந்த நிறுவனத்தின் மீது பல ஆண்டுகளாகத் தீர்க்க முடியாத வழக்குகளும் நிலுவையில் இருந்தன.

1987-ம் ஆண்டு, ஊழியர்களே அந்த நிறுவனத்தை நடத்தும்படி நீதிமன்றம் கூறியது. ஆனால், அவர்களால் வெற்றிகரமாக நடத்த முடியவில்லை. எனவே அந்த நிறுவனம், பல ஆண்டுகளாக மூடிக் கிடந்தது. 1999-ம் ஆண்டு அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் கல்பனாவை சந்தித்தனர்.

“அந்த நிறுவனத்தின் 3500 ஊழியர்களும் அதன் தலைவர்களாக இருந்தனர்,” என்று சிரிக்கிறார் கல்பனா. “வங்கிகள் அவர்களுக்கு கடன் கொடுத்தன. ஆனால், 1987-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டு வரை அவர்களால்  பணத்தைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை. இது தவிர நிறுவனத்தின் பெயரில் 116  கோடி ரூபாய் கடன் இருந்தது. 2 யூனியன்கள் இருந்தன. நிறுவனத்தின் மீது 140 வழக்குகள் நிலுவையில் இருந்தன. ஒட்டு மொத்தமாக குழப்பம்! ஆனால், அங்கே போனதும், அந்தப் பிரச்னைகளுக்கு எல்லாம் நான் தீர்வு கண்டேன்.”

மார்க்கெட்டிங், நிதி, வங்கி இயக்குனர்கள், வழக்கறிஞர்கள், அரசு ஆலோசகர்கள் அடங்கிய பத்துப்பேர் குழுவை கல்பனா அமைத்தார்.

சிக்கலைத் தீர்ப்பது அவ்வளவு எளிதாக இல்லை. ஆனால், கடைசியில் 2006-ஆம் ஆண்டு அந்த நிறுவனத்தின் தலைவராக கல்பனா பொறுப்பேற்றார். 2000-வது ஆண்டு முதல் 2006 ஆண்டு வரை காலகட்டத்தில் அப்போதைய மாநில நிதி அமைச்சரையும் காமானி நிறுவனத்துக்கு  கடன் கொடுத்தவர்களையும் சந்தித்தார். அவருடைய முயற்சிகளின் விளைவாக,  கடனுக்கான அபராதம், வட்டி ஆகியவற்றைத் தள்ளுபடி செய்ததுடன், முதன்மை கடன் தொகையில் இருந்து 24 சதவிகிதத்தையும் வங்கிகள் தள்ளுபடி செய்தன. இதன்மூலம் அந்த நிறுவனம் மீண்டு வர உதவி பெற்றார்.

“முதலில் கடனை அடைத்தோம்,” என்று விவரிக்கிறார் கல்பனா. “அதற்காக கல்யாண் பகுதியில் இருந்த என்னுடைய சொத்துகளில் ஒன்றை விற்பனை செய்தேன். 2009-ம் ஆண்டு காமானி  டியூப்ஸ் நலிவடைந்த தொழிலக நிறுவன சட்டத்தில் இருந்து வெளியே வரமுடிந்தது.  2010-ம் ஆண்டு நிறுவனத்தை மறுபடியும் தொடங்கினோம். பின்னர் தொழிற்சாலையை வாடாவுக்கு மாற்றினோம். 5 கோடி ரூபாய் முதலீடு செய்தோம். ஒரு ஆண்டுக்குள்  அதாவது 2011-ம் ஆண்டு 3 கோடி ரூபாய் லாபம் கிடைத்தது.”

இதனிடையே, அடுத்தடுத்து ஒவ்வொன்றாக இதர தொழில்களிலும் கல்பனா ஈடுபட்டார். அவருடைய ஒட்டு மொத்த நிறுவனங்களின் இப்போதைய ஆண்டு வருவாய் 2000 கோடி ரூபாய். காமானி டியூப்ஸ் நிறுவனம் இப்போது ஆண்டு தோறும் 5 கோடி ரூபாய் லாபம் ஈட்டுவதாக இருக்கிறது.

https://www.theweekendleader.com/admin/upload/09-05-18-03ab5.jpg

கல்பனா இப்போது, மும்பையின் புகழ்பெற்றவர்கள், செல்வந்தர்களுடன், சமமாக சேர்ந்து நிற்கிறார். இந்த போட்டோவில், மறைந்த நடிகை  ஸ்ரீதேவியுடன் இருக்கிறார்


தலித் பெண்ணான கல்பனா சரோஜ், ஒரு ஆடைகள் தொழிற்சாலையில் ஹெல்பராகத் தொடங்கி, இப்போது கல்யாண் பகுதியில் 5000 ச.அடி பரப்புள்ள பங்களாவில் வசிக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளார். 70 வயதாகும் அவர், இப்போது அமைதியான முறையில் ஓய்வு எடுக்கிறார் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இல்லை. இப்போது அவர் ராஜஸ்தானில் ஹோட்டல் தொழிலில் முதலீடு செய்ய உள்ளார்.

கல்பனாவின் சொந்த வாழ்க்கையைப் பொறுத்தவரை, அவர் மறு திருமணம் செய்து கொண்டார். அவரது கணவர் இறந்து விட்டார். அவரது மகள் சீமா, ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்பு முடித்துள்ளார். மகன் அமர், கமர்ஷியல் பைலட் ஆக இருக்கிறார்.

கல்பனா, 2013-ம் ஆண்டு  வணிகம் மற்றும் தொழிற்துறையில் சிறப்பாகப் பணியாற்றியதற்கான பத்ம ஸ்ரீ விருதைப் பெற்றார். தவிர மத்திய அரசின் பாரதீய மகிளா வங்கியின் இயக்குனர்களில் ஒருவராகவும் நியமிக்கப்பட்டார்.

அவருடைய இரண்டாவது வாழ்க்கை, உண்மையிலேயே மதிக்கத்தக்கதாக அமைந்து விட்டது!


 
 
 
 
 

அதிகம் படித்தவை

  • Fresh Juice Makers

    சர்க்கரை இல்லாமல் இனிக்கிறதே!

    தள்ளுவண்டியில் ஜூஸ் கடை வைத்தால் வாழ்க்கையில் முன்னேற முடியுமா? முடியும் என்று நிரூபித்திருக்கின்றனர் கொல்கத்தாவின் இரண்டு இளைஞர்கள். சர்க்கரை சேர்க்காமல் அவர்கள் தயாரிக்கும் ஜூஸ் விற்பனையில் ஒரு கோடி ரூபாய் ஆண்டு வருவாய் இலக்குடன் அவர்கள் நடைபோடுகின்றனர். ஜி.சிங் எழுதும் கட்டுரை

  • success story of son of  a farmer

    ஒரு கனவின் வெற்றி!

    வெறும் கைகள், மனதில் நிறைய கனவுகள். இவைதான் சந்திரகாந்த் போடே, மும்பை வந்தபோது அவரிடம் இருந்தவை. அவரது பெற்றோர் கூலித்தொழிலாளிகள். இந்த பின்னணி உடைய அவர் இன்றைக்கு வெற்றிகரமான லாஜிஸ்டிக் நிறுவனத்தின் அதிபர். அவரது நிறுவனம் இப்போது ஆண்டுக்கு ஏழு கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறது. நிதி ராய் எழுதும் கட்டுரை.

  • How a school dropout went on to build a Rs 350 crore turnover global software business

    வைரஸ் எதிர்ப்பாளர்

    பத்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டவர், இன்று உலகளாவிய அளவில் மென்பொருள் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி ஆண்டுக்கு 350 கோடி வர்த்தகம் செய்கிறார். மாதம் ரூ400க்கு கால்குலேட்டர் பழுதுபார்க்கும் வேலையில் தொடங்கிய மனிதரின் வெற்றிக்கதை இது

  • Kamath started Rs 108 crore turnover icecream business with Rs 1 lakh

    ஐஸ்க்ரீம் மனிதர்

    கர்நாடகாவில் ஏழையாக பிறந்து, மும்பையில் இன்றைக்கு பிரபலமான ஐஸ்க்ரீம் நிறுவனத்தின் தலைவராக ஆகியிருக்கிறார் காமத். இது மண்குடிசையில் இருந்து மாளிகைக்கு உயர்ந்திருக்கும் அவரது வாழ்க்கைக் கதை. சோமா பானர்ஜி எழுதும் கட்டுரை

  • Man who was booking bus tickets is now owner of a bus company

    வெற்றிப்பயணம்

    ராஞ்சியில் பேருந்து நிலையத்தில் பயணச்சீட்டு பதிவு செய்துகொண்டிருந்தவர் கிருஷ்ணமோகன் சிங். இப்போது அவர் பல பேருந்துகளை சொந்தமாக வைத்திருக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார். அவரது வெற்றிக்கதையை விளக்குகிறார் ஜி சிங்

  • Tea maker

    தேநீர் காதலர்!

    தமிழ்நாட்டில் கரூர் மாவட்டத்தில் சின்னஞ்சிறிய கிராமத்தில் பிறந்த ஜோசப் ராஜேஷ் ஒரு தேநீர் காதலர். வங்கியில் வேலை பார்த்து பின்னர் அதை விட்டுவிட்டு தேநீர் கடையைத் தொடங்கினார். இப்போது சங்கிலித் தொடர் தேநீர்க் கடைகளைத் தொடங்கி ஆண்டுக்கு ரூ.7 கோடி வருவாய் ஈட்டுகிறார். பிலால் கான் எழுதும் கட்டுரை