50 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் தொடங்கி 324 கோடி ரூபாய் குவித்த இயற்கை ஆர்வலரின் வெற்றிப்பயணம்!
03-Apr-2025
By சோபியா டேனிஷ் கான்
புதுடெல்லி
ஹர்பிரீத் சிங் மல்ஹோத்ரா, இயற்கையை, வனவிலங்குகளை ரசிப்பதை வெறுமனே மனதுக்குள் மட்டும் மறைத்து வைத்துக்கொளவில்லை. தம்முடைய நிறுவனத்துக்கு டைகர் லாஜிஸ்டிக்ஸ் என்று பெயர் வைத்திருக்கிறார். அலுவலகத்தில், அவருடைய கேபினுக்கு அடுத்து, ஒரு சிறிய தோட்டத்தை உருவாக்கி உள்ளார். அங்கே பல சந்திப்புகளை அவர் நடத்தி இருக்கிறார்.
“புலி எனக்கு விருப்பமான விலங்கு,” என்று நம்மிடம் தெரிவிக்கும் ஹர்பிரீத், 50 ஆயிரம் ரூபாயில் தொடங்கிய, 324 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் ஈட்டும் தமது லாஜிஸ்டிக் நிறுவனத்தைக் கவனிப்பது, உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள மலர்களின் பள்ளத்தாக்குப் பகுதிக்கு சமீபத்தில் சென்று வந்தது போன்றவற்றில் ஈடுபடுதல் என தமது வேலைக்கும், பொழுதுபோக்குக்கும் இடையே நேரத்தைப் பகிர்ந்து கொள்கிறார். தவிர, உற்சாகமான புத்தக வாசிப்பாளராகவும் இருக்கிறார். அமிஷ் திரிபாதி எழுதிய Sita: Warrior of Mithila என்ற புத்தகத்தை இப்போது வாசித்து வருகிறார்.
|
ஹர்பிரீத் சிங் மல்ஹோத்ரா, கடந்த 2000ம் ஆண்டு டைகர் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினார். இதற்கு முன்பு ஒரு பங்குதாரர் நிறுவனத்தை நடத்தி வந்தார். ஆனால், அது எதிர்பார்த்தபடி செயல்படவில்லை என்பதால் அதனை மூடிவிட்டார்(புகைப்படங்கள்: நவ்நிதா)
|
டைகர் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம், சர்வதேச லாஜிஸ்டிக் வசதிகளைத் தருகிறது. ஏற்றுமதியாளர் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு போக்குவரத்து வசதிகளையும் செய்து தருகிறது. போக்குவரத்து, நூலாடை தொழில் நிறுவனங்கள்தான் அவரது நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக இருக்கின்றன. பிலோஸா இன்டஸ்ட்ரீஸ், சங்கம் டெக்ஸ்டைல், யமஹா, ஹோண்டா, பஜாஜ் ஆட்டோ, எல்.ஜி. எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் பாதுகாப்புத் துறையில் இருந்து டி.ஆர்.டி.ஓ., இந்திய விமானப்படை மற்றும் ராணுவம் உள்ளிட்ட முக்கிய வாடிக்கையாளர்கள் அவரது நிறுவனத்துக்கு உள்ளனர்.
ஹர்பிரீத் மேஜைக்குப் பின்னால், சுவரில் மாட்டப்பட்டிருக்கும் பழம்பொருளான துப்பாக்கி, அவரது கவுரவமிக்க சொத்தாகும். அவரது குடும்பத்துக்கும் ராணுவத்துக்கும் உள்ள தொடர்புக்கு அது சாட்சியாக இருக்கிறது.
“இந்த துப்பாக்கி என்னுடைய தாத்தாவினுடையது. அவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றினார். என்னுடைய தந்தை கடற்படையில் பணியாற்றினார். நான் கடற்படைக்குச் சொந்தமான பள்ளியில் படித்தேன்,” என்கிறார் 46 வயதாகும் ஹர்பிரீத். இந்த பின்னணியில் வளர்ந்ததால்தான் அவர் இப்படி நல் ஒழுக்கங்களுடன் இருக்கிறார். எனினும், அவர் ஒரு வித்தியாசமான வழியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.
டெல்லி பல்கலைக்கழகத்தில் பகத்சிங் கல்லூரியில் 1992-ம் ஆண்டு வணிகத்தில் ஹர்பிரீத் பட்டம் பெற்றார். பின்னர் 1993-ம் ஆண்டு இந்தியன் இன்ஸ்டியூட் ஆஃப் ஃபாரின் டிரேட் கல்வி நிறுவனத்தில் ஃபாரின் டிரேடில் டிப்ளமோ முடித்தார்.
படிப்பு முடித்த பின்னர், ஒரு சிறிய லாஜிஸ்டிக் நிறுவனத்தில் முதன்முதலாக ஹர்பிரீத் வேலைக்குச் சேர்ந்தார். 700 ரூபாய் சம்பளத்தில் அங்கே அவர் பணியாற்றினார். மூன்று ஆண்டுகள் கழித்து, ஹீரோ குழுமத்தில், அவர்களின் லாஜிஸ்டிக் பிரிவில் மூத்த நிர்வாகியாக அடுத்த சில ஆண்டுகள் பணியாற்றினார்.
பின்னர், ஒரு நண்பருடன் சேர்ந்து சொந்தமாக ஒரு லாஜிஸ்டிக் நிறுவனம் தொடங்கினார். ஆனால், அது சரியாகப் போகவில்லை. எனவே இரண்டு வருடத்தில் அதனை மூடி விட்டார். குறைந்தகாலமே நீடித்த பங்குதாரர் நிறுவனம் பற்றிக் குறிப்பிடும் போது, “உங்கள் பங்குதாரருக்கு இலக்குகள் பெரிதாக இல்லாதபோது, வளர்ச்சி என்பது குறுகியதாக இருக்கும். நான் தனியாக இருந்திருந்தால், நல்லதோ அல்லது கெட்டதோ எது நடந்தாலும், என்னுடைய முடிவின் படியே இருந்து இருக்கும் என்று உணர ஆரம்பித்தேன்.”
டைகர் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தை 50 ஆயிரம் ரூபாய் முதலீட்டில், 2000 ஆண்டில் தொடங்கினார். எட்டு பேர்களைக் கொண்ட சிறிய குழுவுடன் நிறுவனம் செயல்படத் தொடங்கியது. தொழில் நன்றாக நடைபெற ஹர்பரீத்தின் பழைய வாடிக்கையாளர்கள், அவருக்கு முன் பணம் கொடுத்து ஆதரவு அளித்தனர். முதல் ஆண்டில் மட்டும், அவரது நிறுவனம் 40 லட்சம் ரூபாய் ஆண்டு வருவாய் ஈட்டியது.
|
டைகர் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் பல்வேறு விருதுகளை வென்றுள்ளது. ஹர்பிரீத் கேபினுக்குப் பின்னால் உள்ள அலமாரியில் விருதுகள் வைக்கப்பட்டுள்ளன.
|
‘செலவை குறைப்பதற்கான சுய முயற்சி’ என்ற சாதனைக்காக ஜில்லெட் இந்தியாவிடம் இருந்து அடுத்த ஆண்டே அவரது நிறுவனம் விருது பெற்றது. இதுதான் அவரது நிறுவனம் பெற்ற முதல் விருது. அவரது இதயத்தில் இதற்குச் சிறப்பான இடம் இருக்கிறது. அதே போல, அது அவரது அலுவலகத்திலும் சிறப்பான இடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
கடின உழைப்பின் மூலம் நிறுவனத்தைக் கட்டமைத்தார். அவரது கடின உழைப்பு, தொடர்ந்து மூன்று ஆண்டுகளாகப் பல விருதுகளைப் பெற்றுக் கொடுத்தது. கண்டெய்னர் கார்ப்பரேஷன் இந்தியா நிறுவனத்தின் சார்பில், வட இந்தியாவில் நம்பர் ஒன் கஸ்டம் ஹவுஸ் ஏஜென்ட்(No 1 Custom House Agent) என்ற விருது 2003, 2004 மற்றும் 2005ம் ஆண்டுகளில் கிடைத்தது. 2018-ம் ஆண்டில் அசோசெம் (ASSOCHAM)அமைப்பால், சிறந்த லாஜிஸ்டிக் நிறுவனமாக டைகர் லாஜிஸ்டிக்ஸ் தேர்வு செய்யப்பட்டது.
இன்றைக்கு, டைகர் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் 259 வாகனங்களை இயக்கி வருகிறது. 375 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இந்தியாவில் 14 முக்கிய நகரங்களில் அவர்களின் அலுவலகங்கள் உள்ளன. தவிர சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்டிலும் அலுவலகங்கள் உள்ளன.
2013-ம் ஆண்டில் தமது நிறுவனத்துக்கு ஹர்பிரீத் பங்குகள் வெளியிட்டார். இதன் மூலம் அவரது நிறுவனம் பப்ளிக் லிமிடெட் நிறுவனம் ஆனது. அதே ஆண்டில் ஆண்டு வருவாய் 100 கோடி ரூபாயைத் தொட்டது. “சரியான தொழிலுக்கு, சரியான நேரம் என்று ஒன்று இருக்கும். டைகர் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்துக்கும் அது சரியான நேரமாக இருந்தது,” என்கிறார் ஹர்பிரீத். “இப்போதைய ஆண்டு வருவாய் 324 கோடி ரூபாயாக இருக்கிறது. ஆனால், இன்னும் நாங்கள் சாதிக்கவில்லை என்று உணர்கிறேன். இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டி இருக்கிறது. அடுத்த நிதி ஆண்டில் 400 கோடி ரூபாய் என்ற இலக்கை எட்ட வேண்டும் என்பதுதான் என் குறிக்கோள். 2023-ம் ஆண்டில் 1000 கோடி ரூபாய் இலக்கை எட்ட வேண்டும்.”
|
ஹர்பிரீத் தம் ஊழியர்களை பெரும் சொத்தாக கருதுகிறார். பதிலுக்கு தங்கள் நிறுவனத்தின் உரிமையாளரை ஊழியர்களும் நேசிக்கின்றனர் என்பதை அவர்களின் புன்னகை முகங்களே வெளிப்படுத்துகின்றன.
|
ஹர்பிரீத் தமது ஊழியர்களை புகழ்கிறார். அவர்கள் நம்பிக்கைக்கு உரியவர்கள் என்று சொல்கிறார். அந்த ஊழியர்களில் 70 சதவிகிதம் பேர், ஹர்பிரீத்தின் நிறுவனத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றுகின்றனர்.
“சிறந்த செயல் திறன் கொண்டவர்களுக்கு முறையாக சம்பள உயர்வு கொடுக்கிறேன். மாதம் தோறும் மீட்டிங் நடத்தி, நடப்பு நிலவரங்களைப் பெறுவேன். நிறுவனம் சந்திக்கும் எந்த ஒரு பிரச்னை பற்றியும் நேரடியாகக் கையாளுவேன்,” என்று பகிர்ந்து கொள்கிறார் ஹர்பிரீத். முக்கியமான வாடிக்கையாளர்களை, அவரே நேரில் சந்திக்கிறார். எதிர்காலத்துக்கான வாடிக்கையாளர்களையும் கண்டறிகிறார்.
அவரது தொழில்முறை, நேர்மை ஆகியவை பல வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளன. இதில் வியப்புக்குரிய விஷயம் என்னவெனில், ராணுவ சேவைகளையும் கையாண்டு வருகிறார். இந்த நிறுவனம், அண்மையில் இந்திய கடற்படைக்காக ரஷ்யாவில் இருந்து நீர்மூழ்கி கப்பல்களை இறக்குமதி செய்தது. 2009-ம் ஆண்டில் இஸ்ரேலில் இருந்து இந்திய விமானப்படைக்காக வான் எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு முறை விமானத்தை (Airborne Warning and Control System (AWACS))இறக்குமதி செய்தது.
இந்த தொழிலில் ஹர்பிரீத் முக்கியமான சவாலாக நினைப்பது பணப்புழக்க விவகாரம்தான். வேலை முழுவதுமாக முடிந்த உடன்தான் வாடிக்கையாளர்கள் பணம் தருகின்றனர். “பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது தொடர்ச்சியாக இதனால் நாங்கள் பாதிக்கப்பட்டோம்,” என்று வருத்தப்படுகிறார் ஹர்பிரீத்.
|
ஹர்பிரீத் கடின உழைப்பை நம்புகிறார். வாழ்க்கையில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டு்ம். பின்னணியில் தெரியும் பழமைவாய்ந்த துப்பாக்கி அவரது தாத்தாவுக்குச் சொந்தமானது.
|
தமது மனைவி பீனுவின் ஆதரவு குறித்து ஹர்பரீத் பெருமையுடன் கூறுகிறார். அவரது மகள் ஷிமர் மல்ஹோத்ரா கல்லூரியில் படிக்கிறார். அவரது மகன் இஷ்கான் மல்ஹோத்ரா 12-ம் வகுப்புப் படிக்கிறார். குழந்தைகள் தமது நிறுவனத்தில் சேர்ந்து, தமது கனவை நனவாக்கும் வகையில் டைகர் லாஜிஸ்டிக் நிறுவனத்தை 1000 கோடி ரூபாய் நிறுவனமாக மாற்ற உதவி செய்வார்கள் என்று நம்புகிறார்.
அதிகம் படித்தவை
-
பழையதில் பிறந்த புதிய ஐடியா!
டெல்லியில் பிறந்து வளர்ந்த சகோதரர்களான கவுரவ் கக்கர், அங்குர் கக்கர் இருவரும் பெருநிறுவனங்களில் அதிக சம்பளம் தரும் பணிகளில் இருந்தனர். வெளிநாட்டு தூதர்கள் நம் நாட்டில் இருந்து வெளியேறும் போது விற்பனை செய்யும் பழைய மரச்சாமான்களை வாங்கி விற்கும் தொழில் வாய்ப்பை பயன்படுத்தி இந்த சகோதரர்களும் முன்னேறினர். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை
-
மில்லியன் டாலர் கனவு
அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ் கார்ட்னர், சிறுவயதில் அனுபவிக்காத துன்பம் ஏதும் இல்லை. அவரது தாயின் இரண்டாவது கணவரால் பெரும் துன்பத்துக்கு உள்ளாக்கப்பட்டார். அவர் பின்னாளில் மில்லியன் டாலர்களை சம்பாதிக்க வேண்டும் என்ற தன் இலக்கை வெற்றிகரமாக அடைந்தார். பி.சி. வினோஜ் குமார் எழுதும் கட்டுரை
-
அவங்க ஏழு பேரு…
சிறுவயது நண்பர்கள், பள்ளி படிப்பு முடிந்த உடன், தனித்தனிப்பாதைகளில் பயணித்தவர்கள். வார இறுதி பயணங்களில் மீண்டும் கைகோத்து தொழிலதிபர்களாக உயர்ந்திருக்கின்றனர். 3 டி பிரிண்டர்களை பள்ளிகளுக்கு விற்பனை செய்கின்றனர். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை
-
பாலில் கொட்டும் பணம்!
மேற்குவங்க கிராமம் ஒன்றில் மிகச்சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் நாராயண் மஜும்தார். பால் தொழில்நுட்பத்தில் பி டெக் படித்த அவர் பல நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவத்துடன் தொழில் தொடங்கினார். இன்று அவரது ரெட் கவ் டெய்ரி மேற்குவங்கத்தின் மிகப்பெரிய பால் நிறுவனம். ஜி சிங் எழுதும் வெற்றிக்கதை.
-
கைவினைக்கலை அரசி
பீகாரின் கட்டுப்பாடுகள் மிக்க கிராமத்தில் வளர்ந்த பெண் அவர். திருமணத்துக்குப் பின் மும்பை வந்த அவர், கவின்கலைப்படிப்பை முடித்தார். இன்றைக்கு மும்பையில் ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் ஈட்டும், மறு சுழற்சி செய்யப்பட்ட அட்டைகளில் ஃபர்னிச்சர் செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். தேவன் லாட் எழுதும் கட்டுரை.
-
விரக்தியை வென்ற மனோசக்தி!
மருத்துவப் பட்டமேற்படிப்பு முடித்து விட்டு அரசு வேலைக்காக காத்திருந்தார் டாக்டர் தாபாலி. வேலை கிடைக்காத விரக்தி மனநிலையை வென்றெடுத்து மணிப்பூர் மாநிலத்தின் முதல் மருத்துவ ஆய்வகத்தைதொடங்கி வெற்றிபெற்றார். ரீனா நாங்க்மைத்தம் எழுதும் கட்டுரை.