ஐம்பதாயிரத்தில் ஆரம்பித்து 12 கோடி ரூபாய்! டிஜிட்டல் கனவில் கலக்கிய இளைஞர்கள்!
23-Nov-2024
By குருவிந்தர் சிங்
புனே
முப்பத்திநான்கு வயதான இளைஞர்களான ரோகித் பிரசாத், விக்ரம் குமார் இருவரும் நல்ல நண்பர்கள், தொழில் பங்குதாரர்கள். இதையும் தாண்டி அவர்கள் பல்வேறு விஷயங்களில் பொதுவான அம்சங்களைக் கொண்டு ஒருவருக்கு ஒருவர் பிரிக்கமுடியாத பந்தத்தில் இருக்கின்றனர்.
இருவருமே நடுத்தரக்குடும்பத்தை பின்னணியாகக் கொண்டவர்கள். தாங்களே ஏதாவது சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்பது கல்வி கற்கும் காலத்தில் இருந்தே இருவரது லட்சியமாக இருந்தது. புனேவில் உள்ள சிம்பயாசிஸ் சென்டர் ஃபார் இன்பர்மேஷன் டெக்னாலஜியில் (SCIT) எம்.பி.ஏ படிக்கும் போதுதான் இருவரும் சந்தித்துக் கொண்டனர்.
|
புனேவில் உள்ள எஸ்சிஐடி-யில் (SCIT) எம்.பி.ஏ முடித்த பின்னர் 2011-ம் ஆண்டில் எஸ்.ஆர்.வி மீடியா என்ற நிறுவனத்தை ரோகித் பிரசாத், விக்ரம் குமார் (இடது) இருவரும் தொடங்கினர்.
|
“பொதுவான லட்சியங்களைக் கொண்டிருந்ததால், உடனடியாக பரஸ்பர நம்பிக்கை மற்றும் புரிதல் எங்களுக்குள் ஏற்பட்டது,” என்று விவரிக்கிறார் ரோகித். இருவரும் இணைந்து புனேவில் 2011-ம் ஆண்டு எஸ்.ஆர்.வி மீடியா பிரைவேட் லிமிடெட் என்ற டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனத்தைத் தொடங்கினர். ஆளுக்கு 50 ஆயிரம் வீதம் ஒரு லட்சம் ரூபாய் முதலீட்டில் அந்த நிறுவனத்தைத் தொடங்கினர்.
எஸ்.இ.ஓ(Search Engine Optimisation), சோஷியல் மீடியா மார்க்கெட்டிங், டிசைன் & பிராண்ட்டிங், மொபைல் அப்ளிகேஷன், வெப்சைட் டெவலெப்மெண்ட் உள்ளிட்ட மேலும் பல முழுமையான டிஜிட்டல் சேவைகளை எஸ்.ஆர்.வி வழங்குகிறது.
“இந்த நகரில், வாடகைக்கு எடுத்த ஒரு சிறிய அறையில் எங்கள் நிறுவனத்தைத் தொடங்கினோம். இது எங்கள் தலைமை அலுவலகமாக செயல்பட்டது,” என்கிறார் பலத்த சிரிப்புடன் விக்ரம். அவர்களது நிறுவனம் சீரான வளர்ச்சியைப் பெற்றது. இப்போது அவர்களது நிறுவனத்தின் ஆண்டு வருவாய் 12 கோடி ரூபாய்.
தொடக்கத்தில் அவர்களின் முயற்சி கடினமான சூழல்களைக் கொண்டிருந்தது. “எங்களது நிறுவனம் சிறியது என்பதால், வேலைக்கு ஆட்கள் கிடைப்பது சிரமமாக இருந்தது. பணத்தட்டுப்பாடு காரணமாக பாதிக்கப்பட்டோம். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவது சிரமமாக இருந்தது,” என்கிறார் ரோகித்.
தங்களது முதல் வாடிக்கையாளர், தாங்கள் படித்த சிம்பயாசிஸ் நிறுவனம்தான் என்று விக்ரம் சொல்கிறார். அவர்களுக்காக இருவரும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் செய்தனர்.
|
ரோகித், விக்ரம் இருவரும் ஈஸ்பஸ் (Easebuzz), என்ற இணைய வழி வர்த்தகத்துக்கான பேமண்ட் கேட்வே-ஐ 2014-ம் ஆண்டு தொடங்கினர். இப்போது அவர்களுக்கு புனே தவிர சூரத், கூர்கானிலும் அலுவலகங்கள் உள்ளன.
|
“புதிய கம்பெனிக்கு பிரச்னைகள் வருவது இயல்புதான். ஆனால், நாங்கள் நேர்மையாகவும், ஒற்றுமையுடனும் பணியாற்றினோம். வாக்குறுதி கொடுத்தபடி செயலாற்றினோம். எனவே, மெதுவாக, எங்கள் நம்பிக்கையை நாங்கள் கட்டமைத்தோம். இதுதான் எங்களுக்கு மேலும் அதிக வாடிக்கையாளர்கள் கிடைக்க உதவியாக இருந்தது,” என்கிறார் விக்ரம்.
பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்தவர் ரோகித். அவரது தந்தை மத்திய அரசின் கீழ் செயல்படும் கிராமிய மின்மயமாக்கல் நிறுவனத்தின் ஊழியராக இருந்தார். அவருடைய தாய் வீட்டைக் கவனித்துக் கொண்டார்.
“குடும்பத்தை நடத்தும் அளவுக்கு என் தந்தையின் வருமானம் போதுமான அளவுக்கு இல்லாததால், எங்கள் குடும்பத்தின் பொருளாதாரச்சூழல் நன்றாக இல்லை. என் தாத்தா, முன் கூட்டியே இறந்து விட்டார். எனவே, என் தந்தையின் இளைய சகோதரரின் படிப்புக்கான செலவுகளை ஏற்பது அவரது கடமையாக இருந்தது,” என்கிறார் ரோகித்.
ரோகித்தின் தந்தை, வேலையின் காரணமாக பல பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். எனவே, ரோகித் பல நகரங்களில் வசிக்க நேர்ந்தது. கொல்கத்தாவில் உள்ள ஜி.எஸ்.எஸ் பள்ளியில் அவர் படிப்பைத் தொடங்கினார். ஆனால், 2004-ம் ஆண்டு டெல்லி பப்ளிக் பள்ளியில்தான் அவர் படிப்பை முடித்தார்.
“அதன்பின்னர் நான், கூர்கானில் உள்ள ஐ.டி.எம் பல்கலைக்கழகத்தில், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ரூமென்டேஷனில் இன்ஜினியரிங் படித்தேன். டி.சி.எஸ் நிறுவனத்தில் எனக்கு வேலை கிடைத்தது. அங்கு 2005ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை பணியாற்றினேன்,” என்கிறார் ரோகித். அதன் பின்னர் அவர் 2009-ம் ஆண்டு எஸ்.சி.ஐ.டி-யில் எம்.பி.ஏ படிப்பில் சேர்ந்தார்.
பீகார் மாநிலம் போக்கராவ் (இப்போது ஜார்கண்ட் மாநிலத்தில் இருக்கிறது)-வில் விக்ரம் பிறந்தார். ரோகித்தைப் போல, அவருக்கும் மூத்த சகோதரி ஒருவர் இருக்கிறார். “ எனது தந்தை ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவில் பணியாற்றினார். என் தாய் வீட்டைக் கவனித்துக் கொண்டார்,” என்று நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் விக்ரம்.
போக்கராவ் இஸ்பாட் செகண்டரி பள்ளியில் 2001-ம் ஆண்டு விக்ரம் பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர், மெஸ்ராவில் (ராஞ்சி) உள்ள பிர்லா இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி சென்ற அவர் அங்கு 2004- 2008-ம் ஆண்டு வரை படித்தார். “அதன் பின்னர், புனேவில் உள்ள எஸ்.சி.ஐ.டி-யில் 2009-ம் ஆண்டு சேர்ந்தேன்,” என்று பகிர்ந்து கொள்கிறார்.
எஸ்.சி.ஐ.டி-யில் தான் விக்ரம், ரோகித் இருவரும் ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆனார்கள். 2011-ம் ஆண்டில் அவர்கள் எம்.பி.ஏ முடித்தனர். ரோகித்துக்கு, ஆண்டுக்கு 11 லட்சம் ரூபாய் சம்பளத்தில் அசென்சூர் டெக்னாலஜிஸ் என்ற மும்பை நிறுவனத்தில் வேலை கிடைத்தது. ஆண்டுக்கு 5.5 லட்சம் ரூபாய் சம்பளத்தில் ஹெச்.டி.பி.எஃ.சி வங்கியில் விக்ரமுக்கு வேலை கிடைத்தது.
இருவருக்கும் வேலை கிடைத்த நிலையில், அவர்கள் இருவரும் சேர்ந்து, எஸ்.ஆர்.வி மீடியா நிறுவனத்தை 2011-ம் ஆண்டு தொடங்கினர். தொடக்கத்தில் இரண்டு ஊழியர்களை நியமித்து, அவர்கள் உதவியுடன் நிறுவனத்தை நடத்தி வந்தனர். எஸ்.ஆர்.வி நிறுவனத்தின் முதல் ஆண்டு ஆண்டு வருவாய் வெறும் ஒரு லட்சம் ரூபாயாக இருந்தது. எனவே, 2013-ம் ஆண்டு தமது வேலையில் இருந்து விலகுவது என்று விக்ரம் தீர்மானித்தார். எஸ்.ஆர்.வி நிறுவனத்தை நடத்துவதில் அவர் கவனம் செலுத்தினார்.
|
எஸ்.ஆர்.வி மீடியா மற்றும் ஈஸ்பஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான மூன்று அலுவலகங்களிலும் மொத்தம் 120 பேர் பணியாற்றுகின்றனர்.
|
2014-ம் ஆண்டு அவர்கள் ஈஸ்பஸ்(Easebuzz)என்ற பேமெண்ட் கேட்வே-வைத் தொடங்கினர். இருவரும் தங்கள் சேமிப்பில் இருந்து 15 லட்சம் ரூபாயை இதற்காக முதலீடு செய்தனர். “பேமெண்ட் கேட் வே உடன், மதிப்பு மிக்க சேவைகளையும் கூடுதலாக வழங்கும் வகையில் அதை உருவாக்க வேண்டும் என்று விரும்பினோம். அது சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் உயர்வுக்கு உதவுவதாக இருக்க வேண்டும் என்றும் நினைத்தோம்,” என்று விவரிக்கிறார் ரோகித். இவரும், தமது வேலையை விட்டு விலகி, 2015-ம் ஆண்டு முதல் தொழிலில் முழுக்கவனத்தையும் செலுத்த ஆரம்பித்தார்.
ஈஸ்பஸ்(Easebuzz)பேமெண்ட் கேட்வே வழியே இணையதள வங்கி, டெபிட்கார்டு, கிரெடிட் கார்டு ஆகியவற்றின் மூலம் பணம் செலுத்தும் போது, பணப்பரிமாற்றத்தில் 1.1 மற்றும் 2.5 சதவிகிதம் கமிஷனாகப் பெற்றுக் கொள்கின்றனர். இதன் மூலம் கடந்த 2017-18-ம் நிதி ஆண்டில் 2 கோடி ரூபாய் வருவாய் ஈட்டினர்.
எஸ்.ஆர்.வி நிறுவனத்திற்கு 55 வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஈஸ்பஸ்ஸில் பதிவு செய்திருக்கும் வணிகர்கள் எண்ணிக்கை 5000. இவ்விரண்டு நிறுவனங்களின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 120 ஆக இருக்கிறது.
புனேவைத் தவிர சூரத், கூர்கான் ஆகிய இடங்களிலும் அவர்களுக்கு அலுவலகங்கள் இருக்கின்றன. தொழில்நுட்பம் மற்றும் தீர்வுகளில் அதிக கவனம் செலுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் சர்வதேச நிறுவனமாக மாற முடியும் என்று அவர்கள் நம்புகின்றனர்.
ரோகித், ஸ்வர்ணிமா மாத்தூரை கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் செய்தார். அவர்களுக்கு அன்வி என்ற மகள் உள்ளார். விக்ரம், பிரியங்கா என்ற பெண்ணை கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் செய்தார். அவர்களுக்கு ஆதித்யா என்ற மகன் உள்ளார்.
இருவருக்கும் வெற்றிக்கான பொதுவான மந்திரம் இது: பொறுமை மற்றும் விடாமுயற்சி.
இதுதான் அவர்களுக்கு ரொம்பவே உதவி இருக்கிறது!
அதிகம் படித்தவை
-
சர்க்கரை இல்லாமல் இனிக்கிறதே!
தள்ளுவண்டியில் ஜூஸ் கடை வைத்தால் வாழ்க்கையில் முன்னேற முடியுமா? முடியும் என்று நிரூபித்திருக்கின்றனர் கொல்கத்தாவின் இரண்டு இளைஞர்கள். சர்க்கரை சேர்க்காமல் அவர்கள் தயாரிக்கும் ஜூஸ் விற்பனையில் ஒரு கோடி ரூபாய் ஆண்டு வருவாய் இலக்குடன் அவர்கள் நடைபோடுகின்றனர். ஜி.சிங் எழுதும் கட்டுரை
-
‘பன்னீர்’ செல்வம்!
இது மில்கி மிஸ்ட் நிறுவன நிர்வாக இயக்குநர் சதீஷ்குமாரின் வெற்றிக்கதை. எட்டாம் வகுப்பில் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தந்தையின் தடுமாறிய தொழிலை தூக்கி நிறுத்தி, அதற்குப் புது அடையாளம் கொடுத்த சதீஷ்குமாரின் வெற்றிக்கதையை விவரிக்கிறார் பிசி வினோஜ் குமார்
-
உழைப்பின் உயரம்
தளராத மன உறுதியும், உழைப்பும், போராட்ட குணமும் சுகுணா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பி.சௌந்தரராஜனை மாபெரும் உயரங்களை எட்டவைத்துள்ளன. கோழித்தொழிலில் சுமார் 5500 கோடி ரூபாய் ஆண்டு வர்த்தகம் செய்யும் அவரைச் சந்திக்கிறார் பி சி வினோஜ் குமார்
-
புதுமையின் காதலன்!
அபிஷேக் நாத்தை பல்மருத்துவப் படிப்பதற்காக குடும்பத்தினர் பெங்களூரு அனுப்பினர். அவரோ ஏழு மாதங்களுக்குள் படிப்பில் இருந்து விலகிவிட்டார். ஹோட்டல் மேனேஜ் மெண்ட் முடித்து கேட்டரிங் நடத்தி தோல்வியடைந்தார். இப்போது லூ கஃபே எனும் சங்கிலித்தொடர் கஃபேவை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். குருவிந்தர் சிங் எழுதும் கட்டுரை.
-
சமையல் ராணி
நித்தா மேத்தாவின் கணவர் மருந்துத் தொழிலில் ஈடுபட்டிருந்தார். ஒரு கட்டத்தில் அது பின்னடைவைச் சந்தித்தது. அந்த சமயத்தில், சமையல் கலையை மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்து வருமானம் ஈட்டிய நித்தா மேத்தா, இன்றைக்கு பல கோடிகள் குவிக்கும் தொழில் நிறுவனங்களுக்கு உரிமையாளர் ஆகியிருக்கிறார். சோபியா டேனிஸ்கான் எழுதும் கட்டுரை
-
பழசு வாங்கலையோ! பழசு!
பழைய பொருட்களை வாங்கும் பழக்கம் இந்தியர்களுக்கு உண்டு. இதுதான் கொல்கத்தாவை சேர்ந்த சதனிக் ராயின் மூலதனமாக உருவானது. ஆம், அவர் பழைய மொபைல்களை புதுப்பித்து ஆன்லைனில், உத்தரவாதத்துடன் விற்பனை செய்து அசத்துகிறார். குர்விந்தர் சிங் எழுதும் கட்டுரை