Milky Mist

Sunday, 23 November 2025

பேருந்துக்கு 40 ரூபாய் செலவழிக்க முடியாத ரேவதி, ஒலிம்பிக் போட்டிக்கு டோக்கியோ பறக்கும் அளவுக்கு உயர்ந்தார்!

23-Nov-2025 By நமது செய்தியாளர்
மதுரை

Posted 14 Jul 2021

மதுரை மாவட்டத்தின் சிறிய கிராமங்களில் வளரும் பெண் குழந்தைகளின் அதிகபட்ச ஆசை 12ஆம் வகுப்பு படிப்பது, அதன் பின்னர் ஒரு மில்லில் கூலியாக வேலைக்கு சேருவது, பின்னர் சில ஆண்டுகள் கழித்து திருமணம், குடும்பம் என்று செட்டில் ஆவதாகத்தான் இருக்கும்.  

மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் கிராமத்தை சேர்ந்த ரேவதி என்ற சிறுமிக்கும் இத்தகைய லட்சியமே இருந்தது. ஆனால் அதையும் மீறித்தான் டோக்கியோ ஒலிம்பிக் தடகளப் போட்டிகளுக்கு தகுதி பெறும் அளவுக்கு உயர்ந்துள்ளார்.

இந்தியாவின் சார்பில் ஒலிம்பிக்கில் 4X 400 மீ கலப்பு தொடர் ஓட்டத்தில் ரேவதி பங்கேற்க தேர்வாகி உள்ளார் (படங்கள்: சிறப்பு ஏற்பாடு)


இன்றைக்கு இந்தியாவே கொண்டாடும் ரேவதி ஒலிம்பிக் தகுதி போட்டியில் 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் மூன்றிலும் முதலிடம் பிடித்து சாதனை படைத்திருக்கிறார். இந்தியாவின் சார்பில் ஒலிம்பிக்கில் 4X 400 மீ கலப்பு தொடர் ஓட்டத்தில் பங்கேற்க தேர்வாகி உள்ளார்.  

சாதாரண மில் தொழிலாளியாக வாழ்க்கையை முன்னெடுக்க ஆசைப்பட்ட அவருக்குள் மறைந்திருந்த தடகள வீராங்கனையை எப்போது அடையாளம் கண்டு கொண்டார் ரேவதி?  

“மதுரை புதூர் எல்சிஎம் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும்போது ஒரு நாள் பள்ளியில் விளையாட்டு வகுப்பின்போது மைதானத்தில் ஓடிப்பிடித்து விளையாடிக்கொண்டிருந்தேன். என்னை பிடிக்க முடியாமல் தோழிகள் களைத்துப் போயினர். இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த விளையாட்டு ஆசிரியை ரெஜினா மேடம் நீ நல்லா ஓட்ற, மாவட்ட அளவிலான போட்டிகள்ல நீ பங்கேற்றால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்னு சொன்னாங்க. அப்புறம் அவங்க சொல்லித்தான் பள்ளி சார்பில் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்துக்க ஆரம்பிச்சேன்,” என்றார் ரேவதி மின்னும் கண்களுடன்.  

மாவட்ட அளவில், மண்டல அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்று பெரும்பாலும் முதலிடத்தை பிடித்து பள்ளியில் பாராட்டை பெற்றிருக்கிறார் ரேவதி. ஆனால் ஒரு தடகள வீராங்கனைக்கு உரிய பயிற்சியோ அல்லது அதற்கான வரைமுறைகள், விதிமுறைகள் எதையுமே ரேவதி அறிந்திருக்கவில்லை.

ரேவதி 12ஆம் வகுப்பு படிக்கும்போது முதன்முதலாக மதுரை ரேஸ்கோர்ஸில் நடந்த மாநில அளவிலான தடகளப் போட்டி ஒன்றுக்கு  அவரது விளையாட்டு ஆசிரியை ரெஜினா அழைத்துச் சென்றார். மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் விளையாட்டு பயிற்சியாளராக இருந்த கண்ணன்தான் ரேவதியை அடையாளம் கண்டார்.

“அன்றைக்கு நடந்த போட்டியில்  என்னால் முதல் மூன்று இடத்துக்குள் வரமுடியவில்லை. அடுத்த போட்டியில் பார்த்துக்குவோம்னு இருந்துட்டேன்.அப்ப அங்க இருந்த கண்ணன் சார், எங்க ரெஜினா மேடத்துக்கிட்ட பேசினார். ரேவதி நல்லா ஓட்றாங்க. அவங்களுக்கு நல்லா பயிற்சி கொடுத்தால் எதிர்காலத்துல தேசிய அளவுல நல்ல திறமையோட வருவாங்கன்னு சார் சொன்னார்,” என்றார் ரேவதி.

“ரேவதியை முதன் முதல்ல மதுரையில பார்த்தப்போ, அப்போது நடந்த போட்டியில் அவங்க வெறும் கால்ல ஓடுனாங்க. நான் அவங்களை கவனிச்சேன். அவங்க முதல் மூன்று இடம் பிடித்தவர்களுக்கு இணையாக ஓடினாங்க. ஆனாலும் அவங்க வெற்றி பெற முடியல, மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கும்போது தடகள விதிமுறைகளை கடைபிடிக்கணும். கோட்டுக்குள்தான் ஓட வேண்டும். முக்கியமாக ஷூ அணிந்து ஓட வேண்டும். ஆனால், அப்போது இது எதுவுமே ரேதிக்கு தெரியவில்லை. அதனால்தான் அவர் தோல்வியுற்றார் என தெரிந்து கொண்டேன்,” என்றார் ரேவதியின் பயிற்சியாளர் கண்ணன்.  

“ரெஜினா மேடம் சார்கிட்ட, என் பாட்டி ஆரம்மாக்கிட்ட வந்து பேசி எனக்கு பயிற்சி கொடுக்க சொன்னாங்க. அப்புறம் கண்ணன் சார் எங்க  கிராமத்துக்கு வந்தாங்க. எங்க பாட்டியை பார்த்து பேசுனாங்க. நாங்க எல்லாத்தையும் பாரத்துகிறோம். பயிற்சி கொடுக்கிறோம். உங்க பேத்தி நல்லா விளையாடுவா. இந்தியா அளவுல பேசப்படுவா. உங்களுக்குத்தான் பெருமை என்று கண்ணன் சார் என் பாட்டியிடம் சொன்னார்,” என்றார் ரேவதி.

2016ஆம் ஆண்டு ஜூனியர் நேஷனல் தடகளப்போட்டியில் 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் மூன்று பிரிவிலும் ரேவதி தங்க பதக்கத்தை வென்றார்


“நான் அலங்காநல்லூர்லதான் பிறந்தேன். எனக்கு ஏழு வயசு இருக்கும்போது உடம்பு சரியில்லாம என் அப்பா வீரமணி, அம்மா ராணி ரெண்டு பேருமே அடுத்தடுத்து இறந்து போய்ட்டாங்க. எங்க அம்மாவோட அம்மாதான் என்னையும், என் தங்கையையும் சக்கிமங்கலம் அழைச்சிக்கிட்டு வந்து படிக்க வச்சாங்க. என் பாட்டி 100 நாள் வேலை உறுதி அளிப்புத் திட்டத்துல வேலை பார்த்து கூலி வாங்கித்தான் குடும்பத்தை நடத்துனாங்க. நான் 12ஆம் வகுப்பு முடிச்ச உடனே மில் வேலைக்கு போகலாம்னு பாட்டி சொன்னாங்க. அதனால நானும் சரின்னு சொல்லிட்டேன்,” என்றார் ரேவதி தன்னுடைய கடந்த காலம் பற்றி.  

விளையாட்டு பயிற்சியாளர் கண்ணனிடம் வாக்குறுதி அளித்தபடி அவரது பாட்டியால் பேத்தியை பயிற்சிக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை. சக்கிமங்கலத்தில் இருந்து மதுரை செல்வதற்கு 40 ரூபாய் வேண்டும். அன்றைக்கு அந்த பணம் அவரிடம் இல்லை. பயிற்சியாளர் கண்ணன் திரும்ப வந்து கேட்டால், எங்களால் முடியாது என்று சொல்லி விடலாம் என்றுதான் ஆரம்மா பாட்டி நினைத்திருந்தார். ரேவதியும் அதற்கு மறுப்பேதும் சொல்லவில்லை.  

பயிற்சியாளர் கண்ணன் மீண்டும் சக்கிமங்கலம் வந்து ரேவதியின் பாட்டியையும் சந்தித்தார். அவர்களிடம் செலவுக்குப் பணம் இல்லாததைப் புரிந்து கொண்டார்.   “ரேவதியோட திறமை ஒரு கிராமத்துக்குள்ளேயே முடிந்து போய்விடக்கூடாது என்ற உறுதியோடு இருந்தேன். அதனால திரும்பவும் ரேவதியோட பாட்டி ஆரம்மாகிட்ட பேசினேன். பணம் இல்லாததால்தான் வரமுடியவில்லை என்று புரிந்தது. பணத்துக்கு நான் ஏற்பாடு செய்வதாகச் சொன்னேன். மதுரையில் லேடி டோக் கல்லூரியில் விளையாட்டு வீராங்கனைகளை சேர்த்துக் கொள்வார்கள் என்று சொன்னேன். அதன் பிறகு ரேவதி பயிற்சிக்கு வர சம்மதித்தார். கல்லூரியின் முதல்வரை சந்தித்து ரேவதியைப் பற்றி எடுத்துச் சொல்லி பிஏ தமிழ் படிப்பில் சேர்த்து விட்டேன். ரேவதி, அவருடைய தங்கை, பாட்டி எல்லோரையும் மதுரையில் ஒரு வாடகை வீட்டில் பயிற்சி நடைபெறும் மைதானத்துக்கு அருகிலேயே தங்க வைத்தேன்,” என்று கண்ணன் தொடர்ந்து நம்மிடம் கூறினார்.  

“நான் வழக்கமாக போட்டி நடக்கிற இரண்டு நாளைக்கு முன்புதான்  பயிற்சி எடுப்பேன். வெறும் கால்ல மைதானத்துல குறிப்பிட்ட ரவுண்ட் ஓடுவேன்.  கண்ணன் சார் சொன்னது எல்லாமே புதுசா இருந்தது. தினமும் காலையில் பயிற்சி எடுக்கனும் என்று சார் சொன்னார். இதுவரைக்கும் நான் ஷூ போட்டு ஓடியதே இல்லை. சார்தான் ஷூ வாங்கிக் கொடுத்தார். அதே மாதிரி போட்டிகள்ல கலந்துக்கும்போது முன்னாடி எல்லாம் சுடிதார்தான் போட்டுக்குவேன். சார்தான் ஸ்போர்ட்ஸ் டிரெஸ்தான் போடணும்னு சொல்லி அதை வாங்கிக் கொடுத்தாங்க,”  என்கிறார் தன்னுடைய பயிற்சி அனுபவம் குறித்து ரேவதி.  

“ரேவதியின் விளையாட்டு திறனை மேம்படுத்த தமிழ்நாடு அரசு எல்லா உதவிகளையும் செய்கிறது. அதலெடிக் அசோஷியேசன் செயலாளர் லதா, தலைவர் தேவாரம் ஆகியோர் என்னவேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கின்றனர். அது தவிர மதுரை மாவட்டத்தை சேர்ந்த நல்லுள்ளங்கள் பலரும் ரேவதிக்கு உதவிகள் செய்து வருகின்றனர்,”  என்றார் பயிற்சியாளர் கண்ணன்.

2018 ஆம் ஆண்டு தோகாவில் நடைபெற்ற ஏசியன் விளையாட்டு போட்டியில் இந்தியா சார்பில் ரேவதி பங்கேற்றார்


2016ஆம் ஆண்டு கோவையில் நடந்த ஜூனியர் நேஷனல் தடகளப்போட்டியில் 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் மூன்று பிரிவிலும் ரேவதி முதலிடம் பிடித்து தங்க பதக்கத்தை வென்றார். அப்போதுதான் ரேவதிக்கு தடகளத்தில் விதிமுறைகளும், பயிற்சிகளும் முக்கியம் என்பது தெரியவந்தது.

ஒரு தடகள வீராங்கனையாக முழு அளவில் தயார் படுத்திக் கொள்ள ஆரம்பித்தார்.   “கோவையில் தேசிய அளவிலான தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் சார் என்கிட்ட, ஒலிம்பிக் போட்டியில தகுதி பெறும் அளவுக்கு உயரணும்னு சொன்னாங்க. அப்ப வரைக்கும் எனக்கு ஒலிம்பிக் போகணும் என்ற எண்ணம் இல்லை. நிச்சயமாக ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவேன்னு சார்கிட்ட சொன்னேன்.”  

“மதுரையில் ஒருமுறை மாநில அளவிலான போட்டியில் பங்கேற்றேன். அப்போ அந்த போட்டிக்கு என்னோடு வேறு மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருத்தரும் கலந்துக்கிட்டாங்க. அவங்க வெற்றி பெறல. அவங்க அம்மா, என்னை கூப்பிட்டு, புத்தம் புதிய 10 ரூபாய் நோட்டு ஒண்ணை என்கிட்ட கொடுத்தாங்க. எதுக்கும்மா கொடுக்குறீங்கன்னு கேட்டேன். இந்த பத்துரூபாயை நீ செலவழிக்கக் கூடாது. நீ ஒலிம்பிக் போட்டில கலந்துகிட்டு வெற்றி பெறணும்; இந்த நோட்டை பார்க்கும்போதெல்லாம் நான் சொன்ன வார்த்தைகள் உனக்கு நினைவுக்கு வரணும்னு சொன்னாங்க. அவங்க கொடுத்த ரூபாய் நோட்டை இன்னும் நான் வைத்திருக்கின்றேன். அந்த அம்மா சொன்ன வார்த்தைகளும் இன்னும் என் காதுல ஒலித்துக் கொண்டே இருக்கு.  கஷ்டம் வந்தபோது அந்த பத்துரூபாயை செலவழிக்கலாம்னு நெனச்சிருக்கேன். ஆனால், அந்த அம்மாவிடம் கொடுத்த வாக்குறுதியால அதை நான் செலவழிக்கவில்லை,”  என்றார் ரேவதி உணர்வுப்பூர்வமாக  

“தொடர் பயிற்சிகள் காரணமாக தேசிய அளவிலான தடகளப்போட்டிகளில் ரேவதி பதக்கங்கள் குவிக்க ஆரம்பித்தார்.  2018 ஆம் ஆண்டு தோகாவில் நடைபெற்ற ஏசியன் விளையாட்டு போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்றார். அந்த போட்டியில்தான் தடகள வீராங்கனை கோமதி வெற்றி பெற்றார். ஆனால், இன்னும் கொஞ்சம் முயன்றிருந்தால் ரேவதி மூன்றாவது இடத்தை பெற்றிருக்க முடியும். நூலிழையில் மூன்றாவது இடத்தை பிடிக்க தவறி விட்டார்,” என்றார் பயிற்சியாளர் கண்ணன்.

 தேசிய அளவிலான தடகள வீரர்கள், வீராங்கனைகள் பட்டியலில் ரேவதி இருந்ததால், ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் நபர்களில் ஒருவராகவும் ரேவதி அடையாளம் காணப்பட்டார். பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் இந்திய விளையாட்டு ஆணைய மையத்தில் ஜூலை 4ஆம் தேதி தகுதி சுற்றுப் போட்டிகள் நடைபெற்றன.   முதல் சுற்றில் ரேவதியுடன் 16 பேர் பங்கேற்றனர். அதிலிருந்து 6 பேர் தேர்வானார்கள். இரண்டாவது சுற்றில் ஆறு பேரில் ரேவதி முதலிடம் பிடித்தார். ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கு முன்னேறினார். ஒட்டு மொத்த இந்தியாவும் தமிழகத்தையும், மதுரையையும் திரும்பி பார்த்தது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திரமோடி ஆகியோரின் வாழ்த்துகளுடன் டோகியோவுக்கு ரேவதி பயணம் ஆகிறார். 

ரேவதியை ஒலிம்பிக் தகுதி வரை கொண்டு வந்து காட்டியவர் பயிற்சியாளர் கண்ணன், தேவகோட்டை அருகில் உள்ள நடுவிகோட்டை என்ற மிகச் சிறிய கிராமம்தான் அவரது சொந்த ஊர். இன்று வரை அவரது கிராமத்துக்கு பேருந்து போக்குவரத்து இல்லை. 

ரேவதியின் ஒலிம்பிக் கனவு பலிக்குமா


“தேவகோட்டையில் ராமநாதன் என்ற தடகளப் பயிற்சியாளர் இருந்தார். பல தடகள வீரர்களை உருவாக்கியவர். ஞானசேகரன், ஏ.ராஜன் போன்ற ஆசியப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற வீரர்களை உருவாக்கினார். நான்  5வது படிக்கும்போது நிறையப்பேர் ஆசியப் போட்டிகளில் வெற்றி பெற்றனர்.  என் பெற்றோர் விவசாயம் செய்கின்றனர். அப்பா இல்லை. அம்மா கிராமத்தில் இருக்கிறார். தேவகோட்டை அரசு பள்ளியில்தான் படித்தேன். ராமநாதன் சாரின் பயிற்சியால் மாவட்ட அளவிலான, மாநில அளவிலான தடகளப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றேன். திருச்சி செயின்ட்ஜோசப் கல்லூரியில் படித்தேன். காலப்போக்கில் ராமநாதன் போல ஒரு நல்ல பயிற்சியாளர் ஆக வேண்டும் என்று மாறி விட்டேன்,” என்கிறார் தன்னடக்கத்துடன்.  

ஆம். கண்ணன் இல்லாவிட்டால் இன்றைக்கு ரேவதியை கண்டறிந்திருக்க முடியாது. பல ரேவதிகள் தமிழ்நாட்டில் உருவாகட்டும்.                               


 
 
 
 
 

அதிகம் படித்தவை

  • Friends from corporate background start meat business and make crores of rupees

    கறி விற்கும் கார்ப்பரேட்!

    பெரு நிறுவனங்களில் நல்ல பணியில் இருந்த இரு நண்பர்கள் அதைவிட்டுவிட்டு தரமான இறைச்சியை ஆன்லைனில் விற்பனை செய்ய இறங்கினார்கள். லிசியஸ் என்ற அந்த பிராண்ட் இரண்டே ஆண்டுகளில் 15 கோடிக்கும் மேல் வர்த்தகம் செய்கிறது. இந்த வெற்றிக்கதையை விவரிக்கிறார் உஷா பிரசாத்

  • overseas educator

    ஆந்திர சிவாஜி!

    தொழில் தொடங்கும் ஆசையில் அதிக சம்பளம் தரும் அமெரிக்க வேலையை விட்டுவிட்டு ஆந்திராவில் தொழில் தொடங்கினார் அரவிந்த் அரசவில்லி என்னும் இளைஞர். ஒன்பது ஆண்டுகள் ஆனநிலையில் 30 கோடி ரூபாய் வர்த்தகம் செய்யும் நிறுவனங்களின் உரிமையாளராக உள்ளார்.  சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை

  • How two college friends started a successful business

    மீண்டும் மீண்டும் வெற்றி!

    பிரஸூன், அங்குஷ் என்ற இளைஞர்கள் ஏற்கெனவே இரண்டு நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்தி, பிறரிடம் விற்று விட்டனர். இப்போது இந்திய பாரம்பர்யமிக்க நொறுக்குத் தீனி வகைகளை வெற்றிகரமாக விற்பனை செய்கின்றனர். சோஃபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை

  • Successful Parotta Master who became owner of a chain of restaurents

    பெரிதினும் பெரிது கேள்!

    சென்னை கடற்கரையில் சிறுவயதில் தந்தையின் தள்ளுவண்டி உணவுக் கடையில் உதவி செய்தார் சுரேஷ் சின்னசாமி. இன்றைக்கு சென்னையில் உள்ள தோசக்கல் சங்கிலித் தொடர் உணவகங்களின் உரிமையாளர். ஆண்டுக்கு 18 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறார். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை

  • The Success Story of Narayan

    கனவின் வெற்றி

    மும்பை என்ற கனவு நகரத்தின் மீதான ஈர்ப்பால், 30 ரூபாயுடன் வந்த நாராயண் முதலில் கேன்டீன் வெயிட்டராக வாழ்க்கைத் தொடங்கினார். இன்று மும்பையில் 16 கிளைகளைக் கொண்ட ஷிவ் சாகர் எனும் ரெஸ்டாரெண்ட் உரிமையாளராக 20 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறார். தேவன் லாட் எழுதும் கட்டுரை

  • Journey of Wellness

    உயர வைத்த உழைப்பு!

    பத்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி விட்டு மாதம் ரூ.1500 வேலைக்கு சென்றவர் சந்தோஷ் மஞ்சளா. சுயமாக மேற்படிப்பு முடித்து அமெரிக்கா வரை சென்று ரூ.1 கோடி ஆண்டு சம்பளம் பெற்றவர், இப்போது இந்தியா திரும்பி எடைகுறைப்புக்கு டயட் உணவு அளித்து வருவாய் ஈட்டுகிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை