Milky Mist

Sunday, 20 June 2021

மூன்று லட்சம் முதலீடு! ஐந்து கோடி ஆண்டு வருவாய்! கண்ணாடித் தொழிலில் முன்னாடி செல்பவர்!

20-Jun-2021 By குருவிந்தர் சிங்
கொல்கத்தா

Posted 13 May 2021

வாழ்வாதாரத்துக்காகப் போராடும் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த முகமது ஷாதன் சித்திக்(33), கண்ணாடி விற்பனை தொழில்மூலமாக  ஒரு வாய்ப்பைக் கண்டறிந்து, இன்றைக்கு ரூ.5 கோடி ஆண்டு வருவாய் தரும் சொந்த நிறுவனமாக அதனை உருவாக்கி இருக்கிறார்.

கொல்கத்தாவில் செயல்படும் கிளாஸ்டோ இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற அவரது நிறுவனம் அலங்கார கண்ணாடிகள், பாதுகாப்பு கண்ணாடிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான கண்ணாடிகளை தயாரிக்கிறது. தங்கள் பொருட்களை விற்பனை செய்வதற்காக கொல்கத்தாவில் மூன்று கடைகளை அவர்கள் திறந்திருக்கின்றனர்.  

ஷாதன் சித்திக் தனது அலங்கார மற்றும் பாதுகாப்பு கண்ணாடிகள் கடையை 2016ஆம் ஆண்டு கொல்கத்தாவில் தொடங்கினார். இதனை ரூ.5 கோடி ஆண்டு வருவாய் தரும் நிறுவனமாக கட்டமைத்திருக்கிறார்.(புகைப்படங்கள்: சிறப்பு ஏற்பாடு)

“நாங்கள் 300 வகைகளுக்கும் அதிகமான கண்ணாடிகள் மற்றும் பிரதிபலிக்கும் கண்ணாடிகளை விற்கின்றோம். அதேபோல எல்இடி கண்ணாடிகள்,  வெனிஸ், அரக்கு, பழங்கால மற்றும் குழிவான கண்ணாடிகள் ஆகியவற்றையும் விற்கின்றோம். எங்களுடைய தயாரிப்புகள் ரூ.3000 முதல் ரூ.2 லட்சம் வரை உள்ளன,” எனும் ஷாதன், ஏழு குழந்தைகளில் ஒருவராக கொல்கத்தாவில் உள்ள ரிப்பன் தெருவில் 200 ச.அடி வீட்டில் பிறந்து வளர்ந்தவராவார்.

இவர் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது அவரது தந்தை இறந்து விட்டார். அதற்கு நான்கு ஆண்டுகள் கழித்து அவரது மூத்த சகோதரர் ஒருவரும் இறந்து விட்டார். அந்த மூத்த சகோதரர் ஜப்பானில் பணியாற்றியதுடன், குடும்பத்துக்கு எல்லா வகையிலும் ஆதரவாக இருந்தவர்.  

ஷாதன் எப்படி தம் வாழ்க்கையின் சோதனையான காலகட்டங்களை கடந்தார் என்பதும், அந்த சூழல்களில் இருந்து வெளியே வந்து மீண்டும் தமது வாழ்க்கையை மீட்டெடுத்து வளர்ந்து வரும் ஒரு இளம் தொழில் முனைவோராக ஆனார் என்பதும், வாழ்க்கையில் சிக்கலான சூழல்களை சந்திக்கும் அனைவருக்கு உந்துசக்தியாக  இருக்கும். அவருடைய தந்தை  சிறிய மளிகை கடையை கொல்கத்தா நகரில் நடத்தி வந்தார். ஆனால், குடும்பத்தில் உள்ள ஷாதனின் நான்கு சகோதரர்கள் மற்றும் மூன்று சகோதரிகள் அடங்கிய குடும்பத்தின் வாழ்வாதாரத்துக்கு மட்டுமே அந்த வருவாய் போதுமானதாக இருந்தது. ஷாதன் அந்த குடும்பத்தில் ஆறாவது குழந்தையாக பிறந்தவர்.

   “200 ச.அடி அளவிலான வீட்டில் வாழ்ந்தோம். அருகில்தான் என் தந்தையின் மளிகைக் கடை இருந்தது. அவர் அதிகமாக ஏதும் சம்பாதிக்கவில்லை. ஆனால், தமது குழந்தைகளுக்கு நல்ல கல்வியை கொடுக்க விரும்பினார். எங்களை அவர் ஆங்கில பாடத்திட்டத்துடன் கூடிய கான்வென்ட் பள்ளிக்கு அனுப்பினார். எங்களுக்கு கல்வி அளிக்க பல மணி நேரம் உழைத்தார்,” என்றார் ஷாதன் ஷாதன் புத்திக்கூர்மையுள்ள மாணவராக திகழ்ந்தார்.

அவரது தந்தை ஷாதன் மீது கூடுதல் நம்பிக்கை வைத்திருந்தார். ஷாதன் ஒரு மருத்துவராக  வேண்டும் என்றும் அவர் விரும்பினார். 
 ஆடி சூழ் உலகு

 “நானும் கூட மருத்துவப் படிப்பை விரும்பினேன். கொல்கத்தாவில் உள்ள புனித பவுல் கல்லூரியில் 2004ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பு முடித்த உடன் மருத்துவம் மற்றும் பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு தயாராவது என தீர்மானித்தேன்,” என ஷாதன் நினைவு கூர்கிறார்.

ஆனால், குடும்பத்தில் திடீர் துயர நிகழ்வாக 2004ஆம் ஆண்டு மே மாதம் அவரது  தந்தை மாரடைப்பால் காலமானார்.  “அது என்னுடைய வாழ்க்கையில் மிகவும் வலிதரக்கூடிய சம்பவமாக இருந்தது. என்னுடைய தந்தைக்காக ஏதேனும் செய்ய விரும்பினேன். என்னுடைய வெற்றியை அவருக்கு சமர்ப்பிக்க விரும்பினேன். ஆனால், அதனை சாட்சியாக இருந்து பார்ப்பதற்கு அவர் இல்லை. நான் மிகவும் நொறுங்கிப்போனேன்,” என்ற ஷாதன், “ஆனால், அதற்காக நான் சோர்ந்து விடவில்லை. அடுத்த இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து நுழைவு தேர்வு எழுதினேன்.”  

இறுதியில் 2006ஆம் ஆண்டு கொல்கத்தாவின் பிரசித்தி பெற்ற டெக்னோ இந்தியா பல்கலைக்கழகத்தில் உற்பத்தி பொறியியல் படிப்பதற்காக சேர்ந்தார்.   அவருடைய மூன்றாவது சகோதரர்  ஷாஹாபுதீன் , ஒரு மூத்த சகோதரி இருவரும் மளிகைக் கடையைக் கவனித்துக் கொண்டனர். அவருடைய சகோதரர்களில் ஒருவரான ஆசாத்துக்கு ஜப்பானில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. இதையடுத்து குடும்பத்துக்கு ஆசாத் உதவத் தொடங்கினார்.     “குடும்ப செலவுகளுக்காக மாதம் தோறும் ரூ.50,000  அவர் அனுப்பினார். அப்போதுதான் என்னுடைய கல்லூரி கட்டணமும் செலுத்தப்பட்டது,” என்கிறார் ஷாதன். ஆனால், 2008ஆம் ஆண்டு வெறும் 28 வயதில் மாரடைப்பால் அண்ணனும் உயிரிழந்ததை அடுத்து மீண்டும் துயரம் சூழ்ந்தது.  

 “அப்பாவின் மரணத்தில் இருந்து நாங்கள் அப்போது மீண்டிருக்கவில்லை. அதற்குள் அண்ணாவின் மரணம், குடும்பத்தில் உணர்ச்சிப் பூர்வமான பின்னடைவை ஏற்படுத்தியது,” என்கிறார் ஷாதன். உயிரிழந்த சகோதரரின் சேமிப்பில் இருந்து கல்வி கட்டணம் செலுத்தியதால், ஷாதன் தம்முடைய கல்வியை முடிக்க முடிந்தது. கல்லூரி வளாகத்தில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் 2010ஆம் ஆண்டு பன்னாட்டு எண்ணெய் உற்பத்தி நிறுவனத்தில் ஷாதனுக்கு வேலைகிடைத்தது. இதையடுத்து அவர் அசாமில் உள்ள கவுகாத்திக்கு சென்றார்.

 “ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் உற்பத்தி பிரிவு மேலாளராக நான் நியமிக்கப்பட்டேன். மூன்று ஆண்டுகள் கழித்து ரூ.40 சம்பளம் வாங்கும் அளவுக்கு உயர்ந்தபோது,  வேலையில் இருந்து விலகுவது என்று தீர்மானித்தேன். நானே சொந்தமாக ஏதேனும் செய்வது என்று தீர்மானித்தேன். 2013ஆம் ஆண்டு அந்த வேலையை விட்டு விலகினேன். மீண்டும் கொல்கத்தாவுக்குத் திரும்பினேன்,” என்றார் அவர். அவருடைய இளம் சகோதரர்  டேனிஷ் சித்திக், குடும்பத்தின் மளிகைக் கடையை மூடி விட்டு கண்ணாடி கடை ஒன்றை நடத்தி வந்தார்.

  ”நான் என்னுடைய எதிர்காலத் திட்டங்கள் குறித்து அதுவரை ஏதும் தீர்மானிக்கவில்லை. பல்வேறு வாய்ப்புகள் இருந்தன. என்னுடைய சகோதரர் ஏற்கனவே அவரது கண்ணாடி கடையை தொடங்கி இருந்தார். நான் மார்க்கெட்டிங்கில் எம்பிஏ படிப்பது என்று தீர்மானித்தேன். கொல்கத்தாவில் உள்ள கோயங்கா கல்லூரியில் வணிகம் மற்றும் வணிக நிர்வாகப்படிப்பில் சேர்ந்தேன்,” என்று, ஷாதன் கூறினார்.
தன் சகோதரரின் கண்ணாடிகள் விற்பனைக் கடையைப் பார்த்த ஷாதன் அந்த வணிகத்தில் ஈர்க்கப்பட்டார்

“அந்த நாட்களில், என்னுடைய சகோதரர் டேனிஷ் சித்திக் அவருடைய கடையில் வணிகத்தில் ஈடுபட்டிருப்பதை பார்த்துக் கொண்டிருப்பேன். மெதுவாக, எனக்கும் அந்த தொழிலில் ஆர்வம் ஏற்பட்டது.”

 “சாதாரண கண்ணாடிகளை பலர் தயாரிப்பதை நான் அறிந்தேன். ஆனால், அலங்கார மற்றும் பாதுகாப்பு கண்ணாடிகள் தயாரிப்பில் கிழக்கு இந்தியாவில் கூட அல்லது கொல்கத்தாவில் யாரும் ஈடுபடவில்லை. அதில் எனக்கு வணிக வாய்ப்புகள் இருப்பதை உணர்ந்தேன். என்னுடைய எம்பிஏ படிப்பின்போது, அலங்கார கண்ணாடிகள் குறித்து தொடர்ந்து நான் ஆராய்ச்சியில் ஈடுபட்டேன்.”  

2015ஆம் ஆண்டு படிப்பை முடித்த பின், ஷாதன் டிசைனர் கண்ணாடிகள் கடையை 100 ச.அடி இடத்தில் தன் ரிப்பன் தெரு வீட்டுக்கு அருகில் 2016ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கினார்.  “ரூ.3 லட்சம் முதலீட்டுடன் மூன்று பங்குதாரர்களுடன் கடையைத் தொடங்கினேன். என்னுடைய சேமிப்பில் இருந்து பணம் முதலீடு செய்தேன். கடைக்காக நாங்கள் ரூ.15 ஆயிரம் வாடகை கொடுத்தோம். எல்இடி கண்ணாடி, நவீன கண்ணாடி, அலங்கார கண்ணாடி, வெனிஸ் கண்ணாடி, அச்சிடப்பட்ட  கண்ணாடி, கண்ணாடி சுவர் பேனல்கள், அலங்கார அரக்கு கண்ணாடி, மற்றும் குளிர்விக்கும் கண்ணாடி ஆகியவற்றை விற்பனை செய்தோம்.”  

முதல் நாளில் இருந்தே கடையில் பெரும் அளவில் விற்பனை நடைபெறும் என்று ஷாதன் நம்பினார். ஆனால், முதல் ஆறுமாதங்களுக்கு எந்த விற்பனையும் இல்லாததால் அவருடைய எதிர்பார்ப்பு நொறுங்கியது.”  “எந்த ஒரு ஆர்டரும் எங்களுக்கு கிடைக்கவில்லை. தவறான முடிவு எடுத்து விட்டேனோ என்று கூட நான் நினைக்க ஆரம்பித்தேன். வழக்கமான கண்ணாடிகளை விட எங்கள் கண்ணாடிகள்  20-30 சதவிகிதம் அதிக விலை. மிக போராட்டமாக இருந்தது,” என்று சுட்டிக்காட்டினார்.   எனினும், தம்முயற்சியில் இருந்து அவர் பின்வாங்கவில்லை.

அமேசான் போன்ற இதர இணையதளங்களில் தமது நிறுவனம் குறித்து பட்டியலிடத் தொடங்கினார். விரைவிலேயே ஆர்டர்கள் குவியத் தொடங்கின. கொல்கத்தாவில் இருந்தும் நாட்டின் பிறபகுதிகளில் இருந்தும் ஆர்டர்கள் வரத் தொடங்கின.  “எங்களுடைய தயாரிப்புகளை விநியோகிப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டோம். உடைவதைத்  தவிர்ப்பதற்காக சரியான முறையில் பொருந்தக் கூடிய மர சட்டகத்தில் சுற்றிலும் பாதுகாப்புப் பொதிகள் வைத்து கண்ணாடிகள் பேக் செய்யப்படுகின்றன,” என்றார் ஷாதன்.

முதல் ஆண்டில் (2016-17) ரூ.30 லட்சம் ஆண்டு வருவாயை அவர்கள் ஈட்டினர். “நாங்கள் கடையைத் தொடங்கிய சமயத்தில் வெளியில் செய்யக் கொடுத்து உற்பத்தி செய்தோம். அடுத்த ஆண்டு கொல்கத்தாவின் புறநகரில் நாங்களே சொந்தமாக உற்பத்தி பிரிவைத் தொடங்கினோம். நகரில் இரண்டாவது கடையை திறந்தோம், “என்றார் ஷாதன்.
 அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் 50 கிளை உரிமைக் கடைகளைத் திறப்பது என்று ஷாதன் திட்டமிட்டுள்ளார் 

2018ஆம் ஆண்டு அவரது நிறுவனம் பிரைவேட் லிமிடெட் நிறுனமாக மாறியது. இப்போது கொல்கத்தாவில் அவர்களுக்கு மூன்று கடைகள் இருக்கின்றன. கொல்கத்தா மெட்ரோ, பதஞ்சலி, சிஃபி, பஜாஜ் போன்ற முன்னணி வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளனர்.  

நிறுவனத்தில் இப்போது முறையான ஊழியர்கள் 20 பேர் பணியாற்றுகின்றனர். 80 பேர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுகின்றனர். அடுத்த மூன்று ஆண்டுகளில் 50 கிளை உரிமைக் கடைகளை திறப்பது என்று ஷாதன் திட்டமிட்டுள்ளார்.

வளர்ந்து வரும் தொழில்முனைவோருக்கு ஷாதனின் அறிவுரை: வணிகத்தில் என்ன செய்ய நினைக்கின்றீர்கள் என்பது குறித்த தெளிவுடன் இருங்கள். பணம், பணத்தை சம்பாதிக்காது. ஆனால், திறன்களால்தான் பணம் சம்பாதிக்க முடியும்.           

Milky Mist
 

அதிகம் படித்தவை

 • Digital Success Story

  இணைந்த கைகள்

  நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த ரோகித், விக்ரம் இருவரும் எம்.பி.ஏ., படிக்கும் போது நண்பர்கள் ஆனார்கள். இருவரும் சேர்ந்து டிஜிட்டல் சேவை நிறுவனத்தைத் தொடங்கினர். ஆரம்பத்தில் ஒரு லட்சம் ரூபாய் ஆண்டு வருவாய் ஈட்டியவர்கள் இன்று 12 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகின்றனர். குர்விந்தர் சிங் எழுதும் கட்டுரை

 • As a child she worked in Telangana for a daily wage of Rs 5, now she is a millionaire in the US

  அநாதை இல்லத்திலிருந்து அமெரிக்காவுக்கு

  அநாதை இல்லத்திலிருந்து அமெரிக்காவுக்கு அவருக்கு 16 வயதில் திருமணம். தினக்கூலி 5 ரூபாய்க்கு வேலை பார்த்தார். வளர்ந்ததோ அனாதை இல்லத்தில். இன்று அந்த பெண் 15 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வணிகம் செய்யும் ஒரு நிறுவனத்தின் உரிமையாளர். அஜுலி துல்சியான் இந்த வெற்றிக்கதையை விவரிக்கிறார்

 • he dreams of creating a rs 1,000 crore turnover company

  ஆயிரம் கோடி கனவு!

  கோவையை சேர்ந்த சதீஷ், சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். குச்சி ஐஸ் சாப்பிடும் ஆசையைக் கூட நிறைவேற்ற முடியாத குடும்பம். பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு ஐந்து கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் தொழிலின் வெற்றியை ருசிக்கிறார். ஆயிரம் கோடி அவரது கனவு. பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை

 • delhi dosa king

  ஒரு மசால்தோசையின் வெற்றி!

  கேரளாவைச் சேர்ந்த கேசவன் குட்டி, சிறுவயதில் கடினமான சூழலில் வளர்ந்தவர், டெல்லியில் தமிழ்ப்பள்ளியில் கேன்டீனில் வேலை பார்த்து தொழில் கற்றுக் கொண்டவர், இன்றைக்கு டெல்லியில் மூன்று ரெஸ்டாரண்ட்கள் நடத்துகிறார். தினமும் 60 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை

 • Glossy in glass

  கண்ணாடியால் ஜொலிப்பவர்!

  ஷாதன் சித்திக் பிறந்தது ஒரு நடுத்தரக் குடும்பம்.  அவர்  12 ஆம் வகுப்புப் படிக்கும்போது தந்தை இறந்து விட்டார். பிறகு சகோதரர் உதவியுடன் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தவர், இப்போது கண்ணாடி விற்பனைத் தொழிலில் ஜொலிக்கிறார். குருவிந்தர் சிங் எழுதும் கட்டுரை.