பாரம்பரிய ஒரிய உணவின் மீதான ஆர்வத்தில் தொழிலதிபர் ஆனவர்! இது மணமும் சுவையும் கொண்ட ஒரு வெற்றிக்கதை!
22-Oct-2025
By ஜி.சிங்
புவனேஸ்வரம்
ஏழு ஓட்டல்கள், ஆறுகோடி ரூபாய் வணிகம். ஒடிஷா மாநில உணவைப் பிரபலப்படுத்த டெபசிஷ் பட்நாயக் மேற்கொண்ட முயற்சியின் பலன் இது.
சிங்குடி தால்மா – காய்கறிகள், இறால், தேங்காய், மசாலாவுடன் துவரம்பருப்பு சேர்த்து சமைக்கப்பட்டது,
சாட்டு ராய் – கடுகு சாஸில் சமைக்கப்பட்ட காளான்கள், போஹாலா மச்சா பெசாரா- வீட்டுச் சமையலில் பொஹாலா மீன், சாகுலி – வறுத்து இடித்த அரிசியும் கடலைமாவும், கீரி – இனிப்பு அரிசிக்களி… இப்படி பல உணவுகள் ஒடிஷாவுக்கே உரியவை.
|
ஒடிஷாவிலும் பிறபகுதிகளிலும் ஒடிஷா உணவு வகைகளைப் பிரபலப்படுத்த டெபசிஷ் பட்நாயக் தால்மா உணவகத்தைத் தொடங்கினார் (படங்கள்: டிகான் மிஸ்ரா) |
ஒடிஷா மாநிலத்துக்கு வெளியே அதிகம் அறியப்படாத மேற்சொன்ன சுவையான உணவுகளைப் பரிமாறுகிறது டால்மா கம்பர்ட்ஸ் அண்ட் எண்டர்டெயின்மெண்ட் கோ பிரைவேட் லிமிடட். 55 வயதான டெபசிஷ் இதன் நிர்வாக இயக்குநர். பெங்களூரு, டெல்லி, கொல்கத்தா ஆகிய நகரங்களிலும் இந்த உணவகங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
1961-ல் கட்டாக்கில் அரசுப்பள்ளி ஆசிரியர் மகனாகப் பிறந்த டெபசிஷுக்கு சாப்பாடு என்றால் பிரியம். “என் தாய் மிகச்சிறப்பாக சமைப்பார். எனக்கும் சாப்பிடுவது என்றால் சின்னவயதிலிருந்தே விருப்பம் அதிகம்,” என்கிற அவர் தனக்குப் பிரியமான தால்மா, மட்டன் குழம்பு ஆகியவற்றை நன்றாக சமைக்கக் கற்றுக்கொண்டுள்ளார்.
புவனேஸ்வரத்துக்கு அப்பாவுக்கு மாற்றல் ஆனது. அவர்களின் ஒரே மகனான டெபசிஷ் அங்கே பள்ளிப்படிப்பைத் தொடர்ந்தார்.
1980-ல் புக்ஸி ஜகபந்து பித்யாதார் கல்லூரியில் இளநிலைப் பட்டம் பெற்று, பிறகு அரசியல் துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றார். அத்துடன் சேவியர் நிர்வாகவியல் நிறுவனத்தில் எம்பிஏ படிப்பும் முடித்தார்.
|
டெபசிஷின் தந்தை அரசுப்பள்ளி ஆசிரியர் |
அவருக்கு வழக்கறிஞர் ஆக ஆசை. ஆனால் 1984-ல் அவரது படைப்பூக்க மனநிலை காரணமாக கிரியேட்டிவ் கன்ஸல்டண்ட்ஸ் பிரைவேட் லிமிடட் என்ற விளம்பர நிறுவனத்தைத் தொடங்கினார்.
சுற்றுலா, கைவினைப்பொருட்கள் போன்ற அரசு சார்ந்த சேவைகளுக்கு விளம்பரங்கள் உருவாக்கினார்.
அடுத்த 16 ஆண்டுகள் டெபசிஷ் விளம்பரத்துறையில் செயல்பட்டார். ஆனால் விருந்தோம்பல் துறையில் நுழையவேண்டும் என்ற ஆர்வம் இருந்துகொண்டே இருந்தது. ஒரிய பாரம்பரிய உணவுகளில் தொழில் வாய்ப்பு இருப்பதாகத் தோன்றியது.
“எமது மாநில பாரம்பரிய உணவு வகைகளைப் பரிமாற எந்த உணவகமும் இல்லை என்பதைக் கவனித்தேன். முக்கியமான உணவகங்களில் காண்டினெண்டல், தாய், சீன உணவுகளே பரிமாறப்பட்டன. மாநிலத்தில் சுற்றுலா வரும் பயணிகளுக்கு உள்ளூர் உணவுகள் என்ன என்றே தெரிந்துகொள்ள வாய்ப்பே இல்லை,” என்கிறார் டெபசிஷ்.
மாநிலத்தின் மிகச்சிறப்பான உணவுவகைகளை பிரபலப்படுத்த என்ன செய்யலாம் என்று அவர் யோசிக்க ஆரம்பித்தார். அவர் 2000-த்தில் தன்னுடைய விளம்பர ஏஜென்சியை மூட முடிவுசெய்தார். ஓட்டல் தொழிலில் இறங்கினார்.
“உள்ளூர் மக்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் தரமான உள்ளூர் உணவை அளிப்பதுதான் என் நோக்கம். பணம் சம்பாதிப்பது இரண்டாவது நோக்கமாக இருந்தது,” என்கிறார் டெபசிஷ்.
|
புவனேஸ்வரத்தில் டால்மா உணவகத்தில்… |
ஆனால் ஒரு பிரச்னை. “ஒரிய உணவு வகைகளில் நிபுணர்களே இல்லை,” என்கிறார் ஆரம்பகட்டப் பிரச்னைகளைச் சொல்லும்போது டெபசிஷ்.
கடைசியில் ஒன்பது சமையல் கலைஞர்களைக் ஏற்பாடு செய்துவிட்டார். மே 2001-ல் புவனேஸ்வரத்தில் உள்ள மதுசூதன் நகரில் முதல் உணவகத்தை ஆரம்பித்தார்.
“மூடப்பட்ட உணவகம் ஒன்றை கையில் எடுத்தோம். 1400 சதுர அடியிலான இடம். 40 பேர் அமரக்கூடிய வசதி செய்தோம். கையிலிருந்தும் நண்பர்களிடமிருந்தும் வாங்கி 10 லட்சரூபாய் முதலீடு செய்தேன்.”
“தால்மா என்பது முக்கியமான ஒரிய உணவு வகை. எனவே அந்த பெயரை வைத்தேன். இந்த உணவு எல்லா வீட்டிலும் செய்யப்படக்கூடிய முக்கியமான பருப்பு வகை. பப்பாளி, கத்தரிக்காய் போன்ற பல காய்கறிகள் கலந்தது.”
பயணம் எளிதாக இல்லை. முதல் மூன்று மாதங்கள் நஷ்டமே. இருப்பினும் தொடர்ந்து நடத்தினார்.
|
டெபசிஷுக்கு ஒரிய உணவு வகைகள் மிகவும் பிடித்தமானவை. |
“வாடிக்கையாளர்களுக்கு தரமான மறக்கமுடியாத உணவைத் தரவேண்டும். எனவே நானே சமையலை மேற்பார்வை இடுவேன். புதிய சமையல்கலைஞர்களை வேலைக்கு அமர்த்தி பயிற்சி அளித்தோம்.”
ஆரம்பகட்ட தடுமாற்றங்களுக்குப் பின்னால் தால்மாவுக்கு கூட்டம் வர ஆரம்பித்தது. “ஒவ்வொரு நாளும் 20-30 ப்ளேட் விற்க ஆரம்பித்தோம். ஒரு ப்ளேட் ஒரிய உணவுக்கு 30 ரூபாய் விலை.”
விரைவில் அடுத்த உணவகமும் தொடங்கினார். 2000 சதுர அடி வாடகை இடத்தில் 25 லட்சரூபாய் வங்கிக்கடனுடன் இது தொடங்கப்பட்டது.
2007-ல் தால்மா 1.5 கோடி ரூபாய் விற்பனை செய்தது. ஆண்டுக்கு 10-15 சதவீத வளர்ச்சி. 2008-ல் ஒடிஷாவுக்கு வெளியே தன் பிராண்டை எடுத்துச்செல்லும் கனவை டெபசிஷ் நனவாக்கினார்.
“அதிகமாக ஒரியர்கள் வசிக்கும் பெங்களூரு கொரமங்களாவில் 2008ல் 1800 சதுர அடியில் 30 லட்சரூபாய் முதலீட்டில் வங்கிக்கடனுடன் தொடங்கினோம்.” அங்கு கிடைத்த வரவேற்பு அவரது எதிர்பார்ப்பையும் விஞ்சி இருந்தது. 2010- 2014க்குள் ரூர்கேலா, புவனேஸ்வரம், பூரி, டெல்லி, கொல்கத்தா ஆகிய இடங்களில் ஐந்து தால்மா உணவகங்களைத் தொடங்கினார்.
|
ஒடிஷாவில் எல்லா மாவட்டங்களிலும் ஓர் உணவகம் தொடங்குவது அவரது இலக்கு |
“இப்போது ஆறு உணவகங்கள் நேரடியாக நடத்துகிறோம் (புவனேஸ்வரத்தில் ஒரு உணவகம் விற்பனை குறைவாக இருந்தததால் மூடப்பட்டது). ஆனால் இதை ப்ரான்சைஸி மாடலில் பிறருக்கு அளித்து விரிவுபடுத்த நினைக்கிறோம். 20 பிளேட்டுகள் விற்பனையுடன் தொடங்கி தினமும் 700 பிளேட்கள் வரை இப்போது விற்பனை நடக்கிறது. அவற்றின் விலை 140 ரூபாய் வரை உள்ளது,” என்கிறார் அவர்.
பிற கிளைகளில் நடக்கும் விற்பனை உள்ளிட்ட செயல்பாடுகளை இணையத்தொடர்பு மூலம் டெபசிஷ் தெரிந்துகொள்கிறார்.
அவருக்கு மேலும் வளர ஆர்வம் இருக்கிறது. “பெங்களூருவில் இரண்டாவது உணவகம் விரைவில் தொடங்குவோம். அத்துடன் ஒடிஷாவில் எல்லா மாவட்டங்களில் ஒரு கிளை தொடங்குவது இலட்சியம்,” என்கிறார்.
உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். கடினமாக உழையுங்கள். ரிஸ்க் எடுக்கத் தயங்காதீர்கள் – இதுவே டெபசிஷின் வாழ்க்கை வெற்றிக்கான மந்திரம்! இந்த மந்திரம் ஒரிய உணவுக்கும் வெற்றிகரமாக அமைந்து உள்ளது!
அதிகம் படித்தவை
-
அசத்துகிறார் ஆன்சல்!
மார்வாரி குடும்பம் ஒன்றில் பிறந்தவர் ஆன்சல் மித்தல். நிஃப்ட் கல்வி நிறுவனத்தில் படித்தவரான இவர், தோல் கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றார். 10 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் தொழிலைத் தொடங்கி இன்றைக்கு 25 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டுகிறார். சோஃபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை.
-
‘பன்னீர்’ செல்வம்!
இது மில்கி மிஸ்ட் நிறுவன நிர்வாக இயக்குநர் சதீஷ்குமாரின் வெற்றிக்கதை. எட்டாம் வகுப்பில் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தந்தையின் தடுமாறிய தொழிலை தூக்கி நிறுத்தி, அதற்குப் புது அடையாளம் கொடுத்த சதீஷ்குமாரின் வெற்றிக்கதையை விவரிக்கிறார் பிசி வினோஜ் குமார்
-
கம்பளிகளின் காதலன்!
பெட்ஷீட்கள் மீது விருப்பம் கொண்ட புனித் பட்னி, அதையே வாய்ப்பாக மாற்றி தொழிலில் ஈடுபட ஆரம்பித்தார். இன்றைக்கு ஆண்டுக்கு ரூ. 9.25 கோடி வருவாய் ஈட்டும் இரண்டு நிறுவனங்களை கட்டமைத்திருக்கிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை
-
கறி விற்கும் கார்ப்பரேட்!
பெரு நிறுவனங்களில் நல்ல பணியில் இருந்த இரு நண்பர்கள் அதைவிட்டுவிட்டு தரமான இறைச்சியை ஆன்லைனில் விற்பனை செய்ய இறங்கினார்கள். லிசியஸ் என்ற அந்த பிராண்ட் இரண்டே ஆண்டுகளில் 15 கோடிக்கும் மேல் வர்த்தகம் செய்கிறது. இந்த வெற்றிக்கதையை விவரிக்கிறார் உஷா பிரசாத்
-
தேநீர் காதலர்!
தமிழ்நாட்டில் கரூர் மாவட்டத்தில் சின்னஞ்சிறிய கிராமத்தில் பிறந்த ஜோசப் ராஜேஷ் ஒரு தேநீர் காதலர். வங்கியில் வேலை பார்த்து பின்னர் அதை விட்டுவிட்டு தேநீர் கடையைத் தொடங்கினார். இப்போது சங்கிலித் தொடர் தேநீர்க் கடைகளைத் தொடங்கி ஆண்டுக்கு ரூ.7 கோடி வருவாய் ஈட்டுகிறார். பிலால் கான் எழுதும் கட்டுரை
-
காதல் தந்த வெற்றி
பீகார் மாநில இளைஞர் விகாஸ் குத்குத்யா, டெல்லியில் இருக்கும் தமது காதலிக்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லப் போனார். அங்குதான் அவருக்கு ஒரு புதிய தொழில் யோசனை தோன்றியது. இன்று அவர் 200 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் பொக்கே மலர் விற்பனை நிறுவனத்தின் உரிமையாளர். பிலால் ஹாண்டு எழுதும் கட்டுரை