Milky Mist

Friday, 22 August 2025

அன்று சாலையோரத்தில் தூங்கினார்; இன்று அதே இடத்தில் விடுதி நடத்தி பலருக்கு இடம் தருகிறார்!

22-Aug-2025 By பி.சி. வினோஜ்குமார்
கோயம்புத்தூர்

Posted 15 Mar 2017

ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து மூன்று இளைஞர்கள் 1979-ல் புதிய வாழ்வைத் தேடிக் கோயம்புத்தூர் வந்தார்கள். அவர்களில் ஒரு இளைஞன் 16 வயதே ஆன கே ஆர் ராஜா. அவன் பாக்கெட்டில் இருந்தது 25 ரூபாய் மட்டுமே.

வேட்டி, சட்டை கையில் மாற்றுத்துணி அடங்கிய மஞ்சள் பையுடன் உடன் இரண்டு பேரோடு பேருந்தில் இருந்து இறங்கினான் ராஜா. தங்கள் ஊரைச் சேர்ந்தவரான காவலர் ஒருவர் கோவையில் வசிக்கிறார் என்று தெரியும். அவரது வீட்டுக்குச் செல்ல வழி விசாரித்தான்.

https://www.theweekendleader.com/admin/upload/jan25-17-raja1.JPG

பதினாறு வயதில் கையில் 25 ரூபாயுடன் கே.ஆர். ராஜா கோவைக்கு வந்து சேர்ந்தார்.  இன்று அவருக்கு மூன்று பிரியாணிக்கடைகளும் 10 கோடிரூபாய் மதிப்பிலான தங்கும் விடுதியும் உள்ளன  (படங்கள்: ஹெச்.கே.ராஜசேகர்)


"நாங்கள் அவர் வீட்டுக்கு வழி விசாரித்து நடந்தே சென்றோம். அவர் நல்ல மனிதர். எங்களுக்கு காலையில் சாப்பாடு போட்டார்.  தேவக்கோட்டையில் இருந்து கோவைக்கு 11 ரூபாய் பேருந்து டிக்கெட்டுக்காக செலவழித்திருந்தேன். கையில் மீதி இருந்தது கொஞ்சம் பணமே,’’ என அந்த நாளை நினைவு கூருகிறார் இப்போது 54 வயது நிரம்பிய தொழிலதிபரான ராஜா. 45 ரூபாய் மாத சம்பளத்தில் ஒரு ஓட்டலில் சப்ளையராக சேர்ந்து, சிறு தொழில்களைப் பார்த்து, 1987-ல் சொந்தமாக சின்ன உணவகம் தொடங்கி, கோவையில் ஒரு தொழிலதிபராக வளர்ந்திருக்கிறார் ராஜா. இன்று அவருக்கு கோவையில் முக்கிய இடமான  காந்திபுரத்தில் மத்திய பேருந்து நிலையம் பின்பாக  அவருக்குச் சொந்தமாக 30 அறைகள் கொண்ட ஒரு மூன்றடுக்கு விடுதி இருக்கிறது. மூன்று பிரியாணி கடைகள் உள்ளன. தன் விடுதி பத்துகோடி மதிப்பு உடையது என்கிறார் அவர். இன்னும் அதிக மதிப்பு இருக்கலாம்.

“இதே இடத்தில் சாலையோரங்களில் ஆரம்பகாலங்களில் நான் படுத்து தூங்கியிருக்கிறேன்,’’ என்கிறார் ராஜா.

ராஜா ராமநாதபுரம் மாவட்டத்தில் கோவிந்தமங்கலம் கிராமத்தில் பிறந்தவர். தேவக்கோட்டையிலிருந்து 30 கி மீ தூரத்தில் இருக்கும் கிராமம் அது.

“எங்கள் ஊருக்கு இன்னும் பஸ் போக்குவரத்து இல்லை’’ என்கிற ராஜா ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவர். அவரது பெற்றோர் படிப்பறிவற்ற விவசாய தினக்கூலிகள். ராஜா ஒரே மகன்.

https://www.theweekendleader.com/admin/upload/jan25-17-raja2.JPG

கோவைக்கு வந்த புதிதில் ராஜா ஓட்டல் சர்வராக வேலைசெய்தார்



அரசுப்பள்ளியில்தான் படித்தேன். நான்காவது வகுப்புடன் ஒரு ஆண்டு படிப்பை நிறுத்தவேண்டி வந்தது. ஏனெனில் ஊரில் பஞ்சம் வந்ததால் வேறு ஊருக்கு என் பெற்றோர் இடம்பெயரவேண்டியிருந்தது.  மணப்பாறையில் முறுக்கு தொழிலில் இருந்த ஒரு குடும்பத்தில் வேலைபார்க்க நான் அனுப்பப்பட்டேன். கணவனும் மனைவியும் முறுக்கு செய்து உள்ளூர் கடைகளில் விற்பார்கள். நான் அவர்களின் வீட்டை சுத்தம் செய்து பாத்திரங்கள் கழுவி, அவர்களின் இரண்டு குழந்தைகளையும் பார்த்துக்கொள்ளவேண்டும்,’’ என்கிறார் ராஜா.

ராஜாவுக்கு அப்போது 9 வயது. அவருக்கு தொழில்மீது ஆர்வம் வந்தது அங்கு இருந்த ஒரு வருஷத்தில்தான். ஒரு ஆண்டு கழிந்ததும் பெற்றோருடன் திரும்பிச் சென்ற ராஜா, பள்ளியில் படிப்பைத் தொடர்ந்தார்.

பத்து வயதாக இருக்கும்போதே அவர் வீட்டில் பக்கத்து ஊரான அனந்தூர் சென்று தேன் மிட்டாய், கடலை மிட்டாய் போன்ற இனிப்புகளை வாங்கி வந்து பள்ளி நேரம்போக மற்ற நேரங்களில் விற்பனை செய்து சின்னதாக லாபம் பார்த்தார்.

‘’70 பைசாவுக்கு இனிப்பு வாங்கியபோது 45 பைசாவுக்கு லாபம் கிடைத்தது. எனக்கு அது உற்சாகம் தந்தது. ஆறாம் வகுப்பு படிக்க அனந்தூரில் உள்ள அரசுப்பள்ளியில் சேர்ந்தபோது அங்கிருந்து எப்போதும் இனிப்புகளை வாங்கிவந்து வீட்டில் வைத்து விற்பேன்,’’ சொல்கிறார் ராஜா.

https://www.theweekendleader.com/admin/upload/jan25-17-raja3.JPG

ராஜாவின் விடுதி, பிரியாணி கடைகளில் 37 பேர் வேலை செய்கிறார்கள்.



பள்ளிக்கும் வீட்டுக்குமான தூரம் 4 கிமீ - மழைக்காலங்களில் ஓடைகளை ட்ரவுசரைக் கழற்றி தலையில் வைத்துக்கொண்டு கடந்து செல்லவேண்டும். காய்ந்த தரையில் அதை அணிந்துகொள்வார்கள். ஆண்டுகள் பல ஓடியிருக்கலாம். அந்த இளமைக்கால கிராமத்து நினைவுகள் ராஜாவிடம் பசுமையாக இருக்கின்றன.

உணர்வுகளுக்கு இடம் அளிக்கமுடியாத அளவுக்கு அவருக்கு வெற்றி பெறவேண்டும் என்ற உணர்வு அதிகமாக இருந்தது. கோவையில் அவருக்குக் கிடைத்த முதல் வேலை ஓட்டலில் டேபிள்களுக்கு தண்ணீர் வைக்கும் வேலைதான். சப்ளையர் வேலை தெரியுமா என்று ஒரு தொழிலாளி கேட்டபோது தெரியாவிட்டாலும்கூட தெரியும் என்று துணிந்து சொல்லிவிட்டார். அனுபவம் உள்ள சப்ளையர் மெனு கார்டில் உள்ளதை ஒப்பிக்கத்தெரியவேண்டும். ட்ரேயில் உணவை அடுக்கி வைத்து டேபிளில் அழகாகப் பரிமாறத் தெரிந்திருக்கவேண்டும்.

ராஜா வேகமாக அவற்றைக் கற்றுக்கொண்டார்.  இங்கே வேலை பார்த்துக்கொண்டே, ஒரு என் ஜி ஓ நடத்திய குறுகிய கால தொழிற்பயிற்சியில் டெய்லரிங் கற்றுக்கொண்டார். அதற்கு 175 ரூபாய் மாதாந்திர உதவித்தொகையும் கிடைத்தது.

இரண்டு ஆண்டுகள் கழித்து ராஜா சொந்த கிராமத்துக்குத் திரும்பிச் சென்றார். டெய்லராக வேலை பார்த்து கூடவே சின்னச் சின்ன தொழில்களும் செய்தார்.

"ஆண்களுக்கு ட்ரவுசர்களும் பெண்களுக்கு ப்ளவுசும் தைத்தேன். மரம் வாங்கி கரி உருவாக்கி விற்றேன். ஆனால் எனக்கு மகிழ்ச்சியாக இல்லை. 1984-ல் கோவைக்கே திரும்பிவிட்டேன்,’’ என்கிறார் ராஜா.

https://www.theweekendleader.com/admin/upload/jan25-17-raja4.JPG

ஸ்ரீராஜா பிரியாணி ஹோட்டல், ராஜா தங்கும் விடுதி- காந்திபுரம் பேருந்து நிலையல் அருகே இருக்கின்றன.


உக்கடத்தில் ஒரு ஹோட்டலில் அரவை மாஸ்டராக வேலை கிடைத்தது. தோசை, இட்லி மாவு அரைத்தல் மற்றும் சமையலுக்குத் தேவையான மசாலா அரைத்தல் அவர் பொறுப்பு.

வேலை  முடிந்ததும் சைக்கிளில் ஏறி பிற ஓட்டல்களில் வேலை பார்த்த பணியாளர்களிடம் கட் பீஸ் துணி விற்றார். இதற்காக அவர் போட்ட முதலீடு 1000 ரூபாய் சொந்த சேமிப்பு.

1986-ல் பாப்பநாயக்கன் பாளையத்தில் ஒரு பெட்டிக்கடையை வாடகை இடத்தில் தொடங்கினார். பக்கத்தில் ஒரு பரோட்டா, சாப்பாட்டுக்கடை அடுத்த ஆண்டு.

‘’சாலையோரத்தில் பரோட்டா சுட்டோம். 3.50 ரூபாய்க்கு முழுச்சாப்பாடு போட்டோம். ரொம்ம சின்ன கடை. இரண்டு மடக்கு நாற்காலி, ஒரு ஸ்டூல் இவ்வளவுதான் இருந்தது.’’

விற்பனை சூடுபிடித்ததும் அதே இடத்தை வாங்கி பெரிய ஓட்டலாக கட்டினார். இன்னொரு இடத்தையும் தன் இரண்டாவது ஓட்டல் தொடங்க வாங்கினார்.

2007-ல் காந்திபுரத்தில் விற்பனைக்கு வந்த ஒரு விடுதியை தன் சேமிப்பு மற்றும்  வங்கிக்கடன் 70 லட்சரூபாயுடன் வாங்கினார். பக்கத்தில் இருந்த 3 செண்ட் இடத்தையும் வாங்கி விடுதியை விரிவாக்க செய்துள்ளார்.

இப்போது அவரிடம் 35 தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். அவர்களை நன்றாகக் கவனித்துக்கொள்கிறார். தீபாவளி போன்ற தினங்களில் அவர்களுக்கு தன்கையால் அசைவ விருந்து பரிமாறியபின்னர் தான் குடும்பத்துடன் கொண்டாடச் செல்வார்.

‘’நான் ஒரு தொழிலாளியாக இருந்தபோது தீபாவளிக்கு ஸ்பெஷலாக எதுவும் சாப்பிடக் கிடைக்காது. என்னிடம் வேலை பார்ப்பவர்களுக்கு அதே நிலை வரக்கூடாது என்று நினைக்கிறேன்,’’ என்கிறார் அவர்.

கடின உழைப்பு எந்த மோசமான சூழலையும் வென்று முன்னுக்கு வர உதவும் என்பதையே ராஜாவின் வாழ்க்கை காண்பிக்கிறது.


 
 
 
 
 

அதிகம் படித்தவை

  • Event organiser

    சவாலே சமாளி!

    கல்லூரியில் நண்பர்கள் இல்லை என்ற சவாலை சந்தித்தவர் விக்ரம் மேத்தா. இப்போது நிகழ்வுகளை  மேலாண்மை செய்யும்  நிறுவனம் நடத்தி வருகிறார். திருமண விழாக்களை ஒருங்கிணைப்பதில் பல சவால்களை சந்தித்து வெற்றிகரமான முன்னேறி வருகிறார். சோபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை.

  • Designing  success path

    வெற்றியை வடித்தவர்!

    கொல்கத்தாவை சேர்ந்த சிஏ பட்டதாரி இவர். டிசைனில் உள்ள ஆர்வத்தால், கிராபிக் டிசைன் நிறுவனத்தைத் தொடங்கினார். சர்வதேச வாடிக்கையாளர்களை குறிவைத்து இன்று மிக வெற்றிகரமாக தொழிலில் ஈடுபட்டு வருகிறார். ஜி.சிங் எழுதும் கட்டுரை

  • success story of poorna sundari ias

    தன்னம்பிக்கையே கண்களாக...

    மதுரையைச் சேர்ந்த பூரண சுந்தரி 2019-ம் ஆண்டுக்கான ஐ.ஏ.எஸ் தேர்வில் இந்திய அளவில் 286-ம் இடம் பெற்றிருக்கிறார். மிக எளிமையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அவர், 6 வயதில் பார்வையை இழந்தவர். இருப்பினும் பெற்றோர், தோழிகள், ஆசிரியர்கள் அளித்த ஊக்கத்தில் இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்.

  • Leading jeweller in Patna once sold pakoras on a pushcart

    மின்னும் வெற்றி!

    ராஜஸ்தானில் ஜெய்ப்பூரில் அம்மாவுக்கு உதவியாக பக்கோடா கடையில் சின்னவயதில் இருந்தே வேலை செய்தவர் சந்த் பிஹாரி அகர்வால். பள்ளிக்குப் போய் படிக்க வசதி இல்லை. அவர் இன்று பாட்னாவில் 20 கோடி புரளும் நகைக்கடையை நடத்துகிறார். ஜி சிங் எழுதும் வெற்றிக்கதை

  • How an IIM Gold Medalist  established a Rs 5 crore vegetable business

    வேர்களால் கிடைக்கும் வெற்றி

    அகமதாபாத் ஐஐஎம்மில் படிப்பு முடித்தால் கை நிறைய சம்பளத்துக்கு பன்னாட்டு நிறுவனத்துக்கு வேலை செய்யப்போவார்கள். ஆனால் கௌஷ்லேந்திரா, பீஹாரில் ஆண்டுக்கு 5 கோடி ரூபாய்க்கு காய்கறி விற்பனை செய்யும் நிறுவனம் நடத்துகிறார். ஜி.சிங் எழுதும் வெற்றிக்கதை

  • Successful Parotta Master who became owner of a chain of restaurents

    பெரிதினும் பெரிது கேள்!

    சென்னை கடற்கரையில் சிறுவயதில் தந்தையின் தள்ளுவண்டி உணவுக் கடையில் உதவி செய்தார் சுரேஷ் சின்னசாமி. இன்றைக்கு சென்னையில் உள்ள தோசக்கல் சங்கிலித் தொடர் உணவகங்களின் உரிமையாளர். ஆண்டுக்கு 18 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறார். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை