Milky Mist

Friday, 26 April 2024

ஏமாற்றியவர்கள் முன்பாக வாழ்ந்து காட்டுகிறார் அம்பிகா! ஒரு அசாதாரண பெண்மணியின் அசாத்திய வெற்றி!

26-Apr-2024 By சோபியா டேனிஷ் கான்
புதுடெல்லி

Posted 04 Aug 2018

புகழ்பெற்ற ஹேர் ஸ்டைலிஸ்ட் மற்றும் ஒப்பனைக் கலைஞர் அம்பிகா பிள்ளை.  தன்னுடைய 34ஆம் வயதில் தன் நண்பரும்  தொழில் முறை பங்குதாரருமான ஒருவரால் தாங்கள் நடத்திய சலூன் தொழிலில் தொடர்ச்சியாக பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஏமாற்றப்பட்டு வருவதைக் கண்டுகொண்டார்.  இந்த மோசடியைப் பற்றி கேட்டபோது அந்த நபர் உடனே தொழில் முறை தொடர்பைத்  துண்டித்துக் கொண்டார். அம்பிகாவுக்கு பணமோ சலூனோ கிடைக்கவில்லை! வெறுங்கையுடன் வெளியேற வேண்டி இருந்தது.

இது போல ஏமாறுவது அவருக்கு முதல்முறை அல்ல. அவர் மிகவும் நம்பிக்கை வைத்தவர்கள்தான் அவரை மோசடி செய்தனர், ஏமாற்றினர். எனினும், தமது சூழல்களில் இருந்து அவர் வெளியே வந்து விட்டார். தனி ஒரு தாயாக வாழ்க்கையை நிர்வகித்தார். மீண்டும், மீண்டும் விழுந்து, தம்மை தாமே எழுந்து கொண்டுஅம்பிகா இன்றைய நிலைக்கு உயர்ந்திருக்கிறார். 

https://www.theweekendleader.com/admin/upload/12-03-18-11am3.jpg

அம்பிகா பிள்ளை எப்போதுமே தோல்வியை ஏற்றுக் கொள்வதில்லை. ஒவ்வொரு பின்னடைவுக்குப் பின்பும், வலுவாக மீண்டு வருவார். அவரது பெயரிலான அழகு சாதன பிராண்ட்டின் தலைவராக இப்போது இருக்கிறார். அதன் ஆண்டு வருவாய் 10 கோடி ரூபாய். (படங்கள்: நவ்நிதா)


“இது போன்ற கடினமான வழிகளில் நான் பாடங்கள் கற்றுக்கொண்டேன். எனினும், இன்னும் நான் மக்கள் மீது முழுவதுமாக நம்பிக்கை இழக்கவில்லை,” என்கிறார் அவர். அவருடைய உற்சாகமான உரையாடலில் தன்னம்பிக்கை எதிரொலிக்கிறது.

2010-ம் ஆண்டில் 11 ஊழியர்களுடன் ஓர் அழகுநிலையம் தொடங்கினார். நாள் ஒன்றுக்கு வெறும் ஐந்து வாடிக்கையாளர்கள் மட்டும் வந்தனர். தமது சொந்தப் பெயரில் அம்பிகா பிள்ளை டிசைனர் சலூன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்று அவர் தொடங்கிய அந்த நிறுவனத்தின் ஆண்டு வருவாய் இன்றைக்கு 10 கோடி ரூபாயாக இருக்கிறது. இப்போது 150 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.

கேரள மாநிலம் கொல்லத்தில் 1962-ம் ஆண்டு நவம்பர் 26-ம்தேதி பிறந்த அம்பிகா, தமது குழந்தைப் பருவத்தில் டிஸ்லெக்ஸியா (dyslexia) என்ற கற்றல் குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டார். கணிதப் பாடம் கற்பதிலும் மற்றும் எழுதுவதற்கும் போராட்டங்களைச் சந்தித்தார். 17வது வயதிலேயே அவருக்குத் திருமணம் நடைபெற்றது. எனினும், விரைவிலேயே திருமண வாழ்க்கையில் அவருக்கு அதிருப்தி ஏற்பட்டது.

ஏழு ஆண்டு கால திருமண வாழ்க்கைக்குப் பின்னர், 24வது வயதில் கணவரிடம் இருந்து விவாகரத்துப் பெற்றார். இரண்டு வயது பெண் குழந்தையையும் இழுத்துக் கொண்டு, டெல்லிக்கு வந்தார். அங்கு அவர் முன் ஏராளமான வாய்ப்புகள் இருந்தன. ஹேர் ஸ்டைலிஸ்ட் கோர்ஸ் படிப்பது என்று தீர்மானித்தார்.

தமது மகளுக்கு நல்ல வாழ்க்கையைத் தர வேண்டும் என்று அவர் தீர்மானித்தார். அம்பிகாவின் தந்தை ஒரு பணக்காரர். தம்முடைய வாழ்க்கைக்கு தாமே சொந்தமாக ஏதாவது செய்து கொள்ள வேண்டும் என்பதால், அவரிடம் இருந்து ஒரு பைசா கூட அம்பிகா வாங்கவில்லை.

https://www.theweekendleader.com/admin/upload/12-03-18-11am1.jpg

ஐஸ்வர்யா ராய் உட்பட பல்வேறு புகழ்பெற்ற நபர்களுடன் அம்பிகா பணியாற்றி உள்ளார்.


1990-ம் ஆண்டில் ஒரு சலூனில் அவர் வேலை பார்த்தார். அப்போது அவரது சம்பளம் 2000 ரூபாய். அதில் பாதியை வாடகைக்காகச் செலவழித்தார். பாதியை வீட்டுச் செலவுகளுக்காகச் செலவழித்தார்.

“எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. நான், என்னுடைய சேமிப்புப் பணத்தில் ஒரு மொபட் வாங்கியபோது, உற்சாகத்துடன், என் தந்தையை அழைத்தேன்,” என்று நினைவு கூறுகிறார். 

சில மாதங்கள் பணியாற்றியபின்னர், சொந்தமாக ஒரு சலூன் திறந்தால் நன்றாக இருக்கும் என்று உணரத் தொடங்கினார். ஒரு தோழியுடன் இணைந்து சலூன் தொடங்குவது என்று முடிவு செய்தார். தன் பெயரில் சலூன் தொடங்க வேண்டும் என்பதுதான் தோழியின் நிபந்தனையாக இருந்தது.

“அந்த நேரத்தில், என்னுடைய தந்தையிடம் இருந்து 7 லட்சம் ரூபாய் கடன் வாங்கினேன். என்னுடைய முதல் சலூன் 1990-ல் தொடங்கப்பட்டது,” என்று நினைவுகூர்கிறார் அம்பிகா.

ஏழு ஆண்டுகள் கழித்து கணக்கில் நடைபெற்ற குளறுபடிகளைக் கவனித்தார். அவருடைய நண்பருடன் பிரச்னை ஏற்பட்டது. “என்னுடைய பங்குதாரர் உறவை முறிப்பது என்று தீர்மானித்தேன். எனினும், என்னுடைய ஆரம்ப முதலீடு 7 லட்சம் ரூபாய்கூட எனக்குத் திரும்பக் கிடைக்கவில்லை,” என்கிறார் அம்பிகா. எதுவும் இல்லாமல் அந்த நிறுவனத்தை விட்டு விலகினார். பூஜ்யத்தில் இருந்து திரும்பவும் தொடங்கினார்.

இன்னொரு நண்பர் அவரைக் காப்பாற்ற வந்தார். ஹேமந்த் திரிவேதி என்ற ஃபேஷன் டிசைனர், அம்பிகாவின் நண்பர் மட்டும் இன்றி, ஒரு காட்ஃபாதராகவும் இருந்தார். அவருக்கு ஒரு தூண்போல உதவி செய்தார்.

https://www.theweekendleader.com/admin/upload/12-03-18-11am5.jpg

தோல்விகளில் இருந்து கற்றுக் கொண்ட அம்பிகா, சலூன்களின் எண்ணிக்கையைக் குறைத்தார். 12 சலூன்களில் இருந்து இரண்டு சலூன்களை மட்டும் டெல்லியில் அவர் நடத்தி வருகிறார்.


“அந்த நாட்களில் மும்பைக்கும் டெல்லிக்கும் இடையேயான இடைவெளி மிகவும் அதிகம். டெல்லியில் ஏதாவது ஒரு நிகழ்வு நடந்தால், மும்பையில் இருக்கும் டிசைனர்கள், தங்களுடைய சொந்த ஹேர் டிரஸர்கள், மேக்கப் கலைஞர்களுடன் வந்து விடுவார்கள்.  இது போன்ற ஒரு நிகழ்வில், ஹேமந்த் திரிவேதி என்னை ஹேர் ஸ்டைல் செய்யும்படியும், மேக் அப் செய்யும்படியும் கூறினார்," என்று விவரிக்கிறார் அம்பிகா. “அதன் பின்னர் ஐஸ்வர்யா ராய் நடித்த தால் (Taal) என்ற திரைப்படத்துக்கு நாங்கள் இருவரும்  இணைந்து பணியாற்றினோம். சர்வதேச இந்திய ஃபிலிம் அகடாமியின் சிறந்த மேக்-அப் விருது பெற்றேன். இதுதான் என்னுடைய முதல் விருது.”

இதற்கிடையில் 1996-ல் மீண்டும் ஒரு நண்பர் மீது நம்பிக்கை வைத்தார். அவருடன் இணைந்து டெல்லியில் ஒரு சலூன் திறந்தார். ஆனால், அவரும் அவரை ஏமாற்றி விட்டார். “ஒரு நாள், நான் 22 பேருக்கு மணமகளுக்கான மேக் அப் செய்தேன். அந்த நாள் என் பிறந்த நாள் என்பதால், எனக்குத் தெளிவாக நினைவு இருக்கிறது. ஆனால், நான் இரண்டு மட்டும் செய்ததாகக் கணக்கில் பதிவாகி இருந்தது,” என்கிறார் அம்பிகா. “அந்த அளவுக்கு நான் ஏமாற்றப்பட்டேன்.”

2008-ம் ஆண்டு இன்னொரு லோன் வாங்கி, அம்பிகா பிள்ளை என்ற தம்முடைய சொந்தப் பெயரிலேயே ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார். இப்போது அந்த பிராண்ட் மிகவும் புகழ்பெற்றுள்ளது. இந்த முறை கணக்குகளை கண்காணிக்கும் பாதுகாப்பான ஒரு சாப்ட்வேர் முறையை அவர் கட்டமைத்தார். சில ஆண்டுகளில், டெல்லியில் மட்டும் 12 கிளைகளைத் திறந்தார்.

ஒரு ஆண்டுக்கு முன்பு, மூலிகைப் பொருட்களைக் கொண்ட பல தயாரிப்புகளை காய்த்ரா (Kaytra) என்ற பெயரின்கீழ் அறிமுகப்படுத்தினார். “இப்போது முடியைப் பாதுகாக்கும் பொருட்கள் கேரளா முழுவதும் கிடைக்கச் செய்துள்ளோம். மத்திய கிழக்கு நாடுகளுக்கு  இதனை விரிவாக்கம் செய்வது என்று திட்டமிட்டிருக்கிறோம். அதே போல உடலின் தோலைப் பாதுகாக்கும் பொருட்களையும் கொண்டு வருவது என்று திட்டமிட்டிருக்கிறோம்,” என்கிறார் அம்பிகா.

ஒரு காலகட்டத்தில், காலை முதல் இரவு வரை சுறுசுறுப்பாகப் பணியாற்றினார். இப்போது அவர் மெதுவாகப் பணியாற்றுகிறார். “என்னுடைய வாழ்க்கை முழுவதும் கடினமாக உழைத்தேன். இதனால், நான் கட்டைவிரல் மற்றும் முழங்கால் காயங்களால் பாதிக்கப்பட்டேன்,” என்று விவரிக்கிறார் அம்பிகா. “இப்போது என்னுடைய உடல் பலவீனம் காரணமாக அதிக நேரம் வேலை செய்ய முடியவில்லை.12 மணி முதல் 5 மணி வரைதான் நான் பணியாற்றுகிறேன்.” அவர் டெல்லியில் உள்ள பெரும்பாலான சலூன்களை மூடிவிட்டார். அதில் இரண்டு மட்டுமே இப்போது திறந்திருக்கிறது.

https://www.theweekendleader.com/admin/upload/12-03-18-11am4.jpg

அம்பிகா உடன் 150 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். படத்தில் அவருடைய சில ஊழியர்களுடன்.


ஆனால், சாதனைகள் செய்யும் உத்வேகத்தை அவர் இழக்கவில்லை. எதிர்கால திட்டங்களை நம்மிடம் அவர் பகிர்ந்து கொள்கிறார். “இன்னும் சில ஆண்டுகளில் நான் ஓய்வு பெற விரும்புகிறேன். என்னுடைய சொந்த ரெஸ்டாரெண்ட்டை தொடங்க உள்ளேன். பயணம் செய்யப்போகிறேன். புத்தகங்கள் எழுதப் போகிறேன்.  நேரமில்லாததால் நான் செய்யாமல் விட்ட பலவற்றைச் செய்யப்போகிறேன்.”

அவருடைய மகள் கவிதா, சமீபத்தில் அவருடைய நிறுவனத்தில் பங்குதாரராக இணைந்திருக்கிறார். பொதுமேலாளராகவும் இருக்கிறார். 

இன்றைக்கு, அம்பிகாவை, பெரும் அளவிலான ரசிகர்கள் பின் தொடர்கின்றனர். ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்புகள், உத்திகளை அவர் பகிர்ந்து கொள்கிறார். அதனால், 8.33 லட்சம் பேர் அவரைப் பின் தொடர்கின்றனர். அவர் பல விருதுகளைப் பெற்றுள்ளார். 2007-ம் ஆண்டில்  பாரத் நிர்மான் சூப்பர் சாதனையாளர் விருது, 2009-ம் ஆண்டுக்கான சிறந்த முடி அலங்காரம் மற்றும் மேக்-அப்-க்கான காஸ்மோபாலிட்டன் ஃபன் ஃபியர்லெஸ் பெண்கள் விருது, 2011-ம் ஆண்டுக்கான  வோக் சிறந்த மேக்அப் கலைஞருக்கான விருது (Vogue Best Makeup Artist Award)ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.

“என்னுடைய தொழில் முறையில், சொந்த வாழ்க்கையில் பெரும்பாலானோர் என்னை ஏமாற்றி உள்ளனர்.  ஆனால், அவர்கள் என்னிடம் இருந்து இந்த மூன்றையும் எடுத்துச் செல்ல முடியவில்லை. என்னுடைய திறமை, என்னுடைய பெயர், என்னுடைய மகள்,” என்கிறார் அம்பிகா


 
 
 
 
 

அதிகம் படித்தவை

  • Dustless paint! an innovative product

    ஆராய்ச்சி தந்த வெற்றி

    அதுல் அவரது வீட்டுக்கு பெயிண்ட் அடிக்கும் போது, தூசி பரவியதால், அவரது குழந்தைகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அந்தத் தருணத்தில்தான், தூசியில்லாத பெயிண்ட் கண்டுபிடிக்க வேண்டும் என்று அவர் திட்டமிட்டார். இப்போது அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். தேவன் லாட் எழுதும் கட்டுரை.

  • Best seller

    கூச்சத்தை வென்றவர்

    டெல்லியைச் சேர்ந்த பாவனா ஜூனேஜா சிறுவயதில் மிகவும் கூச்சம் சுபாவம் கொண்டவராக இருந்தவர். அவருடைய தாயின் வழிகாட்டலில் சிறந்த விற்பனையாளராக மாறி சாதனை புரிந்தார். இன்றைக்கு அவர் ரூ.487.5 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் ஈட்டும் வணிக சாம்ராஜ்யத்தையே உருவாக்கி இருக்கிறார். சோஃபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை.

  • His success story which reads like a film script aptly started in a cinema hall

    எளிமையான கோடீசுவரர்

    திரையரங்கில் காண்டீனில் வேலை பார்த்தவர் அவர். அன்று அவருக்கு மாதச் சம்பளம் 90 ரூபாய் மட்டுமே. இன்று அவர் 1800 கோடி ருபாய் நிறுவனம் ஒன்றின் உரிமையாளர். தன் வாழ்க்கை வெற்றிக்கதையை மசுமா பர்மால் ஜாரிவாலிடம் சொல்கிறார்

  • Success Story of Detox Juice maker

    இளமையில் புதுமை

    சிந்தூரா போரா படித்தது கம்ப்யூட்டர் நெட் ஒர்க். ஆனால், உடல் நலன், சுகாதாரம் குறித்த ஆர்வத்தின் காரணமாக உடல் நஞ்சு நீக்கும் பழச்சாறு வகைகளை தயாரிப்பில் இறங்கினார். புதுமையும், பொறுமையும் அவருக்கு வெற்றி தந்தது. பிரனிதா ஜோனலாகெட்டா எழுதும் கட்டுரை

  • Success story of a pen manufacturer in Kolkata who started from scratch

    பேனாவில் கொட்டிய கோடிகள்

    350 கோடி ரூபாய் பேனா நிறுவனம் ஒன்றின் தலைவர் சுராஜ்மல் ஜலான், ராஜஸ்தானைச் சேர்ந்தவர். கொல்கத்தாவுக்கு வெறுங்கையுடன் மூன்றாம் வகுப்பு ரயில் பெட்டியில் வந்த இவர், இன்று மிகப்பெரிய தொழில் நிறுவனத்தைக் கட்டி ஆளுகிறார். ஜி. சிங் எழுதும் கட்டுரை

  • Selling comfort

    கம்பளிகளின் காதலன்!

    பெட்ஷீட்கள் மீது விருப்பம் கொண்ட புனித் பட்னி, அதையே வாய்ப்பாக மாற்றி தொழிலில் ஈடுபட ஆரம்பித்தார். இன்றைக்கு ஆண்டுக்கு ரூ. 9.25 கோடி வருவாய் ஈட்டும் இரண்டு நிறுவனங்களை கட்டமைத்திருக்கிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை