அன்று தெலுங்கானாவில் 5 ரூபாய் தினக்கூலி! இன்று அமெரிக்காவில் கோடீஸ்வரி! ஒரு பெண்ணின் மாபெரும் வெற்றிக்கதை!
09-Dec-2023
By அஜுலி துல்ஸயன்
ஹைதராபாத்
வெறுங்காலோடு பள்ளிக்கு நடந்து சென்ற பெண் ஜோதி ரெட்டி இன்று மெர்சிடிஸ் பென்ஸ் கார் வைத்துள்ளார். 500 சேலைகளும் 30 குளிர்கண்ணாடிகளும் அவரிடம் உள்ளனர். இவையெல்லாம் இன்று ஜோதி ரெட்டிக்கு சாதாரண விஷயங்கள், ஏனெனில் அமெரிக்காவில் பீனிக்ஸில் உள்ள அவரது நிறுவனமான கீ சாப்ட்வேர் சொல்யூஷன்ஸ் ஆண்டுக்கு 15 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு தொழில் செய்கிறது!
47 வயதாகும் ஜோதி ரெட்டி செய்திருப்பது மிகப்பெரிய சாதனை தெலுங்கானாவில் வாரங்கல் மாவட்டத்தில் நரசிம்முல கூடம் என்ற கிராமத்தில் வெங்கட் ரெட்டி என்ற விவசாயிக்கு ஐந்து குழந்தைகளில் இரண்டாவதாகப் பிறந்தவர் ஜோதி.
|
அனாதை இல்லத்தில் வளர்ந்தவரான ஜோதி ரெட்டி, கீ சாப்ட்வேர் சொல்யூஷன்ஸ் என்ற அமெரிக்க நிறுவனத்தின் உரிமையாளர். அது 15 மில்லியன் டாலர் வர்த்தகம் செய்யும் நிறுவனம் (படங்கள்: பி அனில்குமார், இடம் உதவி: டான்சென், ஓரிஸ் குழுமம்)
|
அந்த குடும்பத்துக்கு ஒவ்வொருநாளும் சிரமத்திலேயே கழிந்தது. ஜோதிக்கு 9 வயது ஆனபோது அவரது தங்கையுடன் சேர்த்து இரு பிள்ளைகளையும் வாரங்கல் அருகே ஓர் அனாதை இல்லத்தில் அவரது அப்பா சேர்த்தார். தங்க இடமும் மூன்றுவேளை சாப்பாடும் கிடைக்குமே என்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு. ஜோதியின் தங்கையால் அங்கு இருக்கமுடியாமல் திரும்பிச் சென்றுவிட, ஜோதி மற்றும் அங்கே இருந்தார். அம்மா இல்லை என்று சொல்லித்தான் அங்கே தங்க வைக்கப்பட்டிருந்தார் அவர்.
“அது மோசமான காலகட்டம்,” என்கிற ஜோதி அங்கு ஐந்திலிருந்து பத்தாம் வகுப்பு வரை படித்தார்.
“அங்கு கடுமையான தண்ணீர்ப்பஞ்சம். குழாய்களே இருக்காது. மணிக்கணக்கில் நின்றால்தான் ஒரு வாளி தண்ணீர் கிடைக்கும். பல முறை அம்மாவை நினைத்து அழுதுள்ளேன், ஆனால் அம்மா இல்லை என்று நடிக்கவேறு செய்யவேண்டும்.”
இதெல்லாம் அவர் அனுபவித்த சிறு சிரமங்களே. “புழுக்கள் நெளியும் உணவுதான் வழங்கப்பட்டது. வெறுங்காலுடன் இரண்டரை கிமீ நடந்து அரசுப்பள்ளிக்குச் செல்வேன். வழியில் செயிண்ட் ஜோசப் பள்ளி வரும். அதில் உள்ள குழந்தைகளைக் கண்டு பொறாமையாக இருக்கும். அவர்கள் புத்தாடையும் புதுக்காலணிகளும் அணிந்திருப்பர்,”
பள்ளிகூடத்தில் ஜோதி பின் வரிசையில் உட்கார்ந்திருப்பார் அவரது கிழிந்த ஆடைகளும், தோற்றக் குறைபாடும் தாழ்வு மனப்பான்மையை அளித்தன.
அப்துல்கலாம் ஒருமுறை சொன்னார். “ நாட்டின் சிறந்த மூளைகள் வகுப்பறையின் கடைசி பெஞ்சுகளில்கூடக் காணக்கிடைக்கலாம்.” பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்து இதை நிரூபித்தார் ஜோதி
படிக்கும்போதே தையல், சலவை, துணி துவைத்தல், பாடம் கற்பித்தல் போன்றவற்றையும் அவர் பயின்றார். தங்கள் இல்லத்தின் பொறுப்பாளருக்கு இந்த வேலைகளில் உதவியும் செய்தார். நல்ல வாழ்க்கைக்கு ஒரு நல்ல வேலை தேவை என்று விரைவில் உணர்ந்தார்.
|
ஜோதி ரெட்டி தானாக வளர்ந்தவர். அவரது கதை அனைவருக்கும் வழிகாட்டி
|
ஆந்திர பாலிகா கல்லூரியில் அடுத்ததாக சேர்ந்து படிக்க அவர் 110 ரூபாய் கேட்டு விடுதிப்பொறுப்பாளரிடம் கெஞ்சினார். ஆனால் அவரது அப்பா அந்த விண்ணப்படிவத்தைக் கிழித்து எறிந்தார்.
விரைவில் 16 வயதிலேயே ஜோதியை அவரது அம்மாவின் தூரத்து உறவினரான சாமி ரெட்டி என்பவருக்கு மணம் முடித்தார்கள். சாமிக்கு அரை ஏக்கர் கூட சொந்த நிலம் இல்லை. ஜோதி கூலி வேலைக்குச் செல்லவேண்டி இருந்தது 5 ரூபாய் தினக்கூலி. பத்துமணி நேர வேலை!
இடையில் அவருக்கு பீனா, பிந்து என இரு பெண்குழந்தைகள். திருமணம் ஆன மூன்று ஆண்டுகளில் நேரு யுவகேந்திராவில் 120 ரூ சம்பளத்துக்கு ஆசிரியையாக வேலை செய்ய ஆரம்பித்தார். 1988-1989 –ல் தேசிய சேவைத் தொண்டராக 190 ரூபாய் மதிப்பூதியத்துக்கு வேலைபார்த்தார். இரவுகளில் ஒரு துணிக்கு 1 ரூபாய் என்ற கூலிக்கு பாவாடைகள் தைத்தார். மேலும் ஓராண்டு கழித்து, வாரங்கல்லில் ஜனசிக்ஷா நிலையத்தில் நூலகராக 120 ரூபாய் சம்பளத்துக்கு அமர்ந்தார்.
|
ஜோதி ஏறிவந்த படிகள் எளிதானவை அல்ல. ஜோதிக்கு அதுகுறித்து வருத்தங்கள் இல்லை
|
1994-ல் அவர் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் பிஏ பட்டம் பெற்றார். 97-ல் காகதிய பல்கலையில் முதுகலைப்பட்டமும் முடித்தார்.
இந்த பட்டங்களை முடித்தபின்னர் அவர் அரசு சிறப்பு ஆசிரியையாக 400 ரூ சம்பளத்தில் வேலைக்கு அமரமுடிந்தது. சின்ன வாடகை அறையில் வசித்தவண்ணம் குழந்தைகளையும் பார்த்துக்கொண்டு வேலைக்கு 2 மணி நேரம் பயணமும் செய்தார். இந்த நேரத்திலும்கூட தன்னுடன் பயணிக்கும் சக பயணிகளிடம் சேலை விற்றார். ஒரு சேலைக்கு 20 ரூ லாபத்தில் தினமும் 4 சேலைகள் விற்றார்.
அவருக்கு பின்னர் முதுகலைப் பட்டத்தை வைத்து அரசு ஆசிரியராக 6000 ரூ சம்பளத்தில் வேலை கிடைத்தது. ஆனாலும் தொடர்ந்து கடினமாக உழைப்பதையும் சேமிப்பதையும் நிறுத்தவில்லை.
ஒரு நாள் அனைத்தும் மாறிவிட்டன.
|
அமெரிக்காவில் இவரது நிறுவனத்தில் 100 பேர் வேலை செய்கிறார்கள்
|
அமெரிக்காவில் இருந்து வந்த தாய் வழி உறவினர் ஒருவர் அவரைச் சந்தித்தார். அந்த பெண்மணியைக் கண்டு ஜோதி அசந்தார். உயர் ரக கார், குளிர்கண்ணாடி, தன்னம்பிக்கை எல்லாம் கவர்ந்தன. அமெரிக்காவில் பணிபுரியும் கனவு அவருக்குள் முளை விட்டது. அதை வேகமாகத் துரத்தத்தொடங்கினார். அமெரிக்காவில் பணிபுரியத்தகுதி பெற கணினி இயலில் முதுகலைப் பட்டயம் பெற்றார்.
மே,2, 2000த்தில் கலிபோர்னியாவில் நிறுவனம் நடத்தும் நண்பர் ஒருவர் வேலைக்கான கடிதத்தை அனுப்பினார். பி 1 விசாவில் ஜோதி அமெரிக்கா பறந்தார். ஒரு மிஷனரி விடுதியில் தன் இரு மகள்களையும் தங்க வைத்துவிட்டு அவர் பறந்திருந்தார்.
பெரியதோ சிறியதோ என்று பார்க்காமல் எல்லா வேலைகளையும் எடுத்துச் செய்தார். கேஸ் நிலையப் பணி, குழந்தைகள் பராமரிப்பு, வீடியோ கடை வேலை, பணிக்கு ஆள் எடுக்கும் வேலை என்று எல்லாம் ஒன்றரை ஆண்டு பணிபுரிந்து மகள்களைப் பார்க்க இந்தியா திரும்பினார்.
இந்த பயணத்தின் போது அவர் ஒரு மதிப்பிற்குரிய ஆன்மிக மனிதரைச் சந்தித்தார். அவர் ஜோதி சொந்தமாகத் தொழில் செய்யப் பிறந்தவர் என்றார். மெக்சிகோவில் அவர் அமெரிக்காவின் பீனிக்ஸ் செல்வதற்கான விசா பெறுவதற்காகக் காத்திருந்தபோது இந்த எண்ணமே மனதில் ஓடியது.
|
அக்டோபர் 2001-ல் தன் சேமிப்பான 40,000 அமெரிக்க டாலர்களைக் கொண்டு ஜோதி ரெட்டி சொந்த நிறுவனத்தைத் தொடங்கினார்.
|
அமெரிக்காவுக்கு விசா தேவைப்படுபவர்களுக்காக ஒரு கன்சல்டிங் நிறுவனம் தொடங்கலாம் என்று அவருக்கு மனதில் உதித்தது.
அவரது முதல் தொழில் இப்படித் தொடங்கிற்று. தன் சேமிப்பான 40,000 அமெரிக்க டாலர்களைப் போட்டு விஜயதசமி நன்னாளில் கீ சாப்ட்வேர் சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனத்தை பீனிக்ஸில் தொடங்கினார். அது அக்டோபர் 22, 2001. வேலைக்கு ஆள் தருவது, மென்பொருள் தயாரிப்பு ஆகியவற்றில் நிறுவனம் இறங்கியது.
அவரது தொழில்ப் பயணம் தொடங்கியது. தொழிலை விரிவாக்க முடிவு செய்த அவர் தன் உறவினரையும் பங்குதாரர் ஆக சேர்த்துக்கொண்டார். தன் மகள்கள் இருவரையும் அமெரிக்காவுக்கு வரவழைத்துக்கொண்டார். இருவருக்கும் இப்போது திருமணம் ஆகி, மென்பொருள் துறையில் பணியாற்றுகின்றனர். முழு குடும்பமுமே ஒரே இல்லத்தில் இப்போது வசிக்கிறார்கள்.
|
ஜோதி ரெட்டிக்கு குளிர்கண்ணாடிகள் அணிய மிகவும் விருப்பம்
|
கீ சாப்ட்வேர் சொல்யூஷன்ஸ் ஜோதியின் தலைமையில் சிறப்பாக செயல்பட்டது. முதலாண்டு 1,68000 டாலர்கள் லாபம் கிடைத்தது. மூன்றாண்டுகள் கழித்து பத்துலட்சம் டாலர்களைத் தாண்டியது.
ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக செயல்பட்டார். சமீபத்தைய அவரது நிறுவனத்தின் வர்த்தகம் 15 மில்லியன் அமெரிக்க டாலர்கள். 100 பேர் வேலை செய்கிறார்கள். ஜோதிக்கு இன்று அமெரிக்காவில் நான்கு வீடுகளும் ஹைதராபாத்தில் ஒரு மாளிகையும் உள்ளன.
எங்கிருந்து வந்தோம் என்பதை அவர் மறக்கவில்லை. திக்கற்றவர்களுக்கு சேவை செய்வதை அவர் விருப்பமாகக் கொண்டுள்ளார். கடந்த ஆண்டு ஹனம்கொண்டாவில் மாற்றுத்திறனாளி ஜோடிக்கு அவர் செய்துவைத்த திருமணம் பலரது கவனத்தை ஈர்த்தது.
|
வறுமையில் வாடும் இந்தியர்களுக்காக ஜோதி ரெட்டி உதவிகள் செய்ய திட்டங்கள் வைத்துள்ளார்
|
“இதுபோன்று மேலும் 99 திருமணங்கள் நடத்தி வைக்க உறுதி பூண்டுள்ளேன்,” என்கிறார் ஜோதி
ஜோதியின் வெற்றிக்கதை பலருக்கு உந்துதலை அளிக்கிறது. 2013-ல் அவரது சுயசரிதை தெலுங்கு மொழியில் எமெஸ்கோ பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. "என்னிடம் இப்போது எல்லாம் இருக்கிறது. நான் எதிர்கொண்ட தடைகளுக்கு நன்றி சொல்கிறேன். அவற்றின் மூலமே நான் இப்போதிருக்கும் நிலையை அடைந்தேன்,” முடிக்கிறார் ஜோதி.
அதிகம் படித்தவை
-
விளம்பரங்கள் தந்த வெற்றி
நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து, மாதம் 70 ஆயிரம் ரூபாய் சம்பளத்துடன் பணியில் இருந்த தீபக், தமது வேலையை ராஜினாமா செய்து விட்டு டிஜிட்டல் விளம்பர நிறுவனம் தொடங்கினார். அவரது நிறுவனம் இந்த நிதியாண்டில் 10 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட திட்டமிட்டுள்ளது. ஜி.சிங் எழுதும் கட்டுரை
-
டீல்..மச்சி டீல்!
பழைய செல்போன்களை வாங்கிப் பழுது நீக்கி விற்கும் தொழிலில் பட்டையைக் கிளப்புகிறார் யுவராஜ் அமன் சிங். டெல்லியில் சாலையோர மேசையில் போன்களைப் போட்டு விற்றவர் இன்று 150 கோடி ரூபாய்க்கு விற்பனையை எட்டிய வெற்றிக்கதையை விளக்குகிறார் நரேந்திரா கௌசிக்
-
பூட்டிக்கிடக்கும் வீடுகளும் பணம் தரும்
பணக்காரர்களில் பெரும்பாலானோர் பிரபலமான சுற்றுலாதலங்களில், வீடுகள் கட்டிப்போட்டிருப்பார்கள். பெரும்பாலும் பூட்டியே இருக்கும் இந்த வீடுகளை வாடகைக்கு விட்டு வருவாய் ஈட்டலாம் என்று புதிய யோசனையைத் தந்து 52 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறார் ரோஷன். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை
-
கோடிகளுக்கு ஒரு டாக்ஸி பயணம்!
சிறுவனாக இருக்கும்போது பசியே பெரிய எதிரி. பிச்சை எடுத்து வாழ்ந்தார். மூன்று ஆண்டுகள் ஓர் அலுவலக துப்புரவுத்தொழிலாளியாகவும் வேலை பார்த்தவர். இப்போது 40 கோடிக்கு டாக்ஸி தொழிலில் வர்த்தகம் செய்யும் அந்த மனிதரின் வாழ்க்கையை உஷா பிரசாத் விவரிக்கிறார்
-
ஒலிம்பிக் தமிழச்சி!
மதுரை மாவட்டத்தின் சின்னஞ்சிறிய கிராமமான சக்கிமங்கலத்தை சேர்ந்தவர் ரேவதி. பள்ளி அளவிலான தடகளப் போட்டிகளில் விளையாட்டு போக்கில் பங்கேற்றார். அவருக்குள் மறைந்திருந்த திறமையை கண்டறிந்த பயிற்சியாளர் கண்ணன் ரேவதியை ஒலிம்பிக் தகுதி வரை உயர்த்தியிருக்கிறார். ரேவதியின் வெற்றிக்கதை.
-
கூச்சத்தை வென்றவர்
டெல்லியைச் சேர்ந்த பாவனா ஜூனேஜா சிறுவயதில் மிகவும் கூச்சம் சுபாவம் கொண்டவராக இருந்தவர். அவருடைய தாயின் வழிகாட்டலில் சிறந்த விற்பனையாளராக மாறி சாதனை புரிந்தார். இன்றைக்கு அவர் ரூ.487.5 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் ஈட்டும் வணிக சாம்ராஜ்யத்தையே உருவாக்கி இருக்கிறார். சோஃபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை.