திரைப்படம் போலிருக்கும் இந்த வெற்றிக்கதை ஆரம்பித்ததுகூட ஒரு திரையரங்கில்தான்!
11-Sep-2024
By மசுமா பர்மால் ஜாரிவால்
ராஜ்கோட்
தன் இல்லத்தில் பத்தாயிரம் ரூபாய் முதலீட்டில் உருளைக்கிழக்கு வறுவல்கள் செய்யும் தொழிலை சின்ன அளவில் 1982ல் ஆரம்பித்தவர் சந்துபாய் விரானி. இப்போது அவருக்கு 60 வயது. அவர் தொடங்கிய உருளைக்கிழங்கு வறுவல் நிறுவனம் இன்று பாலாஜி வேஃபர்ஸ் பிரைவேட் லிமிடட் என்ற பெயரில் வளர்ந்துள்ளது. இதன் ஆண்டு விற்பனை எவ்வளவு தெரியுமா?1,800 கோடிகள்!
பாலாஜி வேஃபர்ஸ் மிகப்பெரிய உள்நாட்டு வறுவல் பிராண்ட். நாட்டின் உருளைக்கிழங்கு சிப்ஸ் சந்தையில் இரண்டாவது பெரிய நிறுவனம். ஆனால் இது மிகச்சிறிய அளவில் தொடங்கி, ஆலமரமாகத் தழைத்த வெற்றிக்கதை.
|
எளிமையான ஆரம்பம்: பாலாஜி வேஃஃபர்ஸ் நிறுவனர் மற்றும் இயக்குநரான சந்துபாய் விரானி, உருளைக் கிழங்கு சிப்ஸ் நிறுவனம் தொடங்குவதற்கு முன்பு திரையரங்க உணவகத்தில் வேலைபார்த்தவர். |
குஜராத் , மகாராஷ்டிரா, கோவா, ராஜஸ்தான்,மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் கவனம் செலுத்தினாலும் கூட, நாட்டில் அனைவருக்கும் தெரிந்த பிராண்டாக பாலாஜி வேஃபர்ஸ் உள்ளது.
ராஜ்கோட்டில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ள வஜ்டி என்ற கிராமத்தில் உள்ளது பாலாஜி வேஃபர்ஸ் நிறுவனம். இதற்குள் நுழைந்ததும் ஒரு சிறு பாலாஜி கோவில் ஐம்பது ஏக்கர் ஆலையின் முன்னால் வரவேற்கிறது. இதன் உரிமையாளருக்கு பிடித்தமான கடவுள் பாலாஜி. அதனால்தான் நிறுவனத்துக்கும் இந்த பெயர்.
இந்த ஆலையில் 2000 மரங்களும் தாவரங்களும் உள்ளன. நூறு பசுக்கள், நீர் மறுசுழற்சி ஆலை, சான எரிவாயு அமைப்பு ஆகியவையும் உள்ளன. ஆனால் நிறுவனத்தின் பெயரோ, ப்ராண்ட் ஓவியமோ காணப்படவில்லை. ஒரு மணி நேரத்துக்கு 5000 கிலோ உருளைக்கிழங்குகளை சிப்ஸ் ஆக்கக்கூடிய வல்லமை படைத்த பெரிய ஆலை இது. 2003 ல் தொடங்கப்பட்டது.
சந்துபாயின் தந்தை பொபட் ராம்ஜிபாய் விரானி ஒரு எளிய விவசாயி. 1972-ல் தன்னுடைய மூன்று மகன்களான மேக்ஜிபாய், பிக்குபாய், மற்றும் சந்துபாய் ஆகியோருக்கு 20,000 ரூபாயை புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுமாறு அளித்தார்.
ஜாம்நகர் மாவட்டத்தில் துண்டோராஜி என்ற இடத்தில் அவர்கள் குடும்பம் வசித்தது. சந்துபாயிக்கு அப்போது வயது 15 தான். அவருடைய மூத்த சகோதரர்கள் விவசாய கருவிகள், உரங்கள் வாங்கி செலவழித்தனர். அதில் நஷ்டமே ஏற்பட்டது. பருவ மழை பொய்த்ததால், வறட்சி ஏற்பட்டு மூன்று சகோதரர்களும் 1974-ல் ராஜ்கோட்டுக்கு இடம்பெயர்ந்தனர். இளைய சகோதரன் கானுபாய் பெற்றோருடனும் இரு சகோதரிகளுடனும் கிராமத்தில் தங்கிவிட்டான்.
பத்தாம் வகுப்பு மட்டுமே படித்திருந்த சந்துபாய், அஸ்ட்ரான் திரை அரங்கில் வேலைக்குச் சேர்ந்தார். காண்டீனில் வேலை. அவ்வப்போது போஸ்டர் ஒட்டுவது, கதவு திறப்பது, வாடிக்கையாளர்களை அழைத்துச் செல்வது போன்ற வேலைகள். மாதசம்பளம் 90 ரூபாய்.
‘’இரவுகளில் படம் முடிந்ததும் கிழிந்த சீட்களை தைப்பேன். சோராபாரி (குஜராத்தி உணவு)யும் சட்னியும் ஒரு ப்ளேட் கிடைக்கும்,’’ என்கிறார் சந்துபாய். “வாடகை வீட்டில் தங்கி இருந்தோம். ஒருநாள் இரவில் தப்பி ஓடினோம். காரணம் எங்களிடம் வாடகைக் கொடுக்க 50 ரூபாய் இல்லை’’(அப்புறம் கொடுத்துவிட்டார்).
சந்துபாய் ஆர்வமுடன் வேலை செய்வார். ஒரு ஆண்டு கழித்து சினிமா காண்டீன் உரிமையாளர் 1000 ரூபாய் வாடகையில் இடம் கொடுத்தார். சகோதரர்கள் பல பொருட்களை விற்றனர். அதில் உருளை சிப்ஸும் அடங்கும். அவற்றை ஒருவர் சப்ளை செய்தார். ஆனால் அவர் எப்போதும் தாமதமாகத்தான் அவற்றை அளிப்பார். சினிமா கொட்டகையில் அது வியாபாரத்தைப் பாதித்தது. மூன்று பேரை மாற்றிப்பார்த்துவிட்டு நாமே தயாரிக்கலாமே என்ற முடிவுக்கு அவர்கள் வந்தனர்.
|
பத்தாம் வகுப்பு மட்டுமே படித்த சந்துபாய், மேலாண்மைப் பள்ளிகளில் விரும்பி அழைக்கப்படும் பேச்சாளர். |
1982-முழுக்குடும்பமும் ராஜ்கோட் இடம் பெயர்ந்தது. ராம்ஜிபாய் பெரிய வீட்டை வாங்கினார். அங்கிருந்து காண்டீனுக்கு மசாலா சாண்ட்விச்சுகள் செய்தனர். நன்றாக விற்பனை ஆனாலும் அது விரைவில் கெட்டுப்போய்விடும் பொருள். ஆனால் சிப்ஸ் அப்படி அல்ல என்பதால் சந்துபாய் இதில் நல்ல எதிர்காலம் இருக்கும் என்று கணித்தார்.
காண்டீன் வேலை முடிந்ததும் 10000 ரூபாய் செலவில் ஒரு கொட்டகையை வீட்டருகே போட்டு சிப்ஸ் ரகங்களைச் செய்துபார்த்தார். அவரே ஒரு இயந்திரத்தை 5000 ரூபாய் செலவழித்து செய்வித்தார்.
சிப்ஸ்களை வறுக்க போட்ட ஆள் பலநாள் வேலைக்கு வரமாட்டார். “அப்போதெல்லாம் இரவு முழுக்க நானே வறுப்பேன். ஆரம்பத்தில் நிறைய வீணானது. ஆனாலும் நான் நம்பிக்கை இழக்கவில்லை. என்னைத் தவிர இன்று வரைக்கும் எங்கள் குடும்பத்தில் யாருக்கும் சிப்ஸ் வறுக்கத் தெரியாது,’’ என்கிறார் சந்துபாய்.
அவருக்கு இப்போது மூன்று இடங்களில் காண்டீன்கள் இருந்தன. ஆஸ்ட்ரான் சினிமாவில் இரண்டும் கொடெச்சா மகளிர் பள்ளியில் ஒன்றும். 25-30 கடைகளுக்கும் வறுவல்கள் சப்ளை செய்தார். 1984-ல் தங்கள் வறுவல்களுக்கு ஒரு பிராண்ட் பெயர் வைக்கத் தீர்மானித்து பாலாஜி என்று பெயர் சூட்டினார்கள்.
“கடைகளுக்கு பணம் வசூல் செய்யப்போகும்போது, நிறைய பேர் பாதி தின்ற பாக்கெட்டுகளை திருப்பிக் கொடுத்து கெட்டுப்போய்விட்டது என்பார்கள். கிழிந்த ரூபாய் நோட்டுகள் கொடுப்பார்கள். சிலர் பணம் கொடுத்தாச்சே என்று ஏமாற்றுவார்கள்,” அவர் நினைவு கூறுகிறார்.
|
பாலாஜியின் முழுவதும் தானியங்கி எந்திரங்களால் ஆன ஆலை 50 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. 2000 மரங்கள் அந்த வளாகத்தில் அமைந்துள்ளன |
ஆனால் சந்துபாய் கொஞ்சமும் கலங்காமல் நம்பிக்கையுடன் உழைத்தார். தரத்தில் சமரசம் செய்துகொள்ளவில்லை!
ராஜ்கோட்டில் கொஞ்சம் சேமிப்பு மற்றும் ஐம்பது லட்சம் வங்கிக்கடனுடன் ஒரு ஆலையை 1989-ல் சந்துபாய் தொடங்கினார். அப்போது அது குஜராத்தின் மிகப்பெரிய வறுவல் ஆலையாக அமைந்தது.
ஆனால் அதிர்ச்சி காத்திருந்தது. அது வேலை செய்யவில்லை. “அந்த கருவிகளின் பொறியாளர்கள் வருவார்கள். ஒவ்வொருமுறையும் எங்களுக்கு ஹோட்டல் பில்லே 50000 ஆகும்.’’ கடைசியில் அந்த இயந்திரங்களை இவர்களே ஆராய்ந்து சரி செய்துகொண்டார்கள். “இந்த சம்பவத்தால் நாங்களே பொறியாளர்கள் ஆனோம். ஒவ்வொரு கட்டத்திலும் நான் மேலும் வலுவானவன் ஆனேன். அடிப்படைப் பாடங்களைக் கற்றேன்,’’ என்கிறார் அவர்.
“ஆரம்பத்தில் மாதத்துக்கு 20,000 -30,000 ரூபாய் சம்பாதித்தோம்,” என ஆரம்பகட்ட வளர்ச்சிக் கதையைச் சொன்னார் அவர்.
1992 ல் தொழில் சூடுபிடித்தது.பாலாஜி வேஃபர்ஸ் பிரைவேட் லிமிடட் நிறுவனம் தொடங்கப்பட்டது. அதில் பிக்குபாய், சந்துபாய், கனுபாய்- மூன்று சகோதரர்களும் இயக்குநர்கள் ஆனார்கள்.
|
பாலாஜியில் வேலைபார்க்கும் 5000 பேரில் 50% பேர் மகளிர் |
அங்கிள் சிப்ஸ், சிம்பா, பின்னீஸ் போன்ற பிற சிப்ஸ் நிறுவனங்களுடன் கடுமையான போட்டியில் இறங்கினர். தரம், விநியோகம், விலை, சேவை ஆகியவற்றில் போட்டி.
“பெப்சிகோ போன்ற பெரு நிறுவனங்களை நாங்கள் எதிர்கொண்டோம். ஏனெனில் ஒரு இந்திய நிறுவனமாக விநியோகஸ்தர்களிடம் நல்லுறவைப் பேணமுடிந்தது. அவர்கள் எங்களிடம் நேரடியாகப் பேசுவார்கள். பன்னாட்டு நிறுவனங்களிடம் அது நடக்காது,’’ என்கிறார் சந்துபாய்.
நம்பிக்கையை உருவாக்குதல், தரம், சேவை, பணத்துக்கு மதிப்பு ஆகியவையே அவருடைய முக்கியச் சொற்கள். "இலக்கை எட்டுவதற்காக ஆட்களை நாங்கள் வேலைக்கு எடுப்பதில்லை. எங்கள் ஆட்கள் தரமான சேவையைத் தருவார்கள். மீதி தன்னால் நடக்கும்,” என்கிறார் அவர்.
பாலாஜி நிறுவனத்துக்கு இன்று நான்கு ஆலைகள் அமைந்துள்ளன. தினந்தோறும் 6.5 லட்சம் கிலோ உருளைக்கிழங்கை அவர்கள் சிப்ஸ் ஆக்கமுடியும். பத்துலட்சம் கிலோ நம்கீன் செய்ய முடியும். உப்பிட்ட ஸ்நாக்ஸ் வகைகளில் சுமார் 30 வகைகளை இவர்கள் தயாரிக்கிறார்கள்.
அதிகம் படித்தவை
-
தோல்வியில் இருந்து மீண்டெழுந்தார் !
கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த சரத் சோமன்னா, முதன் முதலில் செய்த கட்டுமான திட்டம் வெற்றி. ஆனால், அதனைத் தொடர்ந்து செய்த திட்டம் படு தோல்வி. ஆனால் மனம் தளராமல், அதில் இருந்து பாடம் கற்று இன்றைக்கு பெரும் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளராக உயர்ந்திருக்கிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை
-
இளம் சாதனையாளர்
பொறியியல் படித்திருந்தாலும் ஃபேஷன் துறை மீதுதான் நிதி யாதவுக்கு ஆர்வம். எனவே அந்த ஆர்வத்தின் அடிப்படையில் ஃபேஷன் தொழிலை தொடங்கி ஆண்டுக்கு ரூ.137 கோடி வருவாய் தரும் நிறுவனமாக கட்டமைத்துள்ளார். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை
-
குளிர்ச்சியான வெற்றி
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த நான்கு கிராமத்து இளைஞர்கள், தந்தையின் கைபிடித்து ஒரு சிறு நகருக்கு வந்தவர்கள். இவர்கள் ஒரு வெற்றிலை பாக்கு கடையில் இருந்து கோடிகளைக் குவிக்கும் ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனமாக மாறி இருக்கிறார்கள். பல ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வெற்றி பெற்றிருக்கும் இவர்களின் கதையை குருவிந்தர் சிங் எழுதுகிறார்.
-
மூங்கிலைப்போல் வலிமை
ஒரு சோபா செட் வாங்குவதற்கான பயணத்தில் அவர்கள் சென்றடைந்த இடம் திரிபுராவில் ஒரு கிராமம். அங்கேயே உருவாகிறது ஒரு தொழிலுக்கான யோசனை. மூங்கில் இல்லங்களை உருவாக்கும் பிராஷாந்த் லிங்கம், அருணா கப்பகாண்டுலா தம்பதி பற்றி அஜுலி துல்ஸயன் தரும் கட்டுரை
-
பண்ணையாளரான பொறியாளர்!
அமெரிக்காவில் இன்டெல் நிறுவனத்தில் வேலையை விட்டுவிட்டு இந்தியா திரும்பிய இளைஞர் கிஷோர் இந்துக்குரி. இப்போது 100 மாடுகளைக் கொண்டு பால் பண்ணை அமைத்து ஆண்டுக்கு ரூ.44 கோடி வர்த்தகம் ஈட்டும் நிறுவனமாக வெற்றிகரமாக நடத்தி வருகிறார். சோபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை
-
விளையாட்டாக ஒரு வெற்றி!
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரோஷன் பெய்த், விளையாட்டு ஆர்வம் கொண்டவர். இன்றைக்கு விளையாட்டு வீரர்களுக்கான ஆடைகள் உற்பத்தி செய்யும் இரண்டு வெற்றிகரமான நிறுவனங்களின் உரிமையாளர். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை