பிளாட்பாரத்தில் தூங்கியவர்தான்! ஆனால் இன்று 100 கோடிக்கு வர்த்தகம் செய்யும் டிராவல்ஸ் நிறுவனத்தின் முதலாளி!
21-Nov-2024
By பி.சி. வினோஜ்குமார்
சென்னை
ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்று பெரிய நடிகர் ஆகவேண்டும் என்ற ஆசை அந்த இளைஞருக்கு. தன் கனவை நிறைவேற்ற, 1981-ல் தன் 27 வயதில் தன் ஊரான திருச்செந்தூரில் இருந்து சென்னையின் எழும்பூர் ரயில்நிலையம் வந்தடைந்தார்.
வி.கே.தனபாலன், பின்னாளில் மதுரா டிராவல்ஸ் உரிமையாளர் வி.கே.டி.பாலன் என்று அறியப்பட இருக்கும் அந்த இளைஞர் வீட்டுக்குச் சொல்லாமல் சென்னைக்கு ரயிலேறி ஓடிவந்தவர். இந்த ஆண்டு அவரது நிறுவனம் 100 கோடி ரூபாய் வர்த்தகம் செய்துள்ளது!
|
சென்னையில் உள்ள மதுரா டிராவல்ஸ் நிறுவனர் வி.கே.டி.பாலன் தன் எளிய ஆரம்பத்தை மறக்கவில்லை. அவர் சென்னைக்கு கனவுகளுடன் 1981ல் வந்தபோது அணிந்திருந்த வேட்டி, சட்டை என்கிற ஆடை அடையாளம் இன்றும் தொடர்கிறது. (படங்கள்: ஹெச்.கே.ராஜசேகர்) |
“சென்னைக்கு பணமே இல்லாமல், டிக்கெட் எடுக்காமல் ரயிலேறி வந்தவன் நான். என்னிடம் இருந்தது கட்டியிருந்த வேட்டியும் சட்டையும்தான்,” என நினைவுகூரும் பாலன் (64) எட்டாம் வகுப்புடன் படிப்பை விட்டுவிட்டு நாடகங்களில் ஆர்வம் செலுத்தியவர். திரைப்படங்கள் என்றால் அவருக்கு ஆர்வம் அதிகம். 50கள், 60களில் ஆதிக்கம் செலுத்திய சிவாஜி, எம்ஜிஆர் ஆகியோரின் ரசிகராக இருந்தார். அவர்களின் நீளமான வசனங்களை மனப்பாடமாக ஒப்பிப்பார்.
“அந்த ஆர்வம் என்னை நாடகங்கள் பக்கம் இழுத்தது. பிரபலமான படங்களை அடிப்படையாகக் கொண்ட நாடகங்களை நண்பர்களுடன் சேர்ந்து கிராமத்தில் அரங்கேற்றுவோம். அந்த நாடகங்களில் நாயகனாக மட்டுமே நான் நடிப்பேன்,” சிரித்துக்கொண்டே சொல்கிறார் பாலன்.
இந்த மனநிலைதான் அவரை இன்று அடைந்திருக்கும் உயரங்களை எட்ட வைத்துள்ளது. நாயகனாக நடித்து புகழ்வெளிச்சம் அடையவேண்டும் என்கிற ஆர்வம். அதுவும் எந்த நிலையில்? அவரது குடும்பம் வறுமை நிலையில் இருந்தது. அவரது பெற்றோர் ஊர்மக்களின் துணிகளை வெளுப்பவர்கள். ஊர்மக்கள் கொடுக்கும் மீந்துபோன உணவுதான் அவர்கள் சாப்பாடு.
பாலனின் பதின்பருவத்தில் திருச்செந்தூர் வளர்ச்சி அடையாத கிராமம். இப்போது அது சிறுநகராக வளர்ந்துள்ளது. அவர் குடும்பம் சலவைத்தொழில் செய்யும் குடும்பம். கிராமவாசிகளின் துணிகளைப் பெற்று, அதை மூட்டையாகக் கட்டி, கழுதையின் முதுகில் ஏற்றி அருகிலிருந்து ஆறுகளுக்குக் கொண்டுசென்று வெளுப்பார்கள்.
“நாங்கள் வீட்டில் சமைப்பதே இல்லை. மீந்துபோன உணவுகளை கிராமவாசிகள் தருவர். அதைத்தான் சாப்பிடுவோம்,” சொல்கிறார் பாலன். அவருக்கு இரண்டு அண்ணன்கள். இருவரும் இப்போது உயிருடன் இல்லை. அவரது தந்தை பாலனுக்கு 19 வயதாக இருக்கையில் இறந்துவிட்டார்.
சென்னையில் கோடம்பாக்கம் ஸ்டூடியோக்களின் வெளியே பாலனின் செல்லுலாய்டு கனவுகள் கருகிப்போயின.
“கோடம்பாக்கத்தின் தெருக்களில் பிரபல நடிகர்களை சந்தித்து அவர்களுடன் பணிபுரியலாம் என்று நினைத்திருந்தேன். என்னால் யாரையும் சந்திக்க முடியவில்லை. ஸ்டூடியோக்களிலும் நுழைய முடியவில்லை. எழும்பூரில் ஓட்டல்கள், ட்ராவல் ஏஜென்சிகளின் வேலைக்கு முயன்றேன். யாரும் தரவில்லை. அறிமுகம் அற்ற நபர்களுக்கு வேலை கிடைக்காது என்று தெரிந்துகொண்டேன்,” என்கிறார் பாலன்.
அவருக்கு யாரையும் நகரில் தெரியாது. உதவிக்கு யாரும் இல்லை. “ எழும்பூர் ரயில்வே ப்ளாட்பாரம் என் இல்லம் ஆனது. ரிக்ஷாக்காரர்கள், பிச்சைக்காரர்கள், பிக்பாக்கெட்டுகள், மற்றும் என்னைப்போன்ற வீடில்லாதவர்களுக்கு அதுதான் வீடு,” என்கிற பாலன் பலநாட்கள் உண்ண உணவில்லாமல் தவித்திருக்கிறார்.
|
எழும்பூரில் பாலனின் அலுவலகம் அமைந்திருக்கும் கட்டடத்தின் மாடி. அவர் உணவின்றி பல இரவுகள் கழித்த எழும்பூர் ரயில்நிலையம் பின்னணியில் தெரிகிறது |
“நான் இளைத்து மெலிந்தேன். என் தோற்றமே பிச்சைக்காரன் போல் இருந்திருக்கவேண்டும். ஓரிரவு தூங்கிக்கொண்டிருந்தபோது காவலர் என்னை கம்பால் அடித்து எழுப்பி, மேலும் சிலருடன் வரிசையில் நிற்கச்சொன்னார்.
“நம் எல்லோர் மீதும் பொய் வழக்குகள் போட்டு சிறைக்கு அனுப்பப்போகிறார்கள் என்று யாரோ என்னிடம் சொன்னார்கள். இதுபோல் வீடற்ற ஆட்களைப் பிடித்து வழக்குப்போடுவது காவல்துறைக்கு வழக்கம்தான் என்றும் தெரிந்தது,” என்கிறார் பாலன்.
அவர் உடனே தப்பிப்பது என முடிவெடுத்தார். “ஓட ஆரம்பித்தேன். எங்கிருந்து சக்தி வந்தது என்று தெரியவில்லை. ஓடிக்கொண்டே இருந்தேன். கடைசியில் ஓரிடத்தில் ப்ளாட்பாரத்தில் சிலர் படுத்திருப்பதைக் கண்டு அவர்களுடன் படுத்துத் தூங்கிவிட்டேன்.”
அது சென்னை அமெரிக்கத் தூதரகத்தின் வெளிப்புறம். அங்கே மக்கள் விசா பெறுவதற்காக முதல்நாள் இரவில் இருந்தே வரிசையில் காத்திருப்பார்கள். அங்கே படுத்திருந்தவர்களில் தங்கள் இடத்தை மறுநாள் காலையில் வரிசையில் நிற்கவருகிறவர்களுக்கு விற்கும் நபர்களும் அடங்குவர். விடிகாலை ஐந்துமணிக்கு யாரோ பாலனை எழுப்பி, அவர் இடத்தைத்தரும்படி கூறி 2 ரூபாய் அளித்தார்கள்.
பலநாள் பட்டினிக்கு அந்த பணம் அருமருந்தாக அமைந்தது. “நான் முழுச்சாப்பாடு சாப்பிட விரும்பினேன்.
"காலையில் எதுவும் சாப்பிடாமல் இருந்து, ஒரு சின்ன உணவகத்தில் 2 ரூபாய்க்கு “லிமிட்டட் மீல்ஸ்’ சாப்பிட்டேன்,” சுவாரசியமாக தன் கதையைக் கூறுகிறார் பாலன்.
|
தன் ஊழியர்கள் சிலருடன் பாலன் |
“அதைத் தொடர்ந்து நான் ஒரே இரவில் தொழிலதிபர் ஆகிவிட்டேன்.” என சுயஎள்ளலுடன் கூறும் பாலன், “அமெரிக்க தூதரகம் எதிரே கர்ச்சீப்புகள், கற்கள் ஆகியவற்றை வைத்து ஐந்தாறு பேருக்கு இடம் பிடிக்க ஆரம்பித்தேன்,” என்கிறார்.
அவரது தினசரி வருமானம் 2 ரூபாயில் இருந்து 10 ரூபாயாகவும் 20 ரூபாயாகவும் உயர்ந்தது. சைதாப்பேட்டையில் மாத வாடகை 150 ரூபாய்க்கு ஓர் அறையைப் பிடித்துக்கொண்டார்.
அமெரிக்க தூதரகத்துக்கு வெளியே அவரது ‘பணியிடத்தில்’ ட்ராவல் ஏஜென்சிகளில் பணிபுரிந்த பலர் நண்பர்கள் ஆனார்கள். அவருக்கு விமானடிக்கெட்டுகளைத் தரும் நிறுவனம் ஒன்று பழக்கம் ஆனது. விமான டிக்கெட்டுகளை விற்றுக்கொடுத்தால் 9 சதவீதம் கமிஷன் அவருக்குத் தர அந்நிறுவனம் முன்வந்தது.
“விசா நேர்காணல்களுக்கு வருபவர்களுக்கு ஐந்து சதவீத தள்ளுபடியில் டிக்கெட்டுகளை அளித்தேன். ட்ராவல் ஏஜென்சியின் பின்புறம் என் பெயரை எழுதிக் கொடுப்பேன். அதைக்காட்டி அவர்கள் அங்கே ஐந்துசதவீதம் தள்ளுபடி பெறுவார்கள். எனக்கு மீதி நான்கு சதவீதம் கமிஷனாகக் கிடைக்கும்,” என்கிறார் பாலன்.
ராமேஸ்வரத்தில் இருந்து கொழும்புக்குக் கப்பலில் செல்கிறவர்களுக்கு விசா கொண்டுபோய் கொடுக்கும் கூரியர் வேலை 1982-ல் அவருக்குக் கிடைத்தது. நிறைய பேர் அந்த வேலையைச் செய்துகொண்டிருந்தார்கள்.
“சென்னையில் மாலையில் ரயிலேறுவேன். காலையில் ராமேஸ்வரம் சென்று அங்கே கப்பல் புறப்படுவதற்கு சிலமணி நேரம் முன்பாக ஏஜெண்டிடம் விசாவை வழங்கவேண்டும்.
“அப்படி ஒருமுறை ரயிலில் சென்றபோது, விடிகாலையில் வெளியே ஏதோ சப்தம் கேட்டு விழித்தேன். பாம்பன் பாலத்துக்கு முன்னதாகவே ரயில் நின்றிருந்தது. இந்த ரயில் பாலம் 2 கிமீ நீளமுடையது. ராமேஸ்வரம் தீவை இதுதான் நிலத்துடன் இணைத்தது.
“ரயில் பாதையில் சில பழுதுநீக்கல்கள் செய்யவேண்டும் என்பதால் ரயில் சிலமணி நேரம் தாமதமாகச் செல்லும் என்று அறிந்தேன். நான் ரயில்வே பாலம் வழியாக நடந்தே ராமேஸ்வரம் செல்ல முடிவு செய்தேன். ஆனால் அதில் இருக்கும் அபாயத்தை உணரவில்லை.
சில மீட்டர்கள் நடந்த பின்னர் தான் கடலுக்கு மேலே செல்லும் தண்டவாளத்துக்குக் கீழே எதுவும் இல்லை என்பது தெரிந்தது. மரக்கட்டைகளால் ஆன ஸ்லீப்பர்கள் வழுக்கின. இடைவெளியில் கீழே கடல் ஆர்ப்பரிப்பதைப் பார்த்தேன்.
|
பாம்பன் பாலத்தில் பாலன் ஊர்ந்துசெல்லும் காட்சி சித்தரிப்பு (ஓவியம்: ஜீவா) |
“பாலத்தில் அலைகள் தெறித்தன. நான் படுத்தே ஊர்ந்து சென்றேன். விசா தாள்கள் அடங்கிய பை என் முதுகில் பத்திரமாக இருந்தது.
“நம்பமுடியாத சூழல் அது. விடிகாலையில் சூரியனின் கதிர்கள் மெல்ல பூமி மீது விழுந்து இருளைக் கிழித்துக் கொண்டிருந்தன,” பாலன் அந்த பயணத்தை விவரிக்கிறார். கொஞ்சம் தவறாகக் காலடி எடுத்துவைத்தாலும் கடலில் விழுந்துவிடுவார்.
ஆனால் பாலன் பாலத்தைக் கடந்தார். அன்று கப்பல் கிளம்புவதற்கு முன்பாக விசாக்களை கொண்டு சென்ற ஒரே ஆள் அவர்தான். சுமார் நூறு பேருக்கு விசாக்களை எதிர்பார்த்திருந்த ஏஜெண்டிடம் அவற்றைக் கொண்டுபோய்ச் சேர்த்தார்.
“சட்டை, உடல் முழுக்க அழுக்குடன் ராமேஸ்வரம் சென்றேன். ஏஜெண்ட் என்னைப் பார்த்ததும் தழுவிக்கொண்டார். என்னை சிறப்பாகக் கவனித்ததுடன் 1000 ரூபாய் பணமும் கொடுத்தார். அது அன்றைக்கு பெரிய பணம்”, என்கிறார் பாலன்.
“என் உயிரைப்பற்றிக்கவலைப்படாமல் நான் அங்கு சென்றிருக்காவிட்டால் அவருக்கு நிறைய இழப்பு ஏற்பட்டிருக்கும். இந்த சம்பவம் என்னை ட்ராவல்ஸ் மற்றும் சுற்றுலா தொழிலில் என்னை நம்பகமானவனாக்கியது.”
|
பல கல்லூரிகளின் சுற்றுலாத் துறை பயிற்சி மாணவர்களுடன் பாலன் |
வடசென்னையில் உள்ள மண்ணடியில் 1986-ல் சொந்தமாக ஏஜென்சி தொடங்கினார். சர்வதேச விமானப் பயண சங்கத்தால் (IATA) அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்சிகளின் துணை ஏஜெண்டாக பணிபுரிந்தார்.
“நான் சின்ன அளவில் தொடங்கினேன். மூன்று பேரை வேலைக்கு வைத்து 1000 ரூபாய் வாடகையில் அலுவலகம் தொடங்கினேன்.”
சீர்காழி கோவிந்தராஜனை வைத்து சில முக்கியமான ஐரோப்பிய நகரங்களில் 1988-ல் கச்சேரி நடத்தியது அவரது முக்கியமான திருப்புமுனை ஆக அமைந்தது. இந்த நிகழ்ச்சி பெரும் வெற்றி அடைந்தது. திரைப்படத்துறை பிரபலங்களைக் கொண்டு வெளிநாடுகளில் நிகழ்ச்சி நடத்த பாலனை பலரும் அணுக ஆரம்பித்தனர்.
இந்தி மற்றும் தமிழ் திரைத்துறை பிரபலங்களைக் கொண்டு 300க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை உலகெங்கும் 25க்கும் மேற்பட்ட நாடுகளில் அவர் நடத்தி உள்ளார். இது வெளிநாடுகளில் அதிகம் நிகழ்ச்சி நடத்திய இந்திய நிறுவனம் என்ற சாதனையாக லிம்க்கா சாதனைப்புத்தகத்தில் இடம்பெறும் வாய்ப்பை அவருக்கு அளித்தது.
கோடம்பாக்கத்தில் அவரும் பிரபலம் ஆனார். நிறைய பிரபலங்கள் அவரது வாடிக்கையாளர்கள் ஆயினர். 1997-ல் அவர் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றார். கலாச்சார வளர்ச்சிக்கான பங்களிப்புக்காக வழங்கப்பட்டது அது.
இன்று மதுரா டிராவல்ஸ் சர்வதேச அளவில் பயணங்களுக்கான திட்டங்களை வழங்குகிறது. சந்திப்புகள், ஊக்க நிகழ்வுகள், கூட்டங்கள், கண்காட்சிகள், கடற்பயணங்கள், தென்னிந்தியாவில் ஆயுர்வேத மருத்துவப் பயணங்கள், உள்நாட்டு ஆன்மிகப்பயணங்கள் ஆகியவற்றுக்கு தொகுப்புகளை வைத்துள்ளது.
பாலன் 1993-ல் தன் நிறுவனத்தை பிரைவேட் லிமிடட் ஆக மாற்றி, ஐஏடிஏ அங்கீகாரம் பெற்றார். அவர் இந்நிறுவனத்தில் 90 சதவீத பங்குகளை வைத்துள்ளார். மீதம் உள்ள பங்குகள் அவரது மனைவி, மகன் வசம் உள்ளன.
1998-ல் இந்நிறுவனத்தின் விற்பனை 22 கோடியை எட்டியது. மதுரா டிராவல்ஸ் விடுமுறை இல்லாமல் 24 மணி நேரமும் ஆண்டு முழுக்க வேலை செய்கிறது. 40 பேர் பணிபுரிகிறார்கள். சுமார் 400 முதன்மை ஒப்பந்த, துணை- ஒப்பந்த முகவர்கள் உள்ளார்கள்.
இந்நிறுவனம் மதுரா வெல்கம் என்ற பெயரில் காலாண்டு இதழ் ஒன்றை சுற்றுலாப் பயணிகளுக்காக கொண்டுவருகிறது. நான்கு புத்தகங்களை வெளியிட்டுள்ளது. அதில் காமராஜர் பற்றிய நூலும் ஒன்று.
|
பாலன் தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார் |
தூர்தர்ஷனின் வெளிச்சத்தின் மறுபக்கம் என்ற பெயரில் வாரந்தோறும் சமூகத்தின் விளிம்பில் இருக்கும் மனிதர்கள் பற்றி கடந்த எட்டு ஆண்டுகளாக நிகழ்ச்சி நடத்தி வருகிறார்.
பாலன் தன் மகன் ஸ்ரீகரனிடம் (27) பொறுப்புகளை ஒப்படைக்கத் தயாராக இருக்கிறார். அவரது மனைவி டி. சுசீலாவை (60), தனக்குக் கிடைத்த பெரும் சொத்தாகக் கருதுகிறார். விழுமியங்களையும் நெறிகளையும் கற்றுத்தந்து தன்னை நல்ல மனிதன் ஆக்கியவர் தன் மனைவியே என்கிறார்.
அவரது மகள் சரண்யா (30), சைக்காலஜியில் பி.எச்.டி செய்கிறார். அவருக்கு சென்னையில் உள்ள புனித ஜோசப் பொறியியல் கல்லூரி இயக்குநர் ஜெயக்குமார் கிறிஸ்துராஜனுடன் திருமணம் நடைபெற்றது. பாலன் தன் பேத்திகளாக 6 வயதாகும் டாஷா, 6 மாதம் ஆகும் ஷிவானி ஆகியோருடன் நேரம் செலவழிக்க விரும்புகிறார்.
பாலன் வாழ்க்கையில் இரு விஷயங்களில் சமரசம் செய்துகொண்டதில்லை என்கிறார். அவை, நேர்மை மற்றும் தனக்கு உதவி செய்தவர்களுக்கு நன்றி பாராட்டுதல்.
“இந்த பண்புகளில் நான் தவறிவிட்டதாக யாரேனும் கூறினால் நான் வாழ்வையே முடித்துக்கொள்வேன்,” உணர்ச்சிவயப்பட்டு கூறுகிறார் பாலன்.
அதிகம் படித்தவை
-
பயணங்கள் முடிவதில்லை!
அவர் ரஜினிகாந்த் போல ஒரு சூப்பர்ஸ்டார் ஆகவேண்டும் என்ற கனவுடன் சென்னைக்கு வந்தவர். ஆனால் பசித்த இரவுகளும் பிளாட்பார தூக்கமும்தான் காத்திருந்தன. பி சி வினோஜ் குமார், இன்று 100 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்யும் நிறுவன உரிமையாளரைச் சந்திக்கிறார்.
-
தன்னம்பிக்கையின் தூதுவர்
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த அகமது மீரான் தொலைபேசித் துறையில் பணியாற்றியபோது அவருக்கு ஒரு மணி நேரத்துக்கு ஒரு ரூபாய் சம்பளம். இன்றைக்கு ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் வர்த்தகம் செய்யும் கொரியர் தொழிலின் முன்னோடியாக இருக்கிறார். பி.சி. வினோஜ் குமார் எழுதும் கட்டுரை
-
தையல் கலைஞர்களின் உச்சம்
குடும்பத்தை பாதுகாத்து வந்த தந்தையோ திடீரென சந்நியாசி ஆகிவிட்டார். இந்நிலையில், சிறு வயது முதல் கடினமாக உழைத்து இன்றைக்கு பிரதமர் முதல் பல பிரபலங்களின் ஆடைகளை தைக்கும் தையற் கலைஞர்களாக உயர்ந்திருக்கின்றனர் இந்த குஜராத் சகோதரர்கள். பி.சி. வினோஜ் குமார் எழுதும் கட்டுரை
-
தோல்விகளுக்குப் பின் வெற்றி
கோவையை சேர்ந்த பிரிதேஷ் ஆஷர், மேகா ஆஷர் தம்பதி வெறும் 5000 ரூபாய் முதலீட்டில் தோல் பராமரிப்பு பொருட்களை தயாரிக்கத் தொடங்கினர். இப்போது அதை ரூ.25 கோடி ஆண்டு வருவாய் தரும் நிறுவனமாக உயர்த்தி உள்ளனர். இதற்கு முன்பு சில தொழில்களை செய்து நஷ்டத்தைச் சந்தித்தாலும் விடாமுயற்சியால் வெற்றியைப் பெற்றிருக்கின்றனர். சோஃபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை
-
ஒரு தாயின் தேடல்
வெளிநாடுகளில் இருப்பது போல இந்தியாவில் குழந்தைகளுக்கான பாதுகாப்பு பொருட்கள் இருக்கிறதா என்று தேடினார் இளம் தாயான மாலிகா. ஆனால், அவருக்கு கிடைத்த பொருட்கள் தரமாக இல்லை. தொடர்ந்து தானே குழந்தைகளுக்கான பொருட்களை உற்பத்தி செய்யத் தொடங்கினார். சோஃபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை
-
தேனாய் இனிக்கும் வெற்றி
யாருடைய வழிகாட்டுதலும் இன்றி, சுயமாக தேன் விற்பனையில் இறங்கிய சாயா, இன்றைக்கு ஆண்டுக்கு பத்துக்கோடி வருவாய் ஈட்டும் பிராண்டை உருவாக்கி இருக்கிறார். சர்வதேச தேன் பிராண்ட்டுகளுக்கு மத்தியில் அவரது நெக்டார் ஃபிரஷ் தேனுக்கு பெரும் வரவேற்பு இருக்கிறது. பிரீத்தி நாகராஜ் எழுதும் கட்டுரை