பத்தாயிரம் ரூபாய் முதலீடு... இருபத்திஐந்து லட்சம் வருவாய்! டெல்லிப்பெண்ணின் வெற்றிக்கதை
30-Oct-2024
By சோபியா டேனிஷ்கான்
புதுடெல்லி
டெல்லியில் பழைமையான, குறுகிய சந்து ஒன்றில் வசிக்கும் மார்வாரி குடும்பத்தில் பிறந்தவர் ஆன்சல் மித்தல். அவரது பெற்றோர் முற்போக்கான எண்ணம் கொண்டவர்கள். பாரம்பர்ய சமூக நெறிகள் படி தமது மகளை வளர்க்க விரும்பாதவர்கள்.
ஆன்சல் மற்றும் அவரது சகோதரி ஸ்வாதி இருவரும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என அவர்கள் ஊக்குவித்தனர். “எங்கள் பெற்றோர் நாங்கள் சம்பாதிக்கத் தொடங்கியபின்னர்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றனர்,” என்கிறார் ஆன்சல். 27 வயதான இவர் டெல்லி நிஃப்ட் (NIFT)கல்வி நிறுவனத்தின் முன்னாள் மாணவி. தமது பெற்றோரை அவர் ஏமாற்றவிரும்பவில்லை. ஆனால், அதே நேரத்தில் ஒரு வேலைக்குச் செல்வதற்குப் பதில் அதற்கும் மேலாக பிராண்ட்லெஸ் (Brandless) என்ற தோல் கைவினைப் பொருட்கள் பிராண்ட்டை நிறுவினார்.
|
ஆன்சல் மித்தல், பிராண்ட்லெஸ் என்ற தோல் கைவினைப்பொருட்கள் பிராண்ட்டை ரூ.10,000 முதலீட்டில் 2015-ம் ஆண்டு நிறுவினார். இன்றைக்கு 25 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டும் லாபகரமான நிறுவனமாக வளர்ந்திருக்கிறது.
|
புக்மார்க்ஸ், கைப்பைகள், பர்ஸ்கள், பாஸ்போர்ட் வைக்கும் பவுச்கள், கீ செயின், சூட்கேஸ்கள் போன்ற தோல்பொருட்களை பிராண்ட்லெஸ் வழங்குகிறது. இந்த தோல்பொருட்கள் இளம்பச்சை நீலம், பழுப்பு, வன பச்சை, கருப்பு பழுப்பு நிறம் போன்ற நவநாகரீக வண்ணங்களில் வந்திருக்கின்றன. இந்தப் பொருட்கள் ரூ.200 (தோல் கீ செயின்) முதல் ரூ.18000 வரையிலான சூட்கேஸ்கள் வரை கிடைக்கின்றன. கைப்பைகள் ரூ.5000 முதல் கிடைக்கின்றன.
ஆன்சல்,டெல்லியில் உள்ள ஒரு பாரம்பர்யமான கான்வென்ட் பள்ளியில் படித்தார். “விளையாட்டு மட்டுமே என்னுடைய மூச்சாக இருந்தது. மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் அளவுக்கு டேபிள் டென்னிஸ் விளையாடினேன்,” என்கிறார். “பின்னர், நான் ஊடகம் மற்றும் விளம்பரம் தொடர்பான படிப்பில் ஹன்ஸ்ராஜ் கல்லூரியில் சேர்ந்தேன். எனக்கு இந்தப் படிப்பின் மீது விருப்பம் இல்லை. எனவே, ஒரு ஆண்டு கழித்து அந்தப் படிப்பில் இருந்து விலகினேன்.”
தோல் வடிவமைப்புப் பயிற்சி பெறுவதற்காக டெல்லியில் உள்ள நிஃப்ட் கல்வி நிறுவனத்தில் 2010ம் ஆண்டு சேர்ந்தார். “ஃபேஷன் என்று வந்தால், இந்தியாவில் பெருமைமிகு கல்லூரிகளில் இதுவும் ஒன்று. அந்த இடம் புத்துணர்ச்சியூட்டும் மாற்றத்தை தருவதாக இருந்தது,” என்கிறார் ஆன்சல். “துறை ரீதியான பெரும் தொடர்புகள் கிடைக்கப்பெற்றேன். பயிற்சியாளராகப் பணியைத் தொடங்கினேன். இந்தப் படிப்பின்போது, புகழ்பெற்ற வடிவமைப்பாளர்களுக்கு உதவியாக இருந்தேன்.
’’2010ம் ஆண்டு நடந்த ஃபேஷன் வாரவிழாவின் போது ஒரு வடிவமைப்பாளருக்கு உதவியாக இருந்ததில் முதன் முறையாக ரூ.1500 பணம் கிடைக்கப்பெற்றேன். பெரும்பாலான சமயங்களில் பணம் வாங்காமல் பணியாற்றினேன். இப்படி பணி புரிந்தபோது, கிடைத்த அனுபவம், எதிர்காலத்தில் எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது.
|
ஆன்சல் , பிராண்ட்லெஸ் என்ற பிராண்ட்டை ஒரு மாஸ்டர் தையல்காரரை வைத்துத் தொடங்கினார்.
|
ஜலந்தரில் உள்ள ஒரு தோல் தொழிற்சாலையில் நடந்த மூன்று வார கால பயிற்சிதான் தோல் தொழிலில் அவருக்குக் கிடைத்த முதல் அனுபவம். “எங்கிருந்து வருகிறது என்ற தோல்பற்றிய எனது முக்கிய புரிதல் தொடங்கியது,” என்று சொல்லும் அவர், “தோல் உருவாக்கம் குறித்த முழுமையான செயல்முறைகளை நான் கற்றுக் கொண்டேன். உபயோகமான, உபயோகமற்ற தோல் எது என்ற வித்தியாசத்தையும் கற்றுக் கொண்டேன். “
இறுதியாண்டு புராஜெக்ட்டின் ஒரு பகுதியாக , முதன்மையான வடிவமைப்பாளர் சாமாந்த் சவுகானுடன் அவர் பணியாற்றினார். அவரது வழிகாட்டுதலின் பேரில் தோல்பைகள், ஜாக்கெட்களை பற்றி கற்றுக் கொண்டார். அவரது இறுதி ஆண்டு புராஜெக்ட் , வகுப்பிலேயே சிறந்ததாகப் பரிசு பெற்றது.
“இறுதி ஆண்டின் முடிவில், முழுநேரப் படிப்பு மற்றும் பல்வேறு புராஜெக்ட்கள் என்ற இரண்டுக்கும் இடையே தவித்து மன அழுத்ததுக்கு உள்ளானேன். எனவே, 9 மணிமுதல் 5 மணி வரையிலான வேலைக்கு எதிரான முடிவை எடுத்தேன். பெரிய வடிவமைப்பாளருடன் பணியாற்றும் வாய்ப்பையும் மறுத்தேன். என்னுடைய ஃப்ரீலேன்ஸ் பணிகளில் நான் கவனம் செலுத்தினேன்,” என்றார் ஆன்சல்.
அது போன்ற வாய்ப்பில் , அவருக்கு ரூ.10,000 கிடைத்தது. சொந்தமாக தோல் தொழில் தொடங்குவது என்றும் அதற்காக அந்தப் பணத்தை முதலீடு செய்வது என்றும் ஆன்சல் தீர்மானித்தார். அவருக்கு ஏற்கனவே, அந்த தொழில் குறித்த அறிவு இருந்தது. தொழில்தொடர்புகளும் இருந்தது. மூலப்பொருட்கள் எங்கிருந்து கிடைக்கும் என்பதும் அவருக்கு தெரிந்திருந்தது.
“என் குடும்பத்தினருக்குக் கூடத் தெரியாமல் ஒன்பது மாதங்கள் நான் இது குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். அட்வான்ஸ் ஆக கொஞ்சம் பணம் பெற்றுக் கொண்டு மூலப்பொருட்கள் தருவதற்கு விநியோகிப்பாளர்கள் தயாராக இருந்தனர்,” என்று தம்முடைய தனிப்பட்ட நெஞ்சுரமிக்க தொழில்முனைவுப் பயணத்தை விவரித்தார்.
“ஒரு ஏற்றுமதி நிறுவனத்தின் பழைய தொடர்பு நபரான தோல் பொருட்களைத் தைக்கும் மாஸ்டர்ஜி(தையல்காரர்), என்னுடைய முதல் பணியாளரானார். அவருடைய வீடுதான், என்னுடைய தற்காலிக அலுவலகமாக இருந்தது. அங்குதான் முதன் முதலாக சில மாதிரிகளை நாங்கள் தயாரித்தோம்.”
|
90 சதவிகித பிராண்ட்லெஸ் பொருட்கள், நாட்டின் வெவ்வேறு இடங்களில் உள்ள குறிப்பிட்ட சில்லரை விற்பனைக்கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன
|
ஆன்ஞ்சல் தமது நிறுவனத்துக்கு என் ஸ்கொயர் அக்சஸ்சரீஸ் என, அவரின் பெற்றோர்களான நிஷா, நவீன் என்ற பெயர்களின் முதல் எழுத்துகளைக் கொண்டு பெயரிட்டுள்ளார்.
முதல் ஆண்டில் அவர்கள் ரூ.50,000 அளவுக்கு வியாபாரம் செய்தனர். ஆண்டு தோறும் விற்பனை அதிகரித்து வந்தது. இப்போதைய ஆண்டு வருவாய் ரூ.25 லட்சம். “லாபகரமான நிறுவனமாக இயங்கி வருகின்றோம். எங்கள் பொருட்கள் நாட்டின் வெவ்வேறு இடங்களில் உள்ள குறிப்பிட்ட சில்லரை விற்பனைக்கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு நகரம், ஒரு விற்பனையாளர் என்ற கருத்தினை நான் இறுதி செய்திருக்கின்றேன். மிகக்குறைந்த விலை என்பது அவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால் இ-காமர்ஸ் இணையதளங்களுடன் இணைந்து கொள்ள எங்களுக்கு விருப்பம் இல்லை. குறைந்த லாபத்தில்தான் நாங்கள் பணியாற்றுகின்றோம். அதே நேரத்தில் தரத்தில் சமரசம் செய்து கொள்வதில்லை,” என்று ஏன் அவர், இணைய விற்பனையை முன்னெடுப்பதில் ஆர்வம் காட்டவில்லை என்ற கேள்விக்குப் பதில் அளிக்க்கிறார்.
ஆனால், ஆன்சல் பெருநிறுவனங்களுடன் இணைந்திருக்கிறார். விழாக்காலங்கள் மற்றும் இதர நிகழ்வுகளின் போது கீ செயின்கள் அல்லது பைகள் போன்ற பரிசுப் பொருட்களை அவர்கள் ஆர்டர் செய்கின்றனர். பத்து பேர் வரை அவரது அலுவலகம் மற்றும் தொழிற்சாலையில் பணியாற்றுகின்றனர். அங்குதான் அவரது முழுஉற்பத்தியும் நடைபெறுகிறது.
தமது தொழிலுக்கு சிறப்பான எதிர்காலம் இருப்பதாக அவர் நம்பிக்கையோடு இருக்கிறார். “ரெக்சின் மற்றும் சீன போலிப்பொருட்களின் காலமாக இது இருப்பினும் பாரம்பர்யமான தோல் பொருட்களுக்கு ஒரு முதன்மையான சந்தை இருக்கிறது. இதை விரும்பி தேர்வு செய்ய ஆட்கள் உண்டு.’’
|
ஆன்சல் ஒரு பயிற்சிபெற்ற ந டனக்கலைஞர். ஆனால், பொது மேடையில் பங்கேற்பதில் அவருக்கு ஆர்வம் இல்லை. |
ஆன்சலின் தினசரி பணிகள் காலை 7 மணிக்குத் தொடங்குகின்றன. கிளாஸிகல் நடனப் பயிற்சிக்குச் செல்கிறார். அது அவருக்கு மகத்தான சந்தோஷத்தைக் கொடுக்கிறது. அவரது மன அழுத்தத்தைக் குறைப்பதாகவும் இருக்கிறது. தவிர டெல்லியில் உள்ள பியர்ல் அகாதமி ஆஃப் ஃபேஷன் கல்வி நிறுவனத்தில் வருகைதரு ஆசிரியராகவும் உள்ளார்.
போதுமான பணம் இல்லாத சூழலில் தமது நிறுவனத்தின் இணையதளத்தை வடிவமைப்பதற்கான கணினிக் குறியீடுகளை அவரே கற்றுக் கொண்டார். “வெற்றிக்கு குறுக்குவழி ஏதும் இல்லை. நீடித்திருக்கும் உறுதி, கடின உழைப்பால் மட்டுமே தொடர்ந்து பயணிக்க முடியும்,” என்று சொல்லி விடைதருகிறார் ஆன்சல்
அதிகம் படித்தவை
-
ஒரு கிராமம்; ஒரு கனவு; ஒரு வெற்றி!
அபாரமான தன்னம்பிக்கையுடன், 50 ச.அடி ஸ்டோர் ரூம் இடத்தில் அலுவலகத்தைத் தொடங்கினார் சுமன். இப்போது இந்தியாவில் மட்டுமின்றி, ரஷ்யாவிலும் தமது அலுவலகத்தைத் தொடங்கி உயர்ந்துள்ளார். குருவிந்தர் சிங் எழுதும் கட்டுரை
-
மண்ணில்லா விவசாயம்
ஹைட்ரோபோனிக்ஸ் என்கிற மண் இல்லாமல் விவசாயம் செய்யும் நவீன தொழில்நுட்பத்தை தொழில்முயற்சியாகக் கைக்கொண்டு வெற்றிபெற்றுள்ளார் சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம் கோபால். ப்யூச்சர் பார்ம்ஸ் என்கிற அவரது நிறுவனம் வேகமாக வளர்கிறது. பி சி வினோஜ்குமார் எழுதும் கட்டுரை
-
இணைந்த கைகள்
நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த ரோகித், விக்ரம் இருவரும் எம்.பி.ஏ., படிக்கும் போது நண்பர்கள் ஆனார்கள். இருவரும் சேர்ந்து டிஜிட்டல் சேவை நிறுவனத்தைத் தொடங்கினர். ஆரம்பத்தில் ஒரு லட்சம் ரூபாய் ஆண்டு வருவாய் ஈட்டியவர்கள் இன்று 12 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகின்றனர். குர்விந்தர் சிங் எழுதும் கட்டுரை
-
பீனிக்ஸ் பறவை!
போபாலை சேர்ந்த இளம்பெண் கனிகாவுக்கு இளம் வயதில் கேன்சர் நோய் ஏற்பட்டது. எனினும் அதை நினைத்து முடங்கி விடாமல், அதோடு போராடி வென்றவர், விமான போக்குவரத்து நிறுவனம் தொடங்கி ஆண்டுக்கு ரூ.150 கோடி வருவாய் ஈட்டுகிறார். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை
-
பத்து ரூபாய் பழரசம்!
பிரபு காந்திகுமார் அமெரிக்காவில் ஆண்டுக்கு ரூ.48 லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார். குடும்பத்தொழிலைக் கவனிக்க கோவை திரும்பினார். இப்போது பழரசங்கள் தயாரிக்கும் தொழிலில் ஆண்டுக்கு ரூ. 35 கோடி வருவாய் தரும் சாம்ராஜ்யத்தை ஐந்தே ஆண்டுகளில் கட்டமைத்திருக்கிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.
-
அசத்தும் ஐஏஎஸ்!
மருத்துவரான அல்பி ஜான், குடிமைப்பணித் தேர்வு எழுதி முதன்முயற்சியிலேயே ஐ ஏ எஸ் ஆனவர். துணை ஆட்சியராக தமிழ்நாட்டில் பணியைத் தொடங்கிய அவர், திடக்கழிவு மேலாண்மை நிர்வகிப்பில் சிறந்து விளங்குகிறார். சென்னை மாநகரை மேம்படுத்தும் மியாவாகி காடுகளை உருவாக்கும் திட்டத்தையும் நிறைவேற்றுகிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.