Milky Mist

Wednesday, 18 May 2022

கொல்கத்தாவுக்கு வெறும் கையுடன் வந்தார். இன்று ஆண்டுக்கு 111 கோடி ரூபாய் வர்த்தகம் தரும் இ-பார்மசி நிறுவனத்தை நடத்தி வருகிறார்

18-May-2022 By ஜி சிங்
கொல்கத்தா

Posted 21 Jul 2018

பன்வாரிலால் மிட்டல் மாணவராக இருந்தபோது, அவரது தந்தை அவரிடம், “கும்பலில் இருக்கும்போது தனித்து நில். வாழ்க்கையில் வெற்றி பெற ஏதேனும் வித்தியாசமான செயலில் ஈடுபடு,” என்று சொல்லி இருக்கிறார்.

அவரது தந்தையின் இந்த வார்த்தைகள்தான், இந்தத் தொழில்  அதிபரின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தன. அவரது தந்தையின் வார்த்தைகளை ஊக்கமாக எடுத்துக் கொண்டு, பன்வாரிலால் (49),  எப்போதுமே, மற்றவர்களிடம் இருந்து வித்தியாசமாகச் செய்வதில் முயற்சித்துக் கொண்டே இருப்பார்.

https://www.theweekendleader.com/admin/upload/02-12-17-02s1.JPG

பன்வாரி லால் மிட்டல், 2014-ம் ஆண்டு சாத்சங்  என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். ஆன்லைனில் மருந்துகள் விற்பனை  செய்வதை வாய்ப்பாக கருதி இதைத் தொடங்கினார். (புகைப்படங்கள்: மோனிருல் இஸ்லாம் முல்லிக்)


அவரது தீர்மானம்தான், 2016-17ம் ஆண்டு 111 கோடி ரூபாய் ஆண்டு வர்த்தகம் தந்த வலுவான ஒரு வணிக சம்ராஜ்யத்தைக் கட்டமைப்பதை நோக்கிக் கொண்டு சென்றது. அடுத்த ஆண்டில் இந்த நிறுவனத்தின் ஆண்டு வருவாய் 150 கோடி ரூபாயைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தனைக்கும் அவர் முப்பது வருடங்களுக்கு முன்பு வெறும் கையுடன்தான் கொல்கத்தா வந்தார். 

2014-ம் ஆண்டு சாஸ்தாசுந்தர் வெஞ்சர்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தை அவர் தொடங்கினார். அவரது நிறுவனம் பி.எஸ்.இ(BSE) மற்றும் என்.எஸ்.இ(NSE)-யில் பட்டியிலிடப்பட்டுள்ளது. சாஸ்தாசுந்தர் ஹெல்த்பட்டி லிமிடெட் (SastasundarHealthbuddy Ltd)நிறுவனத்தின் கீழ் சாஸ்தாசுந்தர் என்ற இணையதளத்தின் வழியே இ-பார்மசியை நடத்துகிறார். அதே பெயரிலேயே சங்கிலித் தொடர் மருந்துக்கடைகளையும் நடத்துகிறார்.

இந்த ஆண்டு ஜப்பானின் முன்னணி நிறுவனமான ரோஹ்டோ என்ற ஹெல்த் கேர் நிறுவனம், சாஸ்தாசுந்தர் ஹெல்த் பட்டி நிறுவனத்தின் 13 சதவிகிதப் பங்குகளை 50 லட்சம் அமெரிக்க டாலர் முதலீட்டில் வாங்கியது.

சாஸ்தாசுந்தருக்கு,தெற்கு 24 பாரகனாஸ் மாவட்டத்தில் பருய்பூரில் சொந்தமாக ஒரு உற்பத்தி பிரிவு உள்ளது. இந்த மருந்து நிறுவனம் 120 ஊழியர்களுடன் 2014-ம் ஆண்டு  தொடங்கப்பட்டது. இப்போது அந்த நிறுவனத்தில் 550 பேர் பணியாற்றுகின்றனர். இப்போது மேற்கு வங்க மாநிலத்தில் வாடிக்கையாளர்களிடம் இருந்து நேரடி ஆர்டர்கள் பெற 192 மருந்துக்கடைகள் உள்ளன.

ராஜஸ்தான் மாநிலத்தின் சிகார் மாவட்டத்தில் தண்டா என்ற கிராமத்தில் 1968-ம் ஆண்டு ஜூலை ஒன்றாம் தேதி, 6 குழந்தைகளில் ஐந்தாவது குழந்தையாக பன்வாரி லால் பிறந்தார். அவரது தந்தை, மறைந்த சன்வார் மால் மிட்டல் கொல்கத்தாவில் ஒரு சிறிய துணி வர்த்தகத்தில் ஈடுபட்டார்.

“நான் நடுத்தரக்குடும்பத்தில் வளர்ந்தேன்,”என்று நினைவு கூறுகிறார். “ராஜஸ்தான் மாநிலத்தில், போதுமான வாழ்வாதாரம் இல்லாததால் எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இதர மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்தார்கள். எனவே என் தந்தையும் கொல்கத்தா சென்றார். எங்களை   வளர்ப்பது என் தாயின் கடமையாக இருந்தது.”

பன்வாரிலால், 1988-ம் ஆண்டு தண்டாவில் உள்ள அரசு பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். அடுத்த ஆண்டில், தன் தந்தையுடன் வசிப்பதற்காக கொல்கத்தா சென்றார்.

https://www.theweekendleader.com/admin/upload/02-12-17-02s2.JPG

சாஸ்தாசுந்தர், 15 சதவிகித தள்ளுபடி விலையில் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு மருந்துகளை டெலிவரி செய்கிறது


கொல்கத்தாவில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள பருய்பூரில் உள்ள சாஸ்தாசுந்தர் தொழிற்சாலையில் பன்வாரி லாலுடன் பேசிக் கொண்டிருந்தோம். “எங்கள் மாவட்டத்தில் நல்ல கல்லூரி ஒன்று கூட இல்லை. எனவே, மேல்நிலைப்பள்ளி்ப்படிப்பை முடித்த உடன், கொல்கத்தா வருவது என்று தீர்மானித்தேன்,” என்று விவரிக்கிறார் பன்வாரி லால்.

“நான் கொல்கத்தா வந்தபோது,” என்று தொடர்ந்து நம்மிடம் பேசியவர், “என்னுடைய வாழ்வாதாரம் மற்றும் கல்விக்கான செலவுகளை தம்மால் செலவழிக்க முடியாது என்று என் தந்தைத் தெளிவாகச் சொல்லி விட்டார். என்னுடைய தினசரித் தேவைகளை நானே பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.”

மிகவும் முக்கியமாக, பன்வாரி லாலின் தந்தை, அவரை ஊக்குவிக்கும் விதமாக அறிவுரைகூறினார். “கும்பலோடு கும்பலாக நிற்பதில், இதர நபர்கள் செய்யும் அதே வேலையை நாமும் செய்வதில் பயன் ஒன்றும் இல்லை என்று என் தந்தை கூறினார். இதுதான் வாழ்க்கை மீதான என் கண்ணோட்டத்தை மாற்றியது. எப்போதும் தனித்து இருக்கத் தொடங்கினேன்,”என்று பகிர்ந்து கொள்கிறார் பன்வாரி லால்.

1989-ம் ஆண்டு அவர், உமாசந்திரா கல்லூரியில் வணிகப்படிப்பில் சேர்ந்தார். அதே நேரத்தில், அதே வருடத்தில் சாட்டர்ட் அக்கவுண்டன்சியும் படித்தார்.

“என் தந்தையுடன், புராபஜார் பகுதியில் 200 ச.அடி கொண்ட அறையில் வசித்தேன்,” என்கிறார் பன்வாரி லால். “என் தந்தை அவருடன் தங்க அனுமதித்தார். ஆனால், என்னுடைய இதர செலவுகளுக்காக நான், ஒரு தனியார் நிறுவனத்தில் பகுதி நேரமாக இந்தி டைப்பிஸ்ட் ஆகப் பணியாற்றினேன். ராஜஸ்தானில் இருக்கும் போது நான் இந்தி டைப்பிங் கற்றுக் கொண்டேன். அதுதான் எனக்குக் கைகொடுத்தது.”

பன்வாரி லால் மாதம் 1800 ரூபாய் சம்பாதிக்க ஆரம்பித்தார். அவரது செலவுகளுக்கு அது போதுமானதாக இருந்தது. காலையில் 6 மணி முதல் 11 மணி வரை கல்லூரிக்குப் போவார். மதியம் சி.ஏ வகுப்புக்குச் செல்வார். இரவில் வேலைக்குச் செல்வார். இப்படி தினமும் ஓய்வு இன்றி தீவிரமாகச் செயல்பட்டார்.

https://www.theweekendleader.com/admin/upload/02-12-17-02s.JPG

மாநிலம் முழுவதும் 192 ஹெல்த் பட்டி கடைகள் உள்ளன. அங்கே வாடிக்கையாளர்களிடம் இருந்து மருந்துகளுக்காக ஆர்டர் பெறுகின்றனர்


“நான் இந்தி டைப்பிங் பயிற்சிக்குச் சென்றபோது, ராஜஸ்தானில் உள்ள எனது நண்பர்கள் என்னைப் பார்த்துச் சிரித்தனர். எனினும், அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து பயிற்சிக்குச் சென்றேன்,” என்று நினைவு கூறுகிறார் பன்வாரி லால். “அந்த நாட்களில் கொல்கத்தாவில் இந்தி டைப்பிஸ்ட்களுக்கு தட்டுப்பாடு இருந்தது. எனவே, அது எனக்கு வேலை கிடைக்க உதவியது.”

1992-ம் ஆண்டு பிர்லா குழுமத்தில் வரி மற்றும் நிதிப்பிரிவில் மேலாளராக, மாதம் 4000 ரூபாய் சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு அவர் எட்டு ஆண்டுகள் பணியாற்றினார். அந்த வேலையில் இருந்து அவர் விலகும் போது மாதம் 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார்.

இந்த சமயத்தில் 1996-ம் ஆண்டு கொல்கத்தாவைச் சேர்ந்த அபா மிட்டல் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு பெண்குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை என்று மூன்று பேர் இருக்கின்றனர்.

2000- வது ஆண்டில் வேலையை விட்டு விலகியதும், இரண்டு ஆண்டுகள் சி.ஏ-வாகப் பணிபுரிந்தார். பிறகு சொந்தமாகத் தொழில் தொடங்குவது என்று திட்டமிட்டார். நிதிச் சேவைகள் தொடர்பான நிறுவனம் தொடங்குவது என்று திட்டமிட்டவர், 2002-ம் ஆண்டு மைக்ரோசெக் ஃபைனான்சியல் சர்வீ ஸ் பிரைவேட் லிமிடெட்  என்ற பங்கு வர்த்தகம், தொழில் கடன், நிதி ஆலோசனை ஆகியவற்றை  வழங்கும் நிதி நிறுவனத்தை 2.5 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கினார்.

“அந்த சமயத்தில் என்னிடம் நான் சேமித்து வைத்திருந்த 80 லட்சம் ரூபாய் மட்டும் இருந்தது,” எனும் பன்வாரி லால், “மீதித் தொகையை ஆண்டுக்கு 15 சதவிகித வட்டி விகிதத்தில் என்  நண்பர்களிடம் இருந்து கடனாக வாங்கினேன்,” என்கிறார்.

தெற்கு கொல்கத்தாவில் உள்ள காமாக் தெருவில் 2500 ச.அடி கொண்ட அலுவலகத்தை 60 லட்சம் ரூபாய் விலையில் சொந்தமாக வாங்கினார். மூன்று ஊழியர்களுடன் தமது நிறுவனத்தைத் தொடங்கினார்.

மூன்று ஆண்டுகளில் அதாவது 2005-ம் ஆண்டு தெற்கு கொல்கத்தாவில் உள்ள பால்யுகுன்ஜி என்ற பகுதியில் உள்ள புதிய அலுவலகத்துக்கு இடம் பெயர்ந்தார். 10,000 ச.அடி பரப்புள்ள அந்த அலுவலகத்தை 3.5 கோடி ரூபாய்க்கு வாங்கினார்.

“எங்கள் தொழில் தொடர்ந்து வளர்ச்சியடைந்தது. 2010-ம் ஆண்டில் 45 கோடி ரூபாய் ஆண்டு வர்த்தகம் என்ற சாதனையை அடைந்தோம்,” என்று விவரிக்கும் பன்வாரி லால், “அதன் பின்னர்தான் பிரச்னைகள் தொடங்கின,” என்கிறார்.

 

https://www.theweekendleader.com/admin/upload/02-12-17-02scar1.JPG

இந்த நிதி ஆண்டில் ஆண்டு வர்த்தகம் 150 கோடி ரூபாயை எட்ட வேண்டும் என்று பன்வாரி லால் எதிர்பார்க்கிறார்


2011 ல் நிலக்கரி ஊழல் வெளிச்சத்துக்கு வந்தது. பன்வாரி லாலின் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் பெரிய தொழில் அதிபர்கள். அவர்கள் நிலக்கரி சார்ந்த தொழிலில் ஈடுபட்டு வந்தனர். இந்த ஊழலுக்குப் பின்னர், அவர்கள் பல வாடிக்கையாளர்களை இழந்தனர். பெரும் பின்னடைவு காரணமாக தொழில் பாதிக்கப்பட்டது.

பன்வாரி லால், தன் தொழில் திட்டங்கள் குறித்து மறுபரிசீலனை செய்தார். தொழில் குறித்த ஆய்வுக்காக சிலகாலம் எடுத்துக் கொள்வது என்று திட்டமிட்டார். தம்முடைய தொழிலில் இருந்து கொஞ்சகாலம் இடைவெளி எடுத்துக் கொண்டார். புதிய தொழில் வாய்ப்புகள் பற்றித் தெரிந்து கொள்வதற்காக ஐரோப்பிய நாடுகளுக்குப்பயணம் சென்றார். அங்கு இருந்த மருந்து தொழில் மற்றும் விநியோக முறை அவரது கவனத்தைக் கவர்ந்தது.

“உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு அறிக்கைகள் மற்றும் இதர சுகாதார முகமைகளின்அறிக்கைகளைப் படித்தேன். எவ்வாறு போலியான மருந்துகள் கொடுத்து ஏழை மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டேன். நமது நாட்டில் அவர்களுக்கு முறையற்ற சிகிச்சைகள் அளிக்கப்படுவது பற்றியும் தெரிந்து கொண்டேன்,” என்கிறார் அவர்.

“மருந்துகளை விநியோகிக்கும் முறையில் ஒரு இடைவெளி இருப்பதை உணர்ந்தேன். வாடிக்கையாளர்கள் தங்கள் வீடுகளுக்கே தரமான மருந்துப் பொருட்களைப் பெற முடியும். எனவே, மருந்துகளை விநியோகிக்கும் புதிய நிறுவனம் ஒன்றைத் தொடங்குவது என்று திட்டமிட்டேன்.”

அவருடைய தந்தையின் வார்த்தைகள் அவருக்கு நினைவுக்கு வந்தது. “ஆன்லைன் பார்மசி என்பது முழுவதுமாக இந்தியாவுக்குப் புதிய ஒன்று,” என்று சொல்லும் பன்வாரி லால், “நான் தனித்து இருந்தேன்.” என்கிறார்.

2014-ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி சாஸ்தாசுந்தர் என்ற இ-பார்மசியைத் 150  கோடி ரூபாய் முதலீட்டுடன், நீண்ட கால நண்பரான ரவிகாந்த் சர்மாவை நிறுவனத்தின் ஒரு இயக்குனராகக் கொண்டு தொடங்கினார்.

நகரின் புறநகரில் ராஜர்ஹாட் பகுதியில் 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கால் ஏக்கர் நிலத்தை அவர்கள் வாங்கினர். “என்னுடைய நிதி நிறுவனத்தில் இருந்து சம்பாதித்த அனைத்துப் பணத்தையும் இதில் முதலீடு செய்தேன்,” என்கிறார் பன்வாரி லால். “இந்தியாவில் இதுபோன்ற புதிய முறைக்கு வெற்றி கிடைக்கும் என்று வலுவாக நான் நம்பினேன்.”

அவரது நம்பிக்கை சரியானது என நிரூபணம் ஆனது. அவரது பார்மசி தொழில் நல்ல முறையில் செயல்படத் தொடங்கியது. 2015ம் ஆண்டு அவர்கள் நிறுவனத்தின் ஆண்டு வருவாய் 20 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருந்தது. 2016-ம் ஆண்டு இது 63.5 கோடி ரூபாயைத் தொட்டது.

https://www.theweekendleader.com/admin/upload/02-12-17-02s4.JPG

நீண்ட நாள் தொழில்முறை நண்பர் ரவி காந்த் சர்மா உடன், பன்வாரி லால். அவர், இந்த நிறுவனத்தின் ஒரு இயக்குனராக இருக்கிறார்


“வாடிக்கையாளர்களிடமிருந்து ஆர்டர்கள் எடுப்பதற்காக சங்கிலித் தொடர் சுகாதார சேவை மையங்களை (கடைகள்) உருவாக்கினோம். அதன்படி 15 சதவிகித தள்ளுபடி விலையில் மருந்து வகைகள் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே டெலிவரி செய்ய தொடங்கினோம்,” என்று தமது தொழில் யுக்திகளைச் சொல்கிறார்.

தவிர ஆன்லைனிலும் ஆர்டர்கள் எடுக்கின்றனர். “மொத்தமாக மருந்துகளை வாங்கும் போது, மருந்து நிறுவனங்களிடம் இருந்து தள்ளுபடி கிடைக்கிறது. அதனை நாங்கள் வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கிறோம்,” என்கிறார் பன்வாரி லால்.

இந்த நிறுவனம் டெல்லியிலும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. தொடர்ந்து இந்தியாவின் இதர மாநிலங்களிலும் விரிவாக்கம் செய்ய உள்ளனர். அடுத்த ஐந்து ஆண்டுகளில் சாஸ்தாசுந்தர் நிறுவனத்தை 6000 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் தரும் வகையில் மாற்றுவதே பன்வாரி லாலின் குறிக்கோளாக இருக்கிறது.

இந்த தொழில்அதிபர், பல்வேறு தொண்டு நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறார். பள்ளிகளில் மதிய உணவு திட்டத்துக்கு நிதி அளிப்பது, கண் சிகிச்சை முகாம்களில் சுகாதார பொருட்களை தருவது என்று ஈடுபட்டுள்ளார்.

இளம் தலைமுறையினருக்கு அவர் தரும் அறிவுரை; “கடினமாக உழையுங்கள். உங்கள் கனவுகள் மீது நம்பிக்கை வையுங்கள். எப்போதும் கூட்டத்தில் இருந்து தனித்திருங்கள்.”

உண்மையிலேயே அவர், தனக்குத்தானே வித்தியாசமான பாதையைத் தேர்ந்தெடுத்தார். அதுவே அவரை வெற்றியை நோக்கி வழிநடத்தியது.


 
 
 
 
 

அதிகம் படித்தவை

 • Story of believing in your dreams

  ஒரு கிராமம்; ஒரு கனவு; ஒரு வெற்றி!

  அபாரமான தன்னம்பிக்கையுடன், 50 ச.அடி ஸ்டோர் ரூம் இடத்தில் அலுவலகத்தைத் தொடங்கினார் சுமன். இப்போது இந்தியாவில் மட்டுமின்றி, ரஷ்யாவிலும் தமது அலுவலகத்தைத் தொடங்கி உயர்ந்துள்ளார். குருவிந்தர் சிங் எழுதும் கட்டுரை

 • Success story of a pen manufacturer in Kolkata who started from scratch

  பேனாவில் கொட்டிய கோடிகள்

  350 கோடி ரூபாய் பேனா நிறுவனம் ஒன்றின் தலைவர் சுராஜ்மல் ஜலான், ராஜஸ்தானைச் சேர்ந்தவர். கொல்கத்தாவுக்கு வெறுங்கையுடன் மூன்றாம் வகுப்பு ரயில் பெட்டியில் வந்த இவர், இன்று மிகப்பெரிய தொழில் நிறுவனத்தைக் கட்டி ஆளுகிறார். ஜி. சிங் எழுதும் கட்டுரை

 • The success story of sailor who became an entrepreneur

  வெற்றிமேல் மிதப்பவர்

  உலகெல்லாம் பயணம் செய்யவேண்டும் என்ற ஆசையுடன் கப்பலில் வேலைக்குச் சேர்ந்தவர் பீஹாரில் முசாபர்பூரைச் சேர்ந்த புர்னேந்து சேகர். இன்று மும்பையில் சுமார் 100 கோடி வரை வர்த்தகம் செய்யும் தொழிலதிபராக உயர்ந்துள்ளார். தேவன் லாட் எழுதும் வெற்றிக்கதை

 • He started transport business with a single lorry, but today owns 4,300 vehicles

  போக்குவரத்து தந்த வெற்றிப்பயணம்

  தந்தைக்கு உதவியாக பதிப்புத் தொழிலில் இருந்த சங்கேஸ்வர் , சாதிக்கும் ஆசையில் போக்குவரத்துத் தொழிலில் இறங்கினார். பெரும் நஷ்டங்களுக்குப் பின்னர் வெற்றிகளைக் குவித்த அவர் இன்று வி.ஆர்.எல் லாஜிஸ்டிக் நிறுவனத்தின் தலைவர். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை

 • How an IIM Gold Medalist established a Rs 5 crore vegetable business

  வேர்களால் கிடைக்கும் வெற்றி

  அகமதாபாத் ஐஐஎம்மில் படிப்பு முடித்தால் கை நிறைய சம்பளத்துக்கு பன்னாட்டு நிறுவனத்துக்கு வேலை செய்யப்போவார்கள். ஆனால் கௌஷ்லேந்திரா, பீஹாரில் ஆண்டுக்கு 5 கோடி ரூபாய்க்கு காய்கறி விற்பனை செய்யும் நிறுவனம் நடத்துகிறார். ஜி.சிங் எழுதும் வெற்றிக்கதை

 • success in honey industry

  தேனாய் இனிக்கும் வெற்றி

  யாருடைய வழிகாட்டுதலும் இன்றி, சுயமாக தேன் விற்பனையில் இறங்கிய சாயா, இன்றைக்கு ஆண்டுக்கு பத்துக்கோடி வருவாய் ஈட்டும் பிராண்டை உருவாக்கி இருக்கிறார். சர்வதேச தேன் பிராண்ட்டுகளுக்கு மத்தியில் அவரது நெக்டார் ஃபிரஷ் தேனுக்கு பெரும் வரவேற்பு இருக்கிறது. பிரீத்தி நாகராஜ் எழுதும் கட்டுரை