600 ரூபாய் கல்வி உதவித்தொகையில் படித்தவர், இன்று புகழ்பெற்ற சர்வதேச பள்ளியை நடத்துகிறார்!
21-Nov-2024
By குருவிந்தர் சிங்
புவனேஸ்வர்
நெல்சன் மண்டேலா சொன்ன புகழ்பெற்ற வார்த்தைகள், “கல்வி என்பது மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம். இதைக் கொண்டு, நீங்கள் இந்த உலகத்தை மாற்றி விடலாம்.”
தென் ஆப்பிரிகாவின் கறுப்பின விடுதலைப் புரட்சியாளரின் பொன்மொழியைக் கருத்தில் கொண்டு, புவனேஸ்வரைச் சேர்ந்த ஒருவர். ஏழ்மையுடன் போராடி கல்வி பெற்றார். தம்மைப் போல நூற்றுக்கணக்கான குழந்தைகள் கல்வி எனும், அமிர்தம் பருக அவர்கள் வாழ்க்கையில் ஒளி ஏற்றி வைத்திருக்கிறார்.
|
2008-ம் ஆண்டில் சாய் சர்வேதச பள்ளியை புவனேஸ்வர் நகரில் தொடங்கும் முன்பு, பிஜய் குமார் சாகு, 1997-2006-க்கும் இடையே உலகம் முழுவதும் 250 பள்ளிகளுக்கு சென்று ஆய்வு செய்தார். (புகைப்படங்கள்: டிக்கான் மிஸ்ரா)
|
ஒடிஷாவைச் சேர்ந்த பிஜய் குமார் சாகு, ஒரு ஆடிட்டர் மற்றும் தொழிலதிபர். அவர் குழந்தைகளின் வளர்ச்சியை அனைத்து விதமாகவும் உறுதிப்படுத்த, கல்வியோடு விளையாட்டையும் கலந்து கற்பிக்கிறார்.
2008-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட சாய் சர்வதேச பள்ளி (SAI International School), இப்போது, நாட்டின் நான்காவது சிறந்த பள்ளி என்ற பெருமையைப் பெற்றுள்ளது. 2017-ல் இந்தியாவுக்கான சிறந்த பள்ளிகள் எனும் தலைப்பிலான எஜூகேஷன் வேர்ல்டு மதிப்பீட்டில், ஒடிஷாவில் முதலிடம் பெற்றது.
இப்போது, அவருடைய பள்ளியில் 4,300 மாணவர்கள் படிக்கின்றனர். 600 ஆசிரியர்களும், ஆசிரியர் அல்லாத 1000 ஊழியர்களும் பணியாற்றுகின்றனர். ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி கட்டணமாக 8,000 ரூபாய் வசூலிக்கின்றனர். இப்போது 12-ம் வகுப்பு வரை உள்ளது.
புவனேஸ்வரில் 1963-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி பிறந்தார். இவருக்கு ஓர் அக்கா உண்டு. அவருடைய தந்தை கொஞ்ச காலம் வணிகத்தில் ஈடுபட்டார். குடும்ப சம்பாத்தியம் என்பது, வீட்டில் அடுப்பெரிவதற்கே போதுமானதாக இருந்தது. பிஜய் குமார் டிஎம் பள்ளியில் சேர்ந்து கல்வி பயின்றார். அங்கு அவர் 1980-ம் ஆண்டு ப்ளஸ் டூ பாஸ் செய்தார். அந்தப் பள்ளி, மத்திய அரசின் பள்ளி என்பதால், கட்டணம் குறைவாக இருந்தது. பள்ளிப் படிப்பு முடிந்ததும், கட்டாக்கில் உள்ள ராவென்ஷா கல்லூரியில் சேர்ந்தார். 1982-ம் ஆண்டு பட்டப்படிப்பு முடித்தார்.
|
சாய் சர்வதேசப் பள்ளியில் 4,300 மாணவர்கள் படிக்கின்றனர். 600 ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் 1,000 பேர் பணியாற்றுகின்றனர்.
|
“நான் நன்றாகப் படித்தேன். எனவே, ஆண்டுக்கு 600 ரூபாய் வீதம் எனக்குக் கல்வி உதவித்தொகை கிடைத்தது. இந்தத் தொகையை வைத்து என்னுடைய டியூஷன் கட்டணத்தைச் செலுத்த முடிந்தது. இதர செலவுகளையும் செய்து கொள்ள முடிந்தது,” என சாய் சர்வதேச பள்ளியில் அமர்ந்தபடி பிஜைய் குமார் நம்மிடம் பேசுகிறார். “கல்லூரிப் படிப்பின் போது, சில மாணவர்களுக்கு டியூஷன் எடுத்தேன். அந்தப் பணத்தைக் கொண்டு, என்னுடைய தினசரி செலவுகளைக் கவனித்துக் கொண்டேன்.”
1982-ல் சாட்டர்ட் அக்கவுண்டன்சி படிப்பில் சேர்ந்தார். ஒரு தனியார் நிறுவனத்தில் ஆடிட்டர் பயிற்சி பெறுவதற்காக கொல்கத்தா சென்றார். அவருக்கு மாதம் 600 ரூபாய் உதவித் தொகை கிடைத்தது.
“என் தந்தையின் சம்பாத்தியம் போதுமானதாக இல்லை என்பதால், என் குடும்பத்திற்காக நான் செய்ய வேண்டிய கடமைகளையும் என் தோளில் சுமந்தேன்,” என்று நினைவு கூறுகிறார்.
“என்னுடைய உதவித் தொகையில் ஒவ்வொரு ரூபாயையும் நான் சேமித்தேன். கொல்கத்தாவில் பிரின்ஸ்பி காட் தெருவில் ஒரு போஸ்ட் ஆபீசில் பணியாற்றிய காவலாளியின் அறையில் நானும் தங்கி இருந்தேன். அவருக்கு மாதம் தோறும் 100 ரூபாய் வாடகையாகக் கொடுத்தேன். இந்த அறை, 10க்கு 8 ச.அடி என்ற அளவில் மிகச் சிறியதாக இருந்தது. ஒரே ஒரு பொதுக்கழிப்பறை இருந்தது. நாள் ஒன்றுக்கு இரண்டு வேளை சாப்பிடுவது கூட பிரச்னையாக இருந்த நாட்கள் அவை.
1985-ம் ஆண்டு சிஏ முடித்தபிறகு, புவனேஸ்வர் திரும்பி வந்த அவர், ஏகே சபாத் அண்ட் கம்பெனி என்ற ஆடிட்டிங் நிறுவனத்தை பங்குதாரருடன் சேர்ந்து தொடங்கினார். 1992-வரை அந்த நிறுவனம் செயல்பட்டது. விரைவிலேயே முன்னணி ஆடிட்டிங் நிறுவனமாக வளர்ந்தது, பல்வேறு வாடிக்கையாளர்களும் இருந்தனர். 1,000 ச.அடி இடத்தில், அந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. நான்கு ஊழியர்கள் பணியாற்றினர்.1992-ல் மாதம் தோறும், 10,000 ரூபாய் சம்பாதித்தார்.
இதற்கிடையே, 1987-ல் புனவேஸ்வர் நகரைச் சேர்ந்த ஷில்பி என்ற பெண்ணை திருமணம் செய்தார். அவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் பிறந்தார். அவரது மகள், எர்னஸ்ட்& யெங்க் என்ற நிறுவனத்தில் மூத்த ஆலோசகராகப் பணியாற்றுகிறார். இரட்டை மகன்களில் ஒருவர், புதுடெல்லியில் பெயின் அண்ட் கம்பெனியில் பணியாற்றுகிறார். இன்னொரு மகன் மும்பையில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றுகின்றார்.
|
கல்விதான் வெற்றிகரமான வாழ்க்கையைத் தமக்குத் தந்தது என்று பிஜய் குமார் உணர்ந்தார். எனவே, எதிர்காலச் சந்ததியினருக்கு தரமான கல்வி வழங்க வேண்டும் என்று விரும்பினார். ஆடிட்டர் பணியில் இருந்து விலகி, பள்ளி ஒன்றைத் தொடங்க திட்டமிட்டார்.
|
1992-ல் ஆடிட்டர் நிறுவனத்தின் பங்குதாரர் பொறுப்பில் இருந்து விலகினார். ஜே.எஸ்.எஸ். அசோஸியேட்ஸ் என்ற ஆடிட்டிங் நிறுவனத்தை புவனேஸ்வரில் தொடங்கினார். 2000-ம் ஆண்டில், மேலும் இரண்டு நிறுவனங்களை சேர்த்து எஸ்.ஆர்.பி அசோஸியேட்ஸ் என்ற நிறுவனத்தை உருவாக்கினார்.
“ஆடிட்டர் ஆக 15 ஆண்டுகள் பணியாற்றினேன். நம்பிக்கைக்குரிய நிறுவனமாக எங்கள் நிறுவனம் உருவெடுத்தது. 25 ஆடிட்டர்கள் வரை பணியாற்றினர்,” என்கிறார் பிஜய் குமார். “நால்கோ, ஃபால்கோன்ஸ் உள்ளிட்ட வாடிக்கையாளர்கள் எங்களிடம் இருந்தனர். 2000-மாவது ஆண்டில், நான் மாதம் 3 லட்சம் ரூபாய் சம்பாதித்தேன்.”
ஆனால், அவரது கவனம் எல்லாம், மாநிலத்தின் கல்வி நிலையைப் பற்றியதாக இருந்தது. கல்வி நிலையை உயர்த்துவதற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பினார். “கல்வி என்பது அடிப்படைத் தேவை என்பதை உணர்ந்தேன். அது மட்டும்தான் நாட்டில் மாற்றத்தைக் கொண்டு வரும். தனிமனிதனிடமும் மாற்றம் கொண்டு வரும்,” என்கிறார் பிஜய் குமார். “கல்விதான் என்னை வெற்றி அடையச் செய்தது. கல்வி எனக்கு பிடித்தமான ஒன்றானது. என்னுடைய ஆடிட்டர் தொழிலை தியாகம் செய்து, என்னுடைய ஆர்வத்தின் படி செயல்பட விரும்பினேன்.”
இந்தக் கல்வித் தொழிலதிபர், 1997-2006 காலகட்டத்துக்குள் உலகம் முழுவதும் உள்ள 250 பள்ளிகளுக்குச் சென்றார். ஒடிஷாவின் இப்போதைய நிலையை முன்னேற்ற என்ன செய்வது என்று திட்டமிட்டார். அதன்படி உலக நாடுகளின் கல்வி நிலையை அறிந்து கொள்ள இந்தப் பயணம் மேற்கொண்டார்.
2007-ம் ஆண்டில், தமது நிறுவனம் மூலம் மாதம் தோறும் 4 முதல் 5 லட்சம் ரூபாய் சம்பாதித்த நிலையில் ஆடிட்டர் பணியில் இருந்து விலகி, உலகத் தரம் வாய்ந்த ஒரு பள்ளி ஒன்றை திறக்கத் திட்டமிட்டார்.
வங்கியில் இருந்து 10 கோடி ரூபாய் கடன் பெற்று, புவனேஸ்வரில் எட்டு ஏக்கர் நிலம் வாங்கினார். மேலும் அடுத்து வந்த 5 ஆண்டுகளில் 60 கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்பட்டது. ஆண்டுக்கு 10 சதவிகிதம் வட்டி.
பள்ளியின் கட்டுமானப்பணிகள் 2007-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி தொடங்கின. இருபாலரும் படிக்கும் பள்ளியாக கடந்த 2008-ம் ஆண்டு ஏப்ரல் 4-ம் தேதி பள்ளித் தொடங்கப்பட்டது. நர்சரி முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். முதல் ஆண்டில், 410 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். 50 ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத 100 ஊழியர்களும் நியமிக்கப்பட்டனர்.
|
சாய் சர்வதேச பள்ளியின் முகப்புத் தோற்றம்.
|
இந்தப் பள்ளியின் 10 மற்றும் 12-ம் வகுப்புக்கு 2009-ம் ஆண்டு சி.பி.எஸ்.இ அங்கீகாரம் கிடைத்தது. இந்த இரண்டு வகுப்புகளிலும் படித்த முதல் பேட்ச் மாணவர்கள், 2011-ம் ஆண்டு படிப்பு முடித்தனர். “ஒவ்வொரு குழந்தைக்கும் கல்விக்காக 6 மணி நேரம் செலவிடுகிறோம். சுய முன்னேற்றத்துக்காக, தலா இரண்டு மணி நேரம் செலவிடுகிறோம்,” என்கிறார் பிஜய் குமார். “எல்லாவிதத்திலும் குழந்தைகள் முன்னேற வேண்டும் என்பதை நாங்கள் உறுதி செய்கிறோம்.”
சாய் சர்வதேச பள்ளியின் மாணவர்கள், பள்ளி இறுதித் தேர்வுகளில் சராசரியாக 86 சதவிகித மதிப்பெண்கள் பெற்று சாதனை படைக்கின்றனர். முதலிடம் பிடிப்பவர்கள் 90 சதவிகிதத்துக்கும் அதிகமான மதிப்பெண்கள் பெறுகின்றனர்.
2014-ம் ஆண்டு, சாய் குழுமம் சார்பில், புவனேஸ்வரில் சாய் சர்வதேச வணிகவியல் கல்லூரி தொடங்கப்பட்டது. 8 கோடி முதலீட்டில், கல்லூரி கட்டப்பட்டுள்ளது. இங்கு 250 மாணவர்கள் படிக்கின்றனர்.
இந்திய தர கவுன்சில் அமைப்பில் இருந்து 2017-ம் ஆண்டுக்கான டி.எல். தரத்துக்கான தங்கம் விருது உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் விருதுகள் கிடைத்தன. ஃபோர்ச்சூன் இந்தியாவின், ‘வெற்றியை உருவாக்கும் சிறந்த 50 பள்ளிகள்’ பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது. மாநில அரசிடம் இருந்து பசுமைப் பள்ளிக்கான விருதையும் பெற்றுள்ளது. கேம்ப்பிரிட்ஜ், பிரிட்டிஷ் கவுன்சில், யுனெஸ்கோ உள்ளிட்ட பல உலக அளவிலான அமைப்புகளுடனும் சாய் குழுமம் இணைந்து செயல்படுகிறது.
“எங்கள் பள்ளியில் வெளிநாட்டு மாணவர்கள் 100 பேர் படிக்கின்றனர்,” என்கிறார் பிஜய் குமார். “ அத்துடன் 5-12 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தங்கும் வசதியையும் உருவாக்கும் முயற்சியில் இருக்கிறோம்.”
|
மனைவி ஷில்பியுடன் பிஜய் குமார்.
|
இதற்காக கட்டடங்கள் கட்டும் பணி தொடங்கியுள்ளது. 60 கோடி ரூபாய் முதலீட்டில் கட்டப்படுகிறது. அடுத்த ஆண்டு முதல் விடுதி வசதி திறக்கப்பட உள்ளது.
அவரது மனைவி ஷில்பி, பெண்கள் ஆய்வு எனும் பிரிவில் பி.எச்டி பட்டம் பெற்றுள்ளார். சாய் சர்வதேச குழுமத்தின் உதவித் தலைவராக இருக்கிறார்.
வெற்றிக்கான அவரது மந்திரம்: “ஒவ்வொரு நாளும் நமக்கு புதிய சவால்களைக் கொண்டு வருகிறது. கடினமாக உழைப்பின் மூலம் அதனை எதிர்கொள்ளவேண்டும். திறனையும் முழுமையையும் அடைய முயற்சி செய்யுங்கள். வெற்றி பின்தொடரும்.’’
கல்வி மட்டும்தான், வாழ்க்கையின் மற்றும் விதியின் பாதையை மாற்ற முடியும் என்று வலுவாக நம்பும் ஒரு மனிதரின் வெற்றியின் ரகசியம் இதுதான்.
அதிகம் படித்தவை
-
இளமையில் புதுமை
சிந்தூரா போரா படித்தது கம்ப்யூட்டர் நெட் ஒர்க். ஆனால், உடல் நலன், சுகாதாரம் குறித்த ஆர்வத்தின் காரணமாக உடல் நஞ்சு நீக்கும் பழச்சாறு வகைகளை தயாரிப்பில் இறங்கினார். புதுமையும், பொறுமையும் அவருக்கு வெற்றி தந்தது. பிரனிதா ஜோனலாகெட்டா எழுதும் கட்டுரை
-
எடை, தடை, அதை உடை!
தீக்ஷா சாப்ரா என்ற இளம் பெண் திருமணத்துக்குப் பின் குண்டாகி விட்டார். ஒரு கட்டத்தில் அவருக்கு, ஆத்தாடி, நாம இவ்ளோ குண்டாகிவிட்டோமே என்று தோன்ற, உடல் எடையைக் குறைத்து மீண்டும் அழகியாக மீண்டார். தன் அனுபவத்தைக் கொண்டு அதையே மற்றவர்களுக்கு ஆலோசனையாக வழங்கி இப்போது பணம் ஈட்டுகிறார். சோஃபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை.
-
கீழடி: உரக்கக்கூவும் உண்மை
மதுரை அருகே கீழடியில் செய்யப்பட்ட அகழாய்வு தரும் செய்திகள் இந்திய வரலாற்றை இனி தெற்கே இருந்துதான் தொடங்கவேண்டும் என்பதற்கான உறுதியான ஆதாரங்கள். சங்ககாலத்துக்கும் முற்பட்ட இந்த நகர நாகரிகத்தைக் குறித்து ஆய்வாளர்கள், ஆர்வலர்களுடன் உரையாடி உதய் பாடகலிங்கம் எழுதும் கட்டுரை
-
ஒளிமயமான பாதை
மாதம் ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் ரப்பர் ஸ்டாம்ப் விற்கும் நபராக இருந்தவர் ஜிதேந்திர ஜோஷி. இந்தியாவுக்கு எல்.இ.டி தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்தியவர். இப்போது 8 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் தரும் எல்.இ.டி உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறார். மாசுமா பார்மால் ஜாரிவாலா எழுதும் கட்டுரை
-
வெற்றியாளரின் பயணம்
தன் பதினாறு வயதில் கையில் 25 ரூபாயுடன் கே.ஆர். ராஜா கோவைக்கு வந்து சேர்ந்தார். சாலையோரத்தில் படுத்து உறங்கினார். இன்று அவருக்கு மூன்று பிரியாணிக்கடைகளும் 10 கோடிரூபாய் மதிப்பிலான தங்கும் விடுதியும் உள்ளன. பி சி வினோஜ் குமார் எழுதும் கட்டுரை
-
அதிர்ஷ்டத்தைக் கொடுத்த பன்றிகள்
மோஹர் சாகு, தம்முடைய 12 வயதில், ஒரு கூலி தொழிலாளியாக அவரது வாழ்க்கையைத் தொடங்கினார். இப்போது 51 வயதில் ஒரு பன்றி வளர்ப்புப் பண்ணையின் உரிமையாளராக ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் வருவாயைத் தொடும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார். ஜி.சிங் எழுதும் கட்டுரை!