Milky Mist

Monday, 16 September 2024

அன்று நடைபாதையில் வசித்தவர், இன்று கோடீஸ்வர எழுத்தாளர் மற்றும் பேச்சாளர்

16-Sep-2024 By ஜி சிங்
கொல்கத்தா

Posted 15 Jan 2018

அவரது கதையைப் படிக்கும் போது, ஒரு பாலிவுட் திரைப்படக் கதையைப் போலத்தான் இருக்கிறது. பாலிவுட் சினிமாவில் கதாநாயகர்கள் எல்லாவித தடைகளையும் தகர்த்தெறிந்து, தங்களுடையை கனவுகளை நனவாக்குவார்கள். ஆனால், இந்த உண்மை வாழ்க்கை கதையானது, பெரும்பாலான சினிமா கதைகளை விடவும், இதயத்தைப் பிழியச் செய்யும் சோகக் காட்சிகள் நிறைந்தது.

ஜிலியன் ஹஸ்லாம் ( Jillian Haslam) கதை, ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படத்தின் கதையைப் போலவே இருக்கிறது. ஜிலியனும், நடைபாதைகளில் தூங்கி,எச்சில் இலைகளில் மிச்சம் மீதம் இருந்ததை சாப்பிட்டு வளர்ந்தவர். அந்த அளவுக்குஅவரது குழந்தை பருவத்தை ஏழ்மை ஆட்கொண்டிருந்தது. இதுபோன்ற துயரங்களில் இருந்து மீண்டு வெளியேறி,தமதுவாழ்க்கையின் வியத்தகு வெற்றிக்கதையை எழுதியிருக்கிறார்.

https://www.theweekendleader.com/admin/upload/18-11-17-02j1.JPG

ஜிலியன் ஹஸ்லாம், எழுத்தாளர், சுயமுன்னேற்ற பேச்சாளர். கொல்கத்தாவில் வறுமை சூழ்ந்த குழந்தைப் பருவத்தை கொண்டிருந்தவர். இன்றைக்கு கோடிகளைக்குவிக்கும் பேச்சாளர். கொல்கத்தாவில் அறக்கட்டளைப் பணிகளை மேற்கொள்கிறார். (புகைப்படங்கள்; மோனிருல் இஸ்லாம் மல்லிக்)


ஜிலியன் இன்றைக்கு வெற்றிகரமான தொழில் முனைவோர் ஆகியிருக்கிறார். எழுத்தாளர், பேச்சாளர் மற்றும் அறக்கட்டளை நடத்துபவராக இருக்கிறார். பிரிட்டனில் வாழ்கிறார். அவருடைய சுயமுன்னேற்ற உரைகளுக்காக 1,000 பவுண்ட் முதல் 5000 பவுண்ட் வரை (ரூ.86,500 முதல் ரூ.4,30,000 வரை) பெறுகிறார்.

இன்றைக்கு, அவர் தமது இரண்டாவது புத்தகத்துக்காகப் பணியாற்றுகிறார். அவரது தடையற்று சிந்திக்கும் மனம், ஆறு தொழில்களையும் மற்றும் 5 அறக்கட்டளைகளையும் வெற்றிகரமாக நடத்தும் திறனைக் கொடுத்திருக்கிறது. அவரது சுயமுன்னேற்ற உரைகளுக்கான ஆண்டு வருவாய் மட்டும் சராசரியாக 3 லட்சம் பவுண்ட்கள் (ரூ.2.5 கோடி) இந்த நிலைக்கு உயர்ந்த பின்னும், ஒருபோதும் தமது கொல்கத்தாவின் ஆரம்ப காலகட்ட எளிமையான, ஏழ்மையான வாழ்க்கையை ஜிலியன் மறந்ததில்லை. குழந்தைப் பருவத்தில் ஏழ்மையும், கொடூரமும் அவருடைய நிலையான தோழமையாக இருந்தன.

ஜிலியன் 1970-ம் ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி கொல்கத்தாவில் பிறந்தவர். ரோலண்ட் டெரண்ஸ் ஹஸ்லாம் மற்றும் மார்கரெட் அல்தேயே ஹஸ்லாம் தம்பதியின் 12 குழந்தைகளில் 5-வது குழந்தையாகப் பிறந்தார்.

“என் தந்தை, பிரிட்டிஷ் ராணுவத்தில் கேப்ட்டனாகப் பணியாற்றினார். 1947-ல் இந்தியா பிரிவினைக்குப் பின்னர், இந்தியாவை விட்டு வெளியேற மறுத்துவிட்டார்,” என்று தமது வாழ்க்கைக் கதையை ஜூலியன் சொல்லத் தொடங்கினார்.

“பிரிட்டிஷ் அரசு, என் தந்தை நாடு திரும்புவதற்கு ஒரு ஆண்டு அவகாசம் கொடுத்தது. ஆனால், என் தந்தை இந்தியாவையும், இந்த நாட்டு மக்களையும் நேசித்தார். எனவே இங்கு இருப்பதற்கு விரும்பினார்.”

“என்  தந்தையின் சகோதரி, தம் குழந்தைகளுடன் பிரிட்டன் திரும்பி விட்டார். ஆனால், என் தந்தை, இந்திய நாட்டின் மதிப்புகள் மீது அபார பற்றுக் கொண்டிருந்தார். எனவே, தம் குழந்தைகள் இந்தியாவில்  வளர்வதை அவர் விரும்பினார்.”

https://www.theweekendleader.com/admin/upload/18-11-17-02j3.JPG

ஜிலியன் தம்முடைய சுயமுன்னேற்ற உரைகளுக்காக 500 பவுண்ட் முதல் 5000 பவுண்ட் வரை வசூலிக்கிறார்.


அவர் தந்தையின் முடிவு காரணமாக, அவரிடம் இருந்த சேமிப்புகள், சொத்துகள் குறையத் தொடங்கின. அவர் பிரிட்டிஷ் பிரஜை என்பதால் எந்த ஒரு இந்திய நிறுவனமும், அவரது தந்தைக்கு வேலை கொடுக்க முன் வரவில்லை. எனவே, அவர்களின் நிதி நிலைமை மோசமான நிலையை நோக்கிச் சென்றது.

“நான் பிறந்தபோது, என் தந்தைக்கு 48 வயது. சின்ன, சின்ன வேலைகளைச் செய்து, தொடர்ந்து எங்கள் வீட்டில் அடுப்பு எரியும்படி பார்த்துக் கொண்டார்,” என்கிறார் ஜிலியன்.

“என் பெற்றோர், நான் பிறப்பதற்கு முன்பு ஏற்கனவே, கரோல் மற்றும் மினி என்ற இரண்டு பெண்குழந்தைகளை இழந்திருந்தனர். என் குடும்பத்தினர் நடைபாதைகளில் அல்லது ஏதாவது ஒரு வீட்டின் வெளிவராண்டாவில் இரவு தூங்குவார்கள், யாராவது ஏதாவது கொடுப்பதைத்தான் உண்பார்கள் என்பது எனக்கு இன்னும் நினைவு இருக்கிறது. எங்களது நிலைமை மிகவும் மோசம் அடைந்தது. ஏழை என்ற வார்த்தை கூட எங்களுக்கு ஆடம்பரமான வார்த்தை என்று தோன்றியது. அதை விட மோசமாக இருந்தோம்.” 

ஜிலியனுடன் பிறந்தவர்கள், கிட்டெர்பூரில் உள்ள செயிண்ட் தாமஸ் மகளிர் பள்ளிக்கு படிக்க அனுப்பப் பட்டனர். அங்கு அவர்களுக்கு சில வெளிநாட்டவர்களின் நிதி உதவியால் இலவச உணவும், தங்கும் இடமும் கிடைத்தது. அப்போது, ஜிலியன், அவரது தங்கை வானெனிசா, மூத்த சகோதரி டோனா ஆகியோர் பெற்றோருடன் தங்கி இருந்தனர். பள்ளியில் சேர்க்கும் வயது வரவில்லை என்பதால் அவர்கள் பெற்றோருடன் இருந்தனர்.

ஜிலியனுக்கு மூன்று வயதாக இருக்கும்போது, அவரது தந்தை, அவரது நண்பர் நாசரேத் என்பவர் உதவியுடன், வடக்கு கொல்கத்தாவில் உள்ள டம் டம் பள்ளியில் ஒரு ஆசிரியர் பணியைப் பெற்றார்.

“அந்தப் பள்ளிக்கு ஒரு ஆங்கில ஆசிரியர் தேவை. அந்தப் பதவிக்குப் போதுமான கல்வித் தகுதி என் தந்தைக்கு இல்லாதபோதிலும், தேவைக்கு ஏற்ப பொருத்தமானவராக இருந்தார்,” என்று விவரிக்கிறார் ஜிலியன்.

அவரது தந்தையின் சம்பளம் மாதத்துக்கு 500 ரூபாய். பள்ளியின் சார்பிலேயே 150 ச.அடி கொண்ட ஒரு சிறிய அறையைத் தங்குவதற்கு இலவசமாகக் கொடுத்தனர்.

அப்போது ஒரு மிகப்பெரிய துயரம் அவர்கள் குடும்பத்தைத் தாக்கியது. குழந்தைகளாக இருந்த ஜிலியனின் இரட்டை சகோதரிகளான கெம்பர்லே, ஆலன் இருவரும் திடீரென இறந்துவிட்டனர். பிறந்து ஆறுமாதங்களுக்கு உள்ளாகவே ஊட்டச்சத்து குறைபாட்டால் உயிரிழந்தனர்.

“அடக்கம் செய்ய உடல்களை எடுத்துச்செல்வதற்கு சவப் பெட்டிகள் ஏற்பாடு செய்வதற்கு கூட எங்களிடம் பணம் இல்லை,”என்று நினைவு கூறும் ஜிலியன், “என் தந்தை தேயிலை இலை வைக்கும் பெட்டியை வாங்கி, இறந்த என் இரட்டை சகோதரிகளை அதில் போட்டுப் புதைத்தார்,” என்கிறார்.

ஜிலியனின் இரண்டாவது மூத்த சகோதரி டோனா மிகவும் அழகாக இருப்பார். எனவே, அவரை நக்சலைட்கள் கடத்தத் திட்டமிருந்ததாகத் தெரியவந்தது.

“கிராமத்தினர், எங்களை ஓடிவிடும்படி சொன்னார்கள். என் தந்தை மனதளவில் மிகவும் நொறுங்கிப் போய்விட்டார். இரவு நேரத்தில் எல்லாவற்றையும் அப்படியே போட்டு விட்டு, வீட்டில் இருந்து ஓடி வந்தது இன்னும் எனக்கு நினைவு இருக்கிறது,”  எனும் ஜிலியன், “நாங்கள் டம் டம் ரயில்வே ஸ்டேஷன் சென்றோம். முதல் ரயில் வருவதற்காக சத்தமின்றி காத்திருந்தோம். அந்த இரவு மிகவும் கொடூரமான இரவு,” என்கிறார்.

https://www.theweekendleader.com/admin/upload/18-11-17-02j4.JPG

குடும்பம் வறிய நிலையில் இருந்தபோது, இந்த படிக்கட்டுக்கட்டுகளுக்குக் கீழேதான், ஜிலியன் குடும்பம் வசித்தது.


நான்கு குழந்தைகளை இழந்த நிலையில், ஜிலியன் தந்தைக்கு, ரயிலில் செல்லும்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

“முன்னாள் பிரிட்டிஷ் வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைக்கு என் தந்தையை அழைத்துச் சென்றோம். அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதன் விளைவாக அவரது ஒரு கண் பார்வையிழந்து விட்டதாகக் கூறினர். சிகிச்சைக்காக என் தந்தை அனுமதிக்கப்பட்டார்.”

ஜிலியனின் வாழ்க்கை மதிப்பு மிக்கதாக இல்லை. அவரது சகோதரிகள் மற்றும் தாய்ஆகியோர் கொல்கத்தாவின் பிரின்சிப் தெருவில் தங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

“ஒரு வீட்டின் மாடிப்படிகளுக்குக் கீழே நாங்கள் வசித்தோம். அதற்காக இரு பெண்களிடம் என் தாய் வேலைக்காரியாக இருக்க வேண்டி வந்தது,” என்கிறார் ஜிலியன்.

“அந்த மாடிப்படிகளுக்கு கீழே இருந்த பகுதி மிகவும் அழுக்காக, துர்நாற்றம் வீசும் இழிந்த இடமாக இருந்தது. எலிகள், கரப்பான் உள்ளிட்ட பூச்சிகள் இருந்தன. அந்த இடத்தில்தான் நாங்கள் சாப்பிடுவோம், படுப்போம். வீட்டு உரிமையாளர், அடிக்கடி என் தாயை அடிப்பார். என் தாயிடம் அதிக அளவுக்கு வேலை வாங்குவார்.”

அந்தப் பகுதியில் இருந்த ஆங்கிலோ-இந்திய சமூகத்தைச்சேர்ந்தவர்கள்தான் அவர்களுக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருந்தனர். அவர்களுக்கு அவ்வப்போது பணம் கொடுப்பார்கள். ஜிலியனின் தாய், தம் மகள் டோனாவை உறவினர் வீட்டில் தங்க வைத்திருந்தார். டோனா மிக அழகாக இருந்தார். எனவே, வீதியில் தங்குவது அபாயமானது என்பதால் உறவினர் வீட்டில் தங்க வைத்தார். இப்படி,அந்தக் கொடூரமான நாட்கள் தொடர்ந்தன.

“இழிவான சூழல்கள் காரணமாக, உடல் நலக் குறைவு ஏற்பட்ட நிலையில், மாடிப்படிகளுக்கு கீழே தங்கி இருந்தோம்,”என்றார் ஜிலியன்.

“அப்போது என் தாய், என்னையும், என் சகோதரி வானெனிசாவையும் அவருக்கு அறிமுகமான மேடம் க்ளியோபாஸ் வீட்டுக்கு அனுப்பினார். ஆனால், அந்தப் பெண்மணி, மிகவும் கொடுமையாக நடந்து கொண்டார். என்னை ஒரு இருண்ட டாய்லெட்டுக்குள் அனுப்பி பூட்டி விடுவார். அங்கு முழுவதும் கரப்பான்பூச்சிகளாக இருக்கும். நான் பயத்தில் அலறுவேன். உடையை ஈரம் செய்து விடுவேன்.”

ஜிலியனின் தாய், அவர்களைத் திரும்பவும், மாடிப்படிக்கு அருகில் தங்குவதற்கு  அழைத்துக் கொண்டார். பின்னர் சிறிது காலம் கழித்து, மூன்று மகள்களையும் செயிண்ட் தாமஸ் மகளிர் பள்ளியில் சேர்த்து விட்டார். அங்குதான் ஜிலியன் தமது 17வது வயதில் பள்ளிப் படிப்பை முடித்தார்.

https://www.theweekendleader.com/admin/upload/18-11-17-02j2.JPG

ஜிலியனின் வாழ்க்கையின் அடிப்படையில், ஒரு திரைப்படம் எடுப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன.


இதற்கிடையே, ஜிலியன் தந்தை உடல் நலம் தேறினார். திரும்பவும் அவருக்குப் பார்வை கிடைத்தது. ஸ்டெனோகிராபி படிப்பை முடித்த அவர், கொல்கத்தாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.

“என்னுடைய தந்தை, கிட்டர்பூரில், எட்டுக்கு பத்து அடி குடிசை ஒன்றை வாடகைக்குப் பிடித்தார்,” எனும் ஜிலியன், “அதற்கு 100 ரூபாய் மாத வாடகையாக இருந்தது. என் தந்தையால் அதைக் கூடக் கொடுக்க முடியவில்லை.”

“என் தந்தை மாதம் 750 ரூபாய் சம்பாதித்தார். சாப்பாடு, மின் கட்டணம், குழந்தைகளுக்கான செலவு என அந்தப் பணம் செலவானது. நாங்கள் குடியிருந்த இடத்தில் வசித்த மூன்றாயிரம் பேருக்கும் மூன்று டாய்லெட்கள்தான் இருந்தன. இந்த சூழ்நிலை மிகவும் கொடூரமாக இருந்தது.”

1989-ல் ஜிலியன் டெல்லிக்குச் சென்றபோது அவர் பக்கம் அதிர்ஷ்டம் திரும்பியது. அங்கு, ஜிலியனின் மூத்த சகோதரி, ஒரு தனியார் நிறுவனத்தில் செகரட்டரி வேலையில் இருந்தார்.

“நானும் செக்ரட்டிரியல் கோர்ஸ்முடித்திருந்தேன். எனவே, என் சகோதரியைப் போல நானும் 1990-ல் தனியார் நிறுவனத்தில் மாதம் 900 ரூபாய் சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தேன்,” என்கிறார் ஜிலியன். 

“அங்கு நான் ஒரு ஆண்டு வேலை பார்த்தேன். பிறகு, ஒரு ஜெர்மன் நிறுவனத்தில் மாதம் 1,500 ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்குச் சேர்ந்தேன். என் தாய் கேன்சரால் பாதிக்கப்பட்டதால், கொல்கத்தாவில் இருந்து,என் தாயை டெல்லிக்கு அழைத்து வந்தேன்.”

ஜிலியன் தந்தை கொல்கத்தாவில் இருந்தார். வேலையிலும் தொடர்ந்தார். அவருடன், இதர சகோதரிகள் இருந்தனர். ஜிலியன் தாய் 1997-ல் மரணம் அடைந்தார். 

“என்னுடைய தாயின் சிகிச்சைக்காக, ஒரு ஆண்டு சம்பளப்பணத்தை அட்வான்ஸ் ஆக பெற்றேன்,” என்று நினைவு கூறும் ஜிலியன், “அதன் பின்னர், ஆண்டு முழுவதும், ரெஸ்டாரண்ட்களில் பாடகியாகப் பணியாற்றினேன். இதன் மூலம் சம்பாதித்து, வாங்கிய அட்வான்ஸை திருப்பிக் கொடுத்தேன். இரண்டு சகோதரிகளுக்கும், எனக்கும் அந்தத் தொகை போதுமானதாக இருந்தது. “

1995-ம் ஆண்டு பேங்க் ஆப் அமெரிக்கா-வில் தலைமைச் செயல் அதிகாரி அம்பி வெங்கடேஸ்வரனின் எக்ஸ்க்யூட்டிவ் செக்ரட்டரியாக ஜிலியன் தேர்வு செய்யப்பட்டார். அப்போதுதான் அவர் வாழ்க்கையில் முக்கியமான திருப்பு முனை ஏற்பட்டது.

அந்த வேலையில் சேருவதற்கான போட்டியில் 250 பேர் பங்கேற்றனர். பல கட்ட நேர்காணல்களுக்குப் பின்னர் அவர் அந்த வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாதம் 60 ஆயிரம் ரூபாய் என அருமையான சம்பளம் கிடைத்தது. பேங்க் ஆப் அமெரிக்காவால் நடத்தப்படும் அறக்கட்டளைப் பணிகளையும் அவர் பார்த்துக் கொண்டார்.

ஐந்து ஆண்டுகள் வங்கியில் பணியாற்றிய பிறகு, 2000-ம் ஆண்டில் ஜிலியன் இங்கிலாந்து சென்றார். ஏபிஎன் ஆம்ரோ வங்கி நிர்வாக இயக்குனரின் எக்ஸ்க்யூட்டிவ் செகரட்டரியாகத் தேர்வானார். ஆண்டுக்கு 50 ஆயிரம் பவுண்ட் (43 லட்சம் ரூபாய்) சம்பளமாக கிடைத்தது. அப்போது அவருக்கே ஒரு செகரட்டரி இருந்தார்.

https://www.theweekendleader.com/admin/upload/18-11-17-02j5.JPG

ஜிலியன், உத்தரபாராவில் 5 கல்வி மையங்களை நடத்தி வருகிறார். அங்கு தெருவில் வசிக்கும் 300 சிறுவர்களுக்கு கல்வி கற்றுத்தருகின்றனர்.


வங்கியில் பணியாற்றிய, வெளிநாட்டு வாழ் இந்தியர், கார்த்திக் தாஸ்வானியை ஜிலியன் திருமணம் செய்து கொண்டார். 2005-ம் ஆண்டு, ஆர்.பி.எஸ் (ராயல் பேங்க் ஸ்காட்லாந்த்) நிறுவனம், ஏபிஎன் ஆம்ரோ வங்கியை வாங்கியது. மாறுபட்ட வேலை என்ற போதிலும், ஆர்.பி.எஸ் வங்கியில் 2012-ம் ஆண்டு வரை பணியாற்றினார்.

இதன்பின்னர், வேலையில் இருந்து ஜிலியன் ராஜினாமா செய்து விட்டார். இந்தியன் இங்கிலீஸ் (Indian.English) என்ற சுய சரிதைப் புத்தகத்தை எழுதினார். இந்தப் புத்தகம் உலகம் முழுவதும் 2,50,000 பிரதிகள் விற்பனை ஆனது. சுயமுன்னேற்றம் குறித்து உரை ஆற்றுவதற்கான பயிற்சியையும் பெற்றிருக்கிறார். தம் உரையைக் கேட்க வரும் பார்வையாளர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, நாள் ஒன்றுக்கு 500 பவுண்ட் முதல் 5000 ஆயிரம் பவுண்ட் (ரூ.43,000 முதல்ரூ.4.3 லட்சம்) வரை கட்டணம் பெறுகிறார்.

கொல்கத்தாவின் புறநகர் பகுதியான உத்தரபாரா பகுதியில் 5  கல்வி மையங்களை நடத்தி வருகிறார். அங்கு 300 குழந்தைகளுக்கு படிப்புச் சொல்லிக் கொடுக்கப்படுகிறது.  அறக்கட்டளைப் பணிகளையும் மேற்கொள்கிறார். ஜிலியனின் உண்மைக் கதையின் அடிப்படையில் ஒரு திரைப்படம் எடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

“மேலும், மேலும் அதிக மக்களைச் சென்றடைய வேண்டும், அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதுதான் என் குறிக்கோள். கடின உழைப்பு இருந்தால் எதுவும் சாத்தியம்தான்,” என்கிறார் ஜிலியன். அவரது வாழ்க்கை உண்மையில் ஊக்கம் அளிக்கக் கூடிய ஒன்றுதான். 


 
 
 
 
 

அதிகம் படித்தவை

  • paper flowers

    காகிதத்தில் மலர்ந்த கோடிகள்

    வெளிநாடுகளில் விதவிதமான பணிகள், தொழில்களில் ஈடுபட்ட ஹரிஷ், ராஷ்மி தம்பதி, இந்தியா திரும்பி வந்து காகிதப்பூக்களை தயாரித்து விற்பனை செய்கின்றனர். பல நாடுகளுக்கும் காகிதப்பூக்களை ஏற்றுமதி செய்கின்றனர். காகிதப்பூவில் உண்மையில் வாசனை இல்லை. ஆனால், இந்த தம்பதி தயாரித்து விற்கும் காகிதப்பூக்களால் பலரது வாழ்வில் வசந்தம் வீசியிருக்கிறது. உஷா பிரசாத் எழுதும் கட்டுரை

  • Doctor tastes succes in healthcare and hotelbusiness

    விரக்தியை வென்ற மனோசக்தி!

    மருத்துவப் பட்டமேற்படிப்பு முடித்து விட்டு அரசு வேலைக்காக காத்திருந்தார் டாக்டர் தாபாலி. வேலை கிடைக்காத விரக்தி மனநிலையை வென்றெடுத்து மணிப்பூர் மாநிலத்தின் முதல் மருத்துவ ஆய்வகத்தைதொடங்கி வெற்றிபெற்றார். ரீனா நாங்க்மைத்தம் எழுதும் கட்டுரை.

  • fashion success

    இளம் சாதனையாளர்

      பொறியியல் படித்திருந்தாலும் ஃபேஷன் துறை மீதுதான் நிதி யாதவுக்கு ஆர்வம். எனவே அந்த ஆர்வத்தின் அடிப்படையில் ஃபேஷன் தொழிலை தொடங்கி ஆண்டுக்கு ரூ.137 கோடி வருவாய் தரும் நிறுவனமாக கட்டமைத்துள்ளார். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை

  • Shaking the market

    புதிதாய் ஒரு பழைய பிராண்ட்!

    பழைய மொந்தையில் புதிய கள் என்று சொல்வதைப் போல, சுவீடன் நாட்டவரால் 93 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ஒரு நிறுவனத்தை புதுப்பித்து, வெற்றி பெற்றிருக்கின்றனர் டெல்லியைச் சேர்ந்த அகஸ்தியா டால்மியா, அமான் அரோரா எனும் இரண்டு இளைஞர்கள். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை

  • Business started with Rs 3,000 has grown into a Rs 55 crore turnover company

    கணினியில் கனிந்த வெற்றி

    கொல்கத்தாவில் அபிஷேக் ருங்டா என்னும் இளைஞர் 20 ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு ஐடி தொழிலை வெறும் 3000 ரூபாய் முதலீட்டில் தொடங்கினார். இண்டஸ் நெட் டெக்னாலஜீஸ் என்கிற அந்த நிறுவனம் இன்று 55 கோடிக்கும் மேல் வர்த்தகம் செய்கிறது. ஜி சிங் எழுதும் வெற்றிக்கதை

  • Madurai to Tokyo

     ஒலிம்பிக் தமிழச்சி!

    மதுரை மாவட்டத்தின் சின்னஞ்சிறிய கிராமமான சக்கிமங்கலத்தை சேர்ந்தவர் ரேவதி. பள்ளி அளவிலான தடகளப் போட்டிகளில் விளையாட்டு போக்கில் பங்கேற்றார். அவருக்குள் மறைந்திருந்த திறமையை கண்டறிந்த பயிற்சியாளர் கண்ணன் ரேவதியை ஒலிம்பிக் தகுதி வரை உயர்த்தியிருக்கிறார். ரேவதியின் வெற்றிக்கதை.