Milky Mist

Sunday, 7 December 2025

டாய்லட்கள் கட்டி அதன் மூலம் ஆண்டுக்கு 18 கோடி பார்க்கும் அபிஷேக் நாத்! புதுமையான கனவுகளைத் துரத்திய இளைஞர்!

07-Dec-2025 By குருவிந்தர் சிங்
ஹைதராபாத்

Posted 31 Jan 2021

அபிஷேக் நாத் செய்த ஆரம்ப கட்ட முயற்சிகள் வெற்றியை தரவில்லை. ஆனால், அவர் தொடர்ந்து முயற்சி செய்து தன் புத்திசாலித்தனமான யோசனை ஒன்றை ரூ.18 கோடி ஆண்டு வருவாய் தரும் தொழிலாக மாற்றியிருக்கிறார். இதன் வாயிலாக 1000 பேருக்கு வேலைவாய்ப்பும் அளித்துள்ளார்.

லூ கஃபே(Loo Cafe) என்ற வணிகப்பெயரில் ஆடம்பரமான 450 இலவச பொதுக்கழிப்பறைகளை அவரது நிறுவனம் கட்டியிருக்கிறது. பெரும்பாலும் தெலங்கானா மாநிலத்தில் அவை அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கழிவறையுடன் இணைக்கப்பட்டுள்ள கஃபேவில் இருந்தும்  மற்றும் அங்கே மேற்கொள்ளப்படும் விளம்பரம் வாயிலாகவும் வருவாய் ஈட்டுகிறார்.

அபிஷேக்நாத், லூ கஃபே நிறுவனர்(புகைப்படங்கள்: சிறப்பு ஏற்பாடு)

இந்த பயோ கழிவறைகள், பயிற்சி பெற்ற ஊழியர்களால் 24 மணி நேரமும் நிர்வகிக்கப்படுகிறது. கழிவறை அமைந்துள்ள வளாகத்தில் சுகாதாரத்தை கடைபிடிக்க ஐஓடி(இன்டர்நெட் ஆஃப்  திங்க்ஸ்) முறையில் துர்நாற்றத்தைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது.

கோவாவுக்கு சாலை வழியே பயணம் செய்தபோதுதான் இந்த திட்டத்துக்கான பொறி அபிஷேக் மனதுக்குள் உதித்தது. அங்கே நெடுஞ்சாலையில் இருந்த பொதுக்கழிப்பறைகள் மிகவும் மோசமான நிலையில் இருந்தன. அதற்கு தீர்வு காண்பது குறித்து அவர் சிந்தித்தார். அதன் விளைவாகவே இந்த லூ கஃபே பிறந்தது.

“நான் உடனடியாக ஐதராபாத்  மாநகராட்சி ஆணையரைத் தொடர்பு கொண்டேன்,” என்றார் அபிஷேக். “ஒரு கஃபே, வைஃபை இணைப்பு, சானிடரி நாப்கின் வழங்கும் இயந்திரம், மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தள வசதி ஆகியவற்றைக் கொண்ட பயோ கழிவறைகள் அமைக்கும் எங்களது திட்டத்தில் அவர் ஆர்வம் காட்டினார்.

” ஐதராபாத் பெருநகர மாநராட்சியானது தனியார்-அரசுதுறை பங்கெடுப்பு முறையில் கழிவறை கட்டுவதற்கான இடத்தை வழங்கியது. “முதல் கழிவறையை அமைக்க ரூ.25 லட்சம் செலவழித்தோம். அது 2018ஆம் ஆண்டு மே மாதம் திறக்கப்பட்டது,” என்றார் அவர். இந்த முறை வெற்றிபெற்றதை அடுத்து, தெலங்கானா முழுவதும் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து மேலும் பல கழிப்பறைகள் கட்டப்பட்டன. ஒரு கழிவறை ஸ்ரீநகரில் கட்டப்பட்டுள்ளது.

கழிவறைகளின் எண்ணிக்கை சீராக அதிகரித்தது. இரண்டரை ஆண்டுக்குள் 450 கழிவறைகள் கட்டப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியான கழிவறைகளும், எளிதாக உபயோகப்படுத்தும் வகையில் சாய்தள வசதியுடன் கூடிய மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறைகளும் கட்டப்பட்டன.

ஆடம்பர கழிவறை கட்டும் பணிகள் ஊடகங்கள் வாயிலாக கவனம் ஈர்க்கப்பட்டதால் அது குறித்து வெளி உலகுக்குத் தெரியவந்தது. இது அவர்களுக்கு கூடுதல் போனஸ் ஆகவும் இருந்தது. லூ கஃபே சங்கிலித்தொடர் நிறுவனத்தை கட்டமைக்கும் முன்பு பல்வேறு தோல்விகளையும்  அதிருப்திகளையும் அபிஷேக் சந்தித்திருக்கிறார்.
பெருநிறுவன பாணியில் அபிஷேக் தமது வணிகத்தை மேற்கொள்கிறார்


ஐதராபாத்தை பிறப்பிடமாக க் கொண்ட அபிஷேக், இளம் வயதிலேயே கற்பனைத் திறன் மிக்கவராக இருந்தார். புதுமையான கட்டமைப்புகளை உருவாக்கவேண்டும் என்று விரும்பினார். ஆனால், அவரது குடும்பமோ அவர் ஒரு பல்  மருத்துவ அறுவை சிகிச்சை நிபுணர் ஆகவேண்டும் என்று விரும்பியது. அவரது தந்தை, அவரது முன்னோர்கள் எல்லோருமே ஐந்து தலைமுறைகளுக்கு முன்பிருந்து இந்த துறையில்தான் இருந்தனர்.

அபிஷேக் 1997 ஆம் ஆண்டு லிட்டில் பிளவர் ஜூனியர் கல்லூரியில் 12 ஆம் வகுப்பு முடித்தார். பின்னர் கர்நாடகா மாநிலத்தின் பிடாரில் உள்ள எஸ்பி பாட்டீல் பல்மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். அது நான்கு ஆண்டு படிப்பு. ஆனால், அவர் 7 மாதங்களுக்குள் கல்லூரியில் இருந்து விலகி சொந்த ஊர் திரும்பினார்.

“நான் ஒரு போதும் ஒரு நல்ல பல்மருத்துவராக வர மாட்டேன் என்று நினைத்தேன், “ என்றார் அவர். “ஏதோ ஒன்றை கற்பனைத் திறனுடனும் புதுமையாகவும் கண்டுபிடித்து அதில் ஈடுபட வேண்டும் என்று எப்போதுமே நாம் விரும்பினேன். நான் கட்டமைப்பு முறைகளை உருவாக்குவதை விரும்பியதால்  பள்ளியில் அறிவியல் பயின்றேன். அதற்காக நான் பல விருதுகளையும் பெற்றேன்.”

“விருப்பம் இல்லாத எதிலும் சமரசம் செய்து கொள்வதில் எனக்கு விருப்பம் இல்லை. கல்லூரியில் சேர்ந்த ஏழு மாதங்களுக்குள் ஐதராபாத் திரும்பினேன்,” என்று தமது ஆரம்ப கட்ட இளம்பருவகாலகட்டத்தை நினைவு கூர்ந்தார்.

  பின்னர் அவர் ஹோட்டல் மேலாண்மை படிப்பது என தீர்மானித்தார். ஐதராபாத்தில் உள்ள ஸ்ரீ சக்தி ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கல்லூரியில் மூன்று ஆண்டு படிப்பில் சேர்ந்தார். 1999ஆம் ஆண்டு நடந்த வளாக நேர்காணலில் பெங்களூருவில் உள்ள தாஜ் குழும ஹோட்டல்களில் மேலாண்மை பயிற்சியாளராக வேலை கிடைத்தது. பின்னர் அவர் மும்பைக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார். தாஜ் பிரசிடண்ட்டில் மேலாளராக பதவி உயர்வு பெற்றார்.  

பெருநிறுவன உலகில் அவர் வளர்ச்சி பெற்று, நாட்டின் நம்பகமான முன்னணி ஹோட்டல் பிராண்ட் ஒன்றில் வேலை கிடைத்தபோதிலும், ஏதோ ஒன்றை இழந்து விட்டதாக அபிஷேக் கருதினார். சொந்தமாக ஏதேனும் ஒன்றை செய்ய வேண்டும் என்று நினைத்தார்.

“இளம் வயதிலேயே நல்ல சம்பளம்  பெற்றேன். ஆனால், சொந்தமாக ஏதேனும் தொடங்க விரும்பினேன். எனவே பணியில் இருந்து விலகுவதற்காக ராஜினாமா கடிதம் கொடுத்தேன். 2003ஆம் ஆண்டு ஐதராபாத் திரும்பினேன். என்னுடைய முடிவுக்கு என் குடும்பத்தினர் அதிருப்தி தெரிவித்தனர்,” என்று பகிர்ந்து கொண்டார்.  


வழக்கமான பொதுக்கழிப்பறைகள் போல் இல்லாமல் பிரகாசமான மற்றும் வண்ணமயமான முகப்புகளுடன் லூ கஃபேக்கள் திகழ்கின்றன


S விரைவிலேயே ஐதராபாத்தில் அவர் தம்முடைய கேட்டரிங் வணிகத்தைத் தொடங்கினார். பெருநிறுவனங்களுக்கு பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகளை வழங்கினார்.

”ஐதராபாத் நகரில் தகவல் தொழில்நுட்பத்துறை பெரும் அளவுக்கு வளர்ச்சி பெற்று வந்தது. அலுவலகங்களுக்கு பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகளை நான் விற்கத் தொடங்கினேன்,” என்றார் அவர். “ரூ.5000 மாத வாடகையில் 300 ச.அடி அலுவலக இடத்தில் 2 ஊழியர்களுடன் நான் செயல்பட்டேன். வணிகம் நன்றாக வளர்ச்சி பெற்றது. 2003ஆம் ஆண்டின் இறுதியில் என்னிடம் 40 ஊழியர்கள் பணியாற்றினர்,” என்றார் அவர்.

ஃபுட் ரிபப்ளிக் என்று தமது நிறுவனத்துக்குப் பெயர் வைத்திருந்தார். எனினும் 2004-ஆம் ஆண்டு தமது நிறுவனத்தை மூடிவிட்டார். பல லட்சம் ரூபாய்க்கு கடுமையான இழப்பு ஏற்பட்டதால் இந்த  முடிவை அவர் எடுத்தார்.

கோவாவுக்கு இடம் பெயர்வது என்று அபிஷேக் திட்டமிட்டார். அது ஒரு சுற்றுலா இடம் என்பதால், அங்கு மேலும் வணிக வாய்ப்புகள் கிடைக்கும் என்று அவர் எண்ணினார்.   “கடுமையான இழப்பு காரணமாக மீண்டும் அடிமட்டத்தில் இருந்து தொடங்கினேன். கலங்குட்டில் 200 ச.அடி இடத்தை வாடகைக்கு எடுத்தேன். ஒரு சிறிய உணவகத்தை அமைத்தேன்,” என்று நினைவு கூர்ந்தார்.

“நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. என்னால் சம்பளத்துக்கு ஊழியர்களை வைத்திருக்க முடியவில்லை. எப்படியோ ஒரு சமையல்காரரை மட்டும் நியமித்து விட்டேன். நானே வெயிட்டர் ஆக மாறினேன். வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறினேன். தவிர உணவகத்தின் பிற வேலைகளையும் செய்தேன்.”

கடின உழைப்பின் காரணமாக வணிகம் மெல்ல எழுந்தது. தமது ரெஸ்டாரெண்டை, அருகில் இருக்கும் சிறிய உணவகங்களுக்கான பின்புலத்தில் இயங்கும் ஒரு கிச்சன் ஆக மாற்றினார். .  “கோவாவில் பல இடங்களில் தங்கும் இடங்கள் அளிக்கப்பட்டன. ஆனால், உணவு வசதி அளிக்கவில்லை. எனவே அவர்களுக்கான சமையல் அறையாக செயல்பட்டு, அவர்களின் விடுதிகளில் தங்குவோருக்கு உணவு விநியோகம் செய்தேன்,” என்றார்.

அதே ஆண்டில் இன்னும் ஒரு ரெஸ்டாரெண்டை அவர் தொடங்கினார். 2006ஆம் ஆண்டில் ஒரு முதலீட்டாளருக்கு அவர் உதவி செய்தார். அவர் கோவாவில் ஒரு ஹோட்டல் கட்டினார்.

“ஹோட்டல் கட்டும் பணி எனக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. ஹோட்டல் உள் அலங்காரம் முதல் உணவு மெனுவை தீர்மானிப்பது வரை அனைத்தையும் நான் திட்டமிட்டேன்.”

ஒவ்வொரு கழிப்பறையும் ஒரு கஃபே,  ஆண், பெண்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான தனித்தனி  அறைகளையும் கொண்டிருக்கின்றன  

ஹோட்டல் மற்றும் உணவுத் தொழிலில் அவரது அனுவபமானது, லூ கஃபே சங்கிலித்தொடர் நிறுவனத்தை ஐதராபாத்தில் 2018 ஆம் ஆண்டு தொடங்குவதற்கு உதவிகரமாக இருந்தது.

கோவாவில் இரண்டு ரெஸ்டாரெண்ட்களை ஒப்பந்த அடிப்படையில் கொடுத்து விட்டு அபிஷேக் 2007ஆம் ஆண்டு ஐதராபாத் திரும்பினார்.  பின்னர் ஒரு எம்என்சி நிறுவனத்தில் பகுதி மேலாளராக சேர்ந்தார். 2010ஆம் ஆண்டு தென்கிழக்கு ஆசியாவுக்கான நிறுவனத்தின் இயக்குநர் ஆனார். மும்பைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

இரண்டு ஆண்டுகள் கழித்து ஒரு கடல் சார் நிறுவனத்தில் கரையில் இருந்து சேவைகள் வழங்கும் நிறுவனத்தின் வணிக வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள் இயக்குநராக மும்பையில் பணியில் சேர்ந்தார். 2016ஆம் ஆண்டு மத்தியில் அங்கிருந்து விலகும் முன்பு நான்கு ஆண்டுகள் வரை பணியாற்றினார். பின்னர் ஐதராபாத் திரும்பினார்.

இக்ஷோரா பெருநிறுவன சேவைகள் பிரைவேட் லிமிடெட் என்ற வசதிகள் அளிக்கும் மேலாண்மை நிறுவனத்தை 10 ஊழியர்களுடன் தொடங்கினார். இரண்டு ஆண்டுகள் கழித்து லூ கஃபே என்ற யோசனை அவருக்குள் உதித்தது. புதுமையான  கட்டமைப்புகளை கட்டுவதில் இருந்த தமது திறனை அங்கு உபயோகித்தார்.
பல வருட உழைப்புக்குப் பிறகு, அபிஷேக் இப்போது பொதுவெளியிலும் கவனத்தை ஈர்த்துள்ளார்

முன்பே தயாரிக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு அவர் கழிவறைகளைக் கட்டமைத்தார். இவற்றை உடனே கலைத்து எடுத்துச் சென்று மீண்டும் எங்கு வேண்டுமானாலும் கட்டமைத்துக் கொள்ள முடியும். உணவுத்துறையில் அவரது அனுபவம் இந்த நல்ல கஃபேயை அமைக்கவும் அவரது வணிகம் நீடித்திருப்பதற்கான குறிப்பிட்ட  வருவாய் கிடைப்பதற்கும் உதவுகிறது.

வளர்ந்து வரும் தொழில்முனைவோருக்கு அவரது அறிவுரை: நீங்கள் என்ன செய்தாலும் அதனை விரும்பிச் செய்யுங்கள். ஒவ்வொரு தோல்வியும் ஒரு கற்றுக்கொள்ளல், அது மட்டுமின்றி வெற்றியை நோக்கி ஒரு முன் அடி எடுத்து வைப்பதும் ஆகும். உறுதியுடன் இருங்கள் உங்கள் கனவுகளைத் துரத்த முடிந்தவரை அதிக முயற்சி செய்யுங்கள்.

 
 
 
 
 

அதிகம் படித்தவை

  • born in a small town he is now fighting brands like reebok and nike

    விளையாட்டாக ஒரு வெற்றி!

    அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரோஷன் பெய்த், விளையாட்டு ஆர்வம் கொண்டவர். இன்றைக்கு விளையாட்டு வீரர்களுக்கான ஆடைகள் உற்பத்தி செய்யும் இரண்டு வெற்றிகரமான நிறுவனங்களின் உரிமையாளர். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை

  • success story of poorna sundari ias

    தன்னம்பிக்கையே கண்களாக...

    மதுரையைச் சேர்ந்த பூரண சுந்தரி 2019-ம் ஆண்டுக்கான ஐ.ஏ.எஸ் தேர்வில் இந்திய அளவில் 286-ம் இடம் பெற்றிருக்கிறார். மிக எளிமையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அவர், 6 வயதில் பார்வையை இழந்தவர். இருப்பினும் பெற்றோர், தோழிகள், ஆசிரியர்கள் அளித்த ஊக்கத்தில் இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்.

  • father sold fruits in bus stand, son ceo of Rs 220 crore fruit chain

    கனிந்த தொழில் கனவு!

    கோவை அருகே கிராமத்தில் இருந்து 1950களில் படிப்பைத் துறந்து விட்டு பழக்கடையில் இரண்டு சிறுவர்கள் வேலைக்குச் சேர்ந்தனர். இன்றைக்கு அவர்கள் பெரிய தொழில் அதிபர்களாக இருகின்றனர். அக்குடும்பத்தின் அடுத்த தலைமுறை இளைஞர் செந்தில் இத்தொழிலைத் தொடர்கிறார். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை

  • Home made food flowing unlimited

    வீட்டுச்சாப்பாடு

    சுவையான மட்டன் குழம்பு, ரத்தப் பொறியல், குடல் கறி, தலைக்கறி, ஈரல், பிராய்லர் சிக்கன், நாட்டுக்கோழி சிக்கன் வகைகள், மீன் குழம்பு... ஆ... அம்புட்டும் அன்லிமிடட்! எங்கே எங்கே...? ஈரோடு மாவட்டம் சீனாபுரத்தில் ஒரு தம்பதி வீட்டிலேயே நடத்தும் புகழ்பெற்ற உணவகம் பற்றி உஷா பிரசாத் எழுதும் கட்டுரை

  • Former child worker in a flower farm is now a rich man

    பூக்களின் சக்தி

    தெலுங்கானாவில் இருக்கும் தன் ஊரைவிட்டு பதினாறு வயதில் பொல்லாபள்ளி ஸ்ரீகாந்த் பெங்களூர் மலர்ப்பண்ணை ஒன்றில் வேலை பார்க்க வந்தார். மாத சம்பளம் 1000 ரூ. இன்று அவர் ஆண்டுக்கு 70 கோடி ருபாய்க்கு விற்பனை செய்யும் முன்னணி மலர் உற்பத்தியாளர். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை

  • He invested Rs 20,000, but today earns in crores

    மாற்று யோசனை தந்த வெற்றி

    ஐஐடி மாணவர் ரகு, அமெரிக்கா செல்லும் திட்டத்தை கைவிட்டு, 20 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் வாகனங்களில் விளம்பரம் செய்யும் மாற்று யோசனையில் ஒரு நிறுவனம் தொடங்கினார். இன்றைக்கு அவரது நிறுவனம் ஆண்டுக்கு 32 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறது. டெல்லியில் இருந்து பார்தோ பர்மான் எழுதும் கட்டுரை