ஜாக்கெட் விற்பனையில் ராக்கெட் வேகம்! சக்கைபோடு போடுகிறார் சனீன்!
11-Sep-2024
By உஷா பிரசாத்
பெங்களூரு
எமிரேட் ஃபேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி சனீன் ஜவாலி, தமக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து ஒரு தொழிலதிபர் ஆக வேண்டும் என்று விரும்பினார். இன்றைக்கு அவர் தமது கனவு மெய்ப்பட வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
வெர்ஸாடில் (Versatyl) என்ற அவருடைய ஜாக்கெட் பிராண்ட், பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. புதுமையான வடிவமைப்பு, பயன்படுத்துவதற்கு ஏற்ற அம்சங்கள், ஆகியவற்றின் காரணமாக ரீட்டெய்ல் கடைகளிலும் அமேசான், ஃபிளிப்கார்ட் மற்றும் ஸ்னாப்டீல் போன்ற ஆன்லைன் தளங்கள் வழியாகவும் இவை அதிக அளவு விற்பனை ஆகின்றன.
|
சனீன் ஜவாலி, தம்முடைய ஐபிஎம் வேலையை விட்டு விலகி, 2010-ம் ஆண்டு, நண்பர் வைத்திருந்த கார்மென்ட் உற்பத்திப் பிரிவில் பங்குதாரராகச் சேர்ந்தார். இப்போது அவரே சொந்தமாக அந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார். (புகைப்படங்கள்: எச்.கே.ராஜசேகர்)
|
வெர்ஸாடில் ஜாக்கெட்டுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் நல்ல தேவை உள்ளது. ஆன்லைனில் தினந்தோறும் 50 ஜாக்கெட்களை விற்பனை செய்கின்றனர். “அமேசானில் முதல் 5 விற்பனையாளர்களில் ஒருவராக நாங்கள் இருக்கிறோம்,” என்கிறார் சனீன்.
இந்த நிறுவனத்தில் சனீன் 2010-ம் ஆண்டு 2 லட்சம் ரூபாய் முதலீடு செய்தார். இன்றைக்கு 32 வயதாகும் சனீனுக்கு சொந்தமாக 1.5 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் ஈட்டும் நிறுவனமாக அது வளர்ந்திருக்கிறது. இதில் 45 பேர் வேலை பார்க்கின்றனர்.
அவர் முதலில் இந்த நிறுவனத்தைத் தொடங்கியபோது, யாரும் அவருடைய யோசனைக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.
பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி, 25-வது வயதில் ஐ.பி.எம்., நிறுவனத்தில் நெட்ஒர்க் இன்ஜினியர் பணியை விட்டு சனீன் விலகினார். இதன் பின்னர், பெங்களூருவில் ஆர்.டி.நகரில் கார்மென்ட் உற்பத்தி நிறுவனம் வைத்திருந்த நண்பரின் நிறுவனத்தில் பங்குதாரராகச் சேர்ந்தார். 2011-ம் ஆண்டு அவருடைய நண்பர் தொழிலை விட்டு விலகினார். பின்னர் அந்த நிறுவனத்தின் முழு கட்டுப்பாடும் சனீன் வசம் வந்தது.
“ஐ.பி.எம் நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகள் வேலையில் இருந்தேன். ஆனால், 9 முதல் 5 மணி வரையிலான அந்த வேலை எனக்கானது அல்ல என்று உணர்ந்தேன்,”என்று விவரிக்கிறார்.
சனீன் குடும்பத்தினர் ஹூப்பாளி பகுதியைச் சேர்ந்தவர்கள். அவரது தந்தை கார்மென்ட் வர்த்தகம் செய்து கொண்டிருநார். தொழிலை விரிவாக்கம் செய்வதற்காக பெங்களூரு வந்தார். அவர்கள் பெங்களூரு வந்த போது சனீன் 5 வயதுக் குழந்தை. அவருடைய தாய், ஓய்வு பெற்ற அறிவியல் ஆசிரியை. தம்முடைய மகன் இன்ஜினியராக வரவேண்டும் என்றும், ஒரு பெருநிறுவனத்தில் பெரிய வேலையில் இருக்க வேண்டும் என்றும் கனவு கண்டு கொண்டிருந்தார்.
பெங்களூருவில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜியில் அவர் கம்ப்யூட்டர் அறிவியலில் பொறியியல் படித்தார். ஐ.பி.எம்-ல் வேலை கிடைத்தது. ஆனால், சொந்தமாக ஏதாவது தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் அவரை, நண்பரான முகமது என்பவருடன் இணைய வைத்தது. பெங்களூரு கிரியேஷன்ஸ் என்ற பெயரில் கார்மென்ட் தொழில் செய்து வந்த அவருடன் சனீன் பங்குதாரராகச் சேர்ந்தார்.
|
சொந்த பிராண்ட் ஜாக்கெட்களை தயாரிப்பது மட்டுமில்லாமல் பிளையிங் மெஷின், ரக்கர்ஸ் மற்றும் ஏரோ ஆகிய முன்னணி பிராண்ட்களின் பதிவு செய்யப்பட்ட முகவை நிறுவனமாகவும் எமிரேட்ஸ் ஃபேஷன்ஸ் உள்ளது.
|
“முகமது உடன் இணைந்து தொழில் செய்வதற்கு என்னுடைய பெற்றோர் தொடக்கத்தில் விரும்பவில்லை. குறிப்பாக என் தாய், பெரும் பிரச்னையாக இருந்தார். அவரை ஒரு வழியாகச் சமாதானப்படுத்திய பின்னர்தான் நான் வேலையில் இருந்து விலகினேன்,” என்கிறார் சனீன்.
ஐ.பி.எம். நிறுவனத்தில் மாதம் 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார். முகமதுவின் தொழில் அந்த சமயத்தில் இழப்பைச் சந்தித்து வந்தது. அந்த சமயத்தில் தொழிலுக்குப் புத்துணர்வு ஊட்டும் விதமாக சனீன் தம்முடைய சேமிப்பில் இருந்த 2 லட்சம் ரூபாயை முதலீடு செய்தார்.
படிக்கும் போது, சனீன் பகுதி நேரமாகத் தொழில் செய்து வந்தார். கம்ப்யூட்டர் சர்வீஸ், இன்ஸ்டாலேஷன், விற்பனை ஆகியவற்றில் ஈடுபட்டு வந்தார். அதில் வர்த்தகம் செய்யும் முயற்சியில் இருந்தார். வெப் டிசைன் புரஜக்ட்களையும் எடுத்துச் செய்தார்.
“ஒரு மாணவனாக, கொஞ்சம் பணம் சம்பாதித்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. கம்ப்யூட்டர்கள் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கொண்ட ஷோரூம் வைக்க வேண்டும் என்று நான் விரும்பினேன்,” என்று விவரிக்கிறார் சனீன். “என் பெற்றோரின் அழுத்தம் காரணமாக, என் படிப்பில் நான் கவனம் செலுத்தினேன். எனவே அந்த வேலையை ஈடுபாட்டுடன் செய்ய முடியவில்லை.”
விப்ரோ, ஐ.பி.எம்., சிஸ்கோ உள்ளிட்ட பல பெரிய நிறுவனங்களில் பதிவு பெற்ற முகவராக பெங்களூர் கிரியேஷன்ஸ் இருந்தது. அவர்களுக்காக பிராண்ட் டி-சர்ட்ஸ், ஜாக்கெட்களை தயாரித்துக் கொடுத்தனர். “உற்பத்தி, தயாரிப்பு, ஆர்டரை நிர்வகித்தல், வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றைப் புரிந்து கொள்வதற்கு எனக்கு ஒன்றரை ஆண்டுகள் ஆனது,” என்கிறார் சனீன்.
சனீன் தொழிலை விரிவு படுத்தினார். விரைவிலேயே முன்னணி பிராண்ட்களான பிளையிங் மெஷின், ரக்கர்ஸ், ஏரோ மற்றும் அரவிந்த் மில்ஸ் போன்ற நிறுவனங்களின் முகவராகவும் மாறினர்.
2010-ம் ஆண்டு மூன்று ஊழியர்கள்தான் இருந்தனர். 2012-ல் ஊழியர்கள் எண்ணிக்கை 20 ஆனது. எமிரேட் ஃபேஷன்ஸ் என்ற பெயரின் கீழ் கம்பெனியைப் பதிவு செய்தனர். சனீன், அவரது தந்தை இருவரும் நிறுவனத்தின் இயக்குனர்களாக இருந்தனர்.
2012-ம் ஆண்டு சனீன் கூடுதலாக 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்தார். அவருடைய தந்தை 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்தார். அதே போல நண்பர்கள்,உறவினர்களும் முதலீடு செய்தனர். பெங்களூர் கிரியேஷன்ஸ் ஆரம்பத்தில் 500 ச.அடி வாடகை இடத்தில் இயங்கியது. 2012-ல் அதே பகுதியில் 4000 ச.அடி வாடகை இடத்தில் செயல்பட்டது.
|
2016-ம் ஆண்டு நவம்பரில், முதன் முதலாக பாலியஸ்டரால் ஆன ஜாக்கெட்களை, வெர்ஸாடில் டிராவல் ஜாக்கெட் என்ற பெயரில் சனீன் தொடங்கினார். அப்போதில் இருந்து அவரது நிறுவனம் வளர்ச்சியடையத் தொடங்கியது.
|
“அரவிந்த் மில்ஸின் பல்வேறு பிராண்ட்களுக்காக மாதம் தோறும் 3000 ஜாக்கெட்களை நாங்கள் தயாரிக்கிறோம். டாடா அட்வான்ஸ்டு மெட்டீரியல் நிறுவனத்துக்காக இந்தியப் பாதுகாப்புத்துறையில் பயன்படும் குண்டு துளைக்காத ஆடைகளை தயாரிக்கிறோம்,” என்கிறார் சனீன்.
2012-ம் ஆண்டில் இருந்து எமிரேட் ஃபேஷன்ஸ் நிறுவனம் வளர்ச்சியில் இருந்து திரும்பிப் பார்க்கவில்லை. ஜாக்கெட்களில் தொடங்கி, டிரவுசர்கள், சட்டைகள், பெருநிறுவனங்கள் மற்றும் கல்லூரிகள், பள்ளிகளுக்கான யூனிபார்ம்களையும் இந்த நிறுவனம் தயாரிக்கத் தொடங்கியது.
தாமதமாகப் பணம் கிடைப்பதன் காரணமாக, முன்னணி பிராண்ட் நிறுவனங்களுக்கு மட்டும் சப்ளை செய்வதை எமிரேட் ஃபேஷன்ஸ் முழுமையாக நம்பி இருக்கமுடியவில்லை.
எனவே அப்போது,புதிய முறை குறித்தும், ஜாக்கெட்டுக்கான புதிய வடிவமைப்புகள் குறித்தும் சனீன் இணையதளத்தில் நீண்ட நேரங்கள் தேடினார். ஏதாவது வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்று தீர்மானித்தார்.
“மிகவும் தனித்தன்மையான அமெரிக்காவின் பெரிய பிராண்ட் ஆன ஸ்காட் இ வெஸ்ட்(SCOTTeVEST)- நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 250 டாலர் விலை உள்ள ஜாக்கெட்டை பார்த்தேன். பயணம் செய்வோருக்கான பல பாக்கெட்களைக் கொண்ட ஜாக்கெட்களை தயாரிப்பதில் அவர்கள் ஸ்பெஷலிஸ்ட் ஆக இருந்தனர்,” என்று விவரிக்கிறார் சனீன். “அதே போன்ற ஜாக்கெட்டை இந்தியாவில் தயாரிக்க வேண்டும் என்று நான் தீர்மானித்தேன். ஆனால், என்னுடைய சொந்த டிசைனில் அதை உருவாக்க வேண்டும் என்றும் வாடிக்கையாளர்கள் வாங்குவதற்கு ஏற்ற விலையில் இருக்க வேண்டும் என்றும் நினைத்தேன்.”
அதே நாளில், காலை 1.30 மணிக்கு அவர் முதல் டிசைனை முடித்தார். “நள்ளிரவுக்குப் பின்னர், முதல் டிசைனை முடித்து இறுதி செய்தேன். அடுத்த நாள் காலை, மாதிரி ஜாக்கெட்டை தயாரித்து முடித்தோம்,” என்று பகிர்ந்து கொள்கிறார்.
எமிரேட் ஃபேஷன்ஸ் நிறுவனம், வெர்ஸ்டைல் டிராவல் ஜாக்கெட் என்ற பெயரில், 18 பாக்கெட்கள் கொண்ட பாலீஸ்டர் ஜாக்கெட்டை 2016-ம் ஆண்டு நவம்பரில், மக்களிடம் நிதி சேகரிக்கும் முறையின்படி (crowd funding) வெளியிட்டது. வாடிக்கையாளர்கள் இந்த ஜாக்கெட்டை வாங்குவதற்கு முன்பதிவு செய்தனர்.
“ முன்கூட்டியே பணம் வந்துவிட்டதால் மூலதன தேவை என்பது இல்லை. இந்த முறையிலான மாற்றத்தில், எங்களுக்கு மிகவும் குறைந்த செலவுதான் ஆனது,” என்று விவரிக்கிறார் சனீன். “பெரிய லாபத்தை பெறுவதை விடவும், ஒரு பெரிய பிராண்டை முன்னெடுப்பது என்று தீர்மானித்தோம். குறைந்த செலவின் பயன் முழுவதும் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும்படி செய்தோம்.”
ஆன்லைனில் ஜாக்கெட்களை வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே பதிவு செய்தனர்.1999 ரூபாய் விலையான ஜாக்கெட்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. முன்பதிவு செய்து காத்திருந்த வாடிக்கையாளர்களுக்கு இரண்டு மாதங்கள் கழித்து ஜாக்கெட்கள் டெலிவரி கொடுத்தனர்.
“இரண்டு மணி நேரத்துக்குள் 100 ஆர்டர்கள் பெற்றோம். ஒரு மாத்துக்குள் 1000 ஆர்டர்கள் பெற்றோம். 19 லட்சம் ரூபாய் எங்களுக்குக் கிடைத்தது. ஜாக்கெட்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்த பின்னர், மிகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது,” என்று நினைவு கூர்கிறார் சனீன்.
2017-ம் ஆண்டு பிப்ரவரியில் இரண்டாவது நிதி குவிப்பு முறையில், இந்த நிறுவனத்துக்கு 800 ஜாக்கெட்களுக்கான ஆர்டர் கிடைத்தது. 45 நாட்கள் முன்பதிவில் 16 லட்சம் ரூபாய் கிடைத்தது. வெர்ஸாடில் டிராவல் ஜாக்கெட்டுக்கு, வெவ்வேறு பகுதிகளில் உள்ள வெவ்வேறு வயதினரிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.
“முதிய வயதில், கண்கண்ணாடி, சாவிகள், செல்போன் ஆகியவற்றை எங்காவது தொலைத்து விடுகிறார், எனவே, அவற்றையெல்லாம் வைக்கும்படி 80 வயதான தன் மாமனாருக்கு ஜாக்கெட் வேண்டும் என்று கேட்டு, எங்களுக்கு ஒரு பெண் போன் செய்தார்,” என்று புன்னகைக்கிறார் சனீன்.
|
இந்திய உலக சாதனை, இந்தியன் புக் ஆப் ரிக்கார்ட்ஸ் என்று, வெர்ஸாடில் பிராண்ட் இரண்டு புதிய சாதனைகளைப் பெற்றுள்ளது
|
“70 குடும்பங்கள் மட்டும் வசிக்கும் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து இன்னொரு ஆர்டர் பெற்றோம். அந்த கிராமத்தில் இன்டர்நெட் உபயோகிக்கத் தெரிந்தவர்கள் மூன்று பேர்தான். அவர்களில் ஒரு பெண், எங்கள் பொருட்களை ஃபேஸ்புக்கில் பார்த்து எங்களைத் தொடர்பு கொண்டு, தன் கணவருக்காக ஜாக்கெட் ஆர்டர் செய்தார். இந்த தருணம்தான், உண்மையில் நாங்கள் சாதித்திருக்கிறோம் என்று தெரிந்தது.”
ஸ்காட் இ வெஸ்ட் பிராண்ட் ஜாக்கெட்கள் பல பாக்கெட்களை கொண்டிருந்தன. வெர்ஸாடில் டிராவல் ஜாக்கெட், அகற்றக்கூடிய ஹூட் மற்றும் கையுறைகள், சுவாச வசதி கொண்ட பகுதி உள்ளிட்டவற்றைக் கொண்டிருந்தது.
ஜாக்கெட் முழுவதையும் ஒரு பவுச்சுக்குள் அடக்கும் வகையில் இருக்கும். அதை ஒரு பேக் ஆகவும் உபயோகிக்கலாம். கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் துணியால் இது தயாரிக்கப்படுகிறது.
இந்த முதல் டிசைன் பெரும் வெற்றி பெற்றது. எனவே, வெர்ஸாடில் பாம்பர் என்ற இரண்டாவது டிசைனை சனீன் வடிவமைத்தார். இது 100 சதவிகிதம் தண்ணீரில் இருந்து பாதுகாப்பாக இருக்கும்.
“20 பாக்கெட்களுடன், தண்ணீர் உள்ளே நுழையாதவாறு பாம்பர் தயாரிக்கப்பட்டது. மழைக்காலத்தைக் கருத்தில் கொண்டு, 2017-ம் ஆண்டு ஜூன் மாதம், முன்பதிவு தொடங்கியது. 30 நாட்கள் முன்பதிவு நடைபெற்றது. இதன் மூலம், நாங்கள் 600 ஜாக்கெட்களுக்கு ஆர்டர் பெற்றோம்,” என்று விவரிக்கிறார் சனீன்.
இந்த ஜாக்கெட் விலை 2499 ரூபாயாக இருந்தது. பாம்பரைத் தொடர்ந்து உலகின் மிகவும் லேசான எடை கொண்ட அதாவது 179 கிராம் கொண்ட வெர்ஸ்டைல் ஃபீதர் என்ற ஜாக்கெட்டை தயாரித்தனர். இதன் விலை 549 ரூபாய். இதற்கு 45 நாட்களில் ஆயிரம் ஆர்டர்கள் முன்பதிவு செய்யப்பட்டன.
இந்திய உலக சாதனை, இ்ந்தியா புக் ஆப் ரிக்கார்ட்ஸ் என்ற புதுமைக்கான இரண்டு சாதனைகளை வெர்ஸாடில் படைத்துள்ளது. “லிம்கா புக் ஆப் ரிக்கார்ட்ஸ் சாதனைக்கும் நாங்கள் விண்ணப்பித்துள்ளோம்,” என்கிறார் சனீன்.
|
ஜி.பி.எஸ். வசதியுடன் கூடிய ஸ்கூல் பேக் தயாரிப்பது என்று சனீன் திட்டமிட்டுள்ளார். இதன் மூலம் பெற்றோர் தங்கள் குழந்தைகள் எங்கு இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க முடியும்.
|
எமிரேட் ஃபேஷன்ஸ் நிறுவனம், உலகின் முதல் ஃபேன் கூல் ஜாக்கெட் ஆன வெர்ஸாடில் ஏர் என்ற, வெயில் காலத்துக்கான ஜாக்கெட் விற்பனையைத் தொடங்கி இருக்கிறது. இதில் சிறிய காற்று பலூன்கள் உள்ளன.
இது வரையிலான தொழில் முனைவு பயணத்தை சனீன் திரும்பிப் பார்க்கிறார். “முதல் ஐந்து ஆண்டுகள் என்பது, அனுபவத்தைக் கற்றுக் கொள்வதற்கான, பல்வேறு பரிசோதனை முயற்சிகளைக் கொண்டிருந்தது. தொழிலில் வெற்றி பெறுவதற்காக போராடினேன். வெர்ஸாடில் தொடங்கிய பின்னர்தான் நான் உண்மையான வெற்றியைப் பார்த்தேன்.” என்கிறார் சனீன்.
எமிரேட் ஃபேஷன்ஸ் நிறுவனம், 2016-17ல் 1.1 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் ஈட்டியது. 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை, 1.5 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி இருக்கிறது. நிதி ஆண்டு இறுதியில் 1.8 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் இலக்கைக் கொண்டிருக்கிறது.
தாரான்னம் என்ற பெண்ணை சனீன் திருமணம் செய்திருக்கிறார். அவர்களுக்கு ஐந்து வயது மரியம் மற்றும் ஒரு வயதான இனாவா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
ஜி.பி.எஸ்., ப்ளூ டூத் போன்ற வசதிகள் கொண்ட ஸ்மார்ட் ஜாக்கெட்களையும் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளார் சனீன். தவிர ஜி.பி.எஸ் வசதி கொண்ட ஸ்மார்ட் ஸ்கூல் பேக் தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளார். இந்த பேக்கை குழந்தைகள் வைத்திருக்கும்போது அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்க முடியும்.
பல்வேறு செயல்களை வெற்றிகரமாக மேற்கொள்ளும் சனீன், மென்மேலும் சாதனைகள் புரிய வாழ்த்துக்கள்.
அதிகம் படித்தவை
-
மலைத்தேன் தந்த வாய்ப்பு!
மிதுன் ஸ்டீபன், ரம்யா சுந்தரம் இருவரும் பொறியியல் பட்டதாரிகள். பெங்களூரில் சந்தித்துக் கொண்ட அவர்கள் மலையேற்றம் மேற்கொள்ளும் ஆர்வத்தில் ஒன்றிணைந்து, பரஸ்பரம் வாழ்க்கை துணையாக இணைந்தனர். ஆண்டுக்கு 2 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் பாரம்பரியமான கலப்படமற்ற தேன் வர்த்தகத்திலும் கொடிகட்டிப் பறக்கின்றனர். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை
-
புதுமையான உணவு
குடும்பத்தின் வறுமையைப் போக்க எட்டு வயதில் டீ விற்கத் தொடங்கியவர் விஜய் சிங் ரத்தோர். இன்றைக்கு ஜானி ஹாட் டாக் என்ற விந்தையான பெயரைக் கொண்ட உணவகத்தின் உரிமையாளர். ஒரு ஹாட் டாக்கை 30 ரூபாய்க்கு விற்கும் அவர் ஆண்டுக்கு 3.5 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறார். ஆகான்ங்ஷா துபே எழுதும் கட்டுரை.
-
வீட்டுச்சாப்பாடு
சுவையான மட்டன் குழம்பு, ரத்தப் பொறியல், குடல் கறி, தலைக்கறி, ஈரல், பிராய்லர் சிக்கன், நாட்டுக்கோழி சிக்கன் வகைகள், மீன் குழம்பு... ஆ... அம்புட்டும் அன்லிமிடட்! எங்கே எங்கே...? ஈரோடு மாவட்டம் சீனாபுரத்தில் ஒரு தம்பதி வீட்டிலேயே நடத்தும் புகழ்பெற்ற உணவகம் பற்றி உஷா பிரசாத் எழுதும் கட்டுரை
-
தையல் கலைஞர்களின் உச்சம்
குடும்பத்தை பாதுகாத்து வந்த தந்தையோ திடீரென சந்நியாசி ஆகிவிட்டார். இந்நிலையில், சிறு வயது முதல் கடினமாக உழைத்து இன்றைக்கு பிரதமர் முதல் பல பிரபலங்களின் ஆடைகளை தைக்கும் தையற் கலைஞர்களாக உயர்ந்திருக்கின்றனர் இந்த குஜராத் சகோதரர்கள். பி.சி. வினோஜ் குமார் எழுதும் கட்டுரை
-
ஒரு கனவின் வெற்றி!
வெறும் கைகள், மனதில் நிறைய கனவுகள். இவைதான் சந்திரகாந்த் போடே, மும்பை வந்தபோது அவரிடம் இருந்தவை. அவரது பெற்றோர் கூலித்தொழிலாளிகள். இந்த பின்னணி உடைய அவர் இன்றைக்கு வெற்றிகரமான லாஜிஸ்டிக் நிறுவனத்தின் அதிபர். அவரது நிறுவனம் இப்போது ஆண்டுக்கு ஏழு கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறது. நிதி ராய் எழுதும் கட்டுரை.
-
இனிக்கும் இயற்கை!
உணவுப் பொருட்களை பேக்கேஜிங் செய்யும் பிளாஸ்டிக், அலுமினியப் பொருட்களால் உடல்நலத்துக்கு தீங்கு. ஆனால் அதில் உலகுக்கு நன்மை செய்யும் ஒரு தொழில் வாய்ப்பாக பார்த்தார் ரியா எம்.சிங்கால். அவரது தாய் புற்றுநோயால் மரணம் அடைந்ததை அடுத்து, சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்ட தொழில் அதிபராக மாறி இருக்கிறார் ரியா. சோபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை