Milky Mist

Saturday, 9 December 2023

கோடைகாலத்தில் நமக்கு தேவையானது! காற்றிலிருந்து தண்ணீர் தயாரிக்கும் கருவி! சமூக அக்கறையுடன் வெற்றி பெற்ற இளைஞர்!

09-Dec-2023 By தேவன் லாட்
மும்பை

Posted 17 Aug 2019

குழாயில் காத்துதாங்க வருது.. என்று இனி யாரும் சொல்லவேண்டியதில்லை. அந்த காற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும் தொழில்நுட்பத்துடன் வந்திருக்கிறார், மும்பையைச் சேர்ந்த 39 வயது  தொழில் அதிபர் சித்தார்த் ஷா.  எல்லோரும் குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொண்டிருக்கும் நிலையில் தாகத்தை தணிக்கும் நோக்கத்துடன், இதை இந்தியாவுக்குக் கொண்டு வந்திருக்கிறார்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு  அமெரிக்காவில் இருந்து இந்த தொழில்நுட்பத்தைக் கையகப்படுத்தினார் இவர்.  “அந்த நேரத்தில் யாருமே இந்த தொழில்நுட்பத்தைப் பற்றிக் கேள்விப்படவில்லை. இதற்கான இந்திய உரிமையை நான் வாங்கியபோது, இதை நான் ஒரு தொழில் வாய்ப்பாகப் பார்க்கவில்லை. எதிர்காலத்துக்கான தேவையாகவே கருதினேன்,” என்கிறார் ஷா.  

https://www.theweekendleader.com/admin/upload/02-08-19-04AIR3.JPG

பத்து ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்க நிறுவனத்திடம் இருந்து காற்றிலிருந்து தண்ணீர் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை சித்தார்த் (கோட் அணிந்திருப்பவர்) பெற்றார். இரண்டாண்டுகளுக்கு முன்பு  இந்த கருவிகள் உற்பத்தியைத் தொடங்கினார்.(புகைப்படங்கள்: சிறப்பு ஏற்பாடு)

 

ஏர் ஓ வாட்டர்( Air-O-Water) போன்ற மிஷின்களின் விலை சர்வதேச சந்தையில் பல லட்சம் ரூபாய்களாக இருக்கின்றன. ஆனால், ஷா, இதனை மிகக் குறைவாக அதாவது 25 லிட்டர் மாடல் 65,000 ரூபாய்க்கு விற்கிறார். பத்து ஆண்டுகளுக்கு முன்பே அவர் இந்த தொழில்நுட்பத்தைக் கையகப்படுத்தியதால் இது சாத்தியமானது.  இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் மெஷின்களை உள்நாட்டில் உருவாக்கத் தொடங்கினார். 

100 லிட்டர், 500 லிட்டர் மற்றும் 1000 லிட்டர் திறன் கொண்ட  தொழிற்சாலைகளுக்குத் தேவைப்படும் பெரிய மிஷின்கள் முறையே ரூ.2 லட்சம், ரூ.5 லட்சம் மற்றும் ரூ.7 லட்சம் என்று விற்கப்படுகின்றன. ஒவ்வொரு மாதமும் 100-250 இயந்திரங்கள் விற்பனை ஆகின்றன. நிறுவனத்தின் பணப்பெட்டி ஏற்கனவே நிரம்பி இருக்கிறது.

இயற்கையைப் போலவே ஏர் ஓ வாட்டர் பணிபுரிகிறது என்கிறார் ஷா, இந்த கருவியின் தொழில்நுட்பம் காற்றில் உள்ள ஈரப்பதத்தில் இருந்து தண்ணீரை உருவாக்கும்விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான மக்களைச் சென்றடையும் வகையில், இந்த கருவி குறைந்த விலையில் இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார்.  “ஏர் ஓ வாட்டர் மிஷின் ஒரு வசதி படைத்தவர்களுக்கான மிஷின் என்று நான் முன்னெடுக்கவிரும்பவில்லை. என்னுடைய மிஷின் முதலில் ஏழைகளைச் சென்றடைய வேண்டும். அவர்கள்தான் பாதிக்கப்பட்டிருப்பவர்களில் முதலாவதாக இருக்கின்றனர். (குடிநீர் பற்றாக்குறையின்போது),” என்கிறார் சாய்சன்ஸ் டிரேட் அன்ட் இன்டஸ்ட்ரி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான ஷா. 

“இந்த தொழில் திட்டத்தை வங்கி மற்றும் முதலீட்டாளர்களிடம்  காட்டியபோது, இதனை மேஜிக் என்று அவர்கள் சொன்னார்கள்,” என்று நினைவுகூர்கிறார்.  ஒரு மிஷின் மூலம்  காற்றில் இருந்து குடிநீரை உருவாகுவது போன்ற செயலை இதற்கு முன்பு அவர்கள் பார்த்ததில்லை. ”எங்கள் மிஷினைப் பார்க்கும் பொதுமக்கள் இன்றும் கூட வியப்புத் தெரிவிக்கின்றனர்.”

“குடிநீர் பற்றாக்குறை வரும் என்று எனக்குத் தெரியும்.ஆனால், இவ்வளவு விரைவில் வரும் என்று ஒருபோதும் அறிந்திருக்கவில்லை. நாங்கள் தயாராக இருக்கின்றோம். மாதம்தோறும்  பல்வேறு வகையான மிஷின்களை தயாரிக்கத் தொடங்கினோம்.  மக்கள் அவற்றில் இருந்து தேர்ந்தெடுக்கும் வகையில் இருக்க வேண்டும்,” என்கிறார் ஷா. இந்த தொழில் நுட்பத்தைக் கையகப்படுத்துவதற்காக ஷா 15 கோடி ரூபாய் முதலீடு செய்தார். 

https://www.theweekendleader.com/admin/upload/02-08-19-04AIR2.JPG

வளிமண்டலத்தில் ஈரப்பதம் அதிகம் இருக்கக்கூடிய மும்பை, சென்னை போன்ற கடலோர நகரங்களுக்கு இந்த மிஷின் ஏற்றதாக இருக்கும் என்று சித்தார்த் சொல்கிறார்.

 

இன்றைக்கு இந்த நிறுவனம், மாதம் ஒன்றுக்கு 1000 ஏர் ஓ வாட்டர் மிஷின்களை உற்பத்தி செய்கிறது. மும்பை அருகில் உள்ள பிவாண்டியில்  உள்ள 45,000 ச.அடி இடத்தில் அதன் தொழிற்சாலை அமைந்துள்ளது.

2017-ம் ஆண்டு முதன் முதலில் நடந்த விற்பனை குறித்து ஒரு சுவையான சம்பவத்தை நினைவு கூறுகிறார். “மும்பையில் வசிக்கும் என் சகோதரிக்கு முதல் ஏர் ஓ வாட்டர் மிஷினை அனுப்பி வைத்தேன். என் சகோதரி அதனை இரண்டு ஆண்டுகளாகப் பயன்படுத்தவில்லை. அவர் வசிக்கும் குடியிருப்பில் இருப்பவர்கள் கடுமையான குடிநீர் பஞ்சத்தை சந்தித்தனர். அப்போது அவர், இந்த மிஷினை உபயோகிக்கத் தொடங்கினார். அப்போதுதான் அந்த மிஷினின் மதிப்பை அவர் உணர்ந்தார்,” என்கிறார் ஷா.

ஷா  இப்போது, தமது மிஷின் குறித்து, தொழில்நிறுவனங்கள் மற்றும் குடியிருப்பு சொசைட்டிகளில் செயல்விளக்கம் செய்து காண்பித்து வர்த்தகத்தை முன்னெடுக்கிறார். இதனால் அவருக்கு சாதகமான விளைவுகள் ஏற்படுகின்றன. மிஷினை நிறுவியதில் இருந்து ஒரு ஆண்டுக்கு இலவச சர்வீஸ் வழங்கப்படுகிறது.

சாய்சன்ஸ் என்ற அவரது குடும்ப நிறுவனம் தொலைக்காட்சி பெட்டிகள்,ரேடியோக்கள், தந்தி மற்றும் தொலைபேசிக்கான உபகரணங்களை உற்பத்தி செய்து வந்தது.  அந்நிலையில்தான் ஏர் ஓ வாட்டர் தொழில்நுட்ப உரிமைக்கான இந்திய காப்புரிமையை  வாங்கி வளிமண்டலத்தில் இருந்து குடிநீர் உற்பத்தி செய்யும் தொழிலை தொடங்கி உள்ளனர்.

இப்போதும் சாய்சன்ஸ் நிறுவனம், மின்னணு பொருட்கள், துல்லிய உலோக கட்டுமானம், தளங்களை செய்யும் பணிக்கு உதவும் பொருட்கள், மரசாமான்கள், சோலார் வீட்டு உபயோகப்பொருட்கள், பவர் பேனல்கள், எல்இடி லைட்கள் மற்றும் இதர தொலைதொடர்பு பொருட்கள் ஆகியவற்றை தயாரிக்கிறது.

https://www.theweekendleader.com/admin/upload/02-08-19-04AIR.jpg

மும்பை அருகில் உள்ள பிவாண்டியில் இருக்கும் சாய்சன்ஸ் தொழிற்சாலையில் ஏர் ஓ வாட்டர் மிஷின்கள் தயாரிக்கப்படுகின்றன.


கிராமப்பகுதிகளில் இந்த மிஷினை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்று ஷா விரும்புகிறார். “எல்லாவற்றையும்  பின்பு பார்த்துக் கொள்ளலாம் என்ற மனப்பான்மை, பிரச்னை வரும் வரை நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதில்லை. அனைத்து தண்ணீரும் தீரும் வரை கூட, இந்தப் பிரச்னை எவ்வளவு பெரிய பிரச்னை என்பதை நாம் உணரமாட்டோம், “  என்று வருத்தப்படும் ஷா, தொடர்ந்து கூறுகையில், “தண்ணீரை சேமிப்பது பெரிய முறையாகும். ஏரிகள் போன்ற இயற்கை வளங்கள் குறைந்து கொண்டே வருகின்றன. எனவே, மிகவும் அக்கறையோடு கவனத்தில் கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.

“இந்தியாவில் தண்ணீர் இல்லாமல் போய்விடும் என்று ஏர் ஓ வாட்டர் எதிர்பார்க்கவில்லை. எங்களால் முடிந்த சிறந்ததை செய்கிறோம்.  மேலும் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை வரும்பட்சத்தில், ஏர் ஓ வாட்டர் போன்ற மிஷின்கள் உபயோகமாக இருக்கும். வீட்டில் குளிர்சாதனப்பெட்டி எப்படி இருக்கிறதோ, தண்ணீரை உற்பத்தி செய்யும் கருவியும் நமக்கு வேண்டும், “ என்கிறார் ஷா.

மும்பை, சென்னை, கொச்சி போன்ற காற்று ஈரப்பதம் அதிகமாக இருக்கும் கடற்கரை  பகுதிகளை ஷா நிறுவனம் இலக்காகக் கொண்டுள்ளது. தவிர, இமாசலப் பிரதேசத்தின் மலைப்பகுதிகளையும் எதிர்கால சந்தை வாய்ப்பாக கருதுகின்றனர்.


 
 
 
 
 

அதிகம் படித்தவை

  • Tea stall entreprenuer

    தேநீர் விற்கும் ஆடிட்டர்

    புது டெல்லியைச் சேர்ந்த ஆடிட்டரான ராபின் ஜா சம்பந்தமே இல்லாத ஒரு வேலையைச் செய்துவருகிறார். ஆம்... அது தேநீர் விற்பனை! டீபாட் எனும் சங்கிலித்தொடர் தேநீர் விற்கும் கடைகளைத் தொடங்கி மாதம் 50 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டுகிறார். நரேந்திர கவுசிக் எழுதும் கட்டுரை

  • He Lost heavily two times, but bounced back to build Rs 250 Crore turnover business

    தோல்விகளில் துவளாத வெற்றியாளர்

    தந்தையின் உணவகத்தில் உதவியாளராக இருந்த சரத்குமார் சாகு, இன்றைக்கு 250 கோடி ரூபாய் ஆண்டு வர்த்தகம் செய்யும் நிறுவனத்தின் உரிமையாளராக இருக்கிறார். ஆரம்ப கட்டத்தில் தோல்விகளைச் சந்தித்தபோதும் அதனால் அவர் துவண்டு விடவில்லை. ஜி.சிங் எழுதும் கட்டுரை

  • success story of a shampoo maker

    ஷாம்பூ மனிதர்!

    தமிழ்நாட்டின் ஒரு சிறிய நகரத்தில் சுதந்திரமாக சுற்றித்திரிந்த இளைஞர், 15 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் ஷாம்பூ தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார். அது கடின உழைப்பு, வித்தியாசமான விளம்பர உத்திகளால் இன்றைக்கு 1450 கோடி ரூபாய் ஈட்டும் நிறுவனமாகி இருக்கிறது. பி சி வினோஜ் குமார் எழுதும் கட்டுரை

  • He invested Rs 20,000, but today earns in crores

    மாற்று யோசனை தந்த வெற்றி

    ஐஐடி மாணவர் ரகு, அமெரிக்கா செல்லும் திட்டத்தை கைவிட்டு, 20 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் வாகனங்களில் விளம்பரம் செய்யும் மாற்று யோசனையில் ஒரு நிறுவனம் தொடங்கினார். இன்றைக்கு அவரது நிறுவனம் ஆண்டுக்கு 32 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறது. டெல்லியில் இருந்து பார்தோ பர்மான் எழுதும் கட்டுரை

  • The Magnificent Seven

    அவங்க ஏழு பேரு…

    சிறுவயது நண்பர்கள், பள்ளி படிப்பு முடிந்த உடன், தனித்தனிப்பாதைகளில் பயணித்தவர்கள். வார இறுதி பயணங்களில் மீண்டும் கைகோத்து தொழிலதிபர்களாக உயர்ந்திருக்கின்றனர். 3 டி பிரிண்டர்களை பள்ளிகளுக்கு விற்பனை செய்கின்றனர். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை

  • Home made food flowing unlimited

    வீட்டுச்சாப்பாடு

    சுவையான மட்டன் குழம்பு, ரத்தப் பொறியல், குடல் கறி, தலைக்கறி, ஈரல், பிராய்லர் சிக்கன், நாட்டுக்கோழி சிக்கன் வகைகள், மீன் குழம்பு... ஆ... அம்புட்டும் அன்லிமிடட்! எங்கே எங்கே...? ஈரோடு மாவட்டம் சீனாபுரத்தில் ஒரு தம்பதி வீட்டிலேயே நடத்தும் புகழ்பெற்ற உணவகம் பற்றி உஷா பிரசாத் எழுதும் கட்டுரை