வாழ்வின் முடிவில் மனிதநேயமிக்க சேவை செய்யும் ஸ்ருதியின் அந்தியெஸ்தி
09-Oct-2025
By ஜி சிங்
கொல்கத்தா
மரணம் சோகமானதுதான். ஆனால், கொல்கத்தாவைச் சேர்ந்த ஸ்ருதி ரெட்டி சேத்தி எனும் இளம் மென்பொருள் பொறியாளர், இது தொடர்பான விஷயங்களையே தொழிலாக ஆக்கிக்கொண்டுள்ளார். அவரின் தனிச்சிறப்பு வாய்ந்த சேவைகள் காரணமாக, கடந்த ஒரு ஆண்டில் அவரது அந்தியெஸ்த்தி (Anthyesti) நிறுவனம், 16 லட்சம் ரூபாய் வருவாயை ஈட்டித் தந்திருக்கிறது.
வாழ்வின் சோகம் எனும் இறுதி முடிவில்தான், ஸ்ருதியின் பணிகள் தொடங்குகின்றன. “எங்களுக்கு அழைப்பு வந்ததும்...,” என விவரிக்கத் தொடங்கும் அவர், “முதலில் நாங்கள் இறுதி ஊர்வலகத்துக்கான வாகனத்தை ஏற்பாடு செய்வோம். உடலைப் பாதுகாத்து வைக்கும் குளிர்பதனப் பெட்டி வேண்டுமா என்றும் கேட்போம்.”
|
ஸ்ருதி ரெட்டி சேத்தி நிறுவனமான அந்தியெஸ்த்தி, இறுதிச்சடங்குகள், இறுதி ஊர்வலம் ஆகியவற்றோடு தொடர்புடைய சேவைகளை கொல்கத்தாவில் வழங்குகின்றன. (புகைப்படங்கள்; மோனிருல் இஸ்லாம் முலிக்)
|
“இறுதிச் சடங்குக்காக சவ வண்டி கிளம்பியதும், உறவினர்கள் எங்களிடம் உதவி கேட்டால், கொல்கத்தா மாநகராட்சியில் இருந்து இறப்புச் சான்றிதழ் பெற நாங்கள் உதவுகிறோம். அவர்கள் விரும்பினால், இறுதிச் சடங்குகள் செய்யும் புரோகிதர்கள் சேவையையும் நாங்கள் அளிக்கிறோம்.”
அந்தியெஸ்த்தி எனும் அவரது நிறுவனம், மிக முக்கியப் பிரமுகர்களின் சவ ஊர்வலகத்துக்காக ஒருங்கிணைக்கப்பட்ட, இறுதி சடங்குகளுக்கான பேக்கேஜ்களைத் தருகிறது. நடமாடும் மொபைல் ஃப்ரீசர் அல்லது உடலை பதப்படுத்துதல், வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்லுதல், ஆர்ய சமாஜ், குஜராத்திகள், மார்வாரிகள், வங்காளிகள் போன்றவர்களின் குடும்பங்களில் இறந்தவர்களுக்காக செய்யப்படும் இறுதிச் சடங்குகள் உள்ளிட்ட சேவைகளைச் செய்கின்றனர். இந்தச் சேவைகளுக்காக 2500 ரூபாய்முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கின்றனர்.
ஆம், நீங்கள் நினைப்பது சரிதான். ஸ்ருதி ரெட்டி சேத்தி 32, இறுதி யாத்திரைக்கான பணிகளுக்குத் திட்டமிடுபவர். இது போன்ற நிறுவனம் கொல்கத்தாவில் தொடங்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை.
“உடல் தகனம் மற்றும் இறுதி சடங்கு சேவைகள் அளிக்கும் நிறுவனம் தொடங்கும் முடிவை முதலில் என் கணவரிடம் பகிர்ந்து கொண்டேன்,” என்கிறார். ஸ்ருதியின் கணவர், அவருக்கு உதவுவதாக வாக்களித்தார்.
“ஆனால், என் பெற்றோர்..,” என்று சிறிது தயக்கத்துடன் நம்மிடம் பேசத் தொடங்கிய அவர் தொடர்கிறார், “நான் சொன்னதைக் கேட்டு, குறிப்பாக என் தாய், மிகவும் அப்செட் ஆகிவிட்டார். ஒரு மென்பொருள் பொறியாளருக்கு இது போன்ற இழிவான தொழில் நல்லதல்ல என்று சொன்ன என் தாய், இதனால் என்னிடம் ஒரு மாதம் பேசவே இல்லை.”
பணி நிமித்தமாக ஸ்ருதியின் கணவர் ஹைதராபாத்தில் இருந்து கொல்கத்தாவுக்கு 2015-ம் ஆண்டு இடம் பெயர்ந்ததால் அவரும் உடன் சென்றார். இரண்டு குழந்தைகள் உள்ள குடும்பத்தில் மூத்தவராக ஸ்ருதி பிறந்தார். அவருக்கு சகோதரர் ஒருவர் உள்ளார். ஹைதராபாத்தில்தான் ஸ்ருதி கல்வி கற்றார்.
ஸ்ருதியின் தந்தை, எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியராகப் பணியாற்றியவர். அவரது தாய், குடும்பத்தின் வருமானத்துக்கு துணைபுரிவதற்காக வீட்டில் இருந்து சேலை வியாபாரம் செய்து வந்தார். 10-ம் வகுப்பு வரை சாய் பப்ளிக் பள்ளியில் ஸ்ருதி படித்தார். அதன் பின்னர், 2002-ம் ஆண்டு லிட்டில் ப்ளவர் ஜூனியர் காலேஜில் சேர்ந்தார்.
2006-ம் ஆண்டு போஜ் ரெட்டி இன்ஜினியரிங் கல்லூரியில் பொறியியலில் பட்டம் பெற்றார். பின்னர் தம் சொந்த நகருக்குச் சென்று விட்டார்.” பெங்களூருவில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் ஜூனியர் புரோகிராமராகச் சேர்ந்தேன்,” என்று சொல்லும் ஸ்ருதி, “2011-ம் ஆண்டு இன்னொரு ஐடி நிறுவனத்தின் பணிக்காக ஐதராபாத் திரும்பினேன்.”
|
2016-ம் ஆண்டு பிப்ரவரியில் அந்தியெஸ்த்தி-யை ஸ்ருதி தொடங்கினார். இதற்காக தமது கணவரிடம் ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கினார்.
|
ஐதராபாத்தில் உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய குர்விந்தர் சேத்தியை 2009-ம் ஆண்டு, ஸ்ருதி திருமணம் செய்து கொண்டார். “2011-ம் ஆண்டு என் கணவருக்கு கொல்கத்தாவுக்கு டிரான்ஸ்பர் கிடைக்கும் வரை என் வாழ்க்கை பயணம் எந்தவிதப் பிரச்னையும் இன்றிச் சென்று கொண்டிருந்தது,”என்கிறார். வீட்டில் இருந்தே பணியாற்றும்படி ஸ்ருதியின் நிறுவனத்தினர் அவரைக் கேட்டுக்கொண்டனர். ஆனால், 2015-ம் ஆண்டில் திடீரென ஐதராபாத் திரும்பி வரும்படி கூறினர். இதனால், ஸ்ருதி தமது வேலையை ராஜினாமா செய்தார்.
எனவே, ஸ்ருதி அடுத்த கட்டத்துக்காகத் திட்டமிட ஆரம்பித்தார். “எம்.பி.ஏ-படிப்பு படிக்க விரும்பினேன். அப்போதுதான், ஏதாவது தொழில் தொடங்க முடியும் என்று நினைத்தேன்,” என்கிறார்.
“ஐ.ஐ.எம் நிறுவனத்தில் ஒரு ஆண்டு படிப்பில் சேருவதற்காக ஜிமேட் தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்றேன்.”
ஐ.ஐ.எம். இந்தூர் மற்றும் ஐ.ஐ.எம். லக்னோ ஆகிய இடங்களில் இருந்து கோர்சில் சேரும்படி வாய்ப்புகள் வந்தன. ஏதாவது ஒரு இடத்தில் நிச்சயம் அவர் சேர்ந்திருக்க முடியும். அப்போது, சித்தார்த் செரிவால் என்ற நண்பர் ஸ்ருதியிடம், “ஒரு பட்டப்படிப்பு படிப்பதற்காக பணம் செலவழிப்பதற்குப் பதில் சொந்தத் தொழில் தொடங்குவதற்காக அதைப் பயன்படுத்தலாம் என்று சொன்னார். நம்பிக்கை வைத்தால், முன்னேற்றம் அடைவதற்கு எல்லா வழிகளும் கிடைக்கும்,” என்று சொன்னார்.
தொழில் முனைவோர் ஆவதற்கான நடைமுறைகள், அடிப்படைகள் குறித்த எந்த வித முன்யோசனையும் இல்லாமல் இருந்த ஸ்ருதிக்கு, நண்பரின் ஆலோசனை ஒரு ஆரம்ப விதையாக இருந்தது.
“இறுதிச் சடங்குகள் குறித்த சேவையை ஸ்டார்ட் அப் நிறுவனமாகத் தொடங்கலாம் என்பது என்னுடைய ஆழ்மனதில் இருந்தது.” என்று நினைவு கூறும் ஸ்ருதி, “என் கணவரின் தாய்வழித்தாத்தா 2014-ம் ஆண்டு இறந்தபோது, அவரைத் தகனம் செய்வது உள்ளிட்டவற்றுக்கு என் கணவர் பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்ததைப் பார்த்தேன். தகனம் செய்வதற்கான ஏற்பாடுகள்மற்றும் பிரார்த்தனைகளுக்காக சிரமப்பட்டார். இதனால், குடும்பத்தினரின் துயரத்தைப் பகிர்ந்து கொள்ளக் கூட என் கணவருக்கு நேரம் கிடைக்கவில்லை.”
ஸ்ருதி இப்படித்தான் தன் நிறுவனத்தை ஆரம்பித்தார். இறப்புக்குப் பின்னர்,செய்ய வேண்டிய நிகழ்வுகள் அதாவது, உடலைபதப்படுத்துதல் முதல் அனைத்துச் சடங்குகளுடன் இறுதி மரியாதை செய்வது வரையிலான சேவைகளைச் செய்கிறார். ஒவ்வொரு செயலையும் திறமையாக, உணர்வுப் பூர்வமாகச் செய்து வருகிறார்.
|
அந்தியெஸ்த்தி-க்கு ஒவ்வொரு மாதமும் 35 ஆர்டர்கள் கிடைக்கின்றன.
|
இதற்கு அவர் ஒரு தொழில் ரீதியான லாஜிக் வைத்திருக்கிறார். “கொல்கத்தாவில் முதிய வயதில் தனிமையில் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகம்,” என்று விவரிக்கும் ஸ்ருதி, “பல பேர், தங்களுக்குத் தாங்களே தனிமையில் வாழ்கின்றனர். இந்தச் சூழலில் யாராவது ஒருவர், அவர்களின் மறைவுக்குப் பின்னரான சடங்குகளுக்கு உதவி செய்தால், மிகவும் மகிழ்வார்கள்.”
சந்தை நிலவரம் மற்றும் செலவு விவரங்களைத் தெரிந்து கொள்வதற்காக, ஸ்ருதி, மயானங்களுக்குச் சென்று விவரங்களைச் சேகரித்தார். ஒவ்வொரு நாளும் எத்தனைபேர் தகனம் செய்யப்படுகின்றனர். இறுதி ஊர்வலத்துக்கான வாகனக் கட்டணம், பிரேத கிடங்குகள், புரோகிதர்கள், பூஜைகள் ஆகியவற்றுக்கு ஆகும் செலவுகள் குறித்து ஆராய்ச்சி செய்தார்.
ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்தத் துறையில் இருப்பவர்கள் பெரும்பாலும் படிப்பறிவு இல்லாதவர்கள். அவர்களில் பலர் குடிப்பழக்கம் உள்ளவர்களாக இருந்தனர். “நான் இந்தத் தொழிலில் ஈடுபடுவதால் என்னுடைய மனநிலை பாதிக்கப்படும் என என்னுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் கூறினர். தினந்தோறும் நான் மரணம் குறித்தே சிந்திப்பேன் என்றும் நினைத்தனர்,”என்று கூறும் ஸ்ருதி, “இது மிகவும் கடினமாக இருந்தது.”
இறுதியாக கணவரிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாய் கடன் பெற்று, 2016-ம் ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி அந்தியெஸ்த்தி எனும் இறுதி சடங்குகள் சேவைகளுக்கான தனியார் நிறுவனத்தை (Anthyesti Funeral Services Private Limited)ஸ்ருதி தொடங்கினார்.
99 சதவிகித பங்குகளுடன் நிறுவனர் மற்றும் இயக்குனராக ஸ்ருதி இருக்கிறார். அவரது தாய் சுகாஷினி ரெட்டியும் இப்போது ஆதரவு தெரிவிக்கிறார். ஒரு சதவிகிதப் பங்குடன் இன்னொரு இயக்குனராக அவரின் தாய் இருக்கிறார். ”எனது நிறுவனத்துக்கு அந்தியெஸ்த்தி என்ற பெயரைத் தேர்வு செய்வதற்கு எனக்கு சில நாட்கள் ஆனது. அந்தியெஸ்த்தி என்றால் சமஸ்கிருதத்தில், இறுதி சடங்குகள் என்று அரத்தம்,” என்று நினைவு கூறுகிறார் ஸ்ருதி.
1000 ச.அடி கொண்ட வாடகை இடத்தில், இரண்டு ஊழியர்களுடன் நிறுவனம் தொடங்கப்பட்டது. இது போன்ற சேவைகள் கொல்கத்தாவுக்குப் புதியதாக இருந்தது. எனவே, தமது சேவைகளை சந்தைப்படுத்துவதற்கு ஸ்ருதி முதலீடு செய்ய வேண்டி இருந்தது. மக்களின் வாய்வழி பரிந்துரைகளே விளம்பரமாக அமைந்தது. இதன் காரணமாக ஸ்ருதியின் சேவைகளுக்கான நிறுவனம் சீரான வளர்ச்சியை நோக்கிச் செல்கிறது. “திடீரென்று வருவாய் அதிகரிக்கும் வகையிலான திருப்புமுனையான நிகழ்வுகள் ஏதும் நடக்கவில்லை,” என்கிறார் ஸ்ருதி.
“என் சேவைகளுக்கான தொடர்புகளைக் கட்டமைப்பதற்காக இறுதி ஊர்வல வாகனஓட்டுனர்கள், இறுதி சடங்குகள் செய்யும் புரோகிதர்களுடன் ஒப்பந்தங்கள் செய்து கொண்டேன். அவர்களுக்கு அவ்வப்போதைய நிகழ்வுகளுக்கு ஏற்ப பணம் கொடுப்பேன்,”என்று ஸ்ருதி விவரிக்கிறார். “2015ம் ஆண்டு ஏப்ரலில் ஜஸ்ட் டையல் (JUST DIAL) நிறுவனத்தில் என்னுடைய நிறுவனத்தினை இணைத்தேன். இதன் பின்னர் இறுதி சடங்கு சேவைகளுக்கான அழைப்புகள் கிடைக்கப்பெற்றேன்.”
|
அந்தியெஸ்த்தியில் 6 பேர் பணியாற்றுகின்றனர். ஒரு ஆண்டுக்குள் 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான வணிகத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
|
மக்கள் பொதுவாக, இறுதி ஊர்வலத்துக்கான வேன் மட்டும் கேட்பார்கள். தகனம் செய்வதற்கு, இறுதி சடங்குகள் செய்வதற்கு அழைக்கமாட்டார்கள். எனவே, அதற்கு தகுந்தாற்போல, 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் இரண்டு குளிர்பதனப் பெட்டிகள் மற்றும் ஏசி வசதி செய்யப்பட்ட இறுதி யாத்திரை வேன் ஆகியவற்றை வாங்க 7 லட்சம் ரூபாய் முதலீடு செய்தார்.
இப்போது, அந்தியெஸ்த்திசேவைகளுக்காக ஆன்லைனில் அல்லது போனில் புக் செய்தால் போதும். இந்த நிறுவனத்தில் இப்போது 6 பேர் பணியாற்றுகின்றனர். ஒவ்வொரு மாதமும் 35 அழைப்புகளைப் பெறுகின்றனர். ஒரு ஆண்டுக்குள் ஆண்டு வருவாய் 16 லட்சம் ரூபாயைத் தொட்டிருக்கிறது.
எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, மேலும் அதிக வருவாய் ஈட்டுவதற்காக காத்திருக்கின்றனர்.
தவிரவும், தனியாக வசிப்பவர்களுக்காக 6 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரையிலான, முன்பே திட்டமிடப்பட்ட இறுதி யாத்திரைக்கான பேக்கேஜ் சேவைகளையும்அந்தியெஸ்த்தி வழங்குகிறது. “இறப்புக்கு முன்னதான பேக்கேஜ் திட்டத்தில் பதிவு செய்யும் தனிநபர்களுக்கு,எதிர்பாராத விதமாக ஏதேனும் நடந்து விட்டால், நாங்கள் அங்கு சென்று உடனே இறுதிச் சடங்குகளுக்கானப பணிகளை மேற்கொள்கிறோம்,”என்கிறார் ஸ்ருதி. “இதற்காக அனுபவம் மிக்க வழக்கறிஞர்களின் உதவியுடன் சட்டரீதியான ஒப்பந்தம் தயாரிக்கப்படுகிறது.”
உணர்வுப்பூர்வமான இடைவெளியை அந்தியெஸ்த்திநிரப்புகிறது. “வாழ்க்கையில் மரணம் என்பது முக்கியமான காலகட்டம். தொழிற்முறையோடும், நேர்மை மற்றும் கண்ணியத்துடன் சேவை ஆற்ற வேண்டிய தருணம் அது,” என்று கூறும் ஸ்ருதி, “நானும், எனது அணியினரும் உணர்ச்சிப்பூர்வமாக அதே நேரத்தில் அமைதியான, உணர்வோடு இருப்பதில் கவனம் செலுத்துகிறோம்.”
|
மரணம் மட்டும்தான் வாழ்க்கையில் நிச்சயமான ஒன்று என்ற பாடத்தை இந்தத் தொழில் ஸ்ருதிக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறது.
|
2020-ல் முகவர்கள் நியமித்து தமது தொழிலை விரிவாக்கம் செய்ய ஸ்ருதி திட்டமிட்டுள்ளார். பணத்தின் மதிப்பு என்ன என்பதையும், மரணம் மட்டும்தான் வாழ்க்கையில் நிச்சயமான ஒன்று என்ற பாடத்தை இந்தத் தொழில் ஸ்ருதிக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறது
“நீங்கள் மனிதகுலத்திற்கு நன்மை செய்வதற்குத்தான், பூமியில் உங்களின் இருப்பு இருக்கிறது,” என இந்த நான்கு வயதான மகனின் தாய் அறிவுப்பூர்வமாகச் சொல்கிறார். அதே நேரத்தில் பெண் தொழில் முனைவோருக்கான மந்திர வார்த்தைகளையும் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார். “உங்களை நீங்கள் நம்புங்கள். ஒருபோதும் உங்களைக் குறைத்து மதிப்பிடாதீர்கள். நீங்கள் பெரிதாக இலக்கு நிர்ணயிக்கும்போது, சிறிய விஷயங்கள் எல்லாம் தன்னால் சரியாகிவிடும்.”
அதிகம் படித்தவை
-
ஷாம்பூ மனிதர்!
தமிழ்நாட்டின் ஒரு சிறிய நகரத்தில் சுதந்திரமாக சுற்றித்திரிந்த இளைஞர், 15 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் ஷாம்பூ தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார். அது கடின உழைப்பு, வித்தியாசமான விளம்பர உத்திகளால் இன்றைக்கு 1450 கோடி ரூபாய் ஈட்டும் நிறுவனமாகி இருக்கிறது. பி சி வினோஜ் குமார் எழுதும் கட்டுரை
-
அநாதை இல்லத்திலிருந்து அமெரிக்காவுக்கு
அநாதை இல்லத்திலிருந்து அமெரிக்காவுக்கு அவருக்கு 16 வயதில் திருமணம். தினக்கூலி 5 ரூபாய்க்கு வேலை பார்த்தார். வளர்ந்ததோ அனாதை இல்லத்தில். இன்று அந்த பெண் 15 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வணிகம் செய்யும் ஒரு நிறுவனத்தின் உரிமையாளர். அஜுலி துல்சியான் இந்த வெற்றிக்கதையை விவரிக்கிறார்
-
பணம் கறக்கும் தொழில்!
நல்ல சம்பளத்தில் கார்ப்பரேட் நிறுவனத்தில் கனவு வேலையைப் பார்த்துக்கொண்டிருந்த நான்கு நண்பர்கள் திடீரென வேலையை விட்டு சொந்தமாகத் தொழில்தொடங்கினர். அது ஒரு மாட்டுப்பண்ணை. இன்று 100 கோடி வருவாய் தரும் பிராண்ட். ஜி சிங் எழுதும் கட்டுரை
-
ஏற்றம் தந்த பசுமை
ஐ.ஐ.டியில் பட்டம் பெற்றவர் வெறும் மூவாயிரம் ரூபாய் சம்பளத்துக்கு வேலையில் சேர்ந்து, கடினமாக உழைத்து இன்றைக்கு மூன்று நிறுவனங்களின் உரிமையாளராக உயர்ந்திருக்கிறார். அவரது நிறுவனங்களின் ஆண்டு வருவாய் 71 கோடி ரூபாய். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.
-
பூக்களின் சக்தி
தெலுங்கானாவில் இருக்கும் தன் ஊரைவிட்டு பதினாறு வயதில் பொல்லாபள்ளி ஸ்ரீகாந்த் பெங்களூர் மலர்ப்பண்ணை ஒன்றில் வேலை பார்க்க வந்தார். மாத சம்பளம் 1000 ரூ. இன்று அவர் ஆண்டுக்கு 70 கோடி ருபாய்க்கு விற்பனை செய்யும் முன்னணி மலர் உற்பத்தியாளர். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை
-
அடையாற்றின் கரையில்..
விவசாய நிலம் புழுதிப் புயலால் அழிந்தது. இனிப்புக்கடையிலும் வருவாய் இல்லை. மீண்டும் அடிமட்டத்தில் இருந்து வாழ்க்கையைத் தொடங்க அந்த குடும்பம் பெங்களூரு சென்றது. இன்றைக்கு உலகம் முழுவதும் கிளைபரப்பி இருக்கும் சங்கிலித் தொடர் இனிப்புக்கடைகளின் வெற்றிக்கு பின்னணியில் அந்த குடும்பத்தின் உழைப்பு இருக்கிறது. பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை