கடன் வாங்கி போக்குவரத்துத் தொழிலைத் தொடங்கிய சங்கேஸ்வர், இன்று 4,300 வணிக வாகனங்களைக் கொண்ட நிறுவனத்தின் சொந்தக்காரர்
16-Sep-2024
By உஷா பிரசாத்
பெங்களூரு
முனைவர் விஜய் சங்கேஸ்வரின் தந்தை, தமது 19 வயது மகன் போக்குவரத்துத் தொழிலில் நுழைந்து, என்றாவது ஒருநாள் அந்தத் தொழிலின் அதிபர் ஆவான் என்று உணர்ந்தே இருந்தார். அதே நேரத்தில், தெரியாத தொழிலில் இறங்கி இருக்கும் தம் மகனின் முடிவு குறித்து ஒரு தந்தையாகக் கவலைப்படவும் செய்தார்.
விஜய் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தை ஒரே ஒரு லாரியுடன் தொடங்கிய சங்கேஸ்வர், இப்போது வி.ஆர்.எல் லாஜிஸ்டிக் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக இருக்கிறார். இந்த நிறுவனம் 1,800 கோடி ரூபாய் வர்த்தகம் செய்யும் நிறுவனமாக வளர்ந்து உள்ளது. இந்த 65 வயதில், இந்தியாவின் தனியார் போக்குவரத்துத் தொழில் துறையில் 4,300 வணிக வாகனங்களைக் (3,900 லாரிகள், 400 பேருந்துகள்) கொண்ட பெரிய நிறுவனத்தின் சொந்தக்காரராக சங்கேஸ்வர் இருக்கிறார்.
|
விஜய் சங்கேஸ்வர் 4,300 வாகனங்களுக்குச் சொந்தக்காரர். அவருக்கு வலது புறத்தில் இருக்கும் அவரது மகன் ஆனந்த் வி.ஆர்.எல் குழுமத்தின் நிர்வாக இயக்குனர். |
15,000 ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்களுடன், வி.ஆர்.எல். குழுமம் போக்குவரத்து, கொரியர் தபால் சேவை, பதிப்புத் தொழில், காற்றாலைகள் மற்றும் விமான வணிக சேவை ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளது. 1976-ம் ஆண்டு 2 லட்சம் ரூபாய் வருவாயுடன் தொடங்கியதில் இருந்து, 300 கோடி ரூபாய் முதலீட்டுடன் கூடிய பதிப்புத் தொழிலான வி.ஆர்.எல் மீடியா லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களைக் கொண்ட இந்தக் குழுமத்தை ஒரு மாபெரும் நிறுவனமாக, சங்கேஸ்வர் கட்டமைத்துள்ளார்.
பாதுகாப்பான குடும்ப வணிகச் சூழலில் இருந்த சங்கேஸ்வருக்கு, ஏதாவது வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்ற ஆசை இளம் வயதில் கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதன் விளைவாக, வடகர்நாடகாவின் கதக்கில் இருந்து தம் குடும்பத்தில் இருந்து வெளியேறி சாதிக்க வந்தவர்தான் இந்த அசாதாரண மனிதர் என்று சொன்னால் நம்புவதற்குக் கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும்.
1976-ம் ஆண்டு கடனாக வாங்கிய ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் விஜய் டிரான்ஸ்போர்ட் என்ற நிறுவனத்தை ஒரே ஒரு லாரியுடன், சங்கேஸ்வர் தொடங்கினார்.
“நான் ஒரு பெரிய துணிச்சலான முடிவு எடுத்தேன். இந்த அமைப்புசாரத் தொழிலில் என் அதிர்ஷ்டத்தைப் பரிசோதித்துப் பார்ப்பது கடினமாக இருந்த து. எதிர்பாராத பெரும் நஷ்டத்தால் நான் பாதிக்கப்பட்டேன். குடும்ப வணிகத்துக்கேத் திரும்பவும் வந்து விடும்படி என் மனைவி மற்றும் பெற்றோர் வற்புறுத்தினர்,” என்று தாம் சந்தித்த ஆரம்ப காலச் சவால்களை சங்கேஸ்வர் நினைவு கூர்ந்தார்.
|
ஹூப்ளியில் உள்ள வாரூரில் பரந்து விரிந்த ஷெட்டில் வி.ஆர்.எல் லாரிகள் மற்றும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. |
அவர் இந்தத் தொழிலில் இருந்து விலகும் மனநிலையில் இல்லை. தொடர்ந்து இருக்கவே விரும்பினார்.
“4 முதல் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்ற இந்தத் தொழிலில் இருந்த உள்ளூர்காரர்கள், ‘இந்தத் தொழிலில் கஷ்டமானது, எனவே இதில் நீடித்திருக்க வேண்டாம்,’ என்று எனக்கு அறிவுறுத்தினர். இந்தத் தொழிலின் கடினமான பகுதியை மட்டும் பார்த்தவர்களாகவோ அல்லது இந்தத் தொழிலில் புதிதாக ஒருவர் வந்து விடக்கூடாது என்ற எண்ணத்திலோ அவர்கள் இதைச் சொன்னதாக நான் எடுத்துக் கொண்டேன்.”
“துணிச்சலாக எந்த முடிவும் எடுக்காவிட்டால், நான் ஒரு போதும் வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்தேன்,” என்கிறார் சங்கேஸ்வர்.
சங்கேஸ்வர், அவர் குடும்பத்தின் 7 பேர்களில் ஒருவராக நான்காவது குழந்தையாகப் பிறந்தார். அவரது குடும்பம் பதிப்புத் தொழில், புத்தகங்கள் வெளியிடும் தொழிலில் ஈடுபட்டு வந்தது.
கதக்கில் 90 ஆண்டுகளுக்கு முன்பு, அவருடைய தந்தை, பி.ஜி.சங்கேஸ்வர் அண்ட் கோ என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். டி.கே பரத்வாஜ் கன்னட மொழி டிக்சனரி, புத்தகங்கள் மற்றும் கையேடுகளை பதிப்பித்தல், அச்சடித்தல் ஆகியவற்றில் ஈடுபட்டு வந்தனர். இன்றும் கூட ஒவ்வொரு ஆண்டும் 5 முதல் 6 லட்சம் டிக்சனரிகளை அவர்கள் பதிப்பிக்கின்றனர். இந்தத் தொழில்களை இப்போது சங்கேஸ்வரின் சகோதரர்கள் கவனித்துக் கொள்கின்றனர்.
சங்கேஸ்வர் குடும்பத்தொழிலில் ஈடுபடவேண்டும் என்றுதான் அவர் தந்தை எதிர்பார்த்தார். “என்னுடைய பள்ளிப்படிப்பு முடிந்த உடன், கல்லூரிக்கு அனுப்புவதற்கு என் தந்தை தயங்கினார். அச்சுத் தொழிலில் ஈடுபட்டு, அதில் நான் நிலைத்திருக்க வேண்டும் என்றுதான் அவர் விரும்பினார்,” என்று அவர் கூறினார்.
1966-ம் ஆண்டு சங்கேஸ்வர், 16 வயதாக இருந்தபோது, அவரது தந்தை பிரிண்டிங்க் பிரஸ் ஒன்றை பரிசாகத் தந்தார். ‘விஜய் பிரிண்டிங் பிரஸ்,’ என்ற பெயரிலான அந்த நிறுவனம், ஒரு பிரிண்டிங் மிஷின், இரண்டு ஊழியர்களுடன் இருந்தது.
பள்ளிப் பாடப்புத்தகங்கள், ஒரு பத்திரிகை, கர்நாடகா பல்கலைக்கழகத்தின் விடைத்தாள்கள், டிக்சனரி ஆகியவற்றை அவர்கள் அச்சிட்டு வந்தனர். அச்சகத்தில் அச்சுக் கோர்ப்பு, டைப் செட்டிங், பிழைத்திருத்தம் ஆகிய பணிகளை சங்கேஸ்வர் கவனித்துக் கொண்டார். 19-வது வயதில், நவீன மிஷின்களை வாங்கி அந்த நிறுவனத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் விதமாக ஒரு முக்கியமான முடிவை சங்கேஸ்வர் எடுத்தார். அப்போதைக்கு அதன் விலை ஒரு லட்சம் ரூபாய் என்ற வகையில் அது பெரிய தொகையாக இருந்தது.
|
சங்கேஸ்வர் எப்போதும் சவால்களைக் கண்டு அஞ்சியதில்லை. அவர் சவால்களை அடக்கி ஆளவே விரும்புவார். |
“ஸ்பான் எனும் அமெரிக்க இதழின் இந்தியப் பதிப்பை அச்சிடும் பணியை நாங்கள் எடுத்திருந்தோம். அச்சகத்தில் நான் தினமும் 12 முதல் 14 மணி நேரம் பணியாற்றினேன்,” என்று சங்கேஸ்வர் நினைவுகூர்ந்தார். எனவே, கல்லூரிக்குச் சென்று படிக்க அவருக்கு நேரம் இல்லை. எனவே, தார்வாத்தில் உள்ள கர்நாடகா பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி முறையில், வீட்டில் இருந்தபடியே வணிகத்தில் பட்டப்படிப்பு படித்து முடித்தார்.
அச்சகத்தொழிலில் ஈடுபடுவதைவிடவும், 2 லட்சம் முதல் 3 லட்ச ரூபாய் முதலீட்டுக்குள் எந்த மாதிரியான தொழில் செய்யலாம் என்ற புரிதலுக்காக, சங்கேஸ்வர் ஒரு சர்வே மேற்கொண்டார். அதுதான், எப்படி போக்குவரத்துத் தொழிலைத் தேர்ந்தெடுப்பது என்பதற்கு அவருக்கு உதவியாக இருந்தது.
அவர் விரும்பி ஈடுபட்ட இந்தத் தொழில் பெரும் சவால்களைக் கொண்டதாக இருந்தது. “ சரக்குகளுடன் லாரி எப்போது வாடிக்கையாளரைச் சென்றடையும், லாரி பாதுகாப்பாகத் திரும்பி வருமா என எந்த ஒரு தகவலும் தெரியாமல் இருந்தேன். சரக்கு லாரி ஒருமுறை ஓடத்தொடங்கிய பின்னர், ஓட்டுநர்களிடம் பேசுவதற்கு தகவல் தொடர்புகள் ஏதும் அப்போது இல்லை.
“ஓட்டுநர்களைக் கையாள்வது அவ்வளவு எளிதாக இல்லை. வாகனங்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்கியதால், பெரும் இழப்பைச் சந்தித்தேன். எனினும், இந்தப் பின்னடைவுகளைக் கண்டு நான் சிறிதும் கவலைப்படவில்லை. என்னுடைய இலக்கை அடைய மேலும் கடினமாக உழைத்தேன்.”
வெற்றிக்கான பாதை என்பது பல்வேறு சிரமங்களைக் கொண்டதாக இருந்தது. “போக்குவரத்துத் தொழிலில் நான் இறங்கியபோது, நண்பர்கள், உறவினர்களிடம் இருந்து பெரும் அவமதிப்புகளையும் அவமானங்களையும்தான் நான் பரிசாகப் பெற்றேன். அந்த சமயத்தில் என் நலம் விரும்பிகள் கூட எதிரிகளாக மாறிவிட்டனர்.
“எனினும், என்னுள் இருந்த முன்னேற்றம் என்ற தீ என்னை முன்னோக்கிச் செலுத்தியது. மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், மேலும் ஒரு லாரி வாங்கினேன். கதக் மற்றும் ஹூப்ளி இடையே பாயிண்ட் டூ பாயிண்ட் சரக்கு சேவையை நடத்தி வந்தேன்,” என்று தமது கடந்த காலங்களை நினைவு கூர்ந்தார்.
இரண்டு லாரிகள் தவிர, தொழிலை மேலும் முன்னெடுத்துச் செல்லும் வகையில் மேலும் சில லாரிகளை சங்கேஸ்வர் வாங்கினார். 28-வது வயதில், தம் மனைவி மற்றும் குழந்தைகளுடன் கதக்கில் இருந்து ஹூப்ளிக்கு குடிபெயர்ந்தார். ஹூப்ளி நகரம், தமது தொழிலுக்கு பயன்தரும் வகையில் இருப்பதாக அவர் உணர்ந்தார்.
|
சங்கேஸ்வர் மூன்றுமுறை லோக்சபா எம்.பி-யாகவும், ஒரு முறை எம்.எல்.சி-யாகவும் இருந்துள்ளார். |
கதக்கில் இருந்து ஹூப்ளி செல்ல வேண்டும் என்று சங்கேஸ்வர் தீர்மானித்தபோது, அவரது தந்தை மிகவும் கவலைப்பட்டார். தமது மகன் தோல்வி அடைந்து வெறும் கையுடன் திரும்பி வருவானோ என்று அவரது எதிர்காலம் குறித்து வருத்தப்பட்டார். “பெரும் அளவு பணத்தை கடனாக வாங்கி இருந்தேன். அதற்கு சமமாக பணத்தை இழக்கவும் செய்திருக்கிறேன். ஒரு புதிய தொழில் தளத்தில், ஏற்கனவே இருக்கும் போட்டியாளர்களுக்குச் சமமாக தொழில் செய்ய வேண்டி இருந்தது. ஹூப்ளியில் 600 ரூபாய் மாத வாடகையில் ஒரு வீடு பார்த்தேன்.
“என் குடும்பத்தின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு அச்சம் அடைந்த என் தந்தை, ஹூப்ளிக்கு வந்து நான் குடியிருந்த வீட்டின் சொந்தக்காரரைச் சந்தித்து, ஒரு தபால் அட்டையில், தன் முகவரியை எழுதி அதனை அவரிடம் கொடுத்தார். வீட்டு உரிமையாளருக்கு நான் தொடர்ந்து இரண்டு மாதங்கள் வாடகைத் தரத் தவறி விட்டால், தமக்கு அதுகுறித்து தபால் எழுதும்படி சொல்லி இருந்தார். அதன் பின்னர் தாம் வந்து வாடகை பாக்கியைக் கொடுப்பதாகவும், அதன்பிறகு அவருடன் என்னை அழைத்துச் செல்வதாகவும் சொல்லி இருக்கிறார்.
“ஆனால், அதிர்ஷ்டவசமாக ஒருபோதும் நான் வாடகையைக் கொடுக்கத் தவறியதே இல்லை.”
சங்கேஸ்வர் தொழில் வளர்ச்சியடைந்தபோது, ஹூப்ளியில் உள்ள பிரபலமான பெரும் நிறுவனங்கள், பெங்களூருவில் உள்ள எஃப்.எம்.சி.ஜி நிறுவனங்களை அவர் அணுகினார். ஆனால், முதலில் அவர் சொல்வதைக் கேட்காமல், அவரை வெளியே அனுப்புவதில் குறியாக இருந்தனர். “எங்கள் நிறுவனம், காலதாமதம் இன்றி உரிய நேரத்தில் சரக்குகளைக் கொண்டு செல்வதில் அக்கறையுடன் ஈடுபடுகிறது என்பதைக் கேள்விப்பட்டு, ஒரு காலத்தில் துரத்தியடித்த அந்த நிறுவனங்கள் எங்களைத் தேடி வந்தனர். அதன் பின்னர் நிகழ்ந்தவை உங்களுக்குத் தெரிந்த ஒன்றுதான்,”என்று நம்மிடம் அவரது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
1983-ல் விஜயானந்த் ரோடுலைன்ஸ் என்ற பெயரில், எட்டு லாரிகளுடன் பிரைவேட் லிமிடெட் நிறுவனமாக மாறியது.
1990-ம் ஆண்டு, இந்த நிறுவனம் 117 வாகனங்களுடன், நான்கு கோடி ரூபாய் வர்த்தகத்துடன் நடைபோட்டது. மேலும் இந்த நிறுவனத்தை நீட்சி அடையச் செய்யும் வகையில், 1992-ம் ஆண்டு, கர்நாடகா மாநிலத்துக்குள் ஒரு கொரியர் தபால் சேவையைத் இந்த நிறுவனம் தொடங்கியது.
இரண்டு ஆண்டுகள் கழித்து விஜயானந்த் ரோடுலைன்ஸ், தன்னாட்சி பெற்ற பொதுவுடமை நிறுவனமாக ஆனது. பெங்களூரு-ஹூப்ளி இடையே 1996-ம் ஆண்டில் நான்கு பயணிகள் பேருந்து சேவையையும் இந்த நிறுவனம் தொடங்கியது. இன்றைக்கு எட்டு மாநிலங்களில் 75 வழித்தடங்களில் 400 பேருந்துகளை வி.ஆர்.எல் நிறுவனம் இயக்குகிறது.
|
தமது குடும்பத்தினருடன் சங்கேஸ்வர் |
2006-ம் ஆண்டு, கதக் மாவட்டம் கப்பட்குடாவில் தலா 1.25 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திறனுடன், மொத்தம் 42.5 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் நோக்கத்துடன் 34 காற்றாலை டர்பைன் ஜெனரேட்டர்களைக் கொண்ட காற்றாலை மின்சார தொழிலை வி.ஆர்.எல் குழுமம் தொடங்கியது.
“என்னுடைய அனைத்து நிறுவனங்களும் பரிசோதனை மற்றும் தவறுகளில் இருந்து பாடம் கற்பது என்ற அடிப்படையில் தொடங்கப்பட்டவைதான். நான் அதிகபட்ச சவால்களைச் சந்திக்க என்றுமே தவறியதில்லை. அதே போல, நான் இதுவரை செய்தவற்றை நினைத்துப் பெருமை கொள்ளவும் தவறியதில்லை. எங்களுடைய எந்த ஒரு வர்த்தக முறையும்,ஒரு போதும் பிற நிறுவனங்களைப் பார்த்து காப்பி அடித்து செயல்பட்டதில்லை,” என்று விவரிக்கிறார் சங்கேஸ்வர்.
1999-ம் ஆண்டில், சங்கேஸ்வர் ஒரு ஊடக அதிபராகவும் அவதாரம் எடுத்தார். விஜய கர்நடாகா என்ற கன்னட மொழி நாளிதழைத் தொடங்கினார். இது கர்நாடகா மாநிலத்தில் விற்பனையில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. 2002-ம் ஆண்டில், விஜய் டைம்ஸ் என்ற ஆங்கில நாளிதழையும் அவர் தொடங்கினார்.
2006-ம் ஆண்டில், விஜயானந்த் பிரிண்டர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் டைம்ஸ் குழுமத்துக்கு விற்பனை செய்தார். அடுத்த 5 ஆண்டுகளில் வி.ஆர்.எல் குழுமம் புதிய கன்னட மொழி நாளிதழான விஜயவாணியை 2012-ம் ஆண்டு தொடங்கியது. இந்த நாளிதழ் 8 லட்சம் பிரதிகள் விற்பனையுடன் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்திருக்கிறது.
2016-ம் ஆண்டு இறுதியில், பெங்களூருவில் இருந்து ஒளிபரப்பாகும் 24 மணி நேர கன்னட மொழி செய்திச் சேனலை வி.ஆர்.எல் மீடியா தொடங்கியது. இது தவிர இந்த நிறுவனம், 2008-ம் ஆண்டு பயணிகள் சேவை அல்லாத தனிநபர்கள் மற்றும் பெருநிறுவன வாடிக்கையாளர்களுக்கான விமான சேவையைத் தொடங்கியது.
சங்கேஸ்வர் 12 வயதாக இருந்தபோது, ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் தொண்டராக இருந்தார். பி.ஜே.பி-க்காக பிரசாரம் செய்தார். 11, 12 மற்றும் 13-வது லோக்சபா தேர்தல்களில் தார்வாத்(வடக்கு) தொகுயில் இருந்து எம்.பி-யாகத் தேர்வு செய்யப்பட்டார். எடியூரப்பா அரசில் எம்.எல்.சி-யாகத் தேர்வு செய்யப்பட்டார். பின்னர், பி.ஜே.பி-யில் இருந்து விலகி கன்னடா நாடு கட்சி என்ற அமைப்பை சங்கேஸ்வர் தொடங்கினார். பின்னர், இந்தக் கட்சியை ஜனதா தளம் (எஸ்) கட்சியுடன் இணைத்து விட்டார். இந்த நாட்களில் அவர் அரசியலில் தீவிரமாக ஈடுபடவில்லை.,
22 வயதாக இருந்தபோது சங்கேஸ்வரின் திருமணம் நடபெற்றது. அவருக்கு ஆனந்த் என்ற மகன் இருக்கிறார். இவர் வி.ஆர்.எல் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ஆக இருக்கிறார். சங்கேஸ்வருக்கு மூன்று மகள்கள் இருக்கின்றனர்.
உத்யோக் ரத்னா, ஆர்யபட்டா விருது, சர் எம்.விஸ்வேஸ்வரய்யா நினைவு விருது, மற்றும் டிரான்ஸ்போர்ட் சாம்ராட் உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். 2014-ம் ஆண்டு தார்வாத்தில் உள்ள கர்நாடகா பல்கலைக்கழகத்தின் சார்பில் சங்கேஸ்வருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
அதிகம் படித்தவை
-
ஒடிஷாவின் சுவை!
ஒரிய பாரம்பரிய உணவுவகைகளைப் பரிமாறும் எந்த உணவகமும் ஒடிஷாவில் இல்லை என்பதை உணர்ந்த டெபஷிஷ் பட்நாயக், தானே முன் வந்து 2001-ல் உணவகங்களை ஆரம்பித்தார். 7 உணவகங்கள் , 6 கோடி ரூபாய் விற்பனை என்று வளர்ந்திருக்கும் அவரது பாதையை விவரிக்கிறார் ஜி சிங்
-
கனிந்த தொழில் கனவு!
கோவை அருகே கிராமத்தில் இருந்து 1950களில் படிப்பைத் துறந்து விட்டு பழக்கடையில் இரண்டு சிறுவர்கள் வேலைக்குச் சேர்ந்தனர். இன்றைக்கு அவர்கள் பெரிய தொழில் அதிபர்களாக இருகின்றனர். அக்குடும்பத்தின் அடுத்த தலைமுறை இளைஞர் செந்தில் இத்தொழிலைத் தொடர்கிறார். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை
-
தோல்விகளுக்குப் பின் வெற்றி
கோவையை சேர்ந்த பிரிதேஷ் ஆஷர், மேகா ஆஷர் தம்பதி வெறும் 5000 ரூபாய் முதலீட்டில் தோல் பராமரிப்பு பொருட்களை தயாரிக்கத் தொடங்கினர். இப்போது அதை ரூ.25 கோடி ஆண்டு வருவாய் தரும் நிறுவனமாக உயர்த்தி உள்ளனர். இதற்கு முன்பு சில தொழில்களை செய்து நஷ்டத்தைச் சந்தித்தாலும் விடாமுயற்சியால் வெற்றியைப் பெற்றிருக்கின்றனர். சோஃபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை
-
கடல்கடந்த வெற்றி!
உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் அமீர். தொழில்தொடங்கும் லட்சியத்துடன் ஆஸ்திரேலியா சென்றவர் தூய்மை பணியாளராக பணியாற்றி, சேமித்து, சொந்த நிறுவனத்தை தொடங்கி வெற்றி பெற்றிருக்கிறார். சோஃபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை.
-
உழைப்பின் வெற்றி!
காதல் திருமணம் செய்து கொண்டதால், பெற்றோர் ஒதுக்கப்பட்டனர். மும்பை புறநகரில் ஒழுகும் வீட்டில் குழந்தைப் பருவத்தை கழித்த ராஜேஷ், இன்றைக்கு மும்பை, சென்னை உள்ளிட்ட நகரங்களில் ரியல் எஸ்டேட் செய்து கொழிக்கிறார். குர்விந்தர் சிங் எழுதும் கட்டுரை
-
பணம் சமைக்கும் குக்கர்!
வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்த இரு இளைஞர்கள் சென்னையில் பொறியியல் படிக்கும்போது நண்பர்களாகினர். கொரோனா ஊரடங்கின்போது வேலை இல்லை. எனவே சொந்தமாக தொழிலைத் தொடங்கி இ-வணிகத்தில் லாபம் ஈட்டி எட்டுமாதத்துக்குள் 67 லட்சம் ரூபாய் ஆண்டு வருவாய் பெற்றிருக்கின்றனர். பார்த்தோ பர்மன் எழுதும் கட்டுரை