நெல்லி சாகுபடியில் ஆண்டுக்கு 26 லட்சம் ரூபாய் அள்ளிச் செல்கிறார் முன்னாள் ஆட்டோ ஓட்டுநர்
07-Jun-2023
By பார்தோ பர்மான்
பரத்பூர், ராஜஸ்தான்
ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வந்த ஒரு விவசாயி, 1200 ரூபாய்க்கு 60 நெல்லி மர கன்றுகளை வாங்கி தமது நிலத்தில் நட்டார். ஆச்சர்யமூட்டும் அவர் ,இப்போது 26 லட்சம் ரூபாய் ஆண்டு வருவாய் ஈட்டுகிறார்.
அவர் இந்தச் சாதனையை செய்வதற்கு 22 ஆண்டுகள் ஆகி இருக்கின்றன. இப்போது, ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தில் உள்ள கும்ஹெர் பிளாக்கில் இருக்கும் சாமான் கிராமத்தில் வசிக்கும் 500 பேர் இது பற்றி பேசுகின்றனர். இந்தச் சாதனை கிராமத்து மக்களை ஈர்த்திருக்கிறது.
|
அமர் சிங், நெல்லி மரங்களை வளர்க்கத் தொடங்கினார். நெல்லியில் உணவுப் பொருட்களைத் தயாரிக்கிறார்.அவருடைய அமிர்தா பிராண்ட் மொரப்பா, கும்ஹெர், பரத்பூர், டோங், டீக், மண்டாவார் மாக்வா ஆகிய இடங்களில் புகழ்பெற்று நிலைத்து விட்டது. (படங்கள்: பார்தோ பர்மான்)
|
அமர் சிங் (57), மரபு ரீதியான பண்ணை முறைக்கு அப்பால் செயல்பட்டு வெற்றி பெற்று ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.
லுபின் மனித நல ஆராய்ச்சி & அறக்கட்டளையின் செயல் இயக்குனர் சீதா ராம் குப்தா, அமர் சிங்கின் பயணத்தில் அவருக்கு பயிற்சியும் நிதி உதவியும் அளித்தார். இதன் மூலம் அமர் சிங் உள்ளூர் அளவில் புகழ்பெற்ற நபராக மாறி விட்டார். அமர், பெண்களுக்கு வேலை வாய்ப்பும், அதிகாரமும் வழங்கி இருக்கிறார் என்கிறார் சீதாராம் குப்தா.
“மேலும் பல அமர் சிங்குகளை இங்கே உருவாக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்,”என்கிறார் குப்தா.
எனினும், அமர்சிங்கின் கதை, இனிப்பும், கசப்பும் கலந்த திருப்பங்களைக் கொண்டு, அதன் உச்சகட்டமாக அவர் ஒரு தொழில் முனைபவராக அவதாரம் எடுக்கும் வகையில் உள்ளது.
1976-77ம் ஆண்டில், அமர்சிங் 11-ம் வகுப்புடன் பள்ளி செல்வதை நிறுத்திவிட்டார். அது அவருடைய தந்தை விர்ந்தாவன் சிங் இறந்த சமயம். பல ஏக்கர் கணக்கிலான நிலம் இருந்தது. அமர்சிங்கின் இரண்டு சகோதரர்கள், ஒரு சகோதரி ஆகியோர் அவரை விட மிகவும் இளையவர்கள். இதனால், குடும்பத்தின் பண்ணைத் தொழிலை அமர்சிங் முன்னெடுத்துச் செல்ல வேண்டி இருந்தது.
ஆனால், அவரது மனது வேறு இடத்தில் இருந்தது. சில ஆண்டுகள் வீட்டில் நேரம் செலவழித்த நிலையில், ஒரு ஆட்டோ ஓட்டினார். நாள் ஒன்றுக்கு 500 ரூபாய் சம்பாதித்தார். 1984-85ம் ஆண்டு, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள தாய்மாமா வீட்டுக்குச் சென்றார்.
மாமாவின் உதவியுடன், மணிநகரில் ஒரு போட்டோ ஸ்டுடியோ திறந்தார். அவருடைய மாமாவும் ஒரு போட்டோ ஸ்டுடியோ வைத்திருந்தார். தாம் வெளியே சென்ற நேரங்களில் அந்த ஸ்டுடியோவைப் பார்த்துக் கொள்வதற்காக அனுபவம் மிக்க ஒரு ஆளையும் நியமித்திருந்தார்.
இதற்கிடையே, அவருடைய தாய், சோமாவதி தேவி, பண்ணையில் உள்ள நிலத்தில் கடுகு, கோதுமை, பருப்பு வகைகள் பயிரிட்டார். அதற்காக வேலை ஆட்களையும் வைத்திருந்தார். ஆனால், அவர்கள் சோமாவதியை ஏமாற்றத் தொடங்கினர்.
இரண்டு ஆண்டுகள் கழித்து, அமர் சிங்குக்கு அவரது தாய் கடிதம் எழுதினார். வீட்டுக்கு திரும்பி வரும்படி கூறினார். அதன்படி அவர் மகன் திரும்பி வந்தார். ஆனால், நிலங்களைப் பார்த்துக் கொள்வதற்குப் பதில், மகேந்திரா வேன் ஒன்றை வாங்கினார்.அதில், உள்ளூர் பயணிகளை பக்கத்து ஊர்களுக்கு ஏற்றிச் சென்றார். இதில் சொற்பமான அளவுக்கு அவருக்கு வருவாய் கிடைத்தது.
1995-ம் ஆண்டு, ஒரு நாள் காலை நேரத்தில் கும்ஹெர் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்காக வேனுடன் அமர் காத்திருந்தபோது, திரைக்கதைத் திருப்பம் போல ஒரு நிகழ்வு நடைபெற்றது. கிழிந்த இந்தி செய்தித்தாளின் ஒரு பகுதி கீழே கிடந்ததைப் பார்த்தார். அதை எடுத்த அவர், அதில் இருந்த நெல்லிக்காய் பற்றிய ஒரு கட்டுரையைப் படித்தார்.
|
நெல்லிக்காய் குறித்த அந்தக் கட்டுரை, அமர்சிங் வாழ்க்கைப் பாதையை மாற்றியது. அவரை வளமான பாதைக்கு இட்டுச் சென்றது.
|
அமர் சிங்குக்கு நெல்லி மரங்கள் வளர்க்கப் போதுமான நிலம் இருந்தது. எனவே, முதலீடு குறைவாகத்தான் இருக்கும் என்று தமது உள்ளுணர்வில் அமர்சிங் நினைத்தார். எனவே, அது குறித்த தகவல்களை சேகரிக்க ஆரம்பித்தார்.
பரத்பூர் தோட்டக்கலைத் துறைக்கு முன் பணம் அனுப்பிய அமர் சிங், தமக்கு நெல்லி மரக்கன்றுகள் வேண்டும் என்று கேட்டிருந்தார். அங்கிருந்து அவருக்கு தலா 19.50 ரூபாய் வீதம் 60 நெல்லி மரக்கன்றுகள் கிடைத்தன. தமது 2.2 ஏக்கர் வளமான செம்மண் நிலத்தில் அந்த நெல்லிக் கன்றுகளை நட்டார். ஒரு ஆண்டு கழித்து மேலும் 70 நெல்லிக் கன்றுகளை வாங்கினார்.
பண்ணையில் நிலங்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுவதற்கு ஒரு கிணறு இருந்தது. 4-5 ஆண்டுகள் கழித்து, நெல்லி மரங்கள் பலன் கொடுக்க ஆரம்பித்தன. சில நெல்லி மரங்கள் தலா 5 கிலோ நெல்லி பழங்களைக் கொடுத்தன. சில மரங்கள் தலா 10 கிலோ பழங்கள் கொடுத்தன. நெல்லிப் பழங்கள் விற்பனையில் முதல் ஆண்டு அமர் சிங் 7 லட்சம் வரை சேமித்தார்.
இது போன்ற விளைச்சலைப் பாரத்து அமர் சிங் உற்சாகம் கொண்டார். இதையடுத்து மதுரா, புசேவர் மற்றும் பாரத்பூரில் உள்ள நெல்லி முரப்பா (பதப்படுத்தப்பட்டது) சில்லரை வணிகச் சந்தையில் என்ன விலை விற்கிறது என்று விசாரித்தார்.
பெரிய நெல்லி கிலோ 10 ரூபாய்க்கும், சிறிய, நடுத்தர நெல்லி முறையே கிலோ 5 ரூபாய், 8 ரூபாய் எனவும் விற்றன. முதல் சில மாதங்கள் அமர் சிங்குக்கு வணிகர்கள் நல்ல விலை கொடுத்தனர். பின்னர் அவருக்கு வணிகர்கள் நியாயமான விலை தரவில்லை.
“நெல்லி மூட்டைகளை வண்டியில் ஏற்றிக் கொண்டு தொழிற்சாலைக்கு சென்று இறக்கும் போது, சாம்பிள் காட்டிய படி நெல்லிகள் தரமாகவும், சரியான அளவிலும் இல்லை என்று வணிகர்கள் சொன்னார்கள்,” என்று நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் அமர் சிங். “எனக்கு வேறு வழியில்லாததால், அவர்களிடம் பணிந்து போக வேண்டி இருந்தது.”
எனினும் 2-3 ஆண்டுகளுக்கு இதே நிலைதான் தொடர்ந்தது. ஆனால், அவருக்குள் அதிருப்தி அதிகரித்தது. “ஏன் நாமே சொந்தமாக ஒரு உணவு பதப்படுத்தும் பிரிவைத் தொடங்கக் கூடாது? என்று நினைத்தேன்,” என்று அவர் நினைவு கூர்ந்தார்.
இந்த காலகட்டத்தில், அதாவது 2003-ல் லுபின் மனித வள ஆராய்ச்சி & அறக்கட்டளை என்ற தன்னார்வ நிறுவனம் நெல்லி முரப்பா தயாரிக்க கிராமத்துப் பெண்களுக்கு பயிற்சி அளிப்பதாக அறிந்தார். அந்தத் தன்னார்வ நிறுவனத்துக்குச் சென்று, நெல்லியில் இருந்து பல்வேறு வகையான உணவுப் பொருட்கள் தயாரிப்பது குறித்து முழுமையான பயிற்சி பெறுவது குறித்து அவர்களின் உதவியைக் கேட்டார்.
|
2015-16-ம் ஆண்டில் அமர் சிங் 400 குவிண்டால் நெல்லி அறுவடை செய்தார்
|
2005-ம் ஆண்டு, 5 லட்சம் ரூபாய் முதலீட்டுடன், சுய உதவிக் குழுவை அமர் சிங் அமைத்தார். லுபின் தன்னார்வ நிறுவனத்தில் இருந்து மூன்று லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். மீதியை அவருடைய சேமிப்பில் இருந்தும் முதலீடு செய்தார்.
முதல் ஆண்டில், பத்து பெண்கள் கொண்ட சுய உதவிக் குழுவின் உதவியுடன் 70 குவிண்டால் (7000 கிலோ) நெல்லிகளை, அமர்சிங் முரப்பாவாக பதப்படுத்தினார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அமர் சிங்கின், உயர்தர அமிர்தா பிராண்டின் முரப்பா தயாரிப்பு, கும்ஹெர், பாரத்பூர், டோங், டீக், மந்தாவார்மாக்வா, சுரூத் மற்றும் ஹிந்துன் உள்ளிட்ட அவரது கிராமத்தைச் சுற்றிய அனைத்துப் பகுதிகளில் உள்ள வீடுகளிலும் புகழ் பெற்று விளங்குகிறது.
இந்தச் சிறு தொழில் உற்பத்திப்பிரிவில், பெண்கள் நெல்லிகளை சேகரித்து, அளவு மற்றும் தரத்துக்கு ஏற்ப பிரித்து முரப்பாவாக பதப்படுத்தி பேக்கிங் செய்கின்றனர். அவர்களுக்கான கூலி தரப்படுகிறது.
அமிர்தா நெல்லி முரப்பா, ஒரு கிலோ, 2கிலோ, 5 கிலோ மற்றும் 19 கிலோ டின் ஆகியவற்றில் பேக்கிங் செய்யப்பட்டு விற்பனைக்கு வருகிறது. ஒரு கிலோ மற்றும் 2 கிலோ பேக்குகள் முறையே 60 ரூபாய், 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன.
5 கிலோ பேக்கிங் (ரூ.300-250) மற்றும் 19 கிலோ டின் (ரூ.800-ரூ1200) என நெல்லியின் தரம் மற்றும் அளவுக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. முரப்பா தவிர, நெல்லி ஜாம்,நெல்லி மிட்டாய்,நெல்லி சிரப், நெல்லி லட்டு ஆகியவற்றையும் அமர்சிங் தயாரிக்கிறார்.
இரண்டு ஆண்டுகள் கழித்து, அமர்சிங்தம்முடைய தொழிலை விரிவாக்கம் செய்ய நினைத்தார். ஆனால், தனியார் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் கடனுக்கு 20 சதவிகிதம் அளவுக்கு வட்டி வசூலித்தன. மீண்டும் லுபின் தன்னார்வ நிறுவனம்தான் அவரது உதவிக்கு வந்தது.
“தலா ஒரு லட்சம் ரூபாய் என ஒரு சதவிகித வட்டியில் இரண்டு லோன்கள் கொடுத்து என்னைப் பாதுகாத்தது மட்டுமின்றி, மத்திய அரசின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையத்தின் லைசென்ஸையும் எனக்கு வாங்கிக் கொடுத்தனர்,” என்றார் அமர் சிங். வாங்கிய கடன்களை குறிப்பிட்ட காலத்துக்குள் அவர் திருப்பிச் செலுத்தினார்.
|
நெல்லி மரப் பண்ணையில் அமர் சிங்
|
ஒவ்வொரு ஆண்டும், நல்ல வருவாயை அவருக்குக் கொடுத்தது. அமர் சிங் பண்ணையில் இப்போது, நெல்லி பழங்களைத் தரும் 100 மரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு மரமும் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 200 முதல் 225 கிலோ நெல்லிகளைத் தருகின்றன. 2015-16ல் அவரது பண்ணையில் இருந்து 400 குவிண்டால் நெல்லி கிடைத்தது.
அவரது ஆண்டு வருவாய் 26 லட்சம் ரூபாய் அளவுக்கு அதிகரித்தபோதிலும், தொடர்ந்து அவர் எளிமையாக வாழ்கிறார். எனினும், அவரிடம் சில வரவேற்கத்தகுந்த மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.
அமர், தம்முடைய பழைய வீட்டைப் புதுப்பித்தார். நெல்லி உணவுப் பொருட்களை டெலிவரி செய்வதற்காக புதிய டிரக் ஒன்றை வாங்கினார். அவருடைய மூத்த மகன் பி.ஏ முடித்திருக்கிறார். அவரது இளைய மகன் ப்ளஸ் டூ முடித்திருக்கிறார். அவரது மகள் பி.எட் படித்து வருகிறார். அவரது மனைவி ஊர்மிளா, அவரது தொழிலுக்கு உதவி வருகிறார்.
“மரத்தில் இன்னும் பழங்கள் இருக்கின்றன. இந்த ஆண்டு 200 குவிண்டால் பழப் பாகு தயாரிக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது,”என்கிறார் அவர்.
இது தவிர அவர், தமது நிலத்தின் ஒரு பகுதியில் கத்தரிக்காய், மிளகாய், தக்காளி, காலிஃபிளவர், முட்டைக் கோஸ், உருளைக்கிழங்கு, கடுகு ஆகிய காய்கறிகளையும் பயிரிடுகிறார். ஆஃப் சீசனில் அடுத்த திட்டங்களுக்கான பட்டியலில் விளாம்பழ முரப்பா (wood apple murabba) வும் இடம் பெற்றிருக்கிறது.
இது எல்லாவற்றுக்கும் மேலே, சரியான முயற்சிகள் இருந்தால், மரத்தில் பணத்தை விளைவிக்க முடியும் என்பதை அமர் நிரூபித்திருக்கிறார்!
அதிகம் படித்தவை
-
அடையாற்றின் கரையில்..
விவசாய நிலம் புழுதிப் புயலால் அழிந்தது. இனிப்புக்கடையிலும் வருவாய் இல்லை. மீண்டும் அடிமட்டத்தில் இருந்து வாழ்க்கையைத் தொடங்க அந்த குடும்பம் பெங்களூரு சென்றது. இன்றைக்கு உலகம் முழுவதும் கிளைபரப்பி இருக்கும் சங்கிலித் தொடர் இனிப்புக்கடைகளின் வெற்றிக்கு பின்னணியில் அந்த குடும்பத்தின் உழைப்பு இருக்கிறது. பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை
-
ஒரு ‘நொறுக்’ வெற்றி!
மணீஷுக்கு பதினொரு வயதாக இருந்தபோது தந்தை செய்துவந்த தொழில் நொடித்துபோனதைக் கண்டார். அந்த நிலையில் இருந்து மீண்டு, உள்ளூரிலேயே நொறுக்குத்தீனி தயாரிப்பு தொழிலை தொடங்கி இன்றைக்கு ரூ.10 கோடி ஆண்டு வருவாய் தரும் தொழிலாக அதனை கட்டமைத்திருக்கிறார். சோஃபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை.
-
கனிந்த தொழில் கனவு!
கோவை அருகே கிராமத்தில் இருந்து 1950களில் படிப்பைத் துறந்து விட்டு பழக்கடையில் இரண்டு சிறுவர்கள் வேலைக்குச் சேர்ந்தனர். இன்றைக்கு அவர்கள் பெரிய தொழில் அதிபர்களாக இருகின்றனர். அக்குடும்பத்தின் அடுத்த தலைமுறை இளைஞர் செந்தில் இத்தொழிலைத் தொடர்கிறார். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை
-
ஒளிமயமான பாதை
மாதம் ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் ரப்பர் ஸ்டாம்ப் விற்கும் நபராக இருந்தவர் ஜிதேந்திர ஜோஷி. இந்தியாவுக்கு எல்.இ.டி தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்தியவர். இப்போது 8 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் தரும் எல்.இ.டி உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறார். மாசுமா பார்மால் ஜாரிவாலா எழுதும் கட்டுரை
-
மலைத்தேன் தந்த வாய்ப்பு!
மிதுன் ஸ்டீபன், ரம்யா சுந்தரம் இருவரும் பொறியியல் பட்டதாரிகள். பெங்களூரில் சந்தித்துக் கொண்ட அவர்கள் மலையேற்றம் மேற்கொள்ளும் ஆர்வத்தில் ஒன்றிணைந்து, பரஸ்பரம் வாழ்க்கை துணையாக இணைந்தனர். ஆண்டுக்கு 2 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் பாரம்பரியமான கலப்படமற்ற தேன் வர்த்தகத்திலும் கொடிகட்டிப் பறக்கின்றனர். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை
-
வெற்றியின் ஜூஸ்
நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த காதலர்கள் அவர்கள். இணைந்து சொந்தமாக பல தொழில்கள் செய்து, இப்போது மும்பையில் பழச்சாறு விற்பனையில் கொடி கட்டிப் பறக்கிறார்கள். அவர்களின் சுவாரசியமான வெற்றிக்கதையைத் தருகிறார் பி சி வினோஜ்குமார்