ஒரு தினக்கூலியின் மகன் 100 கோடி ஆண்டு வருவாய் தரும் நிறுவனத்தை உருவாக்கியது எப்படி
04-Dec-2024
By உஷா பிரசாத்
பெங்களூரு
கேரளத்தில் வயநாடு மாவட்டத்தில் உள்ள சென்னலோடு கிராமத்தில் அப்போது மின்சாரமும் இல்லை; சாலைகளும் இல்லை. அங்கு தினக்கூலி ஒருவரின் மகன் பி சி முஸ்தபா. அவருக்கு பத்துவயதிலேயே தொழில் தொடங்கவேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது.
”அப்பா கடுமையாக உழைத்தார். அவர் சம்பளத்தில் கைக்கும் வாய்க்குமாக குடும்பம் ஓடிக்கொண்டிருந்தது. எனக்கு செலவுக்குப் பணமே கிட்டாது.
|
கேரளத்தின் கிராமம் ஒன்றைச் சேர்ந்தவர் முஸ்தபா, ஐடி ப்ரெஷ் புட் நிறுவன சிஇஓ (படங்கள்: ஹெச்.கே.ராஜசேகர்) |
“ஆகவே கோடை விடுமுறையின்போது என் மாமாவிடம் 100 ரூபாய் வாங்கி சின்னதாய் ஒரு மிட்டாய்க் கடை போடுவேன். அதில் கிடைக்கும் லாபம் என் செலவுகளுக்கு உதவியது,” என்கிறார் முஸ்தபா. சமையலுக்குத் தயார் நிலையில் இருக்கும் பொருட்களைத் தயாரிக்கும் பெங்களூருவைச் சேர்ந்த ஐடி ப்ரெஷ் புட் நிறுவன சி.இ.ஓ. இவர். இட்லி மற்றும் தோசை மாவு, சுடவைத்து சாப்பிடக்கூடிய சப்பாத்தி, பரோட்டா, ஆகியவற்றுடன் தயிர், பன்னீர் ஆகியவை இவர்களின் தயாரிப்புகள். இது ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் விற்கும் நிறுவனம்.
2005-ல் ஒரு கிலோ மாவில் 10 பாக்கெட் தினமும் செய்த நிறுவனம், இன்று தினமும் 50,000 பாக்கெட்கள் செய்கிறது. பெங்களூரு, சென்னை, புனே, மும்பை, டெல்லி, ஹைதராபாத், துபாய் ஆகிய இடங்களில் இருக்கும் இதன் தொழிலகங்களில் 1300 பேர் வேலைபார்க்கிறார்கள்.
முஸ்தபா தன் உறவினர்களான அப்துல் நாசர், சம்சுதீன், ஜாபர், நௌஷத் ஆகியோருடன் இணைந்து ஐடி ப்ரெஷ் புட் என்ற ப்ரைவேட் லிமிடட் நிறுவனத்தைத் தொடங்கினார். முஸ்தபா 50 % பங்குகள் வைத்துள்ளார், மீதி மற்றவர்களிடம்.
வறுமையான குடும்பச் சூழலில் இருந்து வெற்றிகரமான தொழிலதிபராக முஸ்தபா உயர்ந்துள்ளார். அவர் முயற்சி செய்யாமல் இருந்திருந்தால் தன் தந்தையைப் போலவே தினக்கூலியாக தொடர்ந்திருக்கக் கூடும்.
சிறுவனாக இருக்கும்போது பள்ளி விடுமுறை நாட்களில் தந்தைக்கு உதவியாக முஸ்தபா வேலைசெய்வார். ஆறாம் வகுப்பில் பெயில் ஆனதும் படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குப் போகுமாறு தந்தை கூறினார்.
“என் கணித ஆசிரியர் மேத்யூ சார், என்னை படிக்க அனுமதிக்குமாறு வேண்டிக்கொண்டார். நான் ஆறாம் வகுப்பை மீண்டும் படித்தேன். எனக்கு கணக்கு நன்றாக வரும். ஆங்கிலம், இந்தி தான் சிரமம்.
“மேத்யூ சார் என்மீது தனிக்கவனம் செலுத்தி பள்ளிக்கூடம் முடிந்தபின்னர் சொல்லிக்கொடுத்தார். ஏழாம் வகுப்பில் முதலாவது மதிப்பெண் எடுத்து எல்லோரையும் ஆச்சரியப்படுத்தினேன்,” என்கிற முஸ்தபா, 42, தொடர்ந்து சிறப்பாக படித்தார்.
பத்தாம் வகுப்புக்குப் பின்னர் கோழிக்கோட்டில் உள்ள பரூக் கல்லூரியில் பல்கலைக்கழக புதுமுக வகுப்பில் சேர்ந்தார். பணம் கட்ட சிரமம். அவரது தந்தையின் நண்பர் ஒருவர் விடுதியில் இலவச உணவுக்கு ஏற்பாடு செய்தார்.
|
ஐடி ப்ரெஷ் உறுப்பினர்களுடன் முஸ்தபா (படம்: சிறப்பு ஏற்பாடு) |
அவர் பொறியியல் நுழைவுத் தேர்வில் மாநிலத்தில் 63வது இடம் பெற்று, ரீஜினல் எஞ்சினியரிங் கல்லூரியில் நுழைந்தார். தனக்குப் பிடித்த கணிப்பொறி அறிவியல் படித்தார். 1995-ல் பொறியியல் முடித்தபின்னர் முஸ்தபா 6000 ரூபாய் சம்பளத்தில் பெங்களூருவில் ஒரு சிறு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். இருமாதங்கள் கழித்து மோட்டாரோலாவில் 15,000 ரூபாய்க்கு வேலை கிடைத்தது. அந்நிறுவனம் அவரை அயர்லாந்து அணுப்பியது. அங்கே ஒன்றரை ஆண்டுகள் பணிசெய்தார்.
மோட்டாரோலாவில் இருந்து துபாயில் சிட்டி பேங்கில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கே ஒரு லட்சரூபாய்க்கு மேல் சம்பளம். “நான் முதல் மாத சம்பளமான 1.3 லட்சத்தை என் தந்தைக்கு அவரது கடன்களை அடைக்க கொடுத்தனுப்பினேன்.
“அதை வாங்கிய அவர் கண்ணீர் விட்டார். அவரது வாழ்நாள் கடன் அவரது மகனின் ஒரு மாத சம்பளம் என்று அறிந்ததும் உருவான உணர்ச்சிப்பெருக்கு அது. அவரால் கண்ணீரைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. கையில் பணத்துடன் அழுதுகொண்டே இருந்திருக்கிறார்,” என்கிறார் முஸ்தபா.
துபாயில் சம்பாதித்ததைக் கொண்டு கிராமத்தில் பெற்றோருக்கு வீடு கட்டினார். சகோதரிகளுக்கு திருமணம் செய்வித்தார். முஸ்தபாவுகு 2000த்தில் திருமணம் ஆனது. மூன்று மகன்கள் உள்ளனர்.
மத்தியக்கிழக்கில் ஏழு ஆண்டுகளைக் கழித்துவிட்டு, அவர் 2003ல் பெங்களூரு திரும்பினார். 15 லட்சரூபாய் சேமிப்பு இருந்தது. அவர் எம்பிஏ படிக்க விரும்பினார்.
“எனக்கு கேட் மதிப்பெண் சிறப்பாகக் கிடைத்திருந்தாலும் முன்பு என் பொருளாதார சிக்கல்களால் மேல்படிப்பு படிக்கமுடியவில்லை,” என்று நினைவுகூரும் முஸ்தபா பெங்களூருவில் ஐஐஎம்மில் எம்பிஏ சேர்ந்தார். படிக்கும்போது தியப்பசந்திராவில் உறவினர் நாசர் நடத்திய மளிகைக் கடைக்கு அடிக்கடி வந்து தன் உறவினர்களுடன் பொழுதுபோக்குவார்.
|
இட்லி, தோசை மாவு செய்யும் தொழிலைத் தொடங்கலாமே என்று உறவினர் ஒருவர் சொல்ல, முஸ்தபா அதில் குதித்தார் |
ஒரு நாள் அவரது உறவினரான சம்சுதீன், பக்கத்துக்கடைகளில் பிளாஸ்டிக் பைகளில் தோசைமாவு விற்பதாகவும் நாமும் அதுபோல் செய்யலாமே என்றார்.
“செய்யலாம் என்று முடிவெடுத்து 25,000 ரூபாய் முதலீடு போட்டோம்,” என்கிறார் முஸ்தபா
2 கிரைண்டர், ஒரு மிக்ஸர், சீல் பண்ணும் எந்திரம் ஆகியவற்றுடன் 550 சதுர அடியில் ஒரு இடம் பிடித்தனர். பெங்களூருவில் 20 கடைகளுக்கு ஐடி (அதாவது இட்லி(ஐ), தோசை(டி)) என்ற பிராண்ட் பெயரில் விநியோகம் செய்தனர்.
முதல் நாளிலிருந்தே லாபம்தான். முஸ்தபா மேலும் 6 லட்சரூபாய் முதலீடு செய்து எந்திரங்கள் வாங்கிப்போட்டார். 800 சதுர அடியில் இன்னும் பெரிய இடத்துக்கு நகர்ந்தனர். இரண்டு ஆண்டுகளில் 3,500 கிலோ மாவு தினமும் செய்ய ஆரம்பித்தனர். 300 கடைகளுக்கு மேல் விநியோகம் செய்தனர்.
எம்பிஏவை 2007-ல் முடித்தபின்னர் முஸ்தபா ஐடி ப்ரெஷ் நிறுவனத்தில் சிஇஓ வாகச் சேர்ந்தார். மார்க்கெட்டிங் மற்றும் நிதி நிர்வாகத்தைக் கவனித்தார்.
அவர்களின் பொருட்களுக்கு தேவை அதிகரித்தது. முஸ்தபா மேலும் 40 லட்சரூபாயை 2008ல் முதலீடு செய்தார். ஹோஸ்கோட் தொழில்பேட்டையில் 2500 சதுர அடி ஷெட் ஒன்றும் வாங்கினார்.
துபாயில் பணிபுரிந்தபோது கேரளாவில் ஒரு இடம் வாங்கியிருந்தார். 2009-ல் அதை விற்று மேலும் 30 லட்சரூபாய் முதலீடு செய்தார்.
|
அமெரிக்க சந்தையில் ஐடி ப்ரெஷ் அடுத்த ஆண்டு நுழைகிறது. |
துபாயில் 2013-ல் விற்பனையை ஆரம்பித்தனர். “2014-ல் ஹீலியன் வெஞ்சர் பங்குதாரர்கள் மூலம் முதல் கட்டம் 35 கோடி ரூபாய் திரட்டினோம். தொழிலை விரிவுபடுத்தவும் மேலும் பொருட்களை அறிமுகப்படுத்தவும் இந்த பணம் பயன்படுத்தப்பட்டது,” என்கிறார் முஸ்தபா.
இரண்டாவது கட்டமாக 150 கோடி ரூபாய் நிதி திரட்ட நிறுவனம் முடிவு செய்துள்ளது. வேறு நகரங்கள், அயல்நாடுகள் ஆகியவற்றில் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளனர்.
இப்போது நாடு முழுக்க இருக்கும் தங்கள் தொழிலகங்கள் மற்றும் துபாயில் உள்ள தொழிலகம் ஆகியவை மூலம் தினமும் 50,000 கிலோ மாவு செய்கிறார்கள். லட்சக்கணக்கான இட்லிகளாக அது மாறுகிறது,
காற்றுப்புகாத பைகளில் ஏழுநாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கும் வகையில் அவை உள்ளன.
“ஐடி ப்ரெஷ் பொருட்கள் 100 சதவீதம் இயற்கையானவை. எந்த வேதிப்பொருளும் சேர்க்கப்படுவதில்லை,” என்கிறார் முஸ்தபா.
இட்லி தோசை மாவு மட்டுமல்லாமல், இவர்கள் தயாரிப்பான உடனே சூடு பண்ணி சாப்பிடக்கூடிய பரோட்டாவும் சுறுசுறுப்பாக விற்பனை ஆகிறது. தயிர், பன்னீரும் அறிமுகப்படுத்தி உள்ளனர். ஐடியின் விற்பனையில் ஐம்பது சதவீதம் இட்லி/தோசை மாவுதான். 35 சதவீதம் பரோட்டா. மீதி சப்பாத்தி, தயிர், பன்னீர் விற்பனை. 2017-ன் ஆரம்பத்தில் அமெரிக்க சந்தையில் நுழைய ஐடி ப்ரெஷ் திட்டமிட்டுள்ளது. “ அமெரிக்காவில் நல்ல சந்தை வாய்ப்பு உள்ளது. சிங்கப்பூர், மலேசியாவுக்கு அடுத்த ஆண்டு விற்பனை செய்வோம்,” என்கிறார் முஸ்தபா.
|
முஸ்தபா( வலமிருந்து இரண்டாவது) தன் உறவினர்களுடன்(படம்: சிறப்பு ஏற்பாடு) |
இன்று ஐடி ப்ரெஷ் தயாரிப்புகள் ஏழு நகரங்களில், 16,000 கடைகளில் விற்பனை ஆகின்றன. பெங்களூருவில் அவர்களின் பிரதான தொழிலகம் 15,000 சதுர அடியில் உள்ளது. ஹோஸ்கோட் அருகே உலகத்தரம் வாய்ந்த தயாரிப்பகம் ஒன்றும் 75,000 சதுர அடியில் ஓராணடில் வர உள்ளது.
“குடும்பத்தால் நடத்தப்படும் தொழில் என்பதிலிருந்து தேர்ந்த முறையில் நடத்தப்படும் நிறுவனமாக நாங்கள் மாறி உள்ளோம். அனைத்து தயாரிப்புகளும் தானியங்கிகள் மூலம் நடக்கின்றன. தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன,” விளக்குகிறார் முஸ்தபா.
விரைவில் மொறுமொறு வடைகளும் வீட்டிலேயே செய்யுமாறு ஒரு தயாரிப்பு வர உள்ளது. புதிய அறிமுகங்களுக்கு இங்கே முக்கியத்துவம் உள்ளது.
“வடை மாவு பாக்கெட்டில் ஒரு குழாய் இருக்கும். அதை அமுக்கினால் வட்ட வடிவில் மாவு விழும். கைவைக்கவே வேண்டாம். வட்டவடிவில் வடைகள் செய்யலாம். இதற்கு நாங்கள் காப்புரிமை பெற்றுள்ளோம்,” கூறுகிறார் முஸ்தபா.
2015 – 16 –ல் 100 கோடி விற்பனை செய்த ஐடி ப்ரெஷ் புட், 2016-17-ல் 160 கோடி விற்பனையை எட்ட திட்டமிட்டுள்ளது.
“எதாவது ஆரம்பிக்கவேண்டும் என்று திட்டமிட்டால் உடனே செய்யுங்கள். நாளைக்காகக் காத்திருக்காதீர்கள்,” என்பதே தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு முஸ்தபா சொல்லும் அறிவுரை.
அதிகம் படித்தவை
-
மாற்றி யோசித்தவர்!
ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த 40 வயது இளைஞரான சந்தோஷ், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமால் ஈர்க்கப்பட்டார். அதன் விளைவாக, பால் பண்ணையைத் தொடங்கி, பழங்குடியினத்தைச் சேர்ந்த 100 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளார். குருவிந்தர் சிங் எழுதும் கட்டுரை.
-
வீட்டுச்சாப்பாடு
சுவையான மட்டன் குழம்பு, ரத்தப் பொறியல், குடல் கறி, தலைக்கறி, ஈரல், பிராய்லர் சிக்கன், நாட்டுக்கோழி சிக்கன் வகைகள், மீன் குழம்பு... ஆ... அம்புட்டும் அன்லிமிடட்! எங்கே எங்கே...? ஈரோடு மாவட்டம் சீனாபுரத்தில் ஒரு தம்பதி வீட்டிலேயே நடத்தும் புகழ்பெற்ற உணவகம் பற்றி உஷா பிரசாத் எழுதும் கட்டுரை
-
வறுமையில் இருந்து செழிப்புக்கு
இப்போது 3600 கோடி ரூபாய் மதிப்புள்ளதாக இருக்கும் தைரோகேர் நிறுவனத்தை உருவாக்கியவரான ஆரோக்கியசாமி வேலுமணி, ஒரு கையில் சிலேட், மறு கையில் மதிய உணவு சாப்பிட தட்டு- ஆகியவற்றுடன் அரசுப்பள்ளிக்குச் சென்றவர். அவரது வெற்றிக்கதையை விளக்குகிறார் பி சி வினோஜ் குமார்
-
விருத்தாசலம் டூ வர்ஜீனியா!
தமிழ்நாட்டில் விருத்தாசலத்தைச் சேர்ந்தவர் சரவணன் நாகராஜ். 12ஆம் வகுப்பில் கூட தேர்ச்சி பெறாத நிலை. தந்தையின் தொழிலோ நொடித்துப்போனது. இந்நிலையில் வேலை தேடி சென்னை வந்தவர் பின்னர் அமெரிக்கா சென்று அங்கு ஒரு நிறுவனத்தை வெற்றிகரமாக கட்டமைத்து வளர்த்தெடுத்துள்ளார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.
-
தரம் தந்த வெற்றி!
தந்தையின் பழைய இரும்புக்கடையில் தொழில்நுணுக்கங்களை கற்று, முறுக்கு கம்பிகள் தயாரிக்கும் தொழிற்சாலையை நிறுவி வெற்றிகரமாக நடத்தி வருகிறார் சோமசுந்தரம். தமது நிறுவனத்தை ஆண்டுக்கு 800 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் வகையில் வளர்த்தெடுத்ததில் அவரின் அயராத உழைப்புக் கொட்டிக்கிடக்கிறது.
-
சிறகு விரித்தவர்!
அப்பாவிடம் 2000 ரூபாய் கடன்; இரண்டு அறைகள் கொண்ட கடையில் எஸ்டிடி பூத். இதுதான் இன்று 140 கோடி ரூபாய் புரளும் வாடகைக்கார் மற்றும் ரேடியோ டாக்ஸி நிறுவனத்தின் தொடக்கம். அருண் காரத் என்கிற வெற்றிகரமான தொழிலதிபரின் கதையை சோமா பானர்ஜி விவரிக்கிறார்