Milky Mist

Thursday, 3 April 2025

55 வயதில் தொழில் தொடங்கி அசத்தும் மனிதர் ! மெத்தை உற்பத்தியில் கொடி கட்டி பறக்கிறார்

03-Apr-2025 By பி சி வினோஜ் குமார்
பெங்களூரு

Posted 15 Nov 2018

பெங்களூருவில் ஒரு வசதி குறைவான குடும்பத்தில் பிறந்தவரான மாதவன், 30 ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் பணியாற்றியவர். ஓய்வு பெறும் வயதுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு தொழில் முனைவு பயணத்தைத் தொடங்கி இன்று இந்தியாவின் மெத்தை தொழிலில் முன்னணியில் இருக்கிறார்.

கர்ல்-ஆன்(Kurl-on) என்ற முன்னணி மெத்தை தயாரிப்பு நிறுவனத்தில் 30 ஆண்டுகள் பணியாற்றினார். அங்கே அவர் மாதம் 650 ரூபாய் சம்பளத்தில் ஷிப்ட் கண்காணிப்பாளராகச் சேர்ந்து, நிறுவனத்தின் தலைவர் பொறுப்புக்கு இணையான பதவி வரை உயர்ந்து மாதம் தோறும் சில லட்சங்களை சம்பளமாகப் பெற்று வந்தார்.  அவர், தமது 55- வது வயதில், ஒரு உறுதியான முடிவை எடுத்தார். அவரின் அந்த முடிவுக்கு அவரது மனைவியும் ஆதரவு தெரிவித்ததுதான் இதில் ஆச்சர்யப்படத்தக்க விஷயம்.

கர்ல் ஆன் நிறுவனத்தில் இருந்து விலகுவது என்றும், இரண்டு பேருடன் சேர்ந்து கோவையில் உள்ள நலிவடைந்த ஒரு ஸ்பிரிங்க் மெத்தை தயாரிப்பு நிறுவனத்தை கையகப்படுத்துவது என்றும் மாதவன் திட்டமிட்டார். “எனது வாழ்க்கையில் இரண்டாவது முறையாக நான் நல்ல முடிவை எடுத்ததாக என் மனைவி கூறினார்,” என்று சிரிக்கிறார் மாதவன். “நான் எடுத்த முதல் நல்ல முடிவு, அவளைத் திருமணம் செய்து கொள்வதாக எடுத்த முடிவாம்!”

https://www.theweekendleader.com/admin/upload/03-11-18-03sleep%20lead2.JPG

கே.மாதவன், பெப்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் துணை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர்.இவர் தமது 55 வயதில்தான் தொழில் முனைவுப் பயணத்தைத் தொடங்கினார். (புகைப்படங்கள்: எச்.கே.ராஜசேகர்)


அவரது மனைவி, அப்போது ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மேலாளராகப் பணியாற்றி வந்தார். கர்ல் ஆன் நிறுவனத்தின் ஆண்டு வருவாயை 30 லட்சம் ரூபாயில் இருந்து 550 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் தரும் நிறுவனமாக உயர்த்தியதில் தமது கணவரின் பங்கு என்ன என்பது பற்றி அவர் தெரிந்து வைத்திருந்தார். கிளைகள் வெட்டப்பட்டு ஒரு பூந்தொட்டியில்,  வைக்கப்பட்ட ஆலமரம் போன்றவர் நீங்கள் என்று தம் கணவரிடம் கூறினார்.

“நீங்கள் ஒரு வனத்தில் வளர்ந்து இருந்தால், உங்கள் கிளைகள்அதிக தூரத்துக்கு மிகவும் பரந்து விரிந்து இருக்கும்,” என்றார் அவரது மனைவி. கர்ல் ஆனில் இருந்து விலகுவது குறித்து ஏதேனும் மனதில் சந்தேகம் இருந்திருந்தால், மாதவன் அவரது மனைவியிடம் கேட்ட இந்த வார்த்தைகள் அதை நீக்கிவிட்டன.

கர்ல்  ஆனில் 30 ஆண்டுகள் பணியாற்றிய பின்னர், வாழ்க்கையின் முக்கியமான கட்டத்தில் சொந்தமாகத் தொழில் முனைவுப் பயணத்தைத் தொடங்குவது என்ற திட்டத்தில், ஒரு  நிறுவனத்தின் ஊழியர் என்ற பாதுகாப்பான சூழலில் இருந்து வெளியேறினார். அப்போது குடும்பத்தில் அவர் நிறைவேற்ற வேண்டிய கடமைகள் நிறைய இருந்தன. அவரது மூத்த மகன் அப்போதுதான், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் பிரிவில் பொறியியல் பட்டம் முடித்திருந்தார். இன்னொரு மகன், அப்போதுதான் ஒரு பொறியியல் கல்லூரியில் சேர்ந்திருந்தார்.

ஒரு தொழில் முனைவோராக தம்மால் வெற்றி பெற முடியும் என்று மாதவனுக்கு அபார நம்பிக்கை இருந்தது. பெங்களூரில் கர்ல் ஆன் நிறுவனம் ஒரு சிறிய பிரிவாக 32 ஊழியர்களுடன் செயல்பட்டபோதில் இருந்து அதனை கவனித்து வந்து, பின்னர் அந்த நிறுவனம், மெத்தைகள் தயாரிப்பு நிறுவனங்களில் முன்னணி நிறுவனம் ஆனது வரையிலான மாற்றத்தை கண்கூடாகப் பார்த்திருக்ககிறார். 

சொந்தத் தொழிலைத் தொடங்குபவர்களிடம், "நீங்கள் ரிஸ்க் எடுப்பதாகச் சொல்லாதீர்கள், நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்பதை தெளிவாக திட்டமிட்டு செய்தீர்கள் என்றால், அதில் ரிஸ்க் என்பதற்கே இடம் இல்லை,” எனும் மாதவன்,சொந்தத்தொழில் தவிர, இன்றைக்கு சிறந்த சுயமுன்னேற்ற பேச்சாளராகவும் இருக்கிறார்.

“வாழ்க்கையின் நோக்கத்துக்காக, என்ன செய்தாலும், அதில் நீங்கள் மாஸ்டர் ஆக மாற வேண்டும் என்று எப்போதுமே நான் அறிவுரை சொல்வேன். நீங்கள் என்ன செய்தாலும், அதில் நீங்கள் மாஸ்டர் ஆக இருந்தால், அது எந்த விஷயமானாலும் அதில் நீங்கள் வெற்றி பெற முடியும்.”

11 ஆண்டுகள் கழித்து, இப்போது பெப்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் துணை நிறுவனராகவும், நிர்வாக இயக்குனராகவும் மாதவன் இருக்கிறார். ஒரு மெத்தை நிறுவனத்தின் பிராண்ட் -ஐ  முன்னெடுத்து அதை 325 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் தரும் நிறுவனமாக உயர்த்தி இருக்கிறார்.  30 சதவிகித கூட்டு ஆண்டு வளர்ச்சி விகிதம், 600 ஊழியர்கள், 6000 சில்லரை விற்பனை டீலர்கள், ஆகியவற்றுடன் இப்போதைய இந்திய ஸ்பிரிங் மெத்தை தயாரிப்பில் 56 சதவிகித சந்தையைக் கைப்பற்றி இருக்கிறது அவரது நிறுவனம்.

https://www.theweekendleader.com/admin/upload/03-11-18-03sleep%20lead1.JPG

இந்தியாவில் ஸ்பிரிங் மெத்தை சந்தையில் 56
சதவிகிதத்தை பெப்ஸ் கைப்பற்றி உள்ளது.


“இப்போது நிறுவனத்தின் மதிப்பு 1500 கோடி ரூபாய்,”என்று பகிர்ந்து கொள்ளும் மாதவனின் தற்போதைய வயது 68.

2005ம் ஆண்டு கோயம்புத்தூரில் செயல்பட்டு வந்த பெப்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் விற்பனைக்கு வருவதாக, மெத்தைகள் உற்பத்தி செய்து கர்ல் ஆன் நிறுவனத்துக்கு சப்ளை செய்பவரான சங்கர் ராம் கூறினார். எனினும், அந்த நிறுவனத்தை வாங்குவதற்கு கர்ல் ஆன் நிறுவனம் ஆர்வம் காட்டவில்லை. பெப்ஸ் நிறுவனம் அப்போது, ஸ்பிரிங் மெத்தைகள் தயாரித்து வந்தது. ஆனால் க ர்ல் ஆன் நிறுவனம் ரப்பர் காயர் மெத்தைகளை தயாரித்து வந்தது.

இந்த மெத்தை நிறுவனத்தை வாங்குவது என்று சங்கர் முடிவு செய்தார். தவிர அப்போது மாதவனுக்கும் இது குறித்து அறிவுறுத்தினார். கர்ல் ஆன் நிறுவனத்துடன் 1980ம் ஆண்டு முதல் வர்த்தக தொடர்பு கொண்டிருந்தபோதே மாதவன் அவருக்கு அறிமுகம் ஆகி இருந்தார். மாதவனை அப்போது இது குறித்து சந்தித்துப் பேசியது குறித்தும், கர்ல் ஆன் நிறுவனத்தில் இருந்து வெளியேறும் படியும், பெப்ஸ் நிறுவனத்தை இருவரும் சேர்ந்து நடத்தலாம் என்று கூறியதையும் சங்கர் இப்போது நினைவு கூறுகிறார்.

“யோசிப்பதற்கு சில காலம் அவகாசம் வேண்டும் என்று மாதவன் சொன்னார். எனவே, நானும், இன்னொரு நண்பர் மஞ்சுநாத் (பெப்ஸ் நிறுவனத்தின் மூன்றாவது துணை நிறுவனர்) சேர்ந்து 3.25 கோடி ரூபாய்க்கு அந்த நிறுவனத்தைக் கையகப்படுத்தினோம்,” என்கிறார் சங்கர். “மாதவன் 40 லட்சம் ரூபாய் முதலீடு செய்து, பின்னர் எங்களுடன் சேர்ந்து கொண்டார்.”

மாதவன் தம் வாழ்க்கையின் திருப்புமுனை நிகழ்வுகள் தற்செயலாக அமைந்தவை என்கிறார். “என்னுடன் சேர்ந்து கொள் என்று சங்கர் அழைக்கும் வரை, சொந்தமாக ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் ஒரு போதும் எனக்குள் எழுந்ததில்லை. அப்போது ஏற்கனவே 55 வயதாகி இருந்தது. ஓய்வு பெறுவதற்குள் மீதி இருக்கும் நாட்கள் கர்ல் ஆன் நிறுவனத்திலேயே பணியாற்ற வேண்டும் என்று நினைத்திருந்தேன்,” என்கிறார் மாதவன். பெப்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்துவது குறித்தும்,  அந்த நிறுவனத்தை நடத்துவது குறித்தும் சங்கர் பதில் அளித்ததை மாதவன் நினைவு கூறுகிறார். “உங்களால் சாத்தியமில்லை எனில் இன்னொரு கர்ல் ஆன் நிறுவனத்தை வேறு யார் கட்டமைக்க முடியும்?” என்று சங்கர் கேட்டார்.

https://www.theweekendleader.com/admin/upload/03-11-18-03sleep%20lead3.JPG

மாதவன் இன்று ஒரு தொழிலதிபர் மட்டுமின்றி, தன்னம்பிக்கை பேச்சாளரும் கூட.


பெப்ஸ் நிறுவனத்துடன் மாதவன் இணைந்தார். அதன் பின் நடந்தது வரலாறு. அப்போது ஸ்பிரிங்க் மெத்தைகளின் ஆதிக்கம் இந்திய சந்தையில் வெறும் இரண்டு சதவிகிதமாகத்தான் இருந்தது. காயர், காட்டன் மற்றும் ஃபோம் மெத்தைகள்தான் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வந்தன. இந்த சூழலில் தங்களுக்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், தங்களுக்கான சந்தை காத்திருப்பதாகவும் மாதவனும் அவரது பங்குதாரர்களும் கருதினர். 

போதுமான விலையுடன் சர்வதேச தரத்தில் ஸ்பிரிங் மெத்தைகளை அவர்கள் தயாரிக்கத் தொடங்கினர். இதர மெத்தைகளை விட ஸ்பிரிங் மெத்தைகளில் உள்ள நன்மைகள் குறித்து தங்களின் டீலர்களிடம் எடுத்துக் கூறினர். அந்த டீலர்கள் இதுகுறித்து வாடிக்கையாளர்களிடம் எடுத்துக் கூறினர். 

அதே போல, வேறு பல தொழில் உத்திகளையும் மாதவன் மேற்கொண்டார். “இந்த கையால், பத்து லட்சம் மெத்தைகளை விற்பனை செய்திருக்கிறேன்,” என்று கூறுகிறார். பெப்ஸ் நிறுவனத்துக்கு புதிய லோகோ உருவாக்கினார். புதிய மெத்தைகளை பிளாஸ்டிக் கவர்களில் பேக்கேஜ் செய்து விற்கும் முறையில் இருந்து மாற்றிச் சிந்தித்தார். வாடிக்கையாளர்களை கவரும் வகையில் மெத்தைகளை கவர்ச்சிகரமான முறையில் பேக்கேஜ் செய்து கொடுத்தார்.

பெப்ஸ் நிறுவனத்தில் இருந்து ஆரம்பத்தில் அதாவது 2006ம் ஆண்டு வெறும் இரண்டு வகையான மெத்தைகள் மட்டும் உற்பத்தி செய்யப்பட்டன. இப்போது தலையனைகள் , போர்வைகள் உட்பட 30 வகைகளுக்கும் மேலான மெத்தைகள் உற்பத்தி செய்கின்றனர். “எங்களிடம் மூன்று முக்கிய வெவ்வேறு விதமானபொருட்கள் இருக்கின்றன. மலிவான அதே நேரத்தில் ஆடம்பரமான மெத்தை வகைகள் 9,500 ரூபாய் முதல் 22000 ரூபாய் வரை இருக்கின்றன. அமெரிக்க பிராண்ட் ஆன ரெஸ்டானிக் வகை மெத்தைகள் இந்திய விலையில் 25000 ரூபாய் முதல் 45 000 ஆயிரம் வரை கிடைக்கின்றன. உயர் வகை மெத்தைகளான பெப்ஸ் ஸ்பைன் கார்டு மெத்தை 30,000 ரூபாய்முதல் 40,000 ரூபாய் வரை இருக்கின்றன,” என்று மாதவன் சொல்கிறார்.

https://www.theweekendleader.com/admin/upload/03-11-18-03sleep3.jpg

சங்கர் ராம், மஞ்சுநாத் உடன் மாதவன்


கூடுதலாக உயர் வருவாய் வாடிக்கையாளர்களைக் கவனத்தில் கொண்டு, அல்ட்ரா ஆடம்பர வகை மெத்தைகள் 55000 முதல் 1.5 லட்சம் ரூ வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் நடுத்தர வர்க்கத்தினர் வாங்குவதற்கு ஏற்ற மெத்தைகள் 8000 ரூபாய் முதல் 35,000 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

வாடிக்கையாளர்களுக்கு முழுவதுமான ஒரு புதிய அனுபவத்தைத் தரும் வகையில் கிரேட் ஸ்லீப் ஸ்டோர்ஸ்களை (Great Sleep Stores)பெப்ஸ் வடிவமைத்துள்ளது. பெப்ஸ் நிறுவனத்தின் இந்த சில்லரை விற்பனை கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் கூறும் புதிய யோசனைகளையும் கேட்கின்றனர். “இதுபோன்று நாடு முழுவதும் 125 ஸ்டோர்கள் இருக்கின்றன. இங்கு படுக்கையறை சூழல் போல எங்களுடைய மெத்தைகளை காட்சிக்கு வைத்திருக்கிறோம். வாடிக்கையாளர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அந்த மெத்தைகளில் படுத்துப் பார்த்து, தாங்கள் விரும்பும் மெத்தைகளை வாங்கலாம்,” என்கிறார் மாதவன்.

பெப்ஸ் நிறுவனத்தின் முக்கிய உற்பத்தித் தொழிற்சாலை கோவையில் இருக்கிறது. 11 ஏக்கர் பரப்பில், 3 லட்சம் ச.அடி- இடத்தில் உலகத்தரம் வாய்ந்த இயந்திரங்களைக் கொண்டு தொழிற்சாலை செயல்படுகிறது. டெல்லி, புனே மற்றும் கொல்கத்தா நகரங்களில் சிறிய உற்பத்தி பிரிவுகள் உள்ளன.

மாதவனுக்கு, பெங்களூருவில் ஒரு அழகான வீடு உள்ளது. 2 ஏக்கர் மனையில் ஒரு கிலோ மீட்டர் ஜாக்கிங் தளத்துடன் கூடியது அது. மன அழுத்தத்தை குறைப்பதற்கும், மனதுக்கு இதமளிக்கும் வகையிலும் அவர் வண்ணம் தீட்டுதலை தன் பொழுதுபோக்காக வைத்துள்ளார்.  அவருக்கு சொந்தமாக ஒரு ஸ்டுடியோ இருக்கிறது. பெரும் எண்ணிக்கையிலான பெயிண்ட்டிங்குகளையும் வீட்டில் வைத்திருக்கிறார். .

மாதவன் ஒரு பெரிய குடும்பத்தில் பிறந்தவர். எட்டு குழந்தைகள் உள்ள குடும்பத்தில் அவர் ஏழாவது. பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டியூட் ஆஃப் சையின்ஸில் அவருடைய தந்தை ஒரு ஆய்வக உதவியாளராகப் பணியாற்றினார். அவர்களது குடும்பம் ஒரு வாடகை வீட்டில், வாய்க்கும், கைக்கும் போதாமையான சூழலில் வசித்தது.

https://www.theweekendleader.com/admin/upload/03-11-18-03sleep2.jpg

மாதவன் ஏழாம் வகுப்பு வரை, கன்னட மீடியம் பள்ளியில் படித்தார்


“பிஷப் காட்டன் போன்ற, கான்வென்ட்களில் நான் படிக்கவில்லை. சாதாரண பள்ளியில்தான் நான் படித்தேன்,” என்று சிரிக்கிறார் மாதவன். ஏழாம் வகுப்பு வரை கன்னட மீடியம் பள்ளியில் படித்தார். எட்டாம் வகுப்பில் இருந்து மல்லேஸ்வரத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆங்கில மீடியத்தில் படித்தார்.

அவரது தாய், ஒரு குடும்பத்தலைவி. மகாபாரதம், ராமாயணம், மற்றும் பாகவதம் போன்ற புராணங்களில் தேர்ச்சி பெற்றவராக இருந்தார். மாதவனுக்கு சிறுவயதில் தினமும் அவரது அம்மா இந்த புராணங்களில் இருந்து கதைகளைச் சொல்வார். “என் அம்மாவால்தான், நான், வாழ்க்கையில் இந்த நிலையை அடைந்திருக்கிறேன்,” என்கிறார் மாதவன் உணர்ச்சிப் பெருக்குடன். “என் தாய் எங்களுக்கு உயர் மதிப்பீடுகளை கற்றுக் கொடுத்தார். அறிவின் முக்கியத்துவம் குறித்தும் கற்றுக் கொடுத்தார். தினசரி வாழ்க்கையில் அதனை நாங்கள் பின்பற்றி செயல்பட்டோம்.”

பெங்களூருவில் உள்ள சென்ட்ரல் கல்லூரியில் மாதவன் பி.எஸ்சி கெமிஸ்ட்ரி (ஹானர்ஸ்)  பட்டம் பெற்றார். பின்னர் கொல்கத்தாவில் உள்ள ரப்பர் செருப்பு தயாரிக்கும் பிரிவில் மாதம் 250 ரூபாய் சம்பளத்தில் வேலைக்குச்சேர்ந்தார். மூன்று ஆண்டுகள் கழித்து, 1976-77ல் கர்ல் ஆன் நிறுவனத்தில் ஷிஃப்ட் கண்காணிப்பாளராகப் பணியில் சேர்ந்தார்.

மாதவன் கர்ல் ஆன் நிறுவனத்தில் சேர்ந்த பின்னர், பெருநிறுவன ஏணியில் ஏறும் வகையில் தன்னுடைய அறிவை தினந்தோறும் புதுப்பித்துக் கொண்டார். மைசூருவில் உள்ள இந்தியன் ரப்பர் இன்ஸ்டியூட் கல்வி நிறுவனத்தில் பகுதிநேரமாக பாலிமர் டெக்னாலஜியில் பட்டய மேற்படிப்பு படித்து முடித்தார். அதன்பின்னர், இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் சையின்ஸில் பொது மேலாண்மையில் நிபுணத்துவம் எனும் ஆறு மாத சான்றிதழ் படிப்பை முடித்தார்.  

https://www.theweekendleader.com/admin/upload/03-11-18-03sleep.JPG

மகிழ்ச்சிகரமான குடும்பம்; மாதவன், தன் மனைவி, மகன்கள் மற்றும்  மருமகள்களுடன்


ஜெனரல் மேனேஜராக பணி உயர்வு பெற்றபோது, எம்.பி.ஏ படிக்க விரும்பினார். கர்ல் ஆன் நிறுவனத்தின் ஆதரவுடன் மும்பையில் உள்ள எஸ்பி இன்ஸ்டியூட் ஆப் மேனேஜ்மென்ட் அண்ட் ரிசர்ச் நிறுவனத்தில் அவருக்கு இடம் கிடைத்தது.

“36 மாதங்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை காலையிலும் நான் மும்பைக்கு விமானத்தில் செல்வேன்.  வார இறுதிநாள் வகுப்புகளுக்குச் செல்வேன். பின்னர் திங்கள் கிழமை காலையில் பெங்களூரு திரும்புவேன். எப்போதும் போல் என் வேலைகளைத் தொடர்வேன். இதற்கான எல்லா செலவுகளையும் கர்ல் ஆன் நிறுவனமே ஏற்றுக் கொண்டது,” என்கிறார் பெருமையுடன்.

எப்போதுமே தளராத நம்பிக்கை கொண்டவரான மாதவன், இந்தியாவின் 6500 கோடி மதிப்பிலான மெத்தை சந்தை, தங்களுக்காக காத்திருக்கிறது என்கிறார். அடுத்த ஐந்து வருடங்களில், தங்களது நிறுவனம் உயர்ந்த இடத்தை எட்டும் என்கிறார். நல்லது. உறக்கத்துக்கான இந்த மாபெரும் பிராண்ட்டின் சாதனைக்காக காத்திருப்போம்.


 
 
 
 
 

அதிகம் படித்தவை

  • How a family built a successful business with fruits after suffering losses in their first venture

    வெற்றியின் சுவை

    கொல்கத்தாவில் ஒரு ஐஸ்கிரீம் பிராண்ட் வீழ்ச்சி அடைந்து, உரிமையாளரின் குடும்பம் 30 லட்சரூபாய் கடனில் தத்தளித்தது. 22 வயதே ஆன மூத்தமகன் களமிறங்கி வெற்றி பெற்ற கதை இது. இயற்கையான பழங்களில் இருந்து இனிப்பான ஐஸ்கிரீம் பிறந்தது. கட்டுரை: ஜி சிங்

  • Designing her way to success

    வெற்றிக் கோடுகள்

    நீலம் மோகன் தம் சுயத்தின் மீது நம்பிக்கை கொண்டவர். அந்த நம்பிக்கையில்தான் அவர் 4 டெய்லர்களுடன் தமது ஆடைகள் உற்பத்தி நிறுவனத்தைத் தொடங்கினார். இன்றைக்கு ஆண்டுக்கு 130 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் தரும் நிறுவனத்தைக் கட்டமைத்திருக்கிறார். சோபியா டானிஷ் கான் எழுதும் கட்டுரை

  • His success story which reads like a film script aptly started in a cinema hall

    எளிமையான கோடீசுவரர்

    திரையரங்கில் காண்டீனில் வேலை பார்த்தவர் அவர். அன்று அவருக்கு மாதச் சம்பளம் 90 ரூபாய் மட்டுமே. இன்று அவர் 1800 கோடி ருபாய் நிறுவனம் ஒன்றின் உரிமையாளர். தன் வாழ்க்கை வெற்றிக்கதையை மசுமா பர்மால் ஜாரிவாலிடம் சொல்கிறார்

  • How two college friends started a successful business

    மீண்டும் மீண்டும் வெற்றி!

    பிரஸூன், அங்குஷ் என்ற இளைஞர்கள் ஏற்கெனவே இரண்டு நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்தி, பிறரிடம் விற்று விட்டனர். இப்போது இந்திய பாரம்பர்யமிக்க நொறுக்குத் தீனி வகைகளை வெற்றிகரமாக விற்பனை செய்கின்றனர். சோஃபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை

  • He sold garments on the footpath, now his turnover is Rs 60 crore

    உழைப்பால் உயர்ந்த நாயகன்

    பெங்களூருவில் நடைபாதையில் துணிகள் விற்பவராகத் தொழிலைத் தொடங்கியவர் ராஜா. இன்றைக்கு 60 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்யும் நிறுவனங்களை நடத்தி வருகிறார். இத்தனைக்கும் பத்தாம் வகுப்புடன் படிப்பை பாதியில் விட்டவர் இவர். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை

  • costly Mangoes

    மாம்பழ மனிதர்

    மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த சங்கல்ப் சிங் பரிஹார் தமது பழப்பண்ணையில் உலகிலேயே மிக அதிக விலை கொண்ட மாம்பழத்தை விளைவிக்கிறார். விரைவில் அவரது வருமானம் ராக்கெட் வேகத்தில் உயர இருக்கிறது. சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டு்ரை