மலர்ப்பண்ணையில் சிறுவயதில் வேலைக்குச் சேர்ந்தவர் இன்று பெரும் பணக்காரராக மலர்ந்திருக்கும் வெற்றிக்கதை!
08-Dec-2024
By உஷா பிரசாத்
பெங்களூரு
நாற்பது வயதாகும் ஸ்ரீகாந்த்துக்கு வாழ்க்கை முழுவதுமாக மலர்ந்திருக்கிறது. மாத சமபளம் ஆயிரம் ரூபாய்க்கு மலர்ப்பண்ணை ஒன்றில் தன் 16 வயதில் வேலைக்கு வந்த இவர் இன்று இந்திய மலர்ச்சந்தையில் முக்கியமான ஆள். ஆண்டுக்கு 70 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்கிறார்.
பத்தாம் வகுப்பை பாதியில் விட்டவரான ஸ்ரீகாந்த், தெலுங்கானாவில் நிஜாமாபாத் மாவட்டத்தில் போதான் என்ற நகரில் பிறந்தவர். பெங்களூருவின் புறநகர்ப்பகுதியில் ஒரு மலர்ப்பண்ணையில் வேலை செய்ய வந்து சேர்ந்தார்.
|
பொல்லாபள்ளி ஸ்ரீகாந்த் 18 வயதில் தன் சேமிப்பிலிருந்தும் குடும்பத்தாரிடம் கடன்வாங்கியும் பெற்ற 20000 ரூபாய் முதலீடுடன் பூக்கடை ஒன்றை ஆரம்பித்தார். (படங்கள்: ஹெச்.கே.ராஜசேகர்)) |
அவரது குடும்பம் விவசாயக் குடும்பம். கடனில் மூழ்கி இருந்ததால் படிப்பை நிறுத்திவிட்டு அவர் வேலைக்குச் செல்ல வேண்டி இருந்தது. “ பெற்றோரும் ஒரு தங்கையும் கொண்டது என் குடும்பம். நான்கு பேர் கொண்ட குடும்பத்துக்கு வருமானம் போதவில்லை. மேலே படிக்க எனக்கு விருப்பம் இருந்தாலும் சம்பாதித்து குடும்பத்துக்கு உதவ விரும்பினேன்,’’ என்கிறார் ஸ்ரீகாந்த்.
பெங்களூருவில் உள்ள நிலமங்கலா பண்ணையில் இரண்டு ஆண்டுகள் தினமும் 18- 20 மணி நேரம் வேலை செய்தார். மலர்ப்பண்ணை வர்த்தகத்தில் அனைத்தையும் அறிந்துகொண்டார். பூ வளர்ப்பு, அறுவடை, சந்தைப்படுத்துதல், மற்றும் ஏற்றுமதி அனைத்தும் அத்துப்படி ஆனது.
இரண்டாம் ஆண்டில் அவர் பெற்ற சம்பளம் 12000 ரூபாய். அத்துடன் குடும்பம் மற்றும் நண்பர்களிடம் கடன்வாங்கி 20,000 சேர்த்து பூக்கள் விற்கும் கடை ஒன்றை ஆரம்பித்தார். அப்போது அவருக்கு வயது 18 தான்.
அப்பாவுக்கு ஆரம்பத்தில் தயக்கம். பையன் ஊருக்கே திரும்பிவந்து விவசாயத்தைக் கவனித்தால் நல்லது என்று கருதினார். ஆனால் ஸ்ரீகாந்த் தன் மனம் விரும்பியதைச் செய்தார். பெங்களூருவில் வில்ஸன் கார்டன் என்ற இடத்தில் ஓம் ஸ்ரீ சாய் ப்ளவர்ஸ் என்ற கடையை 200 சதுர அடியில் தொடங்கினார். அவர் தன் இரண்டாண்டு வேலையில் பெற்ற அனுபவம், தொடர்புகள் இத்தொழிலில் உதவின.
|
ரோஜா, ஜெர்பெரா, கார்னேஷன், ஜிப்சோபிலா போன்ற மலர்களை துபாகெரெவில் உள்ள தோட்டப் பண்ணையில் பசுமை இல்லத்தில் வளர்க்கிறார். |
பண்ணையாளர்கள், மொத்த விற்பனையாளர்களிடம் இருந்து பூக்களை வாங்கி அதை பேக் செய்து, வாடிக்கையாள்ர்களுக்குத் தானே கொடுத்துவந்தார். தினந்தோறும் அவரது வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. திருமணங்கள், நட்சத்திர ஓட்டல்கள், பிற நிகழ்வுகளுக்கும் பூக்கள் அளிக்க ஆரம்பித்தார்.
“எனக்கு நிறைய பண்ணையாளர்களையும் விநியோகஸ்தர்களையும் தெரிந்திருந்தது. அவர்களில் பலருக்கு என் தந்தையின் வயது. அவர்களுக்கு என்னைப் பிடித்திருந்தது. பலரும் கடனுக்கு பூக்களை அளித்தார்கள்,’’ என்கிறார் ஸ்ரீகாந்த்.
தொழில் வளர வளர, பண்ணையாளர்களிடம் முழுமையாக வாங்கிக்கொள்ளும் ஒப்பந்தம் செய்துகொண்டார். முதல் ஆண்டிலேயே 5 லட்சம் சம்பாதித்தார். அடுத்த ஆண்டில் இது இரண்டு மடங்கு ஆனது. 25 வயதில் விற்பனை 5 கோடியை எட்டிவிட்டது.
|
அவரது பல்வேறு பண்ணைகளில் தங்கி இருக்கும் 80 பணியாளர்கள் உட்பட 300 பேருக்கு ஸ்ரீகாந்த் வேலைவாய்ப்பு அளித்துள்ளார் |
பெங்களூரு கிராமப்புற மாவட்டத்தில் தொட்டாபல்லபுரா தாலுக்காவில் துபாகெராவில் 2005-ல் பத்து ஏக்கர் நிலம் வாங்கினார். ஸ்ரீகாந்த் பார்ம்ஸ் என்று பெயரிடப்பட்டு பூக்கள் பயிரிட ஆரம்பித்தார். அவரது இந்த முயற்சிக்கு வென்சாய் ப்ளோரிடெக் என்று பெயர் சூட்டினார்.
முதலில் ஆறு ஏக்கரில் பயிரிட்டார். 2009-10-ல் சுற்றிலும் 30 ஏக்கர் இடத்திலும் நீலகிரியில் உள்ள குன்னூரில் 10 ஏக்கர் வாங்கியும் பயிரிட்டார். இதற்காக வங்கியில் 15 கோடி கடன்பெற்றார்.
தேசிய தோட்டக்கலைத்துறை வாரியம் இவருக்கு ஆறு தனித்தனி திட்டங்களுக்காக 3 கோடி ரூபாய் மானியம் வழங்கி உள்ளது. 2014-ல் வாகனம் வாங்க வாரியம் 50 சதவீதம் மானியம் வழங்கியது.
துபாகெரேவில் உள்ள பண்ணையில் ரோஜா, ஜெர்பெரா, கார்னேஷன், ஜிப்சோபிலா போன்ற பூச்செடிகளை பசுமை இல்லம் மற்றும் பாலிஹவுஸ்களில் வளர்க்கிறார். குன்னூரில் லிலியம்,கார்னேஷன் ஆகியவற்றை வளர்க்கிறார்.
"பூச்செடித் தொழில் அவ்வளவு எளிது இல்லை. முழுமையான ஈடுபாட்டுடன் ஈடுபடாவிட்டால் பயன் இராது. செடி பயிரிடுதல் தொடங்கி சந்தைப்படுத்தல் வரை நாமே ஈடுபடவேண்டும்,’’ என்கிறார் ஸ்ரீகாந்த்.
|
ஸ்ரீகாந்தின் பண்ணை பூக்கள் துபாய்க்கு ஏற்றுமதி ஆகின்றன. |
அவருடைய மொத்த பூவிற்பனைத் தொழிலில் சொந்தப்பண்ணையில் விளையும் பூக்கள் பத்து சதவீதமே. ஊட்டி, கொடைக்கானல் மற்றும் பெங்களூருவைச் சுற்றி இருக்கும் இடங்களில் இருந்தும் பூக்களை வாங்குகிறார். தாய்லாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஹாலந்து போன்ற இடங்களில் இருந்து இறக்குமதி செய்து தேவையைச் சமாளிக்கிறார்.
நாட்டில் உள்ள அனைத்து சந்தைகளுக்கும் மட்டுமல்ல துபாய் நாட்டுக்கும் இவரது பூக்கள் செல்கின்றன.
புதிய தொழில்நுட்பங்களை அறியவும் பிற நாடுகளில் என்ன நிலவரம் என்று தெரிந்துகொள்ளவும் ஸ்ரீகாந்த் 20 நாடுகளுக்கும் மேல் பயணம் செய்துள்ளார்.
“22 வயதில் ஐரோப்பா சென்றதுதான் என் முதல் வெளிநாட்டுப்பயணம். பூக்கள் பயிரிடப்படும் இடங்கள், விற்கப்படும் சந்தைகளுக்கு நேரடியாகச் சென்று அறிவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன்,’’ கூறுகிறார் ஸ்ரீகாந்த்.
|
ராக ஸ்ரீவந்தி, ஸ்ரீகாந்த்தின் துணைவி. ஸ்ரீகாந்துக்கு பேருதவியாக உள்ளார். (படம்: சிறப்பு ஏற்பாடு) |
தன் பண்ணைகளில் மழை நீர் சேகரிக்கிறார் ஸ்ரீகாந்த். “தினமும் நான்கு லட்சம் லிட்டர் நீர் எங்களுக்குத் தேவை. நல்ல மழை பெய்யும்போது கிடைக்கும் நீர் எங்களுக்கு ஏழெட்டு மாதங்களுக்கு வருகிறது,’’ என்று சொல்கிறார் ஸ்ரீகாந்த்.
இவரிடம் 300 பேர் வேலை பார்க்கிறார்கள். அதில் 80 பண்ணைத் தொழிலாளர்களுக்கு தங்க இடமும் உணவும் வழங்குகிறார். இதில் தனக்கு மகிழ்ச்சியாக இருப்பதாகவும் சொந்த ஊர்க்காரர்களுக்கு வேலை வழங்க்கியிருப்பதில் பெருமை கொள்வதாகவும் இவர் தெரிவிக்கிறார்.
2002-ல் ஹைதராபாத்தைச் சேர்ந்த ராக ஸ்ரீவந்தியை ஸ்ரீகாந்த் மணந்தார். மனைவி இவருக்கு தொழிலில் உதவியாக உள்ளார். அலுவலகக் கணக்குகளை பார்ப்பது முதல் வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்வது வரை அனைத்திலும் அவர் ஈடுபடுகிறார்.
ஏழாம் வகுப்பு படிக்கும் மகள் மோக்ஷாரீயும் ஆறாம் வகுப்பு படிக்கும் மகள் ஹர்ஷவர்த்தனும் பூக்கள் பயிரிடுவதில் ஆர்வம் கொண்டுள்ளனர். வாரக்கடைசியில் பண்ணைக்குச் சென்று வேலைகளிலும் ஈடுபடுகின்றனர்.
|
ஸ்ரீகாந்தின் குழந்தைகள் பண்ணையில் வேலைசெய்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். |
“பெங்களூரு வந்தபோது எனக்கு தெலுங்கும் இந்தியும்தான் தெரியும். வாடிக்கையாளர்களிடம் பேசிப்பேசி இப்போது ஆங்கிலம் உள்ளிட்ட ஆறு மொழிகள் கற்றுள்ளேன். தொழிலில் இது உதவியாகவும் உள்ளது,’’ என்கிறார் ஸ்ரீகாந்த்.
சொந்த ஊரிலிருந்து வெளியேறவும் ஏதாவது வித்தியாசமாக செய்யவும் இருந்த ஆர்வமுமே தன் வெற்றியின் ரகசியங்களாக அவர் கூறுகிறார்.
“இளைய தலைமுறை பெரிதாக கனவு கண்டு மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும். இளைஞர்களால்தான் புதிதாக எதையும் உருவாக்கவும் தடைகளைத் தாண்டவும் முடியும். நான் செய்ததும் அதுதான்,’’ முடிக்கிறார் ஸ்ரீகாந்த்.
அதிகம் படித்தவை
-
வைரஸ் எதிர்ப்பாளர்
பத்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டவர், இன்று உலகளாவிய அளவில் மென்பொருள் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி ஆண்டுக்கு 350 கோடி வர்த்தகம் செய்கிறார். மாதம் ரூ400க்கு கால்குலேட்டர் பழுதுபார்க்கும் வேலையில் தொடங்கிய மனிதரின் வெற்றிக்கதை இது
-
அழகான வெற்றி
கிராமத்தில் சாணி வறட்டி தட்டியதில் இருந்து முடிதிருத்தும் வேலை வரை கௌரவ் ராணா செய்யாத தொழில் இல்லை. டிப்ளமோ படிப்பு முடித்து, இப்போது 11 கோடி வர்த்தகம் செய்யும் அழகுச்சேவை நிறுவனம் நடத்தும் 24 வயது இளைஞரின் வெற்றிக்கதை இது. பிலால் ஹாண்டூ கட்டுரை
-
ஒரு கிராமம்; ஒரு கனவு; ஒரு வெற்றி!
அபாரமான தன்னம்பிக்கையுடன், 50 ச.அடி ஸ்டோர் ரூம் இடத்தில் அலுவலகத்தைத் தொடங்கினார் சுமன். இப்போது இந்தியாவில் மட்டுமின்றி, ரஷ்யாவிலும் தமது அலுவலகத்தைத் தொடங்கி உயர்ந்துள்ளார். குருவிந்தர் சிங் எழுதும் கட்டுரை
-
வெற்றிதந்த காபி!
இவர் கல்லூரிப்படிப்பை பாதியில் விட்டவர். வெற்றிகரமாக நடந்த முதல்தொழில் தோற்றாலும் கலங்கவில்லை. ஆண்டுக்கு 15 கோடி ரூபாய் விற்பனை செய்யும் காபி தொழிலதிபராக இன்று மாறி இருக்கும் இவர் தன் வெற்றியின் ரகசியத்தைச் சொல்கிறார். கட்டுரை: உஷா பிரசாத்
-
கீழடி: உரக்கக்கூவும் உண்மை
மதுரை அருகே கீழடியில் செய்யப்பட்ட அகழாய்வு தரும் செய்திகள் இந்திய வரலாற்றை இனி தெற்கே இருந்துதான் தொடங்கவேண்டும் என்பதற்கான உறுதியான ஆதாரங்கள். சங்ககாலத்துக்கும் முற்பட்ட இந்த நகர நாகரிகத்தைக் குறித்து ஆய்வாளர்கள், ஆர்வலர்களுடன் உரையாடி உதய் பாடகலிங்கம் எழுதும் கட்டுரை
-
கொடுத்துச் சிவந்த கரங்கள்
இளம் வயதில் வறுமையை மட்டுமே பார்த்தவர் இளங்கோவன். நன்றாகப் படித்து, வாழ்கையில் உயர்ந்தவர். கடனில் சிக்கியதால் அதில் இருந்து மீள குவைத் சென்று முதலில் இருந்து வாழ்க்கையைத் தொடங்கி வெற்றிபெற்றார். வறுமையில் இருப்பவர்களுக்கு நிதி அளிக்கும் கொடையாளராக இருக்கிறார். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை...