முதலீடே இல்லை! ஆனால் பத்துமாதத்தில் 35 லட்சம் வருவாய்! அசத்தும் அஸ்ஸாம் இளைஞர்!
28-Jan-2025
By உஷா பிரசாத்
அஸ்ஸாம்
வெற்றி என்று வரும்போது வயது என்பது வெறும் எண் மட்டும்தான். ராஜன் நாத்தை பொறுத்தவரை சந்தேகத்துக்கு இடமின்றி இது நிரூபணம் ஆகியிருக்கிறது. 23 வயதில் அவர் வெற்றிகரமான தொழிலதிபர் ஆகியிருக்கிறார்.
ராஜன், தெற்கு அசாமில் உள்ள சில்சார் என்ற ஒரு சிறு நகரத்தில் ஒரு நடுத்தரக் குடும்பத்து பின்னணியில் பிறந்து வளர்ந்தவர். இ-போஸ்டல் நெட் ஒர்க் எனப்படும் தேர்வுப் பயிற்சிக்கான ஸ்டார்ட் அப் நிறுவனத்தை உருவாக்கி இருக்கிறார். இது இந்தியாவில் தபால் ஊழியர்களுக்கான முதலாவது ஆன்லைன் பயிற்சி மையமாகும்.
ரூ.7000 மதிப்புள்ள தமது ஸ்மார்ட் போனைக் கொண்டு இபோஸ்டல் நெட்ஒர்க் என்ற யூடியூப் சேனலை ராஜன் தொடங்கினார். பின்னர் இது ஒரு நிறுவனமாக வளர்ச்சியடைந்தது. (புகைப்படங்கள்: சிறப்பு ஏற்பாடு) |
இந்திய ராணுவத்தில் சாதாரண வீரராக பணியாற்றிய ஒருவரின் மகனான ராஜனுக்கு, மருத்துவக் கல்லூரி நுழைவுத்தேர்வுக்கு தயாராவதற்கு போதுமான வசதிகள் கிடைக்கவில்லை. எனவே, பிறரின் கனவுகளை நனவாக்க உதவுவதற்கான ஒரு நிறுவனத்தைத் தொடங்குவது என்று தீர்மானித்தார். அவருடைய இ-போஸ்டல் நெட்ஒர்க் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் எந்தவித முதலீடும் இன்றி தொடங்கப்பட்டதாகும். அடுத்த பத்து மாதங்களில் ஒரே ஆளாக ரூ.35 லட்சம் ஆண்டு வருவாய் ஈட்டினார். தவிர தனிப்பட்ட முறையில் 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட யூடியூப் சேனல் வாயிலாக விளம்பரத்தின் மூலம் ரூ8 லட்சம் வருவாய் ஈட்டினார். தபால் துறையின் சி குரூப் ஊழியர்கள் தம்துறைசார்ந்த போட்டித் (Limited Departmental Competitive Exams)தேர்வுகளை எழுதி துறையில் அடுத்த கட்ட பதவி உயர்வு பெறுவதற்கு இ-போஸ்டல் நெட்ஒர்க் பயிற்சி அளிக்கிறது. “முதல் குழுவில் 300க்கும் மேற்பட்டோர் பயிற்சியில் சேர்ந்தனர். தேர்வு முடிவுகள் வெளியான போது, பயிற்சி பெற்றவர்களில் பெரும்பாலானோர் அடுத்த பதவிக்கு உயர்ந்தனர்,” என்றார் ராஜன். உயர் தரமான பயிற்சி முறைகளை டிஜிட்டலாக தயார் செய்து தனது சந்தாதாரர்களுக்கு ராஜன் வழங்குகிறார். தினசரி உரை, மாதிரி தேர்வுகள் மற்றும் திருப்புதல் தேர்வுகள் என பயிற்சிகளைப் பெற்று முதல் குழுவில் தேர்வுக்காக பயிற்சி பெற பதிவு செய்திருந்தவர்களில் 70 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றனர்.
ராஜனின் இ-போஸ்டல் நெட் ஒர்க்கில் சராசரியாக 5000 தபால் ஊழியர்கள் தபால் துறை தேர்வுகள் எழுதி பதவி உயர்வு பெறுவதற்காக பயிற்சியில் சேர்ந்தனர் |
கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் போன்ற எதுவும் இன்றி தமது நிறுவனத்தை ராஜன் தொடங்கினார். அவர் தமது யூடியூப் சேனலை 2017ஆம் ஆண்டு தனது ரூ.7000 மதிப்புள்ள ரெட்மி 5 ப்ரோ ஸ்மார்ட் போன் வாயிலாகத் தொடங்கினார். தமது ஸ்மார்ட் போன் மூலமாகவே தமது ‘epostal.in’ என்ற இணையதளத்தையும் தொடங்கினார். அவரது ஸ்டார்ட் அப் நிறுவனம் பல்வேறு தபால்துறை தேர்வுகளுக்கு 60-90 நாட்கள் பயிற்சி வகுப்புகளை வழங்குகிறது. ஆரம்பத்தில் இந்தி மொழி வாயிலாக கற்பித்தார். கடந்த ஜனவரி மாதம் முதல் ஆங்கிலத்திலும் ராஜன் வகுப்புகளை நடத்தி வருகிறார். எம்டிஎஸ், போஸ்ட்மேன்/மெயில் கார்டு ஆகிய பதவிகளுக்கு ரூ.1000 பயிற்சி கட்டணமும், போஸ்டல் உதவியாளர்/சார்ட்டிங் உதவியாளர் பணிகளுக்கு ரூ.1,500 பயிற்சி கட்டணமும் வசூலிக்கிறார். 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி வரை கொண்ட தினசரி உரைகளும் பயிற்சியில் அடக்கமாகும். பயிற்சியில் சேர்ந்தவர்களுக்கு பிரத்யேகமான யூடியூப் டுடோரியல் லிங்க் அனுப்பப்படும். இதுவரை சராசரியாக 5000 பேர் பல்வேறு பயிற்சிகளுக்காக சேர்ந்துள்ளனர். அவர்களில் 70 சதவிகிதம் பேர் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டனர் என்று சொல்கிறார் ராஜன். 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் கட்டணம் செலுத்தி படிக்கும் பயிற்சி வகுப்புகளைத் தொடங்கினார். அந்த சமயம் அவரது யூடியூப் சேனலில் ஒரு லட்சம் சந்தாதாரர்கள் இருந்தனர். ஆரம்ப கட்டத்தில் 2017ஆம் ஆண்டு ஸ்டாப் செலக்சன் கமிஷன் தேர்வுக்கு தயாரானபோது ஒரு யூடியூப் சேனல் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. “தபால் துறை குறித்து இணையதளத்தில் எந்த ஒரு தகவல்களும் எனக்குக் கிடைக்கவில்லை. எந்த ஒரு பயிற்சி வகுப்புகளோ அல்லது பயிற்சி மையங்களுக்கோ போக முடியவில்லை,” என்றார் ராஜன். “எனவே ஏற்கனவே தபால் துறையில் இருக்கும் ஊழியர்களுக்கும், தபால்துறை நடத்தும் போட்டித்தேர்வுகள் வாயிலாக பணியில் சேருவோருக்கு உதவும் வகையிலும் இது போன்ற ஒன்றை தொடங்க வேண்டும் என்று நான் அப்போது நினைத்தேன்.” ராஜன் ஒரு நடுத்தரக்குடும்பத்தின் பின்னணியில் இருந்து வந்தவர். அவரது தந்தை ராணுவத்தில் நாயக் ஆக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவரது தாய் குடும்பத்தலைவியாக இருக்கிறார்.
முகநூல் மற்றும் வாட்ஸ் ஆப் குழுக்களில் இதுபோல் விளம்பரம் வெளியிட்டு தன் நிறுவனத்தை ராஜன் சந்தைப்படுத்தினார். |
ராஜன் ராணுவத்தில் அல்லது அரசு வேலையில் சேர வேண்டும் என்று அவரது தந்தை விரும்பினார். மாசிப்பூர் கேந்திர வித்யாலயாவில் படித்த அறிவியல் மாணவனான ராஜன் மருத்துவக் கல்வி படிக்க விரும்பினார். ஆனால், அவருக்கு இடம் கிடைக்கவில்லை. சில்சாரில் ஜிசி கல்லூரியில் பிஎஸ்சி விலங்கியலில் சேர்ந்தார். “என்னுடைய தந்தை முன்கூட்டியே ஓய்வு பெற்றுவிட்டார். அவரது பென்ஷனைக் கொண்டு என்னை மற்றும் என்னுடைய சகோதரி என இரண்டு பிள்ளைகளை படிக்கவைத்தார். எனவே, குடும்பம் நடத்த வருவாய் போதுமானதாக இல்லை. ஆகவே மருத்துவ கல்வி நுழைவுத்தேர்வுக்காக படிப்பதற்கு எந்த ஒரு பயிற்சியும் பெற இயலவில்லை,” என்றார் ராஜன். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும்போது எஸ்எஸ்சி தேர்வுகளை எழுதினார். ரூ.25,000 மாத சம்பளத்தில் தபால் துறையில் தபால் உதவியாளர் பணி கிடைத்தது. “ஒரு அரசாங்க வேலை கிடைத்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், அதில் நான் சேரவில்லை. நல்பாரி பகுதியில் பணியில் சேரும்படி கூறினர். சில்சாரில் இருந்து அந்த பகுதி 380 கி.மீ தூரத்தில் இருந்தது. மேலும் என்னுடைய பட்டப்படிப்பை முடிக்க வேண்டும் என்றும் நான் நினைத்திருந்தேன்,” என்றார் ராஜன். பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்தபோதே யூடியூப் சேனலை முன்னெடுப்பதிலும் கவனம் செலுத்தத் தொடங்கினார். ஆரம்ப கட்டத்தில் அவரது சேனல் வழியாக தபால்துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் அல்லது தேர்வுகள் அல்லது அறிவிப்புகள் அல்லது உத்தரவுகள் தொடர்பான செய்திகளை இலவசமாக வழங்கினார். பின் தொடர்வோர் எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து, ஒரு இணையதளம் தொடங்கினார். அதன் வாயிலாக தபால் ஊழியர்களுக்கு மற்றும் தபால் ஊழியர் வேலைக்கு செல்ல விரும்புவோருக்கு பயிற்சிக்கான பாடங்களை தயாரித்து வழங்குகிறார். “வீடியோ உரை மற்றும் கையால் எழுதிய குறிப்புகள் வாயிலாக பயிற்சிகளுக்கான பாடங்களை தயாரிக்கத் தொடங்கினேன். நான் குடிமைப் பணித் தேர்வு எழுதும் விருப்பம் கொண்டிருந்ததால், குறிப்புகள் எடுப்பது எனக்கு சிக்கலாக இல்லை,“ என ஒரு புத்திசாலி இளைஞராக கூறுகிறார். இந்தி மொழியில் எளிதாக புரிந்து படிப்பதற்கான பயிற்சிக்கான பாடங்களை தயாரிக்க இணையம் மற்றும் பிற ஆதாரங்களைப் பயன்படுத்தினார். ராஜன் எப்போதுமே சுயமாகக் கற்றுக் கொள்ளும் மாணவராகவும், கற்றலில் ஆர்வமுள்ளவராகவும் இருந்தார். யூடியூப் டுடோரியல்கள் வாயிலாக பார்த்துத் தெரிந்து கொண்ட தகவல்களைக் கொண்டு ஆன்லைன் சேனல் மற்றும் வெப்சைட்டை உருவாக்கினார். ஆரம்பகட்டத்தில் கிராமீன் தாக் சேவாக்களுக்கு (Grameen Dhak Sevaks)பயிற்சி அளித்து அவர்களை பன்முக திறன் கொண்ட அலுவலர் பதவிக்கு தகுதி படைத்தவர்கள் ஆக்கினார். பின்னர் போஸ்ட் மேன் மற்றும் தபால் உதவியாளர் பணிகளுக்கும் பயிற்சி கொடுத்தார். வாட்ஸ் ஆப் குழுக்கள் மற்றும் முகநூல் போன்ற சமூக ஊடங்கள் வாயிலாக விளம்பரம் வெளியிட்டு தமது சேனலை அவர் சந்தைப்படுத்தினார். ராஜன் தன்னை தனிநபர் தொழில்முனைவோர் என்று அழைத்துக் கொண்டார். இப்போது அதனை விரிவாக்கி இருக்கிறார். தமது உதவிக்காக மூன்று ஆன்லைன் ஆசிரியர்களை நியமித்திருக்கிறார். தனது ஸ்டார்ட் அப் நிறுவனத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் வகையில் ஒரு செயலி உருவாக்குவதற்கான பணிகளில் உள்ளார்.அதனை இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்குவது என்று திட்டமிட்டிருக்கிறார். அந்த செயலி வாயிலாக செய்திகள், படிப்பதற்கான குறிப்புகள் மற்றும் சில தபால் பொருட்களை விற்பதற்கும் திட்டமிட்டுள்ளார். “செயலியை தொடங்கிய பின்னர், இதர துறைகளில் நடைபெறும் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராவதற்கான பயிற்சி வகுப்புகளையும் தொடங்கத் திட்டமிட்டிருக்கின்றேன்,” என்றார் அவர்.
ராஜன் தன்னுடைய ஸ்டார்ட் அப் நிறுவனத்துக்காக பெரிய திட்டங்களை கைவசம் வைத்திருக்கிறார். இன்றைக்கு தொழில்நுட்பம் மூலம் பயிற்சி அளிக்கும் துறையில் சந்தையில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்கள் அளவுக்கு அதனை எடுத்துச் செல்ல வேண்டும் என்று விரும்புகிறார் |
தென் இந்தியாவில் இருந்து தபால் துறையில் போட்டித் தேர்வுகள் எழுத விரும்புவோர்களுக்காக, தென் இந்திய மொழிகளிலும் பயிற்சிகளை அளிக்கத் திட்டமிட்டு, தென்னிந்திய பிராந்தியங்களைச் சேர்ந்த தபால் துறையைச் சார்ந்த ஓய்வு பெற்ற அதிகாரிகளை பயிற்றுநர்களாக நியமிக்க உள்ளார். தபால் துறை சார்பில் பல்வேறு பதவிகளுக்கு தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டதால், பயிற்சியில் அதிகம் பேர் சேர்ந்ததன் காரணமாக இபோஸ்டல் நெட் ஒர்க்கானது, 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வருவாய் ஈட்டியது. ராஜன் தனதுபெற்றோர் மற்றும் மூத்த சகோதரி ரூபி நாத் உடன் வசிக்கிறார். அவரது சகோதரி சில்சாரில் உள்ள ஒரு தனியார் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியை ஆகப் பணியாற்றுகிறார். “பைஜூஸ், அன்அகதாமி மற்றும் பாட்னாவைச் சேர்ந்த கான் ஸார் ஆகியோர்தான் என்னுடைய தொழில்முனைவு பயணத்தில் உந்துதலாக இருந்தவர்கள்,” என்கிறார் இத்துறையில் சாதித்தவர்களை கவனமாக உற்றுநோக்கி முன்னேறிய ராஜன். “பைஜூஸ் வளர்ச்சி பற்றி நான் நெருக்கமாக கவனித்து வந்தேன். இ-போஸ்டல் நெட் ஒர்க்கும் இதே போல் ஒருநாள் வளரும் என நினைக்கிறேன்.” ராஜன் தனது நேரம், முயற்சி மற்றும் அறிவை முதலீடு செய்து வெற்றிகரமான பயணத்தில் ஈடுபட்டிருக்கிறார். பலரும் நினைப்பது போல வாழ்க்கையில் வெற்றியாளர் ஆவதற்கு பணம் மட்டுமின்றி, இவை அனைத்தையும் ஒருவர் மேற்கொள்ள வேண்டும்.
அதிகம் படித்தவை
-
தன்னம்பிக்கையே கண்களாக...
மதுரையைச் சேர்ந்த பூரண சுந்தரி 2019-ம் ஆண்டுக்கான ஐ.ஏ.எஸ் தேர்வில் இந்திய அளவில் 286-ம் இடம் பெற்றிருக்கிறார். மிக எளிமையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அவர், 6 வயதில் பார்வையை இழந்தவர். இருப்பினும் பெற்றோர், தோழிகள், ஆசிரியர்கள் அளித்த ஊக்கத்தில் இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்.
-
கண்டெய்னரில் கண்ட வெற்றி!
இரண்டு முறை தொழில் தொடங்கி தோல்வியடைந்தார் இக்பால் தங்கல். இருப்பினும் முயற்சியில் தளராமல் மூன்றாவது முறையாக கண்டெய்னர் வீடுகள், அலுவலகங்கள் கட்டமைக்கும் தொழிலில் ஈடுபட்டு வெற்றி பெற்றுள்ளார். சோபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை
-
கடலுணவில் கொட்டும் கோடிகள்
இரண்டு லட்சம் ரூபாய் கடனில் மீன்பிடிப்படகுகள் வாங்கி தொழில் தொடங்கிய தாரா ரஞ்சன் முன் அனுபவம் இல்லாததால் தோல்வியைச் சந்தித்தார். ஆனால் அதில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு, இன்று ஆண்டுக்கு 1500 கோடி ரூபாய் வர்த்தகம் செய்யும் மிகப்பெரிய தொழில் அதிபராக இருக்கிறார். ஜி.சிங் எழுதும் கட்டுரை
-
மொறுமொறு வெற்றி!
சிராக் குப்தா அமெரிக்காவுக்கு மேல்படிப்பு படிக்கச் சென்று அங்கேயே ஆண்டுக்கு ஒரு லட்சம் டாலர் தரும் வேலை பார்த்துக்கொண்டிருந்தவர். பின்னர் இந்தியா திரும்பி நண்பருடன் இணைந்து பாப்கார்ன் தயாரிக்கும் தொழிலை வெற்றிகரமாக செய்து வருகிறார். சோஃபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை
-
ஒரு மசால்தோசையின் வெற்றி!
கேரளாவைச் சேர்ந்த கேசவன் குட்டி, சிறுவயதில் கடினமான சூழலில் வளர்ந்தவர், டெல்லியில் தமிழ்ப்பள்ளியில் கேன்டீனில் வேலை பார்த்து தொழில் கற்றுக் கொண்டவர், இன்றைக்கு டெல்லியில் மூன்று ரெஸ்டாரண்ட்கள் நடத்துகிறார். தினமும் 60 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை
-
உயரங்களை எட்டியவர்
ராஜ்குமார் குப்தாவின் கதை அசாதாரணமானது. ஆலைத் தொழிலாளியாக ஆரம்பித்து, மிகப்பெரிய தொழிலதிபராக வளர்ச்சிபெற்றவர். சின்னதாக ஒரு குடியிருப்பைக் கட்டுவதில் தொடங்கி ஐந்து நட்சத்திர ஹோட்டல் நடத்தும் அளவுக்கு வளர்ச்சி. ஜி சிங் எழுதும் வெற்றிக்கதை