Milky Mist

Wednesday, 7 June 2023

ஜிம்மில் உதித்த தொழில்யோசனை! ஆண்டுக்கு 2.6 கோடி வருவாய் ஈட்டும் இளைஞர்!

07-Jun-2023 By குருவிந்தர் சிங்
கொல்கத்தா

Posted 05 Feb 2021

அசாம் மாநிலத்தில் சில்சார் என்னும் சிறிய நகரைச் சேர்ந்தவர் சுப்ராஜோதி பால் சவுத்ரி. இவர் 19- வயதாக இருக்கும்போது தகவல் தொழில்நுட்பவியலில் மூன்றாண்டு பட்டப்படிப்பை நிட் கல்வி நிறுவனத்தில் படிப்பதற்காக கொல்கத்தா வந்தார்.

இதற்கு 12 ஆண்டுகளுக்குப் பிறகு நகரின் மிகவும் பிரபலமான இளம் தொழிலதிபராக இருக்கிறார். ரூ.2.6 கோடி ஆண்டு வருவாய் ஈட்டும் வெற்றிகரமான சங்கிலித்தொடர் உடற்பயிற்சி நிறுவனங்களை நடத்தி வருகிறார். புகழ்பெற்ற வங்காள நடிகை தேபபர்ணா சக்ரவர்த்தியை திருமணம் செய்து கொண்டுள்ளார். .

ரிவால் ஃபிட்னஸ் ஸ்டுடியோவின் நிறுவனர் சுப்ராஜோதி பால் சவுத்ரி (புகைப்படங்கள்: சிறப்பு ஏற்பாடு)  

சுப்ராஜோதி பால் சவுத்ரி, 31, அடி மட்டத்தில் இருந்து வந்தவர். ஆரம்ப கட்டத்தில் ஃபிரீலேன்சராகப் பணியாற்றியவர். பின்னர் நெட்ஒர்க் செக்யூரிட்டி புரோகிராமராக ஒரு எம்என்சி நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார். ஒரு நல்ல நாளில் அதில் இருந்து விலகுவது என்று தீர்மானித்து விலகி, தமது சொந்த தொழிலைத் தொடங்கினார்.

“பிறருக்குக் கீழ் பணிபுரிவது எனக்குப் பிடிக்கவில்லை. நானே சொந்தமாக ஏதேனும் செய்ய வேண்டும் என்று விரும்பினேன்,” என்கிறார். “அந்த எம்என்சி நிறுவனத்தில் இரண்டரை வருடம் வேலைபார்த்தேன். நெட்ஒர்க் செக்யூரிட்டி தொடர்பான குறியீடுகள் எழுதினேன். மாதம் ரூ.22000 சம்பளம் பெற்றேன்.”

அவருடைய தந்தையும் ஒரு தொழில் அதிபர். மிகவும் இளம் வயதிலேயே அவரது மகனின் மனதுக்குள் தொழில்முனைவோருக்கான விதையை அவர்தான் விதைத்திருக்கிறார். “என்னுடைய தந்தை அசாமில் உள்ள சில்சாரில் சொந்தமாக ஒரு கல்வி ஆலோசனை நிறுவனம் நடத்தி வந்தார்,” என்றார் சுப்ராஜோதி. “இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களுடன் அவர் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருந்தார். மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு ஆலோசனைகளையும் வழங்கினார். அவரை சார்ந்திருப்பதை விடவும் நானே சொந்தமாக சம்பாதிக்க வேண்டும் என்று அவர் எப்போதுமே எனக்கு சொல்லிக் கொடுத்தார்.

” வசதியான ஒரு இடத்தில் இருந்த அவரை பெற்றோர்தான் உந்தித் தள்ளினர். மிகவும் சிறுவயதிலேயே சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று அவர்கள்தான் ஊக்குவித்தனர். சில்சாரில் 2005ஆம் ஆண்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் பத்தாம் வகுப்பு முடித்த உடன், அசாமின் பெரிய நகரான கவுகாத்தியில் சுப்ராஜோதி பள்ளிப்படிப்பைத் தொடர்ந்தார்.

“என்னுடைய பெற்றோர், என்னை பெரிய நகருக்கு, அந்த நகரைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக, சமூகத்தைப் புரிந்து கொள்வதற்காக அங்கு மக்கள் எவ்வாறு வாழ்கின்றனர் என்பதை கற்றுக் கொள்வதற்காக   அங்கு அனுப்பினர். ஒரு பெரிய நகரில் வசிக்க வேண்டும் என்று நானும் கூட ஆர்வமாக இருந்தேன்.”

கவுகாத்தியில் உள்ள சவுத் பாயிண்ட் பள்ளியில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு  படித்தார். 2007ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்றார். இந்த இரண்டு ஆண்டுகள் அவர் பெரும் அளவில், குறியீடு எழுதும் திறன் உட்பட பலவற்றைக் கற்றுக் கொண்டார்.
சுப்ராஜோதி, தமது மனைவியும் நடிகையுமான தேபபர்ணா சக்ரவர்த்தியுடன்


“என்னுடைய பள்ளி நாட்களில், வீடியோ கேம்ஸ் விளையாடுவதில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டேன். சில்சார் ஒரு சிறிய நகர் என்பதால், அங்கு எந்த ஒரு மால் அல்லது பொழுதுபோக்கு இடங்களோ எதுவும் இல்லை. வீடியோ கேம்ஸ்கள் மீதான என்னுடைய விருப்பம் கவுகாத்தி வரும் வரை கூடவே தொடர்ந்தது. குறியீடு மற்றும் புரோகிராமிங் எழுதும் வகையில் விரிவடைந்தது,”என்றார் சுப்ராஜோதி

ஒரு ஃபிரிலேன்சராக கம்ப்யூட்டர்களை ஃபார்மேட் செய்தல், விண்டோஸ் எக்ஸ்பி-யை இன்ஸ்டால் செய்தல் ஆகிய பணிகளுக்காக அவரது அறிவை உபயோகிக்கத் தொடங்கினார். ”அந்த நாட்களில் விண்டோஸ் 95 உடன் பெரும்பாலானோர் பிரச்னைகளை சந்தித்தனர். எனவே அதனை மாற்றி அப்போதுதான் சந்தைக்குள் வந்த விண்டோஸ் எக்ஸ்பி-யை நிறுவ நினைத்தனர்,” என்றார் சுப்ராஜோதி.

“நான் அந்தப் பணிகளை செய்தேன். அதற்காக ரூ.300 கட்டணம் வாங்கினேன். சிஸ்டத்தில் வீடியோ  கேம்ஸ்களையும் இன்ஸ்டால் செய்து கொடுக்க ஆரம்பித்தேன். விடுமுறை தினங்களில், பள்ளி நேரம் முடிந்த பின்னும் நான் பணியாற்றினேன். விரைவிலேயே நான் மாதம் தோறும் தோராயமாக ரூ.24,000 சம்பாதித்தேன். அப்போது இந்த தொகை பெரிய தொகையாக இருந்தது.”

தமது வாழ்க்கையை அவர் திரும்பிப் பார்க்கிறார். பணத்துக்கு தட்டுப்பாடு இல்லாத ஒரு குடும்பத்தில் இருந்து வந்த அவருக்கு இளம் வயதிலேயே வேலைக்கு செல்ல  உந்தித் தள்ளியது எது என்று அவர் நினைத்துப் பார்க்கிறார். “பணம் சம்பாதிப்பது கடினமானது என்று என் தந்தை எனக்கு கற்றுக் கொடுத்தார். அதனை சம்பாதிப்பதற்கு ஒருவர் சொந்த வழியில் முயற்சிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார். பணத்தின் மதிப்பைப் பற்றி நான் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் விரும்பினார்,” என்று சுப்ராஜோதி சுட்டிக்காட்டினார்.

12ஆம் வகுப்பு படிப்பு முடித்ததும் சுப்ராஜோதி சில்சார் திரும்பி வந்தார். நிட் கல்வி நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்பவியல்  மூன்று ஆண்டு படிப்பில் சேர்ந்தார். ஆனால், ஒரு ஆண்டிலேயே கொல்கத்தாவுக்கு அவர் சென்றார். மீதம் இருக்கும் படிப்பை கொல்கத்தாவில் உள்ள நிட் கிளையில் படிப்பது என்று தீர்மானித்தார்.   
சுப்ராஜ்ஜோதி தமது இளம் சகோதரர் சுமானிஜோதியுடன்.


“பெரிய நகரம் என்பதால், நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்பதால் நான் கொல்கத்தாவில் வசிக்க விரும்பினேன். படிப்பை முடித்த உடன் ஒரு வேலையில் சேர வேண்டும் என்று நான் திட்டமிட்டிருந்தேன்,” என்ற சுப்ராஜோதி, தாம் கொல்கத்தாவுக்கு வந்ததற்கான காரணத்தை சொன்னார்.

2010ஆம் ஆண்டு படிப்பை முடித்தார். பின்னர் குறியீடு எழுதுவது மற்றும் புரோகிராமிங் திறனை வளர்த்துக் கொள்ள ஆரக்கிள் மற்றும் ஜாவாவில் பல்வேறு தொழில்நுட்ப சான்றிதழ்கள் தரும் படிப்புகளில் 2013ஆம் ஆண்டு வரை படித்தார். இந்த திறன்களை உபயோகித்து அவர் ஃபிரிலேன்சராகப் பணியாற்றி மாதம் ரூ18,000 சம்பாதிக்க ஆரம்பித்தார்.

2013ஆம் ஆண்டு கொல்கத்தாவில் உள்ள ஒரு எம்என்சி நிறுவனத்தில் நெட்ஒர்க் சிஸ்டம் டெவலப்பர் ஆக மாதம் ரூ.22,000 சம்பளத்தில் சேர்ந்தார். அந்த நிறுவனத்தில் அவர் இரண்டரை ஆண்டுகள் வரை 2015ஆம் ஆண்டு பணியில் இருந்து விலகும் வரை பணியாற்றினார். தாம் சொந்தமாக ஏதேனும் செய்ய வேண்டும் என்று அவர் விரும்பினார். ஆனால், எந்த துறையைத் தேர்ந்தெடுப்பது என்பதில் அவர் உறுதியாக இல்லை. அவரது தந்தை அவரை சில்சார் திரும்பி வரும்படியும், தமது வணிகத்துக்கு உதவும் படியும் கூறினார். சுப்ராஜோதி, கொல்கத்தாவில் இருப்பது என்று தீர்மானித்தார். ஒரு நிறுவனம் தொடங்குவது குறித்து திட்டமிட்டார்.

அவருக்கு போதுமான நேரம் இருந்ததால், தமது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள ஒரு ஜிம்முக்கு போவது என்று தீர்மானித்தார். "நான் விளையாட்டில் சிறந்து விளங்கினேன். பள்ளி அளவில் எல்லாவிதமான விளையாட்டுகளையும் விளையாடினேன். நான் ஒரு நல்ல நீச்சல் வீரரும் கூட. ஆனால், ஒரு போதும் ஜிம்மில் நான் சேர்ந்ததில்லை. வேலையில் இருந்து விலகியபின்னர், உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள ஜிம்முக்குப்போவது என்று திட்டமிட்டேன்," என்றார் அவர். 

"அந்த தீர்மானம்தான் என்னுடைய ஆர்வத்தை தெரிந்து கொள்ள எனக்கு உதவியாக இருந்தது. அதுதான் என்னுடைய வாழ்வாதாரமாக மாறியது." கொல்கத்தாவில் ஒரு உள்ளூர் ஜிம்மில் சேர்ந்தபின்னர், ஜிம் பயிற்சி அளிப்பதில் நகரில் இரண்டு விதமான பயிற்சி நிறுவனங்கள் இருந்தன என்பது தெரிந்தது. முதல் வித பயிற்சி மையங்கள் மிக குறைந்த கட்டணம் பெற்றன. இந்த வகை ஜிம்கள் அனைத்துத் தெருக்களிலும், குறுக்கு தெருக்களிலும் கூட இருந்தன. இன்னொரு விதமான ஜிம் பயிற்சி மையங்கள் ஆடம்பரமாக அதிக மாத கட்டணம் வசூலிப்பவையாக இருந்தன.
 சுப்ராஜோதி தமது சம்பாத்தியத்தில் வாங்கிய தமது முதலாவது பிஎம்டபிள்யூகாருடன்

ஒரு வணிக வாய்ப்பு இருப்பதை சுப்ராஜோதி உடனடியாக உணர்ந்தார். ஆடம்பர ஜிம் அளிக்கும் வசதிகளுடன் கூடிய ஆனால் கட்டணம் ஏற்ற வகையில் இருக்கும் வகையிலான ஒரு ஜிம் தொடங்குவது குறித்த எண்ணம் அவருக்குள் ஏற்பட்டது.

  "இது குறித்த யோசனையை நான் எனது தந்தையுடன் பகிர்ந்து கொண்டேன். ஆனால் ஆரம்ப கட்டத்தில் அவர் கொஞ்சம் பயந்தார்," என்று பகிர்ந்து கொண்டார். "என்னிடம் ரூ.8 லட்சம் வரை சேமிப்பு பணம் இருந்தது. என் தந்தையிடம் ரூ.20 லட்சம் எனக்கு கடனாகத் தரும்படி கேட்டேன். அந்தப் பணத்தை 5 சதவிகித வட்டியுடன் திருப்பித் தருகின்றேன் என்று அவருக்கு வாக்குறுதி கொடுத்தேன். அந்த நிபந்தனைக்கு அவர் ஒப்புக்கொண்டார். அதன்படி உரிய நேரத்தில் அந்தப் பணத்தை அவருக்குக் கொடுத்தேன்."

2016ஆம் ஆண்டு தமது முதல் ஜிம்மை 2,200 ச.அடி இடத்தில் ரூ.28 லட்சம் முதலீட்டில் தெற்கு கொல்கத்தாவில் ரிவால் ஃபிட்னஸ் ஸ்டுடியோ என்ற பெயரில் திறந்தார். அவரது இளம் சகோதரர் சுமான்ஜோதி பாலும் (29) கொல்கத்தாவுக்கு இடம் பெயர்ந்தார். ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிப்பில் சேர்ந்தார். அவரும் தமது சகோதரரின் வணிகத்துக்கு உதவி செய்தார்.

  "நாங்கள் மாத கட்டணமாக ரூ.2000 வசூலித்தோம். தனிப்பட்ட பயிற்சியாளர் தேவையெனில் ரூ.3700 என்று கட்டணம் வசூலித்தோம். பிற ஜிம் நிறுவனங்கள் இதே சேவைகளுக்கு ரூ.5000 முதல் ரூ.8000 வரை கட்டணம் வசூலித்தன," என்றார் அவர். விரைவிலேயே அவரது ஜிம், வாடிக்கையாளர்களை ஈர்க்கத் தொடங்கியது.

வங்காள நடிகையான தேபபர்ணாவும் அங்கு வரத் தொடங்கினார். பின்னர் அவர் அவரது மனைவியானார்.

தமது தந்தையிடம் வாங்கி கடன் தொகையை குறிப்பிட்ட காலத்துக்குள் திருப்பிச் செலுத்தினார். ரூ.34 லட்சத்துக்கு பிஎம்டபிள்யூ காரும் வாங்கினார். இதற்காக தமது வருமானத்தில் இருந்து ரூ.8 லட்சம் முன் தொகையாகக் கொடுத்தார்.
ரிவால் ஃபிட்னஸ் ஸ்டுடியோ உரிமையாளருடன் அதன் குழுவினர்

2018ஆம் ஆண்டு இரண்டாவது ஜிம்மை தெற்கு கொல்கத்தாவில் தொடங்கினார். மூன்றாவது ஜிம்மை சில்சாரில் அடுத்த ஆண்டு பிரான்ஞ்சைஸ் மாடலில் தொடங்கினார். ஜிம்மின் அளவைப் பொறுத்து ரூ.50 லட்சம் முதல் ரூ.1.1 கோடி வரை பிரான்ஞ்சைஸ்க்கு வாங்கினர்.

2019ஆம் ஆண்டு தமது இந்த சங்கிலித் தொடர் நிறுவனங்களை பிரைவேட் லிமிடெட் நிறுவனமாக மாற்றினார். அவர் தமது வசம் நிறுவனத்தின்  96 சதவிகித பங்குகளை வைத்துக் கொண்டார். மீதம் உள்ள பங்குகளை அவரது சகோதரர் வைத்திருக்கிறார்.

"இப்போதைய நிதி ஆண்டின் முடிவுக்குள் ரூ.4.2 கோடி ஆண்டு வருவாய் ஈட்டமுடியும் என்று எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது,"என்று சுப்ராஜோதி கூறுகிறார்.

இளம் தொழில்முனைவோர்களுக்கு அவரின் அறிவுரை; அவசரம் அவசரமாக முடிவுகளை எடுக்காதீர்கள். பிரச்னைகள் குறித்து தீவிரமாக ஆராய்ச்சி செய்யுங்கள். பின்னர் அதனை வணிக ரீதியாக தீர்க்க முயற்சி செய்யுங்கள். கடைசியாக உங்கள் வேலையின் மீது ஆர்வமாக இருங்கள். 

 
 
 
 
 

அதிகம் படித்தவை

  • Wow! They sell 1.5 lakh momos everyday

    சுவை தரும் வெற்றி

    கொல்கத்தாவைச் சேர்ந்த கல்லூரி நண்பர்களான வினோத்துக்கும் சாகருக்கும் மொமோ என்கிற உணவுப் பண்டத்தை சாப்பிடப் பிடிக்கும். இருவரும் சேர்ந்து மோமொ விற்பதையே தொழிலாக்கினார்கள். இன்று 100 கோடி மதிப்பில் அத்தொழில் வளர்ந்துள்ளது. ஜி சிங் எழுதும் கட்டுரை

  • Girl Power

    கலக்குங்க கரோலின்!

    பெற்றோரால் பாதுகாப்பாக வளர்க்கப்பட்ட பெண் கரோலின் கோம்ஸ். தந்தை இறந்த பின்னர், வெளிநாட்டில் எம்எஸ் படித்து விட்டு, தமது சொந்த அனுபவத்தின் பெயரில் உருவாக்கிய மூலிகை பொருட்கள் தயாரிக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். சோபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை.

  • Success through low price

    குறைந்த விலையில் நிறைந்த லாபம்!

    ஒரு தேநீரின் விலையில் டீஷர்ட் என்ற விற்பனை தந்திரத்தின் மூலம் வெற்றியைத் தொட்டிருக்கிறார் சி.எம்.ஃபைசல் அகமது. மதுரையைச் சேர்ந்த ஜவுளித் தொழில் குடும்பத்தைச் சேர்ந்த இவர், குடும்பத்தை மீட்டெடுக்க கல்லூரியில் படிக்கும்போதே தொழில் அதிபராகவும் ஆனவர். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை.

  • Bouquet shop started with Rs 5,000 is now doing Rs 200 crore turnover

    காதல் தந்த வெற்றி

    பீகார் மாநில இளைஞர் விகாஸ் குத்குத்யா, டெல்லியில் இருக்கும் தமது காதலிக்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லப் போனார். அங்குதான் அவருக்கு ஒரு புதிய தொழில் யோசனை தோன்றியது. இன்று அவர் 200 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் பொக்கே மலர் விற்பனை நிறுவனத்தின் உரிமையாளர். பிலால் ஹாண்டு எழுதும் கட்டுரை

  • He started transport business with a single lorry, but today owns 4,300 vehicles

    போக்குவரத்து தந்த வெற்றிப்பயணம்

    தந்தைக்கு உதவியாக பதிப்புத் தொழிலில் இருந்த சங்கேஸ்வர் , சாதிக்கும் ஆசையில் போக்குவரத்துத் தொழிலில் இறங்கினார். பெரும் நஷ்டங்களுக்குப் பின்னர் வெற்றிகளைக் குவித்த அவர் இன்று வி.ஆர்.எல் லாஜிஸ்டிக் நிறுவனத்தின் தலைவர். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை

  • The kid who ran away from his home in Udipi is now owner of a Rs 200 crore hotel chain

    ருசியின் பாதையில் வெற்றி!

    சிறுவனாக இருக்கும்போது உடுப்பியிலிருந்து ஒருநாள் வீட்டை விட்டு மும்பை ஓடி வந்தார் ஜெயராம் பானன். இன்று  சாகர் ரத்னா ஹோட்டல்கள் நடத்தும் ஜேபி குழுமத்தின் தலைவராக 200 கோடி மதிப்பில் வர்த்தகம் செய்யுமளவுக்கு வளர்ச்சி! பிலால் ஹாண்டூ எழுதும் கட்டுரை