ஐம்பதாயிரம் போட்டார்! ஏழுகோடி ரூபாய் புரளும் வளர்ச்சி! டெல்லியை கலக்கும் மலைகிராமப் பெண்!
29-Mar-2023
By சோபியா டேனிஷ்கான்
புதுடெல்லி
உத்தரகாண்ட் மாநிலத்தின் இந்த குக்கிராமத்தில் வசிப்பதோ ஐம்பது பேர்தான். இங்கு பிறந்து உத்தரபிரதேசத்தின் மீரட் நகரில் வளர்ந்த கீதா சிங், டெல்லியில் தன்னுடைய தொழில் முனைவுதிறனை நிரூபித்திருக்கிறார். அங்கே அவர் ஊடகத்தில் தன் பணியைத் தொடங்கி 25வது வயதில் தொழில் முனைவோராக மாறினார்.
த யெல்லோ காயின் கம்யூனிகேஷன் எனும் மக்கள் தொடர்பு நிறுவனத்தை 2012ஆம் ஆண்டில் வெறும்
ரூ.50,000 முதலீட்டில் ஒரே ஒரு ஊழியருடன் தொடங்கினார். அந்த ஊழியருக்கு ரூ.13,000சம்பளம் கொடுத்தவர், அவரை சொந்த லேப்டாப் எடுத்து வந்து பணியாற்றும்படி கேட்டுகொண்டார். அலுலகம் டெல்லியில் உள்ள அவரது வீட்டில் இயங்கியது.
ரூ.50,000 முதலீட்டில் 25வது வயதில் த யெல்லோ காயின் கம்யூனிகேஷன் நிறுவனத்தை கீதா சிங் தொடங்கினார்(புகைப்படங்கள்: சிறப்பு ஏற்பாடு) |
சில எதிர்பாராத நல் வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தன. இதைத்தொடர்ந்து கீதாவின் நிறுவனம் ரூ.7 கோடி ஆண்டு வருவாய் ஈட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இன்றைக்கு 2,200 ச.அடி பரப்பில் 50 ஊழியர்களுடன் ஜசோலா பகுதியில் அவரது நிறுவனம் செயல்படுகிறது. “நான் முதன் முதலில் மொபைல் இந்தியா என்ற இணையதள நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டேன். அவர்களுடைய இணையதளத்துக்கு உள்ளடக்கம், ஆங்கில, இந்தி கட்டுரைகளின் மொழிபெயர்ப்புகள் தேவைப்பட்டது,” என கீதா, தனது தொழிலின் ஆரம்ப காலகட்டம் பற்றி நினைவு கூர்ந்தார். அப்போதைய சிக்கலான காலகட்டத்தில் அவருடைய தந்தையிடம் இருந்து எந்த ஆதரவும் அல்லது உதவியையும் அவர் பெறவில்லை. அவருடைய தந்தை கடைமட்ட அளவில் ஒரு அரசு ஊழியராக இருந்தார். அவர் தன்னைப் போலவே தன் மகளும் அரசு ஊழியராக ஆகவேண்டும் என்று விரும்பினார். “நான் என்னுடைய சொந்த நிறுவனத்தை தொடங்கும்போது என் தந்தையிடம் ரூ.10,000 கேட்டேன். ஆனால், அந்த உதவியை கூட செய்ய மறுத்துவிட்டார். நம்முடைய குடும்பத்தில் யாருமே தொழில் செய்ததில்லை என்று கூறினார்,” என்கிறார் கீதா. “நான் போட்டித் தேர்வுகள் எழுதி அரசு வேலைக்குச் செல்ல வேண்டும் என்று தான் அவர் விரும்பினார். நாம் ஒரு பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர்கள் இல்லை. ஆகவே அதற்காக ஒரு வாய்ப்பை மேற்கொள்ள விரும்புகின்றேன் என்று சொன்னேன். எனினும் கூட அவர் எனக்கு உதவ விரும்பவில்லை. அதுதான் என்னை மேலும் உறுதியானவளாக மாற்றியது என்று உணர்கின்றேன்.” எனினும் கீதா ஒரு போதும் அவருடைய தந்தையின் நோக்கத்தைப் பற்றி எந்த ஒரு சந்தேகமும் கொள்ளவில்லை. தனது நான்கு பிள்ளைகளுக்கும் அவர் தந்தை தன்னால் முடிந்தவற்றை செய்திருக்கிறார் என்று அவரை இன்னும் கீதா நேசிக்கிறார்.

மலைகளைக் கொண்ட மாநிலமான உத்தரகாண்ட்டின் குக்கிராமத்தில் இருந்து வந்தவர் கீதா. |
ரூ.500 மாதச் சம்பளத்தில் அடிமட்ட கிளர்க்காக அரசு நிறுவனத்தில் பணியைத் தொடங்கியவர் அவரது தந்தை. பான் சிங்-பசாந்தி தேவி தம்பதியின் மூன்றாவது குழந்தையாக கீதா பிறந்தார். அவரது தந்தைதான் அந்த கிராமத்தில் இருந்து முதன் முதலாக அரசு வேலைக்கு சேர்ந்த நபராக இருந்தார். உத்தரகாண்டில் உள்ள அந்த சின்னஞ்சிறிய கிராமத்தில் கீதா பிறந்தது முதல் நான்கு ஆண்டுகள் வசித்தார். “பாகேஸ்வர் என்ற சிறு நகரத்தில் இருந்து சில கி.மீ தூரத்தில் அந்த கிராமம் இருக்கிறது,” என்கிறார் கீதா. “வெறும் 50 பேரைக் கொண்ட புல்லா கப்கோட் எனும் குக்கிராமத்தின் வாழ்க்கை என்பது மிகவும் சிக்கலாக இருந்தது. 5 கி.மீக்கு ஒரு வீடுதான் இருந்தது. பரந்த நிலங்கள் வைத்து இருந்தனர். சாய்வான நிலங்களில் விவசாயம் செய்து வந்தனர். கால்நடைகள் வளர்த்தனர்.” “என் அம்மாவுக்கு 14 வயதாக இருக்கும்போது தந்தையை திருமணம் செய்து கொண்டார். அப்போது என் தந்தை 10ம் வகுப்பு வரை படித்திருந்தார். தான் வாழ்ந்த அதே வாழ்க்கையை மனைவியும் அல்லது குழந்தைகளும் வாழ வேண்டும் என்று என் தந்தை நினைக்கவில்லை. அவர்களுக்கு நல்ல வாழ்க்கை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று விரும்பினார். எனவே, அவரது வேலையில் மீரட்டுக்கு இடம் மாற்றம் வந்தபோது குடும்பத்துடன் மீரட்டுக்கு குடிபெயர்ந்தார்.“ வெறும் 50 ரூபாயுடன் ஒரு சூட்கேஸுடன் அவரது தந்தை மீரட்டுக்கு தன் மனைவி, மூன்று குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வந்தார். த யெல்லோ காயின் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் இயக்குநராக இருக்கும் ரித்திகா, மீரட் வந்த நான்கு ஆண்டுகள் கழித்து பிறந்தார். கீதா, மீரட்டில் உள்ள அரசு பள்ளியில் சேர்க்கப்பட்டார். மலைபகுதியில் இருந்து வந்தவர் என்பதால் வலுவான குழந்தையாக இருந்தார். விளையாட்டுகளில் சிறந்து விளங்கினார். போட்டிகளில் வெற்றி பெற்றார். பள்ளி அளவில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்றார். “நாங்கள் மீரட்டுக்கு வந்தபோது, எனக்கு குமாவோனி மொழி மட்டுமே தெரிந்திருந்தது. இந்தி மொழி தெரியாது. பள்ளியில் என்னுடன் படித்த குழந்தைகள் என்னை மலை உருளைக்கிழங்கு என்று சொல்லி கிண்டல் செய்தனர். ஆனால், நான் உண்மையில் அழகாக இருந்தேன். இதையெல்லாம் பொருட்படுத்த வேண்டாம் என்று என் தந்தை என்னிடம் சொன்னார்,” என்றார். கீதா அவரது தந்தை மீது மிகவும் பாசமாக இருந்தார். மிகவும் கீழானநிலையில் இருந்து ஐஏஎஸ் அதிகாரிகளாக உயர்ந்தவர்கள் பற்றி முன்னுதாரணமாகத் திகழும்பெண்களின் நிஜ கதைகள் பற்றி அவர் சொல்வார். அவருடைய நலனுக்காக அவரை ஊக்குவிக்கும் விதமாக இத்தகைய கதைகளைச் சொன்னார். மீரட்டில் 12ஆம் வகுப்பு முடித்ததும், 2006ஆம் ஆண்டு நொய்டாவில் உள்ள ஜாக்ரான் மாஸ்கம்யூனிகேஷன் கல்வி மையத்தில் இரண்டு ஆண்டு டிப்ளமோ படிக்கச் சென்றார். இரண்டாம் ஆண்டு படிக்கும்போது தைனிக் ஜாக்ரான், ஜீ டிவி உள்ளிட்ட பல்வேறு ஊடக நிறுவனங்களில் பயிற்சி பெற்றார். டெல்லி பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் ஹானர்ஸ் படிப்பில் சேர்ந்தார். “காலை 10 மணிமுதல் மதியம் 2 மணி வரை நான் கல்லூரியில் வகுப்பில் இருப்பேன். அதன் பின்னர் மதியம் 3 மணியில் இருந்து இரவு 10 மணி வரை மின்னணு ஊடகங்களின் ஸ்டுடியோக்களில் பணியாற்றினேன். வீடியோக்கள் எடிட்செய்வதும் நள்ளிரவு ஷோக்களில் அறிவிப்பாளர் வேலை செய்வதும் உண்டு,” என்றார் கீதா. பட்டப்படிப்பு முடித்தவுடன், பிபிசியின் ஆவணப்படப்பிரிவு, சேனல் வி, ஜிவா ஆயுர்வேதா நிறுவனத்தின் கம்யூனிகேஷன் குழு, முகமைகளில் பிஆர்ஓவாக, விளம்பரநிறுவனங்களிலும் அடுத்த சில ஆண்டுகள் பணியாற்றினார்.

த யெல்லோ கம்யூனிகேஷன் நிறுவனத்தில் இப்போது 50 பேர் பணியாற்றுகின்றனர் |
பயிற்சியாளராக ரூ.4000 சம்பளத்தில் தொடங்கி, முதல் முதலாக 2009ஆம் ஆண்டு ரூ.16,000 சம்பளம் வரை பெற்றார். ஒரு வேலையில் இருந்து இன்னொரு வேலைக்கு தாவினார். ப்ரிலேன்சராக வீடியோ எடிட்டராக ஒரு மணி நேரத்துக்கு ரூ.2000 வரை என நன்றாக சம்பாதித்தார். “சிலருக்காக நான் பணம் வாங்காமல் பணியாற்றிய காலம் இருந்தது,” என கூறுகிறார். “ஆனால், அந்த நிகழ்வுகள்தான், நான் தொடர்ந்து இயங்க திரும்பவும் பதில் உதவியாக எனக்குக் கிடைத்து, அதே நபர்கள் அவர்களின் தொடர்பில் இருப்பவர்கள் பற்றி எனக்கு அறிமுகம் செய்தனர். அவர்கள் எனக்கு நல்ல புராஜக்ட்களைக் கொடுக்கின்றனர்.” 2012ஆம் ஆண்டு த யெல்லோ கம்யூனிகேஷன் நிறுவனத்தை தனியுரிமை நிறுவனமாக கீதா தொடங்கினார். சிறிய பணிகளை எடுத்துச் செய்ய ஆரம்பித்தார். மொபைல் இந்தியா உடன் ஒப்பந்தம் செய்த பிறகு, பிரபல எழுத்தாளர் சேத்தன் பகத்தின் ரிவெல்யூஷன் 2020 என்ற நாவலுக்கான விளம்பரப் பணிகள் மேற்கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. “ஆகவே அடுத்தடுத்து பணிகள் கிடைக்க ஆரம்பித்தன. அதற்காக நான் சில பிரிலேன்சர்களை வேலைக்கு அமர்த்தினேன்,” என்றார் கீதா. “கவுரவ் திவாரி, என்ற என்னுடைய நண்பர், என்னுடைய ஆலோசகராகவும் திகழ்ந்தார். இன்வாய்ஸ் தயாரிப்பது, வாடிக்கையாளர்களை சந்திக்கும்போது என்னுடன் உதவிக்கும் வந்தார்.” 2014ஆம் ஆண்டு அவரது நிறுவனம் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஆனது. பதஞ்சலி நிறுவனமும் அந்த ஆண்டில்தான் அவரது வாடிக்கையாளர் ஆனது. “எனது நிறுவனம் 2015ஆம் ஆண்டு 1 கோடி ரூபாய் ஆண்டு வருவாயைத் தொட்டது. எங்களுடைய வணிகம் வளர்வதற்காக இளம் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தினோம். நிகழ்வுகள், பிஆர் பணிகள், சமூக ஊடக விளம்பரங்கள் ஆகியவற்றில் ஈடுபட்டோம். உண்மையில் எல்லாவற்றிலும் நான் ஈடுபட்டேன்,” என்கிறார் கீதா. தொடர்ந்து வாடிக்கையாளர்கள் தொடர்பு கிடைத்து வந்தது. ஆண்டுதோறும் அவரது நிறுவனம் வளர்ச்சி பெற்றது. திரும்பி பார்க்கும்போது, அனைத்தும் ஒரு சுமுகமான பயணமாக இருக்கவில்லை. பல நேரங்களில் கையில் குறைந்த அளவு பணத்துடன் இருந்திருக்கிறார். வாய்க்கும், கைக்குமாக வாழ்ந்திருக்கிறார். பெரும் அளவு பணத்தை முதலீடு செய்தார். நிறுவனத்தின் வாயிலாக பணத்தை அவர் சம்பாதித்தார். 2011ஆம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்தை அவர் நினைவு கூர்ந்தார். சொந்த நிறுவனம் தொடங்குவதற்கு முன்பு, அவரிடம் ஒருநாள் பர்சில் ரூ.20 மட்டும்தான் இருந்தது. முதன் முறையாக டெல்லி பேருந்தில் டிக்கெட் வாங்காமல் பயணிக்கலாம் என்று துணிந்து விட்டார்.

தந்தை கற்றுக் கொடுத்த மதிப்பீடுகளே தன்னை இயக்குவதாக கீதா சொல்கிறார் |
ஆனால், அவரது துரதிஷ்டமாக, டிக்கெட் பரிசோதகர் பேருந்தில் இருந்தார். எனவே, அவசர, அவசரமாக பேருந்தில் இருந்து இறங்கி விட்டார். அதன் பின்னர்தான், தன்னுடைய லேப்டாப்பை அந்த பேருந்திலேயே விட்டு விட்டு வந்தது அவருக்கு நினைவுக்கு வந்தது. தவறான செயலை செய்ததற்காக கடவுள் கொடுத்த தண்டனை என்பதை அவர் உணர்ந்தார். அது ஒரு அனுபவப் பாடம். கீதாவுக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் பொது ஊரடங்கின்போது ஓஜஸ்வி என்ற பெண் குழந்தை பிறந்தது. அவரது கணவர் சவ்ரப் உச்ச நீதிமன்ற வழக்கறிஞராக இருக்கிறார். ஜாக்ரான் மையத்தில் படிக்கும்போது அவரை சந்தித்தார். “செலவழித்தல், சேமித்தல், பகிர்தல் அனைத்துமே சமமான முக்கியத்துவம் கொண்டதுதான். நாளின் முடிவில், நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள் என்பது முக்கியமில்லை, படித்தது எவ்வளவு பெரிய பள்ளி என்பதும் முக்கியமில்லை. ஆனால், இது அனைத்தையும் விட நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு கடினமாக உழைக்க வேண்டும்,” என்று முடிக்கிறார் கீதா சிங். இப்போதெல்லாம் தன் தந்தையைப்போல பேசத் தொடங்கியிருப்பதாக அவர் உணர்கிறார்.
அதிகம் படித்தவை
-
குளிர்ச்சியான வெற்றி
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த நான்கு கிராமத்து இளைஞர்கள், தந்தையின் கைபிடித்து ஒரு சிறு நகருக்கு வந்தவர்கள். இவர்கள் ஒரு வெற்றிலை பாக்கு கடையில் இருந்து கோடிகளைக் குவிக்கும் ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனமாக மாறி இருக்கிறார்கள். பல ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வெற்றி பெற்றிருக்கும் இவர்களின் கதையை குருவிந்தர் சிங் எழுதுகிறார்.
-
தேநீர் விற்கும் ஆடிட்டர்
புது டெல்லியைச் சேர்ந்த ஆடிட்டரான ராபின் ஜா சம்பந்தமே இல்லாத ஒரு வேலையைச் செய்துவருகிறார். ஆம்... அது தேநீர் விற்பனை! டீபாட் எனும் சங்கிலித்தொடர் தேநீர் விற்கும் கடைகளைத் தொடங்கி மாதம் 50 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டுகிறார். நரேந்திர கவுசிக் எழுதும் கட்டுரை
-
பட்டு சாம்ராஜ்ய இளவரசி!
நல்லி குடும்பத்தில் இருந்து வந்த இளைய தலைமுறையின் பிரதிநிதி லாவண்யா. ஹார்வார்டில் எம்பிஏ படித்த இவர் உருவாக்கிய நல்லி நெக்ஸ்ட் என்கிற கடைகளின் வெற்றிக்கதையை எழுதுகிறார் உஷா பிரசாத்
-
வெற்றிக்கலைஞன்
பள்ளியில் பைலட் பேனா வைத்திருக்கத் தகுதி இல்லை என்று சொல்லப்பட்ட ஒரு சிறுவன் வளர்ந்து இன்று 127 கார்கள் வைத்திருக்கிறார். கடும் உழைப்பால் இந்நிலையை எட்டி இருக்கும் முடி திருத்தும் கலைஞரான வி. ரமேஷ் பாபுவின் வெற்றிக்கதை. கட்டுரை: பி சி வினோஜ் குமார்
-
மொறுமொறு வெற்றி!
சிராக் குப்தா அமெரிக்காவுக்கு மேல்படிப்பு படிக்கச் சென்று அங்கேயே ஆண்டுக்கு ஒரு லட்சம் டாலர் தரும் வேலை பார்த்துக்கொண்டிருந்தவர். பின்னர் இந்தியா திரும்பி நண்பருடன் இணைந்து பாப்கார்ன் தயாரிக்கும் தொழிலை வெற்றிகரமாக செய்து வருகிறார். சோஃபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை
-
வென்றது கல்லூரிக் கனவு!
கார்த்திக் ஒரு பிரபலமான ஹோட்டல் குழுமத்தின் வணிக வாரிசு. அவருக்கு தாமே ஏதாவது சொந்தமாக செய்ய வேண்டும் என்ற உந்துதல். எனவே கல்லூரி படிக்கும்போதே பயண ஏற்பாட்டாளராக தொழில் செய்தார். படிப்பு முடிந்த உடன் தொழிலில் முழுமையாக மூழ்கி வெற்றி பெற்றார். சோஃபியா டானிஸ்கான் எழுதும் கட்டுரை.