கனவை நனவாக்க வயது ஒரு தடை அல்ல!
04-Dec-2024
By ஜி.சிங்
கொல்கத்தா
எந்த வயதிலும் தொழில் தொடங்கலாம். ஸ்டார்ட் அப் என்று சொல்லப்படும் தொழில் தொடக்கங்கள் எல்லாம் இளைஞர்களுக்கு மட்டுமே உரியது, நமக்கெல்லாம் வயதாகி விட்டது என்று நினைப்பவரா நீங்கள்? இந்தக் கட்டுரை உங்களுக்காகத்தான்.
கொல்கத்தாவில் உள்ள ஹெரால்ட் புட் அண்ட் கமாடிட்டீஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கிய மூவருமே தங்கள் நாற்பதுகளில் தான் இணைந்து தொழில் தொடங்கினார்கள். திவிஜாதாஸ் பந்தோபாத்யாயாவுக்கு 40 வயது. மலாய் ராய்க்கு வயது 50. சத்யானந்தா பட்டாச்சார்யாவுக்கு வயது 42. அவர்கள் தாம் பார்த்துக்கொண்டிருந்த நல்ல சம்பளம் தரும் வேலையை விட்டுவிட்டு களமிறங்கினார்கள்.
|
எழுபது வகைக்கும் மேற்பட்ட உணவுப்பொருட்களை ஹெரால்ட் புட் அண்ட் கமாடிடட்டீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த ஆண்டு ஏழுகோடி ரூபாய்க்கு விற்பனை செய்திருக்கிறது. படத்தில் நிறுவனர்களான த்விஜாதாஸ் பந்தோபாத்யாயா(இடது), மலாய் ராய்.(படம்: மோனிருல் இஸ்லாம் மல்லிக்) |
இந்த மூன்றுபேரும் பூடானைச் சேர்ந்த நிறுவனமான டாஷி கமர்ஷியல் கார்ப்பரேஷனுக்காக கொல்கத்தாவில் பணிபுரிந்துகொண்டிருந்தார்கள். தங்கள் பிஎப், கிராஜுட்டி பணமான 9 லட்சத்தைத்தான் தொழில்தொடங்க முதலீடாகப் போட்டார்கள்.
’’என் சகோதரர் ஒரு லட்சம் கொடுத்தார். வங்கியில் இருந்து 30 லட்சம் கடன் வாங்கினோம்,’’ என்கிறார் இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கும் பந்தோபாத்யாயா.
சிறிய அளவில் தொடங்கி இன்று 70க்கும் மேற்பட்ட உணவுப் பொருட்களைத் தயாரித்துக்கொண்டிருக்கும் இந்நிறுவனம் கடந்த ஆண்டு ஏழு கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நிகழ்த்தி உள்ளது.
அரிசியிலிருந்து செய்யப்படும் ‘கோபிந்தோபாக்’, மாங்காய், சர்க்கரை, வாசனைத் திரவியங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்திச் செய்யப்படும் பானமான ‘மாங்கோ பன்னா’ ஆகியவை இந்நிறுவனத்தின் முக்கியப் பொருட்கள். ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் ’மாங்கோ பன்னா’ பாட்டில்களை இவர்கள் விற்கிறார்கள்.
மூன்று நிறுவனர்களில் ஒருவரான பாட்டாச்சார்யா இப்போது இல்லை. நிறுவனத்தின் வளர்ச்சியைக் காணாமல், நிறுவனம் ஆரம்பித்த இரண்டு ஆண்டுகளில் கார் விபத்தில் துரதிருஷ்டவசமாக காலமாகிவிட்டார்.
பந்தோபாத்யாயா இந்திய விமானப்படையில் 15 ஆண்டுகள் பணிபுரிந்தவர். அதன் பின்னர் டாஷி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். நான்கு சகோதரர்கள், மூன்று சகோதரர்கள் கொண்ட குடும்பத்தில் இளையவர் அவர். இப்போது தொழிலில் எதிர்கொள்ளும் சிரமங்கள் அவருக்குப் பெரியவையே இல்லை. சிறுவயதிலேயே பெரும் சிரமங்களை எதிர்கொண்டிருப்பதாகக் கூறுகிறார்.
“என் அப்பா ஒரு கேஸ் கம்பெனியில் வேலை பார்த்தார். அம்மா வீட்டில் இருந்தார். 1978-ல் நான் விமானப்படையில் 18வயதில் சேர்ந்ததுதான் என் வாழ்க்கையில் திருப்புமுனை,’’ என்கிறார் அவர்.
“விமானப்படைக்குத் தேர்வானபோது ஷ்யாமா பிரசாத் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தேன். என் சம்பளம் குடும்பத்துக்கு உதவியாக இருக்கும் என்பதால் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
"நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போதே என் தந்தையார் ஓய்வு பெற்றுவிட்டார். எனவே ஒன்பது பேர் கொண்ட குடும்பத்தை நடத்துவது அவருக்குச் சிரமமாக இருந்தது
|
ராய் மற்றும் பட்டாச்சார்யா இருவரும் பந்தோபாத்யாயாவுக்கு டாஷியில் வேலை பார்க்கும்போது அறிமுகம் ஆனார்கள். |
"எனக்கு முதல்மாத சம்பளமாக 725 ரூபாய் கிடைத்தது. அப்போது அது பெரிய வருமானமே,’’ என்று தெரிவிக்கிறார் பந்தோபாத்யாயா. இப்போது இவருக்கு வயது 56 ஆகிறது.
1993-ல் அவரது விமானப்படை பணி நிறைவுற்றதும் அவர் டாஷியின் கொல்கத்தா அலுவலகத்தில் அக்கவுண்ட்ஸ் பொறுப்பாளராக வேலைக்குச் சேர்ந்தார். ‘விமானப்படையில் வேலைபார்க்கும்போதே தொடர்ந்து படித்தேன். கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றேன். தொழில் நிர்வாகம் பற்றி போதுமான விவரங்கள் தெரிந்திருந்தபடியால் டாஷியில் வேலைக்குச் சேர்ந்தேன்,’’ என்கிறார் பந்தோபாத்யாயா,
டாஷியில் அவர் ராய் மற்றும் பட்டாச்சார்யாவை சந்தித்தார். அவர்கள் பின்னாளில் அவரது தொழில் கூட்டாளிகள் ஆயினர். "எங்கள் மூவருக்கும் இடையே நல்ல புரிதல் இருந்தது. பட்டாச்சார்யா மிகவும் சுறுசுறுப்பானவர். நாங்கள் சேர்ந்து எதையாவது வெற்றிகரமாக செய்யலாம் என்று எங்களுக்கு நம்பிக்கை ஊட்டியவர் அவர்தான்,’’ என்கிறார் ராய்.
குடும்பத்தினர் ஆதரவுடன் இவர்கள் மூவரும் தங்கள் வேலைகளை ராஜினாமா செய்துவிட்டு ஹெரால்ட் புட் அண்ட் கமாடிட்டீஸ் நிறுவனத்தை 2000த்தில் தொடங்கினர். 15 பேர் ஆரம்ப கட்ட பணியாளர்கள்.
பாஸ்மதி, கோபிந்தோபோக் என்ற இரு அரிசி ரகங்களை முதலில் அறிமுகப்படுத்தினார்கள். வசுந்தரா என்ற பிராண்ட் பெயரில் ஒரு கிலோ பாக்கெட்டுகளாக விற்பனைக்கு வந்த அரிசி ரகங்கள் நன்றாக விற்பனை ஆயின. மேற்குவங்கத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கொல்கத்தாவின் சுற்றுப்புறங்களிலும் முதலில் தங்கள் பொருட்களை விற்க முடிவு செய்தனர்.
“நகரத்துக்கு உள்ளே எங்களால் சந்தையில் நுழைய முடியவில்லை. பெரிய பிராண்டுகள் இருந்தன. போட்டி குறைவாக இருந்த கிராமபுறப் பகுதிகளில் கவனம் செலுத்தினோம். இந்த திட்டத்துக்குப் பலன் இருந்தது,’’ என்கிறார் ராய்.
பிப்ரவரி 2001-ல் உணவுப்பதப்படுத்தும் தொழிலிலும் நுழைந்து ஜாம், ஜெல்லி, கெட்சப், ஊறுகாய் ஆகியவற்றை விற்க ஆரம்பித்தனர். கம்பெனி வளர ஆரம்பித்தபோதுதான் சாலை விபத்தில் பட்டாச்சார்யா காலமானார்..
|
15 தொழிலாளர்களுடன் தொடங்கிய இந்நிறுவனத்தில் 67 பேர் பணிபுரிகிறார்கள். |
“அவரது மரணம் எங்களுக்கு பின்னடைவே. ஒரு நல்ல நண்பன், நம்பிக்கையுள்ள தொழில் கூட்டாளி, உண்மையான ஆலோசகர் என்று ஒருங்கிணைந்த ஒருவரை இழந்தோம். நாங்கள் அவரது கனவை நனவாக்க முடிவு செய்தோம்,’’ என்கிறார் பந்தோபாத்யாயா. பட்டாச்சார்யாவின் மகன் சதாடால் இப்போது இந்நிறுவனத்தில் சீனியர் மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் ஆகப் பணிபுரிகிறார்.
2003 வரை தங்கள் தயாரிப்புகளை வெளியே இருந்து பெற்றுக்கொண்டிருந்தனர். பின்னர் நிறுவனத்திலேயே தயாரிக்க ஆரம்பித்தனர்.
30 லட்ச ரூபாய் பணம் எந்திரங்கள் வாங்க கூடுதலாக முதலீடு செய்யப்பட்டது, இதில் 5 லட்சரூபாய் பங்கு முதலீடாகவும் மீதிப்பணம் வங்கிக் கடனாகவும் பெறப்பட்டது.
"2003-ல் நாங்கள் தயாரித்து அறிமுகம் செய்த பானமான ‘மாங்கொ பன்னா’ இன்று சந்தையில் முன்னிலையில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் பாட்டில்கள் விற்கிறோம். மாநிலத்தில் இது மிகவும் பிரபலமாக உள்ளது. சில சமயங்களில் எங்களால் சப்ளை பண்ண முடியாத அளவுக்குத் தேவை உள்ளது,’’ என்று கூறுகிறார்கள் இருவரும்.
கொல்கத்தாவின் புறநகர்ப்பகுதியில் அரை ஏக்கர் நிலம் 27 லட்ச ரூபாயில் 2009-ல் வாங்கி தங்கள் உற்பத்தியை பெருக்கினர். இப்போது ஹெரால்ட் நிறுவனத்தில் 56 பேர் வேலை பார்க்கிறார்கள். 110 விநியோகஸ்தர்கள் இருக்கிறார்கள்.
இரு நிறுவனர்களும் ஒவ்வொரு மாதமும் சம்பளமாக 30,000 ரூபாய் எடுத்துக்கொள்கிறார்கள். மீதிப்பணம் தொழிலிலேயே போடப்படுகிறது.
|
ஹெரால்டின் மூன்று நிறுவனர்களில் ஒருவரும் நிறுவனம் ஆரம்பித்த இரண்டு ஆண்டுகளில் இறந்துவிட்டவருமான பட்டாச்சார்யாவின் மகன் சதாடால்(மையத்தில்) இப்போது இந்நிறுவனத்தில் சீனியர் மார்க்கெடிங் எக்ஸிக்யூட்டிவ் ஆக இருக்கிறார். |
பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 400 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து தொழில்துறைப்பயிற்சியும் வழங்கி உள்ளனர். அது அவர்களின் சமூக நலத்திட்ட பங்களிப்பாக தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது.
“எங்கள் கதையை மாணவர்களுக்கு நாங்கள் சொல்வோம். வெற்றிக்குப் பின்னால் இருக்கும் போராட்டங்களைச் செல்கிறோம். வயதான பின்னும்கூட தொழில் தொடங்கி வெற்றிபெற முடியும். வெற்றிக்கு வயது ஒரு தடை இல்லை என்பதை உணர்த்துகிறோம்,’’ என்கிறார் பந்தோபாத்யாயா.
வாசனைப்பொருட்கள் விற்பனையில் முதலீடு செய்வதுதான் எதிர்காலத் திட்டம் என்று சொல்கிறார்கள் இருவரும். அத்துடன் பீஹார், ஜார்க்கண்ட், ஒடிஷா போன்ற மாநிலங்களிலும் விரிவுபடுத்தும் திட்டமும் இருக்கிறது என்று முடிக்கிறார்கள் அவர்கள்.
அதிகம் படித்தவை
-
கூச்சத்தை வென்றவர்
டெல்லியைச் சேர்ந்த பாவனா ஜூனேஜா சிறுவயதில் மிகவும் கூச்சம் சுபாவம் கொண்டவராக இருந்தவர். அவருடைய தாயின் வழிகாட்டலில் சிறந்த விற்பனையாளராக மாறி சாதனை புரிந்தார். இன்றைக்கு அவர் ரூ.487.5 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் ஈட்டும் வணிக சாம்ராஜ்யத்தையே உருவாக்கி இருக்கிறார். சோஃபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை.
-
எடை, தடை, அதை உடை!
தீக்ஷா சாப்ரா என்ற இளம் பெண் திருமணத்துக்குப் பின் குண்டாகி விட்டார். ஒரு கட்டத்தில் அவருக்கு, ஆத்தாடி, நாம இவ்ளோ குண்டாகிவிட்டோமே என்று தோன்ற, உடல் எடையைக் குறைத்து மீண்டும் அழகியாக மீண்டார். தன் அனுபவத்தைக் கொண்டு அதையே மற்றவர்களுக்கு ஆலோசனையாக வழங்கி இப்போது பணம் ஈட்டுகிறார். சோஃபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை.
-
தேநீர் காதலர்!
தமிழ்நாட்டில் கரூர் மாவட்டத்தில் சின்னஞ்சிறிய கிராமத்தில் பிறந்த ஜோசப் ராஜேஷ் ஒரு தேநீர் காதலர். வங்கியில் வேலை பார்த்து பின்னர் அதை விட்டுவிட்டு தேநீர் கடையைத் தொடங்கினார். இப்போது சங்கிலித் தொடர் தேநீர்க் கடைகளைத் தொடங்கி ஆண்டுக்கு ரூ.7 கோடி வருவாய் ஈட்டுகிறார். பிலால் கான் எழுதும் கட்டுரை
-
பண்ணையிலிருந்து வீட்டுக்கு!
கிராமத்தில் பிறந்து வளர்ந்த செல்வகுமார் தன் வேர்களுக்குத் திரும்பி இருக்கிறார். பெங்களூரு நகரில் பார்த்த வேலையை விட்டுவிட்டு கோவைக்குத் திரும்பி வந்து வில்ஃபிரஷ் நிறுவனத்தைத் தொடங்கி விவசாயிகளுக்கும் வாடிக்கையாள்ர்களுக்கு பலன் தரும் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.
-
கார் கழுவியவர், இன்று கோடீஸ்வரர்
ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்து, கார் கழுவும் வேலையில் தொடங்கி, இப்போது குடிநீர் சுத்திகரிக்கும் ஆர்.ஓ தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார் பாலகிருஷ்ணா. 20 கோடி வர்த்தகத்துடன் நாட்டின் முதல் 20 ஆர்.ஓ தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது இவரது நிறுவனம். எஸ்.சாய்நாத் எழுதும் கட்டுரை
-
மலைத்தேன் தந்த வாய்ப்பு!
மிதுன் ஸ்டீபன், ரம்யா சுந்தரம் இருவரும் பொறியியல் பட்டதாரிகள். பெங்களூரில் சந்தித்துக் கொண்ட அவர்கள் மலையேற்றம் மேற்கொள்ளும் ஆர்வத்தில் ஒன்றிணைந்து, பரஸ்பரம் வாழ்க்கை துணையாக இணைந்தனர். ஆண்டுக்கு 2 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் பாரம்பரியமான கலப்படமற்ற தேன் வர்த்தகத்திலும் கொடிகட்டிப் பறக்கின்றனர். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை