நூறு பேருக்கு வேலை... நாற்பது கோடி வருவாய்! கலையாத தொழில்கனவை நனவாக்கிய கால்நடைமருத்துவர்!
30-Oct-2024
By உஷா பிரசாத்
பெங்களூரு
மருத்துவர் என். இளங்கோவன் ஒரு தகுதிவாய்ந்த கால்நடை மருத்துவர் என்ற முறையில் செல்லப்பிராணிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். ஆனால், செல்லப்பிராணிகளின் மீதான ஆர்வம் ஒருபுறம் இருக்க, வேறு இரண்டு விருப்பங்களை கொண்டிருந்தார். அவை இதழியலில் ஈடுபடுவது, தொழிலதிபர் ஆவது. இப்போது மூன்று நிறுவனங்களுக்கு தலைவராக இருக்கும் அவர், அவற்றின் மூலம் ரூ.41 கோடி ஆண்டு வருவாய் ஈட்டி இருக்கிறார். தொழில்முனைவு குறித்த ‘கரன்சி காலனி’ என்ற தன் முதல் ஆங்கில புத்தகத்தையும் வெளியிட்டு இருக்கிறார்.
தமிழக அரசு ஊழியர் ஒருவரின் மகனான இளங்கோவன், கர்நாடகா மாநிலம் ஹூப்ளியில், யூனிகெம் லேபரேட்டரீஸ் நிறுவனத்தின் கால்நடை மருந்து பொருட்கள் பிரிவின் விற்பனை அலுவலராக மாதம் ரூ.1,900 சம்பளத்தில் முதல் பணியைத் தொடங்கினார்.
|
தொழில்அதிபராக ஆவதற்கு முன்பு, மருத்துவர் இளங்கோவன், விற்பனை பிரதிநிதியாக வாழ்க்கையைத் தொடங்கி பெருநிறுவன அதிகாரி வரை உயர்ந்தார். (புகைப்படங்கள்: சிறப்பு ஏற்பாடு)
|
இளங்கோவன் பரோடாவில் வசித்தபோது எதிர் வீட்டில் இருந்த குஜராத்தி நண்பர் ஒருவர் , இவரிடம் வெளிப்படையாக சில கருத்துகளைப் பேசினார். விடாமுயற்சி, அறிவுதிறன், தகுதி மற்றும் கடின உழைப்புக்கான ஆர்வம் ஆகியவற்றைக் கொண்டுள்ள நீங்கள் கொஞ்சமாகவே சம்பாதிக்கிறீர்கள். பிறருக்காக நீங்கள் ஏன் பணியாற்ற வேண்டும்?’ என்று அவர் கேட்டார். இதைத் தொடர்ந்து தந்தையின் விருப்பத்துக்கு மாறாக தொழில் முனைவுப் பயணத்தைத் தொடங்கினார்.
“16 வயதாக இருந்தபோது பள்ளிப்படிப்பை முடித்திருந்தேன். டெக்ஸ்டைல் வர்த்தகத்தில் ஈடுபட வேண்டும் என்று முதலில் நினைத்திருந்தேன். ஆனால், என் யோசனை குறித்து என் குடும்பத்தினர் அதிருப்தி தெரிவித்தனர். மீண்டும், மீண்டும் அவர்கள் அதிருப்தி தெரிவித்ததால், படிப்பு மிகவும் முக்கியம் என்ற விஷயத்தை உணர்ந்தேன்,“ என்று நினைவு கூறுகிறார் இப்போது 49 வயதாகும் இளங்கோவன். டீரீம் செர்வ் நெட்ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட்( Dream Serve Networks Pvt Ltd), ஐரிஸ் லைஃப் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்(Iris Life Solutions Pvt Ltd), டிமோ ஈவா வெல்னஸ் பிரைவேட் லிமிடெட்(Timo Eva Wellness Pvt Ltd) ஆகிய மூன்று வெற்றிகரமான நிறுவனங்களை நடத்தி வருகிறார். முதல் நிறுவனம் ஊடகத்துடன் தொடர்புடையது. இரண்டாவது, செல்லப்பிராணிகளைப் பராமரிக்கும் நிறுவனம் மற்றும் மூன்றாவது, மனிதர்களுக்கான அழகுசாதனப்பொருட்கள் நிறுவனமாகும்.
குடும்பத்தினரின் அறிவுரைக்கு ஏற்ப, தொடர்ந்து படிப்பில் கவனம் செலுத்தினார். சென்னை கால்நடைமருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, தம்முள் இருந்த எழுத்து மீதான ஆர்வத்தைக் கண்டுபிடித்தார். இந்த ஆர்வம்தான் அவர் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும்போதே இதழியல் வழிக்குக் கொண்டு சென்றது. அப்போது இளங்கோவன், அந்திமழை என்ற கையெழுத்துப் பிரதியை தொடங்கி நடத்தி வந்தார்.
“அந்திமழை இதழ் கல்லூரிக்குள் தனிச்சுற்றாக இல்லாமல், பொதுவெளியில் நடத்தப்படும் இதழ் போலவே இருந்தது. பொது ஆர்வத்துடன் கூடிய கதைகள், இலக்கியவாதிகள், சினிமா துறை உள்ளிட்ட பிரபலங்களின் பேட்டிகள் இடம்பெற்றன. ஆனால், இதில் அரசியல் இடம்பெறவில்லை,” என்று நினைவு கூர்கிறார் இளங்கோவன்.
ஆரம்பத்தில் அவர்கள் ஒவ்வொரு இதழுக்கும் நான்கு பிரதிகள் கொண்டு வந்தனர். கல்லூரி விடுதிகள், நூலகம் ஆகியவற்றில் அவை படிப்பதற்காக வைக்கப்பட்டன. 1993- காலகட்டத்தில் கணினி வடிவமைப்பு தொடங்கியதும், 10 பிரதிகள் அச்சிடப்பட்டன.
“இதில் பிரசுரிக்கப்பட்ட சில படைப்புகள் வெளியே உள்ள வெகுஜன இதழ்களில் மறுபிரசுரம் கண்டன,” என்கிறார். அந்திமழை கல்லூரி மாணவர்களிடம் பெரும் வரவேற்பையும் பெற்றது.
1994-ம் ஆண்டு பட்டப்படிப்பு முடித்ததும், இதழியல் பணிக்குச் செல்ல விரும்பினார். ஆனால், அவரது குடும்பத்தினரோ, அவர் என்ன படித்தாரோ அந்தப் பணிக்குச் செல்லும்படி வற்புறுத்தினர். இதன்தொடர்ச்சியாகத்தான் அவர் யூனிகெம் லேபரேட்டரீஸ் நிறுவனத்தின் விற்பனைப் பிரிவில் வேலைக்குச் சேர்ந்தார்.
16 மாதங்களுக்குப் பிறகு, தமிழகத்தில் நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட செல்வம் பிராய்லர்ஸ் என்ற நிறுவனத்தில் பெங்களூரில் கர்நாடகா மாநிலத்திற்கு பொறுப்பாளராகப் பணிக்குச் சேர்ந்தார். ஃபார்சூன் 500 பட்டியலில் இடம் பிடித்த ஃபோர்ட் டோட்ஜ் என்ற கால்நடை உயிரியியல் நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகள் கழித்து, பணிக்குச் சேர்ந்தார். தமிழ்நாடு, கேரளா மாநிலத்துக்கான விற்பனை மற்றும் தொழில்நுட்ப வணிகப் பிரிவில் பணியாற்றினார்.
|
இளங்கோவனின் மூன்று நிறுவனங்களில் 104 பேர் பணியாற்றுகின்றனர்.
|
இதற்கிடையில் சென்னையில் இருந்து வெளி வரும் குமுதம், தமிழன் எக்ஸ்பிரஸ் மற்றும் குங்குமம் ஆகிய முன்னணி இதழ்களில் எழுதி, தமது எழுத்து ஆர்வத்தை தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டிருந்தார். இதழியல் மீதான அவரது ஈர்ப்பு மிகவும் தவிர்க்க முடியாததாக ஆனது. 1999-ம் ஆண்டு ஃபோர்ட் டோட்ஜில் இருந்து விலகிய இளங்கோவன், விண்நாயகன் என்ற மாதம் இருமுறை இதழில் முழுநேர இதழாளராகப் பணியில் சேர்ந்தார். இங்கு அவருக்கு ஏற்கனவே வாங்கிக் கொண்டிருந்ததில் இருந்து 25 சதவிகித சம்பளம் மட்டுமே கிடைத்தது.
ஓர் ஆண்டு காலத்துக்குள்ளாகவே, விண்நாயகன் இதழ் மூடப்படும் நிலையில் இருந்ததால், அதில் இருந்து அவர் விலகினார். பெங்களூரு திரும்பி வந்த அவர், வோக்ஹார்ட் என்ற கால்நடை சுகாதாரநலன் குறித்த தொழில் நிறுவனத்தில் சேர்ந்தார்.
அதற்கு அடுத்த ஆண்டு, அவர் பயோகேர் என்ற கால்நடை சுகாதார தொழில் நிறுவனத்தில் பெங்களூரில் வேலையில் சேர்ந்தார். பின்னர் அவருக்கு தேசிய வணிகத் தலைவராக பணி உயர்வு அளிக்கப்பட்டு பரோடா நகருக்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கு 2004-ம் ஆண்டு அவரது எதிர் வீட்டில் இருந்த ஒருவருடனான நட்பின் மூலம் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டது.
“அந்த சமயத்தில் நான் நன்றாக சம்பளம் பெற்றுக் கொண்டிருந்தேன். வாழ்க்கையில் நன்றாக செட்டில் ஆகி இருந்தேன். மாதம்தோறும் 20 நாட்கள் நாடுமுழுவதும் பல இடங்களுக்குப் பயணித்தேன். அதுபோல ஒரு பயணத்துக்குச் சென்று விட்டு திரும்பிய பின்னர், காலையில் என் காரை எடுத்துக் கொண்டு அலுவலகம் செல்லப்போகும்போது, எனது எதிர்வீட்டில் வசித்த குஜராத்தி ஒருவர், என்னை அணுகி, கொஞ்சநேரம் உங்களுடன் பேசலாமா என்று என்னை அழைத்தார்,” என்று அந்த நிகழ்வு பற்றி நினைவு கூறுகிறார் இளங்கோவன். அப்போதுதான் அவருள் செயலற்ற நிலையில் இருந்த தொழில்முனைவு விருப்பம், மீண்டும் உயிர்பெற்றது.
அந்த அண்டை வீட்டுக்காரர் அவரிடம் வெளிப்படையாகப் பேசினார். அவரது விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பு அனைத்தும் அவர் பெறும் சம்பளத்துக்கு ஈடானது இல்லை என்று கூறினார். அவரது திறமை, அறிவுக்கு ஏற்றபடி சொந்தமாக ஏதாவது செய்வது பற்றி சிந்திக்கும் படி கூறினார்.
அந்த உரையாடல்தான் ஒரு தொழில்முனைவோராக அவரை மாற்றியது. அவரது குடும்பம் அவரது முயற்சியின் மீது அக்கறை காட்டவில்லை. ஆதரவும் தெரிவிக்கவில்லை. எனினும், உள்ளுணர்வின்படி செயல்பட்டார்.
பெருநிறுவனப் பணிமூலம் அவருக்கு நிரந்தர வருமானம் வந்தபோதிலும், அவர் டீரீம் செர்வ் நெட் ஒர்க் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை 2004-ம் ஆண்டு தொடங்கினார். அதே ஆண்டில் அந்திமழை இதழை இணைய இதழாகத் தொடங்கினார்.
கல்லூரியில் படிக்கும்போது தொடங்கிய அந்திமழை இதழை அவர் 2004-ம் ஆண்டு சட்டப்பூர்வமாக பதிவு செய்யும் வரை, கல்லூரியில் அவருக்குப் பின் படித்து வந்த மாணவர்கள் அந்த இதழை நடத்தி வந்தனர். 2012-ம் ஆண்டு முதல் அந்திமழை அச்சு வடிவில் மாத இதழாக வெளிவரத்தொடங்கியது. அதே போல டீரீம் செர்வ் 31 புத்தகங்களுக்கு மேல் தமிழில் பிரசுரம் செய்துள்ளது.
2007-ம் ஆண்டு இளங்கோவன் தமது கனவான ஐரிஸ் சொல்யூஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை தமது சேமிப்பில் இருந்த 16 லட்சம் ரூபாய் முதலீட்டில் தொடங்கினார்.
|
செல்லப்பிராணிகள், கோழிப்பண்ணைகள், கால்நடைகளுக்கான 32 வகையான பொருட்களை ஐரிஸ் தயாரிக்கிறது
|
“நூறுபேருக்கு வேலை கொடுக்க வேண்டும் என்பதே ஆரம்பகட்ட யோசனையாக இருந்தது,” என்கிறார் இளங்கோவன். ஆரம்பத்தில் நாய்களுக்கான அழகுசாதனப் பொருட்கள், ஷாம்பு வகைகள், நாய்களுக்கான பிஸ்கெட் வகைகள் ஆகியவற்றை சந்தைப்படுத்தினர். பின்னர் 2008-ம் ஆண்டு தம் நண்பர் ஒருவர் நடத்தி வந்த வேபா ஹெல்த்கேர் என்ற நிறுவனத்தைப் கையகப்படுத்தியதன் மூலம் கோழிப்பண்ணைகளுக்கான துணை உணவுப் பொருட்களை சந்தைப்படுத்தினார் இளங்கோவன்.
அந்த நண்பர், தொழிலில் நஷ்டம் அடைந்த தருணத்துக்குப்பின்னர், தயாரிப்பு பிரிவையும் இளங்கோவனுக்கே விற்க முடிவு செய்தார். இந்த நிறுவனத்தில் ஐந்து ஆண்டுகளில் இளங்கோவன் மூன்று கோடி ரூபாய்களை முதலீடு செய்தார்.
தமது சேமிப்பில் இருந்தே பெரும்பாலான பணத்தை அவர் முதலீடு செய்தார். இந்த நிறுவனத்தில் அவரது நண்பர்கள் சிலரும் கூட முதலீடு செய்தனர். பெங்களூரு பொம்மனஹள்ளியில் 2008-ம் ஆண்டு ஐரிஸ் நிறுவனத்தின் உற்பத்தி பிரிவு தொடங்கப்பட்டது. 2013-ம் ஆண்டுக்குப் பின்னர் தொழில் விரிவாக்கம் செய்யப்பட்டபோதுதான் இளங்கோவன் வங்கிகளை நாடினார்.
“நான் தொழிலைத் தொடங்கியபோது, என்னுடன் தந்தை மகிழ்ச்சியாக இல்லை.குடும்பத்துக்குள் யாரிடமும் கடன் வாங்கக் கூடாது என்று அறிவுறுத்தி இருந்தார். எனினும் எனக்கு 2009-ம் ஆண்டு பணம் தேவைப்பட்டது. எனவே, முந்தைய வேலையின் மூலம் சென்னையில் வாங்கியிருந்த வீட்டை விற்றேன்,” என்கிறார் அவர்.
தொழில் தொடங்கிய முதல் ஆண்டு வர்த்தகத்தில் வெறும் 4.75 லட்சம் ரூபாய் ஈட்டியிருந்தார். தொழில் தொடங்குவதற்கு முன்பு வேலை பார்ப்பவராக இருந்தபோது கடைசியாக அவர் வாங்கிய ஆண்டு சம்பளத்தை விட இது மிகவும் குறைவாக இருந்தது. எனினும் இளங்கோவன் விடாமுயற்சியைத் தொடர்ந்தார்.
“தொழிலை லாபகரமாக நடந்தாலும் சரி லாபம் இல்லாமல் இருந்தாலும் சரி 1000 நாட்கள் தொடர்ந்து நடத்துவது என்ற வலுவான தீர்மானத்துடன் இருந்தேன். ஆயிரமாவது நாளை கடக்கும்போது, அதனை நான் விரிவாக்கினேன். இன்னொரு 1000 நாட்களை இலக்காக வைத்தேன். இப்படித்தான் இது நகர்ந்தது,” என்கிறார் அவர்.
வேபாவில் இருந்து பல பிராண்ட்களை பெற்றபோதும், ஐரிஸ் நிறுவனம் மூன்று பொருட்களை மட்டுமே தக்கவைத்தது. பின்னர், புதிதாக பலவற்றைச் சேர்த்தனர். இன்றைக்கு அவர்கள் செல்லப்பிராணிகள், கோழிப்பண்ணை மற்றும் கால்நடைகள் ஆகியவற்றுக்கான 32 பொருட்களைத் தயாரிக்கின்றனர். இதர இரண்டு நிறுவனங்களுக்கான பொருட்களையும் அவர்கள் உற்பத்தி செய்கின்றனர். இதர சில பொருட்களை அவர்கள் இறக்குமதி செய்வதுடன், சந்தைப்படுத்துதலும் மேற்கொள்கின்றனர்.
|
கரன்சி காலனி என்ற இளங்கோவனின் ஆங்கிலப்புத்தகம் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
|
இதற்கிடையே, 2012ம் ஆண்டில், டிமோ ஈவா வெல்னஸ் என்ற கால்நடை சுகாதார பொருட்கள் மற்றும் மனிதர்களுக்கான அழகுசாதனப்பொருட்கள் ஆகியவற்றை தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கினார். மூன்று நிறுவனங்களும் இணைந்து கடந்த நிதியாண்டில் 41 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி உள்ளன.
சிரமமான சூழல்கள் பற்றி நினைவு கூறும் இளங்கோவன், "வெற்றிகரமான வேலையில் இருந்து விலகியது தவறான முடிவோ என்று பல முறை வருந்தியிருக்கிறேன். அது போன்ற தருணங்களில், வெற்றிபெற்ற நபர்கள் மற்றும தொழில் முனைவோர்களின் வாழ்க்கை வரலாற்றை நான் படிப்பேன். அதன்மூலம் எனக்கு நானே உந்துதல் பெற்றேன்."
அரவிந்த் மில்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சஞ்சய் லால்பாயின் கதை, தம்மை மிகவும் கவர்ந்ததாக கூறுகிறார். நம்பிக்கையை இழக்கக்கூடாது என்ற தன்னம்பிக்கையை அவரது வாழ்க்கை கொடுத்தது என்கிறார்.
104 பணியாளர்கள் அவர்கள் நிறுவனத்தில் இருக்கின்றனர். நூறு பேர்களுக்கு வேலை அளிக்க வேண்டும் என்ற இலக்கை அந்த நிறுவனம் அடைந்து விட்டது. "மனிதத்துக்கு கூடுதல் மதிப்பு தர வேண்டும் என்பதை நான் விரும்புகிறேன். என்னுடைய நிறுவனங்களின் வெற்றிக்கு என்னுடைய பணியாளர் குழு, வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள் காரணம்," என்கிற இளங்கோவன் தமிழகத்தின் தென் மாவட்டமான திருநெல்வேலியை சேர்ந்த நடுத்தரக் குடும்பத்தில் இருந்து வந்தவர். இப்போது பெங்களூருவில் தமது மனைவியுடனும் இ.டி அலோன்ஸோ, கதிர் விதுரன் என்ற இரண்டு என்ற இரண்டு மகன்களுடனும் வசிக்கிறார்.
அதிகம் படித்தவை
-
மலைக்க வைக்கும் வளர்ச்சி!
உத்தரகாண்ட் மாநிலத்தின் குக்கிராமத்தில் பிறந்தவர் கீதா சிங். ஐம்பதாயிரம் ரூபாய் முதலீட்டில் தொடங்கி, இன்றைக்கு டெல்லியில் ஆண்டுக்கு 7 கோடி ரூபாய் வருவாய் தரும் நிறுவனத்தின் உரிமையாளராக இருக்கிறார். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை
-
நாற்பதிலும் வெல்லலாம்!
பெரும்பாலானோர் ஓய்வுபெறுவதைத் திட்டமிடும் வயதில்அதாவது 40 வயதைத் தாண்டிய நிலையில் கொல்கத்தாவைச்சேர்ந்த மூன்று பேர் தங்கள் பிஎப், கிராஜுட்டி பணத்தைப் போட்டுதொழில் தொடங்கினார்கள். ஆறு ஆண்டுக்குப் பின்னால் என்ன ஆனது? ஜி.சிங் எழுதும் கட்டுரை
-
மீண்டும் மீண்டும் வெற்றி!
பிரஸூன், அங்குஷ் என்ற இளைஞர்கள் ஏற்கெனவே இரண்டு நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்தி, பிறரிடம் விற்று விட்டனர். இப்போது இந்திய பாரம்பர்யமிக்க நொறுக்குத் தீனி வகைகளை வெற்றிகரமாக விற்பனை செய்கின்றனர். சோஃபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை
-
வேர் ஈஸ் த பார்ட்டி?
வசதியான குடும்பத்தில் பிறந்தபோதும், தனியாகத் தொழில் செய்ய வேண்டும் என்ற ஆர்வம்கொண்டவர் சயான் சக்கரவர்த்தி. அவர் வேர்இஸ் த ஃபுட் என்ற வித்தியாசமான பெயர் கொண்ட சங்கிலித் தொடர் ரெஸ்டாரெண்ட்களை நடத்தி வருகிறார். குருவிந்தர் சிங் எழுதும் கட்டுரை
-
கைவினைக்கலை அரசி
பீகாரின் கட்டுப்பாடுகள் மிக்க கிராமத்தில் வளர்ந்த பெண் அவர். திருமணத்துக்குப் பின் மும்பை வந்த அவர், கவின்கலைப்படிப்பை முடித்தார். இன்றைக்கு மும்பையில் ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் ஈட்டும், மறு சுழற்சி செய்யப்பட்ட அட்டைகளில் ஃபர்னிச்சர் செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். தேவன் லாட் எழுதும் கட்டுரை.
-
ஷாம்பூ மனிதர்!
தமிழ்நாட்டின் ஒரு சிறிய நகரத்தில் சுதந்திரமாக சுற்றித்திரிந்த இளைஞர், 15 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் ஷாம்பூ தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார். அது கடின உழைப்பு, வித்தியாசமான விளம்பர உத்திகளால் இன்றைக்கு 1450 கோடி ரூபாய் ஈட்டும் நிறுவனமாகி இருக்கிறது. பி சி வினோஜ் குமார் எழுதும் கட்டுரை