400 கோடிகளைத் தாண்டிச்செல்லும் பர்வீன் ட்ராவல்ஸ் நீண்டதூரம் பயணித்திருக்கிறது!
21-Nov-2024
By பி.சி. வினோஜ்குமார்
சென்னை
அவர் ஒரே ஒரு டாக்ஸி வைத்து சுற்றுலாப் பயணிகளுக்காக ஓட்டிக்கொண்டிருந்தவர். இன்றைக்கு 1300 வாகனங்கள், 4000 தொழிலாளர்கள், 400 கோடி வர்த்தகம் என்று தூள் கிளப்பிக்கொண்டிருக்கிறார். அவர் ஏ அப்சல். பர்வீன் ட்ராவல்ஸ் உரிமையாளர்.
ஏபி பிசினஸ் எண்டர்ப்ரைசஸ் என்ற குழுமத்தின் முதன்மை நிறுவனமாக உள்ளது பர்வீன் ட்ராவல்ஸ். போக்குவரத்து, உணவகங்கள், வாகனங்கள், விடுமுறை, லாஜிஸ்டிக்ஸ் போன்றவற்றில் இக்குழுமம் ஈடுபடுகிறது.
1980-ல் ஓர் அம்பாசடர் காருடன் பர்வீன் ட்ராவல்சை ஆரம்பித்த ஏ அப்சல், இன்று 400 கோடி மதிப்புள்ள தொழில் குழுமத்தின் தலைவர் |
இந்த தொழில் சாம்ராஜ்யத்தை உருவாக்கியிருக்கும் அப்சலுக்கு தன் தொழில் குறித்துப் பேசவே விருப்பம். நமது பேச்சு போது அவரது தனிப்பட்ட வாழ்க்கைப்பற்றி திரும்பும்போது அவர் அதைப்பேச ஆர்வம் காட்டவில்லை என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
உண்மையில் அவருக்கு தொழிலைத் தவிர வேறு எதுவும் உந்துதல் அளிப்பதில்லை. அவரது வாழ்வும் அதைச் சுற்றிச் சுழலுகிறது. “என்னுடைய பொழுதுபோக்கே தொழிலைக் கண்காணித்தல்தான். எமது வாகனங்கள் சாலையில் ஓடிக்கொண்டு, எல்லாம் நல்லவிதமாகப் போய்க்கொண்டிருக்கும்போதுதான் நான் சற்று ஓய்வாக உணர்கிறேன்,” என்கிற அப்சலின் தினங்கள் காலை ஐந்தரை மணிக்கு தொழுகை செய்வதுடன் தொடங்குகின்றன.
சில எளிய உடற்பயிற்சிகளுக்குப் பின்னால் அவருக்கு அன்றைய பேருந்துகளின் நிலவரங்கள் வரத் தொடங்குகின்றன. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரபிரதேசம், கேரளம், தெலுங்கானா, புதுச்சேரி போன்ற மாநிலங்களில் 45 இடங்களுக்கு ஓடும் சுமார் எண்பது பேருந்துகளின் வருகை, புறப்பாடு பற்றிய தகவல்கள் அவை.
பர்வீன் ட்ராவஸில் தினசரி நடவடிக்கைகளைக் கவனித்துக்கொள்ள மூத்த நிர்வாகிகள் உள்ளிட்ட அமைப்பு உள்ளது. ஆனால் அப்சல் நேரடியாக ஈடுபடுபவர். வாகனங்களின் அட்டவணை, தொழிலாளர்களின் மனநிலை, வாடிக்கையாளர் திருப்தி ஆகியவற்றை அறிய விருப்பம் கொள்பவர்.
“பர்வீன் ட்ராவல்ஸைத் தாண்டி எனக்கு வாழ்க்கை இல்லை,” என்கிற இவருக்கு 53 வயது ஆகிறது. இந்த குழுமத்துக்கு தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக இருக்கும் இவர் ஞாயிற்றுக்கிழமை மட்டுமே குடும்பத்துடன் நேரம் செலவழிக்க ஓய்வு எடுத்துக்கொள்கிறார்.
அப்சல் இந்த வெற்றிக்குக் கடுமையாக உழைத்துள்ளார். ஆறு சகோதரர்களில் இரண்டாவதாகப் பிறந்தவரான இவர், தன் தந்தையின் தொழிலுக்கு 1980-ல் பர்வீன் ட்ராவல்ஸ் தொடங்கியதன்மூலம் புதிய திசை அளித்தார்.
|
அப்சலின் தந்தை அல்லா பக்ஷ் மீட்டர் பொருத்தப்பட்ட இரண்டு டாக்ஸிகளுடன் 1967-ல் இத்துறையில் நுழைந்தார் |
அப்சலின் தந்தை அல்லா பக்ஷ், மீட்டர் பொருத்தப்பட்ட இரண்டு டாக்ஸிகளுடன் 1967-ல் இத்துறையில் நுழைந்தவர். சரக்குப் போக்குவரத்துக்காக மேலும் இரண்டு லாரிகள் வாங்கினார். பக்ஷ் முன்னதாக சில ஆயில் நிறுவனங்களில் வேலை பார்த்து மாதம் 200 ரூபாய்கள் சம்பாதித்துக்கொண்டிருந்தவர்.
15 வயதிலேயே அப்சல் பள்ளி நேரம் முடிந்ததும் தன் தந்தைக்கு உதவியாக வேலை செய்துகொண்டிருந்தார். அவர்களின் அலுவலகம் அப்போது சென்னையில் பாரிமுனையில் இருந்தது. இப்போது புரசைவாக்கத்தில் உள்ளது.
அவரின் பிற சகோதரர்கள் படிப்பின்போது அப்சல் போல் ஈடுபாடு காண்பிக்கவில்லை. இன்று அவரது மூன்று சகோதரர்கள் இந்நிறுவனத்தில் மூத்த நிர்வாகப் பொறுப்பில் வேறுபட்ட பணிகளைக் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள்.
“நாங்கள் அனைவரும் பல ப்ளாட்கள் கொண்ட ஒரே வீட்டில்தான் வசிக்கிறோம்,” என்கிறார் அப்சல். அவரது மூத்த மகன் லண்டன் சென்று சர்வதேச தொழிலில் முதுநிலைப் பட்டம் பெற்றவர். பர்வீன் ஹாலிடேஸ் என்ற சுற்றுலாப் பிரிவைக் கவனித்துக்கொள்கிறார்.
அப்சல் நன்றாகப் படிக்கக்கூடியவர். அவருக்கு மெட்ராஸ் மருத்துவக்கல்லூரியில் படிக்கவும் இடம் கிடைத்தது. ஆனால் அவர் சேரவில்லை. ஏனெனில் மருத்துவம் படித்தால் அதற்கே முழு நேரமும் செலவிட வேண்டும் குடும்பத்தைப் பார்க்கமுடியாது என்று அவரது அம்மா கூறியதுதான்.
எனவே அப்சல் சென்னை லயோலா கல்லூரியில் உயிரியல் படித்தார். அவர் முதல் ஆண்டு படிக்கும்போது ஒரு அம்பாசடர் கார் மட்டும் வைத்துக்கொண்டு சுற்றுலா சேவையைத் தொடங்கினார். அதற்கு தன் அக்கா பெயரால் ‘பர்வீன் ட்ராவல்ஸ்’ என்று பெயரிட்டார்.
|
அப்சல் (இடமிருந்து மூன்றாவது) நிறுவனத்தில் பிற இயக்குநர்களுடன் |
இச்சமயத்தில் அவரது அப்பா டாக்சிகளை விற்றுவிட்டார். லாரித் தொழிலையும் மூடிவிட முயற்சி செய்துகொண்டிருந்தார்.
ஆனால் பர்வீன் ட்ராவல்ஸ் வேகமான வளர்ச்சியை எட்டியது. “சென்னைக்கு வந்து சிறு விடுதிகளில் தங்கி இருக்கும் வட இந்திய சுற்றுலா பயணிகளிடம் நல்ல வரவேற்பு இருந்தது. அவர்களைச் சந்தித்து தேவைக்கேற்ப சுற்றுப்பயணங்களை அமைத்துத் தருவேன்,” என்கிறார் அப்சல்.
தேவைக்கேற்ப சுற்றுப்பயணங்களை அமைத்துத் தந்ததால் வரவேற்பு பலமாக இருந்தது. சென்னை – திருப்பதி, சென்னை – திருச்சி - மதுரை – ராமேஸ்வரம் – கன்னியாகுமரி – சென்னை போன்ற ஆன்மிகப் பயணங்கள் பிரபலமாக இருந்தன.
சென்னை – பெங்களூரு –மைசூரு- சென்னை மற்றும் சென்னை – தேக்கடி – மூணாறு –கொடைக்கானல் – சென்னை ஆகிய உற்சாகச் சுற்றுப்பயணத்திட்டங்களும் பிரபலமாக இருந்தன.
முதல் ஆண்டின் இறுதியில் பர்வீன் ட்ராவல்ஸ் ஆறு அம்பாசடர்களாக வளர்ந்தது. “அப்போது திட்டமிட்டு சுற்றுலாப்பயணங்களுக்கு அழைத்துச்செல்ல நிறுவனங்கள் இல்லை. ஆனால் அதற்கான தேவை இருந்தது. ஒரு மாதத்தில் எங்கள் கார்கள் 25 தடவையாவது திருப்பதிக்குப் போய்வந்தன,” அப்சல் நினைவுகூர்கிறார்.
திருப்பதி சென்றுவர 350 ரூபாய் கட்டணம். ஒருமுறை போய்வந்தால் 50 ரூபாய் லாபம் கிடைத்தது. நிறுவனம் வேகமாக வளர்ந்தது. ஐந்து ஆண்டுகளில் 100 அம்பாசடர் கார்களாக நிறுவனம் வளர்ச்சி அடைந்தது.
|
நிறுவனத்தின் தினசரி நடவடிக்கைகளை அப்சல் நேரடியாகக் கண்காணிக்கிறார் |
இதே தொழிலில் இயங்கும் பிற ஆளுமைகளும் அப்சலைப் பாராட்டுகிறார்கள். “தென்னிந்தியாவில் சுற்றுலாத் தொழில் அப்போது வளர்ச்சி அடையும் நிலையில் இருந்த சமயத்தில் அவர் நுழைந்திருந்தார். சுற்றுலா வளர்ச்சிக்கு அவர்களின் பங்களிப்பு சிறப்பானது,” என்கிறார் ஜே சேதுராமன், சென்னையில் உள்ள சர்வதேச சுற்றுலா நிறுவனமான ட்ராவல் எக்ஸ் எஸ்ஸின் சிஇஓ.
இரு நகரங்களுக்கு இடையிலான தங்கள் பேருந்து சேவையை பர்வீன் ட்ராவல்ஸ் சென்னை – பெங்களூரு இடையே 1981-ல் தொடங்கியது. அப்சலும் வாரக்கடைசியில் அப்பேருந்தில் பயணம் செய்து பயணிகளின் எதிர்பார்ப்புகளை அறிந்தார்.
வாடிக்கையாளர்களைத் தக்கவைப்பது அப்சலின் முதல் நோக்கம். வாடிக்கையாளர்களைக் கவரும் நடவடிக்கைகளுக்கு பர்வீன் ட்ராவல்ஸ் புகழ்பெற்றது. 2004-ல் ஆன்லைன் டிக்கெட் புக்கிங்கை முதன்முதலில் இதுதான் அறிமுகம் செய்தது.
“பயணிகளுக்கு புத்துணர்ச்சியூட்டும் நாப்கின்கள் முதன்முதலில் வழங்கியது நாங்களே. விமானங்களில் இருக்கும் லக்கேஜ் சீட்டுகள் போன்றவற்றை பேருந்திலும் அறிமுகம் செய்தோம். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையே எங்களை இவ்வளவு தூரம் பயணிக்க வைத்தது,” என்கிறார் அப்சல். தொடக்கத்திலிருந்து அவர்களுடன் இன்னும் இருக்கும் வாடிக்கையாளர்களும் உள்ளனர்.
தொழிலாளர்கள் நலத்தையும் அப்சல் முக்கியமானதாகக் கருதுபவர். “ஓட்டுநர்கள் எங்கள் சொத்துகள். அவர்களை நன்றாகப் பார்த்துக்கொள்வதுடன் நல்ல சம்பளமும் தருகிறோம்,” அவர் சொல்கிறார். ஹைடெக் பேருந்துகளின் ஓட்டுநர்கள் மாதம் 25000 – 30,000 ரூ சம்பளம் பெறுகிறார்கள்.
“அவர்களுக்கு ஈஎஸ்ஐ, பிஎஃப், கிராஜுவிட்டி போன்ற பலன்களும் உண்டு. கல்விக்கான உதவித்தொகைகளும் அவர்களின் குழந்தைகளுக்கு வழங்குகிறோம்,” என்கிறார் அப்சல். அவர் ஓட்டுநர்களிடம் தொடர்ந்து உரையாடுகிறவர். அவர்களின் பிரச்னைகளை அறிந்து தீர்த்து வைப்பவர்.
|
பர்வீன் ட்ராவல்ஸ் வாகன அணியில் ஸ்கேனியா ஹைடெக் பேருந்துகளை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் அப்சலும் அவரது இயக்குநர்களும் |
இதனால் ஓட்டுநர்கள் நீண்டகாலம் பணிபுரிகிறார்கள். இத்துறையில் ஓட்டுநர்கள் மாறிக்கொண்டே இருப்பது சகஜம் என்றாலும் இங்கே நிலை வேறாக உள்ளது. இங்குள்ள 1350 ஓட்டுநர்களில் பாதிப்பேர் பத்து ஆண்டுகளுக்கும்மேலாக தொடர்பவர்கள் என்கிறார் அப்சல்.
இந்நிறுவனத்தின் லாஜிஸ்டிக்ஸ் பிரிவான பர்வீன் எக்ஸ்பிரஸ், பார்சல்கள், வாடிக்கையாளர்களின் இடப்பெயர்வுக்கான தேவைகள் போன்றவற்றைக் கையாளுகிறது. இப்பிரிவில் 150 ட்ரக்குகள் ஓடுகின்றன. ஆண்டுக்கு 30 கோடி வருமானம் வரும் பிரிவாக இது உள்ளது. இங்கும் ஓட்டுநர்களே முதுகெலும்பாக இருக்கிறார்கள்.
ஹுண்டாய், டிசிஎஸ், இன்போசிஸ் போன்ற நிறுவனங்களின் ஊழியர்களின் போக்குவரத்தை இன்னொரு பிரிவு கவனிக்கிறது. சுமார் 850 பேருந்துகள் இதில் ஈடுபடுகின்றன. மாதம்தோறும் 12 கோடி வருமானம் வருகிறது.
இந்நிறுவனத்தில் 160 வாகனங்கள் சுற்றுலாப் பயணங்கள், வாடகைப் பயணங்களுக்காகப் இயக்கப்படுகின்றன. இதன் மூலம் கிடைக்கும் வருமானம் ஆண்டுக்கு 25 கோடி!.
மாறுபட்ட ஒரு துறையிலும் இந்நிறுவனம் கால்பதித்துள்ளது. 2008-ல் இது ஓட்டல் தொழிலில் ஒரு துணை நிறுவனம் மூலம் நுழைந்தது. ஏபி ரிசார்ட்ஸ் மற்றும் ரெஸ்டாரண்ட்ஸ் பிரைவேட் லிமிடட் என்ற அந்நிறுவனம் மூன்று புட் கோர்ட்கள், மற்றும் பிட்ஸ்டாப் என்ற துரித உணவகச் சங்கிலி ஆகியவற்றைச் சென்னையில் நடத்துகிறது.
சென்னையில் ஒரு பெட்ரோல் பம்ப் நடத்துகிறார்கள். தங்கள் பயன்பாட்டுக்காக இரண்டு எண்ணெய் டேங்கர்கள், ஓட்டுநர் பயிற்சி நிறுவனம், ஆட்டோமொபைல் சர்வீஸ்பிரிவு ஆகியவையும் உள்ளன. சுமார் 20 பார்க்கிங் இடங்களும் இவர்களுக்கு உள்ளன.
சென்னை- மும்பை ஏசி படுக்கை வசதிகொண்ட பேருந்து அறிமுகப்படுத்த இருப்பதாக அப்சல் கூறுகிறார்.
“பயண நேரம் 26 மணி. டிக்கெட் விலை ரூ 2500க்கும் மேல் இருக்கும். நீண்ட தூரப் பயணத்திட்டங்களை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மெல்ல அடியெடுத்து வைப்பதற்கு மாநிலங்களுக்கு இடையே செல்கையில் உள்ள வரிகளும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் படுக்கை வசதி கொண்ட வாகனங்களுக்கான கட்டுப்பாடுகளுமே காரணம்,” என்கிறார் அப்சல்.
அதிகம் படித்தவை
-
பணம் கறக்கும் தொழில்!
நல்ல சம்பளத்தில் கார்ப்பரேட் நிறுவனத்தில் கனவு வேலையைப் பார்த்துக்கொண்டிருந்த நான்கு நண்பர்கள் திடீரென வேலையை விட்டு சொந்தமாகத் தொழில்தொடங்கினர். அது ஒரு மாட்டுப்பண்ணை. இன்று 100 கோடி வருவாய் தரும் பிராண்ட். ஜி சிங் எழுதும் கட்டுரை
-
தோல்விகளுக்குப் பின் வெற்றி
கோவையை சேர்ந்த பிரிதேஷ் ஆஷர், மேகா ஆஷர் தம்பதி வெறும் 5000 ரூபாய் முதலீட்டில் தோல் பராமரிப்பு பொருட்களை தயாரிக்கத் தொடங்கினர். இப்போது அதை ரூ.25 கோடி ஆண்டு வருவாய் தரும் நிறுவனமாக உயர்த்தி உள்ளனர். இதற்கு முன்பு சில தொழில்களை செய்து நஷ்டத்தைச் சந்தித்தாலும் விடாமுயற்சியால் வெற்றியைப் பெற்றிருக்கின்றனர். சோஃபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை
-
புதுமையின் காதலன்!
அபிஷேக் நாத்தை பல்மருத்துவப் படிப்பதற்காக குடும்பத்தினர் பெங்களூரு அனுப்பினர். அவரோ ஏழு மாதங்களுக்குள் படிப்பில் இருந்து விலகிவிட்டார். ஹோட்டல் மேனேஜ் மெண்ட் முடித்து கேட்டரிங் நடத்தி தோல்வியடைந்தார். இப்போது லூ கஃபே எனும் சங்கிலித்தொடர் கஃபேவை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். குருவிந்தர் சிங் எழுதும் கட்டுரை.
-
பட்டு சாம்ராஜ்ய இளவரசி!
நல்லி குடும்பத்தில் இருந்து வந்த இளைய தலைமுறையின் பிரதிநிதி லாவண்யா. ஹார்வார்டில் எம்பிஏ படித்த இவர் உருவாக்கிய நல்லி நெக்ஸ்ட் என்கிற கடைகளின் வெற்றிக்கதையை எழுதுகிறார் உஷா பிரசாத்
-
உணவு கொடுத்த கோடிகள்
நடுத்தரக் குடும்பம் ஒன்றில் பிறந்து மருந்துக் கம்பெனி ஒன்றில் மாதம் 350 ரூபாய் சம்பளத்துக்கு வேலை பார்த்தவர், இன்றைக்கு 100 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் ஆரோக்கிய உணவு தயாரிப்பு நிறுவனத்தின் தலைவராக உயர்ந்திருக்கிறார். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை
-
இரவுக் கடை
கொல்கத்தாவைச் சேர்ந்த மூன்று நண்பர்கள் இணைந்து நள்ளிரவில் பசித்தவர்களுக்கு உணவு டெலிவரி செய்யும் சேவை தொடங்கினர். தொடக்கத்தில் ஒரு ஆர்டர் கூட கிடைக்கவில்லை. இப்போது மாதம்தோறும் 1800 ஆர்டர்கள் மூலமாக 8 லட்சம் வருவாய் ஈட்டுகின்றனர். ஜி.சிங் எழுதும் கட்டுரை.