அன்று வீட்டின் ஓட்டைக் கூரை வழியாக மழை கொட்டியது! இன்று கொட்டுவது பணம்! வறுமையிலிருந்து வளத்துக்கு உயர்ந்த மும்பைக்காரரின் வெற்றிக்கதை!
04-Dec-2024
By குருவிந்தர் சிங்
மும்பை
அத்தியாவசிய தேவைகளுக்குகூட போதுமான பணம் இல்லாத குடும்பத்தில் இருந்து வந்தவர், அக்னெலோராஜேஷ் அதைட். இப்போது மும்பையைச் சேர்ந்த ரியல்எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர். மேற்கூரை ஒழுகும் வீட்டின் சூழலில் வளர்ந்த அவர், குழந்தையாக இருக்கும்போது கடினமான சூழல்களை சந்தித்துள்ளார். எனவே, தம்முடைய வாடிக்கையாளர்கள் அதுபோன்ற கடினமான சூழல்களைச் சந்திக்கக்கூடாது என்ற எண்ணத்தில் உயர் தரமான கட்டுமானத்துடன் கூடிய வீடுகள் கட்டுவது என்பதை உறுதி செய்கிறார்.
அதைட்டின் வாழ்க்கைக் கதை, நேரடியாக பாலிவுட் திரைப்படத்துக்காக எழுதப்பட்டு வெளிவந்த திரைக்கதைபோன்றே தோற்றமளிக்கக்கூடியது. கதாநாயகன் குழந்தைப் பருவத்தில் பல்வேறு பாதிப்புகளை மற்றும் கடினமான சூழல்களை எதிர்கொண்டு அனைத்து கஷ்டங்களில் இருந்தும் மீண்டு பெரும் பணக்காரராக வெற்றி பெறுவார். இதுவே இவரது கதையும் கூட.
அக்னெலோராஜேஷ் அதைட், வறுமையை எதிர்த்துப் போராடியவர், குழந்தையாக இருக்கும்போது சின்ன,சின்னவேலைகளைச் செய்தவர் கடின உழைப்பின் வாயிலாக ஒரு தொழில் அதிபராக வெற்றி பெற்றிருக்கிறார். (புகைப்படங்கள்: சிறப்பு ஏற்பாடு). |
அவரது ரியல் எஸ்டேட் நிறுவனமான செயின்ட் ஏஞ்சலோவின் வி.என்.சி.டி வென்ஞ்சர்ஸ், மும்பை, சென்னை, மதுரை மற்றும் கோயம்புத்தூரில் பல கட்டுமானதிட்டங்களை மேற்கொண்டிருக்கிறது. துபாய், லண்டனில் அலுவலகங்களும் உள்ளன. அதே போல மகாராஷ்டிராவில் உள்ள இகத்புரியில் ரிசார்ட் ஒன்றுக்கும் உரிமையாளராக இருக்கிறார். அதைட்டின் ஒட்டு மொத்த ஆண்டு வருவாய் தோராயமாக ரூ.300 கோடியாக இருக்கிறது. 1971-ஆம் ஆண்டு மும்பையின் புறநகரான வாசாய் பகுதியில் பிறந்த அதைட்டின் குழந்தைப் பருவம் கடினமான சூழல்களைக் கொண்டிருந்தது. அவர் வளரும்போது அதைட் குடும்பம், கோரிகானில் சிறிய வீட்டில் வசித்து வந்தது. 1982-ஆம் ஆண்டு அவரது குடும்பம் மல்வானில் உள்ள 180 ச.அடி மட்டுமே கொண்ட ஒரு வாடகை வீட்டுக்கு இடம் பெயர்ந்தது. மழைகாலத்தில் அந்த வீடு ஒரு நரகம் போல மாறிவிடும். மழை பெய்யும்போது, வீட்டின் மேற்கூரையில் இருந்து தண்ணீர் ஒழுகும். அவரது குடும்பத்துக்கு தூங்குவதற்கு வேறு ஒரு இடம் ஏதும் இல்லை. “நானும், என்னுடைய இரண்டு சகோதரர்களும் ஒரு பாயில் படுத்திருப்போம். மழை காலங்களில் நாங்கள் நனைந்துவிடுவோம். அத்துடன் கழிவறைகளில் இருந்து கழிவு நீரும் உள்ளே வரும். வெளியில் உள்ள சாக்கடை நீரும் வீட்டுக்குள் வரும். வேறு வழியில்லாமல் இரவு முழுவதும் இந்த அச்சுத்தமான தண்ணீருக்கு இடையே இரவு பொழுதுகளைக் கழிப்போம்” என்று நினைவு கூர்கிறார் அதைட். இன்றைக்கும் மழை பெய்தால், அந்த கொடூரமான இரவுகள் அவரது நினைவுக்குள் வெள்ளமென பாயும். அதைட்டின் தந்தை ஒரு தனியார் நிறுவனத்தில் கிளர்க் பதவியில் இருந்தார். அவரது தாய் வீட்டிலேயே, குடும்ப வருமானத்துக்கு துணையாக குழந்தைகளுக்கு டியூசன் சொல்லிக் கொடுத்தார். அவரது தாயும் தந்தையும் கலப்புமணம் செய்தவர்கள். அவரது தந்தை கத்தோலிக்க மதகுருவுக்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, அதில் இருந்து இடையிலேயே நின்றவர். அவரது தாய் தமிழ் பிராமண குடும்பத்துப் பெண். இவர்களின் திருமணத்துக்கு இருதரப்புக் குடும்பங்களும் எதிர்ப்பு. அத்துடன் இந்த ஜோடியை ஒதுக்கி வைத்தனர். “போதுமான வருவாய் இல்லாததால், எப்போதுமே குடும்பம் நிதி முடக்கத்திலேயே இருந்தது,” என்றார் அவர். “மல்வானி வீட்டில் கழிவறை ஏதும் இல்லை அல்லது குடிநீர் இணைப்பும் இல்லை. என்னுடைய பெற்றோர் சீக்கிரமே எழுந்து பொதுக்குழாயில் இருந்து எங்கள் பங்கு தண்ணீரை எடுத்து வருவார்கள்.” மல்வானில் வசிக்கும் போது வேறு சில பிரச்னைகளையும் அவர்கள் குடும்பம் எதிர்கொண்டது. குற்ற நடவடிக்கைகள் அதிகம் நிறைந்த பகுதியாக அது புகழ்பெற்றிருந்தது. போதைப் பொருட்கள், கூலிக்காக கொலைசெய்வோர், பிக்-பாக்கெட் திருடர்கள், சட்டவிரோத சூதாட்ட இடங்கள், பாலியல் தொழிலாளர்கள் ஆகியோரால் அந்தப் பகுதி நிறைந்திருந்தது.
1992-ஆம் ஆண்டு ஒரே ஒரு கம்ப்யூட்டருடன் டேட்டா என்ட்ரி ஆபரேட்டராக ராஜேஷ் அதைட் பணியைத் தொடங்கினார் |
“வெறுமனே எங்கள் பகுதியின் பெயரைச் சொன்னாலேகூட துணிச்சலான இதயங்களிலும் அச்சம் ஏற்படும். ஆனால், எங்களது ஏழ்மை அவர்கள் மத்தியில்தான் எங்களைக் கட்டாயப்படுத்தி வாழ வைத்தது. இப்படியான சூழலிலும் கூட, பெற்றோர் எங்களுக்கு கல்வி அளிப்பதில் சமரசம் செய்து கொள்ளவில்லை. எங்களை கான்வென்ட் பள்ளிகளுக்குப் படிக்க அனுப்பினர்,” என்கிறார் அதைட். அவருடைய தந்தை பொதுப்போக்குவரத்தில் பயணிப்பதைத் தவிர்த்து அலுவலகத்துக்கு தினமும் நடந்தே செல்வார். வீட்டில் இருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில் அலுவலகம் இருந்தது. திரும்பி வரும்போதும் அதே வழியில் நடந்தே வீட்டுக்கு வருவார். “அவர் ஒவ்வொரு ரூபாயையும் சேமித்தார். தமது குழந்தைகளுக்காக செலவழித்தார்,” என்றார் அதைட். “அவர் விடுமுறையில் சென்றதில்லை. நாங்கள் எல்லோரும் வாழ்க்கையில் நன்கு முன்னேற்றம் அடையும் வரை அவர் எந்த ஒரு திரைப்படத்தையும் பார்த்ததில்லை. 10 ஆண்டுகளாக ஒரு ஜோடி உடைகளை மட்டுமே மாற்றி, மாற்றி அணிந்து வந்தார். எங்களுடைய படிப்புக்காகவும் வீட்டின் இதர செலவுகளுக்காகவும் அவரது நிறுவனத்தில் இருந்தும், நண்பர்களிடம் இருந்தும் அவர் கடன் வாங்கினார். அவரது தீபாவளி போனஸ் என்பது இதுபோன்ற கடன்களை அடைப்பதற்குதான் சரியாக இருந்தது.” குடும்பச் செலவுகளுக்காக தம்முடைய தங்க வளையல்களை அவரது தாய் விற்றார். அதன் பின்னர் 13-வது வயதில் அதைட் நெற்றிப்பொட்டு தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தார். “இளம் வயதிலேயே என்னுடைய பொறுப்புகளை உணர்ந்தேன். பெற்றோரிடம் இருந்து பணம் வாங்குவதில்லை என்று தீர்மானித்தேன். நான் பள்ளிக்குச் சென்று வந்தபிறகு நெற்றிப்பொட்டு தொழிற்சாலையில் வாரக்கூலி ரூ.3.50க்கு பணியாற்றத் தொடங்கினேன். அந்த நாட்களில் இது பெரிய தொகையாக இருந்தது. வடா பாவ் வாங்குவதற்கு எனக்கு 15 பைசா தான் செலவானது. சான்விச் 20 பைசாதான் விற்கப்பட்டது. என்னுடைய பெற்றோரைப் பற்றிக் கவலைப்படாமல், நானே என்னுடைய சொந்தச் செலவுகளுக்காகச் சம்பாதித்தது எனக்குப் பெருமையாக இருந்தது,” என்றார் அதைட். பத்தாம் வகுப்புப் படிக்கும்போது பணக்கார மனிதர் ஒருவருக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுத்தார். தமது படிப்புக்காகப் பணம் சேர்ப்பதற்காக விற்பனைப் பிரதிநிதியாக வீடு வீடாகச் சென்று ஃப்ரீசர் மேட், அழகுசாதனப் பொருட்கள், செருப்புகள் ஆகியவற்றை விற்பனை செய்து வந்தார். 1991-ஆம் ஆண்டு டால்மியா வணிகக் கல்லூரியில் பி.காம் முடித்தார். கம்ப்யூட்டர்தான் அடுத்ததாக பெரிய இடத்தைப் பிடிக்கும் என்பதை உணர்ந்தார். முறையாக அவர் கம்ப்யூட்டர் கல்வி எதுவும் பெறவில்லை. அவருடைய தந்தையின் நண்பருடைய அலுவலகத்தில் கம்ப்யூட்டரின் பல அடிப்படையான புரோக்கிராம்களை கற்றுக் கொண்டார்.
அதைட் , ஃப்ரீசர் மேட்கள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் வாசனைத்திரவியங்கள் உட்பட சிறிய பொருட்களை விற்பனைப் பிரதிநிதியாக வீடு வீடாகச் சென்று விற்று தமது படிப்புக்காக பணம் சேர்த்தார் |
1992-ஆம் ஆண்டு டிசம்பர் 6, அயோத்தியில் பாமர் மசூதி இடிக்கப்பட்ட தினம். அது இவருக்கு முக்கியமானது. அதே நாளில்தான் மூன்று நண்பர்களுடன் இணைந்து தமது முதல் கம்ப்யூட்டரை வாங்கினார். தூர்தர்ஷனுக்கு தரவு உள்ளீடு(data entry) செய்து தரும் பணிகளை எடுத்தார். சுப்ரகீத் முகாபலா என்ற புகழ்பெற்ற நிகழ்ச்சிக்காக தொலைக்காட்சி பார்வையாளர்கள் புகழ்பெற்ற திரைப்படப் பாடல்களை ஒளிபரப்பும்படி கேட்டு தபால் அட்டையில் வேண்டுகோள் விடுப்பார்கள். அந்த தபால் அட்டையில் உள்ள தகவல்களை உள்ளீடு செய்ய வேண்டும். இதற்காக அவருக்கு ஒரு தபால் அட்டைக்கு 20 பைசா கொடுக்கப்பட்டது. தமது 180 ச.அடி கொண்ட வீட்டில் இருந்து தமது தொழிலைத் தொடங்கினார். விரைவிலேயே எட்டு கம்ப்யூட்டர்களைக் கொண்டதாக அவரது தொழில் வளர்ந்தது. "ஆனால், ஒரு பெரிய ஊழல் வெளியே வந்தது. 1993-ம் ஆண்டு நான் என்னுடைய உள்ளீடு பதிவு செயல்பாடு பணிகளை இழந்தேன். மீண்டும் தொடக்கத்தில் இருந்து ஆரம்பித்தேன்," என்றார் அதைட். இந்த சூழலைப் பயன்படுத்தி கம்ப்யூட்டர்களை உபயோகித்து , புதிய வணிகத் திட்டத்தை அவர் முன்னெடுத்தார். "அதே கம்ப்யூட்டர்களைக் கொண்டு நான் கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கத் தீர்மானித்தேன். மல்வானில் வீடுவீடாகச் சென்று பயிற்சியில் சேரும்படி அழைப்பு விடுத்தேன். ரூ.1,500 கட்டணத்தில் அடிப்படையான கம்ப்யூட்டர் பயிற்சி அளித்தேன். 15 நாட்களுக்குள் 75 மாணவர்களை பயிற்சிக்குச் சேர்த்தேன். பின்னர் நடந்ததெல்லாம் எல்லோருக்கும் தெரிந்து ஒன்று," என்றார் அவர். விரைவிலேயே மல்வானில் உள்ள தமது வீட்டில் செயின்ட் ஏஞ்சலோ கம்ப்யூட்டர் மையத்தைத் தொடங்கினார். லட்சக்கணக்கான ரூபாய்களை சம்பாதித்தார். புதிய மையங்களைத் திறந்தார். "எங்கள் மையங்களுக்குப் படிக்க வந்த மாணவர்கள் ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதை உணர்ந்தோம். ரயில் கட்டணத்துக்கு அப்பாற்பட்டு அவர்களால் ஏதும் கொடுக்க முடியவில்லை. ரயில்நிலையங்களுக்கு வெளியே எங்களது மையங்களைத் திறந்தோம். அனைத்து ரயில்நிலையங்களுக்கு அருகிலும் மையம் திறந்துவிட்டோம்," என்று சிரிக்கிறார். அவரது மையங்களில் லட்சக்கணக்கான மாணவர்களுக்குப் பயிற்சி அளித்ததாக அவர் குறிப்பிட்டார். தவிர அவர் மகாராஷ்டிராவில் மூத்த போலீஸ் அதிகாரிகள் உட்பட 15,000 காவல்துறையினருக்கு கம்ப்யூட்டர் பயிற்சி அளித்துள்ளார்.
தமது மனைவி சுக்ராவுடன் அதைட் |
அவரது கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனம் நீண்டகாலத்துக்கு நீடிக்கவில்லை. இதைத் தொடர்ந்து அவர் செயின்ட் ஏஞ்சலோவின் வி.என்.சி.டி வென்ஞ்ச்சர்ஸ் என்ற நிறுவனத்தை கடந்த 2016-ஆம் ஆண்டு தொடங்கினார். இப்போது நாட்டின் பல இடங்களில் அலங்காரமான வில்லாக்களைக் கட்டி வருகிறார். தன்னம்பிக்கை பேச்சாளராகவும் விளங்கும் இவர், ஒரு நகை பிராண்ட்டின் ஆன்லைன் வர்த்தகம் உள்ளிட்ட பல வணிக நிறுவனங்களின் பங்குகளையும் வைத்திருக்கிறார். சுக்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு சாஷா(16) என்ற மகளும், ஆரியன்ஜாய்(14) என்ற மகனும் உள்ளனர். வளர்ந்துவரும் தொழில்முனைவோர்களுக்கு அவர் கூறும் அறிவுரை; ”எப்போதுமே உங்கள் வாடிக்கையாளர்களுக்காக கவனம் செலுத்துங்கள், அவர்களுக்கு உண்மையாக இருங்கள். உங்கள் போட்டியாளர்களை விடவும் முன்னேறுவதற்கு, புதுமையாக இருக்க முயற்சி செய்யுங்கள். மிகவும் முக்கியமாக எப்போதுமே உங்கள் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்’’.
அதிகம் படித்தவை
-
அசத்தும் ஐஏஎஸ்!
மருத்துவரான அல்பி ஜான், குடிமைப்பணித் தேர்வு எழுதி முதன்முயற்சியிலேயே ஐ ஏ எஸ் ஆனவர். துணை ஆட்சியராக தமிழ்நாட்டில் பணியைத் தொடங்கிய அவர், திடக்கழிவு மேலாண்மை நிர்வகிப்பில் சிறந்து விளங்குகிறார். சென்னை மாநகரை மேம்படுத்தும் மியாவாகி காடுகளை உருவாக்கும் திட்டத்தையும் நிறைவேற்றுகிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.
-
மலைத்தேன் தந்த வாய்ப்பு!
மிதுன் ஸ்டீபன், ரம்யா சுந்தரம் இருவரும் பொறியியல் பட்டதாரிகள். பெங்களூரில் சந்தித்துக் கொண்ட அவர்கள் மலையேற்றம் மேற்கொள்ளும் ஆர்வத்தில் ஒன்றிணைந்து, பரஸ்பரம் வாழ்க்கை துணையாக இணைந்தனர். ஆண்டுக்கு 2 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் பாரம்பரியமான கலப்படமற்ற தேன் வர்த்தகத்திலும் கொடிகட்டிப் பறக்கின்றனர். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை
-
ஆதலால் காதல் செய்வீர்!
இளம்வயதில் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்ட ஒரு தம்பதி, இன்றைக்கு ஆண்டுக்கு ரூ.6 கோடி வருவாய் தரும் வகையிலான சங்கிலித்தொடர் ரெஸ்டாரெண்ட்களை வெற்றிகரமாக கட்டமைத்துள்ளனர். அவர்கள் செய்த முதலீடு எண்பதாயிரம் ரூபாய் மட்டுமே. சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை
-
வேகமும் வெற்றியும்
திருச்சி கைலாசபுரத்தில் பிறந்து வளர்ந்த அன்சார், சிறுவயதில் மெக்கானிக் ஷாப்புகளில் பொழுதைப் போக்குவது வழக்கம். இன்றைக்கு இந்தியாவின் முன்னணி ரைடிங் கியர்கள் உற்பத்தி நிறுவனத்தின் உரிமையாளராக உயர்ந்திருக்கிறார். ரூ.10 கோடி ஆண்டு வருவாய் ஈட்டும் வகையில் அவரது நிறுவனம் வளர்ந்திருக்கிறது. உஷா பிரசாத் எழுதும் கட்டுரை
-
உழைப்பால் உயர்ந்த நாயகன்
பெங்களூருவில் நடைபாதையில் துணிகள் விற்பவராகத் தொழிலைத் தொடங்கியவர் ராஜா. இன்றைக்கு 60 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்யும் நிறுவனங்களை நடத்தி வருகிறார். இத்தனைக்கும் பத்தாம் வகுப்புடன் படிப்பை பாதியில் விட்டவர் இவர். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை
-
கரும்பாய் இனிக்கும் இரும்பு!
ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த குன்வந்த் சிங் மோங்கியா, தொழிலில் பல பின்னடைவுகளைச் சந்தித்தார். எனினும் மீண்டும் தொழிலில் சாதனை படைத்து வெற்றி பெற்றிருக்கிறார். அவரது தொழிலுக்கு அவரே விளம்பரத் தூதரும் கூட. குர்விந்தர் சிங் எழுதும் கட்டுரை