உலகைச் சுற்றிவரும் தன் கனவை நனவாக்கும் தொழிலை கட்டி எழுப்பியவர்!
24-Jan-2025
By சோமா பானர்ஜி
மும்பை
புனேயில் தூங்கிவழியும் ஓர் இடத்தில் இரு அறைகள் கொண்ட வீட்டிலிருந்து இன்று நகரின் மிக கௌரவமான முகவரிக்கு மாறுதல். ஒரு எஸ்டிடி பூத், இரண்டு மேசைகளுடன் 150 சதுர அடியில் தொடங்கிய அலுவலகம் இன்று 600 பணியாட்கள் கொண்ட 140 கோடி வர்த்தகம் செய்யும் தொழிலகமாக மாறுதல்.
இந்த வளர்ச்சியின் பின்னணியில் இருப்பவர் அருண் காரத், 49. கடும் உழைப்பாளி, கனவுகாண்பவர் மற்றும் மிகச்சிறந்த தொழில்முனைபவர்.
|
சிறிய வாடகை அறையில் எஸ்டிடி பூத்துடன் தொடங்கிய அருண் காரத்தின் பன்முகத் தொழில்கள் இன்று 140 கோடி வர்த்தகம் புரிகின்றன |
அருண் இந்தியாவின் ஒன்பது முக்கிய நகரங்களிலும்- மும்பை, புனே, குர்காவோன், சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, சண்டிகார், அகமதாபாத், பரோடா- தாய்லாந்திலும் இயங்கும் விங்ஸ் ட்ராவல்ஸ் என்கிற கார் வாடகை நிறுவனத்தை உருவாக்கியவர். இதை அவர் மிக எளிமையான, சிறிய ஆரம்பத்திலிருந்து பெரிதாக மாற்றிக்காண்பித்தவர்.
நான்கு உறுப்பினர் கொண்ட மராட்டி குடும்பம் ஒன்றில் புனேவில் உள்ள காட்கி என்ற சாதாரண பகுதியில் பிறந்து வளர்ந்தவர் அருண். அவரது அப்பா சுகாதார கண்காணிப்பாளராக பணிபுரிந்து, பதவி உயர்வுடன் ஓய்வுபெற்றார். புனித ஜோசப் ஆண்கள் பள்ளியில் பத்தாம் வகுப்பு முடித்தபின்னர், தன் உறவினர் ஒருவர் நடத்திய செருப்புக் கடையில் நேரத்தைக் கழித்தார் அருண்.
படிப்பை விட தொழில் நடத்துவதே அவருக்குப் பிடித்திருந்தது. ஆனால் அவரது அம்மா படிப்பையே வலியுறுத்தினார்.
“அப்போது வேலைக்கான வாய்ப்புகள் நிறைய இல்லை. நான் நன்றாகப் படிப்பவனும் இல்லை. மருத்துவம் படித்த என் அண்ணாவின் கனமான புத்தகங்கள் அச்சுறுத்தின. நான் பொறியியல் படிக்குமாறு வற்புறுத்தப்பட்டேன்,” என்கிறார் அருண்.
அருண் புனே அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில் மூன்றாண்டு டிப்ளமோ படிப்பில் சேர்ந்தார்.
|
6000த்துக்கும் மேற்பட்ட கார்களை விங்ஸ் ட்ராவல்ஸ் இயக்குகிறது |
ஆனால் அவரது இதயம் வேறு இடத்தில் இருந்தது. தந்தையின் ராயல் என்பீல்ட் பைக்கில் சவாரி செய்தவாறே, உலகைச் சுற்றி வலம் வருவதைக் கனவு கண்டார். சம்பளத்துக்கு வாழ்க்கைப்பட விருப்பம் இல்லை.
புனேவில் எஸ்கேஎப் பால் பேரிங்ஸ் என்ற நிறுவனத்தில் மூன்று மாதம் வேலை பார்த்த பின்னர், டாடா குழுமத்தின் டெல்கோ நிறுவனத்தில் வேலை கிடைத்தது. 1991- 92ல் அவர் ஒன்பது மாதங்கள் வேலை பார்த்தார்.
இந்த மாதிரியான வேலையில் தொடர்ந்தால் மேலே வர வாழ்நாள் முழுவதும் உழைக்கவேண்டும் என்று புரிந்துகொண்டார். இந்த வேலையை விட்டுவிலகி சுதர்சன் கெமிக்கல்ஸ் என்ற நிறுவனத்தில் 1992-ல் சேர்ந்தார். அதன் புதிய கட்டுமானத்துக்கு பொருட்கள் வாங்கும் அலுவலர் வேலை. சம்பளம் 1,800 ரூபாய்கள்.
இங்குதான் சொந்தத் தொழில் ஆரம்பிக்கவேண்டும் என்ற கனவுக்கு விதை ஊன்றப்பட்டது. திரைப்படங்கள், விளம்பரங்கள் தொடர்பான தொழில் செய்யலாமா என்று யோசித்து கடைசியில் பயணங்கள் தொடர்பாக ஆரம்பிக்கலாம் என்று முடிவுசெய்தார்.
“உலகம் முழுக்க பயணம் செய்வது எனக்குப் பிடித்த விஷயம்,” என்கிறார் அருண். சுதர்சன் கெமிக்கல்ஸில் வேலை பார்த்தபோது உயர் அதிகாரிகள் அயல்நாடுகளுக்குச் செல்வதைக் கவனித்தார். அதிலிருந்துதான் பயணங்கள் தொடர்பான தொழிலுக்கு யோசனை தோன்றியது.
முதலில் ஒரு கடையை வாடகைக்கு எடுத்து எஸ்டிடி பூத் ஒன்றை ஆரம்பித்தார். நீண்டதூரம் பயணம் செய்யும் தனியார் பேருந்து நிறுவனம் ஒன்றுக்கு பயணச் சீட்டு பதிவு செய்யும் ஏஜெண்டாக ஆனார். அதற்கு தந்தையிடம் கடன்வாங்கி 2000 ரூபாய் டெபாசிட் செலுத்தினார்.
கமிஷன் அடிப்படையில் ரயில் பயணச்சீட்டுகளையும் விற்க ஆரம்பித்தார் (அப்போது ஆன்லைன் முன்பதிவுகள் இல்லை).
|
புக் மை கேப் நிறுவனத்தை இந்த ஆண்டு ஆரம்பத்தில் விங்ஸ் ட்ராவல்ஸ் வாங்கியது அதன் சேவைகளை 47 நகரங்களுக்கு விரிவாக்க உதவி செய்துள்ளது |
சுதர்சன் கெமிக்கல்ஸில் வேலை பார்த்துக்கொண்டே 1993-94ல் கார் வாடகைக்கு விடும் தொழிலை ஆரம்பித்தார். அவரது உயர் அதிகாரிகள் அவரது முதல் வாடிக்கையாளர்கள் ஆனார்கள். தொடக்கத்தில் வாடகைக்கு கார்களை விட ஒப்பந்த அடிப்படையில் சில கார்களை எடுத்திருந்தார். 96-97ல் தன் முதல் காரை வாங்கினார். அது பழைய பியட். தொடர்ந்து இரண்டாம் கை அம்பாசடர் ஒன்றை வாங்கினார். அதை அரசு அலுவலகங்களுக்கு வாடகைக்கு விட்டார்
“அந்த காலகட்டத்தில் என் நாட்கள் மிகமிக பிஸியானவை,” என்கிறார் அருண்.
அவர் காலை ஏழு முதல் அதிகாலை 1 மணிவரை மூன்று இடங்களில் வேலை பார்ப்பார். பகலில் சுதர்சன் கெமிக்கல்ஸ், அப்புறம் சில மணி நேரம் தங்கள் செருப்புக்கடை, பிறகு தன் நிறுவனத்தில் சில மணிநேரங்கள். அவர் சம்பாதித்த அனைத்தையும் தொழிலிலேயே முதலீடு செய்தார்.
பின்னர் அருண் தன் வளரும் தொழிலில் நிறைய நேரம் செலவழிக்க வேண்டும் என்றும் திறன்களை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்பதையும் உணர்ந்தார்.
அவர் வேலையை விட்டார். புனேவில் உள்ள நிர்வாகவியல், வளர்ச்சி மற்றும் ஆய்வு நிலையத்தில் தொழில் நிர்வாகத்தில் முதுகலைப் பட்டயப்படிப்பு படிக்க சேர்ந்தார். இங்கு சக மாணவியாக பாரதியைச் சந்தித்தார். அவரையே திருமணம் செய்துகொண்டார்.
அவருடைய முக்கியமான வாடிக்கையாளர்களில் ஒருவர் தங்கள் தொழிலாளர்களுக்கு வாகனச் சேவை புரியும் ஒப்பந்தம் அளித்தார். அது ஒரு திருப்புமுனை. அவர் இதற்காக புனேவில் இருந்து மும்பைக்கு இடம்பெயர்ந்தார்.
“ அந்த நாட்களில் அதாவது 2000-2001-ல் மும்பையில் தொழிலில் நிலைபெறுவது சிரமமாக இருந்தது,” நினைவு கூர்கிறார் அருண்.
“மூன்று கார்களை ஒதுக்கினேன். எங்கள் வாடிக்கையாளரின் அலுவலகத்துக்கு எதிரே சின்ன அறையை வாடகைக்கு எடுத்தோம். குளிக்கவும் ஓய்வெடுக்கவும் அது பயன்பட்டது.”
|
வாகனத்தின் மதிப்பில் 25 சதவீதம் ஆரம்பத்தில் செலுத்தினால் அந்த காரை சொந்தமாக்கிக்கொள்ளும் திட்டத்தை ஓட்டுநர்களுக்காக அருண் அறிமுகப்படுத்தினார் |
அடுத்த வாய்ப்பை ட்ராக்மெயில் என்ற பிபிஓ நிறுவனம் அளித்தது. பிபிஓ நிறுவனங்கள் வளர்ந்ததால் அவற்றுடனே விங்ஸ் ட்ராவல்ஸும் வளர்ந்து. 2001-ல் ஒரு கோடி ரூபாய்க்கு தொழில் செய்தது. 30 நிறுவனங்கள், 70-80 கார்கள்!
இன்னொரு திட்டமும் செயல்பாட்டில் உள்ளது. ஓட்டுநர் காரின் 20-25% தொகையைக் கொடுப்பார். நிதி அளிக்கும் வங்கிக்கு விங்ஸ் ட்ராவல்ஸ் கியாரண்டி தரும். மூன்று ஆண்டுகளில் ட்ரைவருக்கு கார் சொந்தமாகிவிடும்.
பெண்களே ஓட்டுநர்களாக இருக்கும் விங்ஸ் சக்தி, மாற்றுப்பாலினத்தவர் ஓட்டுநராக இருக்கும் விங்ஸ் ரெயின்போ ஆகிய புதிய சேவைகளும் உண்டு.
அலுவலக ஊழியர்களுக்கான வாகனச்சேவை என்ற நிலையில் இருந்து பொதுமக்கள் பயணத்துக்கான சேவைக்கு புனேவில் 2006-ல் ரேடியோ கேப் சர்வீஸை தொடங்கினார். இப்போதிருக்கும் ஊபர், ஓலாவெல்லாம் அப்போது இல்லை.
அதன் பின்னர் அருணின் நிறுவனம் பங்குதாரர் நிறுவனம் ஆகியது. தொழில் பெரும் வளர்ச்சி கண்டது. 2008, 2009-ல் 60-80 கோடியைத் தொட்டது. சுமார் 2500 இணைப்புக் கார்கள் மூலம் 70 நிறுவனங்கள் ஒப்பந்தத்தில் இருந்தன.
2014-15ல் இந்நிறுவனத்தின் பேலன்ஸ் ஷீட் 130 கோடி ரூபாயை மொத்தவர்த்தகமாகக் காட்டியது.
“இப்போது எங்கள் நிறுவனத்தில் 475 கார்கள் சொந்தமாக உள்ளன. டிரைவர்களே உரிமையாளர் ஆகும் திட்டத்தில் 800 கார்களும் ஒப்பந்த அடிப்படையில் 5500 கார்களும் உள்ளன,” என்கிறார் அருண்.
இந்த ஆண்டு ஆரம்பத்தில் புக்மைகேப் நிறுவனத்தை விங்ஸ் ட்ராவல்ஸ் வாங்கியது. தொடர்ந்து இந்தியாவின் 47 நகரங்களில் சேவையை விரிவு படுத்தி உள்ளது. யாங்கூன்(மியான்மர்), சாங் மாய்(தாய்லாந்து), வியட்நாம் போன்ற இடங்களிலும் சேவை உள்ளது. அனைத்து கார்களிலும் அவற்றின் இடத்தைக் கண்டறியும் நவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றின் உதவியுடன் விங்ஸ் ட்ராவல்ஸ் நிறுவனம் முதல் சர்வதேச டாக்ஸி ஆப் நிறுவனம் ஆகி உள்ளது.
|
மனைவி, மகன், மகளுடன் அருண் |
விங்ஸ் ட்ராவல்ஸ் நிறுவனம் அடுத்த வளர்ச்சிக்குத் தயாராக உள்ளது. 15 மில்லியன் டாலர்கள் அளவுக்கு தனியார் முதலீட்டைப் பெற்றுள்ளது. மொரிஷியஸ் மற்றும் அனைத்து ஆசியா பசிபிக் நாடுகளுக்கு சேவையை விரிவாக்க உள்ளது. அடுத்து இங்கிலாந்து, அமெரிக்காவுக்கு விரிவுபடுத்த உள்ளது.
ஆனால் இன்னும் தன் மனதில் அருண் என்பீல்ட் பைக்கில் பயணிப்பவராகவே நினைத்துக்கொள்கிறார். “நான் பணத்துக்காக வேலை பார்த்ததே இல்லை, ” என்கிற அருணுக்கு 21 வயதாகும் மகனும் 18 வயதாகும் மகளும் இருக்கிறார்கள்.
அதிகம் படித்தவை
-
அம்பிகாவின் நம்பிக்கை!
ஒரு முறை அல்ல, இரண்டு முறை அல்ல. பலமுறை நண்பர்களால் ஏமாற்றப்பட்டபோதும், மீண்டும் ஃபீனிக்ஸ் பறவை போல எழுந்து வந்தார் அம்பிகா பிள்ளை. இவர் டெல்லியில் புகழ் பெற்ற முடி திருத்தும் கலைஞர் மற்றும் ஒப்பனைக் கலைஞர். சோஃபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை
-
அதிர்ஷ்டத்தைக் கொடுத்த பன்றிகள்
மோஹர் சாகு, தம்முடைய 12 வயதில், ஒரு கூலி தொழிலாளியாக அவரது வாழ்க்கையைத் தொடங்கினார். இப்போது 51 வயதில் ஒரு பன்றி வளர்ப்புப் பண்ணையின் உரிமையாளராக ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் வருவாயைத் தொடும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார். ஜி.சிங் எழுதும் கட்டுரை!
-
வைரஸ் எதிர்ப்பாளர்
பத்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டவர், இன்று உலகளாவிய அளவில் மென்பொருள் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி ஆண்டுக்கு 350 கோடி வர்த்தகம் செய்கிறார். மாதம் ரூ400க்கு கால்குலேட்டர் பழுதுபார்க்கும் வேலையில் தொடங்கிய மனிதரின் வெற்றிக்கதை இது
-
ஷாம்பூ மனிதர்!
தமிழ்நாட்டின் ஒரு சிறிய நகரத்தில் சுதந்திரமாக சுற்றித்திரிந்த இளைஞர், 15 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் ஷாம்பூ தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார். அது கடின உழைப்பு, வித்தியாசமான விளம்பர உத்திகளால் இன்றைக்கு 1450 கோடி ரூபாய் ஈட்டும் நிறுவனமாகி இருக்கிறது. பி சி வினோஜ் குமார் எழுதும் கட்டுரை
-
தள்ளு வண்டியில் அள்ளும் லாபம்!
புதுடெல்லி அருகே குர்கானில் வசிக்கும் ஊர்வசியின் கணவர் ஒரு விபத்தில் காயம் அடைந்து படுத்த படுக்கையானார். எனவே, குடும்பத்தை வழி நடத்த தெருவோர உணவுக்கடையைத் தொடங்கி சாதித்திருக்கிறார் ஊர்வசி. சோபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை
-
வளர்ச்சியின் சக்கரங்கள்!
ஒரே ஒரு அம்பாசடர் டாக்ஸியோடு தொடங்கப்பட்டதுதான் பர்வீன் ட்ராவல்ஸ். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற உழைத்தார் அதன் உரிமையாளர் அப்சல். இன்று 400 கோடிக்கும் மேல் மதிப்புள்ளதாக வளர்ந்திருக்கும் அவரது வெற்றிக்கதையை எழுதுகிறார் பி சி வினோஜ் குமார்