Milky Mist

Thursday, 22 May 2025

ஐயாயிரம் ரூபாய் முதலீட்டில் ஆண்டுவருவாய் 15 கோடியைத் தரும் பிரியாணி கடை! சாஹா சகோதரர்களின் ‘ஆஹா’ வெற்றி!

22-May-2025 By பார்த்தோ பர்மன்
கொல்கத்தா

Posted 08 Jul 2021

காற்றில் கலந்து வருகிறது ஆவாதி பிரியாணியின் நறுமணம். அது நம்மை கொல்கத்தாவில் உள்ள பராக்பூரில் இருக்கும் தாதா பாவ்டி என்ற உணவகம். வாடிக்கையாளர்களால் நிரம்பி வழியும் அதற்குள் நம்மையும் இழுக்கிறது.

1980களில் இருந்து இந்த உணவகம் பிரியாணி பிரியர்களால் விரும்பப்பட்டு வருகிறது. அப்போது இளம் வயதில் இருந்த சஞ்சீவ் சாஹா, ராஜீவ் சாஹா இருவரும் வாயில் எச்சிலட் ஊர வைக்கும் இந்த மெனுவை தங்களது குடும்பத்துக்கு சொந்தமான 200 ச.அடி கொண்ட உணவகத்தில் அறிமுகம் செய்தனர். இந்த உணவகம் அவர்களின் தாத்தாவால் 1961 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாகும்.

சஞ்சீவ் சாஹா(வலது) மற்றும் ராஜீவ் சாஹா இருவரும் தாதா பாவ்டி உணவகத்தில் பிரியாணியை 1986ஆம் ஆண்டு அறிமுகம் செய்தனர். அவர்களது வணிகம் விரைவாக வளர்ச்சியடையத் தொடங்கியது.(புகைப்படங்கள்: சிறப்பு ஏற்பாடு, தி வீக் எண்ட் லீடர்)

 “ இந்த வணிகத்தில்  நாங்கள் ரூ.5000 முதலீடு செய்தோம். பிரியாணி தயாரிப்பதற்காக சில பாத்திரங்களை வாங்கினோம். பாசுமதி அரிசி மற்றும் இறைச்சியும் வாங்கினோம். ஆரம்ப கட்டத்தில் தினமும் மூன்று கிலோ மட்டன் பிரியாணி செய்தோம்,” என்கிறார் ராஜீவ்.

1986ஆம் ஆண்டு அந்த கடையில் பிரியாணியை வழங்கத் தொடங்கியதற்குப் பின்னால் தாதா பாவ்டியின் பயணத்தை பற்றிப் பேசுகிறோம்.   இன்றைக்கு அவர்களுக்கு மூன்று கடைகள் இருக்கின்றன. மதிய உணவு நேரத்தில் அனைத்து கடைகளும் நிரம்பி வழிகின்றன.  தினமும் 700 கிலோ பிரியாணி சமைக்கின்றனர்.  மட்டன்  பிரியாணி ரூ.260 எனவும், சிக்கன் பிரியாணி ரூ.200 எனவும் விற்கின்றனர். தாதா பாவ்டி ஆண்டு வணிகம் இப்போது ரூ.15 கோடியைத் தொட்டுள்ளது. ஆண்டுதோறும் வளர்ச்சியடைந்து வருகிறது.  

அவர்களது வாடிக்கையாளர்களில் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் சவ்ரவ் கங்குலி உள்ளிட்ட பிரபலங்களும் அடக்கம். சில ஆண்டுகளுக்கு முன்பு கொல்கத்தாவில் அமெரிக்க தூதரகத்தில் இருந்த அப்போதைய இந்தியாவுக்கான அமெரிக்காவின் தூதர் கிரேக் எல் ஹால் தனது குடும்பத்தினர், அமெரிக்க செனட்டர் ஜேமி டிராகன் ஆகியோருடன் அவர்கள் கடைக்கு வருகை தந்தார்.

தாதா பாவ்டியின் வெற்றியானது இரு சகோதரர்களின் கடின உழைப்பில் அடங்கியிருக்கிறது. அவர்கள் இந்த குடும்ப வணிகத்தை புதிய உயரத்துக்கு எடுத்துச் சென்றிருக்கின்றனர். அவர்களது தாத்தாவோ அல்லது தந்தையோ இதுவரை அடைந்திராத உயரத்துக்கு அதை எடுத்துச் சென்றனர். சஞ்சீவ் 12ஆம் வகுப்பு முடித்திருக்கிறார். அவரது சகோதரர் ராஜீவ் 10ஆம் வகுப்புக்கு பின்னர் படிக்கவில்லை. ஆனால், அவர்கள் தயாரிக்கும் பிரியாணி தரமாக இருப்பதை உறுதி செய்கின்றனர். தரமான  பிரியாணியை தயாரித்து, வாடிக்கையாளர்களுக்கு நல்ல முறையில் போதுமான அளவில் மீண்டும், மீண்டும் தேடி வரும் வகையில் வழங்குகின்றனர்.  

ஒவ்வொரு பிளேட் பிரியாணியும், 800 கிராம் பிரியாணி அரிசியும், 200 கிராம் மட்டன்(அல்லது சிக்கன்) இறைச்சியை கொண்டிருக்கிறது. மேலும் ஆவாதி பிரியாணிக்கே உரிய முறையில் ஒரு உருளைக்கிழங்கு அடங்கியதாக இருக்கிறது.
அப்போதைய கொல்கத்தா அமெரிக்க தூதர் கிரேக் எல் ஹால், தமது குடும்பத்தினருடன் தாதா பாவ்டி பிரியாணி கடையில் உணவு உண்கிறார்


தொடக்கத்தில் ரூ.11 க்கு ஒரு பிளேட் பிரியாணி விற்க தொடங்கியதாக ராஜீவ் கூறுகிறார். இறைச்சி மற்றும் இதர மூலப்பொருட்கள் விலை அடிக்கடி உயர்ந்ததால், உணவின் விலையையும் அதற்கேற்ப மாற்றி அமைத்தனர்.

பாரக்பூர் ரயில் நிலையம் அருகே கோஸ் பாரா சாலையில் முதல் உணவகத்தை அவர்களின் தாத்தா ராம்பிரசாத் 1961ஆம் ஆண்டு தொடங்கினார். பீகாரின் கிழக்கு சம்பாரான் மாவட்டத்தில் உள்ள மோதிஹரியில் இருந்து மனைவி மற்றும் தனது 6 குழந்தைகளுடன் அவர் கொல்கத்தாவுக்கு குடி பெயர்ந்தார்.   இந்த உணவகத்துக்கு பல ஆண்டுகளாக பெயர் ஏதும் வைக்கப்படவில்லை.

ஆரம்பத்தில் அவர்கள் உணவகத்தில் பருப்பு , ரொட்டி, காய்கறிகள்(சைவம்) உணவு வழங்கினர். 15 ஆண்டுகள் கழித்து ராம்பிரசாத்தின் மகன் தீரன் சஹா, உணவகத்தின் பொறுப்புகளை கையில் எடுத்தார். உணவகத்தில் மெனுக்களின் எண்ணிக்கையை அதிகரித்தார். அரிசி சாதம் முதல் மீன் கறி, சிக்கன் மற்றும் ஆட்டிறைச்சி ஆகியவற்றுடன் புதிய மெனுக்களை அறிமுகம் செய்தார்.   ஒரு கட்டத்தில் தீரன் மனைவி சந்தியா சாஹா அவருடன் இணைந்து செயல்பட்டார்.

இந்த தம்பதியால்தான் தாதா பாவ்டி என்ற பெயர் இந்த உணவகத்துக்குக் கிடைத்தது. (தாதா என்றால் சகோதரர் என்றும் பாவ்டி என்றால் மனைவி என்றும் வங்க மொழியில் பொருள் கொள்ளப்படுகிறது.) இதையடுத்து அவர்கள் உணவகம் தாதா பாவ்டி என்று அழைக்கப்பட்டது. தீரன் மற்றும் சந்தியா இருவரும் மேலும் இருவரைக்கொண்டு உணவகத்தை பராமரித்தனர். மற்றும் அவர்களின் குழந்தைகளான சஞ்ஜீவ், ராஜீவ் இருவரும் பள்ளி முடிந்து வந்த பின்னர் அவர்களுக்கு உதவிகள் செய்தனர்.

 “அப்போது சோதனையான காலகட்டங்கள்,” என சந்தியா நினைவு கூறுகிறார். “உணவின் சுவை மாறக்கூடாது என்பதால் நாங்கள் மசாலாக்களை கைகளால் உரல்களில் அரைத்துத் தயாரித்தோம். எங்களது இரண்டு மகன்களும் எங்களுக்கு உதவி செய்யத் தொடங்கினர்.”

 “உணவு பரிமாறுதல்,டேபிள்கள் துடைத்தல், பாத்திரங்கள் கழுவுதல் ஆகிய பணிகளை நாங்கள் செய்தோம். பெற்றோர்களுக்கு உதவுவது எங்களது கடமை என்று நாங்கள் கருதினோம். இது போன்ற வேலைகளை செய்யும்போது ஒருபோதும் அவமானமாக உணரவில்லை.” என்றார் ராஜீவ். அவர்கள் வாடிக்கையாளர்களுக்கு இரவு 11 மணி வரை பரிமாறுவார்கள். இது அவர்கள் படிப்பில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது என சஞ்சீவ் நினைவு கூர்கிறார்.

“அனைத்து கஷ்டங்களுக்கு இடையேயும் நாங்கள் எங்களது அடிப்படை கல்வியை கற்று முடித்தோம்,” என்கிறார். “நாங்கள் பாரக்பூரில் உள்ள டெபி பிரசாத் மேல் நிலைப் பள்ளிக்கு  சென்றோம். நான் 1987ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பு முடித்தேன். ஆனால், ராஜீவ் 10ஆம் வகுப்புக்கு மேல் படிக்கவில்லை.”

தாதா பாவ்டி பிரியாணி பல ஆண்டுகளாக அதே ருசியை தக்க வைத்துக்கொண்டிருக்கிறது. இதற்கு சலீம் கான் என்ற அவர்களது முக்கியமான சமையலர்தான் காரணம். தங்களது கடைகளில் பிரியாணியை அறிமுகம் செய்த தில் இருந்து இந்த சமையலர்தான் பொறுப்பாளராக இருந்து வருகிறார்.


தாதா பாவ்டி உணகம் முன்பு குவிந்திருக்கும் வாடிக்கையாளர்கள்


சலீம் கான் கண்காணிப்பில் தினமும் 15-20  பெரிய பாத்திரங்களில் பிரியாணி தயாரிக்கப்படுகிறது. மட்டன், சிக்கன் பிரியாணி மற்றும் வெஜிடபிள் பிரியாணி ஆகியவற்றை தயாரிக்கின்றனர். மேலும் பல இந்திய சீன, முகல் உணவு வகைகளையும் தயாரிக்கின்றனர். தந்தூரி உணவுகளும் அவர்களது கடைகளில் கிடைக்கிறது. 

  சாஹா சகோதரர்கள் பாரக்பூரில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாவது உணவகத்தைத் தொடங்கினர். 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் சோத்பூரில் உணவகத்தை தொடங்கினர். அவர்களிடம் 35 பேர் பணியாற்றுகின்றனர்.

அவர்களின் உணவகத்தில் இருந்து 10  நிமிட தூரத்தில் உள்ள பாரக்பூரில் ஷியாமஸ்ரீ பாலியில் குடியிருக்கும் அவர்கள், இருவரும் இன்று மகிழ்ச்சியான, வசதியான மற்றும் மனநிறைவான வாழ்க்கை வாழ்கின்றனர்.

சஞ்ஜீவ் பயணம் செய்வதில் விருப்பம் உள்ளவர். அனைத்து ஐரோப்பிய நாடுகள், தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். ராஜீவ் செல்லப்பிராணிகள் மீது ஆர்வம் கொண்டவர். நாய், பல்வேறு வகை பறவைகள், கிளி ஆகியவற்றுடன் வீட்டில் ஒரு அற்புதமான மீன் காட்சியகமும் வைத்திருக்கின்றனர்.  

 இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. சஞ்ஜீவுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். ராஜீவ்வுக்கு ஒரு மகள் உள்ளார்.  

 
 
 
 
 

அதிகம் படித்தவை

  • success through Kitchen

    பணம் சமைக்கும் குக்கர்!

    வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்த இரு இளைஞர்கள் சென்னையில் பொறியியல் படிக்கும்போது நண்பர்களாகினர். கொரோனா ஊரடங்கின்போது வேலை இல்லை. எனவே  சொந்தமாக தொழிலைத் தொடங்கி இ-வணிகத்தில் லாபம் ஈட்டி எட்டுமாதத்துக்குள் 67 லட்சம் ரூபாய் ஆண்டு வருவாய் பெற்றிருக்கின்றனர். பார்த்தோ பர்மன் எழுதும் கட்டுரை

  • This is out of the box thinking!

    மாற்றி யோசித்தவர்!

    ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த 40 வயது இளைஞரான சந்தோஷ், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமால் ஈர்க்கப்பட்டார். அதன் விளைவாக, பால் பண்ணையைத் தொடங்கி, பழங்குடியினத்தைச் சேர்ந்த 100 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளார். குருவிந்தர் சிங் எழுதும் கட்டுரை.

  • வறுமையில் இருந்து செழிப்புக்கு

    இப்போது 3600 கோடி ரூபாய் மதிப்புள்ளதாக இருக்கும் தைரோகேர் நிறுவனத்தை உருவாக்கியவரான ஆரோக்கியசாமி வேலுமணி, ஒரு கையில் சிலேட், மறு கையில் மதிய உணவு சாப்பிட தட்டு- ஆகியவற்றுடன் அரசுப்பள்ளிக்குச் சென்றவர். அவரது வெற்றிக்கதையை விளக்குகிறார் பி சி வினோஜ் குமார்

  • Styling her way  to the top

    அம்பிகாவின் நம்பிக்கை!

    ஒரு முறை அல்ல, இரண்டு முறை அல்ல. பலமுறை நண்பர்களால் ஏமாற்றப்பட்டபோதும், மீண்டும் ஃபீனிக்ஸ் பறவை போல எழுந்து வந்தார் அம்பிகா பிள்ளை. இவர் டெல்லியில் புகழ் பெற்ற முடி திருத்தும் கலைஞர் மற்றும் ஒப்பனைக் கலைஞர். சோஃபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை

  • Fabric of success

    சேலையில் வீடு கட்டுபவர்!

    ராஜஸ்தான் மாநிலத்தின் பாரம்பர்யமிக்க துணி வகையை சர்வதேச சந்தை வரை எடுத்துச்சென்று பெருமிதம் சேர்த்ததுடன், தமது வணிகத்திலும் வெற்றி பெற்றிருக்கிறார் அஞ்சலி அகர்வால். நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அவர் பொறியியல் பட்டம் முடித்த பின்னர் ஒரு சில இடங்களில்  வேலை பார்த்தபின், சொந்த நிறுவனத்தைத் தொடங்கி நடத்துகிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.

  • used furniture

    பழையதில் பிறந்த புதிய ஐடியா!

    டெல்லியில் பிறந்து வளர்ந்த சகோதரர்களான கவுரவ் கக்கர், அங்குர் கக்கர் இருவரும் பெருநிறுவனங்களில் அதிக சம்பளம் தரும் பணிகளில் இருந்தனர். வெளிநாட்டு தூதர்கள் நம் நாட்டில் இருந்து வெளியேறும் போது விற்பனை செய்யும் பழைய மரச்சாமான்களை வாங்கி விற்கும்  தொழில் வாய்ப்பை பயன்படுத்தி இந்த சகோதரர்களும் முன்னேறினர். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை