உடலே உன்னை ஆராதிக்கிறேன்!- அழகிப்போட்டியில் வென்ற பெண்ணின் அதிரடி பிசினெஸ்!
07-Jun-2023
By சோபியா டேனிஷ் கான்
புதுடெல்லி
2017-ம் ஆண்டு தீக்ஷா சாப்ராவின் தலையில் திருமதி. இந்தியா எர்த் பட்டத்துக்கான முடிசூட்டப்பட்டது. தீக்ஷாவின் முகம் மகிழ்ச்சியில் ஜொலித்தது. சொன்னால் நம்பமாட்டீர்கள்! இந்த அழகி போட்டியில் கலந்துகொள்வதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பெண்ணின் எடை 90 கிலோ! குண்டான உடலைப் போராடிக் குறைத்தவர் இவர். இந்த அனுபவத்தையே முதலீடாகக் கொண்டு ஒரு வெற்றிகரமான தொழில் நிறுவனத்தை அவர் தொடங்கினார்.
தீக்ஷா சாப்ரா மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூரில் ஒரு நடுத்தரக்குடும்பத்தைச் சேர்ந்தவர். இப்போது பிட்னெஸ் செண்டர் நடத்துகிறார். கட்டுடலைப் பேணுவது எப்படி என்ற ஆலோசகராக மாறி இருக்கிறார். 300-க்கும் மேற்பட்டோர் இவர் ஆலோசனையின் பேரில் இளைத்துக் கட்டுடலைப் பெற்றுள்ளனர். இதன் மூலம் கடந்த ஆண்டு 15 லட்சம் ரூபாயை ஈட்டியிருக்கிறார். தொழில்நுட்பத்தைக் கொண்டு, குறிப்பாக சமூக வலைத்தளங்களைக் கொண்டு இந்த வெற்றியை அவர் பெற்றிருக்கிறார்.
|
எடைகுறைப்பு ஆலோசனை தொழில் முனைவோரான தீக்ஷா சாப்ரா, 300 பேருக்கு மேல் எடையை குறைத்து கட்டுடல் பெற உதவி இருக்கிறார். (புகைப்படங்கள்: விநாயக் பரத்வாஜ்)
|
33 வயதான இந்தப் பெண்ணுக்கு உண்மையாகவே இது பெரிய சாதனை! உண்மையைச் சொல்ல வேண்டுமெனில், 2014-ம் ஆண்டு , பாலிசிஸ்டிக் கருப்பை நோய் மற்றும் தைராய்டு பிரச்னைகளால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால், அவரது உடல் எடையானது 78 கிலோவில் இருந்து மளமளவென அதிகரித்து 90 கிலோ ஆனது. ஆனால், தன் மன உறுதிகாரணமாக, தாம் இழந்ததை விடவும் விரைவாக தம் கட்டுடலை திரும்பப் பெற்றார்.
ஜபல்பூரில் அவருடைய தாய் பள்ளி ஒன்றின் ஆசிரியை. அவருடைய தந்தை மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். “என் தாய்தான் எப்போதுமே எனக்கு முன்னுதாரணமாக இருந்தார்,” என்று நினைவு கூறுகிறார் அவர்.
“நான் ஸ்கவுட் மற்றும் கைட் மற்றும் என்.சி.சி ஆகியவற்றிலும், நாடகங்களில் நடிப்பதிலும் பங்கேற்றேன். கேந்திர வித்யாலாவில் என்னுடைய பள்ளி இறுதி வகுப்பை முடித்தேன். செயின்ட் அலோசியஸில் பி.எஸ்.சி படித்தேன். பின்னர் ஐதராபாத்தில் உள்ள ஐசிஎஃப்ஐஏ-வில் எம்.பி.ஏ மனித வளத்துறை படிக்கச் சென்றேன். 2008 பட்ட மேற்படிப்பு முடித்த உடன், புனேவில் உள்ள எசிலர்க் என்ற பி.பி.ஓ-வில் பணியாற்றினேன். மனித வளத்துறை பிரிவில், ஆண்டுக்கு 2.4 லட்சம் ரூபாய் சம்பளம் பெற்றேன். “
இப்படித்தான் சாப்ராவின் ஆரம்பகட்ட வாழ்க்கை, இந்திய நடுத்தரக் குடும்பங்களின் வழக்கமான நடைமுறைகளைக் கொண்டிருந்தது. 2016-ம் ஆண்டு உடல் எடையைக் குறைப்பதற்காக தம் உடலுடன் போராடத் தீர்மானித்ததன் விளைவாக ஒரு சூப்பர் பெண்மணியாக அவர் மாறினார்.
|
தீக்ஷாவின் முந்தைய புகைப்படமும், பின்னர் எடுத்த புகைப்படமும், அவரது கட்டுடலைப் பேணும் பயணத்தின் உதாரணங்களாக இருக்கின்றன.
|
“2016-ம் ஆண்டு முழு மூச்சுடன் உடல் எடையைக் குறைப்பதற்கான பயிற்சியில் ஈடுபட்டேன். எனவே, கட்டுடலைப் பெற்றேன். எனது உடல் எடை 61 கிலோவாக குறைந்தது. 2017-ம் ஆண்டு நான் திருமதி இந்தியா அழகிப் போட்டியில் பங்கேற்றேன். திருமதி இந்தியா எர்த் போட்டியில் இரண்டாவது இடம் பெற்றேன். தவிர, கட்டுடல் பிரிவில் முதலிடம் பிடித்தேன்.” எனும் சாப்ரா, வெற்றிகரமான தமது கட்டுடலை தக்கவைத்துக் கொண்டதன் பயணத்தைப்பற்றிக் குறிப்பிடுகிறார்.
“என்னுடைய கட்டுடல் பயிற்சி அனுபவப் பயணத்தை என்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டேன். அதைப் பார்த்து விட்டு, மக்கள் என்னைப் பின்தொடர ஆரம்பித்தனர். உடல் எடையைக் குறைப்பதற்கு அறிவுரை வழங்கும்படி கேட்டனர். திருமதி.இந்தியா பட்டம், தீக்ஷா சாப்ரா ஃபிட்னஸ் கன்சல்டண்சி என்ற என்னுடைய சொந்த நிறுவனத்தைத் தொடங்குவதற்கு அடித்தளமாக இருந்தது. “
இது தவிர அவர், நுண்ணூட்ட சத்து மற்றும் உடற்பயிற்சியாளர் பயிற்சி எனும் சான்றிதழ் பயிற்சிகளில் சேர்ந்தார். 2018-ம் ஆண்டு ஜனவரியில் அவரது இணையதளத்தைத் தொடங்கினார். உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் அவருடன் இணைந்தனர்.
“இந்த இணையதளத்தைத் தொடங்குவதற்காக கொஞ்சம் பணத்தை முதலீடு செய்தேன். நிரந்தர ஊழியர்களை நியமிக்க விரும்பவில்லை என்பதால், ஃப்ரீலேன்ஸ் குழுவை வைத்து அதனை உருவாக்கினேன். இந்த முறை, உலகம் முழுவதும் உள்ள மக்களுடன் எனக்கு ஏற்ற நேரத்தில் பணியாற்ற உதவுகிறது,” என்று தமது நிறுவனத்தைப் பற்றி விவரிக்கிறார் சாப்ரா.
2009-ம் ஆண்டு டிசம்பரில் ராணுவ கர்னல் மனு சர்மா உடன் அவருக்குத் திருமணம் நடந்தது. பின்னர் ஜாக்ரே என்ற மகன் பிறந்தான். திருமணத்தால்தான் சாப்ராவின் வாழ்வில் திருப்புமுனை வந்தது. “என் கணவருக்கு வடகிழக்கு மாநிலத்தில் போஸ்டிங் போட்டிருந்தனர். எனவே என்னுடைய வேலையை விட்டு விட்டு, அவருடன் சென்றேன்,” என்கிறார் சாப்ரா.
|
2017ம் ஆண்டு திருமதி இந்தியா அழகிப் போட்டியில் பங்கேற்றபோது, தீக்ஷாவின் உடல் எடை 61 கிலோவாக இருந்தது.
|
“2010-ம் ஆண்டு எனக்கு மகன் பிறந்தான். அப்போது என்னுடைய நேரம் முழுவதையும் அவனுக்கே செலவழித்தேன். என் கணவர் ராஜஸ்தானில் பணி புரிந்தபோது, ராணுவப் பள்ளி ஒன்றில் நான் ஆசிரியையாகப் பணியாற்றினேன். அடுத்ததாக அவர் டெல்லிக்கு பணிமாற்றப்பட்டார். அப்போது தெற்கு டெல்லியில் உள்ள மேப்பில் பியர் என்ற சர்வதேச ப்ரீ ஸ்கூலில் 2014-ம் ஆண்டு நிர்வாகப் பணியில் பணியாற்றினேன். அங்கே நான் ஒரு ஆண்டு பணியாற்றினேன். வாழ்க்கை வழக்கம்போல சுழன்று கொண்டிருக்கிறது என்று நான் கருதியபோது, எங்கள் வாழ்க்கையில் புயல் அடித்தது.”
“ என்னுடைய மாமியாருக்கு, கேன்சர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வீடு, நோய்வாய்பட்ட மாமியாருக்கு உதவி என்று என்னுடைய வேலையை சமன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போது எனக்கு பாலிசிஸ்டிக் கருப்பை நோய் மற்றும் தைராய்டு பிரச்னை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 2014-ம் ஆண்டு என்னுடைய மாமியார் இறந்த ஆறுமாதங்கள் கழித்து, நான் என் வேலையை விட்டு விலகினேன். பின்னர் 2016-ம் ஆண்டு என் கணவருக்கு கேங்க்டாக் பகுதிக்கு மாறுதல் கிடைத்தது,” என்று தமது வாழ்க்கையில் நடந்த திருப்பங்களைப் பற்றிக் கூறினார்.
தமது உறவினர்கள், நண்பர்கள், முகம் தெரியாதவர்களுக்குக் கூட சாப்ரா நன்றி சொல்கிறார். தம் உடல் எடையைக் குறைக்கும் பயணத்தில் அடி எடுத்து வைக்க ஊக்கமளித்தவர்கள் அவர்கள்தான் என்று சொல்கிறார். ஒரு முறை மால் ஒன்றில் முகம் அறியாத நபர் ஒருவர், அவரைப் பார்த்து ‘நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா?’ என்று கேட்டார். இன்னொரு முறை, தூரத்து உறவினரான அத்தை ஒருவர், ‘உன்னுடைய கணவரை விட நீ வயது ஆன தோற்றத்துடன் இருக்கிறாய்’ என்று சொன்னார்.
“அவருக்கு என்னுடைய தைராய்டு பிரச்னை குறித்தோ, பாலிசிஸ்டிக் கருப்பை நோய் குறித்தோ தெரியாது. ஆனால் அவர் சொன்னது என் மனதை மிகவும் பாதித்தது. எனவே, எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் என் உடல் எடையைக் குறைப்பது என்று முடிவு செய்தேன்,” என்கிறார் அவர்.
அப்போது, கல்லூரியில் படித்த நண்பர்கள் மீண்டும் சந்தித்துக்கொள்ளும் ஒரு நிகழ்வு நடந்தது. சிங்கப்பூரில் இருந்து வந்த சாப்ராவின் தோழி ஒருவர் சாப்ராவை பார்த்து விட்டு அதிர்ச்சியடைந்து, ‘முழுமையான ஒரு ஆண்டி போல இருக்கிறாய்’ என்று சொன்னதுடன், கல்லூரியில் படிக்கும்போது, விளையாட்டு, நாடகம் என்று எவ்வளவு சுறுசுறுப்பாக இருந்தாய் என்றும் சொன்னார்.
“என்னுடைய திட்டங்கள் செயலுக்கு வர அவர்தான் என்னை ஊக்கப்படுத்தினார்,” என்று சாப்ரா நினைவு கூறுகிறார்.
எப்படி அவர் தொடங்கினார்? “டயட் குறித்து எனக்கு எந்த ஒரு யோசனையும் இல்லை. எனவே, நான் நடைப்பயிற்சி செய்தேன். ஆரம்பத்தில் 2 கி.மீ வரை கூட நடந்தேன். அப்போது மூச்சுவாங்கியதால் பிரச்னை ஏற்பட்டது. இன்னும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறேன். நான் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்காக என் கணவர் எனக்கு டிரட்மில் வாங்கிக் கொடுத்திருக்கிறார். அதில் ஒரு நாளைக்கு 3-4 முறைகள் நடைபயிற்சி செய்கிறேன்,” என நல்ல உடல் நலத்துக்கான தமது ஆரம்ப கட்டப்பயணம் குறித்து நினைவு கூறுகிறார்.
|
சரியானவற்றை உண்டால், எடை குறையும் என்ற கொள்கை மீது தீக்ஷா நம்பிக்கை கொண்டிருக்கிறார்.
|
“பட்டினி கிடந்தேன். சூப், சலாட் மட்டுமே சாப்பிட்டேன். அப்போது 18 கிலோ எடை குறைந்தேன். ஆனால், பார்ப்பதற்கு உடல் நலம் இல்லாதவள் போல இருந்தேன். என்னுடைய பார்வையில் குறைபாடு ஏற்பட்டது. பாலிசிஸ்டிக் கருப்பை நோய் மற்றும் தைராய்டு பிரச்னையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. வேதனையின் விளிம்பில் எல்லாவற்றையும் விட்டுவிட்டேன். என்னவெல்லாம் விரும்பினேனோ அதையெல்லாம் மீண்டும் சாப்பிட ஆரம்பித்தேன்.”
எதிர்பாராதவிதமாக, சரியான நுண்ணூட்ட சத்து எது என்பது குறித்து ஆராய்ச்சி செய்தார். எங்கே தமக்கு தவறு நடந்தது என்பதை கண்டுபிடித்தார்.
“இன்றைக்கு, ‘ஒருவர் சரியான உணவை சாப்பிட்டால், எடையை குறைக்க முடியும்’ என்று நான் பிறருக்கு அறிவுரை கூறுகிறேன். நீடித்த டயட் மேற்கொண்டால் எடையைக் குறைக்க முடியும், ஆரோக்கியமான உடலையும் தக்க வைக்க முடியும், மிளிரும் தோல் அழகைப் பெற முடியும். ரிசல்ட் கிடைக்க தாமதம் ஆகலாம் அல்லது விரைவாக கிடைக்கலாம். ஆனால், சாதகமான ரிசல்ட் உறுதி,” என்று கண்கள் மிளிர அவர் கூறுகிறார்.
சாப்ரா மூன்று பயிற்சிகளை வழங்குகிறார். 8000 ரூபாய் முதல் 25,000 ரூபாய் வரை பயிற்சி கட்டணம் இருக்கிறது. முதல் பயிற்சி, மூன்று வார பயிற்சி. குண்டாக உள்ளவர்கள், சரியான சாப்பிடும் முறையை கையாண்டால், 3-4 கிலோ வரை எடையை குறைக்க முடியும்.
இரண்டாவது பயிற்சி மூன்று மாதங்கள் கொண்டது. டயட் உடன், உடற்பயிற்சியும் கொண்டது. உடலை சிரமப்படுத்தாமல், உடலைக்குறைப்பதற்கு ஏற்ற சரியான பாதையில் அவர்களை அழைத்துச் செல்லும் பயிற்சி இது.
‘என்னை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளுதல்’ என்ற பயிற்சி நான்கு மாதங்களைக் கொண்டது. இது தாய்ப்பால் கொடுக்கும் தாய்களுக்கானது. அவர்களுக்கு கலோரிகள் தேவை. அதே நேரத்தில் அதிக உடல் எடையை குறைக்கவும் விரும்புகின்றனர்.
“எனக்கு பொதுவாக மாதம் தோறும் 40-50 வாடிக்கையாளர்கள் கிடைக்கின்றனர். பிறர் என்னைப்பற்றி சொல்வதன் மூலம் பலர் வருகின்றனர். சமூக வலைதளம் மூலமாகவும், டெகத்லான் (விளையாட்டு நிறுவனம்)முன்னெடுப்பு நிகழ்வுகளின் மூலமாகவும் தொடர்பு கொள்கின்றனர்,” என்று தமது வாடிக்கையாளர்கள் பற்றிக் கூறுகிறார்.
|
சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ் ஆக இருக்கிறார் தீக்ஷா. இன்ஸ்டாகிராமில், அவரை 10,90,00 பேர் பின்தொடர்கின்றனர்.
|
தொடர்ச்சியாக, அவரது வாடிக்கையாளர்களிடம் ஏற்படும் உடல் நலன் மற்றும் உடல் எடை குறித்த முன்னேற்றங்களை கண்காணிக்கிறார். “ஒவ்வொரு வாடிக்கையாளரும், தினமும் தகவல்களைப் பரிமாறிக் கொள்கின்றனர். நான் அதை சரிபார்க்கிறேன். படங்கள், எடைக்குறைப்பு,மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளுதல், தகவல் அனுப்புதல் என்று தொடர்ந்து குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை வாடிக்கையாளர்களை ஆய்வு செய்கிறோம். ஃப்ரீலேன்ஸ் சோஷியல் மீடியா மேனேஜர்கள் குழு மூலம், நான் தனியாக இதனை முன்னெடுத்துச் செல்கிறேன். என்னுடைய பெயரில், பொதுமக்கள் தொடர்பு, யூடியூப் சேனல் ஆகியவையும் தனிக்குழுக்களால் முன்னெடுக்கப்படுகின்றன.”
அவரை இன்ஸ்டாகிராமில் 10,90,000 பேர் பின்தொடர்கின்றனர். “டெகத்லான் ஸ்போர்ட்ஸ் இந்தியா, ஆப்டிமம் நியூட்ரீசியன் இந்தியா என்ற துணை பிராண்ட் ஒன்றுடனும் இணைந்து நான் பணியாற்றுகிறேன்,” என்று பிரகடனப்படுத்துகிறார் இந்த பிட்னஸ் குரு. அவர் சமீபத்தில் டெல்லியில் டெட் டாக்ஸ்-இல் (Ted Talks) பங்கேற்றவர், ‘சிறிய விஷயங்களை பெரிதாகச் செய்தல்’ என்ற தலைப்பிலும், கோவாவில், வெற்றிகரமான பணிக்கு ‘சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துதல்’ என்ற தலைப்பிலும் பேசினார்.
“ஒவ்வொன்றுக்கும் நேரம் ஒதுக்கி நிர்வகிக்கிறேன். என் மகன் பள்ளிக்கு(9வயது மகன்) சென்றிருக்கும்போதோ அல்லது தூங்கும்போதோ நான் பணியாற்றுகிறேன். இது, என் குடும்பத்துடன் அதிக நேரம் செலவழிப்பதற்கு வசதியாக இருக்கிறது. உலகத்தில் எங்கிருந்தும் பணியாற்றுவதற்கும் இது என்னை அனுமதிக்கிறது,” என்று முடிக்கிறார் அவர்.
அதிகம் படித்தவை
-
கனவைப் பின்தொடர்ந்தவர்!
சிறுவயதில் இருந்தே தனியாக ஏதேனும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்த இளம் பெண் ஆஸ்தா. படிப்பு முடித்த பின்னர் நிகழ்ச்சிகள் நடத்தித்தரும் நிறுவனத்தைத் தொடங்கினார். நல்ல சம்பளம் தரும் வேலையை விட்டு விலகி அவர் ஆரம்பித்த இந்த முயற்சிக்கு அவரது சகோதரரும் கை கொடுக்க, வெற்றியை தொட்டார் ஆஸ்தா. குருவிந்தர் சிங் எழுதும் கட்டுரை.
-
வெற்றியின் சுவை
கொல்கத்தாவில் ஒரு ஐஸ்கிரீம் பிராண்ட் வீழ்ச்சி அடைந்து, உரிமையாளரின் குடும்பம் 30 லட்சரூபாய் கடனில் தத்தளித்தது. 22 வயதே ஆன மூத்தமகன் களமிறங்கி வெற்றி பெற்ற கதை இது. இயற்கையான பழங்களில் இருந்து இனிப்பான ஐஸ்கிரீம் பிறந்தது. கட்டுரை: ஜி சிங்
-
சவாலே சமாளி!
கல்லூரியில் நண்பர்கள் இல்லை என்ற சவாலை சந்தித்தவர் விக்ரம் மேத்தா. இப்போது நிகழ்வுகளை மேலாண்மை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். திருமண விழாக்களை ஒருங்கிணைப்பதில் பல சவால்களை சந்தித்து வெற்றிகரமான முன்னேறி வருகிறார். சோபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை.
-
சேவையில் லட்சாதிபதியான ஸ்ருதி
மனித வாழ்க்கையின் முடிவில்தான் ஸ்ருதியின் வணிகம் தொடங்குகிறது. இளம் மென்பொறியாளராக இருந்த ஸ்ருதி, தனியாகத் தொழில் செய்வதற்கு வித்தியாசமான இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். ஜி.சிங் எழுதும் கட்டுரை
-
தேனாய் இனிக்கும் வெற்றி
யாருடைய வழிகாட்டுதலும் இன்றி, சுயமாக தேன் விற்பனையில் இறங்கிய சாயா, இன்றைக்கு ஆண்டுக்கு பத்துக்கோடி வருவாய் ஈட்டும் பிராண்டை உருவாக்கி இருக்கிறார். சர்வதேச தேன் பிராண்ட்டுகளுக்கு மத்தியில் அவரது நெக்டார் ஃபிரஷ் தேனுக்கு பெரும் வரவேற்பு இருக்கிறது. பிரீத்தி நாகராஜ் எழுதும் கட்டுரை
-
வைரஸ் எதிர்ப்பாளர்
பத்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டவர், இன்று உலகளாவிய அளவில் மென்பொருள் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி ஆண்டுக்கு 350 கோடி வர்த்தகம் செய்கிறார். மாதம் ரூ400க்கு கால்குலேட்டர் பழுதுபார்க்கும் வேலையில் தொடங்கிய மனிதரின் வெற்றிக்கதை இது