ஐஐஎம் முதல் மதிப்பெண் மாணவரின் ரூ 5 கோடி காய்கறித் தொழில்!
16-Sep-2024
By ஜி சிங்
பாட்னா
பத்து ஆண்டுகளுக்கு முன்னால் கௌஷ்லேந்திராவிடம் இருந்தது ஒரு சின்ன அறையும் வெல்லவேண்டும் என்ற கனவும் மட்டும்தான்.
இப்போது கௌசல்யா அறக்கட்டளை என்ற லாபநோக்கம் இல்லாத அவரது அமைப்பு பீஹாரில் உள்ள 20,000 விவசாயிகளுக்கு போட்டி நிறைந்த சந்தையில் இயங்குவதற்கான திறன்களைச் சொல்லித் தருகிறது. அவரது லாபநோக்கில் இயங்கும் இன்னொரு நிறுவனம் ஐந்து கோடி ரூபாய் அளவுக்கு காய்கறி விற்பனை செய்கிறது.
|
ஐஐஎம் அகமதாபாத்தில் படித்த கௌஷ்லேந்திரா வகுப்பில் முதலாவதாக வந்தவர். அவர் கௌசல்யா அறக்கட்டளை (லாபநோக்கு அற்றது), நிட்ஸ் கிரீன் பிரைவேட் லிமிடெட் ஆகிய இரு நிறுவனங்களை 2008ல் தொடங்கினார்
|
கௌஷ்லேந்திரா வித்தியாசமானவர். அவர் சாதி, மத வேறுபாடுகளை எதிர்க்கும் முகமாக தன் கடைசிப்பெயரைக் கைவிட்டுவிட்டார். அவர் பெயருக்கு இப்போது பின்னொட்டு இல்லை!
புகழ்பெற்ற அகமதாபாத் ஐஐஎம்மில் படித்தாலும் தன் சகமாணவர்களைப் போல் அவர் பன்னாட்டு நிறுவனங்களுக்குப் பணிபுரியவில்லை. வெளிநாடு செல்லவில்லை!
1981, 14 ஜனவரியில் பீஹாரில் உள்ள நாளந்தா மாவட்டத்தில் முகமதுபூர் கிராமத்தில் பிறந்தவர் இவர். மூன்று பிள்ளைகளில் கடைக்குட்டி. பெற்றோர் இருவரும் சாதாரண அரசுப்பணியில் இருந்தனர். 5 ஆம் வகுப்புவரை இந்தி வழியில் அரசுப்பள்ளியில் கற்றார்.
பின்னர் கிராமத்தில் இருந்து 50 கிமீ தள்ளி இருந்த ரேவாரில் உள்ள ஜவஹர் நவதோயா வித்யாலயாவில் அவரது பெற்றோர் சேர்த்தனர். அவரது மாறுதலுக்கு அப்பள்ளியில் விதை போடப்பட்டது.
“நுழைவுத் தேர்வு வைத்துத்தான் அந்த பள்ளியில் சேர்ப்பார்கள். தேர்வானவர்களுக்கு இலவசக்கல்வி. உணவு, தங்குமிடம் ஆகியவை மத்திய அரசால் வழங்கப்படும்,” சொல்கிறார் கௌஷ்லேந்திரா.
ஏழையாக இருந்தாலும் திறமை இருந்தால் போதும். சில மாணவர்கள் மிகவும் வறுமையான பின்னணியில் இருந்து வந்திருப்பார்கள். விடுமுறைகளில் கூட வீட்டுக்குப் போகமாட்டார்கள். ஏனெனில் வீட்டில் உணவு கிடைக்காத அளவுக்கு வறுமை!
“இதைக் கண்டு நான் வருந்தினேன். சமூகம் அவர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கித் தரவில்லை எனத் தோன்றியது,” அவர் சொல்கிறார்.
|
பீஹாரில் 20,000 விவசாயிகளுக்கு கௌசல்யா அறக்கட்டளை உதவுகிறது
|
அந்த பள்ளியில் இருந்து 1996-ல் வெளியே வந்த அவருக்கு இந்த வேறுபாட்டைக்களையவேண்டும் என்று தோன்றியது.
பாட்னாவில் அறிவியல் கல்லூரியில் மேனிலைப்பள்ளிப் படிப்பு முடித்தபின் கௌஷ்லேந்திரா பிடெக் விவசாயப் பொறியியல் படித்தார். குஜராத்தில் உள்ள ஜுனாகாத்தில் இருந்த இந்தியன் வேளாண்மை ஆராய்ச்சிக் கழக கல்லூரியில் (ஐசிஏஆர்) இதை முடித்தார்.
“ஐஐடியில் சேர விரும்பினேன். ஆனால் நுழைவுத் தேர்வில் வெல்ல முடியவில்லை. ஆனால் என் விதி விவசாயிகளுக்காகப் பாடுபடவேண்டும் என்பதால்தான் நான் ஐசிஏஆர் சென்றேன் என நினைக்கிறேன்.”
நான்கு ஆண்டு படிப்பின்போது தன் சக குஜராத்தி மாணவர்களின் தொழில்முனையும் ஆர்வம் மற்றும் குஜராத் மாநில வளர்ச்சிகள் கண்டு தூண்டப்பட்டார். "என் மாநிலத்தில் சரியான சாலைகள் இல்லை. மின்சாரம் இல்லை. ஆனால் குஜராத்தில் மின் பிரச்னையே கிடையாது. சாலைகளோ மிக அற்புதம்,” அவர் நினைவுகூர்கிறார்.
“மற்றவர்களைப் போல் இல்லாமல் என் குஜராத்தி நண்பர்கள் வேலை தேட முயற்சிக்காமல் தொழிலதிபர்கள் ஆகவிரும்பினர். நானும் அவர்களைப் போல சொந்தமாக ஏதாவது செய்யவிரும்பினேன். குஜராத் போல் என் மாநிலத்தையும் வளமாக்க விரும்பினேன்,” சொல்கிறார் அவர்.
|
சொட்டுநீர்ப்பாசனக் கருவிகள் செய்துகொண்டிருந்த இஸ்ரேல் நிறுவனம் ஒன்றில் ஆறுமாதம் வேலை பார்த்த கௌஷ்லேந்திரா பின்னர் ஐஐஎம்மில் சேர்ந்தார் (படங்கள்: மோனிருல் இஸ்லாம் மல்லிக்)
|
2003ல் அவர் தங்கப்பதக்கம் பெற்று படிப்பை முடித்தார். சொட்டுநீர்ப் பாசனக் கருவிகள் செய்த இஸ்ரேல் நிறுவனமான நெட்பார்மில் மாதம் 6000 ரூபாய்க்கு வேலைக்குச் சேர்ந்தார். ஆந்திராவில் விவசாயிகளைச் சந்தித்து சொட்டுநீர்ப்பாசனம் பற்றிக் கூறுவது அவர் பணி.
“உழவர்களிடம் பணி நிமித்தம் பேசியதில் அவர்களுக்கு விவசாயம் மூலம் அதிக லாபம் பெற நிறைய கற்பிக்க வேண்டியிருக்கிறது என்பதை உணர்ந்தேன்.”
ஆறுமாதத்தில் வேலையை விட்டுவிட்டார். அகமதாபாத்தில் பங்கஜ்குமார் என்ற நண்பரின் வீட்டுக்குப் போனார். அவர் எம்பிஏ நுழைவுத்தேர்வுக்குத் தயாராகிக்கொண்டிருந்தார் “எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. நானும் எம்பிஏ நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி வகுப்பில் சேர்ந்தேன்.”
2005-ல் தேர்வில் வெற்றிபெற்று அகமதாபாத் ஐஐஎம்மில் சேர்ந்தார். கல்விக்கடனாக வங்கியில் 4 லட்சரூபாய் பெற்றார். தன் வகுப்பில் முதலாம் மாணவராக 2007-ல் தேர்ச்சி பெற்றார். இதற்காக 25000 ரூபாய் அவருக்கு வழங்கப்பட்டது.
பின்னர் பாட்னா திரும்பி தன் கனவுகளை நனவாக்கத் திட்டமிட்டார். தனக்குக் கிடைத்த 25000 ரூபாயில் 100 சதுர அடியில் ஒரு அறையை 1,200 ரூபாய் வாடகைக்கு எடுத்தார். மாநிலம் முழுவதும் பயணம் செய்து உழவர்களைச் சந்திக்க ஆரம்பித்தார்.
|
மனைவி ரேகா குமாரியுடன் கௌஷ்லேந்திரா தன் அலுவலகத்தில்
|
“உழவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தினால் என் மாநிலம் உயரும் என்று நம்பினேன். 9 மாதங்கள் பயணம் செய்து உழவர்களைச் சந்தித்தேன். கிராமங்களுக்குச் சென்று அவர்களின் பிரச்னைகளைக் கண்டுணர்ந்தேன்.” இன்னும் அவர்களின் தொழில்கள் முறைப்படுத்தப்படாமல் இருப்பதை அவர் உணர்ந்தார்.
ஜனவரி 2008-ல் அவர் இரு நிறுவனங்களை ஆரம்பித்தார் ஒன்று கௌசல்யா அறக்கட்டளை. இது லாப நோக்கம் அற்றது. நிட்ஸ் கிரீன் பிரைவேட் லிமிடட், இது வணிக நோக்கிலானது. இவற்றை வாடகை அறையில் தன் அண்ணன் திரேந்திர குமாருடன் இணைந்து தொடங்கினார். திரேந்திரா ஒரு மருந்துநிறுவனத்தில் வேலைபார்த்தவர்.
“அதிக லாபம் ஈட்டுவதற்கான முறைகள், உரம் மற்றும் விவசாய முறைகள் குறித்து உழவர்களுக்குப் பயிற்சி அளிக்கத் திட்டமிட்டேன்,” அவர் விளக்குகிறார். தன் வணிக நோக்கிலான இன்னொரு நிறுவனம் மூலமாக நேரடியாக உழவர்களிடம் இருந்து காய்கறிகள் வாங்கி விற்பனையாளர்களுக்கு விற்றார்.
“உழவர்களுக்கு நல்ல விலை கிடைப்பதும் வாடிக்கையாளர்களுக்கு தரமான பொருட்கள் குறைந்த விலையில் கிடைப்பதும் தான் எங்கள் இலக்கு. சந்தைப்படுத்தும் சங்கிலியை உருவாக்குவதில் எங்கள் நிறுவனம் கவனம் செலுத்தியது.” காய்கறிகள் சம்ரிதி ஏசி வண்டிகள் மூலமாகக் கொண்டு செல்லப்பட்டன.
குடும்பத்தினரும் நண்பர்களும் கொடுத்த பணத்தில் தொடங்கப்பட்ட கௌசல்யா அறக்கட்டளை 50,000 ரூபாயில் தொடங்கப்பட்டது. மார்ச் 2008-ல் வங்கியிடமிருந்து 50 லட்ச ரூபாய் கடன் வாங்கினார் கௌஷ்லேந்திரா. ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் வுமன்ஸ் வேர்ல்ட் பேங்கிங் என்ற அமைப்பிடமிருந்தும் 5 லட்சரூபாய் கடன்பெற்றார்..
|
2016-17-ல் நிட்ஸ் கிரீன் பிரைவேட் லிமிடட் 5 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்திருக்கிறது
|
ஆனால் கடுமையான சவால், விவசாயிகளை இவரது யோசனையை ஏற்க வைப்பதில் இருந்தது. “பயிற்சி பெறுவது என்ற யோசனையை யாரும் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை. நான் நல்ல நிறுவனத்தில் வேலைக்குப் போகாமல் வீணடித்தது போதாது என்று அவர்கள் தொழிலையும் வீணடிக்க வந்ததாக நினைத்தனர்.” யாரும் முதலில் ஏற்கவில்லை. ஆனாலும் கடைசியில் கௌஷ்லேந்திரா பயிற்சியைத் தொடங்கினார். வந்தது மூன்றே மூன்று விவசாயிகள்!
”கடன் பெற்ற தொகை மூலம் 30 ஏசி வண்டிகளை வாங்கினோம். நாங்கள் அளிக்கும் பசுமையான, விலை மலிவான காய்கறிகளை விற்கும்படி விற்பனையாளர்களை உருவாக்கினோம் நானும் என் அண்ணாவும்கூட பாட்னா தெருக்களில் காய்கறி விற்றுள்ளோம்,” என்கிறார் அவர்.
ஆரம்பத்தில் சுவாரசியமக இருந்தாலும் விரைவில் நஷ்டத்தை சந்தித்தனர். முதல் ஆண்டில்(2008-9) ஆறு லட்ச ரூபாய் விற்பனை. இதனால் லாபம் இல்லை. 2011-12-ல் இந்த விற்பனை 70 லட்சமாக உயர்ந்தது. பாட்னாவில் வண்டி எண்ணிக்கை 65 ஆக உயர்ந்தது. ஆனாலும் நஷ்டத்தை தவிர்க்க முடியவில்லை.
“விற்பனை உயர்ந்தாலும் லாபம் இல்லை. உழவர்களுக்கு நல்ல விலை கொடுத்துவிட்டு குறைந்தவிலையில் விற்றதே காரணம்,” என்கிறார் கௌஷ்லேந்திரா.
2014-ல் வியூகத்தை மாற்றினார். விலைமீது இருந்த கட்டுப்பாட்டை நீக்கினார். செலவைக் குறைக்கும் நடவடிக்கைகள் எடுத்தார்.
|
கௌசல்யா அறக்கட்டளையில் தன் குழுவினருடன்
|
இப்போது 2016-17-ல் நிறுவனத்தின் விற்பனை ஐந்து கோடியாக உயர்ந்துள்ளது.
“கௌசல்யா அறக்கட்டளை தொடர்ந்து உழவர்களுக்குப் பயிற்சி அளிக்கிறது. எங்களுக்கு தங்களுடைய உற்பத்தியை விற்கவேண்டும் என்ற கட்டுப்பாடு எதுவும் இல்லை. எங்கு நல்ல விலை கிடைக்கிறதோ அங்கே விற்கலாம்,” என்கிறார் கௌஷ்லேந்திரா.
“கனவுகளைப் பின் தொடருங்கள். மனம் தளராதீர்கள். உதயசூரியனை எல்லோரும் வணங்குவார்கள்,” இதுவே கௌஷ்லேந்திரா இளைய தலைமுறைக்குத்தரும் ஆலோசனை.
அதிகம் படித்தவை
-
சமோசா சாம்ராஜ்யம்
ஆறாம் வகுப்பில் தொடர்ந்து மூன்று முறை பெயிலாகி பள்ளிப்படிப்பை விட்டுவிட்டு சாலையோரம் சமோசா விற்றவர் புதுப்பேட்டை ஹாஜா ஃபுனியாமின். இன்று ஆண்டுக்கு 1.5 கோடி ரூபாய் விற்பனை செய்யும் ஸ்நாக்ஸ் நிறுவனம் நடத்துகிறார். பி சி வினோஜ் குமார் தரும் வெற்றிக்கதை
-
ஆயிரம் கோடி கனவு!
கோவையை சேர்ந்த சதீஷ், சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். குச்சி ஐஸ் சாப்பிடும் ஆசையைக் கூட நிறைவேற்ற முடியாத குடும்பம். பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு ஐந்து கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் தொழிலின் வெற்றியை ருசிக்கிறார். ஆயிரம் கோடி அவரது கனவு. பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை
-
டீல்..மச்சி டீல்!
பழைய செல்போன்களை வாங்கிப் பழுது நீக்கி விற்கும் தொழிலில் பட்டையைக் கிளப்புகிறார் யுவராஜ் அமன் சிங். டெல்லியில் சாலையோர மேசையில் போன்களைப் போட்டு விற்றவர் இன்று 150 கோடி ரூபாய்க்கு விற்பனையை எட்டிய வெற்றிக்கதையை விளக்குகிறார் நரேந்திரா கௌசிக்
-
சர்க்கரை இல்லாமல் இனிக்கிறதே!
தள்ளுவண்டியில் ஜூஸ் கடை வைத்தால் வாழ்க்கையில் முன்னேற முடியுமா? முடியும் என்று நிரூபித்திருக்கின்றனர் கொல்கத்தாவின் இரண்டு இளைஞர்கள். சர்க்கரை சேர்க்காமல் அவர்கள் தயாரிக்கும் ஜூஸ் விற்பனையில் ஒரு கோடி ரூபாய் ஆண்டு வருவாய் இலக்குடன் அவர்கள் நடைபோடுகின்றனர். ஜி.சிங் எழுதும் கட்டுரை
-
விருத்தாசலம் டூ வர்ஜீனியா!
தமிழ்நாட்டில் விருத்தாசலத்தைச் சேர்ந்தவர் சரவணன் நாகராஜ். 12ஆம் வகுப்பில் கூட தேர்ச்சி பெறாத நிலை. தந்தையின் தொழிலோ நொடித்துப்போனது. இந்நிலையில் வேலை தேடி சென்னை வந்தவர் பின்னர் அமெரிக்கா சென்று அங்கு ஒரு நிறுவனத்தை வெற்றிகரமாக கட்டமைத்து வளர்த்தெடுத்துள்ளார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.
-
வெற்றியை வடித்தவர்!
கொல்கத்தாவை சேர்ந்த சிஏ பட்டதாரி இவர். டிசைனில் உள்ள ஆர்வத்தால், கிராபிக் டிசைன் நிறுவனத்தைத் தொடங்கினார். சர்வதேச வாடிக்கையாளர்களை குறிவைத்து இன்று மிக வெற்றிகரமாக தொழிலில் ஈடுபட்டு வருகிறார். ஜி.சிங் எழுதும் கட்டுரை