Milky Mist

Saturday, 25 September 2021

10 லட்சத்திலிருந்து ஆறுகோடி! ஒரு மருமகளின் வர்த்தக சாதனை!

25-Sep-2021 By உஷா பிரசாத்
கோவை

Posted 03 Sep 2021

சிந்து அருண், இங்கிலாந்தில் உள்ள வார்விக் வணிக பள்ளியில் எம்பிஏ படித்தவர். இருப்பினும் சொந்த ஊரை மறந்துவிடவில்லை. திருப்பூர் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் இருந்துகொண்டு செக்கு எண்ணெய் பிராண்டை உருவாக்கி இருக்கிறார். அந்த வணிகத்தை ரூ.10 லட்சம் என்ற குறைந்த ஆண்டு வருவாயில் இருந்து 2020-21ஆம் ஆண்டு ரூ.6 கோடி என்ற ஆண்டு வருவாயை நோக்கி எடுத்துச் சென்றிருக்கிறார். 

தம் கணவர் அருண் குடும்பத்தினரின் நம்பிக்கையை வென்றார். அவரது புகுந்த வீட்டில் எந்த வித வணிகப்பெயரும் இன்றி கொப்பரை வர்த்தகம்  நடந்துகொண்டிருந்தது.  சிந்து அந்த வணிகத்தில் ஊழியர்களை நியமித்தார். தயாரிப்பை பன்முகப்படுத்தினார். சில ஆண்டுகளிலேயே ஆண்டு வருவாயை அதிகரித்தார்.

2017ஆம் ஆண்டு பிரஸ்ஸோ என்ற செக்கில் ஆட்டப்பட்ட எண்ணெய் பிராண்டை சிந்து அருண் தொடங்கினார். அவரது குடும்பத்தால் தொடங்கப்பட்ட வணிகத்தை புதிய உச்சத்துக்கு எடுத்துச் சென்றார்.(புகைப்படங்கள்: சிறப்பு ஏற்பாடு)

இன்றைக்கு இந்த வணிகம் கொப்பரை, தேங்காய், தேங்காய் ஓடு,  தேங்காய் நார் மற்றும் மூன்று செக்கு எண்ணெய் (தேங்காய், கடலை, எள் )பிராண்ட்கள் தயாரிக்கும் ஒரு பங்குதாரர் நிறுவனமாக அக்ரிப்ரோ இண்டஸ்ட்ரீஸாக உருவாகியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகில் உள்ள நடுத்தரக்குடும்பத்தில் கீழ் நிலையில் இருந்து வளர்ந்து வந்தவர் சிந்து(37), அவரின் பெற்றோர் அரசு பள்ளி ஆசிரியர்கள். அவர் உயர்நிலைப்பள்ளியில் இளம் மாணவியாக இருந்தபோது, பெப்சிகோ நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி இந்திரா நூயியை முன்மாதிரியாகக் கொண்டிருந்தார்.

“என்னுடைய அறையில் அவரது படத்தை நான் எப்போதுமே வைத்திருந்தேன். இன்று வரைக்குமே தூரத்தில் இருந்து என்னை இயக்கும் ஒரு வழிகாட்டியாகவே அவரைக் கருதுகின்றேன்,” என்கிறார் சிந்து. ஒரு தொழில் முனைவோராக ஆக வேண்டும் என்று எப்போதுமே கனவு கண்டுகொண்டிருந்தார். 12ஆம் வகுப்பு வரை தமிழ் மீடியத்தில் சிந்து படித்தார். பொள்ளாச்சியில் உள்ள மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பத்தில் பி.டெக் பட்டம் பெற்றார்.

கொப்பரை தேங்காய் வணிகத்தில் ஈடுபட்டு வந்த குடும்பத்தைச் சேர்ந்த அருணை திருமணம் செய்து கொண்டார். மொடக்குப்பட்டியை சுற்றி உள்ள கிராமங்களில் தென்னை விவசாயிகளிடம் இருந்து தேங்காய்களை அவர்கள் கொள்முதல் செய்தனர். பின்னர் ஊழியர்களின் உதவியுடன் அதனை கொப்பரை தேங்காயாக மாற்றி, உள்ளூர் கடைகளில் சந்தைப்படுத்தினர்.  

சிந்துவுடன் 15 பேர் பணியாற்றுகின்றனர். அதில் பெரும்பாலோர் பெண்கள்.


அருண் கூட்டுக்குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். அருணின் பெற்றோர்களான வி.ராமானுஜன், ஆர். ராஜவேணி இருவரும் விவசாய நிலங்களை கவனித்துக் கொண்டனர். அருணின் சித்தப்பா கோபாலகிருஷ்ணன், குடும்பத்தின் வணிகத்தை கவனித்துக் கொண்டார்.

சிந்து குடும்பத்தின் வணிகத்தில் இணைவதற்கு அவரது மாமியார் ஊக்குவித்தார். பிறந்து ஆறுமாதமே ஆன சிந்துவின் மகளை அவர் கவனித்துக் கொண்டார். தவிர வீட்டு வேலைகளையும் அவரது மாமியாரே கவனித்துக் கொண்டார். சிந்து, அருண் இருவரும் குடும்பத்தின் வணிகத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வது என்று தீர்மானித்தனர். கொப்பரை தேங்காய் மற்றும் தேங்காய் வணிகத்துக்கு பதிவு செய்யப்பட்ட எந்த பெயரையும் அவர்கள் வைத்திருக்கவில்லை. வணிகத்தில் பரஸ்பரம் நம்பிக்கை அடிப்படையிலும் அருண் குடும்பத்துக்கு இருந்த நற்பெயரிலும் வணிகம் இயங்கி வந்தது.

சிந்து தனது மாமனார் குடும்பத்தின் ஒப்புதலுடன் 2013ஆம் ஆண்டு  எவர்கிரீன் எண்டர் பிரைசஸ் என்று நிறுவனத்துக்கு பெயர் வைத்தார்.”அதில் கூலித் தொழிலாளர்கள்தான் வேலை பார்த்தனர். அதே நேரத்தில் வணிகத்தின் நிர்வாகத்தை கவனிக்க எந்த ஊழியர்களும் இல்லை. என்னுடைய குடும்பம் பெரிய அளவில் சிந்திக்க வேண்டும் என்று நான் விரும்பினேன்,” என்கிறார் சிந்து. ஆரம்ப கட்டத்தில் ஒரு கண்காணிப்பாளர் மற்றும் ஒரு கணக்காளரை அவர் வேலைக்கு நியமித்தார். புதிய ஊழியர்களுக்கு பயிற்சி அளிப்பது கணக்கு வழக்குகளை பார்த்துக் கொள்வது ஆகிய பொறுப்புகளில் சிந்து ஈடுபட்டார்.

‘த மேஜிக் ஆஃப் திங்கிங் பிக்’ என்ற புத்தகத்தினால் (குடும்ப வணிகத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வது குறித்த புத்தகம்) ஈர்க்கப்பட்டேன்,” என்றார் சிந்து. திருமணத்துக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பழைய இரும்பு வியாபார நிறுவனத்தை தொடங்கியதால்  மேரிகோ என்ற பெரிய நிறுவனத்துடனான வணிகத் தொடர்புகளை அருண் நிறுத்தி விட்டார். குடும்பத்தொழிலில் இறங்கிய சிந்து முதலில், 2002ஆம் ஆண்டில் இருந்து கொப்பரை தேங்காய் விநியோகம் செய்து வந்த முன்னணி எஃப்எம்சிஜி பிராண்ட் மேரிகோவுடனான வணிகத்தொடர்புகளை மீண்டும் உருவாக்கினார்.

“நாம் வணிகத்தை அடுத்த உயரத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றால், அவர்களுடன் வணிகத்தொடர்பை கொண்டிருப்பது நமக்கு பல விஷயங்களைக் கற்றுக் கொள்ள உதவியாக இருக்கும் என்பதை நான் உணர்ந்தேன்,” என்கிறார் சிந்து

2009ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வருவதற்கு முன்பு வார்விக் வணிகப்பள்ளியில் எம்பிஏ முடித்த சிந்து, சில ஆண்டுகள் லண்டனில் பணியாற்றினார்


“மேரிகோவுடன் 2014ஆம் ஆண்டு எங்களது வணிகத்தை  மீண்டும் தொடங்கினோம். அப்போதில் இருந்து புதிய திட்டத்தின் கீழ் தேங்காய்களை அவர்கள் கொள்முதல் செய்தனர். கொப்பரை தேங்காய்க்கு பதில் தேங்காய்களை அவர்களுக்கு கொடுத்தோம்."

2017ஆம் ஆண்டு அருண், சிந்து இருவரும், அக்ரிப்ரோ இன்டஸ்ட்ரீஸ் என்ற பங்குதாரர் நிறுவனத்தை பதிவு செய்தனர். பிரஸ்ஸோ என்ற பிராண்ட் பெயரில் செக்கில் ஆட்டப்பட்ட எண்ணெய் வகைகளைத் தொடங்கினர். நலம் விரும்பிகளிடம் இருந்து ரூ.12 லட்சம் கடனாகவும், சிந்துவின் நகைகளை அடகு வைத்து ரூ.8 லட்சம் பணத்தையும் கொண்டு மொடக்குப்பட்டியில் செக்கு எண்ணெய் தயாரிப்புப் பிரிவை தொடங்கினர். 

உள்ளூர் விவசாயிகளிடம் இருந்து நிலக்கடலை, தேங்காய்களை கொள்முதல் செய்கின்றனர். வேதாரண்யத்தில் ஒரு விவசாயியிடம் இருந்து இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட எள் கொள்முதல் செய்கின்றனர். தயாரித்த எண்ணெய் வகைகளை பல்வேறு இ-வணிகதளங்களில், தங்களுடைய இணையதங்களில் மற்றும் உள்ளூர் கடைகளின் வாயிலாகவும் விற்பனை செய்கின்றனர்.

“எங்களுக்கு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, போபால் மற்றும் ஹரியானாவில் நல்ல சந்தை தொடர்புகள் உள்ளன. தவிர நாங்கள் கத்தார் நாட்டுக்கு ஏற்றுமதி செய்கின்றோம். மலேசியா, இங்கிலாந்து நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அந்நாட்டவர்களிடம் இப்போது பேசி வருகின்றோம்,” என்றார் சிந்து.

2020-21ஆம் நிதி ஆண்டில் நிறுவனத்தின் மொத்த ஆண்டு வருவாயான ரூ.6 கோடியில், பிரஸ்ஸோ பிராண்ட் ஆண்டு வணிகம் ரூ.27 லட்சமாக இருந்தது. சிந்து தன் வாழ்க்கையில் தனக்கு தானே இலக்கை நிர்ணயித்துக் கொண்டு அந்த இலக்குகளை அடைந்து வருகிறார். 

பள்ளி மாணவியாக இருக்கும்போது, வெளிநாட்டில் இருக்கும் முன்னணி பல்கலைக்கழகத்தில் உயர் கல்விபடிக்க வேண்டும் என்று நினைத்தார். அதே போல 2006ஆம் ஆண்டு வார்விக் வணிக பள்ளியில் படிப்பதற்காக 23ஆம் வயதில் இங்கிலாந்து சென்றார். அவர் அங்கே தகவல் தொழில்நுட்ப முறைகள் மற்றும் நிர்வாகத்தில் எம்பிஏ படித்தார்.

அவர் எம்பிஏ படிக்கும்போது, கல்லூரி நேரம் முடிவடைந்த பின்னர் மாலை 6 மணியில் இருந்து இரவு 11.30 மணி வரை பகுதி நேரமாக ஒரு ஆண்டுக்கு ஒரு ரெஸ்டாரெண்டில் வெயிட்டராக பணியாற்றினார்.

கணவரும், வணிக கூட்டாளியுமான அருணுடன் சிந்து மற்றும் அவர்களுடன் மகள் லயா

“இந்தியாவின் கிராமத்துப் பின்னணியில் இருந்து வந்த எனக்கு இது மிகவும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது.” என்று சிந்து பகிர்ந்து கொள்கிறார். “பணி முடிந்து நடு இரவில் நான் தனியாக நடந்து செல்வேன். எந்த ஒரு சவாலையும் எதிர்கொள்ளும் ஊக்கத்தை என் தாயாரிடம் இருந்து பெற்றதாக நான் கருதுகின்றேன். அவர் பெண்களை எப்போதுமே ஊக்குவிப்பார்.”

பின்னர் கொஞ்சகாலம் லண்டனில் அக்சா லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக  பணியாற்றினார். பின்னர் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி, உதவி மேலாளர் வரை பதவி உயர்வு பெற்று பணியாற்றினார்.

2009ஆம் ஆண்டு இந்தியா திரும்பிய அவர், தன்னுடைய சகோதர ருடன் இணைந்து இ-வணிக இணையதளம் ஒன்றை தொடங்கினார். மொபைல் போன்கள் மற்றும் புத்தகங்களை தயாரிப்பவர்களிடம் இருந்து வாடிக்கையாளர்களுக்கு கொண்டு சேர்க்கும் முறையிலான தளத்தை நடத்தினர். வங்கியிலிருந்து பணம் திரட்டியும் சேமிப்பில் இருந்த பணத்தைக் கொண்டு நிறுவனத்தைத் தொடங்கினர். இரண்டு வருடங்களுக்குப் பின்னர் அந்த நிறுவனம் மூடப்பட்டு விட்டது. “நாங்கள் ரூ.25 லட்சம் வரை அதில் முதலீடு செய்திருந்தோம்,” என்று சிந்து நினைவு கூர்கிறார்.

அப்போதுதான் சிந்துவின் தாய் அவரை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகும்படி அறிவுறுத்தினார். சிந்து 2012ஆம் ஆண்டு அருணை திருமணம் செய்து கொண்டார். ஒரு ஆண்டு கழித்து அவர்களுக்கு லயா என்ற பெண் குழந்தை பிறந்தது.

2017ஆம் ஆண்டு சிந்து, அருண் இருவரும் பெங்களூருவில் உள்ள ராஜீவ் தல்ரேஜா என்ற வணிக பயிற்சியாளரிடம் ஓர் ஆண்டு படிப்பு ஒன்றை படித்தனர். ஒவ்வொரு வார இறுதியிலும் பெங்களூரு சென்று அந்தப் படிப்புக்கான வகுப்புகளில் பங்கேற்றனர். “இந்த படிப்பின் போதுதான், நான் சொந்தமாக ஒரு பிராண்டை உருவாக்க வேண்டும் என்பதை உணர்ந்தேன். ஒரு புதிய வணிகத்தில் ஈடுபடுவதற்கான நல்ல அடிப்படையை அந்த படிப்பு கொடுத்தது. ஏற்கனவே இருந்த ஒன்றுக்கான ஒரு புதிய பன்முகத்தன்மையை கொடுத்தது,” என்றார் சிந்து.

   “பல்வேறு குறைபாடுகளை ராஜீவ் தல்ரேஜா தெளிவு படுத்தினார். எங்களுக்கு பல வாய்ப்புகள் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.”மொடக்குப்பட்டி கிராமத்தில் உள்ள உற்பத்தி ஆலையில் சிந்துவும், அவரது குழு உறுப்பினர்களும் உள்ளனர்

சோதனை அடிப்படையில் பிரஸ்ஸோ பிராண்டை பெங்களூருவில் தொடங்கினர். படிப்பின் போது ஏற்படுத்திக் கொண்ட தொடர்புகள் வாயிலாக வீடு வீடாகச் சென்று ப்ரஸ்ஸோவை கொடுப்பது என திட்டமிட்டனர்.  வாட்ஸ் ஆப்  மற்றும் மொபைல் வாயிலாக அவர்கள் ஆர்டர்கள் பெற்றனர். இன்றைக்கு பிரஸ்ஸோவுக்கு இந்தியா முழுவதும் 100 விநியோகஸ்தர்கள் மற்றும் விற்பனையாளர்கள் உள்ளனர்.

“ஒரு லட்சம் பேரை தொழில் தொடங்க வைக்க வேண்டும் என்பதே எங்களது இலக்கு,” என்கிறார் சிந்து. 15 பேர் கொண்ட பெண் பணியாளர்களுடன் இப்போது சிந்து பணியாற்றி வருகிறார். “இயற்கையான தரம்வாய்ந்த பொருட்களை மனித சமுதாயத்துக்கு அளிக்கவேண்டும் என்பதே எங்களது தாரக மந்திரம்,” என்று விடைபெற்றார் சிந்து.

 
 
 
 
 

அதிகம் படித்தவை

 • Man who sold milk on a bicycle owns Rs 300 crore turnover company

  பாலில் கொட்டும் பணம்!

  மேற்குவங்க கிராமம் ஒன்றில் மிகச்சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் நாராயண் மஜும்தார். பால் தொழில்நுட்பத்தில் பி டெக் படித்த அவர் பல நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவத்துடன் தொழில் தொடங்கினார். இன்று அவரது ரெட் கவ் டெய்ரி மேற்குவங்கத்தின் மிகப்பெரிய பால் நிறுவனம். ஜி சிங் எழுதும் வெற்றிக்கதை.

 • He quit Rs 70,000 salaried job to start a business that is nearing Rs 10 crore turnover

  விளம்பரங்கள் தந்த வெற்றி

  நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து, மாதம் 70 ஆயிரம் ரூபாய் சம்பளத்துடன் பணியில் இருந்த தீபக், தமது வேலையை ராஜினாமா செய்து விட்டு டிஜிட்டல் விளம்பர நிறுவனம் தொடங்கினார். அவரது நிறுவனம் இந்த நிதியாண்டில் 10 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட திட்டமிட்டுள்ளது. ஜி.சிங் எழுதும் கட்டுரை

 • the life story of journalist nakkheeran gopal

  துணிச்சலின் மறுபெயர் நக்கீரன் கோபால்

  புலனாய்வு இதழியல் வரலாற்றில் தனிமுத்திரை பதித்தவர் நக்கீரன் கோபால், 1988ம் ஆண்டு அவர் நக்கீரன் இதழைத் தொடங்கியது முதல் இப்போது வரை துணிச்சல் மிகுந்த பத்திரிகையாளராக பீடுநடை போடுகிறார். அவரது வார்த்தைகளிலேயே அவரது வாழ்க்கை கதை...

 • This is out of the box thinking!

  மாற்றி யோசித்தவர்!

  ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த 40 வயது இளைஞரான சந்தோஷ், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமால் ஈர்க்கப்பட்டார். அதன் விளைவாக, பால் பண்ணையைத் தொடங்கி, பழங்குடியினத்தைச் சேர்ந்த 100 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளார். குருவிந்தர் சிங் எழுதும் கட்டுரை.

 • A hot sale

  புதுமையான உணவு

  குடும்பத்தின் வறுமையைப் போக்க எட்டு வயதில் டீ விற்கத் தொடங்கியவர் விஜய் சிங் ரத்தோர். இன்றைக்கு ஜானி ஹாட் டாக் என்ற விந்தையான பெயரைக் கொண்ட உணவகத்தின் உரிமையாளர். ஒரு ஹாட் டாக்கை 30 ரூபாய்க்கு விற்கும் அவர் ஆண்டுக்கு 3.5 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறார். ஆகான்ங்ஷா துபே எழுதும் கட்டுரை.

 • This businessman sold vada pav and repaid Rs 55 lakh debt

  சுவையான வெற்றி

  மும்பையில் தொழில் பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்தாலும் முதல் தொழில்முயற்சியில் 55 லட்ச ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்தார் தீரஜ். அவர் கடனில் இருந்து மீண்டது வடா பாவ் விற்றுத்தான். பிசி வினோஜ்குமார் எழுதும் வெற்றிக்கதை