போராடி சாதித்த மிலிந்த போராடே! டேட்டா பாதுகாப்பில் உலகின் முன்னணி நிறுவனத்தைத் தொடங்கியவர்!
23-Nov-2024
By அன்வி மேத்தா
புனே
புனேவை சேர்ந்த மிலிந்த் போராடே பள்ளி இறுதி வகுப்பு தேர்ச்சி பெற்றபோது, தாம் ஒரு நாள் தகவல் தொழில்நுட்பத் துறையில் தொழில்முனைவோர் ஆவோம் என்றெல்லாம் நினைக்கவில்லை. அதுவும் உலகின் முன்னணி டேட்டா பாதுகாப்பு நிறுவனத்தை உருவாக்குவோம் என்று? சான்ஸே இல்லை. அப்படி நினைத்திருந்தால் அவர் டிப்ளமோ படிப்பில் சேர்ந்திருப்பாரா?
ஓ.கே… சரி… பின்னாட்களில் அவர் ஐஐடி-பாம்பேயில் படித்தார். தான் இணைந்து உருவாக்கிய துருவா என்ற நிறுவனத்தை வழி நடத்தினார். கடந்த ஆண்டு ரூ.700 கோடி ஆண்டு வருவாய் ஈட்டியது அவரது நிறுவனம். தகவல் தொழில்நுட்ப முன்னோடி நிறுவனமான இது தகவல் நிர்வாகத்தை சேவையாக மாற்றியது. இது தொடங்கி, 12 ஆண்டுகள் கடந்த நிலையில், இப்போது 700 பேர் வேலை பார்க்கின்றனர். இதுதான் இவரது வெற்றிக்கதை.
“கார்ட்னர் (உலகின் முன்னணி ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை நிறுவனம்) நிறுவனத்தால் தகவல் பாதுகாப்பு மற்றும் மீட்டெடுப்பு தயாரிப்பில் முதலிடம் என 2013-14ம் ஆண்டில் நாங்கள் அங்கீகரிக்கப்பட்டோம்,” என்கிறார் போராடே(46). இவர் துருவா நிறுவனத்தை ஜஸ்ப்ரீத் சிங், ரமணி கோதண்டராமன் ஆகிய மென்பொருள் பொறியாளர்களுடன் இணைந்து 2007-ம் ஆண்டு தொடங்கினார்.
அமேசான் வெப் சர்வீஸஸ் உடன் ஒரு பங்குதாரர் நிறுவனமாக இருக்கும் இவர்கள் 38 பார்ச்சூன் 500 நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுகின்றனர். ஸீக்குவாயா கேப்பிட்டல், ரிவர்வுட் கேப்பிட்டல், நெகஸஸ் வென்சூர் பார்ட்னர்ஸ் மற்றும் தேநாயா கேப்பிட்டல் உள்ளிட்ட நிறுவனங்கள் இவர்களை ஆதரிக்கின்றன. இதுவரை துருவா நிறுவனம் 200 மில்லியன் டாலர் நிதி திரட்டி உள்ளது. இறுதியாக 2017-ம் ஆண்டு ஆகஸ்ட்டில் 80 மில்லியன் டாலர் திரட்டியது.
எப்படி அவர்களது தயாரிப்புக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்தது? “எங்களுடைய தயாரிப்பு என்பது, இந்தியாவில் சீரற்ற நிலையில் உள்ள இணைய, மின்சார இணைப்புகள் மற்றும் பருவகால நிலைகளை சமாளிக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த தயாரிப்பு, கப்பல்கள் மற்றும் மிகவும் வசதியற்ற இடங்களிலும் நீடித்திருக்கும் வகையில் இருந்தது,” என போராடே கூறுகிறார்.
ஒரு கட்டத்தில் கோதண்டராமன் நிறுவனத்தை விட்டு விலகிவிட்டார். அமெரிக்காவின் சன்னிவேலியை சேர்ந்த துருவா நிறுவனத்தின் இன்னொரு துணை நிறுவனரான சிங், உலகம் முழுவதும் உள்ள மூவாயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு உதவியாக இருந்தார். போராடே, சன்னிவேலிக்கும் துருவா நிறுவனத்தின் தலைமை அலுவலகம் உள்ள புனேவுக்கும் இடையே தமது நேரத்தைப் பகிர்ந்து கொண்டார்.
போராடே புனேவில் பிறந்து வளர்ந்தார். துருவாவைத் தொடங்கும் முன்பு, ஒரு போதும் அந்த நகரத்தை விட்டு வெளியே அவர் சென்றதில்லை. ஒரே விதிவிலக்கு பொறியியலில் பட்டமேற்படிப்பு படிப்பதற்கு ஐஐடி-பாம்பேயில் இரண்டு வருடங்கள் இருந்ததுதான்.
போராடேவின் தந்தை ராணுவ பொறியியல் சேவைப் பிரிவில் ஒரு பொறியாளராக புனேவில் பணியாற்றினார். அவரது தாய் ஒரு பாலர் பள்ளி தொடங்கி அதில் 35 ஆண்டுகளாக குழந்தைகளுக்குக் கற்பித்து வந்தார். புனே நகரில் பள்ளிப்படிப்பு, கல்லூரிப் படிப்பை முடித்த போராடேவுக்கு அதே நகரத்தில் வேலையும் கிடைத்தது.
புனே நகரின் நினைவுகளை அவர் மீண்டும் நினைவுகூர்கிறார். “வழக்கமான ஒரு நடுத்தரக் குடும்ப நிலையிலேயே என்னுடைய குழந்தைப் பிராயம் இருந்தது. சராசரியான மாணவனாகவே இருந்தேன். தேர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்க நான் விரும்பியதில்லை. எனினும், எப்போதுமே என்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களை அறிந்து கொள்வதில் ஆர்வத்துடன் இருந்தேன். என்னுடைய விளையாட்டு பொம்மைகளை உடைத்துப் பார்ப்பேன். அதில் உள்ள நுணுக்கங்களைத் தெரிந்து கொண்டு பின் மீண்டும் உடைத்தவற்றை ஒன்றாக இணைப்பேன்.”
பெரிய வேலைக்குச் செல்ல வேண்டும் என்றோ அல்லது ஒரு தொழில் முனைவோர் ஆக வேண்டும் என்ற ஆசையோ இல்லாமல், போராடே பொறியியல் பட்டயப்படிப்பை படித்து விட்டு, அதன்பின்னர் ஒரு வேலைக்குச் செல்ல வேண்டும் என்றே நினைத்திருந்தார். அவர் தமது பட்டயப்படிப்பை படித்துக் கொண்டிருந்தபோது, அவரது கவனம் கணினி மீது திரும்பியது. அவரது பேராசிரியர், மைக்ரோபிராஸஸர்கள் மற்றும் புரோகிராம்கள் மீது போராடேவுக்குள் ஆர்வத்தை விதைத்தார்.
இதைத் தொடர்ந்து கணினி அறிவியலில் பொறியியல் படம் பெற்றார். பட்டப்படிப்புக்குப் பின்னர் போராடே பெரிஸிஸ்டண்ட் சிஸ்டம்ஸ் என்ற நிறுவனத்தில் ஒரு ஆண்டு பணியாற்றினார். பின்னர் அமெரிக்காவை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான அட்வான்ஸ்டு கம்ப்யூட்டிங் சிஸ்டம்ஸ் கம்பெனியில் சேருவதற்காகச் சென்றார்.
மென்பொருள் புரோகிராமிங், செயல் மேலாண்மை மற்றும் கோடிங் குறித்து மேலும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்தார். “எனவே, ஐஐடி-பாம்பேயில் கம்ப்யூட்டரில் முதுகலைப்படிப்பில் சேர்ந்தேன். இறுதி ஆண்டின் போது புனேவில் உள்ள வெரிதாஸ் என்ற ஒரு சிஸ்டம்ஸ் பொறியியல் நிறுவனத்தில் சேருவதற்காக விண்ணப்பித்தேன்,” என்கிறார் போராடே.
புனேவிலேயே வேலை கிடைத்ததால் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். சொந்தமாக ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்ற உந்துதலும் அப்போது இல்லை.
“வெரிதாஸ் நிறுவனத்தில் குறியீடுகளில் ஏற்பட்ட பிழைகளை சோதனை செய்து கொண்டிருந்தேன். குறியீடுகள் அழகாக எழுதப்பட்டதைக் கண்டு வியந்தேன். 2003-இல் அடுத்ததாக வரவிருக்கும் தொழில்நுட்ப தீர்வுகளில் கவனம் செலுத்துவதற்கான வேறு ஒரு பிரிவில் பணியமர்த்தப்பட்டேன்,” என்று விவரிக்கிறார் போராடே.
வெரிதாஸ் நிறுவனம் ஸிமான்டெக் நிறுவனத்தோடு 2005-ம் ஆண்டு இணைந்ததால், புதிய நிர்வாகம் சரியான வேலை இலக்குகளை அவருக்கு வழங்குமா என்பது உறுதியாகத் தெரியாததால் அவர் வேலையில் இருந்து விலகினார். “அங்கே நான் 11 ஆண்டுகள் பணியாற்றினேன். விலகியபின் வழக்கமான ஒரு வேலைக்கு மீண்டும் போக விரும்பவில்லை. நாம் ஏன் சின்னதாக சொந்தமாக ஒரு ஆலோசனை நிறுவனம் ஆரம்பிக்கக் கூடாது என நினைத்தேன்”.
ஒரு பங்குதாரருடன் இணைந்து கோரியாலிஸ் டெக்னாலஜிஸ் என்ற ஒரு மென்பொருள் ஆலோசனை நிறுவனத்தில் அவர் ரூ.4 லட்சம்ரூபாய் முதலீடு செய்தார். இரு ஆண்டுகள் கழித்து அதிலிருந்து விலகிவிட்டார்.
அப்போது, அவர் வெரிதாஸ் நிறுவனத்தின் முன்னாள் நண்பர்களான ஜஸ்ப்ரீத் சிங் மற்றும் ரமணி கோதண்டராமனைச் சந்தித்தார். அந்தச் சந்திப்புதான் அவரது வாழ்க்கையையே மாற்றியது.
“இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப தொழில்துறை வளர்ந்து கொண்டிருந்தது என்று நாங்கள் நம்பினோம். பல்வேறு ஆலோசனை நிறுவனங்கள் இருந்தன. ஆனால், தயாரிப்பு ரீதியான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இல்லை என்பதை உணர்ந்தோம். பெரிய நிறுவனம் ஆனாலும், சிறிய நிறுவனம் ஆனாலும் அவற்றுக்கு முக்கியமான தகவல்கள் தொகுப்புகள் இருந்தன. ஆனால், தகவல் மீட்புக்காக அந்த நிறுவனங்கள் எந்தவித முக்கியத்துவமும் கொடுக்கவில்லை என்பதை கவனித்தோம்,” என்று இது எப்படித் தொடங்கியது என்பதை நினைவு கூர்கிறார்.
“லோக்கல் ஹார்டு டிஸ்க்கில் இருந்து தகவல்களை நகல் எடுத்து அதனை இன்னொரு கம்ப்யூட்டருக்கு இணையதளம் உதவியுடன் அனுப்ப ஒரு கெர்னல் டிரைவரை (kernel driver)முன்னெடுப்பது என்று தீர்மானித்தோம். ஆரம்ப கட்டமாக 30 லட்சம் ரூபாய் முதலீடு மற்றும் மேலும் ஒரு ஏஞ்ஜல் முதலீட்டாளரிடம் இருந்து திரட்டிய ஒரு கோடி ரூபாய் நிதி ஆகியவற்றைக் கொண்டு இந்தத் தயாரிப்பை 2007-ம் ஆண்டு உருவாக்கத் தொடங்கினோம்,” என்கிறார்.
ஆனால், சந்தையானது இந்தத் தயாரிப்பை எதிர்பார்த்தபடி உள்வாங்கிக் கொள்ளவில்லை. சில சிக்கல்கள் இருந்தன. சர்வரில் இருந்துத் தகவல்களை மீட்பதற்கு பதில், லேப் டாப் போன்ற தினசரி பணியாற்றும் ஹார்டுவேரில் இருந்து தகவல்களை மீட்பது குறித்துத்தான் சந்தையின் தேவை இருந்தது.
“அந்த நாட்கள் மிகவும் கடினமான சூழல்களாக இருந்தன. எனினும் நாங்கள் ஒன்றிணைந்திருந்தோம். லேப்டாப்பில் இருந்து தகவல்களை மீட்டெடுக்கும் ஒரு தயாரிப்பை உருவாக்குவது குறித்து நாங்கள் வெவ்வேறு வழிகளில் பணியாற்றத் தொடங்கினோம்,” என்று நினைவு கூர்கிறார்.
அவர்களின் தயாரிப்பு சிறப்பாக இருந்தது. கொஞ்சம், கொஞ்சமாக சிறிய ஆர்டர்கள் கிடைக்கத் தொடங்கின. மூன்று ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கும், அலுவலக வாடகை, சொந்த செலவுகள் ஆகியவற்றை ஈடுகட்டவும் அந்த ஆர்டர்கள் போதுமானதாக இருந்தன.
இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு நிறுவனம் 2008-ம் ஆண்டு அவர்களுக்கு 1,00,000 அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஆர்டரை கொடுத்தது. இதுதான் அவர்களுக்கு முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. “அப்போதில் இருந்து நாங்கள் பின்னால் திருப்பிப் பார்க்கவில்லை. எங்களது குழு வளர்ச்சியடையத் தொடங்கியது,” என்கிறார் போராடே. இந்த நிறுவனம், லேப்டாப் தகவல்களை மீட்டுக் கொடுப்பதில் இருந்து மொபைல்போன் தகவல்களை மீட்டுக் கொடுப்பதிலும் 2009-ம் ஆண்டு களம் இறங்கியது. அடுத்த ஆண்டு அவர்களுக்கு இரண்டாவது கட்டமாக ரூ.2.5 மில்லியன் நிதி கிடைத்தது.
2012-ம் ஆண்டு முதல் இந்த தயாரிப்பு ஒரு மென்பொருளாக பதிவிறக்கம் செய்யப்பட்டு கம்ப்யூட்டரில் நிறுவப்படும் தயாரிப்பாக இல்லை. இது கிளவுட் அடிப்படையிலான தயாரிப்பாகும். வாடிக்கையாளர்கள் மென்பொருளை ஆன்லைனில் லாக் இன் செய்து தங்கள் தகவல்களை நிர்வகிக்கலாம்.
“முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தொழில்நுட்ப வளர்ச்சி முறையில் எவ்வாறு சாதனையைப் பெற்றார்களோ அதே போன்றதொரு சாதனையை அடையும் திறன் பெற்றிருக்கின்றோம் என்பதை நாங்கள் நம்பினோம்,” என்றார் போராடே. அவரது புனே அலுவலகத்தில் 400 பேர்வரை பணியாற்றுகின்றனர். கூடுதலாக 300 பேர் உலகம் முழுவதும் உள்ள அலுவலகங்களில் பணியாற்றுகின்றனர். இவையெல்லாம், அவர் பட்டயப்படிப்பில் சேருவதற்கு முன்பு சாதிக்க நினைத்த ஒன்றல்ல.
ஆனால், இந்த வெற்றியானது அவரை ஒரு பரந்த எண்ணம் கொண்டவராக, ஆதரவான தலைமைப் பண்பாளராக உயர்த்தியது. ஒரு சாதகமான சூழல்தான் ,தமது ஊழியர்களுக்கு புதிய யோசனைகளைக் கொண்டு வரும் மற்றும் துருவாவின் பங்களிப்புக்கு உதவும் என்கிறார் போராடே. தமது நிறுவனத்தின் ஊழியர்கள் புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அதன் மூலம் அவர்களது வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார்.
உண்மையில், குறிப்பாக தகவல் தொழில்நுட்பத்துறையில் முன்னேற விரும்பும் எந்த ஒரு இளம் தொழில்முனைவோருக்கும் இந்த புனே இளைஞர் உந்துதலாக இருக்கிறார். தன் வெற்றியைப் பொருட்படுத்தாமல் போராடே தொடர்ந்து தம்மை தனிப்பட்ட நபராகவே முன்னிலைப்படுத்திக் கொள்கிறார். சிறப்பு குழந்தைகளுக்கான கல்வியாளராகப் பணியாற்றும் தம் மனைவி நீலம் வழியாக உதவிகள் செய்து வருகிறார்.
இவரது மகள் சாயாலி 12-ம் வகுப்பு படிக்கிறார். மகள் தமக்குத் தாமே தவறுகள் செய்து, கற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார். தகவல் தொழில்நுட்பத்துறையில் சேர வேண்டும் என்ற எந்த அழுத்தமும் மகள் மீது இல்லை!
அதிகம் படித்தவை
-
வேகமும் வெற்றியும்
திருச்சி கைலாசபுரத்தில் பிறந்து வளர்ந்த அன்சார், சிறுவயதில் மெக்கானிக் ஷாப்புகளில் பொழுதைப் போக்குவது வழக்கம். இன்றைக்கு இந்தியாவின் முன்னணி ரைடிங் கியர்கள் உற்பத்தி நிறுவனத்தின் உரிமையாளராக உயர்ந்திருக்கிறார். ரூ.10 கோடி ஆண்டு வருவாய் ஈட்டும் வகையில் அவரது நிறுவனம் வளர்ந்திருக்கிறது. உஷா பிரசாத் எழுதும் கட்டுரை
-
இரவுக் கடை
கொல்கத்தாவைச் சேர்ந்த மூன்று நண்பர்கள் இணைந்து நள்ளிரவில் பசித்தவர்களுக்கு உணவு டெலிவரி செய்யும் சேவை தொடங்கினர். தொடக்கத்தில் ஒரு ஆர்டர் கூட கிடைக்கவில்லை. இப்போது மாதம்தோறும் 1800 ஆர்டர்கள் மூலமாக 8 லட்சம் வருவாய் ஈட்டுகின்றனர். ஜி.சிங் எழுதும் கட்டுரை.
-
கனிந்த தொழில் கனவு!
கோவை அருகே கிராமத்தில் இருந்து 1950களில் படிப்பைத் துறந்து விட்டு பழக்கடையில் இரண்டு சிறுவர்கள் வேலைக்குச் சேர்ந்தனர். இன்றைக்கு அவர்கள் பெரிய தொழில் அதிபர்களாக இருகின்றனர். அக்குடும்பத்தின் அடுத்த தலைமுறை இளைஞர் செந்தில் இத்தொழிலைத் தொடர்கிறார். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை
-
புதுமையான உணவு
குடும்பத்தின் வறுமையைப் போக்க எட்டு வயதில் டீ விற்கத் தொடங்கியவர் விஜய் சிங் ரத்தோர். இன்றைக்கு ஜானி ஹாட் டாக் என்ற விந்தையான பெயரைக் கொண்ட உணவகத்தின் உரிமையாளர். ஒரு ஹாட் டாக்கை 30 ரூபாய்க்கு விற்கும் அவர் ஆண்டுக்கு 3.5 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறார். ஆகான்ங்ஷா துபே எழுதும் கட்டுரை.
-
கனவைப் பின்தொடர்ந்தவர்!
சிறுவயதில் இருந்தே தனியாக ஏதேனும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்த இளம் பெண் ஆஸ்தா. படிப்பு முடித்த பின்னர் நிகழ்ச்சிகள் நடத்தித்தரும் நிறுவனத்தைத் தொடங்கினார். நல்ல சம்பளம் தரும் வேலையை விட்டு விலகி அவர் ஆரம்பித்த இந்த முயற்சிக்கு அவரது சகோதரரும் கை கொடுக்க, வெற்றியை தொட்டார் ஆஸ்தா. குருவிந்தர் சிங் எழுதும் கட்டுரை.
-
சம்பளத்தைவிட சாதனை பெரிது!
ஐ.பி.எம் நிறுவனத்தில் மாதம் 15,000 ரூபாய் சம்பளத்தில் பணியாற்றினார் சனீன். பின்னர் சொந்த தொழில் செய்யும் ஆர்வத்தில் வேலையை விட்டு விலகி, நண்பர் நிறுவனத்தில் பங்குதாரர் ஆனார். இன்றைக்கு 1.5 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் நிறுவனத்தின் உரிமையாளர். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை