குச்சி ஐஸ் கூட வாங்கமுடியாத குடும்பத்தில் பிறந்தவர், இன்றைக்கு ஆண்டுக்கு 50 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் தொழிலின் உரிமையாளர் !
21-Nov-2024
By பி சி வினோஜ் குமார்
சென்னை
எளிய சாதாரணக் குடும்பத்தில் பிறந்த சதீஷ் சாமிவேலுமணி, ஒரு அரசனுக்கு உரிய இலக்கைக் கொண்டிருந்தார். கல்லூரியில் படிக்கும்போது, ஒரு முட்டை பஃப், ஒரு கப் தேனீர் ஆகியவைதான் அவரது தினசரி மதிய உணவாக இருந்தது. இதுபோன்ற சூழலில்தான் அவர், ஆயிரம் கோடி ரூபாய் ஆண்டு வருவாய் ஈட்டும் ஒரு தொழில்நிறுவனம் தொடங்க வேண்டும் என்று கனவு கண்டார்.
“என்னுடைய வீட்டில் இருந்து எனக்கு மதிய உணவுக்காக கொடுக்கும் 5 ரூபாயில் அவ்வளவுதான் சாப்பிடமுடியும்,” என்கிறார் ஃபிரஷ்லி (Frshly)நிறுவனத்தின் நிறுவனரான சதீஷ். தானியங்கி உணவு விநியோக யூனிட்கள் நிறுவியதன் மூலம், விரைவு ரெஸ்டாரெண்ட் சேவையில்(Quick Service Restaurant) ஒரு அதிர்வை உருவாக்கியிருக்கிறது அவரது உணவு தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனம்.
|
மிகவும் கீழ் நிலையில் இருந்து, கடுமையாக உழைத்து இந்த உயர் நிலையை எட்டி இருக்கிறார் ப்ரெஷ்லியின் நிறுவனரான சதீஷ் சாமிவேலுமணி. (புகைப்படங்கள்: சிறப்பு ஏற்பாடு)
|
இன்டர்நெட் ஆப் திங்க்ஸ் (IoT) என்ற தளத்தில் இயங்கும், தானியங்கி உணவு விநியோக யூனிட்டை சதீஷ் கடந்த 2014-ம் ஆண்டு உருவாக்கினார். அதனை இரண்டு ஆண்டுகளில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் உட்பட மூன்று இடங்களில் பரிசோதனை செய்து பார்த்தார். இப்போது இந்த யூனிட்கள் சென்னை, புனே மற்றும் கொல்கத்தா விமானநிலையங்கள் உட்பட ஆறு இடங்களில் வைக்கப்பட்டிருக்கின்றன.
ஃபிரஷ்லி பல முன்னணி ரெஸ்டாரெண்ட் நிறுவனங்களுடன் இணைந்து அவர்களின் உணவு பாக்கெட்டுகளை, தானியங்கி யூனிட்களில் வைக்கிறது. வாடிக்கையாளர்கள் இந்த மெஷினின் பட்டனைத் தட்டியவுடன், உணவுப் பொருட்கள் அவர்களுக்குக் கிடைக்கின்றன. ஒவ்வொரு யூனிட்டிலும் ஒரு ஊழியர் நிறுத்தப்பட்டிருப்பார். இந்த யூனிட்டில் இருந்து விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு உணவுப் பொருளில் இருந்தும் கிடைக்கும் வருவாயில் ஃபிரஷ்லிக்கு ஒரு பங்கு தரப்படுகிறது.
ஒவ்வொரு யூனிட்டிலும் ஒரு மணி நேரத்தில் 140 உணவுப் பாக்கெட்களை வழங்க முடியும். அதில் 300 உணவுப் பாக்கெட்களை சேமித்து வைக்க முடியும். “இந்த யூனிட்களை எந்த இடத்திலும் 8 முதல் 12 மணி நேரத்துக்குள் நிறுவி விட முடியும்,” என்று பகிர்ந்து கொள்கிறார் சதீஷ்.
“நாங்கள் ஐந்து முதல் ஆறு ரெஸ்டாரெண்ட்களுடன் பங்குதாரர்களாக இருக்கிறோம். 20 முதல் 25 வகையான உணவுகளை வழங்குகிறோம். வாடிக்கையாளர்கள் வருகைக்கு ஏற்ப, சில்லறை விற்பனை கடைகள் போல எங்கள் யூனிட்கள் திறந்திருக்கும். உள்நாட்டு விமானநிலையங்களில் இரவு 11 மணி வரை திறந்திருக்கும். கூட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில் தேவையைப் பூர்த்தி செய்ய காலை 4 மணி முதல் காலை 7 மணிவரை அதிகாலையில் திறக்கிறோம்.”
முதல் மெஷினை உருவாக்க 35 லட்சம் ரூபாய் செலவானது. இது பின்னர் ஒரு யூனிட்டுக்கு ரூ.14-15 லட்சமாக குறைந்தது. இப்போது வெர்ஷன் 3.0-ல் மேலும் குறைந்துள்ளது.
2017-18ம் நிதி ஆண்டில் நிறுவனத்தின் ஆண்டு வருவாய் 5 கோடி ரூபாயாக இருந்தது. இந்த நிதி ஆண்டில், கடந்த ஆண்டை விட பத்து மடங்கு அதிகமாக அதாவது 50 கோடி ரூபாய் ஆண்டு வருவாயைத் தொடும் என்று அவர்கள் நம்புகின்றனர்.
“மும்பை சென்ட்ரல் ரயில் நிலையம் உட்பட 12 கடைகளை அடுத்த மாதம் திறப்பது என்று நாங்கள் திட்டமிட்டுள்ளோம்,”என்கிறார் சதீஷ். “முழுவதும் தானியங்கி முறையிலான கேன்டீனை உதய் ரயில்களில் தொடங்குவது என்றும் திட்டமிட்டிருக்கிறோம்.”
கோவையில் தம் பெற்றோர் மற்றும் தன் உடன்பிறந்த மூன்று பேருடன் 10க்கு 10 அடி சிறிய அறையில் இருந்து வாழ்க்கையைத் தொடங்கி, பல சிரமங்களைக் கடந்து வந்திருக்கிறார். கோவையில் அந்த சிறிய அறையில் வசித்த போது, அங்கு இருந்த 10 குடும்பத்தினருடன் ஒரு பொது டாய்லெட்டை பகிர்ந்து கொள்ள வேண்டிய சூழல் இருந்தது. எனவே, அதிகாலையிலேயே எழுந்து ஒரு பக்கெட் தண்ணீருடன், டாய்லெட் முன்பு 40 பேருடன் ஒருவராக சதீஷ் நிற்பார். அவருடைய குடும்பத்தில் அப்போது பால் வாங்குவதற்கு கூட பணம் இல்லை. எனவே, கருப்பு காஃபிதான் குடித்தனர்.
அவர்கள் குடும்பம் கேரளமாநிலம் பாலக்காடு பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டது. அங்கு அவர்கள் பாரம்பரியமாக தச்சுத் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். எனினும், அவரது தந்தை அந்தத் தச்சுத் தொழிலில் ஈடுபடவில்லை. கோவையில் அவர் தம் வாழ்க்கை முழுவதும் மெஷின் ஆபரேட்டராக பணியாற்றினார். அந்த ஒரு வருமானத்தை வைத்துத்தான் தம் குழந்தைகளை அவர் வளர்த்து ஆளாக்கினார்.
1998-ம் ஆண்டு அவர் ஓய்வு பெற்றபோது 4 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கினார். இந்தக் குறைவான சம்பளம் அவர்களின் வாய்க்கும், வயிற்றுக்குமே போதுமானதாக இருந்தது.
|
ஃபிரஷ்லி 2017-18-ம் நிதி ஆண்டில் 5 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் ஈட்டியது. இந்த ஆண்டில் அதை விட பத்து மடங்கு வருவாய் ஈட்டுவது என்ற இலக்கு வைத்துள்ளது
|
“தந்தையின் குறைந்த வருவாயை வைத்து என்னுடைய தாய் எங்கள் எல்லோருக்கும் சமைத்துப் போட்டார்,”என்கிறார் சதீஷ். “பெரும்பாலும், அரிசி சாதம், குழம்பு கருவாடு ஆகியவற்றை உண்போம். ஆனால் அவர் நன்றாக சமைப்பார்.”
தமது வீட்டுக்கு நண்பர்கள் வந்த நெருக்கடியான பல சூழல்களை சதீஷ் நினைவு கூறுகிறார். வீட்டில் சிறிய கிண்ணத்தில், சாதம், குழம்பு மட்டுமே போட்டு அவர்களுக்குக் கொடுக்கமுடியும். இன்னொரு முறை, சதீஷுக்கு 12 வயதாக இருக்கும்போது, ஒரு குச்சி ஐஸ் வாங்குவதற்காக அம்மாவிடம் 25 பைசா கேட்டார். ஆனால், அந்த குறைந்த அளவு சில்லரை கூட அவரிடம் இல்லை.
“அப்போதுதான், நாம் எவ்வளவு மோசமான பொருளாதாரச் சூழலில் இருக்கிறோம் என்பதை நான் உணர்ந்தேன்,”என்கிறார் சதீஷ். அவர் 12 வயதாக இருந்தபோதுதான், அவரது வீட்டுக்கு குழல் விளக்கு, மின்விசிறி ஆகியவை பொறுத்தப்பட்டன.
சில ஆண்டுகள் கழித்து சதீஷ் தந்தையின் ஓய்வுகால பணபலன்களைக் கொண்டு, கோவையின் புறநகர் பகுதியில் அவர்கள் குடும்பம் ஒரு சிறிய வீடு கட்டியது. கொஞ்சம் போல அவர்கள் சூழல் முன்னேற்றம் அடைந்தது. அது ஒரு இடைக்காலத்துக்குத்தான். கடன்கள் காரணமாக மீண்டும் நிதி நெருக்கடி அதிகரித்தது.
சதீஷ் பத்தாம் வகுப்பு வரை தமிழ் மீடியத்தில் படித்தார். பின்னர் மேல் நிலைப்படிப்பை ஆங்கில வழியில் படித்தார். பின்னர், கோவை குமரகுரு காலேஜ் ஆப் டெக்னாலஜியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தார்.
சதீஷுக்கு 19-வயதாக இருந்தபோது, அவரது அம்மா இறந்து விட்டார். இதனால் அந்த இளம் வயதில் அவருக்கு மேலும் அதிகக் குடும்ப பொறுப்புகளை சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.“என் அம்மாவுக்கு டயாலிஸ் செய்ய பணம் இல்லாததால், அவரை இழந்து விட்டோம். கல்லூரிக்கு சென்று கொண்டே, என் குடும்பத்துக்காக நானே உணவு சமைத்தேன்,” என்கிறார் சதீஷ்.
எனினும், படிப்பில் கவனம் செலுத்துவதில் அவருக்கு எந்தப் பின்னடைவும் அல்லது பிரச்னையும் எழவில்லை. படிப்பில் கல்லூரி அளவில் கோல்டு மெடல் வாங்கினார். தவிர, 1500 மாணவர்களுக்கு மத்தியில் பல்கலைக்கழகம் அளவில் வெள்ளி மெடலும் வாங்கினார்.
1000 கோடி ஆண்டு வருவாய் கொண்ட ஒரு நிறுவனத்தைத் தொடங்க வேண்டும் என்ற தம்முடைய கனவு தீயை எந்த ஒரு தருணத்திலும் அணையாமல் பார்த்துக் கொண்டார். “நான் இந்த கருத்தை நம்பினேன். ‘உங்கள் எண்ணம் எதையெல்லாம் கற்பனை செய்கிறதோ, நீங்கள் அதை அடையமுடியும்,’நான் துணிந்து கனவு கண்டேன். ஏனெனில், நான் இழப்பதற்கு ஒன்றும் இல்லை. என்னவெல்லாம் நீங்கள் செய்யநினைக்கிறீர்களோ, அதில் தைரியமாக நீங்கள் இறங்கி விட வேண்டும். இதர விஷயங்களை பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்பதை நான் நம்பினேன்.”
பொறியியல் பட்டம் முடித்த உடன் அடுத்த இரண்டு ஆண்டுகள், கோவையில் உள்ள எல்கி எக்யூப்மெண்ட்ஸ்(Elgi Equipments), ஷார்ப்ட் டூல்ஸ் உள்ளிட்ட சில நிறுவனங்களில் வேலை பார்த்தார். ஆனால், தம்முடைய இலக்கை அடைய சில உறுதியான தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்பதை அவர் விரைவிலேயே உணர ஆரம்பித்தார்.
“1000 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் ஈட்டும் நிறுவனத்தைத் தொடங்க வேண்டும் என்பதுதான் என் கனவாக இருந்தது. ஆனால், நான், இங்கே 6000 ரூபாய்தான் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தேன். எனவே, என்னுடைய இலக்கை எட்டுவதற்கு பெரிதாக அடி எடுத்து வைக்க வேண்டும் என்று எனக்குத் தெரிந்தது,” எனும் சதீஷ், நியூ ஜெர்ஸி இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜியில், உற்பத்தி பொறியியல்(manufacturing engineering) பிரிவில் எம்.எஸ் படிக்க முடிவு செய்தது குறித்தும் விவரித்தார்.
|
அமெரிக்காவில் படிக்கும்போது, செலவுகளை சமாளிப்பதற்காக பணம் சம்பாதிக்க, அங்குள்ள ரெஸ்டாரெண்ட்களில் பகுதி நேரமாக பாத்திரங்களைக் கழுவினார்.
|
அமெரிக்கா செல்வதற்கும், முதல் செமஸ்டர் கட்டணம் 3 லட்சம் ரூபாய் செலுத்துவதற்கும் பெரும் பிரச்னைகளைச் சந்தித்தார். “அடுத்த இரண்டு ஆண்டுகள் உறுதியான போராட்டமாக இருந்தது. இருந்தாலும் அதனை எதிர்கொண்டேன். அதே இன்ஸ்டியூட்டில் ஆய்வு உதவியாளராக எனக்கு ஒரு வேலை கிடைத்தது. இதனால், டியூஷன் கட்டணத்தில் 50 சதவிகித கட்டண சலுகைக்கான தகுதி எனக்குக் கிடைத்தது.
“நான் பகுதி நேர வேலையும் பார்த்தேன். மாமிசம் வெட்டிக் கொடுத்தேன். ரெஸ்டாரெண்ட்டில் வேலை பார்த்தேன். டேபிள்களை சுத்தம் செய்தேன். பாத்திரங்களைக் கழுவினேன். எல்லாவற்றையும் செய்தேன்,” என்று நினைவு கூறுகிறார் சதீஷ். எம்.எஸ் முடித்த உடன், அவர் ஃபில்ட்ரேஷன்(filtration) பொருட்களை உற்பத்தி செய்யும் க்யூனோ(Cuno) என்ற நிறுவனத்தில் 2002-ம் ஆண்டு முதல் 2012ம் வரை பணியாற்றினார்.
“25வது வயதில் அமெரிக்காவில் நான் சொந்தமாக ஒரு வீடு வாங்கினேன்,”என்கிறார் சதீஷ். 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் அவர் இந்தியா திரும்ப தீர்மானித்தபோது இந்த சொத்துகள், அவருடைய சேமிப்பு எல்லாம் சேர்த்து 5 கோடி ரூபாயாக இருந்தது.
முதலீட்டாளர்களிடம் இருந்து திரட்டிய 250,000 அமெரிக்க டாலர் மதிப்பீட்டில் தமது தொழிலை சதீஷ் தொடங்கினார். உணவு மெஷினை தயாரித்தார். பின்னர், 50 லட்சம் டாலர்களை திரட்டினார். இப்போது ஃபிரஷ்லி, ஓவல் டெக் பிரைவேட் லிமிடெட்டு(Owl Tech Private Limited)க்கு சொந்தமாக இருக்கிறது. அதில் பங்குதாரர்களில் ஒருவராக சதீஷ் இருக்கிறார்.
இந்த நிதி ஆண்டில், பத்து மடங்கு அதிக ஆண்டுவருவாய் ஈட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் இருக்கும் சதீஷ், அவரது வாழ்நாள் இலக்கான 1000 கோடி ரூபாய் நிறுவனத்தை நிச்சயமாகக் கட்டமைத்துவிடுவார். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
அதிகம் படித்தவை
-
மாவில் கொட்டும் கோடிகள்
தினக்கூலி ஒருவரின் மகன் பிசி முஸ்தபா. மின்சாரமும் சாலைகளும் அற்ற கேரள குக்கிராமத்தில் அன்றாடம் செலவுக்கே சிரமப்பட்டு ஏழ்மையில் வளர்ந்த இவர் இன்று தன் உழைப்பால் வளர்ந்து 100 கோடி விற்பனை செய்யும் நிறுவனம் நடத்துகிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை
-
தேனாய் இனிக்கும் வெற்றி
யாருடைய வழிகாட்டுதலும் இன்றி, சுயமாக தேன் விற்பனையில் இறங்கிய சாயா, இன்றைக்கு ஆண்டுக்கு பத்துக்கோடி வருவாய் ஈட்டும் பிராண்டை உருவாக்கி இருக்கிறார். சர்வதேச தேன் பிராண்ட்டுகளுக்கு மத்தியில் அவரது நெக்டார் ஃபிரஷ் தேனுக்கு பெரும் வரவேற்பு இருக்கிறது. பிரீத்தி நாகராஜ் எழுதும் கட்டுரை
-
சாதனை இளைஞர்கள்
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள், அதிக சம்பளம் தரும் வேலைகளை விட்டு விட்டு, ஃபர்னிச்சர்கள் விற்பனை செய்யும் ஆன்லைன் தளத்தைத் தொடங்கினர். இந்தத் துறையில் அனுபவம் இல்லாதபோதும், கடின உழைப்பு மூலம் நான்கு பேரும் சாதித்திருக்கிறார்கள். பார்த்தோ பர்மான் எழுதும் கட்டுரை
-
கம்பளிகளின் காதலன்!
பெட்ஷீட்கள் மீது விருப்பம் கொண்ட புனித் பட்னி, அதையே வாய்ப்பாக மாற்றி தொழிலில் ஈடுபட ஆரம்பித்தார். இன்றைக்கு ஆண்டுக்கு ரூ. 9.25 கோடி வருவாய் ஈட்டும் இரண்டு நிறுவனங்களை கட்டமைத்திருக்கிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை
-
அவங்க ஏழு பேரு…
சிறுவயது நண்பர்கள், பள்ளி படிப்பு முடிந்த உடன், தனித்தனிப்பாதைகளில் பயணித்தவர்கள். வார இறுதி பயணங்களில் மீண்டும் கைகோத்து தொழிலதிபர்களாக உயர்ந்திருக்கின்றனர். 3 டி பிரிண்டர்களை பள்ளிகளுக்கு விற்பனை செய்கின்றனர். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை
-
ஆடைகள் தொழிலில் ஆஹாவென வெற்றி!
அவர் ஐஏஎஸ் ஆகியிருக்கவேண்டியவர். அத்தேர்வில் தோற்றதால் 5 லட்சம் ரூபாய் முதலீட்டுடன் ஓர் ஆடை ஏற்றுமதி நிறுவனத்தைத் தொடங்கினார். இன்று அது 80 கோடி ரூபாய் வர்த்தகம் செய்யும் நிறுவனம். திருப்பூர் தொழில் அதிபர் ராஜா சண்முகத்தின் வெற்றிக்கதையை எழுதுகிறார் பி.சி.வினோஜ் குமார்