Milky Mist

Tuesday, 22 October 2024

ஆறுலட்ச ரூபாய் ஆண்டு வருவாய் தரும் வேலையைத் துறந்தவர்,இப்போது 14 கோடி ஆண்டு வருவாய் ஈட்டுகிறார்!

22-Oct-2024 By உஷா பிரசாத்
மும்பை

Posted 03 Oct 2021

அதிக சம்பளம் தரும் வேலையாக இருந்தும் கூட கரன் டிசிஎஸ் நிறுவனத்தில் இருந்து ஓர் ஆண்டுக்குப் பிறகு விலகினார் மும்பை டிசிஎஸ் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.6 லட்சம் சம்பளம் தரும் வேலையை விட்டு விலகி சொந்த ஊரில் எல்இடி மின் விளக்குகள் விற்பனை செய்யும் நபரை நீங்கள் என்னசொல்லி அழைப்பீர்கள்? அதுவும் இத்தொழில் வாயிலாக முதல் ஆண்டில் வெறும் ரூ.60,000 மட்டும்தான் கிடைத்தது என்று தெரிந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?

நீங்கள் ஒரு முடிவுக்கு வரும் முன்பு, கரன் சோப்ரா என்ற (34) வயது நபரின் முழு கதையையும் முதலில் தெரிந்து கொள்ளுங்கள். இந்த கேள்வியில் இடம் பெற்ற நபர், இன்றைக்கு மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள காம்கானில் வெற்றிகரமான தொழில் அதிபராக உள்ளார்.

2015ஆம் ஆண்டு சிரயூ பவர் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை தொடங்கி சூரிய ஒளி மின்சார தொழிலில் ஈடுபட்டு வருகிறார் கரன் சோப்ரா.(புகைப்படங்கள்: சிறப்பு ஏற்பாடு

எல்இடி விளக்குகள் நன்றாக விற்பனை ஆகாததால் புதிய தொழில் யோசனைகளை தேடிக் கொண்டிருந்தார். ஏதேனும் சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்துடனும், விடாமுயற்சியுடனும் கரன் இருந்தார். பின்னர் அவருக்கு, சூரிய ஒளி மின்சார உற்பத்தி குறித்து ஆர்வம் ஏற்பட்டது. சூரிய ஒளி மின்சார தயாரிப்பதற்கான கருவிகளை நிறுவும் பணிகளை செய்யத் தொடங்கினார். அதுதான் இன்றைக்கு சிரயூ பவர் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் ரூ.14 கோடி ஆண்டு வருவாய் தரும் நிறுவனமாக உயர்ந்திருக்கிறது.

250 வாடிக்கையாளர்களுடன், சிரயூ பவர் நிறுவனமானது இப்போது மகராஷ்டிராவில் சூரிய ஒளி ஆற்றல் தரும் தொழில்நுட்பம் , கொள்முதல் மற்றும் கட்டமைப்பு நிறுவனமாக உயர்ந்திருக்கிறது. அவர்களுக்கு மும்பை, புனே, ஐதராபாத் ஆகிய இடங்களிலும் காம்கானிலும் அலுவலகம் இருக்கிறது.

காம்கானில் உள்ள தொழிலகங்களுக்கு ஒரு மெகாவாட் வரை சூரிய ஒளி மின்சாரம் தரும் கட்டமைப்புகளை சிரயூ பவர் நிறுவனம் நிறுவி கொடுக்கிறது. இன்றைக்கு கட்டட பொறியாளர்கள், மின்னணு பொறியாளர்கள், விற்பனை மற்றும் சந்தைப்படுத்தும் ஊழியர்கள் உட்பட 100 பேர் கொண்ட குழுவை கரன் முன்னெடுத்துச் செல்கிறார்.

“என் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் வெவ்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். நானும், தொழில் முனைவோர் ஆக வேண்டும் என்று விரும்பினேன். ஒருபோதும் யார் ஒருவரின் கீழும் நான் பணியாற்ற விரும்பவில்லை,” எனும் கரன், அதிகம் சம்பளம் தரும் டிசிஎஸ் நிறுவனத்தில் ஒரு ஆண்டு மட்டும் பணியாற்றி விட்டு, விலகியது குறித்து விளக்கம் அளிக்கிறார். 

நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த கரன், மும்பை செம்பூரில் உள்ள விவேகானந்தா கல்லூரியில் ஐடி-யில் பொறியியல் பட்டம் பெற்றார். கரனின் தந்தை பருத்தி விதையை அரைத்து, எண்ணை எடுத்து, சுத்திகரிப்பு நிலையங்களுக்கு உணவுக்கான பருத்தி விதை எண்ணையை வழங்கினார். இந்த தொழிற்பிரிவு காம்கானின் தொழிலகப் பகுதியில் இருக்கிறது. அங்கிருந்துதான் கரன் தன்னுடைய சிரயூ பவர் நிறுவனத்தையும் செயல்படுத்தி வருகிறார்.

அதிக சம்பளம் தரும் வேலையாக இருந்தும் கூட கரன் டிசிஎஸ் நிறுவனத்தில் இருந்து ஓர் ஆண்டுக்குப் பிறகு விலகினார்

கரனின் தாய் குடும்பத்தலைவியாக இருக்கிறார். அவருக்கு மூத்தவராக ஒரு அக்கா இருக்கிறார். அவர் திருமணத்துக்குப் பின்னர் ஐதராபாத்தில் கணவருடன் வசித்து வருகிறார். 2009ஆம் ஆண்டு பொறியியல் பட்டம் பெற்றவுடன், மும்பையில் டிசிஎஸ் நிறுவனத்தில் புரோகிராமராக கரன் பணியில் சேர்ந்தார். ஆண்டுக்கு ரூ.6 லட்சம் என நல்ல சம்பளம் தரும் வேலையில் இருந்தும் கூட, ஒரு ஆண்டுக்குப் பின்னர் அந்த வேலையில் இருந்து விலக வேண்டும் என்று நினைத்தார்.

பணியில் சேர்ந்த பின்னர் 365வது நாளில் அவருக்கு பாராட்டுடன் பதவி உயர்வு குறித்த கடிதமும் அளிக்கப்பட்டது. கரன் அந்த தருணத்தில்தான் தனது பதவி விலகல் கடிதத்தை மின்னஞ்சலில் அனுப்பினார். காம்கான் திரும்பி வந்த அவர் தனது தந்தையுடன் இணைந்து தொழிலில் ஈடுபட்டார்.  

சில ஆண்டுகளுக்குப் பின்னர், தனது தந்தையின் தொழிலில் தான் செய்வதற்கு ஒன்றும் இல்லை என்பதை உணர்ந்தார். “இது ஒரு இயந்திர ரீதியிலான பணியாக  இருந்தது. அதனை விரிவாக்கம் செய்வது குறித்து நான் சிந்திக்கவில்லை. பழைய தொழில் முறையில் அது இயங்கி வந்தது. எனவே சொந்தமாக ஏதேனும் செய்ய வேண்டும் என்று நான் தீர்மானித்தேன்,” என்கிறார் கரன்.

2014ஆம் ஆண்டில் எல்இடி விளக்குகளுக்கான சந்தை இந்தியாவில் அதிகரித்திருப்பதை அறிந்தார். எல்இடி விளக்குகளை மக்கள் ஏற்றுக் கொள்ள ஆரம்பித்திருந்தனர். சில உள்ளூர் தயாரிப்பாளர்களிடம் மாதிரிகளை கொள்முதல் செய்து, அந்த பொருட்களை விற்கதொடங்கினார்.

“நான் இரண்டு அல்லது மூன்று மாதிரிகளை எடுத்துக் கொண்டு காம்கானில் உள்ள தொழிலகப் பகுதிகளைச் சுற்றிவருவேன். ஒரு மாதத்தில் 5 முதல் 10 விளக்குகளை என்னால் விற்க முடிந்தது,” என்று தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். எல்இடி விளக்கு விற்பனையில் ஒரு ஆண்டில் கரன் ரூ.60,000 சம்பாதித்தார். டிசிஎஸ் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.6 லட்சம் சம்பளம் பெற்றவருக்கு ரூ.60,000 என்பது மிகவும் குறைவானதாகும்.

மீண்டும் ஒரு பெருநிறுவனத்தின் பணியில் இணைந்து நல்ல சம்பளம் பெற வேண்டும் என்ற எண்ணம் கரனின் மனதில் பல முறை எழுந்தது. “டிசிஎஸ் நிறுவனத்தின் பணியாற்றும்போது ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்தேன். நான் சம்பாதித்ததை எல்லாம் ஒரு ஆண்டில் நானே செலவழித்தேன். ஒரு போதும் எதிர்கால சேமிப்புக்கு என்று வைத்துக் கொள்ளவில்லை,” என்றார் கரன். கரன் சொந்தமாக தொழில் தொடங்கியபோது, தமது குடும்பத்தினரிடம் இருந்து ஒரு பைசா கூட வாங்கக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தார்.

எல்இடி விளக்குகள் தயாரிப்பு என்பது மிகவும் முதலீடு செலவு பிடிப்பதாக இருந்ததால், அதனை விற்பனை செய்யும் வர்த்தகத்தில் இறங்கினார். ஆனால், அது லாபகரமானது அல்ல என்பதை விரைவிலேயே கண்டறிந்தார். 2015ஆம் ஆண்டு சூரிய ஒளி மின்சாரம் தயாரிப்பு தொழில் வளர்ச்சியடைந்து வருவதைக் கண்டார்.

ஆறு மாதங்கள் வரை சூரிய ஒளி மின்சார தொழில் குறித்து ஆய்வு செய்தார். இது தொடர்பான கருத்தரங்குகள் நிகழ்வுகளில் பங்கேற்றார். அந்த துறையில் உள்ள பல்வேறு நிபுணர்களை சந்தித்தார். சிறிய பரிசோதனை முறைகளிலும் ஈடுபட்டார்.

காம்கானில் உள்ள தொழிலகங்களுக்கு ஒரு மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்யும் கட்டமைப்புகளை சிரயூ பவர் அமைத்துக் கொடுக்கிறது.


இந்த காலகட்டத்தில் அவரது தந்தையின் நண்பர் ஒருவர், ரூ.30,000 மதிப்புள்ள சூரிய மின்சாரம் தயாரிக்கும் அமைப்பை நிறுவுவதற்கு அனுமதித்தார். இதுதான் கிரனின் முதலாவது புராஜக்ட் ஆகும்.

“மின்சாரம் குறித்து என்னிடம்  எந்த புரிதலும் இல்லை. எல்லாவற்றுக்கும் மேலே மின்சாரம் என்றால் மிகவும் பயப்படும் சுபாவம் உள்ளவனாக இருந்தேன்,” என்றார் கரன் சிரித்துக் கொண்டே. “ஆனால், நீங்கள் ஏதாவது ஒன்றில் தொழில் தொடங்க வேண்டும் என்றால், அது குறித்து நீங்கள் சில காலம் ஆய்வு செய்து அறிய வேண்டியது அவசியம்.”

“காம்கானை சுற்றியிருந்த நான்காம் தர மற்றும் ஐந்தாம் தர நகரங்களில் இது குறித்து யாரும் அறிந்திருக்கவில்லை. சூரிய ஒளி மின்சார கட்டமைப்பை நிறுவும் எந்த ஒரு நிறுவனமோ அல்லது வசதி அளிக்கும் எந்த ஒரு நிறுவனமோ அந்தப் பகுதிகளில் செயல்படவில்லை. இது ஒரு புதிய கருத்தாக்கமாக இருந்தது. ஆரம்பகட்டத்தில் யாருமே நான் முன்வைக்கும் தீர்வை கேட்கவில்லை. அதற்கான நேரம் கூட கொடுக்கவில்லை.”

ஆனால், விரைவிலேயே வெவ்வேறு மரபுசாரா எரிசக்தி நிறுவனங்களுக்கு அவர் பல வேலைகளை செய்துகொடுத்தார். அதன் மூலம் நல்ல அனுபவம் கிடைத்தது. 2015ஆம் ஆண்டு இறுதிக்குள், சிறிய அளவிலான வீட்டு உபயோகம் மற்றும் வணிக உபயோகத்துக்கான சூரிய ஒளி மின் திட்டங்கள் அவருக்குக் கிடைக்க ஆரம்பித்தன.

  2016ஆம் ஆண்டில் தனது நனிநபர் உரிம நிறுவனத்தை பிரைவேட் லிமிடெட் நிறுவனமாக மாற்றினார். புல்தானாவில் இருந்து இந்திய அரசின் (புதிய மற்றும் புதுப்பிக்க தக்க எரிசக்தி அமைச்சகம்-எம்என்ஆர்இ)  பதிவு செய்யப்பட்ட முதலாவது பங்குதாரராக சிரயூ பவர் நிறுவனம் விளங்கியது. 2016ஆம் ஆண்டு புல்தானா கிராமிய வங்கியில் இருந்து ரூ.5 லட்சம் அளவிலான சூரிய ஒளி மின் திட்டத்தை அமைக்கும் பணியைப் பெற்றார். “வங்கியில் அடிக்கடி மின் தடை பிரச்னை இருந்தது. என்னுடைய விளக்கத்தை அவர்கள் புரிந்து கொண்டனர். 5 கிலோவாட் திறன் கொண்ட பேட்டரி பேக்அப்புடன் கூடிய மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை தயாரிக்கும் பொறுப்பை அவர்கள் வழங்கினர். ஆனால், பேட்டரியில் இயங்கும் மின் திட்டத்தை எப்படி செயல்படுத்துவது என்று தெரியவில்லை. அந்த தருணத்தில் சூரிய ஒளி மின் உற்பத்தி என்பது செலவு மிக்கதாக இருந்தது.”

அப்போது புல்தானாவில் எந்த ஒரு வங்கியும் சூரிய ஒளி மின்சாரத்தை உபயோகிக்கத் தொடங்கவில்லை. எப்படி சூரிய ஒளி மின் திட்டம் இயங்குகிறது என்பதை கரன் எடுத்து காட்டி அவர்களை சம்மதிக்க வைத்தார். இது நன்றாக செயல்படும் என்று வாக்குறுதி அளித்து திட்டங்களை பெற்றார். ஒரு ரூபாய் கூட முதலீடு இல்லாமல் இந்த திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தினார். வங்கியில் இருந்து 65 சதவிகிதத் தொகையை முன்பணமாக கொடுத்தனர். முதலாவது பணியிலேயே 35 சதவீதத்தை கரன் லாபமாக பெற்றார்.

துலே மாவட்டத்தில் சிர்பூரில்10 கிலோ வாட் சூரிய ஒளி மின் உற்பத்தி செய்யும் கட்டமைப்பை  மேலும் ஒரு வங்கிக்கு கிரன் அமைத்துக் கொடுத்தார். இது மின் கம்பி வடத்துடன் இணைக்கப்பட்டதாக உருவாக்கப்பட்டது.

இப்போதைய நிதி ஆண்டில் ரூ.28 கோடி ஆண்டு வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக கிரன் சொல்கிறார்

இதன்பின்னர் கிரனுக்கு திரும்பிப் பார்ப்பதற்கு நேரம் இல்லை. பின்னர் அவர் 30 கிலோவாட் திட்டம் ஒன்றை முடித்தார். இதனைத் தொடர்ந்து மேலும் அதிக அளவில் பலருக்கு  வீட்டு உபயோகம் மற்றும் வணிக உபயோகத்துக்கான சூரிய ஒளி மின் திட்டங்களை செயல்படுத்தினார்.

“பெருந்தொற்று காலம் என்பது எங்களுக்காகவே ஆசிர்வதிக்கப்பட்டது போல இருந்தது. ஒவ்வொருவரும் வீட்டில் இருந்தே பணியாற்றுகின்றனர். ஜூம் மீட்டிங்கிலேயே நாங்கள் வாடிக்கையாளர்களுடன் பேசுகின்றோம். இந்த பெருந்தொற்று காலத்தில்தான் பல சூரிய ஒளி மின் திட்டங்களை இறுதி செய்தோம்,” என்றார் கரன்.

சூரிய ஒளி  மின்சார கட்டமைப்புகளை அமைப்பதற்கு மத்தியில் சோலார் பேனல்கள் விற்பனையிலும் ஈடுபடுகிறார். காம்கானில் உள்ள தொழிற்சாலையில் சிரயூ பவர் உற்பத்தியாளர்கள் சூரிய ஒளி கட்டமைப்புகளை உருவாக்கின்றனர். சூரிய ஒளி பேனல்கள் மற்றும் இன்வர்டர்களை இறக்குமதி செய்கின்றனர். கரன் இதுவரை நிறுவனத்தில் ரூ.70 லட்சம் முதலீடு செய்துள்ளார். ரூ.1.5 கோடி வங்கிக் கடன்பெற்றுள்ளார். அதே போல பேட்டரிகளை உற்பத்தி செய்து விற்பனை செய்ய வேண்டும் என்றும் கிரன் திட்டமிட்டுள்ளார்.

தனது வணிகத்தின் சோதனையான காலகட்டத்தை நினைவு கூறும்போது, ஆரம்பகட்டத்தில் 2015-16ஆம் ஆண்டில்  சூரிய ஒளி மின்சாரத்தால் இயங்கும் வாட்டர் ஹீட்டர்களை கையாண்டதைப் பற்றிக் கூறினார். வாட்டர் ஹீட்டர்களின் தரம் மோசமானதாக இருந்த தால், ரூ.5 லட்சம் வரை அவருக்கு இழப்பு ஏற்பட்டது.

“எனவே வாட்டர் ஹீட்டர்களை விற்பனை செய்வதை நிறுத்துவது என்று தீர்மானித்தேன். என்னுடைய அலுவலத்தில் இன்னும் அந்த வாட்டர் ஹீட்டர்கள் இருக்கின்றன,” என்றார் அவர்.

சிரயூ பவர், 2015-16ஆம் ஆண்டில் ரூ.10 லட்சம் ஆண்டு வருவாய் ஈட்டியது. அதில் இருந்து ஆண்டு தோறும் 100 சதவிகிதம் தொழில் வளர்ச்சி பெற்று வருகிறது. 2021-22ஆம் ஆண்டில் ஆண்டு வருவாய் ரூ.22 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கின்றனர்.

கிரன் மனைவி மோனலும் இந்த நிறுவனத்தின் ஒரு இயக்குநராக இருக்கிறார். இந்த தம்பதிக்கு ஐந்து வயதில் ஒரு மகள் உள்ளார்.

 
 
 
 
 

அதிகம் படித்தவை

  • Styling her way  to the top

    அம்பிகாவின் நம்பிக்கை!

    ஒரு முறை அல்ல, இரண்டு முறை அல்ல. பலமுறை நண்பர்களால் ஏமாற்றப்பட்டபோதும், மீண்டும் ஃபீனிக்ஸ் பறவை போல எழுந்து வந்தார் அம்பிகா பிள்ளை. இவர் டெல்லியில் புகழ் பெற்ற முடி திருத்தும் கலைஞர் மற்றும் ஒப்பனைக் கலைஞர். சோஃபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை

  • This businessman sold vada pav and repaid Rs 55 lakh debt

    சுவையான வெற்றி

    மும்பையில் தொழில் பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்தாலும் முதல் தொழில்முயற்சியில் 55 லட்ச ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்தார் தீரஜ். அவர் கடனில் இருந்து மீண்டது வடா பாவ் விற்றுத்தான். பிசி வினோஜ்குமார் எழுதும் வெற்றிக்கதை

  • How the son of a government school teacher became a great scientist

    ஒரு விஞ்ஞானியின் கதை

    குறைந்த செலவில் சந்திரனுக்கும் செவ்வாய்க்கும் விண்கலன்கள் அனுப்பியதற்காகப் பாராட்டப்படுகிறவர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை. சின்னவயதில் அண்ணாதுரை ஏழ்மையைத் தன் சிக்கனத்தைக் கடைப்பிடிக்கும் திறனால் வென்றது பற்றி எழுதுகிறார் பி சி வினோஜ் குமார்

  • Tea stall entreprenuer

    தேநீர் விற்கும் ஆடிட்டர்

    புது டெல்லியைச் சேர்ந்த ஆடிட்டரான ராபின் ஜா சம்பந்தமே இல்லாத ஒரு வேலையைச் செய்துவருகிறார். ஆம்... அது தேநீர் விற்பனை! டீபாட் எனும் சங்கிலித்தொடர் தேநீர் விற்கும் கடைகளைத் தொடங்கி மாதம் 50 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டுகிறார். நரேந்திர கவுசிக் எழுதும் கட்டுரை

  • Moms care

    ஒரு தாயின் தேடல்

    வெளிநாடுகளில் இருப்பது போல இந்தியாவில் குழந்தைகளுக்கான பாதுகாப்பு பொருட்கள் இருக்கிறதா என்று தேடினார் இளம் தாயான மாலிகா. ஆனால், அவருக்கு கிடைத்த பொருட்கள் தரமாக இல்லை. தொடர்ந்து தானே குழந்தைகளுக்கான பொருட்களை உற்பத்தி செய்யத் தொடங்கினார். சோஃபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை

  • successful caterer

    கேட்டரிங்கில் சிகரம் தொட்டவர்

    மேற்கு வங்க மாநிலத்தின் ஒரு மூலையில் உள்ள குக்கிராமத்தில் பிறந்தவர் தேப்நாத். அவர் பிறந்த சமயம் அவர்கள் குடும்பம் வறுமையில் வாடியது. பள்ளிக்கல்வி முடிந்ததும் டெல்லிக்கு வந்து கடின உழைப்பால் கேட்டரிங் தொழிலில் வெற்றியைப் பெற்று இன்றைக்கு 200 கோடி ரூபாய் சொத்துகளை உருவாக்கி உள்ளார். குர்விந்தர் சிங் எழுதும் கட்டுரை