15 ஆயிரம் ரூபாயில் தொடங்கி, 1450 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் தமிழக தொழிலதிபர்!
30-Oct-2024
By பி சி வினோஜ் குமார்
சென்னை
தமிழகத்தில் உள்ள கடலூரைச் சேர்ந்த 22 வயது இளைஞர், 1983-ம் ஆண்டு ஒரு முக்கியமான முடிவு எடுத்தார். அது தன் 15 ஆயிரம் ரூபாய் சேமிப்புப் பணத்தைக் கொண்டு சொந்தமாக வியாபாரம் செய்ய வேண்டும் என்பது! இந்த கனவுடன் வீட்டை விட்டு வெளியேறினார்.
அந்த இளைஞர்தான் சி.கே.ரங்கநாதன். வீட்டை விட்டு வெளியேறுவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு தந்தையை இழந்து விட்டார். அவரது உடன் பிறந்தவர்கள் 5 பேர். குடும்பத்துக்குச் சொந்தமான 30 ஏக்கர் கொண்ட பண்ணை வீட்டில் எல்லோரும் ஒன்றாக வசித்து வந்தனர். பண்ணை வீட்டில் விவசாயக் கிணற்றில் நீச்சல் அடித்துக் கொண்டும், குளத்தில் மீன் பிடித்துக் கொண்டும், புறாக்களுடன் விளையாடிக் கொண்டும், தென்னை, மாமரங்களை சுற்றி வந்தும், நண்பர்களுடன் உடற்பயிற்சி செய்து கொண்டும் ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கையை ரங்கநாதன் வாழ்ந்து கொண்டிருந்தார்.
|
கவின்கேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சென்னை அலுவலகத்தில் அதன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர், சி.கே.ரங்கநாதன். (புகைப்படங்கள்: எச்.கே.ராஜசேகர்)
|
ரங்கநாதன், அவரது மூத்த சகோதரர்களுடன், குடும்பத் தொழில் தொடர்பாகக் கருத்து வேறுபாடு கொண்டிருந்தார் (அவரது குடும்பத்தினர் வெல்வெட் ஷாம்பூ பாக்கெட் விற்பனை செய்து வந்தனர். அந்த நாட்களில் இது மிகவும் பிரபலமாக இருந்தது). அதனால், வீட்டை விட்டு வெளியேறுவது என்ற ஒரு கடினமான முடிவை ரங்கநாதன் எடுத்தார்.
இப்போது நினைத்துப்பார்க்கையில் வீட்டை விட்டு வெளியேறிய நிகழ்வில் இன்று சிகேஆர் என்று அழைக்கப்படும் அவருக்கு வருத்தமேதுமில்லை. 34 ஆண்டுகளுக்கு முன்பு, சிறு தொழிலாக, சிக் ஷாம்புவை தயாரிக்கத் தொடங்கினார். இதுதான், கவின்கேர் பிரைவேட் லிமிடெட் (Cavinkare Private Limited) என்ற பெயரில் 1450 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் ஈட்டும் நிறுவனமாக உருமாறியது. சுய அழகு சாதனப் பொருட்கள், பால்பொருட்கள், ஸ்நாக்ஸ், குளிர்பானங்கள் உள்ளிட்ட வெவ்வேறு பலன்களை அளிக்கக் கூடிய பொருட்களை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.
அவரது தொடக்கம் என்பது எளிமையாகத்தான் இருந்தது. தமது சேமிப்பில் இருந்து 15 ஆயிரம்ரூபாயை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய உடன், ரங்கநாதன் முதலில் தங்குவதற்கு ஒரு இடம் பார்த்தார். அந்த இடம் அவரது வீட்டில் இருந்து 250 மீட்டர் தொலைவில்தான் இருந்தது.
“ஒரு அறை மட்டுமே கொண்ட வீடு அது. மாத வாடகை 250 ரூபாய், ஒரு கெரசின் ஸ்டவ் வாங்கினேன். விரித்து மடக்கக்கூடிய ஒரு கட்டில் வாங்கினேன். தவிர, தெருக்களில் சுற்றி வருவதற்கு ஒரு சைக்கிளும் வாங்கினேன். வீடு எனும் பாதுகாப்பான இடத்தில் இருந்து வெளியேறிய போதே, எந்த ஒரு பிரச்னையையும் எதிர்கொள்ள நான் தயாராகிவிட்டேன்.
“என்னுடைய வீட்டில் இருந்து வெளியேறுவது என்று தீர்மானித்த உடன், ஒரு நிமிடம் கூட அதில் இருந்து பின்வாங்கவில்லை. அந்த நேரத்தில் நான் பெரிய தவறு இழைப்பதாக சிலர் நினைத்தார்கள்,” என தம்முடைய சென்னை சென்டாப் சாலை அலுவலகத்தில் ஒரு டிசம்பர் மாதத்தின் மாலைப்பொழுதில் ரங்கநாதன், தம் தொடக்க காலத்தை நினைவு கூர்ந்தார்.
தொடக்க காலத்தில் இருந்தே, ரங்கநாதனின் வெற்றிகரமான தொழில் முனைவுப் பயணத்துக்கு உறுதுணையாக இருப்பது, விரைந்து முடிவு எடுக்கும் திறன் எனும் அவரது தனித்தன்மைதான்.
ஆரம்ப கால கட்டம் குறித்து ரங்கநாதன் கூறுகையில், சகோதரர்களுக்குப் போட்டியாக ஷாம்பூ தயாரிக்க வேண்டும் என்று அவர் நினைக்கவில்லை. ஒரு கோழிப்பண்ணை தொடங்குவது என்பது உட்பட சில யோசனைகளை திட்டமிட்டிருந்தார். ஆனால், தமக்கு தெரிந்தது ஷாம்பூ தயாரிப்பு மட்டும்தான் என்பதை கூடிய விரைவிலேயே அவர் உணர்ந்தார்.
|
குறுகிய காலத்துக்குள் முக்கியமான முடிவுகளை எடுப்பது எப்படி என ரங்கநாதன் புரிந்திருந்தார்.
|
புதுச்சேரி மாநிலத்தில் தான் தொழில் தொடங்குவதற்கு எளிதாக லைசென்ஸ் கிடைக்கும். எனவே, புதுச்சேரியில் ஒரு தொழிற்சாலை தொடங்கவேண்டும் என்று முடிவு எடுத்தார்.
“விண்ணப்பம் செய்த ஒரு வாரத்திலேயே நான் லைசென்ஸ் வாங்கினேன். இதுவே தமிழகமாக இருந்தால், லைசென்ஸ் எடுப்பதற்கு நான்கு முதல் ஆறு மாதங்கள் ஆகியிருக்கும். அதற்குள் என் கையில் இருக்கும் பணம் எல்லாம் கரைந்திருக்கும்,” என்கிறார் ரங்கநாதன். அவரது முதல் தயாரிப்பு சிக் ஷாம்பூ. 7 மில்லி கொண்ட ஷாம்பூ பாக்கெட்டை 75 பைசா விலையில் சந்தையில் அவர் அறிமுகம் செய்தபோது, அவர் வீட்டை விட்டு வெளியேறி ஒரு மாதம்தான் ஆகி இருந்தது.
சின்னி கிருஷ்ணன் எனும் தம் தந்தையின் பெயரில் இருக்கும் ஆங்கில எழுத்துக்களான (CHIK) சிக் என்ற பெயரை தமது ஷாம்பூ தயாரிப்புக்கு பெயர் வைத்தார். பல்வேறு வகையிலான சிக் ஷாம்பூகள், கவின்கேர் நிறுவனத்தின் முன்னணி பிராண்ட் ஆக விற்பனை ஆகின்றன. நிறுவனத்தின் 1450 கோடி வருவாயில், சிக் ஷாம்பூ விற்பனை மட்டும் 300 கோடி ரூபாய்க்கு இருக்கிறது.
ரங்கநாதனின் நிறுவனம் வெறும் 4 தொழிலாளர்களுடன், புதுச்சேரியின் கன்னி கோயிலில் தொடங்கியது. மாதம் 300 ரூபாய் வாடகையில், 3,500 ரூபாய் மதிப்புள்ள இயந்திரத்துடன் தொழிலைத் தொடங்கினார். இன்றைக்கு இந்தியாவுக்கு வெளியே கடல் கடந்தும் அவரது தொழில் விரிவடைந்திருக்கிறது.
கவின்கேரின் பொருட்கள் இப்போது, இலங்கை, வங்கதேசம், நேபாளம், மலேசியா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் கிடைக்கின்றன. கவின்கேர் பங்களாதேஷ் பிரைவேட் லிமிடெட், கவின்கேர் லங்கா பிரைவேட் லிமிடெட் என்ற இரண்டு வெளிநாட்டு துணை நிறுவனங்களையும் கவின்கேர் கொண்டுள்ளது. அனைத்து நிறுவனங்களிலும் சேர்த்து 4000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். முக்கியமாக, சலூன் சங்கிலித் தொடர் நிறுவனங்களான லைம்லைட் மற்றும் க்ரீன் டிரன்ட்ஸ் உள்ளிட்ட கடைகளில் மட்டும் 2000 பேர் பணியாற்றுகின்றனர்.
கடலூரில், கிராமிய சூழலில், மீனவ சமூக நண்பர்களுடன் விளையாடித் திரிந்த சிறுவன், ஆங்கிலம் மீடியம் படிக்க கடினமாக இருந்ததால், தமிழ் மீடியம் படித்தவன், இதனால், ‘நீ உருப்பட மாட்டே’ என்று தாயால் ஆசிர்வதிக்கப்பட்டவன், இன்றைக்கு இவ்வளவு தூரம் உயர்ந்திருக்கிறார் என்றால் அவரது சொந்த முயற்சிதான் காரணம்.
|
ரங்கநாதனைப் பற்றிய ஒரு சிறிய உண்மை. அவர் பறவைகளின் காதலர்.சென்னையில் உள்ள அவரது வீட்டில், நூற்றுக்கணக்கான பறவைகளை தம் துணையாக வைத்திருக்கிறார்.
|
இளம் வயதில் தான் வாழ்ந்தது போலவே ஒரு பண்ணையை அவர் மீண்டும் சென்னையில் உருவாக்கி வைத்துள்ளார். சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் கடற்கரையை ஒட்டிய 3.5 ஏக்கர் பரந்த பரப்பளவில் அவரது அழகான வீடு இருக்கிறது. மயில், வான்கோழிகள், கிளிகளைக் கொண்ட கூண்டுகளுக்கு மத்தியில் அவர் வசிக்கிறார். பறவைகள் சரணாலயம் போல் அது இருக்கிறது. பறவைகளைப் பார்ப்பது மற்றும் அதுடன் நேரத்தைப் போக்குவது சி.கே.ஆரின் தினசரி பணிகளில் ஒன்றாக இருக்கிறது.
இந்த ஒரு நிலையை அடைவதற்கு, ரங்கநாதன் கடுமையாக உழைத்தார். எல்லா நேரங்களிலும் சரியான தருணங்களை உருவாக்கினார். சரியான பலனைத் தராவிட்டால், முடிவுகளை மறுபரிசீலனை செய்தார். எல்லா நேரங்களிலும் கற்றுக் கொண்டார்.
தொழிலின் ஆரம்ப காலகட்டங்களில், தம் குடும்பத்தில் இருந்து வரும் வெல்வெட் ஷாம்பூவின் நேரடிப்போட்டியாளராக இருந்தார்.
1983-ல் சிக் ஷாம்பூவை தொடங்கியபோது, முட்டை சேர்க்கப்பட்ட ஷாம்பூவை பாக்கெட் ஒன்றுக்கு 90 பைசா விலையில் அறிமுகம் செய்தார். வெல்வெட் ஷாம்பூவை விட 15 பைசா அதிகம் இருந்தது. “ஒரு விநியோகஸ்தர் என்னிடம், ‘இது நல்ல வியாபார உத்தி அல்ல’ என்றார். எனவே, உடனடியாக ஷாம்பூ விலையை 75 பைசாவாகக் குறைத்தேன்,” என்று நினைவுகூர்கிறார் ரங்கநாதன்.
வீட்டை விட்டு வெளியேறிய 26-வது நாளில் சிக் ஷாம்பூவுக்காக முதல் பில் போட்டார். முதல் ஆண்டு முடிவில், அவரது ஷாம்பூ விற்பனை 6 லட்சம் ரூபாயாக இருந்தது.
முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பேத்தி ஆர்.தேன்மொழியை 1987-ம் ஆண்டு ரங்கநாதன் மணம் முடித்தார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தபோதிலும், இருதரப்பு வீட்டாரின் சம்மதத்துடன் நடைபெற்ற திருமணம் என்று சி.கே.ஆர் சொல்கிறார். அந்த நேரத்தில் அவரது நிறுவனம் மாதத்துக்கு 3.5 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டியது.
ரங்கநாதனின் சிக் இந்தியா நிறுவனத்துக்கு (அப்போது அதுதான் பெயர்) ஒரு திருப்புமுனை தருணம் 1988-ல் ஏற்பட்டது. எந்த ஒரு பிராண்டின் 5 காலி ஷாம்பூ பாக்கெட்களைக் கொடுத்து, ஒரு சிக் ஷாம்பூ பாக்கெட் இலவசமாகப் பெறலாம் என்று அறிவித்தார்.
இது சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த உத்தி, வெல்வெட் ஷாம்பூ விற்பனையை வெகுவாகப் பாதித்தது. சிக் ஷாம்பூவின் விற்பனை அதிகரித்தது. பின்னர், சிக் ஷாம்பூவின் காலிப் பாக்கெட்களைக் கொடுத்தால் மட்டுமே, சிக் ஷாம்பூவை இலவசமாகப் பெறலாம் என்று அறிவித்தார். அப்போது சிக் ஷாம்பு மேலும் அதிகம் விற்பனை ஆனது. சந்தையில் சிக் ஷாம்பு மிகப் பெரிய உயரத்தைத் தொட்டது.
|
1980-ம் ஆண்டு, ரங்கநாதனின் எக்ஸ்சேஞ்ச் திட்டம் மூலம், அவரது போட்டியாளரான வெல்வெட் ஷாம்பூ விற்பனை குறைந்தது. சிக் ஷாம்பூவின் விற்பனை அதிகரித்தது
|
“இந்த திட்டம் வெறித்தனமான வெற்றியைக் கொடுத்தது. வெல்வெட் ஷாம்பூவை தவிடுப்பொடியாக்கியது. அப்போது கோத்ரெஜ் நிறுவனம் வெல்வெட் ஷாம்பூவின் விநியோகஸ்தராக இருந்தது. நான், அந்த மிகவும் திறன் வாய்ந்த குழுமத்தை எதிர்த்துப் போராடினேன். என்னுடைய திட்டம் சந்தையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அடுத்த பத்து மாதங்கள் கழித்து அந்தத் திட்டத்தை நிறுத்தி விட்டேன்.” எதிரியைத் தோற்கடிக்கும் பெரும் கதாநாயகனாக மாறிய அந்த நாட்களின் சுவைமிகுந்த அனுபவத்தை தெளிவாகக் கூறுகிறார்.
1989-ம் ஆண்டு, ஆண்டு வருவாய், ஒரு கோடி ரூபாயைத் தாண்டிச் சென்றது. அப்போது கோலிவுட்டில் பிரபல கதாநாயகியாக இருந்த, நடிகை அமலாவை தமது நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக ரங்கநாதன் நியமித்தார். அவரை வைத்து, தொலைகாட்சி மற்றும் அச்சு ஊடகங்களில் விளம்பரம் செய்வதற்கு ஏராளமாகப் பணம் செலவழித்தார்.
அதன் பின்னர், சிக் ஷாம்பூ ஆண்டு வருவாய் 4.5 கோடி ரூபாயைத் தொட்டது. பின்னர், ஒரு ஆண்டு கழித்து 12 கோடி ரூபாயைத் தொட்டது. 1990-ல் அவரது நிறுவனத்தின் பெயர் பியூட்டி காஸ்மெடிக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்று மாறியது. 1991-92ல் மீரா ஹெர்பல் ஹேர்வாஷ் பவுடரை ரங்கநாதன் அறிமுகம் செய்தார்.
அடுத்து வந்த ஆண்டுகளில் மேலும் பல பொருட்களை, ரங்கநாதனின் நிறுவனம் தொடங்கியது. 1993-ல் நைல் ஹெர்பல் ஷாம்பூ, 1997-ல் ஸ்பின்ஷ் பெர்ஃப்யூம், இண்டிகா ஹேர் டை மற்றும் 1998-ல் ஃபேர்எவர் ஃபேர்னஸ் க்ரீம் ஆகியவற்றைத் தொடங்கினர்.
1998-ல் கவின் கேர் (CavinKare’) என்ற இப்போதைய பெயரைப்பெற்றது. CKஎன்ற ஆங்கில எழுத்து, அவரது தந்தையின் (ChinniKrishnan ) சின்னி கிருஷ்ணன் என்ற எழுத்துக்களைக் கொண்டிருந்தது. அவரது தந்தை, சிறிய அளவிலான ஃபார்மாசூட்டிக்கல் மற்றும் காஸ்மடிக் பொருட்களைத் தயாரித்து வந்தார். கவின் என்ற வார்த்தைக்கு அழகு என்று பொருள்படும்.
2001-ம் ஆண்டு நிறுவனத்தின் ஆண்டு வருவாய் 200 கோடி ரூபாயைத் தொட்டது. அடுத்த ஆண்டு, சங்கிலித் தொடர் சலூன்கடைகளைத் தொடங்கினார். இதில், பெரும் தொழில் வாய்ப்புகள் இருந்ததை அவர் உணர்ந்தார்.
|
வாழ்வை மகிழ்ச்சியுள்ளதாக்குதல் என்பதுதான் கவின் கேர் நிறுவனத்தின் தாரகமந்திரம்.
|
“நான் சலூன் கடைக்கு முடி வெட்டிக்கொள்ளச் செல்லும் போதெல்லாம், அதன் உரிமையாளர்களிடம், மேலும் சில கடைகளைத் தொடங்குவது பற்றி ஏன் சிந்திக்கவில்லை என்று கேட்பது வழக்கம். ஏன் தங்கள் கடையை விரிவாக்கம் செய்யவில்லை என்பதற்கு அவர்கள் பல்வேறு காரணங்களை அடுக்குவார்கள். நான் அதை ஒரு வாய்ப்பாகத்தான் பார்த்தேன். எனவே, நாங்கள் சலூன் தொழிலில் கால்பதித்தோம்,” என்கிறார் ரங்கநாதன்.
அதன்பின்னர், 5 ஆண்டுகள் கழித்து, கவின்கேர் சார்பில் சின்னி சிக்கி என்ற பாரம்பர்யமான சத்துமிகுந்த கடலை மிட்டாய் பிராண்டை தொடங்கினர். இந்த பிராண்ட் இப்போது, 7 முதல் 8 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் தருகிறது.
கவின் கேர் நிறுவனத்தின் மிகப்பெரிய பலம் என்பது அதன் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவுதான். அங்கு 70 பேர் பணியாற்றுகின்றனர். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி வேதியியல் முடித்தவரான ரங்கநாதன், எல்லாவற்றுக்கும் சேர்த்து இந்த வர்த்தகத்துக்கு இப்பிரிவுதான் முக்கியமாக உள்ளதாகக் கூறுகிறார்.
“நான், குடும்ப வர்த்தகத்தில் இணைந்தபோது, (ரங்கநாதன் தம் சொந்த நிறுவனத்தைத் தொடங்கும் முன்பு, அங்கே எட்டு மாதங்கள் பணியாற்றினார்) ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி ஆய்வகத்தை நான் தான் முதலில் உருவாக்கினேன்.
“நான் சொந்தமாகத் தொழில் தொடங்கிய ஐந்து மாதத்துக்குள் வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சிப் பிரிவை தனியாக, ஒரு கட்டடத்தில் தொடங்கினேன். அந்தக் கட்டடத்துக்காக 500 ரூபாய் வாடகை கொடுத்தேன். அப்போது அது பெரிய செலவாக இருந்தது. ஆய்வகத்தில் பணியாற்ற இரண்டு வேதியியல் பட்டதாரிகளை நியமித்தேன்,” என்கிறார் ரங்கநாதன். அவர்கள்தான், ரங்கநாதனின் தொலைநோக்குக்கான சொத்தாக இருக்கின்றனர்.
ரங்கநாதனைப் போல தமிழ் மீடியத்தில் படிப்பதை விரும்பாமல்,அவருடைய குழந்தைகள் ஆங்கில மீடியத்தில் படித்தனர். சிகேஆர் தமது தொழிலை இந்தியா முழுமைக்கும் விரிவு படுத்தியபோது, ஆங்கில அறிவின் அவசியத்தை உணர்ந்தார். எனினும், நேரத்தை வீணாக்காமல், ஆங்கிலம் கற்க ஒரு திட்டத்தைச் செயல்படுத்தினார்.
“தமிழ் நாளிதழ்கள் படிப்பதை நிறுத்தி விட்டேன். ஆங்கில நாளிதழ்களுக்கு சந்தா கட்டினேன். ஒரு ஆங்கில டிக்ஷனரி வாங்கினேன். நாள் ஒன்றுக்கு ஐந்து புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக் கொண்டேன். ஒவ்வொரு ஐந்து வார்த்தைகளையும் பயன்படுத்தி நானே ஐந்து வாங்கியங்களை எழுதிப் பார்த்தேன்,” என்கிறார் ரங்கநாதன்.
|
சிக் ஷாம்பூ வகைகளின் பாக்கெட்களை ரங்கநாதன் பிடித்திருக்கிறார். இந்த ஷாம்பூ பாக்கெட்கள் விற்பனையில் ஆண்டுக்கு 300 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது.
|
இன்றைக்கு, அவர் சரளமாக ஆங்கிலம் பேசுகிறார். நாடு முழுவதும் இருந்து, தம் நிறுவனத்தில் சேர்ந்திருக்கும் ஊழியர்களுடன் ஆங்கிலத்தில்தான் அவர் பேசுகிறார்.
கடலூர் எனும் சிறிய நகரத்தில் தொழிலதிபராக இருந்தவரின் மகனான ரங்கநாதன், பன்னாட்டு நிறுவனங்களுடன் போட்டி போட்டு இன்றைய நிலையை அடைந்திருக்கிறார். தொடர்ந்து அவர், ஒரு தொழில் முனைவோராக சீரான வளர்ச்சியைப் பெற்று வருகிறார். புத்திசாலித்தனமாக நிறுவனங்களைக் கையகப்படுத்துவதன் மூலம் தமது தொழிலை விரிவு படுத்துகிறார்.
காஞ்சிபுரத்தில் நலிவுற்று இருந்த ஒரு பால் பண்ணைப் பிரிவை கையகப்படுத்தி, 2008-ல் பால் பொருட்கள் தொழிலில் கால்பதித்தார். 2009-ல் மும்பையில் உள்ள ஸ்நாக்ஸ் மற்றும் நாம்கீன்ஸ் தயாரிப்பு நிறுவனமான கார்டன் நாம்கீன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை கையகப்படுத்தினார். மா ப்ரூட் டிரிங், ருசி ஊறுகாய் ஆகிய நிறுவனங்களையும் கையகப்படுத்தி இருக்கிறார்.
2013-ல் சிரிஸ்கேப்பிடல் எனப்படும் பிரைவேட் ஈக்விட்டி நிறுவனம் கவின்கேர் நிறுவனத்தில் 250 கோடி ரூபாய் முதலீட்டுடன், 13 சதவிகிதப் பங்குகளை வைத்திருந்தது. கடந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தப் பங்குகளை 525 கோடி ரூபாய்க்கு ரங்கநாதனே திரும்பவும் வாங்கி விட்டார்.
ரங்கநாதனின் குழந்தைகளான அமுதா, மனு மற்றும் தரணி மூவரும், தந்தையின் பணத்தில் சொந்தமாகத் தொழில் செய்யும் முயற்சியில் இறங்கி இருக்கின்றனர். அவர்களின் செயல்பாடுகளை மதிப்பிட்டு, அதன் பின்னர், கவின்கேர் நிறுவனத்தை தன்னுடைய வாரிசாக நடத்தப்போவது யார் என்பதை ரங்கநாதன் முடிவு செய்ய உள்ளார். “அவர்களில் திறன் வாய்ந்தவர், தலைமைப் பொறுப்பை ஏற்பார். மற்ற இருவர் தலைமைப் பொறுப்பு ஏற்பவரின் வழியைப் பின்பற்றுவார்கள்,” என்று உறுதியாக தெரிவிக்கிறார் ரங்கநாதன்.
அடுத்த தலைமுறையிடம், நிறுவனத்தின் பொறுப்புகளை கை மாற்றி விடும் கட்டத்துக்கு அருகில் ரங்கநாதன் இப்போது இல்லை. ஆனால், தொலைநோக்குப் பார்வை கொண்ட மனிதராக அவர் இருப்பதால், சரியான நேரம் வரும்போது தமது பிள்ளைகள் அவரது தொழிலை திறம்பட எடுத்து நடத்த வேண்டும் என்று விரும்புகிறார்.
அதிகம் படித்தவை
-
மெத்தென்று ஒரு வெற்றி
மாதவன் தமது 55 வது வயதில் சொந்த தொழில் தொடங்கினார். 30 ஆண்டுகள் கர்ல் ஆன் நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவம் அவருக்கு சொந்த தொழிலில் வெற்றியைக் கொடுத்தது. இன்றைக்கு மெத்தை சந்தையில் உயர்ந்து நிற்கிறார் மாதவன். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை
-
வென்றது கல்லூரிக் கனவு!
கார்த்திக் ஒரு பிரபலமான ஹோட்டல் குழுமத்தின் வணிக வாரிசு. அவருக்கு தாமே ஏதாவது சொந்தமாக செய்ய வேண்டும் என்ற உந்துதல். எனவே கல்லூரி படிக்கும்போதே பயண ஏற்பாட்டாளராக தொழில் செய்தார். படிப்பு முடிந்த உடன் தொழிலில் முழுமையாக மூழ்கி வெற்றி பெற்றார். சோஃபியா டானிஸ்கான் எழுதும் கட்டுரை.
-
தேடி வந்த வெற்றி
மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த சுஷாந்த் குப்தா, அவுட்சோர்ஸ் முறையில் பணிகளை செய்து கொடுக்க தம் வீட்டு படுக்கையறையில் ஒரு நிறுவனம் தொடங்கினார். இன்றைக்கு 141 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் தரும் நிறுவனமாக அது வளர்ந்துள்ளது. சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை
-
போராடி வெற்றி!
டிசிஎஸ் நிறுவனத்தில் நல்ல வேலையில் இருந்த கரன் சோப்ரா, திடீரென அந்த வேலையை விட்டுவிட்டு எல்இடி விளக்குகள் விற்பனையில் ஈடுபட்டு அதில் தோல்வியை கண்டார். எனினும் விடா முயற்சியுடன் போராடி, இப்போது ஆண்டுக்கு 14 கோடி வருவாய் ஈட்டுகிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.
-
காபி தரும் உற்சாகம்
வடோதராவில் இரண்டு நண்பர்கள் 12 லட்சம் முதலீடு செய்து 2008-ல் காபி ஷாப் தொடங்கினர். இப்போது அவர்களுடைய காபிஷாப் நிறுவனம் இந்தியாவில் மிகவும் வேகமாக வளரும் நிறுவனம். 8.3 கோடி ரூபாய் ஆண்டுக்கு விற்பனை செய்கிறார்கள் என்கிறார் கவிதா கனன் சந்திரா
-
சுவை தரும் வெற்றி
கொல்கத்தாவைச் சேர்ந்த கல்லூரி நண்பர்களான வினோத்துக்கும் சாகருக்கும் மொமோ என்கிற உணவுப் பண்டத்தை சாப்பிடப் பிடிக்கும். இருவரும் சேர்ந்து மோமொ விற்பதையே தொழிலாக்கினார்கள். இன்று 100 கோடி மதிப்பில் அத்தொழில் வளர்ந்துள்ளது. ஜி சிங் எழுதும் கட்டுரை