“பாத்திரம் கழுவினேன், பார்சலும் கட்டினேன்”- ஓர் இளம் தொழிலதிபரின் வெற்றிக்கதை
21-Nov-2024
By குருவிந்தர் சிங்
கொல்கத்தா
WTF! (வேர்இஸ் த ஃபுட் ) எனும் ரெஸ்டாரெண்ட்டை நிறுவிய சயான் சக்ரவர்த்தி 23 வயதாகும் இளைஞர். கொல்கத்தாவில் இப்போதுதான் சிறகு விரிக்கத் தொடங்கி இருக்கிறது இந்த சங்கிலித் தொடர் ரெஸ்டாரெண்ட். 149 ரூபாய் விலையில் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் உணவு விற்பனை செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் தொடங்கப்பட்ட இந்த உணவகம், விறுவிறுப்பான வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது.
தெற்கு கொல்கத்தா, சால்ட் லேக் என இரண்டு பகுதிகளில் குளிரூட்டப்பட்ட வசதி கொண்ட இரண்டு ரெஸ்டாரெண்ட்கள் உள்ளன. இங்கு பல்வேறு வகையான சைவ, அசைவ உணவு வகைகளான முட்டை கோழிக்கறி சாதம், மொறுமொறு மிளகாய் பேபிகார்ன், சில்லி சிக்கன் டிரை மற்றும் தந்தூரி சிக்கன் 139 ரூபாய் விலையிலும், சாண்ட்விச் 69 ரூபாயிலும் விற்கப்படுகிறது.
|
சயான் சக்கரவர்த்தி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த ரெஸ்டாரண்ட்களைத் தொடங்கினார். அமெரிக்காவில் பகுதி நேர வேலை பார்த்து சேமித்து வைத்திருந்த 8 லட்சம் ரூபாயை முதலீடு செய்தார். (புகைப்படங்கள்: சிறப்பு ஏற்பாடு)
|
“இந்த ரெஸ்டாரெண்ட்கள் மாணவர்கள், நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த வாடிக்கையாளர்களால், புகழ்பெற்றிருக்கிறது. 8 மாதங்களுக்குள், ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான வருவாயை ஈட்டியிருக்கிறோம்,” என்கிறார் சயான். இவர் கொல்கத்தாவில் உள்ள சேவியர் கல்லூரியில் இருந்து சர்வதேச உறவுகளுக்கானப் பட்டம் பெற்றிருக்கிறார். “எல்லோருக்கும் தெரிந்த பெயராக ரெஸ்டாரெண்ட்டுக்கு வைக்க வேண்டும், மக்கள் எளிதாக நினைவு வைத்துக் கொள்ளும்படியும் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். எனவேதான் இந்த பெயரை நான் தேர்ந்தெடுத்தேன். இதன் அர்த்தம் ஏதாவது ஒன்றாக இருக்கலாம் என்று பலர் நினைக்கலாம். ஆனால், நாங்கள் சொல்லும் அர்த்தம் - WTF என்பது, வேர்இஸ் த ஃபுட் (Where’s The Food) என்பதுதான்.”
சயான் வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். ஆனால் அவர் தமது ரெஸ்டாரெண்ட்டை தமது சொந்தச் சேமிப்பில் இருந்துதொடங்கினார். அவரது தந்தை கார்கோ தொழிலில் ஈடுபட்டு வருகிறார். கொல்கத்தா விமான நிலையம், துறைமுகம், ஹால்டியா கப்பல் முனையம் ஆகிய இடங்களில் இந்த நிறுவனம் சரக்குகளை கையாளுகிறது.
சயான் பள்ளியில் படிக்கும் போதே அவருக்குத் தொழிலின் மீது ஈடுபாடு ஏற்பட்டது. 9-ம் வகுப்புப் படிக்கும்போது, கணிதப்பாடத்தில், தோல்வியைத் தழுவியபோதுதான் வெற்றி பெற வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது. “நூறு மதிப்பெண்களுக்கு நான் வெறுமனே 3 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றேன். இது என் பெற்றோரிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது,” என்கிறார் சயான். “குறிப்பாக என் தந்தைக்கு பெரும் ஏமாற்றம். அவர் என்னை ஒரு தொழில் அதிபராகப் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தார். இரவு முழுவதும் அவர் அழுது கொண்டே இருந்தது எனக்கு இன்னும் நினைவு இருக்கிறது. என் மீது வைத்திருந்த அனைத்து நம்பிக்கைகளும் வீணாகிவிட்டது என்று நினைத்தார்.”
இந்த நிகழ்வு அவரது மனதில் அழிக்கமுடியாத ஒரு வடுவை ஏற்படுத்தியது. இதுதான், அந்த இளம் வயதிலேயே ஒரு தொழில் முனைபவராக அவர் மாறுவதற்கான ஆசைக்கான அடித்தளமாக இருந்தது. சயான், மேல்நிலைப்பள்ளியில் படிக்கும்போது, மாணவர்கள் பரிமாற்றம் தொடர்பான திட்டத்தின் கீழ், 2014-ல் அமெரிக்கா, சீனாவுக்குச் சென்று வந்தார். இது ஒரு திருப்புமுனையாக அவருக்கு அமைந்தது.
|
(வேர்இஸ் த ஃபுட்) என்பது ஒரு நல்ல பிராண்ட் பெயராக , வாடிக்கையாளர்களிடையே, அடிக்கடி நினைவு கூறும் வகையில் இருந்தது.
|
“வீட்டில் இருக்கும்போது ஒரு பாழ்பட்ட குழந்தையாக இருந்தேன். எனக்கான அனைத்து வேலைகளையும், வேலையாட்களே செய்தனர். சீனாவில் நான் ஒரு மாதம் இருந்தபோதும், அமெரிக்காவில் 9 மாதங்கள் இருந்தபோதும், என் துணிகளை நானே துவைத்துக் கொள்ளவும், பாத்திரங்களை நானே துலக்கிக் கொள்ளும் நிலைக்கும் தள்ளப்பட்டேன்,” என்கிறார் சயான். “இந்த இரண்டு பயணங்கள்தான் எனக்குப் பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்தது.”
வாழ்க்கையில் மக்கள் எவ்வளவு தூரத்துக்கு கஷ்டப்படுவார்கள் என்ற அனுபவம் அவருக்குக் கிடைத்தது. ஆனால், பணத்தின் மதிப்பு குறித்து அவர் கல்லூரியில்தான் கற்றுக் கொண்டார். “என்னுடைய கல்லூரி நாட்களில், எப்போதெல்லாம் சாப்பிடுவதற்கு வெளியே போகிறோமோ அப்போதெல்லாம் உணவுக்காக நான் எவ்வளவு செலவழிப்பேனோ அதைப்போல என் நண்பர்கள் செலவழிப்பதில்லை என்பதை உணர்ந்தேன். அப்போதுதான் பணத்தின் மீதான மதிப்பை நான் புரிந்து கொண்டேன். எல்லோருக்கும் ஏற்ற விலையில் ஒரு ரெஸ்டாரெண்ட் தொடங்க வேண்டும் என்ற யோசனை அப்போதுதான் எனக்கு வந்தது.”
தம்முடைய யோசனை குறித்து, நண்பர்களுடன் பேசினார். இரண்டு நண்பர்களுடன் இணைந்து சாண்ட்விட்ச் விற்பனையில் ஈடுபடுவது என்று தீர்மானித்தார். அதில் ஒரு நண்பர் கல்லூரியில் உடன் படித்தவர். இன்னொருவர் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்த பொதுவான நண்பர்.
|
அனைத்து விதமான அசைவ உணவு வகைகளும் ரூ.149-விலையில் வேர்இஸ் த ஃபுட்டில் கிடைக்கின்றன.
|
“சாண்ட்விச் தயாரிப்பது எளிதானது. அதற்கு எந்த நிபுணத்துவமும் தேவையில்லை,” என்று பகிர்ந்து கொள்கிறார் சயான். சமூக வலைதளங்களின் மூலம் சந்தைப்படுத்தினர். மொத்த ஆர்டர்கள் எடுத்தனர். “நாங்கள் சாண்ட்விச் தயாரிக்கும் ஒரு இயந்திரத்தை ரூ.2500-க்கு வாங்கினோம். 2016-ம் ஆண்டின் தொடக்கத்தில் ஒரு நண்பரின் உறவினருடைய சிறிய கிச்சனில் இருந்து சாண்ட்விச் தயாரித்து விற்றோம். ஒரு நிறுவனம் தொடங்க வேண்டும் என்ற முடிவு, அதற்கு ஒரு மாதத்துக்கு முன்பு ஒரு வரலாற்று பாடவேளையின் போது எடுக்கப்பட்டது,” என்கிறார் பலத்த சிரிப்புடன்.
தானும், தம்முடைய நண்பரும் யூடியூப் வீடியோக்களைப் பார்த்து பல்வேறு வகையான சாண்ட்விச்களை செய்வது குறித்து கற்றுக் கொண்டோம் என்கிறார் சயான். “அப்போது என்னுடைய தேர்வு காலகட்டம். ஒரு கையில் பாடப்புத்தகத்தை வைத்துக் கொண்டு, இன்னொரு கையில் சாண்ட்விச் தயாரித்துக் கொண்டிருந்தேன்,” என்று நினைவு கூறுகிறார். ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு நிகழ்வுக்கு சாண்ட்விச் தருவதற்கான முதல் ஆர்டர் அவர்களுக்குக் கிடைத்தது. அதில் இருந்து 150 ரூபாய் லாபம் கிடைத்தது. அந்தத் தொகையில் 140 ரூபாயை அவர் செலவு செய்து விட்டார். 10 ரூபாய் நோட்டை ஒரு நினைவு சின்னமாக, போற்றி வருகிறார். சால்ட்லேக் பகுதியில் உள்ள தம் ரெஸ்டாரெண்ட் சுவரில் 10 ரூபாய்நோட்டை பிரேம் செய்து மாட்டி வைத்திருக்கிறார்.
அவர்கள் சாண்ட்விச்களை ஒரு கேக், ஒரு பழரசம், சாஸ் ஆகியவற்றுடன் சேர்த்து 69 ரூபாய்க்கு விற்பனை செய்தனர். அந்த கோம்போ முறையிலான விற்பனை பெரும் வரவேற்பைப் பெற்றது. 2016-ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் அவர்கள் 2.5 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்தனர்.
2017-ம் ஆண்டு, சயான் ஹோட்டல் & ஹாஸ்பிட்டாலிட்டி பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் தமது நிறுவனத்தைப் பதிவு செய்தார். டல்ஹவுஸி பகுதியில் மாதம் 25 ஆயிரம் ரூபாய்க்கு 250 ச.அடி இடத்தை வாடகைக்குப் பிடித்தனர். திடீரென, நிறுவனத்தின் இரண்டு நிறுவனர்களும் விலகிக் கொண்டனர். இதனால், சயான் நெருக்கடியான சூழலைச் சந்தித்தார். பிரச்னையில் இருந்து மீளமுடியாத சூழலில் தொழிலை மூடி விட தீர்மானித்தார்.
|
அமெரிக்காவில் உள்ள ஒரு ரெஸ்டாரெண்ட்டில் பகுதி நேரமாகப் பணியாற்றியபோது, பல்வேறு வகையான உணவு வகைகளைச் சமைப்பதற்கு சயான் கற்றுக் கொண்டார்.
|
அப்போது கல்லூரியில் இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்தார் அவர். சர்வதேச உறவுகள் தொடர்பான படிப்பில் ஒரு திட்டமாக ஓஸ்வேகோவில் உள்ள நியூயார்க் ஸ்டேட் பல்கலைக்கழகத்துக்குச் செல்ல ஒரு வாய்ப்புக் கிடைத்தது. “2017-ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை எட்டுமாதங்கள் நான் அமெரிக்காவில் இருந்தேன். அங்கு இருக்கும் நாட்களில் செலவுக்காக என் பெற்றோரை சார்ந்து இருக்க நான் விரும்பவில்லை. ஒரு ரெஸ்டாரெண்ட்டில் எனக்குப் பகுதி நேரமாக வேலை கிடைத்தது,” என்கிறார் சயான்.
“ரெஸ்டாரெண்டில் மணிக்கணக்கில் அயராது வேலைபார்த்தேன். சமைப்பது முதல், பாத்திரங்களை கழுவுவது வரை, தரையை கழுவுவது வரை எல்லாவற்றையும் நான் கற்றுக் கொண்டேன். என்னுடைய வேலையின் மூலம் மணிக்கு 10 டாலர் சம்பாதித்தேன்,” ஒரு ரெஸ்டாரெண்ட்டுக்குத் தேவையான அனைத்துத் திறமைகளையும் கற்று கொண்டவராக அவர் இந்தியா திரும்பினார்.
2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், தம்முடைய 8 லட்சம் ரூபாய் சேமிப்பைக் கொண்டு, கொல்கத்தாவின் சால்ட் லேக் பகுதியில் 45 பேர் அமர்ந்து சாப்பிடக் கூடிய ரெஸ்டாரெண்ட்டை தொடங்கினார். இந்த ஆண்டு ஜனவரியில் 28 பேர் அமர்ந்து சாப்பிடக் கூடிய ஒரு ரெஸ்டாரெண்ட்டை தெற்கு கொல்கத்தா பகுதியில் தேசப்பிரியா பார்க் அருகில் தொடங்கினார். இரண்டு ரெஸ்டாரெண்ட்டிலும் சேர்த்து 25 பேர் பணியாற்றுகின்றனர்.
இப்போது சயான் ஒரு சுயமுன்னேற்றப் பேச்சாளராக இருக்கிறார். அவருடைய பேச்சுகள் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகிறது. தொழிலின் ஆரம்ப கட்டத்தில் ஒரு பின்னடைவுக்குப் பின்னர், வளரும் தொழில் முனைவோருக்கு இரண்டு அறிவுரைகளை வழங்குகிறார். உங்களை நீங்களே நம்புங்கள்;. தன்னம்பிக்கையை விட்டு விடாதீர்கள். உங்களுடைய மனதில் எந்தவித பாதகமான எண்ணங்களுக்கும் இடம் கொடுக்காதீர்கள்.
|
வேர்இஸ் த ஃபுட்- கடையில் சில ஊழியர்களுடன் சயான்.
|
அதிகம் படித்தவை
-
ஒரு தாயின் தேடல்
வெளிநாடுகளில் இருப்பது போல இந்தியாவில் குழந்தைகளுக்கான பாதுகாப்பு பொருட்கள் இருக்கிறதா என்று தேடினார் இளம் தாயான மாலிகா. ஆனால், அவருக்கு கிடைத்த பொருட்கள் தரமாக இல்லை. தொடர்ந்து தானே குழந்தைகளுக்கான பொருட்களை உற்பத்தி செய்யத் தொடங்கினார். சோஃபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை
-
அசத்தும் ஐஏஎஸ்!
மருத்துவரான அல்பி ஜான், குடிமைப்பணித் தேர்வு எழுதி முதன்முயற்சியிலேயே ஐ ஏ எஸ் ஆனவர். துணை ஆட்சியராக தமிழ்நாட்டில் பணியைத் தொடங்கிய அவர், திடக்கழிவு மேலாண்மை நிர்வகிப்பில் சிறந்து விளங்குகிறார். சென்னை மாநகரை மேம்படுத்தும் மியாவாகி காடுகளை உருவாக்கும் திட்டத்தையும் நிறைவேற்றுகிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.
-
பழையதில் பிறந்த புதிய ஐடியா!
டெல்லியில் பிறந்து வளர்ந்த சகோதரர்களான கவுரவ் கக்கர், அங்குர் கக்கர் இருவரும் பெருநிறுவனங்களில் அதிக சம்பளம் தரும் பணிகளில் இருந்தனர். வெளிநாட்டு தூதர்கள் நம் நாட்டில் இருந்து வெளியேறும் போது விற்பனை செய்யும் பழைய மரச்சாமான்களை வாங்கி விற்கும் தொழில் வாய்ப்பை பயன்படுத்தி இந்த சகோதரர்களும் முன்னேறினர். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை
-
அவங்க ஏழு பேரு…
சிறுவயது நண்பர்கள், பள்ளி படிப்பு முடிந்த உடன், தனித்தனிப்பாதைகளில் பயணித்தவர்கள். வார இறுதி பயணங்களில் மீண்டும் கைகோத்து தொழிலதிபர்களாக உயர்ந்திருக்கின்றனர். 3 டி பிரிண்டர்களை பள்ளிகளுக்கு விற்பனை செய்கின்றனர். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை
-
பத்து ரூபாய் பழரசம்!
பிரபு காந்திகுமார் அமெரிக்காவில் ஆண்டுக்கு ரூ.48 லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார். குடும்பத்தொழிலைக் கவனிக்க கோவை திரும்பினார். இப்போது பழரசங்கள் தயாரிக்கும் தொழிலில் ஆண்டுக்கு ரூ. 35 கோடி வருவாய் தரும் சாம்ராஜ்யத்தை ஐந்தே ஆண்டுகளில் கட்டமைத்திருக்கிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.
-
குறைந்த விலையில் நிறைந்த லாபம்!
ஒரு தேநீரின் விலையில் டீஷர்ட் என்ற விற்பனை தந்திரத்தின் மூலம் வெற்றியைத் தொட்டிருக்கிறார் சி.எம்.ஃபைசல் அகமது. மதுரையைச் சேர்ந்த ஜவுளித் தொழில் குடும்பத்தைச் சேர்ந்த இவர், குடும்பத்தை மீட்டெடுக்க கல்லூரியில் படிக்கும்போதே தொழில் அதிபராகவும் ஆனவர். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை.