நான் வர்ஜின் அல்ல என்று எழுதப்பட்டிருக்கும் இந்த துணிப்பைகளின் ஊக்கமூட்டும் பின்னணிக்கதை!
28-Jan-2025
By பி.சி. வினோஜ்குமார்
மும்பை
தூக்கி எறியப்படும் ஓட்டல் படுக்கை விரிப்புகள், மேசை விரிப்புகளை அழகான துணிப்பைகளாக மாற்றுகிறார் ஜெய்தீப் சஜ்தே. இந்த யோசனை அவருக்கு வந்ததில் ஆச்சர்யம் இல்லை. அவர் மேற்கத்திய நாடுகளில் தூக்கி எறியப்படும் கம்பளி ஸ்வெட்டர்களை இறக்குமதி செய்து அதில் இருந்து கம்பளி இழைகளை பிரித்தெடுக்கும் தொழில் செய்யும் குடும்பத்தில் இருந்து வந்தவர்.
“ என் அப்பாவின் தொழிற்கூடத்தில் கிடக்கும் படுக்கை விரிப்புகளைக் கண்டேன். அவற்றைப் பயன்படுத்தி உருப்படியாக எதாவது செய்யலாமே என்று தோன்றியது,’’ என்கிறார் ஜெய்தீப். தானேவில் உள்ள பிவாண்டியில் இருக்கும் அவர் தொழிற்கூடத்தில் சந்தித்தோம். வண்ணமிகு துணிப்பைகள் குவியல் குவியல்களாகக் கிடந்தன. தையல்காரர்கள் தங்கள் வேலைகளில் ஆழ்ந்திருந்தார்கள்.
|
ஜெய்தீப் பழைய படுக்கை விரிப்புகளை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்கிறார். தானேவில் உள்ள தன்னுடைய தொழிற்கூடத்தில் அவற்றை துணிப்பொருட்களாக மாற்றுகிறார். (படங்கள்: ஹெச்.கே.ராஜசேகர்) |
இந்த சிந்தனை முழு அளவிலான தொழிலாக உருவெடுத்தது. இப்போது இதன் மதிப்பு ஆண்டுக்கு 4 கோடி ரூபாய்கள் “ முதல் ஆண்டு விற்பனை(2011-12) ஐம்பது லட்சரூபாயாக இருந்தது. அதிலிருந்து எட்டு மடங்கு வளர்ந்துவிட்டோம்,’’ என்கிரார் ஜெய்தீப்.
ஆனால் விற்பனையை விட தன்னுடைய நிறுவனமான ஆந்தெடிக் இம்பெக்ஸ்( குடும்ப நிறுவனமாக டெக்ஸூல் ப்ரைவேட் லிமிடட்டின் துணை நிறுவனம்) குறைந்த காலத்தில் நிகழ்த்தி இருக்கும் சமூக பங்களிப்பு இவருக்கு உற்சாகத்தை அளிக்கிறது..
“ உலக இயற்கைக்கான நிதியம் 70 கிராம் எடை உள்ள துணிப்பை செய்ய 1000 லிட்டர் தண்ணீர் தேவை என்கிறது. ஒரு கிலோ இழை தயாரிப்பதன் மூலம் 7 கிலோ கார்பன் டை ஆக்சைடு வளிமண்டலத்தில் விடப்படுகிறது என்கிறது இன்னொரு கணக்கு. இதன்படி பார்த்தால் நாங்கள் 2.2 பில்லியன் லிட்டர்கள் தண்ணீர் சேமித்துள்ளோம். 1.1 பில்லியன் கிலோ கார்பன் டை ஆக்சைடு வெளியிடப்படுவதைக் குறைத்துள்ளோம்’’ என்று சொல்கிறார் ஜெய்தீப்.
ஆதெண்டிக் கிரீன் என்று பெயரிடப்பட்டு ஐ ஆம் நாட் வெர்ஜின் என்றும் ஐ ஆம் சோ வேஸ்டட் என்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இவர்களின் பொருட்கள் விற்பனைக்கு வருகின்றன. பிக்பசார், ஹைபர் சிட்டி, டி மார்ட், ஸ்டோர்99 போன்ற வற்றில் விற்பனைக்கு வருகின்றன. 29 ரூபாயிலிருந்து 450 ரூபாய் வரை விலை உள்ளது.
ஒவ்வொரு மாதமும் இப்போது 20 டன்கள் பழைய துணிகளை இவர்கள் மாற்றி அமைக்கிறார்கள். 100,000 புதிய பொருட்கள் உருவாகின்றன. ஆனால் இதில் இன்னமும் செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன.
“அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் சுமார் 22 மில்லியன் ஹோட்டல் அறைகள் ஒவ்வொரு ஆறு மாதமும் தங்கள் படுக்கை விரிப்புகளைப் பயன்படுத்தி தூக்கி எறிகின்றன. இதில் இப்போது நாங்கள் 4-5 சதவீதம் கூட இறக்குமதி செய்யவில்லை,’’ என்கிறார் இவர்.
|
ஆதெண்டிக்கில் 60 பேர் வேலை செய்கிறார்கள். |
ஆறு ஆண்டுகள் உழைப்புக்குப் பிறகு சப்ளைக்காக சிறந்த வலைப்பின்னலை உருவாக்கி இருக்கிறார். சலவை நிலையங்களில் இருந்து பழைய துணிகள் பெறப்படுகின்றன.
“அமெரிக்காவில் இருந்து நேரடியாக துணிகளைப் பெறுகிறோம். ஒவ்வொரு ஆறுமாதமும் அங்குள்ள ஹோட்டல்கள் விரிப்புகளை மாற்றுகின்றன. படுக்கை விரிப்புகள் பருத்தியால் ஆனவை. மேசை விரிப்புகள் செயற்கை இழைகளால் ஆனவை.
“ மிகக்குறைந்த விலையில் இவற்றைப் பெறுகிறோம். இவற்றுக்குப் பணியாற்றும் ஆட்கள், செய்யப்படும் வேலை இதற்காகவே அதிகம் செலவாகிறது,” என்கிறார் ஜெய்தீப்.
|
கார்பன் குறைவாக வெளியிடும் நிறுவனம் ஆதெண்டிக் என்பதில் ஜெய்தீப் பெருமை கொள்கிறார். |
நாப்தலீன் உருண்டைகளுடன் உயர் வெப்பநிலையில் துணிகள் உலர்சலவை செய்யப்படுகின்றன. இதில் நுண்ணுயிரிகள் அழிக்கப்படுகின்றன. பின்னர் தேவைக்கேற்ப துணிகள் வெட்டப்படுகின்றன. “நாங்கள் பெரும் துணிகள் பெருமாலும் வெண்ணிறம் கொண்டவை. எனவே எங்கள் தயாரிப்புகளுக்கு ஒரே மாதிரியான வண்ணம் தர முடிகிறது,’’ என்கிறார் ஜெய்தீப்.
கவர்ச்சியான டிசைன்கள் இவற்றின் மீது அச்சிடப்படுகின்றன. அழகாகவும் இருக்கும் அதே சமயம் துணியில் ஏதாவது கறை மாதிரி குறை இருப்பின் அது மறைக்கப்படுகிறது.
|
தானே தொழிற்கூடத்தில் தயாராகும் இவர்களின் பொருட்கள் நாடு முழுக்க விற்பனை ஆகின்றன. |
தங்கள் பைகளின் மீது பார்பி வடிவத்தைப்பயன்படுத்த பொம்மை நிறுவனமான மேட்டலிடம் உரிமை பெற்றுள்ளனர். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடமும் 2011 ஐசிசி உலகக்கோப்பைச் சின்னத்தை 15000 பைகளில் பயன்படுத்த அனுமதி பெற்றுள்ளனர்.
ஜெய்தீப் குடும்பத்தினர் கொடுத்த பணத்தைக்கொண்டு 15 லட்சரூபாய் முதலீட்டில் 12 தொழிலாளர்களுடன் இந்த தொழிலைத் தொடங்கினார். இப்போது 60 பேர் வேலை செய்கிறார்கள்.
ஏற்கெனவே துணி ஏற்றுமதியில் சில லட்சம் ரூபாய்களை ஜெய்தீப் இழந்துள்ளார். ஆனால் இந்தநிறுவனம் லாபம் தருவதுடன் அடுத்த தலைமுறைக்கு சமூகப் பங்களிப்பும் செய்வதில் அவர் பெருமை கொள்கிறார்.
இல்லத்தில் அவரது மகள்கள் ஷனயா,16, மற்றும் ஷிலோகா ,15, ஆகிய இருவரும் இவரது புதிய டிசைன்கள் பற்றி கருத்துக்கூறுபவர்கள்.
"அவர்கள் சொல்வதைக் கேட்டு அதன்படி முடிவுகள் எடுப்பேன்..அவர்களுக்கு சுற்றுச்சூழலைக் கெடுக்காத என் தொழில் பிடித்துள்ளது’’ என்கிறார் ஜெய்தீப்.
|
கடந்த ஆண்டு ஆந்தெடிக் 4 கோடி ரூபாய் விற்பனை செய்தது.
ஜெய்தீப்பின் மனைவி ரேகாவும் இந்த தொழிலில் துணைபுரிகிறார். அவர் நிறுவனத்தின் கணக்குகளைக் கவனிக்கிறார். “அவர் கடின உழைப்பாளி. ஒரு தாயாக கடைமையைச் செய்வதுடன் தொழிலையும் சிறப்பாகக் கவனிக்கிறார்,’’ அவர் சொல்கிறார்.
ஜெய்தீப் கிரிக்கெட் ஆடியிருக்கிறார். பள்ளி, கல்லூரி அணிகளில் இடம்பிடித்து ஆடியவர். வணிகவியல் பட்டதாரியான இவர் இந்திய கிரிக்கெட் கிளப் கமிட்டி உறுப்பினர். பெரும்பாலான வாரக்கடைசியில் பிராபோர்ன் கிரிக்கெட் அரங்கில் இவர் விளையாடிக்கொண்டிருப்பதைக் காணலாம்.
அதிகம் படித்தவை
-
மின்னும் வெற்றி!
ராஜஸ்தானில் ஜெய்ப்பூரில் அம்மாவுக்கு உதவியாக பக்கோடா கடையில் சின்னவயதில் இருந்தே வேலை செய்தவர் சந்த் பிஹாரி அகர்வால். பள்ளிக்குப் போய் படிக்க வசதி இல்லை. அவர் இன்று பாட்னாவில் 20 கோடி புரளும் நகைக்கடையை நடத்துகிறார். ஜி சிங் எழுதும் வெற்றிக்கதை
-
வைரஸ் எதிர்ப்பாளர்
பத்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டவர், இன்று உலகளாவிய அளவில் மென்பொருள் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி ஆண்டுக்கு 350 கோடி வர்த்தகம் செய்கிறார். மாதம் ரூ400க்கு கால்குலேட்டர் பழுதுபார்க்கும் வேலையில் தொடங்கிய மனிதரின் வெற்றிக்கதை இது
-
தரம் தந்த வெற்றி!
தந்தையின் பழைய இரும்புக்கடையில் தொழில்நுணுக்கங்களை கற்று, முறுக்கு கம்பிகள் தயாரிக்கும் தொழிற்சாலையை நிறுவி வெற்றிகரமாக நடத்தி வருகிறார் சோமசுந்தரம். தமது நிறுவனத்தை ஆண்டுக்கு 800 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் வகையில் வளர்த்தெடுத்ததில் அவரின் அயராத உழைப்புக் கொட்டிக்கிடக்கிறது.
-
ருசியின் பாதையில் வெற்றி!
சிறுவனாக இருக்கும்போது உடுப்பியிலிருந்து ஒருநாள் வீட்டை விட்டு மும்பை ஓடி வந்தார் ஜெயராம் பானன். இன்று சாகர் ரத்னா ஹோட்டல்கள் நடத்தும் ஜேபி குழுமத்தின் தலைவராக 200 கோடி மதிப்பில் வர்த்தகம் செய்யுமளவுக்கு வளர்ச்சி! பிலால் ஹாண்டூ எழுதும் கட்டுரை
-
நாட்டுக்கோழி நாயகன்
ஐபிஎம், சிட்டிபேங்க் என்று பெருநிறுவனங்களில் உயர் பதவிகளை வகித்தவர் செந்தில்வேலா. இந்த உயர் பதவிகளை எல்லாம் உதறித் தள்ளிவிட்டு உள்நாட்டு கோழி இனங்களை மீட்டெடுக்கும் தீவிரத்துடன் கோழிப்பண்ணை தொடங்கி உயர்ந்திருக்கிறார். இரண்டே ஆண்டில் ஆண்டு வருமானம் 1.2 கோடிகளாக ஆகி உள்ளது. உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.
-
வெற்றிமேல் மிதப்பவர்
உலகெல்லாம் பயணம் செய்யவேண்டும் என்ற ஆசையுடன் கப்பலில் வேலைக்குச் சேர்ந்தவர் பீஹாரில் முசாபர்பூரைச் சேர்ந்த புர்னேந்து சேகர். இன்று மும்பையில் சுமார் 100 கோடி வரை வர்த்தகம் செய்யும் தொழிலதிபராக உயர்ந்துள்ளார். தேவன் லாட் எழுதும் வெற்றிக்கதை