Milky Mist

Saturday, 20 April 2024

பாக்கெட்டைப் பிரிங்க; சாப்பிடுங்க! நொறுக்குத் தீனியில் பதினெட்டு கோடி வருவாய் குவிக்கும் இளைஞர்கள்!

20-Apr-2024 By சோபியா டேனிஷ் கான்
புதுடெல்லி

Posted 11 Aug 2018

இந்தியாவில் சாத்வீக வழியிலான வாழ்க்கை என்பது இயற்கையுடன் இணக்கமாக வாழ்தல் மற்றும் எளிமையான, ஆனால் சத்தான உணவுகளை உட்கொள்வது ஆகும். இந்தக் கருத்தின் அடிப்படையில், பிரஸூன் குப்தா, அங்குஷ் சர்மா இருவரும் சாத்விகோ(Sattviko), என்ற ஒரு சாத்விக் நொறுக்குத் தீனி பிராண்ட் வகையை 2017ம் ஆண்டு ஜனவரியில் தொடங்கினர்.

அவர்களுடைய, ரேய்ஸ் குலினெரி டிலைட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் (Rays Culinary Delights Private Limited), 2017-18ம் நிதி ஆண்டில், 18 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் ஈட்டி இருக்கிறது. அவர்களின் நிறுவனத்தில் 145 பேர் பணியாற்றுகின்றனர். இரண்டு பங்குதாரர்களும் இணைந்து பணியாற்றுகின்றனர். பிரஸூன், பிராண்ட்டை முன்னெடுப்பது, விற்பனை ஆகியவற்றையும், அங்குஷ் டெல்லியில் உள்ள 10,000 ச.அடி பரப்பிலான தொழிற்சாலையின் செயல்பாடுகளையும் கவனித்துக் கொள்கின்றனர். டெல்லியில் உள்ள தொழிற்சாலையில், வெளியில் இருந்து 300 உற்பத்தியாளர்களிடம் இருந்து வாங்கிய உணவுப் பொருட்களை பேக்கேஜ் செய்கின்றனர்.

https://www.theweekendleader.com/admin/upload/03-08-18-03satt3.jpg

சாத்விகோ, என்பது பிரஸூன் (இடது பக்கம் நிற்பவர்), அங்குஷ் இருவரின் மூன்றாவது வெற்றிகரமான நிறுவனமாகும். (படங்கள்:நவ்நிதா)


“பயணத்தின் போது உண்பதற்கு ஏற்றவாறு பேக்கேஜிங் வடிவமைக்கப்படுகிறது. பல்வேறு வகையான நொறுக்குத் தீனிகள் கொண்டு வந்திருக்கிறோம். காக்ரா (கோதுமையால் செய்யப்பட்ட குஜராத் உணவான மெல்லிய பிரட் வகை), சுவையான மாகான்ஸ் (பருப்பு வகை) போன்ற அனைத்தும், உடலுக்கு ஆரோக்கியம் தருபவை மற்றும் நல்ல சுவையும் உடையவை,” என்கிறார் பிரஸூன். பான் ரைய்சின்ஸ், ஜீரா நிலக்கடலை மற்றும் குர் சனா உள்ளிட்ட பிரசித்தி பெற்ற நொறுக்கு தீனிகளும் விற்பனை செய்கின்றனர். 

டிபார்ட்மெண்ட் ஸ்டோர்கள் மற்றும் ஆன்லைன் கடைகளிலும் அவர்களின் உணவுப் பொருட்கள் கிடைக்கின்றன. இந்தியா முழுவதும் 30 விநியோகஸ்தர்கள் இருக்கின்றனர். பி2பி என்ற முறையில் லூப்தன்ஸா, தாஜ் ஹோட்டல்கள்  அதே போல நாடு முழுவதும் உள்ள ஏர்போர்ட் அத்தாரிட்டி உடன் இணைந்தும் பொருட்களை விற்கின்றனர்.

2018-19ம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் ஆண்டு வருவாய் ரூ.25-30 கோடி ரூபாய் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த நிதி ஆண்டில் இதை விட இரண்டு மடங்கு வருவாய் இலக்கை நிர்ணயித்திருக்கின்றனர்.

இந்த வெற்றி என்பது, இருவருக்கும் ஒரே ஒரு முயற்சியில் கிடைக்கவில்லை. வெற்றிக்கான சூத்திரத்தை அடைவதற்கு முன்பு ஏற்கனவே அவர்கள் இரண்டு நிறுவனங்களைத் தொடங்கி, இடையில் விட்டு விட்டனர்.

பிரஸூன்(32), ரூர்கி ஐ.ஐ.டி-யில் பொறியியல் இறுதி ஆண்டு படிக்கும் போது, அங்குஷ் மற்றும் சில நண்பர்களுடன் இணைந்து பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் தளமான டெக் பட்டிஸ் (Tech Buddies) என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்.

“என்னுடைய நண்பர் சுரேன் குமார், தொழில்நுட்ப மூளையாக செயல்பட்டார். அபிஷேக் சர்மா, பவன் குப்தா, அங்குஷ், நான் ஆகியோர் மற்ற அம்சங்களை கவனித்துக் கொண்டோம்,” என்று நினைவு கூறுகிறார்.

2009-ம் ஆண்டின் மத்தியில், பட்டப்படிப்பை முடித்த உடன், தங்கள் தொழிலை ரூர்கியில் இருந்து டெல்லிக்கு மாற்றினர். ஸ்டார்ட் அப் நிறுவனமாகத் தொடங்கும் முடிவில் ஒவ்வொருவரும் 50 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தனர். மேலே தற்காலிக கூரையுடன் கூடிய ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்தனர்.

“தொழில் திட்டங்களை எங்கள் வீட்டில் மேற்கொள்வோம். பக்கத்து வீட்டுக்காரர் இடத்தில் வாடிக்கையாளர்களுடன் சந்திப்பை நடத்துவோம்,” என்று நம்மிடம் புன்னகையுடன் பகிர்ந்து கொள்கிறார் பிரஸூன்.

முதல் ஆண்டில் அவர்கள், ஒரு கோடி ரூபாய் ஆண்டு வருவாய் ஈட்டினர். ஆனால், சுரேன் நிறுவனத்தில் இருந்து வெளியேறி ஒரு வேலையில் சேர்ந்து விட்டார். 2009-ம் ஆண்டின் இறுதியில் சொந்தக் காரணங்களுக்காக இதர இரண்டு நண்பர்களும் விலகி விட்டனர்.

https://www.theweekendleader.com/admin/upload/03-08-18-03satt.jpg

ஜென்பெக்ட் நிறுவனத்தின் நிறுவனர் ராமன் ராயும் சாத்விகோவின் முதலீட்டாளர்களில் முக்கியமானவர்.


“இரண்டாம் நிலை நகரங்களில் சந்தை வாய்ப்புகளைக் கண்டறிய ஜெயப்பூருக்கு எங்கள் அலுவலகத்தை மாற்றினோம். 2 லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தோம். ஆனாலும் விரும்பிய பலன் கிடைக்கவில்லை. எனவே, 2013-ம் ஆண்டில் 50 லட்சம் ரூபாய்க்கு அந்த நிறுவனத்தை விற்று விட்டோம்,” என்கிறார் பிரஸூன்.

இதன் பின்னர், பிரஸூன் நாடு முழுவதும் சாலை வழியே 28 மாநிலங்களுக்கு, யாரும் செல்ல முடியாத இடங்களுக்குக் கூட  பயணம் சென்று திரும்பினார்.

“ஏன் இந்த நிறுவனம் வெற்றிகரமாகச் செயல்படவில்லை என்பதை உணர்ந்தேன். உங்கள் தொழிலின் அளவு உங்கள் நிறுவனத்தில் எவ்வளவு பேர் வேலை செய்கிறார்கள் என்பது அல்ல. ஆனால், உங்களின் ஆண்டு வருவாயைப் பொறுத்தது,” என்ற தம்முடைய அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.

டெல்லி திரும்பி வந்ததும், அங்குஷை தொடர்பு கொண்டு, மீண்டும் புதிதாகத் தொடங்குவது என்று இருவரும் தீர்மானித்தனர். பெங்களூருவில் உள்ள சாத்வம் என்ற ரெஸ்டாரெண்ட்டுக்கு அவர்கள் சென்று இருந்தனர். அங்கு இந்திய பாரம்பர்யமான சாத்விக் உணவுகள் அவர்களுக்குப் பரிமாறப்பட்டது. இது அவர்களைக் கவர்ந்தது. இதே போன்ற சங்கிலித் தொடர் உணவகங்களை டெல்லியில் தொடங்குவது என்று திட்டமிட்டனர்.

அவர்கள் சொந்தமாக 30 லட்சம் ரூபாயும், நண்பர்கள், குடும்பத்தினரிடம் இருந்து 1.5 கோடி ரூபாயும் திரட்டினர். அந்த ஆண்டின் இறுதிக்குள் டெல்லியில் எட்டு ரெஸ்டாரெண்ட்களைத் தொடங்கினர்.

“நவீன அவதாரத்தில், பாரம்பர்யம் மிக்க இந்திய உணவு வகைகளை, நாங்கள் அளிக்க விரும்பினோம். இந்த முயற்சியின்போது, பேக்கேஜ் செய்யப்பட்ட உணவு வகைகளையும் பரிசோதனை அடிப்படையில் தொடங்கினோம். இது மிகப்பெரிய வெற்றி பெற்றது,” என்கிறார் பிரஸூன். “ரெஸ்டாரெண்ட்கள் நன்றாகப் போகவில்லை. அப்போது நாங்கள், பி.பீ.ஓ தொழிலின் தந்தை எனப்படும், ஜென்பெக்ட் நிறுவனத்தின் நிறுவனர் ராமன்  ராயைச் சந்தித்தோம். அவர்கள் எங்களுடைய பேக்கேஜிங் உணவு தொழிலில் முதலீடு செய்ய சம்மதம் தெரிவித்தார். அதே நேரத்தில் நாங்கள் ரெஸ்டாரெண்ட்களை மூட வேண்டும் என்றும் அவர் கூறினார்."

https://www.theweekendleader.com/admin/upload/03-08-18-03satt1.jpg

சாத்விகோவில் 145 பேர் பணியாற்றுகின்றனர். பிரஸூன் மற்றும் அங்குஷ் உடன் சில ஊழியர்கள்.


சாத்விகோ இப்படித்தான் தோன்றியது. “சாத்விகோ வெற்றி அடைந்ததற்கு முக்கிய காரணம் அதன் தயாரிப்புகள் புதுமையானவை. அதே போல அதற்கான சந்தை நன்றாக இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டோம்,” என்கிறார் ப்ரஸூன்.

30 முதலீட்டாளர்களிடம் இருந்து இப்போது வரை ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடாகப் பெற்றுள்ளனர். அவர்களில் ஹெலய்ன் நிறுவனத்தின் ஆஷீஷ் குப்தாவும் முக்கியமான ஒருவர். இப்போது அவர்கள் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் துபாய்க்கும் தங்கள் தொழிலை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டிருக்கின்றனர்.

2017-ம் ஆண்டுக்கான தேசிய தொழில்முனைவோருக்கான விருது(5 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை), பிஸினெஸ் வேர்ல்டின் உலக சாதனையாளர்கள்,  டைகான் தொழில்முனைவோருக்கான விருது மற்றும் ராஜஸ்தான் மாநில அரசின் பாமஷா விருது(20 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை) உள்ளிட்ட பல்வேறு விருதுகளை இந்த நிறுவனம் பெற்றுள்ளது.


 
 
 
 
 

அதிகம் படித்தவை

  • Success story of a pen manufacturer in Kolkata who started from scratch

    பேனாவில் கொட்டிய கோடிகள்

    350 கோடி ரூபாய் பேனா நிறுவனம் ஒன்றின் தலைவர் சுராஜ்மல் ஜலான், ராஜஸ்தானைச் சேர்ந்தவர். கொல்கத்தாவுக்கு வெறுங்கையுடன் மூன்றாம் வகுப்பு ரயில் பெட்டியில் வந்த இவர், இன்று மிகப்பெரிய தொழில் நிறுவனத்தைக் கட்டி ஆளுகிறார். ஜி. சிங் எழுதும் கட்டுரை

  • The success story of sailor who became an entrepreneur

    வெற்றிமேல் மிதப்பவர்

    உலகெல்லாம் பயணம் செய்யவேண்டும் என்ற ஆசையுடன் கப்பலில் வேலைக்குச் சேர்ந்தவர் பீஹாரில் முசாபர்பூரைச் சேர்ந்த புர்னேந்து சேகர். இன்று மும்பையில் சுமார் 100 கோடி வரை வர்த்தகம் செய்யும் தொழிலதிபராக உயர்ந்துள்ளார். தேவன் லாட் எழுதும் வெற்றிக்கதை

  • His success story which reads like a film script aptly started in a cinema hall

    எளிமையான கோடீசுவரர்

    திரையரங்கில் காண்டீனில் வேலை பார்த்தவர் அவர். அன்று அவருக்கு மாதச் சம்பளம் 90 ரூபாய் மட்டுமே. இன்று அவர் 1800 கோடி ருபாய் நிறுவனம் ஒன்றின் உரிமையாளர். தன் வாழ்க்கை வெற்றிக்கதையை மசுமா பர்மால் ஜாரிவாலிடம் சொல்கிறார்

  • fulfilling the dream of his grandfather

    தாத்தா சொல்லை தட்டாதே

    ஆயூஷ் லோஹியா மிகவும் இளம் வயதில் குடும்பத்தொழிலில் பொறுப்பேற்றார். தாத்தாவின் வழிகாட்டலில் குடும்பத்தின் தொழில்களில் பல நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டார். வாகன சந்தையில் 500 கோடி ரூபாய் இலக்குடன் செயல்படுகிறார். சோஃபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை.

  • Doctor tastes succes in healthcare and hotelbusiness

    விரக்தியை வென்ற மனோசக்தி!

    மருத்துவப் பட்டமேற்படிப்பு முடித்து விட்டு அரசு வேலைக்காக காத்திருந்தார் டாக்டர் தாபாலி. வேலை கிடைக்காத விரக்தி மனநிலையை வென்றெடுத்து மணிப்பூர் மாநிலத்தின் முதல் மருத்துவ ஆய்வகத்தைதொடங்கி வெற்றிபெற்றார். ரீனா நாங்க்மைத்தம் எழுதும் கட்டுரை.

  • Designing  success path

    வெற்றியை வடித்தவர்!

    கொல்கத்தாவை சேர்ந்த சிஏ பட்டதாரி இவர். டிசைனில் உள்ள ஆர்வத்தால், கிராபிக் டிசைன் நிறுவனத்தைத் தொடங்கினார். சர்வதேச வாடிக்கையாளர்களை குறிவைத்து இன்று மிக வெற்றிகரமாக தொழிலில் ஈடுபட்டு வருகிறார். ஜி.சிங் எழுதும் கட்டுரை