Milky Mist

Saturday, 25 September 2021

ஐஸ்கிரீம் விற்பனையில் ஆண்டுக்கு ரூ.259 கோடி குவிக்கும் சகோதரர்களின் வெற்றிக்கதை!

25-Sep-2021 By குருவிந்தர் சிங்
குஜராத்

Posted 07 Mar 2021

குஜராத்தின் ஒரு கிராமத்தை சேர்ந்த நான்கு சகோதரர்கள், அம்ரேலி என்ற சிறு நகருக்கு இடம் மாறினர். ராஜ்கோட்டில் இருந்து 100 கி.மீ தொலைவில் உள்ள இந்த நகரில்  சிறிய குளிர் பானங்கள் மற்றும் ஐஸ்கிரீம் விற்பனை செய்யும் கடையை தொடங்கினர். இன்றைக்கு அந்த கடை ரூ.259 கோடி ஆண்டு வருவாய் ஈட்டும்  நிறுவனமாக உயர்ந்திருக்கிறது.

தங்கள் குடும்பத்தினர் நடத்தி வந்த சாலையோர பீடா கடையை உள்ளூர்  நிர்வாகம் இடித்து விட்டதை அடுத்து, இந்த கடையை அவர்கள் தொடங்கினர். அப்போது  சகோதரர்களில் மூத்தவரான தினேஷ் புவா என்பவருக்கு 27 வயது.

சகோதரர்கள்(இடமிருந்து வலம்) பூபத், தினேஷ் மற்றும் சஞ்சய் ஆகியோர், அம்ரேலியில் சிறியதாக குளிர்பானங்கள் விற்கும் கடையைத் தொடங்கி, ஷீத்தல் ஃபுட் கூல் புரொடெக்ஸ் நிறுவனத்தை கட்டமைத்திருக்கின்றனர்.(புகைப்படங்கள்: சிறப்பு ஏற்பாடு

மிதமான தொடக்கத்தில் இருந்து சகோதரர்கள் தங்கள் வணிகத்தை சீராக முன்னெடுத்தனர். ஷீத்தல்(குளிர்ச்சியை குறிக்கும் இந்தி சொல்) எனும் வணிக பிராண்ட் பெயரில் வெவ்வேறு வகையான ஐஸ்கிரீம் பொருட்களை உற்பத்தி செய்தனர். இந்த நிறுவனம் மேலும் மேலும் வளர்ச்சி பெற்று, தனியுரிமை நிறுவனத்தில் இருந்து  பிரைவேட் லிமிடெட் நிறுவனமாக உயர்ந்தது. முடிவில் 2017ம் ஆண்டு பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் ஒன்றாகவும் மாறி இருக்கிறது.

இன்றைக்கு ஷீத்தல் கூல் புரொடெக்ஸ் லிமிட்டெட் நிறுவனம், குஜராத் மாநிலத்தின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக, பால் மற்றும் பால் பொருட்கள், ஐஸ்கிரீம், நொறுக்குத் தீனிகள், பேக்கரி தயாரிப்புகள், உறைந்த உணவு, சமைப்பதற்கு தயாரான காய்கறிகள், சாக்லேட் மற்றும் இனிப்புகள் உள்ளிட்ட வெவ்வேறு பிரிவுகளில் 300-க்கும் மேற்பட்ட தயாரிப்புகளைக் கொண்டிருக்கிறது.

ஷீத்தல் நிறுவனம் இப்போது தினேஷ்(55) மற்றும் அவரது சகோதரர்கள் பூபாத்(43), சஞ்சய்(41) ஆகியோரால் நடத்தப்படுகிறது. இளம் வயதில் இந்த வணிகத்தைத் தொடங்குவதற்கு முக்கிய பங்கு வகித்த இரண்டாவது சகோதரரான ஜெகதீஷ், 1997ஆம் ஆண்டு ஒரு சாலை விபத்தில் 25வது வயதில் உயிரிழந்து விட்டார்.    இந்த சகோதரர்களின் தந்தை தாகுபாய், சாவாந்த் என்ற கிராமத்தில் சிறிய விவசாயியாக இருந்தவர். நல்ல வாழ்வாதாரம் வேண்டி மாவட்ட தலைநகரான அம்ரேலிக்கு குடிபெயர்ந்தவர். “விவசாயத்தில் இருந்து கிடைக்கும் என் தந்தையின் வருமானம் குடும்பத்தின் செலவுகளுக்குப் போதுமானதாக இல்லை,” என்றார் நான்கு சகோதரர்களில் மூத்தவரான தினேஷ். வீட்டின் நிதி நிலைமை காரணமாக 12ஆம் வகுப்புக்குப் பின்னர் அவரால் படிப்பைத் தொடர முடியவில்லை.

  “குடும்பத்தை பெரிய நகருக்கு இடமாற்றம் செய்வது என்று தந்தை தீர்மானித்தார். தன் குழந்தைகளுக்கு நல்ல படிப்பைக் கொடுக்கவும், குடும்பத்தின் வருவாய்க்கு கூடுதல் வாய்ப்புகளைத் தேடியும் அவர் இடம் பெயரத்திட்டமிட்டார்,” என்றார் தினேஷ். 1987ஆம் ஆண்டு அம்ரேலியில் உள்ள பேருந்து நிலையத்தில் ஒரு தற்காலிக கடையைத் ஜெகதீஷ் திறந்தார். “இது பான் மற்றும் குளிர்பானங்கள் விற்கும் கடையாகும். இதனை நானும் ஜெகதீஷும் பார்த்துக் கொண்டோம்.”
அம்ரேலியில் தங்களது முதலாவது ஐஸ்கிரீம் மற்றும் குளிர் பானங்கள் கடையின் முன்பு நான்கு  சகோதரர்களும் இருக்கின்றனர்


“என்னுடைய தந்தை கிராமத்துக்கும், நகரத்துக்கும் இடையே போய் வந்தபடி, விவசாய வேலையிலும் ஈடுபட்டு வந்தார். ஆனால், 1992ஆம் ஆண்டு உள்ளூர் அரசாங்க அதிகாரிகளால் எங்கள் கடை இடிக்கப்பட்டபோது எங்களுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.”

இது அந்த குடும்பத்துக்கு ஒரு கடினமான பின்னடைவை அளித்தது. முக்கியமான வாழ்வாதாரத்தை இழந்த சூழலில், புதிய வாய்ப்புகளை அந்த குடும்பம் எதிர்பார்த்திருந்தபோது, அம்ரேலியில்  ஜன்மாஷ்டமி கண்காட்சி நடைபெற்றது. ஐஸ்கிரீம் வணிகத்துக்கு அடித்தளமாக ஒரு திருப்பு முனையை அது கொடுத்தது. 

  “நான்கு சகோதரர்களின் ஆலோசனைக்குப் பிறகு,  சிறிய லஸி மற்றும் ஐஸ்கிரீம் விற்கும் கடையைத் தொடங்குவது என்று தீர்மானித்தோம். உள்ளூர் கடையில் இருந்து பொருட்களை வாங்கி வந்தோம். பின்னர் அதனை கண்காட்சியில் விற்பனை செய்தோம்,” என்று தினேஷ் நினைவு கூர்ந்தார்.

“ஒவ்வொருவரும் அந்த பொருட்களை விரும்பினர். எல்லாம் விரைவாக விற்றுத் தீர்ந்தன. இந்த பொருட்களுக்குப் பெரும் சந்தை இருப்பதை நாங்கள் அப்போது உணர்ந்தோம். எனவே, இந்த வணிகத்தில் ஈடுபடுவது என்று தீர்மானித்தோம்.”   அம்ரேலி பேருந்து நிலையத்துக்கு அருகே, 1993ஆம் ஆண்டு அவர்கள் 5 அடிக்கு 5 அடி என்ற அளவிலான இடத்தை குடும்பத்தில் சிறுக, சிறுக சேமித்த ரூ.2 லட்சம் ரூபாயைக் கொண்டு வாங்கினர். இந்த கடையில் வெற்றிலை, குளிர் பானங்கள், ஐஸ்கிரீம் ஆகியவற்றை விற்றனர்.  சகோதரர்களின் வணிகத்துக்கு பூபத், சஞ்ஜய் ஆகியோரும் உதவி செய்தனர்.

“படிப்புக்கும், வேலைக்கும் இடையே எங்களுடைய நேரத்தை பிரித்துக் கொண்டோம். பள்ளியில் இருந்து திரும்பி வந்த உடன் கடையில் இருப்போம். எங்கள் சகோதரர்களுக்கு உதவினோம்,” என்கிறார் பூபத். இவர், அம்ரேலியில் உள்ள கேகே பரேக் வணிகவியல் கல்லூரியில் 1994ஆம் ஆண்டு வணிகத்தில் பட்டப்படிப்பு முடித்தார். “1995ஆம் ஆண்டு நாங்கள் லஸ்ஸி, ஐஸ்கிரீம் போன்ற பால் பொருட்களை உற்பத்தி செய்தோம். ஜெகதீஷ் மற்றும் நானும் வீட்டில் பொருட்களை தயாரித்தோம். அவை சுவையாக இருந்ததால் விற்பனை சூடுபிடித்தது,” என்றார் அவர்.

  “இது தவிர நாங்கள் சாக்கோ மற்றும் ஆரஞ்சு ஐஸ்கிரீம் மிட்டாய்கள் தயாரிக்கத் தொடங்கினோம். விரைவிலேயே இந்த பொருட்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. மக்கள் எங்களிடம் இருந்து இவற்றை வாங்க ஆரம்பித்தனர். அதனை பிறரிடம் விற்றனர். எங்களுடைய வணிக பொருளுக்கு ஷீத்தல் என்று பிராண்ட் பெயர் வைத்தோம். 2000ஆம் ஆண்டு பிறந்த என்னுடைய மகளின் பெயரும் ஷீத்தல்தான்.”
மூன்று சகோதரர்களும் ஒருங்கிணைந்த முயற்சி மேற்கொண்டதால், ஷீத்தல் வணிகம் வளர்ச்சியடைவது சாத்தியமாயிற்று.


1997ஆம் ஆண்டு ஒரு துயரமான சம்பவம். 25 வயதே ஆன ஜெகதீஷ் சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்த சகோதரர்களுக்கு அவரது இழப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.” அவர் மிகவும் கடினமாக உழைக்கக் கூடியவர், வணிகத்தின் பிராண்ட்  புகழ்பெற நல்ல முயற்சிகளில் ஈடுபட்டார்,” என தினேஷ் நினைவு கூர்ந்தார்.

எனினும், அவரது இழப்பு இதர சகோதரர்களிடம், ஜெகதீஷின் கனவை நனவாக்கும் வகையில் நிறுவனத்தை புதிய உயரத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற உறுதியை அதிகரித்தது.  மூன்று ஆண்டுகள் கழித்து வணிகத்தின் பெயரை ஸ்ரீ ஷீத்தல் இன்டஸ்ட்ரீஸ் என்ற தனியுரிமை  நிறுவனமாக பதிவு செய்தனர். தவிர அம்ரேலியில் 1000 ச.மீ இடத்தை விலைக்கு வாங்கினர்.

“நாங்கள் ரூ.17.20 லட்சம் முதலீடு செய்தோம். தினமும் 150 லிட்டர் பால் பதப்படுத்தும் திறன் கொண்ட ஆலையை உருவாக்கினோம். ஐஸ்கிரீம் மற்றும் இதர பால் பொருட்களை உற்பத்தி செய்து வந்தோம்,” என்கிறார் சஞ்ஜய். இவர், சாந்தபென் தயால்ஜிபாய் கோட்டக் சட்டக்கல்லூரியில் 1994ஆம் ஆண்டில் எல்எல்பி படிப்பு முடித்தார்.  

“எடுத்த ஆர்டர்களை டெலிவரி செய்வதற்காக இருசக்கர வாகனங்களில் மற்றும் ஆட்டோ ரிக்ஷாகளில் கடைகளுக்குச் சென்றோம்.” ஆரம்ப காலகட்டங்களில் வணிகத்தில் சவால்களை  எதிர்கொண்டு வந்த நிலையில்  அம்ரேலியில் அடிக்கடி மின்வெட்டு இருந்ததால் விற்பனை பாதிக்கப்பட்டது. “அம்ரேலியில் ஒரு சில கடைகளில் மட்டுமே ஐஸ்கிரீம் விற்பனை செய்யப்பட்டது. மாநிலம் முழுவதும் தினமும் பல மணி நேர மின் வெட்டு காரணமாக முன்னணி ஐஸ்கிரீம் பிராண்ட்கள் ஏதும் விற்பனைக்கு வரவில்லை,” என்றார் சஞ்ஜய்.

  “இழப்பு ஏற்படும் என்ற அச்சத்தின் காரணமாக கடைக்காரர்கள் தங்கள் கடையில் ஐஸ்கிரீமை வைத்து விற்பனை செய்வதற்கு தயங்கினர். இன்வெர்டர் மற்றும் ஜெனரேட்டர் போன்ற மின்சாதனங்களை சிலர் மட்டும் வைத்திருந்தனர். எல்லோரிடமும் இது இல்லை. எனினும், நரேந்திரமோடி முதலமைச்சர் ஆனபோது நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டது. 2003ஆம் ஆண்டு குஜராத் முழுவதும் ஜோதிகிராம்(மின்மயமாக்கல்) திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். “ இதைத் தொடர்ந்து மேலும் பல கடைகளில் அவர்களின் ஐஸ்கிரீம்களை வாங்கி விற்க ஆரம்பித்ததால் ஐஸ்கிரீம் விற்பனை அதிகரித்தது. ஒவ்வொரு மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த நிறுவனம் உற்பத்தி திறனை அதிகரிக்கத் தொடங்கியது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிறுவனம் தனியுரிமை நிறுவனத்தில் இருந்து பிரைவேட் லிமிடெட் நிறுவனமாக மாறியது. 2017ஆம் ஆண்டு பப்ளிக் லிமிடெட் நிறுவனமானது பிஎஸ்இயில் பட்டியலிடப்பட்டது. 2019ஆம் ஆண்டு ஷீத்தல் நிறுவனத்தின் விரிவாக்கத்துக்காக ரூ.15 கோடி முதலீடு செய்யப்பட்டது. உறைந்த உணவுகள் மற்றும் நொறுக்குத் தீனி பொருட்கள் உற்பத்தி நிறுவனமான பன்முகப்படுத்தப்பட்டது. ஆனால், அதே ஆண்டில், அவர்களுடைய நொறுக்குத் தீனிகள் தயாரிக்கும் பிரிவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதால், ரூ.2 கோடி அளவுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது.

 “இது ஒரு பெரிய இழப்பு. தீ விபத்தில் எங்களுடைய பெரும்பாலான கருவிகள் எரிந்து நாசமாகிவிட்டன. எனினும் நாங்கள் எங்களுடைய நம்பிக்கையை இழக்கவில்லை. கடினமாக உழைத்தோம். இரண்டு ஆண்டுகளுக்குள் இழப்பில் இருந்து மீண்டோம்,” என்றார் பூபத்.

வாழ்க்கையில் பெரும் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்ட ஒரு மனிதராக உறுதியுடன் அவர் கூறினார்.

இப்போது, இந்த நிறுவனம் இனிப்பு வகைகள், நொறுக்குத் தீனிகள், பல்வேறு வகையான ஐஸ்கிரீம்கள், ரசகுல்லா மற்றும் லஸ்ஸி உள்ளிட்ட 300 பொருட்களை உற்பத்தி செய்கின்றது.
அம்ரேலியில் தங்கள் வாழ்க்கையை மாற்றிய ஆரம்பகால ஜன்மாஷ்டமி மேளா கடை முன்பு நிற்கும் சகோதரர்கள்

குஜராத்துக்கு வெளியேயும் அவர்களின் சந்தை விரிவடைந்தது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மகராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநிலங்களிலும் அவர்கள் வணிகம் விரிவடைந்திருக்கிறது.

“அம்ரேலி மாவட்டத்தில் பெரும் வேலைவாய்ப்புகளை அளிக்கும் நிறுவனங்களில் ஒன்றாக நாங்கள் இருக்கின்றோம். இன்றைக்கு எங்களிடம் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். 1993ஆம் ஆண்டு எங்கள் வெற்றிலை வியாபாரக்கடையில் நான்கு பேருடன்  தொடங்கியதில் இருந்து இது ஒரு நீண்டபயணமாக இருந்திருக்கிறது,” என்றார் பூபேத்

“இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, மேற்கு ரயில்வேயில் எங்கள் பொருட்களை பதிவு செய்திருக்கின்றோம். குஜராத்தில் 10 ரயில் நிலையங்களில் எங்களுடைய கடைகள் உள்ளன. ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா மற்றும் சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்கின்றோம்.” இந்த நிறுவனம் 250 விநியோகஸ்தர்களுடன் செயல்படுகிறது. பல்வேறு மாநிலங்களில் பரந்து விரிந்துள்ள 30,000-த்துக்கும் மேற்பட்ட கடைகளில் அவர்களின் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. குடும்பத்தில், அடுத்த தலைமுறையினரும் வணிகத்தில் இணைந்துள்ளனர்.

தினேஷ் மகன் ஹார்திக்(30), பூபேத் மகன் யாஷ்(20) ஆகியோருக்கும் பொறுப்புகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. “2030ஆம் ஆண்டில் ரூ.1,500 கோடி ஆண்டு வருவாய் கொண்ட நிறுவனமாக மாற்ற வேண்டும் என்ற இலக்குடன் நாங்கள் பணியாற்றி வருகின்றோம். இந்தியாவில் உள்ள முன்னணி ஐந்து எஃப்.எம்.சி.ஜி நிறுவனங்களில் ஒன்றாக வளர்ச்சியடையவும் நாங்கள் விரும்புகின்றோம்,” என்றார் யாஷ்.

வளர்ந்து வரும் தொழில்முனைவோர்களுக்கு நிறுவனர்களின் செய்தி: எந்த ஒரு வணிகத்திலும் ஏற்ற இறக்கங்கள் உண்டு. எனவே, நம்பிக்கையை இழந்து விடக் கூடாது. உங்கள் இலக்குகளைத் துரத்துங்கள். இறுதியில் நீங்கள் வெற்றியை ருசிப்பீர்கள்.

 
 
 
 
 

அதிகம் படித்தவை

 • The Magnificent Seven

  அவங்க ஏழு பேரு…

  சிறுவயது நண்பர்கள், பள்ளி படிப்பு முடிந்த உடன், தனித்தனிப்பாதைகளில் பயணித்தவர்கள். வார இறுதி பயணங்களில் மீண்டும் கைகோத்து தொழிலதிபர்களாக உயர்ந்திருக்கின்றனர். 3 டி பிரிண்டர்களை பள்ளிகளுக்கு விற்பனை செய்கின்றனர். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை

 • juice Maker's success story

  ஒரு ஜூஸ் குடிக்கலாமா?

  வசதியான குஜராத்தி குடும்பத்தில் பிறந்தவர் ஹேமங்க் பட். தந்தையின் தொழில் நஷ்டமடைந்ததால், 18 வயதில் மும்பையில் இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்டாக வாழ்க்கையைத் தொடங்கியவர், சங்கிலித்தொடர் ரெஸ்டாரெண்ட்கள், ஜூஸ் கடைகளைத் தொடங்கி வெற்றி பெற்றார். அன்வி மேத்தா எழுதும் கட்டுரை

 • Home made food flowing unlimited

  வீட்டுச்சாப்பாடு

  சுவையான மட்டன் குழம்பு, ரத்தப் பொறியல், குடல் கறி, தலைக்கறி, ஈரல், பிராய்லர் சிக்கன், நாட்டுக்கோழி சிக்கன் வகைகள், மீன் குழம்பு... ஆ... அம்புட்டும் அன்லிமிடட்! எங்கே எங்கே...? ஈரோடு மாவட்டம் சீனாபுரத்தில் ஒரு தம்பதி வீட்டிலேயே நடத்தும் புகழ்பெற்ற உணவகம் பற்றி உஷா பிரசாத் எழுதும் கட்டுரை

 • Girl from Mountain

  மலைக்க வைக்கும் வளர்ச்சி!

  உத்தரகாண்ட் மாநிலத்தின் குக்கிராமத்தில் பிறந்தவர் கீதா சிங். ஐம்பதாயிரம் ரூபாய் முதலீட்டில் தொடங்கி,  இன்றைக்கு டெல்லியில் ஆண்டுக்கு 7 கோடி ரூபாய் வருவாய் தரும் நிறுவனத்தின் உரிமையாளராக இருக்கிறார். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை

 • Success story of a Saree seller

  சேலைகள் தந்த கோடிகள்

  கொல்கத்தாவின் வீதிகளில் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, வீடு வீடாகச் சென்று சேலை வியாபாரம் செய்தவர் பைரேன். இன்றைக்கு அவர் 50 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் ஈட்டும் சேலை மொத்த வியாபார நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஜி.சிங் எழுதும் கட்டுரை

 • Dream come true

  நனவான தொழில் கனவு

  பள்ளிப்படிப்பை முடித்ததும், தொழிலில் ஈடுபட விரும்பினார் இளங்கோவன். குடும்பத்தினர் அதை விரும்பாததால் தொடர்ந்து படித்த அவர், கால்நடைமருத்துவரானார். ஆனாலும் அதன் பின்னர் தமது இதழியல் மற்றும் தொழில் முனைவுக் கனவுகளை நனவாக்கிய அவர் இன்று வெற்றிகரமான தொழில் அதிபராக உயர்ந்திருக்கிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.