நிஜமான இரும்பு மனிதர்! 350 கோடிக்கு இரும்பு வர்த்தகம் செய்கிறார்!
11-Sep-2024
By குர்விந்தர் சிங்
கிரித்(ஜார்க்கண்ட்)
ஜார்க்கண்ட் மாநிலம் கிரித் நகரில் ‘எஃகு மன்னர்’ எங்கும் நிறைந்திருக்கிறார். கருப்பு டர்பன் அணிந்தபடி, கையில் டி.எம்.டி கம்பியைப் பிடித்துக் கொண்டிருக்கிற குன்வந்த் சிங் மோங்கியா, அந்த நகரில் ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகளில் எஃகு மன்னர்... அதாவது ஆங்கிலத்தில் கிங் ஆஃப் ஸ்டீல் என்ற அடைமொழியுடன் நிற்பதைக் காணமுடிகிறது.
அவர் மோங்கியா ஸ்டீல் லிமிடெட் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட டி.எம்.டி பார் கம்பிகளின் விளம்பரதூதர் மட்டுமின்றி, அந்த நிறுவனத்தைத்தொடங்கியவரும் அவர்தான். 2018-19ம் ஆண்டு அவரது நிறுவனம் 350 கோடி ரூபாய்க்கு ஆண்டு வர்த்தகம் செய்தது. இதன் காரணமாக ஜார்க்கண்ட் மாநிலத்தின் வெற்றிகரமான எஃகு மன்னர்களில் ஒருவராக மோங்கியாவும் திகழ்கிறார்.
1984-ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான வன்முறையில் அவர்களின் குடும்பத்துக்குச் சொந்தமான ரோலிங் மில்லை வன்முறையாளர்கள் சூறையாடினர். இதனைத் தொடர்ந்து தமது தொழிலை குன்வந்த் சிங் மோங்கியா மீண்டும் கட்டமைத்திருக்கிறார். (புகைப்படங்கள்: மோனிருல் இஸ்லாம் முலிக்)
|
வெற்றியின் உச்சத்தைத் தொட்டபோதிலும், 57 வயதாகும் இந்த எஃகு தொழில் அதிபர், பல்வேறு பாதகமான சூழல்களை பல்வேறு வடிவங்களில் சந்தித்திருக்கிறார். 1984-ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான வன்முறையின் போது, இரும்பு கம்பிகள் தயாரித்து வந்த அவர்களுடைய ரோலிங் மில்லை வன்முறையாளர்கள் சூறையாடியபோது, அவருடைய குடும்பத்தினர் மூன்று நாட்கள் வெளியே செல்ல முடியாத அளவுக்கு அடைபட்டுக்கிடந்தனர்.
“தொழிற்சாலையில் இருந்து பலர் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர். அவற்றை விற்றுப் பணம் சம்பாதித்தனர் என்று கேள்விப்பட்டோம். ஆனால், எங்களால் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் இருந்தோம்,” என்று நினைவு கூர்கிறார். “அந்த நேரத்தில் ரூ.5-6 லட்சம் வரை இழப்பைச் சந்தித்தோம். தனியாரிடம் இருந்து வட்டிக்கு கடன் வாங்கி பெரும்பாலான பணத்தை முதலீடு செய்திருந்ததால், பெரும் கடனில் சிக்கித் தவித்தோம்.”
1984-ம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, அவருடைய சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். எனவே நாட்டின் பல்வேறு இடங்களில் சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை வெடித்தது. 1962ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி பிறந்த மோங்கியாவுக்கு அன்றைய தினம் 22வது பிறந்தநாள். அந்த சமயத்தில் கிராமங்கள் தோறும் இரும்பு ஆணிகள் விற்பதற்காக தமது பஜாஜ் ஸ்கூட்டரில் சென்றிருந்தார்.
அவருடைய தந்தை தல்ஜித் சிங் 1974-ம் ஆண்டில் இரும்புத் ஆணிகள் தயாரிக்கும் தொழிற்சாலையை உருவாக்கி இருந்தார். அந்த தொழிற்சாலை 1979-ம் ஆண்டு தினமும் 1500 கிலோ மதிப்புள்ள ஆணிகளை தயாரித்து வந்தது. கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த மோங்கியா தமது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு, இந்த தொழிலில் 1982-ம் ஆண்டு இணைந்தார். நல்ல வேளையாக வன்முறையின்போது இந்த தொழிற்சாலை பாதிக்கப்படவில்லை. அதனால்தான் அவரது குடும்பம் சமாளித்தது.
பிரிவினைக்கு முந்தைய (தற்போதைய) பாகிஸ்தானில் இருந்து 1946-ம் ஆண்டு இடம்பெயர்ந்த தல்ஜித் சிங் கிரித்தில் வாழ்ந்துவந்தார். ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இருந்து 180 கி.மீ தொலைவில் இந்தப் பகுதி இருக்கிறது. "என் தந்தை ஏற்கனவே பயிற்சி பெற்றிருந்ததால், கார்பெண்டர் தொழிலை மேற்கொண்டார். அந்த தொழிலில் திறன் பெற்று விளங்கிய அவர், அந்த நாட்களில் தினமும் 2 பைசா சம்பாதித்தார்," என்கிறார் மோங்கியா.
பின்னர், தல்ஜித் சிங், ஒரு பர்னிச்சர் கடையைத் தொடங்கினார். பின்னர் மர அறுவை தொழிற்சாலையை நிறுவினார். பிளைவுட் தொழிலில் இறங்கியவர், நிதி ரீதியாக வலுவான நிலையில் இருந்தார்.
|
தம்முடைய தயாரிப்பு குறித்து விளம்பரம் செய்ய புகழ்பெற்ற ஒரு நபரை நியமிப்பதற்கு பதில், தம் நிறுவனத்தின் விளம்பர தூதர் என்ற ரோலில் தாமே செயல்படுவது என்று தீர்மானித்தார் மோங்கியா.
|
"அவருடைய அர்ப்பணிப்பு உணர்வு, கடின உழைப்பு, நேரத்தைக் கடைபிடித்தல் ஆகியவற்றுடன் அவர் வளர்ந்த பாதையால் நான் ஈர்க்கப்பட்டேன். இதுதான் வாழ்க்கையில் நான் கற்றுக் கொண்ட முதல்பாடம்," என்று வெற்றி ரகசியம் சொல்கிறார் மோங்கியா.
இரும்பு ஆணிகள் தயாரிக்கும் தந்தையின் தொழிற்சாலை நன்றாகப் போய்கொண்டிருந்ததை அடுத்து அந்தத் தொழிலில் இணைவது என்று மோங்கியா 1982-ல் முடிவு செய்தார். அவரது தந்தை தன் மூத்த மகன் அமர்ஜித் சிங் உடன் இணைந்து 1983-ல் 1.41 ஏக்கர் பரப்பில் கிரித் பகுதியில் 12 லட்சம் ரூபாய் முதலீட்டில் ஒவ்வொரு நாளும் 3-4 மெட்ரிக் டன் இரும்பு ராடுகள் தயாரிக்கும் ரோலிங்க் மில்லைத் தொடங்கினார். அதனால் மோங்கியா இரும்பு ஆணி தொழிற்சாலையைக் கவனித்து வந்தார்.
“பண ரீதியாக நாங்கள் நல்ல நிலையில் இருந்தபோது, தொழிலை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டபோது, 1984-ல் அந்த சம்பவம் ஏற்பட்டது,” என்கிறார் அவர். குடும்பத்தின் நிதிநிலை மோசம் அடைந்தது. ரோலிங் மில்லில் ஏற்பட்ட இழப்பு, மேலும் அர்ப்பணிப்பு உணர்வுடனும், புதிதாகத் தொடங்க வேண்டும் என்றும் ஊக்கத்தைக் கொடுத்தது. “சிறிய ரோலிங் மில் உரிமையாளர்கள் எல்லாம் காரில் சென்று கொண்டிருக்கும்போது, நான் ஸ்கூட்டரில் மட்டுமே சென்று கொண்டிருந்தேன். திரும்பவும் மீண்டு எழுவது ஆரம்பத்தில் பிரச்னைக்குரியதாக இருந்தது.”
கடின உழைப்பு 1988ல் பலன் கொடுக்க ஆரம்பித்தது. ரோலிங் மில் தொழில் வலுவடையத் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் 7-8 டன் உற்பத்தி நடைபெற்றது. அதே ஆண்டில், இரும்புத் துண்டு தயாரிக்கும் தொழிற்சாலை மூடப்பட்டது. முழுவதுமாக ரோலிங் மில் தொழிலில் கவனம் செலுத்துவது என்று அவர் முடிவு செய்தார்.
|
கிரித்தில் உள்ள மோங்கியல் இரும்புத் தொழிற்சாலையில் 300க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.
|
1991-ம் ஆண்டு தல்ஜித் சிங் மற்றும் அவரது இரண்டு மகன்களும் இரண்டாவது ரோலிங் மில்லைத் தொடங்கினர். 30 லட்சம் ரூபாய் முதலீட்டில், 2.5 ஏக்கர் பரப்பில் கிரித்தில் தொடங்கினர். 1995-ம் ஆண்டு மோங்கியா ஹைடெக் பிரைவேட் லிமிட்டெட் என்ற பெயரில் மூன்றாவது ரோலிங் மில்லைப் பதிவு செய்தனர். இந்த ரோலிங் மில்லை 7.5 ஏக்கரில் 45 லட்சம் ரூபாய் வங்கிக் கடனில் தொடங்கினர். 1983-ல் தொடங்கிய முதல் ரோலிங் மில்லை 1997ல் விற்று விட்டனர்.
அவரது வாழ்க்கையில் முக்கியமான திருப்புமுனை 2000ம் ஆண்டில்தான் ஏற்பட்டது. அவரது சகோதரர் அமர்ஜித் சிங், தொழிலில் பங்கு பிரித்துக் கொண்டு அசாமில் ரோலிங் மில் தொடங்குவதற்காக அங்கே சென்று விட்டார்.
“என் சகோதரர் தனியாகச் சென்று விட்டார். என் தந்தை வயதுகாரணமாக தொழிலில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். எனவே, நான் தனித்து விடப்பட்டேன். நானே என் முடிவுகளை எடுத்தேன். என்னுடைய வாழ்க்கையை முன்னெடுத்துச் சென்றேன், “ என்கிறார் அவர். “ரோலிங் மில் தொழில் நன்றாக போகாத நிலையில் இரும்பு ஆணிகள் தயாரிக்கும் தொழில் தொடங்கலாமா என்ற குழப்பத்தில் இருந்தேன். மோசமான நிலை காரணமாக 1991-ல் தொடங்கிய இரண்டாவது ரோலிங் மில்லை மூடிவிட்டேன்.”
2001-ம் ஆண்டு தொழிலை மாற்றுவது என்று முடிவு செய்தார். குழாய் உள்ளிட்ட பொருட்களை தயாரிக்கும் ஒரு சிறிய தொழிற்சாலை தொடங்குவது என்று முடிவு செய்தார். “என்னுடைய மூன்றாவது ரோலிங் மில்லில் சில மாறுதல்களைச் செய்தேன். அதற்கு அதிக முதலீடு தேவைப்படவில்லை. பின்னர் அந்த ஆலையைத் தொடங்கினேன். எனக்கு சிறிதளவு பணம் கிடைத்தது.”
எனினும், இழப்பு தொடர்ந்து பெரும் அளவில் இருந்தது. 2000ம் ஆண்டில் ஆண்டு வருவாய் 18 கோடி ரூபாயாக இருந்தது, பின்னர் அது 2003-ம் ஆண்டில் 8 கோடி ரூபாயாக குறைந்தது. எனவே, 2003-ம் ஆண்டில் ரோலிங் மில் தொழிலை மறுபரிசீலனை செய்ய திட்டமிட்டார். டி.எம்.டி ஸ்டீல் பார் என்ற புதிய தொழில்நுட்பத்துக்கு வந்தார். டி.எம்.டி என்பது கம்பியில் வெப்பம் (Thermo Mechanically Treated) உட்செலுத்தப்பட்டிருப்பதை குறிக்கிறது. ஒரு கடினமான வெளிப்புற மேற்பரப்பு மற்றும் மென்மையான உள்பகுதி கொண்டிருக்கும் பார்கள், முறுக்கப்பட்ட பார்களை விட நீடித்து நிலைத்திருக்கும் தன்மை கொண்டவை.
|
மோங்கியாவுக்கு சொந்தமாக பல நவீன ரக கார்கள் உள்ளன. ஆனால், அவர் தமது முதல் காரை எப்போதும் மறந்ததில்லை. அது ஏசி வசதி கொண்ட மாருதி ஓம்னி.
|
“ஜார்க்கண்ட்டில் முதன்முறையாக டி.எம்.டி பார்களை நான் அறிமுகம் செய்தேன். ஆனால், பொதுவாக மக்கள் முறுக்கப்பட்ட கம்பிகளை உபயோகித்தனர். யாரும் இதை திரும்பிக் கூடப்பார்க்கவில்லை. நான் தொழிலாளர்களை சந்தித்து, முறுக்கப்பட்ட கம்பிகளை விட டி.எம்.டி பார்கள் தரமானவை என்று எடுத்துக் கூறினேன்,” என்கிறார் அவர்.
விளம்பரம் மூலம்தான் டிஎம்டி கம்பிகளுக்கு தேவையை உருவாக்க முடியும் என்பதை மோங்கியா விரைவிலேயே உணர்ந்தார். “என்னுடைய பொருளை சந்தைப்படுத்துவதற்கான விளம்பரப்படத்தில் நடிக்க வைக்க பாலிவுட் நட்சத்திரங்களை அழைப்பதற்கு என்னிடம் போதுமான பணம் இல்லை. அப்போது நானே, டி.எம்.டி பார்களுக்கு விளம்பர தூதராக மாறுவது என்று தீர்மானித்தேன். சீக்கியர்களைப் போல டி.எம்.டி பார்களும் வலிமையானவை என்ற செய்தியைச் சொன்னேன். இதன் மூலம் நான் ஜார்க்கண்ட் மாநிலத்தில் வீடுகள் தோறும் அறியப்பட்டவன் ஆகிவிட்டேன். இதனால், எனக்கு நல்ல பலன் கிடைத்தது,” என்கிறார் அவர்.
தொழில் வேகமெடுத்தது. 2013-ம் ஆண்டு இந்த பிரைவேட் லிமிடெட் நிறுவனம், மோங்கியா ஸ்டீல் லிமிடெட் என்று மறுபெயரிடப்பட்டது. இப்போது 30 ஏக்கர் வளாகத்தில் தினமும் 350 டன் உற்பத்தி நடக்கிறது. 300 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். டி.எம்.டி பார்கள் தவிர குழாய்கள், பில்லெட்ஸ், புரோஃபைல்ஸ்( billets, profiles) ஆகியவற்றையும் தயாரிக்கின்றனர்.
அவர்களின் முக்கிய சந்தையாக, ஜார்க்கண்ட் இருக்கிறது. தவிர அருகில் உள்ள மேற்கு வங்கம், பீகார், ஒடிசா, உத்தரபிரதேச மாநிலங்களிலும் சந்தைப்படுத்துகின்றனர். பல்வேறு மாநிலங்களில் 300 டீலர்கள் அவருக்கு உள்ளனர்.
அவருடைய மகன் ஹரீந்தர் சிங்(32) இப்போது தொழிலில் இணைந்திருக்கிறார். பட்டதாரியான அவருக்குத் திருமணம் ஆகிவிட்டது. ஒரு மகள் இருக்கிறார். இப்போது அவர்களது நிறுவனத்தில் மூன்று இயக்குனர்கள் உள்ளனர். குன்வந்த் சிங் மோங்கியா, அவரது மனைவி திரிலோச்சான் கவுர், அவர்களது மகன் ஹரீந்தர். மகன் தமது திட்டங்கள் மூலம் உற்சாகத்துடன் இருக்கிறார். “நிறுவனத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லவும், விரிவாக்கவும் உள்ளேன்,” என்கிறார் ஹரீந்தர்.
|
மோங்கியா மகன் ஹரீந்தர் சிங்(நின்று கொண்டிருப்பவர்), தொழிலை புதிய உயரத்துக்கு முன்னெடுத்துச் செல்வதில் தீர்மானமாக உள்ளார்.
|
உன்னதமான இந்த வெற்றிக்கு இடையிலும், கிரித் நகரைச் சுற்றிய பகுதிகளுக்கு தன் ஸ்கூட்டரில் சென்று ஆணிகளை விற்பனை செய்ததை இன்னும் அவர் நினைவு கூறுகிறார்.
“அந்த நாட்கள் உண்மையிலேயே கடினமான காலங்கள். என்னுடைய பஜாஜ் ஸ்கூட்டரில் வைத்து 50 கிலோ ஆணிகளை எடுத்துச் செல்வேன். ஒவ்வொரு நாளும் 250 கி.மீ பயணிப்பேன். ஆர்டர் எடுப்பதற்காக கடைகடையாக அலைவேன்.
“அந்த ஆணிகள் கையில் எடுக்கும்போது குத்திக் கிழித்துக் காயம் ஏற்படுத்தும். எனினும் என்னுடைய பயணத்தை நான் நிறுத்தியதில்லை,” என தமது பழைய நினைவுகளில் மூழ்குகிறார்.
அப்போது அவர் எப்போதுமே பெரிதாக சிந்திப்பார். அவருடைய தந்தைக்கும் அறிவுரை சொல்வார். “1988ம் ஆண்டு என்னுடைய முதல் காரை வாங்கியது எனக்கு இன்னும் நினைவு இருக்கிறது. அது ஒரு ஏசி வசதி செய்யப்பட்ட மாருதி ஓம்னி கார்,” என்று நினைவு கூறுகிறார். “என்னிடம், விலை மலிவான ஏசி இல்லாத காரை 88,000 ரூபாய்க்கு வாங்கும்படி கூறினார்கள். ஆனால், நகரிலேயே சிறந்த காரை வாங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.”
“அதற்கு நான் சரியாக ரூ.1.16,604.40 பணம் கொடுத்தேன். அதை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. இப்போது நான் ஆடி உள்ளிட்ட இதர நவீன ரக கார்களில் பயணிக்கிறேன். ஆனால், முதல் காரை ஒட்டிய அனுபவம், என்னுடைய மனதில் அப்படியே பதிந்திருக்கிறது.”
மோங்கியாவின் வெற்றி மந்திரம்; ‘ஒருபோதும் விட்டுக் கொடுக்காதீர்கள். உங்களால் வெல்ல முடியும் என்று நம்பிக்கை வையுங்கள்’
அதிகம் படித்தவை
-
ஏற்றம் தந்த பசுமை
ஐ.ஐ.டியில் பட்டம் பெற்றவர் வெறும் மூவாயிரம் ரூபாய் சம்பளத்துக்கு வேலையில் சேர்ந்து, கடினமாக உழைத்து இன்றைக்கு மூன்று நிறுவனங்களின் உரிமையாளராக உயர்ந்திருக்கிறார். அவரது நிறுவனங்களின் ஆண்டு வருவாய் 71 கோடி ரூபாய். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.
-
போராடி வெற்றி!
டிசிஎஸ் நிறுவனத்தில் நல்ல வேலையில் இருந்த கரன் சோப்ரா, திடீரென அந்த வேலையை விட்டுவிட்டு எல்இடி விளக்குகள் விற்பனையில் ஈடுபட்டு அதில் தோல்வியை கண்டார். எனினும் விடா முயற்சியுடன் போராடி, இப்போது ஆண்டுக்கு 14 கோடி வருவாய் ஈட்டுகிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.
-
விளையாட்டாக ஒரு வெற்றி!
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரோஷன் பெய்த், விளையாட்டு ஆர்வம் கொண்டவர். இன்றைக்கு விளையாட்டு வீரர்களுக்கான ஆடைகள் உற்பத்தி செய்யும் இரண்டு வெற்றிகரமான நிறுவனங்களின் உரிமையாளர். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை
-
நிஜ ஹீரோ
கொல்கத்தாவில் சலவைத் தொழிலாளியின் மகனாகப் பிறந்த பிகாஷ், ஒரு கிரிக்கெட் வீரர் குடும்பத்தின் உதவியுடன், படித்து சமூகத்தில் உயர்ந்த இடத்தைத் தொட்டிருக்கிறார். பிரபலமான வங்கிகளில் பணியாற்றியவர் இப்போது பெருநிறுவனம் ஒன்றில் உயர்பதவியில் இருக்கிறார். சோமா பானர்ஜி எழுதும் கட்டுரை
-
மில்லியன் டாலர் கனவு
அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ் கார்ட்னர், சிறுவயதில் அனுபவிக்காத துன்பம் ஏதும் இல்லை. அவரது தாயின் இரண்டாவது கணவரால் பெரும் துன்பத்துக்கு உள்ளாக்கப்பட்டார். அவர் பின்னாளில் மில்லியன் டாலர்களை சம்பாதிக்க வேண்டும் என்ற தன் இலக்கை வெற்றிகரமாக அடைந்தார். பி.சி. வினோஜ் குமார் எழுதும் கட்டுரை
-
எந்திரன்!
சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த சினேக பிரியா, பிரணவன் இருவரும் கல்லூரிக்கு பஸ்ஸில் போகும்போது அறிமுகம் ஆனார்கள். அதுதான் அவர்களின் வாழ்க்கையின் முதல் திருப்புமுனை. பரஸ்பரம் தங்களது ரோபாட்டிக்ஸ் தொழில்நுட்ப அறிவை பகிர்ந்து கொண்ட அவர்கள் இன்றைக்கு தொழில்முனைவு தம்பதியாக மாறியிருக்கின்றனர். சபரினா ராஜன் எழுதும் கட்டுரை