Milky Mist

Saturday, 9 December 2023

இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய் முதலீடு; நான்கு கோடிகள் வருவாய்! அசத்தும் அஞ்சலி அகர்வால்!

09-Dec-2023 By உஷா பிரசாத்
குருகிராம்

Posted 19 Apr 2021

ஐபிஎம் நிறுவனத்தின் முன்னாள் பொறியாளரான அஞ்சலி அகர்வால், அதிக சம்பளம் பெறும் வேலையில் இருந்து விலகி கோட்டா டோரியா பட்டு (Kota Doria Silk (KDS) என்ற நிறுவனத்தை வெறும் ரூ.25000 முதலீட்டில் கடந்த 2014ஆம் ஆண்டு தொடங்கினார்.

இன்றைக்கு அவர், தமது கேடிஎஸ் நிறுவனத்தை  ஆண்டுக்கு ரூ.4 கோடி வருவாய் ஈட்டும் நிறுவனமாக கட்டமைத்தது மட்டுமின்றி, ராஜஸ்தானின் கோட்டா  பகுதியின் பாரம்பரியமிக்க பூர்வீகமான கோட்டா டோரியா பட்டு துணியை சர்வதேச சந்தைக்குக் கொண்டு சென்றிருக்கிறார். கலைஞர்களுக்கும் நெசவாளர்களுக்கும் பல வேலைவாய்ப்புகளை அளித்துள்ளார்.

ரூ.25 ஆயிரம் முதலீட்டில் 2014ஆம் ஆண்டு கோட்டா டோரியா சில்க் நிறுவனத்தை அஞ்சலி அகர்வால் தொடங்கினார். (புகைப்படங்கள்: சிறப்பு ஏற்பாடு

சேலைகள், துப்பட்டாக்கள், திரைசீலைகள், குஷன் கவர்கள், மேஜை விரிப்புகள் ஆகியவற்றை அஞ்சலி விற்பனை செய்கின்றார். இணையதளம் மற்றும் சமூக வலைதள பக்கங்கள் மற்றும் வாட்ஸ் ஆப் வாயிலாக அவருடைய தயாரிப்புகள் விற்பனை செய்யப்படுகின்றன.  

கோட்டா டோரியா என்பது ஒரு காற்றோட்டமுள்ள துணியாகும், இது மென்மையானதாக குறைந்த எடை கொண்டதாக இருக்கிறது. இது கோடைகாலத்துக்கு அணிய ஏற்றதாகும். ராஜஸ்தானின் பாலவனப்பகுதியை பூர்விகமாக கொண்டதாகும்.  

 “இந்த துணி பருத்தியிலும், பட்டு வகையிலும் கிடைக்கிறது.” என்றார் அஞ்சலி. இவர் முதலில் முகநூல் வழியாக தமது தயாரிப்புகளை விற்கதொடங்கினார். பின்னர் அவருக்கு வெளிநாடுகளில் இருந்து வணிக விசாரணைகள் வரத் தொடங்கின.   “அமெரிக்காவில் இருந்து அதிகாலை 3 மணி அல்லது 4 மணிக்கெல்லாம் வணிக விசாரணை அழைப்பை பெறுவேன். அவற்றுக்கெல்லாம் உடனடியாக பதிலளிப்பேன். ஆரம்ப காலகட்டத்தில் வெற்றிபெற வேண்டும் என உந்துதலுடன் செயல்பட்டேன்,” என்று தொழில் முனைவு பயணத்தின் ஆரம்பகாலகட்ட நாட்கள் பற்றி நினைவு கூர்ந்தார். 

  தம்மிடம் சால்வார் சூட்கள் 70 சதவிகிதம் அளவுக்கு விற்பனையாகவதாகவும், சேலைகள் 20 சதவிகிதம் விற்பதாகவும், 5 சதவிகிதம் அளவுக்கு துப்பட்டா மற்றும் வீட்டு அலங்கார துணிகள் விற்பனை ஆவதாகவும் கூறினார்.

இந்த பொருட்களில் சாதாரண கோட்டா டோரியா துணியானது  ரூ.299 முதல் ரூ.3,999 வரை விலை கொண்டதாக உள்ளது. தூய ஜரிகை கோட்டா கைத்தறி சேலைகள் ரூ.4999 இல் இருந்து இரண்டு லட்சம் ரூபாய் வரை இருக்கிறது.
நண்பர்கள் மற்றும் உடன் பணியாற்றுவோர் அஞ்சலியின் கோட்டா துணி ஆடைகள் குறித்த பாராட்டுகளை குவிக்கின்றனர்


இன்றைக்கு அஞ்சலி, 1,500 விற்பனையாளர்களை கொண்ட கட்டமைப்பை உருவாக்கி இருக்கிறார். விற்பனையாளர்களில் பெரும்பாலானவர்கள்  தென்இந்தியாவில் பரந்து விரிந்திருக்கின்றனர்.

“ பலர் குடும்பத்தலைவிகள், தவிர சில பணிக்கு செல்லும் பெண்களும் இடம்பெற்றுள்ளனர். தவிர பொட்டிக் மற்றும் கடை உரிமையாளர்களும் உள்ளனர்,” என்றார் அஞ்சலி   அவர் குறைவான மூலதனம் கொண்ட வணிக முறையில் செயல்படுகிறார்.

குருகிராமில் உள்ள வீடுடன் கூடிய அலுவலகத்தில் வெறும் 9 ஊழியர்களைக் கொண்டு செயல்படுகிறார்.  அதில் 8 பேர் பெண்கள்.  

மொத்த வியாபாரம் மற்றும் ஏற்றுமதிக்கான சரக்குகளை அனுப்புவதற்கு கோட்டாவில் அவருக்கு ஒரு கிடங்கு உள்ளது அதனை அவர் மாமனார் சுபாஷ் அகர்வால் நிர்வகிக்கிறார். அவருடைய ஆதரவால்தான் இந்த வெற்றியை தன்னால் பெற முடிந்தது என்கிறார் அஞ்சலி.  

அவருடைய வணிகத்தில் 15 சதவிகிதம் ஏற்றுமதியால் நடக்கிறது. கேடிஎஸ் நிறுவனத்துக்கு இந்தியா முழுவதும், அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, துபாய் மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகளில்  பரந்து விரிந்த அளவில் 5 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். கைத்தறி துணிகள், விசைத்தறி துணிகள் என இரண்டு வணிகத்தையும் அஞ்சலி கையாள்கிறார்.   உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தில் உள்ள நெசவாளர்களுடனும் அவர் பணியாற்றுகிறார். உத்தரபிரதேசத்தில்30 தறிகளுடன் அவர் ஒப்பந்தம் செய்திருக்கிறார். துணிகளுக்கான வடிவமைப்புகளை மேற்கொள்வோர் இந்தியா முழுவதும் உள்ளனர்.   

“பெருநிறுவன வேலையில் இருந்து விலகி, தொழில்தொடங்க முனைந்தபோது, கோட்டாவில் கடுமையான நெருக்கடியில் இருந்த  நெசவாளர்களிடம் நேரடியாகச் சென்றேன். கேடிஎஸ் நிறுவனத்துக்காக கோடா டோரியா துணிகளை நெய்வதற்கான பணிகளில் அவர்களை ஈடுபடுத்தினேன். அவர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றி தனிச்சிறப்பு வாய்ந்த வடிவமைப்புகளை வெளிக்கொணர்ந்தேன்,” என்றார் அஞ்சலி.
குருகிராமில் உள்ள வீட்டுடன் இணைந்த அலுவலகத்தில் 9 ஊழியர்களுடன் அஞ்சலி பணியாற்றுகிறார்.


“மதுபாணி கிரியேசனுக்காக என்னுடைய துணிகள் பீகார் கொண்டு செல்லப்படுகின்றன. மற்றும் உ.பி., நொய்டா, சூரத், மும்பை மற்றும் ஆந்திராவில் டிஜிட்டல் அச்சு மேற்கொள்ளப்படுகிறது.”   ஜவுளித்தொழில் பற்றிய அறிவை இப்போது அஞ்சலி வென்றெடுத்திருக்கிறார். பருத்தி மற்றும் பட்டு இரண்டும் கலந்து 10 முதல் 90 சதவிகிதம் வரை இருக்கும் வகையில் துணிகளை உருவாக்க நெசவாளர்களுடன் அவர் நெருங்கி பணியாற்ற ஆரம்பித்தார். அஞ்சலி சுயமாக கற்றுக் கொண்ட ஓவியராவார். அழகான வடிவமைப்புகளை உருவாக்குவதற்கு இதுவே உதவுகிறது.   “என்னுடைய கல்லூரி நாட்களிலும் பணியிடங்களிலும் எனது உடைகளுக்கு நான் பாராட்டுகளைப் பெறுவேன். உடைகளை வாங்கித் தருமாறு  பலர் என்னிடம் கேட்டிருக்கின்றனர்.

அந்த என்னுடைய உடை அணியும் உணர்வுதான் தொழில் தொடங்கவும், பாரம்பர்ய மிக்க கோட்டோ டோரியா துணியை நோக்கித் தள்ளும் என்று நான் ஒருபோதும் உணரவில்லை, “ என்று பகிர்ந்து கொள்கிறார் அஞ்சலி.

ஆரம்பத்தில் டெல்லி மற்றும் குருகிராமில் தன்னுடன் பணியாற்றியவர்களுக்கு மற்றும் நண்பர்களுக்கு கோட்டா துணிகளை வாங்கித்தரும் நபராக இருந்தார். இதுவே கேடிஎஸ் நிறுவனத்தைத் தொடங்க வேண்டும் என்ற அஞ்சலியின்  எண்ணத்தின் தொடக்கப்புள்ளியாக இருந்தது.  

 “கோட்டா டோரியா துணி ராஜஸ்தான் மாநிலத்துக்குள்  ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக  உணர்ந்தேன். மெல்லிய அழகான இந்த துணி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற பயணத்தை நான் தொடங்க முடிவுசெய்தபோது, இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் உலகம் முழுவதும் கிடைக்க செய்ய வேண்டும் என்றும் நினைத்தேன்,” என்றார் அவர்.  

கோட்டாவில் உள்ள பொறியியல் பல்கலைக்கழக கல்லூரியில் இருந்து எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்ற அஞ்சலி, ராஜஸ்தானின் ஜோத்பூரில் பிறந்து வளர்ந்தவராவார்.   பொறியியல் பட்டம் முடித்த உடன், 2003ஆம் ஆண்டு ஜூலையில் மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கானில் உள்ள எம்கோ லிமிடெட் நிறுவனத்தில் பயிற்சி எலெக்ட்ரிக்கல் வடிவமைப்பு பொறியாளராக பணியில் சேர்ந்தார்.

கோட்டா துணி ஒரு வண்ணமயமான பரவல்

எனினும், அந்த வேலையில் இருந்தும் அவர் விலகினார். அதே போல சில மாதங்களில் அவருக்குத் திருமணம் ஆனது. குருகிராமுக்கு தமது கணவருடன் குடிபெயர்ந்தார்.

பின்னர் அவர் டெல்லியில் உள்ள பாம்பே புறநகர் மின் விநியோக நிறுவனத்தில் எலக்ட்ரிக்கல் கொள்முதல் பொறியாளராகப் பணியாற்றினார். இதில் ஒரு ஆண்டு பணிக்குப் பின்னர் 2007 ஆம் ஆண்டு ஐபிஎம் நிறுவனத்தில் குருகிராமில் எஸ்ஏபி எஸ்சிஎம் (SAP SCM) ஆலோசகராக சேர்ந்தார். 2014 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். கேடிஎஸ் நிறுவனம் தொடங்குவதற்கு முன்பு அங்கிருந்து விலகினார்.   

ரூ.50 ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைக்கும் அந்த பெருநிறுவன பணியில் இருந்து விலகுவது அஞ்சலிக்கு எளிதாக இல்லை. ஆயினும் அவர் தமது உள்ளுணர்வு சொன்னதை கேட்டு, தொழில் முனைவோராக பயணத்தை தொடங்கினார்.   “என்னால் வெற்றி பெற முடியும் என்று நம்பிக்கை இருந்தது. நான் அதை செய்வேன் என்ற உள்ளுணர்வு  இருந்தது,” என்று கூறுகிறார்.  

  ஒரு வலுவான முகநூல் பக்கத்தின் வாயிலாக அவரது நிறுவனம் வளர ஆரம்பித்தது. பின்னர் 2015 ஆம் ஆண்டு அவர் முழு அளவிலான இ-வணிக தளத்தை  தொடங்கினார்.   அஞ்சலிக்கு கேரளா வாடிக்கையாளர் ஒருவரிடமிருந்து  முதல் ஆர்டர் கிடைத்தது. ரூ.5000 மதிப்புள்ள சல்வார் துணிக்கான ஆர்டரை அவர் கொடுத்திருந்தார். அதன் பின்னர் விரைவிலேயே பெரும் அளவிலான வணிக விசாரணைகள் வரத் தொடங்கின. அவரது வணிகம் வளரத் தொடங்கியது. முதல் ஆண்டில், ரூ.15 லட்சத்துக்கு அஞ்சலி வணிகம் செய்தார். ஆண்டுக்கு ஆண்டு கேடிஎஸ் நிறுவனத்தின் வளர்ச்சி 100 சதவிகிதத்துக்கும் அதிகமாக இருந்தது.

   “கோடா துணிக்கு இது போன்ற தேவை இருந்ததை பார்க்கும்போது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது, “ என்கிறார் அஞ்சலி. 2015ஆம் ஆண்டுக்குள் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் கிடைத்தனர். அதில் பெரும்பாலானோர் தென் இந்தியர்களாவர்.  

ஒரிஜினல் கோடா துணியை துவைப்பதும் வைத்துக்கொள்வதும்  கடினமான ஒன்று. அஞ்சலி அதனை வலுவானதாக மாற்றினார். தறிகளில் செய்யும்போது துணியில் ஒரு சிறிய மாற்றத்தைக் கொண்டு வந்தார். அது பலனளித்தது.
சென்னையில் விரைவில் முதலாவது கேடிஎஸ் கடையை திறப்பது என அஞ்சலி திட்டமிட்டுள்ளார்

“துணிகளை உலர் சலவை செய்வது என்பது அதிக செலவு பிடிக்கும். நடுத்தர குடும்பத்துப் பெண்களால் அது இயலாது. எனவே, நான் துணியை வலுவானதாக உருவாக்குவதற்காக  பணியாற்றினேன்,” என்று அவர் சொல்கிறார்.

  தூய்மையான பட்டு இழையை உபயோகித்து உருவாக்கும் தங்க ஜரிகை சேலைகளுக்காக கோடா பொதுவாக புகழ்பெற்று விளங்கியது என்று அஞ்சலி சொல்கிறார். இதை செய்து  முடிக்க ஒன்று முதல் மூன்று மாதம் ஆகுமாம்.  

அஞ்சலி, ஆண்களுக்கான ஆடைகள் போன்ற புதிய கோடா துணிகளை தொடங்க திட்டமிட்டுள்ளார். ஐரோப்பிய நாடுகளுக்கு வீட்டு அலங்காரங்களுக்கான துணிகள் ஏற்றுமதி செய்யவும், இந்த ஆண்டு சென்னையில் கடை திறக்கவும் யோசித்துவருகிறார்.   அஞ்சலி தினமும் காலை 4 மணிக்கு எழுகிறார். வடிவமைப்புகளை உருவாக்கி, பின்னர் அதனை அவருடைய நெசவாளர்களுக்கு அனுப்பி வைக்கிறார். இதைத்தான் முதலாவதாக காலையில் அவர் மேற்கொள்கிறார்.

குருகிராமில் உள்ள ஒரு அழகிய வீட்டில் அவருடைய கணவர் சுந்தீப் அகர்வாலுடன் அவர் வசிக்கிறார். அவர்களுக்கு  11 வயதான அபுதயா என்ற மகன் இருக்கிறார்.  

 
 
 
 
 

அதிகம் படித்தவை

  • Former car washer is owner of Rs 20 crore turnover company today

    கார் கழுவியவர், இன்று கோடீஸ்வரர்

    ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்து, கார் கழுவும் வேலையில் தொடங்கி, இப்போது குடிநீர் சுத்திகரிக்கும் ஆர்.ஓ தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார் பாலகிருஷ்ணா. 20 கோடி வர்த்தகத்துடன் நாட்டின் முதல் 20 ஆர்.ஓ தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது இவரது நிறுவனம். எஸ்.சாய்நாத் எழுதும் கட்டுரை

  • Success story of ID Fresh owner P C Mustafa

    மாவில் கொட்டும் கோடிகள்

    தினக்கூலி ஒருவரின் மகன் பிசி முஸ்தபா. மின்சாரமும் சாலைகளும் அற்ற கேரள குக்கிராமத்தில் அன்றாடம் செலவுக்கே சிரமப்பட்டு ஏழ்மையில் வளர்ந்த இவர் இன்று தன் உழைப்பால் வளர்ந்து 100 கோடி விற்பனை செய்யும் நிறுவனம் நடத்துகிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை

  • His success story which reads like a film script aptly started in a cinema hall

    எளிமையான கோடீசுவரர்

    திரையரங்கில் காண்டீனில் வேலை பார்த்தவர் அவர். அன்று அவருக்கு மாதச் சம்பளம் 90 ரூபாய் மட்டுமே. இன்று அவர் 1800 கோடி ருபாய் நிறுவனம் ஒன்றின் உரிமையாளர். தன் வாழ்க்கை வெற்றிக்கதையை மசுமா பர்மால் ஜாரிவாலிடம் சொல்கிறார்

  • Fabric of success

    சேலையில் வீடு கட்டுபவர்!

    ராஜஸ்தான் மாநிலத்தின் பாரம்பர்யமிக்க துணி வகையை சர்வதேச சந்தை வரை எடுத்துச்சென்று பெருமிதம் சேர்த்ததுடன், தமது வணிகத்திலும் வெற்றி பெற்றிருக்கிறார் அஞ்சலி அகர்வால். நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அவர் பொறியியல் பட்டம் முடித்த பின்னர் ஒரு சில இடங்களில்  வேலை பார்த்தபின், சொந்த நிறுவனத்தைத் தொடங்கி நடத்துகிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.

  • The LED Magician of Rajkot

    ஒளிமயமான பாதை

    மாதம் ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் ரப்பர் ஸ்டாம்ப் விற்கும் நபராக இருந்தவர் ஜிதேந்திர ஜோஷி. இந்தியாவுக்கு எல்.இ.டி தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்தியவர். இப்போது 8 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் தரும் எல்.இ.டி உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறார். மாசுமா பார்மால் ஜாரிவாலா எழுதும் கட்டுரை

  • How did daily wager son become crorepati

    கனவுகளைக் கட்டுதல்

    தினக்கூலியின் மகனான விபி லோபோ கையில் 50 ரூபாயுடன் மங்களூர் அருகே உள்ள ஒரு கிராமத்திலிருந்து மும்பை வந்தவர். ஆறு ஆண்டுகளில் 75 கோடி ரூபாய் வர்த்தகம் செய்திருக்கும் நிறுவனத்தை அவர் இப்போது நடத்துகிறார். இது எப்படி? சோமா பானர்ஜி எழுதுகிறார்