Milky Mist

Thursday, 25 April 2024

அலிகரிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு! தொழில்துறையில் ஓர் இளைஞரின் அசாத்தியமான வெற்றிப்பயணம்!

25-Apr-2024 By சோபியா டேனிஷ்கான்
ஆஸ்திரேலியா

Posted 01 Dec 2020

உத்தரபிரதேச மாநிலத்தின் அலிகர் நகரில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் அமீர் குதூப். ஒரு தொழில் முனைவோராக ஆக வேண்டும் என்ற லட்சியக் கனவை பூர்த்தி செய்ய ஆஸ்திரேலியாவின் ஜீலாங்கில் எம்.பி.ஏ படிக்கச் சென்றார்.

அங்கே விமானநிலையத்தில்  துப்புரவுத் தொழிலாளியாக பணி புரிந்தார். பின்னர், காலை நேரங்களில் செய்தித்தாள் போடும் வேலை பார்த்தார். அதன் பின்னர் அவர் வேலை பார்த்த ஒரு நிறுவனத்தில் மிக இளம்வயதில் பொதுமேலாளராக உ யர்ந்தார். இறுதியில் சொந்தத் தொழிலைத் தொடங்கினார். அந்த  தொழில் ஐந்து ஆண்டுகளில்  2 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் வருவாயை (தோராயமாக ரூ.12 கோடி) எட்டும் அளவுக்கு வளர்ந்துள்ளது.

அமிர் குதூப், நிறுவனர், என்டர்பிரைஸ் மங்கி (புகைப்படங்கள்: சிறப்பு ஏற்பாடு)

எண்டர்பிரைஸ் மங்கி என்ற அவரது ஜீலாங்கில் உள்ள நிறுவனம், தானியங்கிய முறைக்கு தொழில்களை மாற்ற உதவுகிறது. அவரது நிறுவனத்தில் இப்போது 100 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். ஆஸ்திரேலியாவின் எட்டு இதர ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் துணை நிறுவனராகவும் முதலீட்டாளராகவும் அமீர் திகழ்கிறார். இந்த நிறுவனங்களின் மொத்த மதிப்பு 30 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் ஆகும்.

“அதில் இரண்டு நிறுவனங்கள் தோல்வியடைந்து விட்டன. ஆறு நிறுவனங்கள் செயல்படுகின்றன. மூன்று நிறுவனங்கள் நன்றாக செயல்படுகின்றன,” என்றார் 31 வயதாகும் அமீர்.

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் 2011 ஆம் ஆண்டு இயந்திரவியலில் பொறியியல் பட்டம் பெற்ற பின்னர் முதன் முதலாக கிரேட்டர் நொய்டாவில் ஹோண்டா நிறுவனத்தில் பணியாற்றினார்.   ஹோண்டா நிறுவனத்தில் ஓர் ஆண்டு உற்பத்தி பொறியாளராக அவர் பணியாற்றினார். ஆனால், காலை 9 மணிக்கு சென்று விட்டு 5 மணிக்குத் திரும்பும் வேலை தமது விருப்பத்துக்கு உரியது இல்லை என்பதையும், வாழ்க்கையில் பெரிய விஷயங்களை சாதிக்கவே தாம் விதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் உணர்ந்தார்.

“என்னுடைய திறன் மற்றும் அறிவை நான் வீணாக்கிக் கொண்டிருப்பதாக உணர்ந்தேன்,” என்று தமது முதல் வேலை குறித்துக் கூறினார். “அலுவலகத்தில் ஒவ்வொன்றும் பேப்பர் அடிப்படையில் இருந்தது. பேப்பர்கள் அடிக்கடி தொலைந்து போயின. பிரச்னைகள் உருவானது. நான் தானியங்கி முறையில் அவற்றை மாற்றவும் ஒவ்வொன்றையும் டிஜிட்டல் ஆக்கவும் முன்வந்தேன். என்னுடைய தினசரி பணியை நான் முடித்த பின்னர், என்னை இந்த வேலையைச் செய்ய அவர்கள் அனுமதித்தனர்.''

“நான் அந்த புராஜெக்டை முடித்தபோது, அனைத்து கடைகளிலும் அது நிறுவப்பட்டது. ஆனால், அவர்கள் என்னுடைய பதவியை மாற்றவில்லை. எனவே நான் வேலையை விட்டு விலகினேன்.”
 அலிகரில் சாதாரண நிலையில் இருந்து நீண்டதூரம் கடந்து வந்திருக்கிறார் அமீர். இன்றைக்கு அவர் ஆடி,  மெர்சிடிஸ் கார்கள் வைத்துள்ளார். ஆஸ்திரேலியாவில் சொந்தமாக வீடு வைத்திருக்கிறார்.


23 வயதில் இது அமீர் வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டம். ஆரம்பகட்ட சந்தேகங்கள் மற்றும் அச்சங்களில் இருந்து வெளியே வந்தார்.  அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள  நிறுவனங்களுக்காக சில ப்ரீலேன்ஸ் மென்பொருள் பணிகளை செய்யத் தொடங்கினார்.

அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் அமீர் இயந்திரப் பொறியியல் படித்தார். கூடுதலாக தனித்திறன் செயல்பாடுகளில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. விவாதங்களில் பங்கெடுத்தார். பரிசுகளை வென்றார். ஒரு மாணவ பத்திரிகையையும் தொடங்கினார்.

கோடிங் எழுதுவது குறித்து கற்றுக் கொண்டு மாணவர்களுக்கான  ஒரு சமூகவலைதளம் உருவாக்கினார். அது பெரும் அளவு பிரபலம் ஆனது. “ஒரு கட்டத்தில் இந்த சமூக வலைதளம் கல்லூரி முடித்து சென்ற பழைய மாணவர்கள் உட்பட 50,000 பயனாளர்களைக் கொண்டு செயல்பட்டது,” என்றார் அமீர். கோடிங் எழுதுவதில் அவரது அறிவானது சில ஆண்டுகள் கழித்து அவர் சொந்த நிறுவனம் தொடங்குவதற்கான ஒரு உந்துதலாக இருந்தது.

நல்ல வாய்ப்புகளுக்காக தங்கள் நாட்டுக்கு வரலாமே என ஒரு ஆஸ்திரேலிய வாடிக்கையாளர் சொன்னபோது அமீரின் எல்லைகள் மேலும் விரிவடைந்தன. ஜீலாங்கில் உள்ள டீக்கின் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிப்பதற்காக விண்ணப்பித்தார். முதல் மூன்று மாத கல்வி உதவித்தொகையுடன் அவருக்கு  அங்கு இடம் கிடைத்தது. ஒரு வணிக நிறுவனம் தொடங்க வேண்டும் என்ற தன் கனவை  ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து வளர்த்தெடுத்தார். பகுதி நேர வேலையும் பார்க்கத் தொடங்கினார்.

“என்னுடைய சொந்த வணிகத்தை தொடங்குவதற்கும் , வாழ்க்கைக்கும் இன்னும் பணம் தேவைப்பட்டது. நான் எம்பிஏ படிப்பதற்கு என் தந்தை ஏற்கனவே ரூ.5 லட்சம் கொடுத்து விட்டார். எனவே அவரிடம் மேற்கொண்டு பணம் கேட்கவிரும்பவில்லை,” என்றார் அமீர். 170 நிறுவனங்களுக்கு வேலைக்கு விண்ணப்பம் செய்தார். ஆனால், எந்த ஒரு நிறுவனத்தில் இருந்தும் அவருக்கு அழைப்பு வரவில்லை. எனினும், ஜீலாங் விமானநிலையத்தில் அவருக்கு துப்புரவுப் பணியாளராக வேலை கிடைத்தது. காலை 6 மணி முதல் மாலை 6  மணி வரை வாரத்தில் நான்கு நாட்கள் வேலை.

“அங்கே அவ்வப்போது நான் விமானிகளை சந்தித்து அவர்களிடம் பேசிக் கொண்டிருப்பது வழக்கம்,” என்றார்.  “இந்தியாவில் சுத்தம் செய்யும்பணி தரக்குறைவாகப் பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவில்,மற்ற பணிகளைப் போலவே அதுவும் பார்க்கப்படுகிறது. எனது பெற்றோருக்கு நான் பார்க்கும் வேலை குறித்து தெரியவந்தபோது. அது குறித்து அவர்கள் வருத்தப்பட்டனர். இதற்கிடையே, உறவினர்கள் இது குறித்து பேசியது குடும்பத்தில் கடினமான சூழலை ஏற்படுத்தியது.”

நீண்ட நேரம் பணியாற்றியதால் படிப்பு பாதிக்கப்பட்டது. எனவே மூன்று மாதங்கள் கழித்து அமீர் அந்த வேலையை விட்டு விலகினார். செய்தித்தாள்கள் விநியோகம் செய்யும் இன்னொரு வேலை அவருக்குக் கிடைத்தது. காலை மூன்று மணிக்குத் தொடங்கும் வேலை காலை எட்டு மணிக்கு முடியும். இதன் மூலம் அவருக்கு படிப்பில் கவனம் செலுத்துவதற்கு போதுமான நேரம் கிடைத்தது.

தொடர்ந்து அவர் வாய்ப்புகளைத் தேடிக்கொண்டிருந்தார். ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பயிற்சிபெறுபவராக பணியில் சேர்ந்தார். அந்த நிறுவனத்துக்கு முழுமையான  தொழில்மாதிரி அறிக்கை ஒன்றை அவர் தயார்செய்து அளித்தார்.  இரண்டாவதாக ஜீலாங்கில் ஐசிடி என்ற ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பயிற்சிப் பணியாளராகச் சேர்ந்தார். பின்னர் அங்கே அவருக்கு ஆபரேஷன் மேலாளராக 5000 ஆஸ்திரேலிய டாலர் சம்பளத்தில் வேலை கிடைத்தது.   
அலிகரில் தொழில்முனைவோரை ஊக்கப்படுவத்துவதற்காக ஓர் அறக்கட்டளை ஏற்படுத்தி உள்ளார். இதற்காக அடிக்கடி இந்தியா வர திட்டமிட்டுள்ளார்.   


அவர் அந்நிறுவனத்தில் பொதுமேலாளருக்கு கீழே நேரடியாகப் பணியாற்றினார். ஒன்றரை ஆண்டு கழித்து பொதுமேலாளர் பதவி விலகியதை அடுத்து , இடைக்காலமாக அமீர் பொதுமேலாளராக நியமிக்கப்பட்டார். இந்த பணியில் நிறுவனத்தின் நிர்வாக உறுப்பினர்களின் கவனத்தை அவர் ஈர்த்தார்.

இந்த சமயத்தில் அவர் எம்பிஏ படித்து முடித்தார். இதையடுத்து அவர் பொதுமேலாளராக நிரந்தரமாக நியமிக்கப்பட்டார். 25 வயதில் அந்நிறுவனத்தில் மிக இளமையான பொதுமேலாளராக அவர் பதவி வகித்தார்.

“ஒரு ஆண்டுக்குள் நிறுவனத்தின் வருவாய் 300 சதவிகிதம் அளவுக்கு அதிகரித்தது,” என்று அமீர் பகிர்ந்து கொண்டார். 

2014-ஆம் ஆண்டு ஜீலாங்கில் ஐசிடி-யில் பணியாற்றிக் கொண்டிருந்தபோதே, எண்டர்பிரைஸ் மங்கி என்ற நிறுவனத்தைப் பதிவு செய்து, அதில் அவரது சேமிப்பான 4000 ஆஸ்திரேலிய டாலரை முதலீடு செய்தார். ஒரு ஆண்டுக்குப் பின்னர், இந்தியாவில் இருந்து  இணைய உதவியாளர் ஒருவரை வேலைக்கு அமர்த்தினார். நான்குபேருடன் வேலையைத் தொடங்கினார். வணிகம் வளர்ச்சியடைந்தபோது, மேலும் பலரை வேலைக்கு எடுத்தார். ஆனால், விரைவிலேயே தமது ஊழியர்களுக்கு சம்பளம் தருவதற்கு அவரிடம் பணம் இல்லாத சூழல் ஏற்பட்டது.

“நாங்கள் பணம் சம்பாதித்தோம். ஆனாலும் நான் கடனில் இருந்தேன். எனவே தனியார் நிதி நிறுவனங்களிடம் ஒரு லட்சம் ஆஸ்திரேலிய டாலர் கடன் வாங்கினேன்,” என்று பகிர்ந்து கொண்டார். “நிலைமை மிகவும் மோசமானது. என்னுடைய காருக்குப் பெட்ரோல் போடுவதற்கு கூட என்னிடம் பணம் இல்லை. என்னிடம் 17 ஊழியர்கள் பணியாற்றினர். ஆண்டு வருவாய் அதிகமாக இருந்தது. ஆனால், லாபம் ஏதும் இல்லை.”

இரண்டு மாதங்கள் அவர் இடைவெளி எடுத்துக் கொண்டார். எங்கே தவறு நேர்ந்தது என்று ஒட்டு மொத்த வணிக முறை குறித்து ஆய்வு செய்தார். “எனது நண்பர்கள், ஆலோசகர்கள், வாடிக்கையாளர்கள் ஆகியோரிடம் நான் கருத்துகளைக் கேட்டுப் பெற்றேன்,” என்று தமது தொழில் முனைவுப் பயணத்தில் நேர்ந்த கொந்தளிப்பான காலகட்டத்தைப்பற்றி  நினைவு கூர்ந்தார்.

“ நிறைய சிறிய வாடிக்கையாளர்களை வைத்துக்கொண்டு லாபம் சம்பாதிக்க முடியாமல் சக்தியை வீணடித்துக்கொண்டிருப்பதை நான் உணர்ந்தேன். வளர்ச்சியை விடவும் லாபத்தை நோக்கி தொழிலைத் திருப்பி அமைத்தேன். எல்லாம் சரியாகிவிட்டது.  என்னுடைய கடன்களை மூன்று மாதங்களுக்குள் திருப்பிச் செலுத்தினேன்.”

ஆஸ்திரேலியாவில் சிறந்த இளம் வணிகர் விருது உள்ளிட்ட பல விருதுகளை அமீர் பெற்றார்

இன்றைக்கு, நீண்டநாட்களாக அவர் துரத்திக் கொண்டிருந்த வெற்றியின் அடையாளமாக அவர் மாறியிருக்கிறார். ஆஸ்திரேலிய சிறந்த இளம் வணிகர் ஆண்டு விருது உள்ளிட்ட  பல சாதனை விருதுகளை ஏற்கனவே அமீர் பெற்றிருக்கிறார். அவர் நிச்சயமாக மேலும் வெற்றிகளைப் பெறுவார் என்றே சொல்லலாம். ஆடி மற்றும் ஒரு மெர்சிடிஸ் காரை அவர் ஓட்டுகிறார். ஆஸ்திரேலியாவில் அவருக்குச்  சொந்த வீடு இருக்கிறது. அங்கு அவர் தமது மனைவியான சாரா நியாஸி என்ற பல்மருத்துவருடன் வசிக்கிறார். 

தொழில்முனைவுப் பயணத்தைத் தேர்வு செய்பவர்களை ஊக்குவிக்க அலிகரில் அமீர் குதூப் அறக்கட்டளை என்ற அமைப்பை அமீர் உருவாக்கி உள்ளார். 

“இப்போது நான் பகுதி அளவு ஓய்வு பெறும் நிலைக்கு வந்து விட்டேன்.  வணிகம் அதன்போக்கில் செயல்படுகிறது. எனவே  நான் அறக்கட்டளையில் அதிக கவனம் செலுத்தமுடியும் என நினைக்கிறேன். வெறுமனே பணத்தை சம்பாதிப்பது மட்டுமின்றி எப்போதுமே புதிய மற்றும் சுவாரஸ்யமான விஷயங்களைச் செய்வதையே நான் விரும்புகிறேன்,” என்று சொல்லி அவர் விடைபெறுகிறார். 

 
 
 
 
 

அதிகம் படித்தவை

  • Success from the campus

    வென்றது கல்லூரிக் கனவு!

      கார்த்திக் ஒரு பிரபலமான ஹோட்டல் குழுமத்தின் வணிக வாரிசு. அவருக்கு தாமே ஏதாவது சொந்தமாக செய்ய வேண்டும் என்ற உந்துதல். எனவே கல்லூரி படிக்கும்போதே பயண ஏற்பாட்டாளராக தொழில் செய்தார். படிப்பு முடிந்த உடன் தொழிலில் முழுமையாக மூழ்கி வெற்றி பெற்றார். சோஃபியா டானிஸ்கான் எழுதும்  கட்டுரை.

  • Wow! They sell 1.5 lakh momos everyday

    சுவை தரும் வெற்றி

    கொல்கத்தாவைச் சேர்ந்த கல்லூரி நண்பர்களான வினோத்துக்கும் சாகருக்கும் மொமோ என்கிற உணவுப் பண்டத்தை சாப்பிடப் பிடிக்கும். இருவரும் சேர்ந்து மோமொ விற்பதையே தொழிலாக்கினார்கள். இன்று 100 கோடி மதிப்பில் அத்தொழில் வளர்ந்துள்ளது. ஜி சிங் எழுதும் கட்டுரை

  • with amla cultivation, he is making money grow on trees

    பணம் காய்க்கும் மரங்கள்

    மரத்தில் பணம் காய்க்குமா? ஆம், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அமர் சிங் என்கிற தொழிலதிபரின் பண்ணையில் உள்ள நெல்லி மரங்கள் ஆண்டுக்கு 28 லட்சம் ரூபாய் வருவாய் தருகின்றன. நெல்லியைப் பதப்படுத்தி பல்வேறு வகை உணவுப் பொருட்களையும் தயாரிக்கிறார். பார்தோ பர்மான் எழுதும் கட்டுரை

  • Honey is  wealth

    மலைத்தேன் தந்த வாய்ப்பு!

    மிதுன் ஸ்டீபன், ரம்யா சுந்தரம் இருவரும் பொறியியல் பட்டதாரிகள். பெங்களூரில் சந்தித்துக் கொண்ட அவர்கள் மலையேற்றம் மேற்கொள்ளும் ஆர்வத்தில் ஒன்றிணைந்து, பரஸ்பரம் வாழ்க்கை துணையாக இணைந்தனர். ஆண்டுக்கு 2 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் பாரம்பரியமான கலப்படமற்ற தேன் வர்த்தகத்திலும் கொடிகட்டிப் பறக்கின்றனர். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை

  • success story of a shampoo maker

    ஷாம்பூ மனிதர்!

    தமிழ்நாட்டின் ஒரு சிறிய நகரத்தில் சுதந்திரமாக சுற்றித்திரிந்த இளைஞர், 15 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் ஷாம்பூ தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார். அது கடின உழைப்பு, வித்தியாசமான விளம்பர உத்திகளால் இன்றைக்கு 1450 கோடி ரூபாய் ஈட்டும் நிறுவனமாகி இருக்கிறது. பி சி வினோஜ் குமார் எழுதும் கட்டுரை

  • steel man of jharkhand

    கரும்பாய் இனிக்கும் இரும்பு!

    ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த குன்வந்த் சிங் மோங்கியா, தொழிலில் பல பின்னடைவுகளைச் சந்தித்தார். எனினும் மீண்டும் தொழிலில் சாதனை படைத்து வெற்றி பெற்றிருக்கிறார். அவரது தொழிலுக்கு அவரே விளம்பரத் தூதரும் கூட. குர்விந்தர் சிங் எழுதும் கட்டுரை