அன்று 20,000 ரூபாய் முதலீடு! இன்றைக்கு கோடிகள் புரளும் நிறுவனம்!
23-Nov-2024
By பார்தோ பர்மான்
டெல்லி
ஒன்பது வருடங்களுக்கு முன்பு ரகு கன்னா, இரண்டு பேரின் உதவியுடன், தமது தொழிலைத் தொடங்கினார். அவரது பெற்றோர் 20 ஆயிரம் ரூபாய் ஆரம்ப முதலீடாகக் கொடுத்தனர். இன்றைக்கு, ரகு ஒரு கோடீஸ்வரர். அவரது நிறுவனம், ஆண்டுக்கு 32 கோடி ரூபாய் வர்த்தகம் செய்கிறது.
மெகா, மெரு, ஈஷி, டேப் கேப்ஸ் போன்ற ரேடியோ டாக்சிகளில் பல்வேறு பிராண்ட்களின் விளம்பரங்களை நீங்கள் பார்த்திருக்கலாம். அப்போது, இந்தப் புதிய டிரென்ட்டை ஆரம்பித்தது யார் என்ற கேள்வி உங்களுக்குள் எழுந்திருக்கலாம். இதற்குச் சரியான பதில் ரகு கன்னா என்பதுதான். இவர் கேஷ்யுவர்டிரைவ் மார்கெட்டிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருக்கிறார். அவுட்டோர் அட்வர்டைசிங்கின் ஒரு பகுதியாக இருக்கும், டிரான்சிட் அட்வர்டைசிங் என்ற மாற்றுச் சிந்தனையுடன் கூடிய புதிய முறை விளம்பர உத்தியைத் தொடங்கியவர் இவர்தான்.
|
ரகு கன்னா, கேஷ்யுவர்டிரைவ் என்ற, டாக்சி, லாரிகள், பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களில் வெளிப்புறம் மற்றும் உட்புறங்களில் விளம்பரம் செய்யும் நிறுவனத்தை 20 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் 2008-ம் ஆண்டில் தொடங்கினார் (புகைப்படங்கள்:பார்த்தோ பர்மான்)
|
தற்போதைக்கு, ஒரு மாதத்தில், அவரது நிறுவனம் 10 ஆயிரம் ரேடியோ டாக்சிகள், 45 ஆயிரம் ஆட்டோக்கள் (வட இந்தியாவில் 30,000, பெங்களூர், ஐதராபாத் மற்றும் சென்னையில் தலா 5000 ), விஆர்எல் லாஜிஸ்டிக் நிறுவனத்தின் 30-40 சதவிகித 600 லாரிகள் மற்றும் 100 பெருநிறுவனங்கள், தனியார் மற்றும் பள்ளி பேருந்துகள் ஆகியவற்றில் பிராண்ட் விளம்பரங்களைச் செய்கிறது.
ஸ்டேண்டேர்டு சார்டட் பேங்க், சிட்டி பேங்க், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் பேங்க், தேனா பேங்க், யூகோ பேங்க், எல்.ஐ.சி., யுனெட்டெட் இன்ஷூரன்ஸ், நேஷனல் இன்ஷூரன்ஸ், சப்வே, பிட்சா ஹட், ரேபக், டைம்ஸ் நவ், கூகுள், பெப்சி, கோக், நெஸ்லே, ஐ.டி.சி, சன்பர்ன்(ஈவன்ட்), வோடபோன், ஏர் டெல், ரிலையன்ஸ் உள்ளிட்ட தொலைதொடர்பு நிறுவனங்கள் போன்ற 500-க்கும் மேற்பட்ட முக்கியமான பிராண்ட்களை வாடிக்கையாளர்களாகக் கொண்டிருக்கின்றனர்.
ஐ.ஐ.டி முன்னாள் மாணவரான ரகு, தமது 22-வது வயதில் டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு விசா நேர்காணலுக்காகச் சென்றார். தூதரகத்துக்குச் சென்று விட்டு வீடு திரும்பும் போது, டிராபிக் ஜாமில் மாட்டிக் கொண்டார்.
காருக்கு வெளியே வேடிக்கைப் பார்த்தபடி வந்தார். அப்போது அவருக்கு முன்பு நின்று கொண்டிருந்த ஒரு லாரியின் பின்னால் எழுதப்பட்டிருந்த ஒரு வாசகம் ரகுவின் கண்ணில் பட்டது. அப்போதுதான் அவருக்குத் திடீரென ஒரு யோசனை தோன்றியது. கார்களில், ஏன் அட்வர்டைசிங் செய்யக் கூடாது என்று சிந்தித்தார்.
இப்போது 32 வயதாகும் ரகு, ”தேசம் முழுவதும் உள்ள வாகனங்களில் பிராண்ட் விளம்பரங்கள், சேவைகளை அளிக்கின்றோம். டாக்சிகள், தனியார் பேருந்துகள், பெருநிறுவனங்களின் பேருந்துகள், பள்ளிப் பேருந்துகள், ஆட்டோக்கள் உள்ளிட்ட அனைத்துவிதமான வாகனங்களும்தான் எங்களது விளம்பர இலக்கு,” என்று சொல்கிறார்.
கேஷ்யுவர்டிரைவ், ஒரு பிரைவேட் லிமிடெட் நிறுவனமாக இருக்கிறது. இதில் ரகுவும், அவரது தாயும் இயக்குனர்களாக இருக்கின்றனர். மூன்றாது நபர் யாரும் இதில் இல்லை. முழுக்க, முழுக்க 100 சதவிகிதம் ஈடுபாட்டுடன் கூடிய உரிமையாளர்களாக இருவரும் இருக்கின்றனர். “இதுதான் என்னுடைய முதல் வேலை,” என்று சிரிக்கிறார் ரகு.
20ஆயிரம் ரூபாய் முதலீட்டுடன், ஒரு இணையதளத்தை உருவாக்கி 2008-ம் ஆண்டு தமது நிறுவனத்தைத் தொடங்கினார். அப்போது பிராண்ட் ஆன் வீல்ஸ் என்று தமது நிறுவனத்துக்கு பெயர் வைத்திருந்தார். ஒரு வருடம் கழித்து கேஷ்யுவர்டிரைவ் என்று பெயரை மாற்றினார். தொடக்கத்தில் அவரையும் சேர்த்து மூவர் மட்டுமே இருந்தனர். இன்றைக்கு அவரது நிறுவனத்தின் ஊழியர்கள் எண்ணிக்கை 88 ஆக இருக்கிறது.
|
வாடிக்கையாளர்களிடம் இருந்து ஆர்டர் முழுமையாகக் கிடைக்கும் முன்பு, அந்த விளம்பரம் வாகனங்களில் எவ்வாறு இடம் பெறும் என்பது குறித்து மாதிரியை செய்து காட்டுகிறார்
|
எந்த ஒரு சவால்களும் இல்லாத வெற்றி சாத்தியம் இல்லை. “ஏதாவது புதிதாக உருவாக்க வேண்டும் என்பது மிகவும் சிரமமான ஒன்று,” என்கிறார் ரகு. “கார் உரிமையாளர்கள், டாக்சி நிறுவனங்கள் மற்றும் விளம்பரம் தருகின்றவர்களுடன் இணைந்து செயல்படுவது என்பது முதல் மூன்று ஆண்டுகள் மிகவும் சிக்கலாக இருந்தது. தொழிலதிபர்களிடம், புதிய ஊடகத்தில் விளம்பரம் செய்யும் சிந்தனையை உருவாக்குவது மிகவும் கடினமாக இருந்தது,” என்கிறார். அவர்களுக்கு அது பரிசோதனை காலமாக இருந்தது. 2008-09-ம் ஆண்டு உலகப் பொருளாதாரம் வீழ்ச்சி என்பதில் தொழில்கள் மூழ்கி இருந்தன. பரிசோதனையான முயற்சிகளில் முதலீடு வீணாகி விடக் கூடாது என்பதில் தொழில் நிறுவனங்கள் உறுதியோடு இருந்தன.
இதன் விளைவாக, கிழக்கு டெல்லியில், ப்ரீத் விகார் பகுதியில் அவர் தொடங்கிய இந்த நிறுவனம் 2010-ம் ஆண்டுதான் முழு அளவில் செயல்பாட்டுக்கு வந்தது. அப்போது ரிலையன்ஸ் மியூட்சுவல் பண்ட் மட்டுமே ஒரே ஒரு வாடிக்கையாளர். இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்டாக இருந்த ரகுவின் நண்பர், கார் வைத்திருந்தார். அந்த காரில்தான் முதன் முதலில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் விளம்பரத்தை வெளியிட்டார். இந்த முதல் வெற்றியின் காரணமாக இப்போதும் கூட ரிலையன்ஸ், ரகுவின் வாடிக்கையாளராக இருக்கிறது.
வினயில் ஷீட்டில் விளம்பரங்களை உருவாக்கி, வாடிக்கையாளர்களிடம் செயல்விளக்கம் செய்து காண்பித்து, அதுஎப்படி காரில் விளம்பரப்படுத்தப்படும் என்பதை விளக்குவார். இந்த செயல்விளக்கத்தில் வாடிக்கையாளர் திருப்தியடைந்து சம்மதம் தெரிவித்த உடன், வாகனங்களில் விளம்பரம் வெளியிடப்படுகிறது.
ரகுவின் நிறுவனம், டெல்லி, மும்பை, பெங்களூரு, மற்றும் சண்டிகர் ஆகிய நான்கு கிளைகளுடன் செயல்படுகிறது. ஐதராபாத், சென்னை, கொல்கத்தா நகரங்களில் துணை அலுவலகங்களும் செயல்படுகின்றன.
|
இமாசல பிரதேசத்தில் ரகுவின் தந்தை பால் மற்றும் பிரட் வகைகளின் விநியோகஸ்தராக இருக்கிறார்.
|
ரகு, சிம்லாவில் இருந்து வந்தவர். அவரது குடும்பத்தின் ஒரே வாரிசு அவர்தான். ரகுவின் தந்தை பூபேந்தர் குமார் கன்னா, இமாசல் பல்கலைக்கழகத்தில் 2012-ம் ஆண்டுவரை அரசியல் அறிவியல் துறை பேராசிரியர் ஆக பணியாற்றினார். ரகுவின் தாய் ப்ரவீன் கன்னா, ரகுவின் தொழிலில் ஈடுபடுவதற்கு முன்பு வரை குடும்பத் தலைவிதான். ரகுவின் தொழில் முனைவு பயணத்தில் அவருக்கும் மிக முக்கியப் பங்கு உண்டு.
சிம்லாவில் உள்ள செயின்ட் எட்வர்ட் பள்ளியில் ரகு படித்தார். பாடத்தைத் தவிர நல்ல கூடுதல் திறமைகளைப் பெற்றிருந்தார். ஆனால், போதுமான அளவு படிக்கமாட்டார். ஆறாம் வகுப்பில் இந்தி, வரலாறு ஆகிய இரண்டு பாடங்களிலும் பெயில் ஆகிவிட்டார்.
திருமதி.விஜி, என்ற ரகுவின் இந்தி ஆசிரியர் அவருக்கு ஆசிரியராக மட்டுமின்றி, பள்ளியில் அவரது ஹவுஸ் அணியின் ஆசிரியராகவும் இருந்தார். இவர்தான் ரகுவின் வாழ்க்கையில் முக்கிய பங்காற்றியவர். இந்தி பாடத்தில் ரகு இரண்டு மதிப்பெண்கள் குறைவாகப் பெற்று தோல்வி அடைந்தார். எனவே, அவரிடம் சென்று தமக்கு சலுகை மதிப்பெண் அளிக்கும்படி கேட்டார்.
“பள்ளியில் டான்ஸ் போட்டி நடைபெறுவதாக இருந்தது. எனவே, அதற்கான பயிற்சியில் நான் தீவிரமாக ஈடுபட்டிருந்தேன். இதைத்தான் எனது ஆசிரியரிடம் விவரமாகக் கூறினேன்,”என்று நினைவு கூறுகிறார். “அதற்கு அவர், ‘இப்போது சலுகை மதிப்பெண் கொடுத்தால். அதுவே உனக்குப் பழக்கமாகி விடும்’ என்றார். இதுதான் என்னுடைய வாழ்க்கையை மாற்றியது.”
ஆறாம் வகுப்புக்குப் பின்னர், அவரது படிப்பில் முன்னேற்றம் இருந்தது. எட்டாம் வகுப்பில், மூன்றாவது ரேங்கில் தேர்ச்சி பெற்றார். இதன் பிறகுதான் தன்னிடம் இருக்கும் திறமையை நம்பத் தொடங்கினார். பள்ளிப் படிப்பு முடித்த உடன், சண்டிகரில் உள்ள தேவானந்த் ஆங்கிலோ-வேதிக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு அறிவியல் பிரிவில் பள்ளி மேல்படிப்பை முடித்தார்.
பள்ளிப்படிப்பை முடித்த உடன், கவுகாத்தி ஐஐடி-யில் சேர்ந்தார். ஆனால், அவரது ஐஐடி சூழல் எளிமையானதாக இல்லை. வடிவமைப்புப் படிப்பில்தான் அவருக்கு இடம் கிடைத்தது. ஆனால், அந்தப் படிப்பை அவர் விரும்பாததால், அதில் இருந்து இடையிலேயே நின்றார்.
மீண்டும் அவர் ஐஐடி நுழைவுத் தேர்வை 2004-ம் ஆண்டு எழுதினார். மீண்டும் கவுகாத்தி ஐஐடியிலேயே இடம் கிடைத்தது! ஆனால், இந்த முறை சிவில் இன்ஜினீயரிங் படிப்பு. “என்னுடன் படித்தவர்கள் எல்லாம் எனக்கு சீனியர்களாக இருந்தனர்” என்று சிரிக்கிறார் ரகு.
அவரது படிப்பில் 2005-ம் ஆண்டு ஒரு திருப்பு முனை ஏற்பட்டது. மீண்டும் அவர் தன்னுடைய பாடப்பிரிவை மாற்றினார். “ஐஐடி கவுகாத்தியில் முதல் 10 சதவிகித மாணவர்களில் ஒருவராகத் தேர்ச்சி பெற்றேன்,” என்று விவரிக்கும் ரகு, “முதல் ஆண்டில் ஒரு மாணவர் முதல் 10 சதவிகிதத்துக்குள் வந்து விட்டால், அவர் தம்முடைய பாடப்பிரிவை மாற்றிக் கொள்ளலாம். எனவே, நான் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் பிரிவுக்கு மாற்றிக் கொண்டேன். ஐஐடி கவுகாத்தியில் மூன்று அடையாள அட்டைகளை நான் ஒருவன் மட்டும்தான் வைத்திருந்தேன்.”
ஐஐடி-யில் படிக்கும் போது, இரண்டு ஆராய்ச்சி உதவித் தொகைகளைப் பெற்றார். ரோம் நகரில் 2006-ம் ஆண்டிலும், பாரீஸ் நகரில் 2007-ம் ஆண்டிலும் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். ”இரண்டாம் ஆண்டு மாணவர்களில் நான் ஒருவன் மட்டும்தான் வெளிநாடுகளில் உதவித்தொகையுடன் கூடிய பயிற்சி பெற்றேன்.” என்று ரகு பெருமிதத்துடன் கூறுகிறார்.
ஐஐடி முடித்த உடன், மேற்படிப்பு படிப்பதற்காக, லண்டன் ஸ்கூல் ஆப் எக்கனாமிக்ஸில் சேரத் திட்டமிட்டார். ஆனால், அது நடக்கவில்லை. “நான் இந்தியா திரும்பியதும், சொந்தமாகத் தொழில் தொடங்குவதற்காக மேற்படிப்புப் படிக்க நினைத்தேன்,” என்று விவரிக்கிறார் ரகு.
அவரின் முன்பு பல்வேறு வாய்ப்புகள் இருந்தன. ஏன் ரகு தொழில் அதிபராக விரும்பினார்? ஒரு வேளை அது அவரது பரம்பரை ரத்தத்தில் இருந்திருக்கலாம்.
|
மறைந்த அவருடைய தாத்தா, ஆர்.எல்.கன்னா, இமாசல் மாநிலத்தில் பால் மற்றும் பிரட் விநியோகஸ்தராக இருந்தார். ரகுவின் தந்தை அவருக்கு உதவியாக இருந்தார். தாத்தா மறைவுக்குப் பின்னர், ஓய்வு பெற்ற அவரது தந்தை அந்தத் தொழிலைக் கவனித்துக் கொண்டார்.
“சிம்லாவில் ராம் பஜாரில் நிறையவே நான் கற்றுக் கொண்டேன்,” என்கிறார் ரகு. “நான் குழந்தையாக இருக்கும்போது, கடைக்காரர்கள் எப்படி இருக்கிறார்கள். எவ்வாறு தொழில் செய்கின்றனர் என்பதை உற்று நோக்கியபடியேதான் வளர்ந்தேன்.”
அவரது தாத்தாவிடம் இருந்தோஅல்லது ராம்பஜாரின் காய்கறிக்கடைக்காரர்களிடம் இருந்தோ, மிக இளம் வயதிலேயே தொழிலின் நுணுக்கங்களை எல்லாம் அவர் கற்றுக் கொண்டார்.
2008-ம் ஆண்டு அமெரிக்கா செல்வதற்கு திட்டமிட்ட ரகு, அதற்காக விசாவுக்கு விண்ணப்பம் செய்தார். ஆனால், அந்தத் திட்டத்தைக் கைவிட்டார். அதற்கு அவருடைய நண்பர் ஹர்மான் என்பவர்தான் காரணம். அவரால் ஈர்க்கப்பட்ட ரகு, இந்தியாவில் தங்கி இருந்து, கேஷ்யுவர்டிரைவ் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்.
“அவரிடம் ஆலோசனை கேட்பதற்காகச் சென்றேன். நான் அமெரிக்கா போவதற்கான காரணங்கள் குறித்து என்னிடம் அவர் கேட்டார்,”என்று நினைவு கூறும் ரகு, “நான் அமெரிக்கா சென்றால், அங்கிருந்து ஸ்கைப் வழியே தொடர்பு கொள்ளும் ஒரு மகனாக மாறிவிடுவேன் என்றும், என்னுடைய பெற்றோருடன் இந்தியாவிலேயே இருப்பது நல்லது என்றும் கூறினார்.”
|
பயணம் செய்வதும், புதிய இடங்களைக் கண்டுபிடிப்பதும் ரகுவுக்கு விருப்பமானது
|
தம் முடிவுக்காக ரகு ஒரு போதும் வருந்தியதில்லை. அவருடைய தொழில் ஆண்டுக்கு, ஆண்டு நல்ல வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. ஆனால், அவருக்கு அதிர்ஷ்டம் கொடுத்த ஆண்டு என்று சொன்னால் அது 2014 ஆண்டுதான். அந்த ஆண்டில்தான் அவர் பல்லவி என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். டெல்லியில் இருந்து நொய்டாவுக்கு பெரிய அலுவலகத்துக்கு மாறினார். இந்த தம்பதியினருக்கு இப்போது ஷபீர் எனும் இரண்டு வயது மகன் இருக்கிறான்.
எதிர்காலத்துக்கான திட்டம் குறித்து பேசியவர், “நான் எப்போதும் என் முதுகில் ஒரு பையை மாட்டிக் கொண்டே திரிவேன்,”என்று கூறுபவர், “முறையாக ஹோட்டல் ரூம் முன்பதிவு செய்யாமல் இலக்கில்லாமல் பயணிப்பேன், நான் ஒரு கடற்கரை காதலன்,” என்று சொல்லும் அவர், கடற்கரையில் ஏதாவது ஒரு இடத்தில் தங்குவதைத்தான் அவர் விரும்புகிறார். "15-16 ஆண்டுகாலம் சிம்லா வாழ்க்கைக்குப் பிறகு, எனக்கு மலைகள் போதும் போதும் என்று ஆகிவிட்டன,” என்று சிரிக்கிறார்.
அதிகம் படித்தவை
-
ஒலிம்பிக் தமிழச்சி!
மதுரை மாவட்டத்தின் சின்னஞ்சிறிய கிராமமான சக்கிமங்கலத்தை சேர்ந்தவர் ரேவதி. பள்ளி அளவிலான தடகளப் போட்டிகளில் விளையாட்டு போக்கில் பங்கேற்றார். அவருக்குள் மறைந்திருந்த திறமையை கண்டறிந்த பயிற்சியாளர் கண்ணன் ரேவதியை ஒலிம்பிக் தகுதி வரை உயர்த்தியிருக்கிறார். ரேவதியின் வெற்றிக்கதை.
-
போராடே என்னும் போராளி!
எதிர்பாராதவிதமாக தொழில் அதிபர் ஆனவர் மிலிந்த் போராடே. இவர் தொடங்கிய தமது துருவா நிறுவனம் கடந்த ஆண்டு 700 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி உள்ளது. டிப்ளமோ படிப்பில் சேர்ந்தவர், தன் பேராசிரியரின் உந்துதலால் பட்டப்படிப்பு முடித்து, பின்னர் பட்டமேற்படிப்பும் முடித்து இதைச் சாதித்திருக்கிறார். அன்வி மேத்தா எழுதும் கட்டுரை.
-
பள்ளிக் கனவுகள்
பள்ளி தொடங்க வேண்டும் என்பது பாலி பட்நாயக்கின் நீண்ட நாள் கனவு. வெறும் முப்பதாயிரம் ரூபாயில் பள்ளி தொடங்கிய இந்த ஆசிரியை, இன்று தன் ஆசிரியர்களுக்கு மாதாமாதம் சம்பளத்தொகையாகவே ஒரு கோடி ரூபாய் தரும் அளவுக்கு தன் கனவை நனவாக்கி உள்ளார். குர்விந்தர் சிங் எழுதும் கட்டுரை
-
மெத்தென்று ஒரு வெற்றி
மாதவன் தமது 55 வது வயதில் சொந்த தொழில் தொடங்கினார். 30 ஆண்டுகள் கர்ல் ஆன் நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவம் அவருக்கு சொந்த தொழிலில் வெற்றியைக் கொடுத்தது. இன்றைக்கு மெத்தை சந்தையில் உயர்ந்து நிற்கிறார் மாதவன். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை
-
பெரிதினும் பெரிது கேள்!
சென்னை கடற்கரையில் சிறுவயதில் தந்தையின் தள்ளுவண்டி உணவுக் கடையில் உதவி செய்தார் சுரேஷ் சின்னசாமி. இன்றைக்கு சென்னையில் உள்ள தோசக்கல் சங்கிலித் தொடர் உணவகங்களின் உரிமையாளர். ஆண்டுக்கு 18 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறார். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை
-
பணம் சமைக்கும் குக்கர்!
வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்த இரு இளைஞர்கள் சென்னையில் பொறியியல் படிக்கும்போது நண்பர்களாகினர். கொரோனா ஊரடங்கின்போது வேலை இல்லை. எனவே சொந்தமாக தொழிலைத் தொடங்கி இ-வணிகத்தில் லாபம் ஈட்டி எட்டுமாதத்துக்குள் 67 லட்சம் ரூபாய் ஆண்டு வருவாய் பெற்றிருக்கின்றனர். பார்த்தோ பர்மன் எழுதும் கட்டுரை